துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி
அசடன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அசடன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

6.6.19

அசடன் - மொழிபெயர்ப்பு வாசிப்பும்,உரையாடலும் சுவிஸ்ஸில்..

தஸ்தயேவ்ஸ்கியின் "அசடன்"  மொழிபெயர்ப்பு குறித்த உரையாடலும் வாசிப்பும் சுவிஸ் நாட்டில் நிகழவிருப்பதாக அங்கிருந்து எனக்கு எழுத்தாளர்  றஞ்சி அவர்கள் அனுப்பிய செய்தியும்,அறிவிப்பும்


வாசிப்பும் உரையாடலும் - சுவிஸ் -நிகழ்வு 22
தஸ்தயேவ்ஸ்கியின் "அசடன்" புத்தக உரையாடலும் கோடை கால கலந்து மகிழ்வும்.
1200 பக்கங்களில் எம்.ஏ.சுசீலாவின் தமிழ் மொழிபெயர்ப்பில் அசடனின் உலகம் விரிந்திருக்கிறது.
இந்த உலகத்தை அதன் சிந்தனைப் போக்குகளை உணர்வுகளை வாழும் மனிதர்கள் கொண்டிருக்கும் யதார்த்தத்தை அவர்கள் காணும் உண்மையை முற்றாக நிராகரிக்கிறான் இந்த அசடன். அவனது உண்மை அவர்களது யதார்த்தத்திலிருந்து முற்றாக வேறுபட்டிருக்கிறது. முற்றிலும் புதிதான ஒரு யதார்த்தத்தைக் காண விரும்பி அதை அவர்களிடம் எதிர்பார்ப்பதினால் அவன் அவர்களின் எதிரியாகிப் போகிறான்.



21.7.16

ரஷ்யப்பயணம்


குற்றமும்தண்டனையும், அசடன் ஆகிய நாவல்களை மொழிபெயர்த்ததிலிருந்து தஸ்தயெவ்ஸ்கியின் மண்ணை.,.டால்ஸ்டாயின் பூமியை தரிசிக்க வேண்டும்…,.ரஸ்கோல்னிகோவும், அசடன் மிஷ்கினும் அவர்களின் எண்ணங்களோடும் கனவுகளோடும் சஞ்சரித்த இடங்களைக் காணவேண்டும் என்ற தீராத ஆசை! ,அதை நிறைவேற்றிக்கொள்ளும் தருணம் இப்போதுதான் கிடைத்திருக்கிறது. ரஷ்யப்பயணம் செல்கிறேன்..மாஸ்கோ மற்றும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நோக்கி !.ஆறு நாட்கள்.,அற்புத அனுபவங்கள் வாய்க்கக்கூடும் என்ற தீராத கனவுகளோடு…


செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்
மாஸ்கோவின் செஞ்சதுக்கம்

14.8.15

எழுத்தென்னும் சிற்றகல்...


நான் செய்து வரும் தஸ்தயெவ்ஸ்கி மொழிபெயர்ப்பு வரிசையில்

                                                குற்றமும் தண்டனையும்,


                                                               அசடன்

என்னும் இரு பெரும் நாவல்கள் முன்பு வெளிவந்தன.

தற்போது  மூன்றாவதாக 
‘’'தஸ்தயெவ்ஸ்கி கதைகள்'’’
என்னும் குறுங்கதை மொழியாக்கத் தொகுப்பு நற்றிணை பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது.

அதற்கு நான் எழுதியுள்ள முன்னுரை......

எழுத்தென்னும் சிற்றகல்...

மனிதமனங்களின் ஆழங்காண முடியாத இருட்டு மூலைகளை அவற்றுள் பொதிந்திருக்கும் மகத்துவங்களை எழுத்தென்னும் சிற்றகலால் துலக்கி அவற்றின் மீது மனித நேய ஒளிக்கற்றைகளைப் பாய்ச்சிய உலக இலக்கியப் பெரும்படைப்பாளி, ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கி. அவரது ஒவ்வொரு படைப்பையும் படிக்க நேரும் கணமும்,அதை விட நுண்மையாய் வாசித்து அதைத் தமிழில் பெயர்க்கும் கணமும் என் வாழ்வுக்கு அர்த்தம் சேர்ப்பவை; என் அகத்தை விசாலப்படுத்தி அகந்தையைச் சிதைத்துப்போடுபவை. 

தஸ்தயெவ்ஸ்கியின் மொழிபெயர்ப்பில் முனையும்போது அவரது எழுத்துக்குள் அணுக்கமாகச் செல்லமுடிவதும், அவர் பெற்ற அகக்காட்சிகளை அவர் உணர்த்த விரும்பிய செய்திகளை அவரது அலைவரிசைக்குள்ளேயே சென்று இனம் காணமுடிவதும் ஓர் அரிய அனுபவம். திரும்பத் திரும்ப அவரது வெவ்வேறு ஆக்கங்களைத் தமிழில் தரும் முயற்சியில் நான் என்னை ஈடுபடுத்திக்கொள்வதற்கான காரணம் அதுவே. தனது மிகப்பெரிய நாவல்களில் மட்டுமன்றி சிறுகதைகள்,குறுநாவல்கள் ஆகியவற்றின் வழியாகவும் கூட சாமானியர்களின் வாழ்விலிருந்து நாம் பெறக்கூடிய மாபெரும் தரிசனங்களை அவர் நமக்குக்காட்சிப்படுத்தி விட்டுப்போயிருக்கிறார். அத்தகைய சில படைப்புக்களை என் ஆங்கில வழி தமிழ் மொழிபெயர்ப்பில் தொகுப்பாக்கி வெளியிடுவதில் குறிப்பான ஆர்வம் காட்டி என்னையும் அச்செயலில் விரைவாக முனைவதற்குத் தூண்டிய நண்பர் திரு யுகன் அவர்களுக்கும் இந்நூலை சிறப்பாக வெளியிடும் அவரது நற்றிணை பதிப்பகத்தார்க்கும் என் நன்றி

2.11.14

விட்டலனின் வாசிப்பில் அசடன்

திரு தேவராஜ் விட்டலன் -

இளம் தலைமுறையின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் ஒரு கவிஞர்;கதைஞர்.கட்டுரையாளர். அயராத தொடர்ச்சியான வாசிப்பை மட்டுமன்றி தொடர் எழுத்துமுயற்சியையும் ஒரு வேள்வியாகக் கொண்டிருப்பவர். வடக்கு வாசல்,கணையாழி,பயணம் முதலிய இதழ்களில் இவரது கவிதைகள்,கட்டுரைகள் மற்றும் சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன.மாற்று சினிமா மற்றும் உலகத் திரைப்படங்கள் மீது தணியாத ஆர்வம் கொண்டிருப்பவர்.

