5.9.10
கவிதையின் தருணம்
வரகவிகளும், உலக மகா கவிகளும் கூடத் தங்களில் கவிதை நிகழப் போகும் அற்புதமான அந்தக் கணத்தை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருப்பவர்களே.
காரணம்...சொற்களை வெறுமே பிண்டம் பிடித்து வைத்து விடுவதால் மட்டும் கவிதை உருவாகி விடுவதில்லை என்ற சூட்சுமத்தை அவர்கள் புரிந்து வைத்திருப்பதுதான்.
கடும் கோடையில் புழுங்கித் தவிக்கையில் எங்கிருந்தோ ஒரு கணம் வந்து இதமாக முகத்திலறைந்து விட்டுப் போகும் குளிர் தென்றலைப் போல்.....,
பனிநீராகத் தெளிக்கும் மழையின் மிகச் சிறு திவலையைப் போல்....,
சற்றும் எதிர்பாராத ஒரு வேளையில்
எங்கோ தொலைதூரத்தில் மலர்ந்த ஏதோ ஒரு பூவின் மணம் நாசிக்குள் ஊடுருவிக் கொண்டு போவதைப் போல்
கவிதையும் ‘சட்’டென்று ஒருகணப்பிடிமானத்தில் சம்பவிக்கிறது.
அதன் வருகைக்குத் தவம் கிடக்கும் உண்மைக் கவிஞன்
அது நிகழ்ந்து விட்டதென்பதைத் தன் உள்ளுணர்வால் உணர்ந்துகொண்டு அதைப் பற்றிய வண்ணம் மேலேறிச் செல்லுகிறான்.
கவிதைக்காக நோபல் பரிசு பெறும் நிலை வரை உயர்ந்த தாகூரும் கூடக் கவிதை வசப்படாமல் தன்னை அலைக்கழித்த தருணங்களை எதிர்ப்படாமல் இல்லை.
முழுநிலவு நாளொன்றின் மோனமான இராப்பொழுதில் ஆற்றில் படகுச் சவாரி செய்து கொண்டிருக்கிறார் ரவீந்திரர்.
படகுக்குள் சிறிய ஒரு அறை.
தாள்களும் எழுது கோல்களும் அவருக்காகத் தவமிருக்க அவர் கவிதைத் தவம் இயற்றிக்கொண்டிருக்கிறார்.
வார்த்தைகள் வசப்படவில்லை.
கருத்துக்கள் மனப் பொறிக்குள் சிக்கவில்லை.
அறையிலுள்ள மெழுகுவர்த்தியை ஊதி அணைத்து விட்டு வெளியே வந்து நிற்கிறார்.
இரவின் அமைதியும்.....வெண்ணிலவின் பளிங்கு போன்ற ஒளியும் ஆற்று நீரில் அதன் பால் நிழல் பிம்பமும் கண்ணுக்குத் தட்டுப்பட , அவற்றைக்கண்ட அளவில் இத்தனை நேரமும் தடைப்பட்டுத் தேங்கிப் போன கவிதை , மடையுடைத்துக் கொண்டு பீறிடுகிறது அவரிடம்.
இயற்கைக்குள் இருந்துகொண்டே அதனிடமிருந்து தன்னை அந்நியப்படுத்திக் கொண்டிருந்ததது எத்தனை பெரிய பிழை என்ற பாடம் கிடைக்கிறது அவருக்கு.
நல்ல படைப்பாளிகளுக்குத் தனது ஒவ்வொரு படைப்பாக்கமுமே ஒரு பாடத்தைப் புகட்டுவதாகத்தான் இருக்க முடியும்.
சிறந்த படைப்பாளிகளிடம் காணக் கிடைக்கும் மற்றொரு தனித்துவம்
தங்களது எல்லாப் படைப்புக்களுமே தங்கள் சிறந்த படைப்பை உருவாக்குவதற்கான ஒத்திகைகள் என்று மட்டுமே கருதக் கூடியவர்கள் அவர்கள் என்பதுதான்.
‘எனது மிக உயரிய ஆக்கம் வெளிப்படத் தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது’
என்று மட்டுமே ஒரு நல்ல படைப்பாளியால்கூற முடியுமே தவிர அதில் உச்சத்தைத் தொட்டு விட்டதான நிறைவுடன் அவன் ஒருபோதும் பேசுவதே இல்லை.அப்படிப்பட்ட சுய நிறைவு ஏற்பட்டு விட்டால் அந்தக்கட்டத்தோடு அவனது வளர்ச்சி குன்றிப் போய் அவன் தேங்கிப் போய்விடும் அபாயம் நேர்ந்து விடுகிறது.
தனது கீதாஞ்சலி உலகக் கவித்துவத் தரத்தில் மதிப்பீடு செய்யப்பட்டாலும் கூட அதைத் தன் கவித் தேடலின் முடிந்த முடிவாய் ஒருபோதும் கருதிக் கொள்ளவில்லை ரவீந்திர நாத தாகூர்.
’’நான் பாட நினைத்த பாடல் இன்னமும் பாடப்படாமலேயே இருக்கிறது.
சுருதியை மீட்டுவதிலும்....கலைப்பதிலுமே என் காலம் கழிகிறது
பாடலின் அலைவரிசை கையில் சிக்கவில்லை..
சொற்கோவையும்கூடச் சரிவர இயையவில்லை.....
பாடியே ஆக வேண்டுமென்ற தாகம் மட்டும் நெஞ்சினுள்..’’
என்றே தன் ஆதங்கத்தைப் பதிவு செய்கிறார் அவர்.
மெய்யான கலைஞனின் தேடல் பரிசுகளுடனும்,விருதுகளுடனும்,அங்கீகாரங்களுடனும் திருப்தி உறுவதில்லை.
தன் ஆத்மாவின் தேடலை முழுமையாகத் தன் படைப்பில் இறக்கி வைக்கும் வரை ஒரு நிறைவின்மை அவனை ஆட்டிப் படைத்துக்கொண்டுதானிருக்கிறது.
கவி தாகூரின் தேடலும் அவ்வாறான முடிவற்ற ஒரு தேடலே
நன்றி;
கட்டுரையை வெளியிட்ட ’வடக்கு வாசல்’ (ஆக.2010)இதழுக்கு..
http://www.vadakkuvaasal.com/article.php?id=640&issue=74&category=4
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
2 கருத்துகள் :
வார்த்தைகளெல்லாம் ஏதோ புல்லாங்குழலில் இருந்து பயணிக்கும் இசையைப் போல வழுக்கி கொண்டு விழுகின்றன உங்கள் விரல்களின் வழி...படிக்கவே சுகமாய் இருக்கிறது அம்மா...நன்றி.
மிகவும் அருமை.நன்றி.
கருத்துரையிடுக