பெண்ணுரிமை என்பது ஓர் இயக்கமாகவும்,கோட்பாடாகவும் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பாவில் தோற்றம் பெற்றது.இக் காலகட்டத்தில் வாழ்ந்த காண்டார்செட் (Condorcet )என்னும் தத்துவ அறிஞர் , இக் கோட்பாட்டுக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டிருப்பதைஅறியமுடிகிறது.
18,19 ஆம் நூற்றாண்டுகளில் ,
உலக அரங்கில் நிகழ்ந்த தொழிற்புரட்சி,பெண்ணுரிமைக்குச் சாதகமானதொரு சூழலைத் தோற்றுவித்தது.தொழிற்களங்களில் ஆண்களோடு இணைந்து பணியாற்றுகையில்,அவர்களுக்கு நிகரான உரிமைகள் பெண்களுக்கும் தேவை என்ற புரிதல் இயல்பாகவே ஏற்படத் தொடங்கியது.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மேரி வுல்ஸ்டோன் க்ராஃப்ட் , பெண்ணுரிமையை அழுத்தமாகப் பறைசாற்றும் பிரகடனம் ஒன்றை(A VINDICATION OF THE RIGHTS OF WOMEN)1792 இல் வெளியிட்டார்.
மேரி வுல்ஸ்டோன் க்ராஃப்ட் |
1848 ஆம் ஆண்டில் நூறு அமெரிக்கப்பெண்கள் , செனகா ஃபால்ஸ் என்னும் இடத்தில் ஒன்றுகூடி நிகழ்த்திய மாநாடு,உலகப் பெண்ணுரிமை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தஒன்றாக அமைந்தது.
செனகா ஃபால்ஸ் கூட்டமும் தீர்மானமும் |
பிரிட்டனைச் சேர்ந்த ஜான் ஸ்டூவர்ட்மில் என்பவர் எழுதிய பெண்ணடிமை அவலம் குறித்த நூலும்(SUBJECTION OF WOMEN) விழிப்புணர்வுக்கான விதைகளைத் தூவுவதில் முன் நின்றது.
ரஷ்ய,சீனப்புரட்சிகளுக்குப்பின் அந்நாடுகளில் அமைந்த பொதுவுடைமை அரசுகள்,பால் சார்ந்து மக்களைப்பாகுபடுத்துவதையும்,தந்தைவழிச்சமூக அமைப்பையும் எதிர்த்ததால் அங்கு பெண்ணுரிமை இயக்கங்கள் தடையின்றி வளர்ச்சி பெற்றன.
இரு உலகப் போர்களும் முடிந்தபின், உலகின் பல பகுதிகளிலுள்ள பெண்களும் படிப்படியாகக் கல்வித்தரத்தில்மேம்படவும்,வாக்குரிமைமுதலியவற்றைப்பெறவும் தொடங்கினர்.முன்னேறிய நாடுகளின் தொழில்நுட்ப அறிவியல் வளர்ச்சிகளும்,பொருளாதாரமுன்னேற்றங்களும் சமூக உறவில் பல மாற்றங்களைக் கொண்டுவந்த காரணத்தாலும் மகளிர் நிலை ஓரளவு முன்னேற்றம் காணத் தொடங்கியது.
இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் - பெண்ணின் அடிப்படை உரிமைகளில் ஒரு சில மீட்டெடுக்கப்பட்ட நிலையில்,பெண்ணுரிமை இயக்கங்களின் நோக்கமும்,போக்கும் வேறு வகையான கண்ணோட்டத்தில் மாற்றம் பெற்றன.
குடும்ப,சமூக அமைப்புக்களில் - பண்பாட்டின் அடிப்படையில் பெண்கள் இன்னும் கூட இரண்டாந்தரக் குடிமக்களாகவே நடத்தப்படுவதைச் சுட்டிக்காட்டிய சைமன் டி பியூவோர்(THE SECOND SEX),பெட்டிஃப்ரீடன் (THE FEMININE MYSTIQUE)ஆகியோரின் நூல்கள் இவ்வியக்கம் வேறு பரிமாணங்களுடன் வளர்ச்சி பெறக் காரணமாயின.