இந்திய இராணுவத்தில் பணியாற்றும் எங்கள் ஊருக்குப்பக்கத்து ஊர்க்காரரான [மதுரை-திருமங்கலம்]விட்டலனின் அறிமுகம் தில்லியில் இருக்கும்போதுதான் எனக்கு நேர்ந்தது. பழகத் தொடங்கிய நாள் முதல் ஒரு மகனைப்போன்ற பாச உணர்வுடன் என்னுடனும் எங்கள் குடும்பத்துடன் பிணைந்து விட்ட விட்டலன் என் எழுத்து மற்றும் மொழியாக்க முயற்சிகளிலும் ஆர்வம் கொண்டு அவற்றின் மீதான தன் கருத்துக்களை அவ்வப்போது பதிவு செய்து என்னைத் தொடர்ந்து உற்சாகமாக இயங்க வைத்துக்கொண்டிருப்பவர்.குற்றமும் தண்டனையும்மொழிபெயர்ப்பை ஒரேமூச்சில் முடித்து விட்டு அசடன் எப்போது வரும் என்று என்னைத் துளைத்தெடுத்துக்கொண்டிருந்தவர்.  விருதுநகர்-மல்லாங்கிணறு பகுதியிலிருந்து வெளிவரும் பயணம் இதழில் ‘சங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம்’என்னும் தொடரை நான் தொடர்ந்து எழுதி வருவதற்கு அடிப்படைக்காரணமே தேவராஜ் விட்டலன்தான்.

அவரது படைப்பிலக்கிய ஆர்வத்தையும் என் மீது அவர் கொண்டிருக்கும் பாசத்தையும் உணர்ந்திருந்த வடக்கு வாசல் இதழின் ஆசிரியர் திரு யதார்த்தா பென்னேஸ்வரன் ,என் தேவந்தி சிறுகதைத் தொகுப்பை வடக்கு வாசல் வெளியீடாக - 2011இல் முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்களைக்கொண்டு தில்லி தமிழ்ச்சங்கத்தில் நடத்தியபோது முதல்பிரதியைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை விட்டலனுக்கு வழங்கி சிறப்பித்தார்.

தேவந்தியைப் பெறும் விட்டலன்

விட்டலனின் வாசிப்பில் அசடன் மொழிபெயர்ப்பு குறித்த அவரது கருத்துக்களை அவரது தளத்திலிருந்து இங்கே பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.

