துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

17.9.10

உலைக்களமாகும் உள்ளம்...

சங்கப் பாடல்களிலுள்ள பல உவமைகள் அரிதானவை;அபூர்வமானவை.
கவிஞனின் வலிந்த முயற்சி எதுவுமின்றி இயல்பான வாழ்க்கைத் தளத்திலிருந்து தன்னிச்சையாக ஜனித்து வருபவை.


கச்சிப்பேட்டு நன்னாகையாரின் குறுந்தொகைப் பாடல் ஒன்று.
திருமணத்துக்காகப் பொருள் தேடப் பிரிந்திருக்கிறான் தலைவன்.
(அவனது பிரிவுக்குப் பிற காரணங்களும் இருக்கக் கூடும்;இது உரையாசிரியர்கள் கூறும் காரணம் மட்டுமே)
’காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும் காதல்’துயரமும் அதன் தனிமை ஏக்கமும் தலைவியை வாட்டியெடுக்கின்றன.

மாலை வந்ததன் அறிகுறியாக இரவுப் பறவைகளான வௌவால்கள் பழுத்த மரம் தேடிப் படபடத்தபடி சஞ்சரிக்கத் தொடங்குகின்றன.
துன்பம் தரும் அந்த மாலைப் பொழுதில் தன்னைவிட்டுப் பிரிந்து, தமியனாக இருக்கும் தலைவன் இன்பமாக இருத்தல் சாத்தியமா என்பதை அசை போடும் தலைவி , தான் படும் துயரத்தை வித்தியாசமான ஓர் உவமையில் பதிவு செய்கிறாள்.

சங்கச் சமூகம் போர் முதன்மைப்பட்டது.
வாளும் வேலும் வடித்துத் தரும் கொல்லனின் உலைத்துருத்திக்கு ஓயாமல் வேலை கொடுப்பது.
பொதுவாகவே பரபரப்பாக இயங்கும் கொல்லனின் (ஓரூர் )உலைக் களத்தில்.. ஏழு ஊர்களுக்கு உரிய ஆயுதங்கள் ஒரே வேளையில் ஆயத்தமானால் அப்போது அந்தப் பட்டறையில் இயங்கும் தோலால் செய்யப்பட்ட துருத்தி எந்த அளவுக்கு இடைவிடாது மிதி வாங்கும்...,அதைப் போலத் தன் நெஞ்சம் அலைக்கழிவு பட்டு ஆற்றாமையில் தவிக்கிறது என்கிறாள் தலைவி.


 தளவாடங்கள் ஒட்டுமொத்தமாகத் தயாராகும் இடத்திலுள்ள தோல்துருத்தி, மிதி வாங்கிக் கொண்டே இருப்பதைப் போலத் தலைவனின் பிரிவால் மட்டுமன்றி..., வீட்டிலிருப்பவர்களின் சந்தேகக் கணைகள் ,அண்டை அயலவரின் வம்புப் பேச்சுக்கள்,ஒருவேளை தலைவன் திரும்பாமலே இருந்து விட்டால் தன் நிலை என்னவாகுமோ என்ற நெஞ்சின் தவிப்பு ஆகிய பன்முனைத் தாக்குதல்களால் - தான் அனுபவித்து வரும் அலைக்கழிவுகளையே இந்த உவமையின் வாயிலாகப் பூடகமாக உணர்த்துகிறாள் அந்தப் பெண்.
’’ஏழூர்ப் பொதுவினைக்கு ஓரூர் யாத்த
  உலைவாங்கு மிதிதோல் போலத்
  தலைவரம்பு அறியாது வருந்தும் என் நெஞ்சே’’
(தலைவரம்பு அறியாது -அளவு கடந்த..எல்லை மீறிய துன்பம்)

பாடலின் தொடக்கத்தில் இடம் பெறும்
  ‘’தாஅ அஞ்சிறை நொப்பறை வாவல்
    பழுமரம் படரும் பையுண் மாலை’
என்ற மாலைக் காட்சியில் வௌவால்கள் குறித்த வருணனையும் கூடச் சங்கப் புலமையின் கூர்த்த பார்வைக்குச் சான்றாகவே அமைந்திருக்கிறது.
பிற பறவைகளைப் போலன்றித் தாவித் தாவி..உயர்ந்தும் தாழ்ந்தும் பறந்து செல்லும் இயல்பு கொண்டவை வௌவால்கள்.சன்னமான துணியால் நெய்யப்பட்டது போன்ற இறகுகளைக் கொண்டு நொய்தாகப்(மெத்து மெத்தென்று)பறந்து செல்பவை ;

அவற்றின் இந்த இயல்பைக் கூர்ந்த அவதானிப்புடன் உள்வாங்கிக் கொண்டு
  ‘’தாஅ அஞ்சிறை நொப்பறை வாவல்’’
(தாவிப் பறக்கும் அழகிய சிறகுகள் கொண்ட நொய்தான வௌவால்கள்)என்னும் தொடர் வழி சுட்டுகிறது பாடல்.

வௌவால்கள் கூடப் பழுத்த மரம் நாடிப் போய்விட்ட மாலைப் பொழுதில் தன்னை நாடி வராமல் வரம்பற்ற துயரத்தில் தன்னை ஆழ்த்தி விட்டிருக்கும் தலைவன் ,தான் மட்டும் இனிமை கண்டுவிட முடியுமா என்ற வினாக் குறியின் ஆழ்ந்த சோகத்தோடு முடியும் இந்தச் சங்கப் பாடல் கிளர்த்தும் மெலிதான சோகம் ஒரு புறமிருக்க ,அதைக் காட்சிப்படுத்தலிலுள்ள கவித்துவமே நம்மை இன்னமும் கூடுதலாக ஈர்க்கிறது
பாடல்....
‘’தாஅ அஞ்சிறை நொப்பறை வாவல்
  பழுமரம் படரும் பையுண் மாலை
  எமியமாக ஈங்குத் துறந்தோர்
  தமியராக இனியர் கொல்லோ
  ஏழூர்ப்பொதுவினைக் கோரூர் யாத்த
  உலைவாங்கு மிதிதோல் போலத்
  தலைவரம்பு அறியாது வருந்துமென்நெஞ்சே’’-குறுந்தொகை,172.

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....