ஆணின் வசதிக்காக உருவாக்கப்பட்ட ஆணாதிக்கச்சமூக அமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டுமென்பதும்,
மரபு வழியாகப் பெண்ணுக்கு உரியதென்று ஒதுக்கப்பட்ட பங்குநிலைகளும்,கடமைகளும் மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென்பதும்,
கல்வி,சமயம்,அரசியல்,வேலை வாய்ப்பு என எத் துறையாயினும் பால்பாகுபாட்டின் அடிப்படையில் ஒதுக்கி வைக்கப்படாமல் பெண்ணுக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டுமெனக் குரல் கொடுப்பதும்
அடுத்தகட்ட இயக்கங்களின் சில இன்றியமையாத நோக்கங்களாக அமைந்தன.
’’தந்தை வழிச்சமூகம்
பெண்ணாய்ப் பூட்டிய
புராதனப் பெட்டிக்குள்ளிருந்து
தாயாண்மை சமூகம் நிறுவ
மனுசியாய் எழுந்து
செல்வமென மாறிப் பரவுவேன்..........
மனுசியாய் உணர முடிந்த அந்த நாளொன்றில்
வாழ்த்துச்சொல்வேன்
பெண்மை வாழ்கவென்றல்ல
மானுடம் வாழ்கவென்று’’ (திலகபாமா- ‘எட்டாவது பிறவி)
4 கருத்துகள் :
Finding less time to spend for reading & living in the mechanical life...Thanks for the continuous & consistent work madam!!!
தொடர்ந்த உங்களுடைய பெண்ணியம் குறித்த தகவல்கள் மிக பயனனுள்ளவைகள். நன்றிங்க.
அன்பின் ஜெயபாண்டியன்,
பெண்ணியம் என்ற இந்தக் குறிப்பிட்ட கருத்தாக்கத்தில் எனக்குச்சற்றுப் பயிற்சி இருப்பதாலும் பலர் இதன் அடிப்படையையே புரிந்து கொள்ளாமலிருப்பதாலும்தான் தொடர்ந்து எழுதுகிறேன்.
இதை எழுத நீங்கள் முன் வைத்த கோரிக்கை அடித்தளமாக அமைந்து விட்டது.அவ்வளவே.
நீங்கள்முதலில் இது பற்றி வாசிக்கத் தொடங்கிய இடம்பற்றி எனக்குச் சிலமாற்றுக் கருத்துக்கள் உண்டு. படிப்படியே பலவற்றைஅறிந்த பின் அங்கு போய்ச் சேர்ந்திருந்தால் அசலும் நகலும் உங்களுக்கு விளங்கியிருக்கும்.
இயந்திர வாழ்வின் அலுப்பை ஓட்டப் படியுங்கள்...எழுதுங்கள் சோர்வு விலகும்
சகோதரி! பெண் விடுதலைப்பற்றி அழகாகச் சொல்லி வருகிறீர்கள். எல்லாமே எல்லோருக்கும் பயனுள்ள பதிவுகள்.
சரி! இனி வரும் காலத்தில் குடும்ப அமைப்புக்கள் எவ்வாறு இருக்கும்? பெண் விடுதலைச் சிந்தனைகள், குடும்பங்களை, சமூக, பொருளாதார, அரசியலை எவ்வாறு பாதிக்கும் என்றும் விரிவன பதிவுகளை இடுங்கள்! படிக்க ஆவல்.
நானும் உங்களை பின் தொடர்பவர்களில் ஒருவனாகி விட்டேன் என்பதை மகிழ்ச்சியுடன் சொல்லிக்கொள்கின்றேன்.
கருத்துரையிடுக