படித்ததை பகிர்வோம் – அசடன்

’’தமிழின் மிகவும் எளிமையான, இனிமையான, வளமான நடையில் மொழி பெயர்த்துள்ளார் பேராசிரியை எம்.ஏ. சுசிலா அவர்கள். ஏற்கனவே குற்றமும் தண்டனையும் நாவலை தமிழில் மொழி பெயர்த்தவர். கனடா இலக்கியத் தோட்டம் விருது, திசை எட்டும் விருது, ஜி.யு. போப் விருது என அசடன் நாவலுக்கு பல விருதுகள் கிடைத்துள்ளன. இலக்கியத்தையும், சமுதாயத்தையும், மனிதத்தையும் நேசிக்கும் அனைவரும் படிக்க வேண்டிய மிக மிக முக்கியமான நாவல் அசடன்.’’
அசடன் நூலை ( நாவலை ) கடந்த ஒரு வருடமாக தூக்கிக் கொண்டு திரிந்த எனக்கு அந்நாவலை முழுமையாக உணர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆவல் பல நாட்களாக இருந்து வந்தது. பனி விழுந்து கொண்டிருக்கும் காஷ்மீரின் ஜனவரி மாத இறுதியில் அசடன் நவலை படிக்கத் துவங்கினேன்.
அனைவரையும் நேசிக்கவும், தனக்கு துன்பம் தருபவர்களை மன்னிக்கவும், எளிமையான சாந்தமான குணத்தோடும் முற்போக்கு சிந்தனைகளைக் கொண்ட மிஷ்கின் தனது அதீதமான உணர்ச்சிகளின் அலைக்கழிப்பால் சராசரி மனிதனாக வாழ இயலாமல் துன்புறுகிறான். சராசரி மனிதர்களோடு ஒப்பிடுகையில் அவன் முட்டாளாக உள்ளான்.
இளவரசன் மிஷ்கின் பரம்பரையில் வந்த ‘ லேவ் நிகலெயவிச் மிஷ்கின் ’ ஸ்விட்சர்லாந்திலிருந்து பீட்டர்ஸ்பெர்க் நகரத்திற்கு வருகிறான். பீட்டர்ஸ்பெர்க் நகரத்தில் இருக்கும் ‘ லிசாவெதா ப்ரகோஃபியன்னா ’ வை சந்திக்க வேண்டியும், அவர் தனக்கு ஆறுதல் அளிப்பார் என்ற நம்பிக்கையுடனும் இரயிலில் பயணித்து
வருகிறான்.
இரயில் பயணத்தில் ரோகோஸின்னையும், லெபதேவையும் சந்திக்கிறான். ரோகோஸின் தான் திருமணம் செய்யப் போகும் நஸ்டாஸியா பற்றி நிறையப் பேசுகிறான். பார்க்க மிகவும் பரிதாபமான தோற்றத்தோடு இருக்கும் மிஷ்கினை, தன்னை இளவரசன் எனக் கூறிக் கொண்டிருக்கும் மிஷ்கினை பரிகாசத்தோடு அனைவரும் பார்க்கிறார்கள். அவனை கேலி செய்கிறார்கள். இருப்பினும் மிஷ்கின் அப்பொழுதும்
அவர்களுக்கு தனக்கான பதிலை மிகவும் சாந்தமாக சொல்லிக் கொண்டிருக்கிறான்.
பீட்டர்ஸ்பர்க் நகருக்கு வந்ததும், தளபதி இவான் ஃபியோதரவிச் இபான் சினை சந்திக்கிறான். தளபதி இபான்சின் இராணுவத்தில் மிக முக்கியமான பதவியில் இருப்பவர். மிஷ்கின் தன்னை அறிமுகம் செய்து கொண்டு, தான் மிஷ்கின் பரம்பரையில் வந்தவன் எனவும், லிசாவெதா ப்ரகோஃபியன்னாவை சந்திக்க ஆவலோடு இருப்பதாகவும் கூறுகிறான். அவனை சந்தேகத்தோடு முதலில் பார்த்த இபான்சின், மிஷ்கினின் அறிவார்ந்த பேச்சைக் கேட்ட பின்னர், அவனை தனது குடும்பத்தினரைச் சந்திக்க அனுமதிக்கிறார்.
இபான்சினை சந்திக்கும் பொழுது அங்கே இருந்த கன்யாவையும் சந்திக்கிறான் மிஷ்கின். அவர்கள் நஸ்டாஸியா ஃபிலிபோவ்னா வைப் பற்றி பேசுகிறார்கள். அவளது புகைப்படம் அங்கு தொங்கிக் கொண்டிருந்தது. அழகிய முகம், ஆனால் பரிதாபமானவள் என அவளைப் பற்றி மிஷ்கின் கூறுகிறான். உனக்கு எப்படி நஸ்டாஸியா ஃபிலிபோவ்னாவை தெரியும் என இபான்சினும் , கன்யாவும் கேட்கின்றனர். அதற்கு இரயிலில் வரும்போது ரோகோஸின் மூலம் நஸ்டாஸியா வைப் பற்றி அறிந்து கொண்டதாகக் கூறுகிறான். அவளது அழகிலும், அந்த முகத்தில் மறைந்திருக்கும் ஏக்கத்தையும் பார்த்து அதனால் கவரப்பட்டு அவளைக்
காதலிக்கத் துவங்குகிறான் மிஷ்கின்.இங்கே நஸ்டாஸியா ஃபிலிபோவ்னா வைப் பற்றி கொஞ்சம் கூறியாக வேண்டும். நஸ்டாஸியா ஃபிலிபோவ்னா நாவலின் மிக முக்கியமான கதாபாத்திரம். டாட்ஸ்கி என்ற பெரும் செல்வந்தனின் அலுவலகத்தில் பணிபுரிந்து இறந்து போன அலுவலரின் மகள் நஸ்டாஸியா. அழகி. முதலில் நஸ்டாஸியாவை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட டாட்ஸ்கி, பின் அவளது அழகில் மயங்கி அவளது
வாழ்வை நாசமாக்குகிறார். நஸ்டாஸியா ஃபிலிபோவ்னாவிற்கு விபரம் தெரிந்த பின் தன் வாழ்க்கை மிகவும் அர்த்தமற்ற ஒன்று எனவும், யாருக்கும் தன்னால் எந்தப் பயனும் இல்லை என எண்ணிக் கொண்டு, தன்னை இந்த நிலைமைக்கு ஆக்கிய டாட்ஸ்கியை துன்பப்படுத்துகிறாள். பின்னால் மனநலம் பாதிக்கப்பட்டவள் போல் நடந்து கொண்டு தன்னை மிகவும் நேசிக்கும் மிஷ்கினையும், ரோகோஸின்னையும்
அலைக்கழிக்கிறாள்.
இபான்சின் குடும்பத்தில் மூன்று அழகிய பெண்கள் உள்ளார்கள். மூவரும் இபான்சின் குழந்தைகள். அவர்கள் அலெக்ஸாண்ட்ரா இவானோவா, அடிலெய்டா இவானாவோ, அக்லேயா இவானாவோ. இவர்களில் அக்லேயா மிகவும் அழகியாகவும், குறும்புத்தனம் நிறைந்த பெண்ணாகவும் உள்ளாள். முதலில் மிஷ்கினைப் பார்த்து எப்போதும் கேலி செய்து கொண்டு இருந்தாலும், பின்னாளில் மிஷ்கினை காதலிக்கத் தொடங்குகிறாள். காதல் திருமணம் வரை செல்கிறது. மிஷ்கினின் உடல் நலக் குறைவால் திருமணம் தடைபடுகிறது. இன்னும் எத்தனையோ கதாபாத்திரங்கள் நாவலில் நிறைந்துள்ளன.
மலைகளையும், இயற்கையையும் ரசிக்கிறான். மனித மனத்தில் குவிந்து கிடக்கும் அழுக்குகளை சுட்டிக் காட்டுகிறான். செ­னிடரின் மருந்துவமனையில் மன நோயாளியாக இருந்த பொழுது அந்த கிராமத்தில் இருந்த காச நோயால் பாதிக்கப்பட்ட ஏழைப் பெண்ணான மேரியின் கதையை கூறும் பொழுது மனம் நெகிழ்வுறுகிறது.
ஊரே வெறுத்து ஒதுக்கிய அந்த பெண்ணை மிஷ்கின் தன் அன்பின் வழியாக நேசித்து அவளுக்கு உதவி புரிகிறான். மிஷ்கின் வழியாய் தங்கள் தவறினை உணர்ந்த ஊர் மக்கள் பின்னால் மேரிக்கு உதவி செய்கின்றனர். குழந்தைகளை அவளோடு பேச அனுமதிக்கின்றனர். நாவலில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளும் உள்ளன. நஸ்டாஸியா ஃபிலிபோவ்னாவின் விருந்தில் ஒரு விளையாட்டு விளையாடப்படுகிறது. அது, வாழ்வில் தான் இதுவரை செய்த மோசமான செயலைப் பற்றி அனைவரின்
முன்பும் எந்த ஒரு ஒளிவுமின்றி சொல்ல வேண்டும் என்ற நிபந்தனையோடு. ஒவ்வொருவரும் தன் வாழ்வில் தான் செய்த மோசமான செயல்களை, வருந்தத் தக்க செயல்களை கூறுகின்றனர்.
கதையின் நாயகனான மிஷ்கின் உண்மையின் வடிவமாகவும், மன்னிக்கும் மனப்பான்மையோடும் வாழ்கிறான். தஸ்தயேவ்ஸ்கி இயேசுவை மனதில் நிறுத்திக் கொண்டுதான் மிஷ்கின் என்ற கதாபாத்திரத்தை உருவாக்கினார் என கூறப்படுவதும் உண்டு.நஸ்டாஸியா ஃபிலிபோவ்னா தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி விட்டு ரோகோஸின்னோடு ஓடிவிட்டாலும் அவளுக்காக வருத்தப்படுகிறான். அவள் நல்ல மனம் படைத்தவள் எனவும் கூறுகிறான். அக்லேயாவுடன் ஆன மிஷ்கினின் திருமண நிச்சயதார்த நிகழ்வைப் படிக்கும் போது மனம் முழுவதும் ஒரு பதட்டம் நிரம்பி விடுகிறது. தன்னை முழுமையான மனதோடு காதலிக்கும் அக்லேயா வை மிஷ்கின் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நாவலைப் படிக்கும் வாசகர்கள் மனதில் எண்ணத் தோன்றுகிறது,ஆனால் நாவலில் அவ்வாறு நிகழவில்லை.
நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பாவ்லிஷ்ட்டேவ் ( மிஷ்கினை வளர்த்தவர். மிஷ்கினை மருத்துவரின் கண்காணிப்பில் விடும் வரை அவனுக்கு பாதுகாப்பாய் இருந்தவர் ) பற்றிய அவதூறான பேச்சை கேட்க இயலாமல், மிஷ்கின் மனதினுள் அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகளை எல்லாம் கொட்டித் தீர்த்தான். மிஷ்கினின் பேச்சு ஆவேசம் மிக்கதாய் இருந்தது. அவன் நடுங்கிக் கொண்டும், வார்த்தைகளை சரியாக உச்சரிக்க இயலாமல் மூச்சு வாங்கிக் கொண்டும் தொடர்ந்து பேசுகிறான். அவனது இந்த திடீர் ஆவேசத்தை தொலை தூரத்தில் இருந்து கொண்டு நடுங்கிக் கொண்டே கேட்டுக் கொண்டிருக்கிறாள் அக்லேயா. விருந்தினர்கள் பார்வையில் அவன் முட்டாளாகத் தெரிந்தாலும், அவனது பேச்சில் உன்னதமான கருத்துக்கள் வந்து கொண்டிருந்தன. பேச்சுத் திறமையை விடவும், நேர்மையாக பேசும் குணம்தானே வேண்டும் எனவும், தலைவர்களாக வேண்டுமென்றால், நாம் வேலைக்காரர்களாக இருப்போம் எனவும் குறிப்பிடுகிறான்.
இவ்வாறு தொடர்ந்து ஆவேசமாக பேசிக் கொண்டிருக்கும் போதே தள்ளாடி கீழே விழுகிறான். தஸ்தயேவ்ஸ்கி அந்தக் காட்சியை இவ்வாறு விவரிக்கிறார்.அக்லேயா மிக விரைவாக அவனிடம் ஓடினாள். சரியான சமயத்தில் அவனை தன் கைகளில் தாங்கிக் கொண்டாள். அவள் முகமெல்லாம் பயத்தால் உருக்குழைந்து, சிதைந்து போனபடி நடுங்கிக் கொண்டிருந்தது. அவள் துரதிருஷ்டசாலியான அந்த மனிதனின் ஆத்மா வீழ்த்தப்படும் ஓலத்தை கேட்டாள். நாவலின் இறுதியில் மிஷ்கின் மீண்டும் மன நோயாளியாக ய­னிடரிடமே
வந்து சேர்கிறான்.நாவலை முழுமையாகப் படிக்கும் பொழுது பல உணர்வுகள் மனதில் வந்து குடியேறுகின்றன. பரந்து விரிந்த விவரணைகள், ஒவ்வொரு காட்சியையும், மனிதர்களையும் தஸ்தயேவ்ஸ்கி விவரித்திருக்கும் முறைகள் மனதைக் கவர்கினறன. தன்னை ஒரு மகா கலைஞன் என்று நூற்றாண்டுகள் கடந்தும் நிரூபித்துக் கொண்டுள்ளார் தஸ்தயேவ்ஸ்கி. நாவலின் முதல் நூறு பக்கங்களை படித்துக் கடந்துவிட்டால், உலகெங்கும் உள்ள மனிதர்களின் உணர்வுகள் ஒன்று போல்தான் இருக்கின்றன என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
தஸ்தயேவ்ஸ்கியை புரிந்து படிப்பதே சிரமமான காரியம். ஏனெனில் மனிதனின் மன ஆழத்தை துளைத்து, அவற்றுள் உள்ள எண்ணங்களை எழுதியவர். அத்தகைய எழுத்துகளை மொழிபெயர்ப்பது எளிமையான செயல் அல்ல. தமிழின் மிகவும் எளிமையான, இனிமையான, வளமான நடையில் மொழி பெயர்த்துள்ளார் பேராசிரியை எம்.ஏ. சுசிலா அவர்கள். ஏற்கனவே குற்றமும் தண்டனையும் நாவலை தமிழில் மொழி பெயர்த்தவர். கனடா இலக்கியத் தோட்டம் விருது, திசை எட்டும் விருது, ஜி.யு. போப் விருது என அசடன் நாவலுக்கு பல விருதுகள் கிடைத்துள்ளன. இலக்கியத்தையும், சமுதாயத்தையும், மனிதத்தையும் நேசிக்கும் அனைவரும் படிக்க வேண்டிய மிக மிக முக்கியமான நாவல் அசடன்.
*****
நூல் வெளியீடு : பாரதி புக் ஹவுஸ், E – 59 / 3 -4, மாநகராட்சி வளாகம்
பெரியார் பேருந்து நிலையம், மதுரை ‡ 625 001
அலைபேசி : 97893 36277
*****

தொடர்புள்ள பதிவுகள்;
அசடன் - விருதுகள்
இரண்டு பயணங்கள்


17.1.14

தினமணி சென்னைப்பதிப்பில் ...

சென்னையில் நடைபெறும் புத்தகக்கண்காட்சியை ஒட்டி..

18.1.2014 தேதியிட்ட தினமணி சென்னைப்பதிப்பில் வெளியாகி இருக்கும் என்னுடனான .[தொலைபேசி வழி] உரையாடலின் பதிவு..

உணர்வுப்பூர்வமான கலை மொழியாக்கம்

தமிழின் மிக முக்கியமான மொழிபெயர்ப்பாளர் எம்.ஏ.சுசீலா. உலகப் பேரிலக்கியமான ஃபியோதர் தஸ்தயேவஸ்கியின் "குற்றமும் தண்டனையும்', "அசடன்' ஆகிய இரண்டு நாவல்களைத் தமிழாக்கம் செய்தவர். "கீழுலகின் குறிப்புகள்' நாவலையும் தற்போது தமிழாக்கம் செய்து வருகிறார். அவரிடம் பேசினோம்:
நல்ல மொழிபெயர்ப்பின் இலக்கணம் என்ன?
மூலத்தைச் சிதைக்காமல் கொடுப்பதாகும். அது ஒரு மொழிபெயர்ப்பு என்ற உணர்வு படிப்பவருக்கு ஏற்படக்கூடாது. கதாபாத்திரங்களின் பெயர்கள், இடங்களைப் பற்றிய வர்ணனைகள் வேறுபாடாக இருக்கலாம். ஆனால் மனித உணர்வுகளைச் சரியாக தமிழ் மொழிக்குக் கடத்திவிட்டாலே போதும். அது அந்நிய மொழி படைப்பு என்ற உணர்வு தோன்றாது. உலகம் முழுவதும் மனித உணர்வுகள் என்பவை பொதுவானவைதான். எனவே மூலத்தில் உள்ள உயிரோட்டத்தை, உணர்ச்சிக் கொந்தளிப்பை, அதன் தரிசனத்தை அப்படியே தக்க வைப்பதே சரியான மொழிபெயர்ப்பாகும்.
ஒரு படைப்பை மொழியாக்கம் செய்வதன் வழியாக மொழிபெயர்ப்பாளர் அடைவது என்ன?
முதலில் நான் ஒரு சிறுகதை எழுத்தாளராகவே இலக்கியப் பணியைத் தொடங்கினேன். 80-க்கும் மேற்பட்ட கதைகள் பத்திரிகைகளில் வெளிவந்தன. 2008-ஆம் ஆண்டு தான் "குற்றமும் தண்டனையும்' நாவலை மொழிபெயர்த்தேன். அதற்குப் பிறகு "அசடன்' மொழிபெயர்த்தேன். முதல் முயற்சியாக "குற்றமும் தண்டனையும்' நாவலை மொழிபெயர்த்தபோது, என்னுடைய சொந்த படைப்புத்திறனை இழந்துவிடுவேனோ என்ற அச்சம் இருந்தது. ஆனால் மொழிபெயர்த்து முடித்த பிறகுதான் எனது மொழியைக் கூர்மைப்படுத்த அது உதவியிருக்கிறது என்று புரிந்தது. மொழிபெயர்ப்புக்காக திரும்பத்திரும்ப அந்நாவலைப் படிக்கும்போது, தஸ்தயேவஸ்கி சொல்லும் விஷயத்துக்குப் பக்கத்தில் போக முடிந்தது. அதனால் சொந்தமாக வேறு படைப்பு எழுதும்போது என்னுடைய பார்வை விசாலப்பட்டது. மொழியாக்கத்துக்குப் பொருத்தமாக வேறுவேறு சொல்லைத் தேட வேண்டியிருந்தது. தமிழில் சொற்களுக்குப் பஞ்சமே இல்லை. அதனால் ஒரே சொல்லைப் பயன்படுத்தாமல் வெவ்வேறு சொற்களை பயன்படுத்தும்போது, என்னுடைய மொழியும் வளப்படுகிறது என்பதை உணர்ந்துகொண்டேன்.
ஒரு படைப்பின் வேர்களை மொழியாக்கத்தின் மூலம் தொட்டுவிட முடியும் என்று கருதுகிறீர்களா?
படைப்பின் வேர்களைத் தொடுவதற்கு முயற்சிகள் செய்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும். சொந்த படைப்பை எழுதினாலும்கூட, அது ஒரு சில மனங்களையே தொடுகிறது. ஒத்த அலைவரிசை இல்லாத மனங்களைத் தொடுவதே இல்லை. அது எல்லாவற்றுக்கும் பொருந்தும் என்றே கருதுகிறேன்.
கலாசாரம், பண்பாட்டு ரீதியாக ஒரு படைப்பு வேறுபட்டிருக்கிறது என்பதற்காகவும், நீடித்த விவரணை என்பதற்காகவும் ஒரு மொழிபெயர்ப்பாளன் அந்தப் படைப்பைச் சுருக்கலாமா?
சுருக்கக் கூடாது. முன்பு அப்படிச் செய்துகொண்டிருந்தனர். அசடன், கரம்úஸாவ் சகோதரர்கள்கூட அப்படி தமிழில் வந்துள்ளது. சுருக்குவதால் நிச்சயம் ஜீவன் இல்லாமல் போய்விடும். ஒரு நாவலின் பல்வேறு பரிமாணங்களை தஸ்தயேவஸ்கி விஸ்தீரணம் செய்ய விரும்புகிறார். அந்த விஸ்தீரணத்தைக் குறைப்பதற்கு மொழிபெயர்ப்பாளருக்கு எந்த உரிமையும் இல்லை. சில பதிப்பகங்கள் கேட்பதாலும், சின்ன புத்தகமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் அப்படிச் செய்கின்றனர்.
அயல் மொழியில் இருந்து தமிழாக்கம் செய்யப்படும் அளவு, தமிழ்ப் படைப்பாளிகளின் நூல்கள் பிறமொழிகளில் மொழியாக்கம் செய்யப்படாதது, ஏன்?
அதற்கான முயற்சி எடுக்காதது காரணமாக இருக்கலாம். வேறு மொழிக்குப் படைப்பைக் கொண்டு செல்வதற்கான ஆற்றலைப் படைப்பாளிகள் வளர்த்துக் கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதாக இருக்கலாம். கல்கத்தா கிருஷ்ணமூர்த்தி நிறைய தமிழ் படைப்புகளை வங்காள மொழிக்குக் கொண்டு சென்றார். இதற்கு பன்மொழி ஆளுமை தேவையாக இருக்கிறது. அதனால் படைப்பாளிகளோ அல்லது மொழிபெயர்ப்பு செய்பவர்களோ அந்த ஆளுமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். வேறு மொழி தெரிந்தவர்களுக்கு படைப்பு ஊக்க மனநிலை இருக்க வேண்டும். மொழியாக்கம் செய்வதும் ஒரு படைப்புப் பணிதான். இந்த மனநிலை உள்ளவர்கள் குறைவாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
"குற்றமும் தண்டனையும்', "அசடன்' இதில் எதன் மொழியாக்கம் சிரமமாக இருந்தது?
அசடனோடு ஒப்பிடும்போது, குற்றமும் தண்டனையும் சிறியதுதான். இது நேர்ப்போக்கில் போகும் கதை. குற்றம் செய்துவிட்டு, அது தொடர்பாக ஒருவனுக்கு ஏற்படும் உளவியல் சிக்கலைச் சொல்லும் கதை. அதை 8 மாதத்தில் மொழிபெயர்த்துவிட்டேன். ஆனால் அசடன் கிட்டத்தட்ட ஒன்றரை வருஷம் எடுத்தது. அது திருகலான படைப்பு. நிறைய பாத்திரங்கள். மனச்சிக்கல்கள். நிறைய பிரெஞ்சு சொற்றொடர்கள் இருந்தன. அதனால் நிறைய பணியாற்ற வேண்டியது இருந்தது. ஆனால் குற்றமும் தண்டனையுமுக்குத்தான் நிறைய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தேன். வாசகர் மத்தியில் அதற்கு நிறைய வரவேற்பு இருந்தாலும், அசடனே என்னை விருதுகள் பெறும் வரை அழைத்துச் சென்றது.
எம்.ஏ.சுசீலா மொழிபெயர்ப்பாளர்

27.8.13

ஜி.யூ.போப்மொழிபெயர்ப்பு விருது-காணொளி




எஸ் ஆர் எம் பல்கலையில் தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் விழாவில் அறிமுகத்திற்காக உருவாக்கப்பட்ட காணொளிக் காட்சி -  இணைப்பில் .....
http://www.youtube.com/watch?v=qAyrjg2S-Xc

21.8.13

திசைஎட்டும் விருதுநிகழ்வு


18.8.2013 அன்று கடலூரில் நடைபெற்ற நல்லி - திசை எட்டும் ’’பாஷா பூஷண்’’ மொழியாக்க விருதுகள் வழங்கும் விழாவில்தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன் பரிசு பெற்றோருக்கு விருதுகளை வழங்கினார்.


என் மொழியாக்கத்தில் பாரதி புத்தக வெளியீடாக வந்திருக்கும் தஸ்தயெவ்ஸ்கியின் ‘அசடன்’ நாவல் மொழிபெயர்ப்பும் விருது பெற்றது.

3.8.13

’அசடன்’- மேலும் ஒரு விருது

தஸ்தயெவ்ஸ்கி மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறார்....

காலத்தால் அழியாத அவரது இடியட் நாவலின் மொழியாக்கமான ‘அசடன்’ மூன்றாவதாக ஒரு விருதை வென்றிருக்கிறது. 
எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயம் வழங்கும் மொழியாக்கத்துக்கான ஜி யூ போப் விருது ‘அசடன்’ மொழியாக்கத்துக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இது வரை ’அசடன்’ மொழியாக்கத்துக்குக் கிடைத்துள்ள விருதுகள் மூன்றாகியிருக்கின்றன ;

1.னடா இலக்கியத் தோட்ட விருது
2.திசை எட்டும் விருது
3.ஜி யூ போப் விருது

28.7.13

இரண்டு பயணங்கள்

நன்றி;
[கட்டுரையை வெளியிட்டிருக்கும் வட அமெரிக்கத் தமிழ்ப்பேரவை 26ஆவது ஆண்டு மலருக்கும்,கட்டுரையை அனுப்பக்கோரிய எழுத்தாளர் திரு அ.முத்துலிங்கம் அவர்களுக்கும்....]


சிறுகதைப்படைப்புக்களையும் கட்டுரைகளையும் மட்டுமே அவ்வப்போது முயன்று பார்த்திருந்த நான் மொழியாக்க முயற்சியில் முனைய நேர்ந்தது ஒரு தற்செயல்.  ஃபியோதர் 
தஸ்தயெவ்ஸ்கியின்   குற்றமும் தண்டனையும்’,‘அசடன் என்ற இரண்டு உலகப்பேரிலக்கியங்களை அடுத்தடுத்து மொழி பெயர்க்க நேர்ந்தது,’வாராது போல் வந்த மாமணியாய் வாய்த்த அடுத்ததொரு ஒரு தற்செயல். 


சொந்தப்படைப்புக்களை உருவாக்கும் அளவுக்குப் பதற்றங்கள் அற்ற அமைதியான ஒரு சூழலையோ மனநிலையையோ உருவாக்கிக்கொள்ள முடியாத ஒரு காலகட்டத்தில், எழுத்தோடும், மொழியோடும் கொண்டிருந்த நீண்டநாள் தொடர்பை விட்டுவிடாமல் தக்க வைத்துக்கொள்வதற்காக மட்டுமே கைக்கொள்ளப்பட்ட இந்த இரண்டு மொழியாக்க முயற்சிகளும் மறக்க முடியாத சுவடுகளைப் பதிக்கப்போகும் குறிப்பிடத்தக்க இருபெரும் பயணங்களாக அமையவிருக்கின்றன என்பதை அப்போது நான் எதிர்பார்த்திருக்கவில்லை.

மொழியாக்கமும்கூடப்படைப்பிலக்கியம் சார்ந்த ஒரு கலையே என்பதை அறிந்து வைத்திருந்தபோதும், ஓரளவு எஞ்சியிருக்கும் சொந்தப் படைப்புத் திறனையும் கூட  மழுங்கடித்துவிடக்கூடிய இயந்திரத்தனமான ஒரு செயலாக அது ஆகிவிடுமோ என்னும் அச்சமும், மனத்தடையும் தொடக்க நிலையில் என்னைக் கொஞ்சம் ஆட்டிப்படைத்துக்கொண்டுதான் இருந்தன. முதல் முயற்சியான குற்றமும் தண்டனையும் மொழிபெயர்ப்பைத் தொடங்கி ஒரு சில அத்தியாயங்கள் முன்னேறியதுமே அத்தகைய பொய்யான பிரமைகள் என்னிலிருந்து விடுபடத் தொடங்கின. மொழி மாற்றம்  அதிலும் குறிப்பாகப் புனைகதை சார்ந்த மொழிமாற்றம் - சுயமான படைப்பாக்கத்தையே அடித்தளமாகக் கொண்டிருக்கிறது என்பதையும் படைப்பாக்கத்துக்கான பொறி நம்முள் இருந்து - நம்மைச் செலுத்திக்கொண்டிருந்தால் மட்டுமே - நாம் ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளராகச் சிறக்க முடியும் என்பதையும் அனுபவ பூர்வமாக நான் கண்டுகொண்ட கணங்கள் அவை

’’மொழிபெயர்ப்பு என்பது ஓர் உயர்ந்த கலையல்ல.’’ என வைக்கப்படும் சில விமரிசனங்களுக்கு மறுமொழியாகத் தரமான மொழிபெயர்ப்பு என்பது,இலக்கியப் படைப்பை விடச் சற்றும் தாழ்ந்ததல்ல...,இரண்டாந்தர இலக்கியத்தைப் படைப்பதை விடத் தரமான மொழிபெயர்ப்பைச் செய்வது பெரிய தொண்டாகும்.’’ என்று விடையளிக்கிறார்,இந்திய மொழிபெயர்ப்பாளர்களின் வரிசையில் குறிப்பிடத்தக்கவரான  கொல்கத்தா சு.கிருஷ்ணமூர்த்தி.
பாரதி,புதுமைப்பித்தனில்தொடங்கி,சுந்தரராமசாமி,.மாதவன்,ஜெயமோகன்,எஸ்.ராமகிருஷ்ணன்,பாவண்ணன், போன்ற சம காலப் படைப்பாளிகள் வரை பலரும் ,தங்கள் சொந்தப்படைப்புக்களுடன் கூடவே - அவற்றுக்கு இணையாகவே பல நல்ல மொழிபெயர்ப்புக்களையும் செய்திருக்கிறார்கள்.
’’சென்றிடுவீர் எட்டுத்திக்கும்..கலைச்செல்வங்கள் யாவும்
  
கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’’என்றும்,‘’பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும் என்றும்கூறிய பாரதியின் வரிகளின் வழி நாம் பெறும் செய்தி, ’மொழிபெயர்ப்பு என்பது அறிவுத் தளத்திலான ஒரு சமூகச்செயல்பாடு என்பதே.
‘’துளசிஜெயராமன், சரஸ்வதிராம்நாத், சு.கிருஷ்ணமூர்த்தி, சித்தலிங்கையா,சி  பாலன், ரா.பூர்ணையா, நா.தர்மராஜன், .நா.குமாரசாமி, ,நா.சேனாபதி, .கி.கோபாலன், ஆர். சண்முகசுந்தரம், சு.குப்புசாமி, சா.தேவதாஸ் போன்ற மொழிபெயர்ப்பாளர்களுக்கு நம் அறிவுச்சூழலில் ஒவ்வொருவரும் கடன்பட்டிருக்கிறோம்’’ என்று எனக்கு எழுதியிருந்த கடிதம் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார் ஜெயமோகன்.

 நா குமாரசுவாமி,  நா சேனாபதி ஆகியோர் வாயிலாகத் தாகூரையும்,கா ஸ்ரீ ஸ்ரீ வழியே காண்டேகரையும், சு.கிருஷ்ணமூர்த்தியின் மூலம் மஹாஸ்வேதாதேவி மற்றும் அதீன் பந்தோபாத்யாயாவையும்,ரகுநாதனின் துணையால் கார்க்கியையும், டி எஸ் சொக்கலிங்கத்தின் உதவியால் போரும் அமைதியையும் , நாசுவால் ஃபேர்லாகர் க்விஸ்டையும் இன்னும் பல இந்திய,உலக இலக்கியங்களையும் அணுக முடிந்திருந்த நான், அத்தகையதொரு சமூகச்செயல்பாட்டுப் பேரியக்கத்தின் சக்கரமாக இருக்கும் வாய்ப்பு எனக்கும் கிட்டியிருப்பது பெரும்பேறு என்பதை உணர்ந்து கொண்டேன். 

மொழியாக்கம் ஒரு சமூகச்செயல்பாடென்பது ஒரு புறமிருக்க- மூலநூலை உரிய முறையில் உள்வாங்கிக் கொள்வதற்காக- அதன் வாசிப்பு பல முறை நிகழ்த்தப்படுகையில் மூலநூலாசிரியனுக்கு மிக அணுக்கமாகச் செல்லமுடிவதும், அவன் பெற்ற அகக்காட்சிகளை - அவன் உணர்த்த விரும்பிய செய்திகளை - அவனது அலைவரிசைக்குள்ளேயே சென்று இனம் காண்பதும் சாத்தியமாகிறதென்பது ஓர் அரிய அனுபவம். அந்த நுண்வாசிப்பு அளிக்கும் அனுபவத்தின் அடித்தளத்தில் காலூன்றி நிற்கும்போதே  மூலமொழியாசிரியனை விட்டு விலகாத மொழிபெயர்ப்பு - இன்னொரு மொழிக்கு அதைக்கொண்டு செல்லும்போது மூலத்திற்கு துரோகம் செய்யாமல் -அதிலிருக்கும் செய்தியை மழுங்கடிக்காமல்  மிகையும் படுத்தாமல் துல்லியமாகக் கொண்டு சேர்க்கும் மொழியாக்கம் வசப்படுகிறது.
''ஒரு கலாசாரச் சூழலில் இருந்து மற்றொரு கலாசாரச் சூழலுக்கு ஒரு படைப்பைப் பரிவுடன் விரல் பற்றி இட்டுச் செல்வதுதான் மொழிபெயர்ப்பின் தலையாய சவால்.’’ என்கிறார் ஜெயகாந்தனின் படைப்புக்கள் பலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன்.
பொதுவாகவே பிறநாட்டு/ பிற மாநிலப் பின்புலம் கொண்ட படைப்புக்கள் நம்மிடம் ஒரு அந்நியத் தன்மையை ஏற்படுத்திவிடுவது போல நமக்கு நாமே கற்பித்துக் கொண்டிருப்பதனாலேயே  அவற்றைப் படிப்பதில் நமக்குள் நிரந்தரமான ஒரு தயக்கம் இருந்து கொண்டிருக்கிறது.மொழியாக்கங்கள் போதியஅளவு விற்பனை செய்யப்படாமலும்,அவற்றுக்கான அங்கீகாரம் உரிய முறையில் கிடைக்காமலும் இருப்பதற்கு அதுவும் ஒரு காரணம் என்ற கசப்பான உண்மையை  ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும்.
அயல்நாட்டு இலக்கியங்களை வாசிக்கையில் / மொழிபெயர்க்கையில் அவற்றில் இடம் பெறும் பெயர்கள் - குடும்பத் துணைப் பெயர்கள்-surname-மற்றும் சுருக்கமாகக் குறிப்பிடும் செல்லப் பெயர்கள் ,அங்குள்ள தட்ப வெப்ப சூழல்கள்,உணவு வகைகள்,இடப் பெயர்கள் இவை நம்மை அந்த நாவலுக்குள் செல்ல விடாமல் தடுப்பது போன்ற ஒரு தயக்கமும் மலைப்பும் ஏற்படுவது இயல்புதான்.
ஆனால்’’விசித்திர விபரீத உடையுடன்பாஷையுடன் காணப்பட்டாலும் அதற்கும் அப்புறத்திலிருந்து துடிக்கும் மனித இயற்கையைக் காண்பிக்கவே’’ மொழியாக்கம் முயல்கிறது’’(மணிக்கொடி,நவ.1937.) என்று புதுமைப்பித்தன் குறிப்பிட்டிருப்பதைப்போல,அந்தக் கட்டத்தை மட்டும் தாண்டிச்சென்றுவிட்டால்பிரபஞ்சமெங்கும் வியாபித்துக் கிடக்கும் மனிதஇயற்கையும்,மானுட உணர்வுகளுமே பிறமொழி நாவல்களிலும்  உயிர்த் துடிப்போடு நம் கண்முன் விரிந்து கிடப்பதை  விளங்கிக்கொண்டு விடலாம்.
மொழி இனம்,நாடு என்று பலஎல்லைக்கோடுகளைவகுத்துக்கொண்டாலும்,தனிமனித உணர்வுப்போராட்டங்கள்அவற்றோடு பின்னிப்பிணைந்திருக்கும் உறவுச்சிக்கல்கள், அவற்றை மீறித் தளும்பும் காருண்யம் ஆகியவை உலகின் எந்த இடத்திலும்,எந்தக்காலகட்டத்திலும் சாஸ்வதமாகக்காணக்கூடியவை ,சகலர்க்கும் பொதுவானவை .

ஒரு குற்றத்தைப் புரிந்து விட்டு அதையே தண்டனையாய்க் கொண்டு அவதிப்படும்  ‘குற்றமும் தண்டனையும்ரஸ்கோல்நிகோவை நம்மைச்சுற்றி நாளும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். .’அசடன்நாவலில் பணக்கார மனிதன் ஒருவனின் பாதுகாப்பில் வளர்ந்து அவனுக்குச் சில காலம் ஆசை நாயகியாகவும் வாழ நேரிட்டதை நினைந்து நினைந்தே கழிவிரக்கம் கொண்டவளாகி - முறையான திருமண வாழ்விற்கான தாபமும் ஏக்கமும் கொண்டிருந்தபோதும் அதற்குத் தகுதியற்றவளாகத் தன்னைக் கருதியபடி ஒவ்வொரு முறையும் மண மேடை வரை வந்து விட்டு ஓடிப் போகும் நஸ்டாஸியா ஃபிலிப்போவ்னாஜெயகாந்தனின் கங்காவை (சில நேரங்களில் சில மனிதர்கள்) நமக்கு நினைவுபடுத்துவதில் வியப்பில்லை;
ஒரு சில கலாசார வேறுபாடுகளை மட்டும் சற்று கவனத்தோடு உள் வாங்கிக்கொண்டபடி நாவலின் முதல் ஐம்பது அறுபது பக்கங்களைக் கடந்து விட்டால் உணர்ச்சிமயமானதும், நமக்கு நன்கு பரிச்சயமானதுமான ஒரு உலகம்தான் அங்கேயும் காத்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிவதோடு மகத்தான ஓர் உலக இலக்கியத்தைத் தவற விட்டு விடவில்லை என்ற ஆத்ம திருப்தியும் நமக்குக் கிடைக்கும்.

உலகப் பேரிலக்கியங்கள் அளிக்கும் தரிசனங்கள் மானுடத்தின் உச்சமான பலதருணங்களைத் திறந்து காட்டும் நுழை வாயில்கள்தஸ்தயெவ்ஸ்கியின் குறிப்பிட்ட இரு படைப்புக்களும் கூட அவ்வாறானவையே
தஸ்தயெவ்ஸ்கியின் கண்களுக்கு முழுமையான நல்லவர்/ முழுமையான தீயவர் என்று எவருமில்லை. ''குற்றமும் தண்டனையும்''நாவலில்காமுகனாகச்சித்தரிக்கப்படும் ஸ்விட்ரிகைலோவிடமும்கூட மர்மேலோதோவின் அநாதரவான குழந்தைகளின் பால் அன்பு சுரக்கிறது.கண்டிப்பாகச் செயல்பட வேண்டிய நிலையிலிருக்கும் நீதிபதி போர்பிரி பெத்ரோவிச்சிடமும் கூட ரஸ்கொல்நிகொவ் மீதுதோழமை ஜனிக்கிறதுகுழந்தையைப் போன்ற அப்பாவித்தனத்துடனும்,களங்கமற்ற பரிசுத்தமான துறவியைப் போன்ற வாழ்க்கை முறையுடனும்காட்சிதரும்’’அசடன்’’ நாவலின்இளவரசன் மிஷ்கினின் பாத்திரத்தைக் கபடுகளும் சூது வாதுகளும் வன்மங்களும் வஞ்சனை எண்ணங்களும் கிஞ்சித்தும் தலைகாட்டாத ஒரு பாத்திரமாக மட்டுமே இந்த ஆக்கத்தின் எல்லாக் கட்டங்களிலும் முழுக்க முழுக்கக் காட்ட வேண்டுமென முயற்சி மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் தஸ்தயெவ்ஸ்கி.

உலகத்தின் லௌகீகப் பார்வையில் அவன் அசடனாகப் பார்க்கவும், பரிகசிக்கவும்பட்டாலும்,அவன் ஒரு தூய ஆன்மா என்பதை மட்டும் எவரும்மறுதலிப்பதே இல்லை.அவனுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டிருக்கும் கன்யா,ரோகோஸின் போன்றவர்களும் கூட அந்த உண்மையை ஆமோதிக்கவும் அங்கீகரிக்கவும் தயங்குவதில்லை என்பதிலேயே இந்த நாவலின் அழகு பொதிந்திருக்கிறது.

தானும் கூடக் கற்றுக் கொள்வதற்கான உளவியல் செய்திகள் தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புக்களில் மட்டுமே இருப்பதாக நீட்ஷே ஒருமுறை குறிப்பிட்டார்.மனித மனங்களின் இருள் படர்ந்த மூலைகளில் எல்லாம் பயணம் செய்து,இண்டு இடுக்குகளை எல்லாம் கூடத்துழாவி,அங்கே மண்டிக்கிடக்கும்சபலங்களை,சலனங்களை,அழுக்குகளை,ஆசாபாசங்களை,அன்பை,அளவற்ற மனித நேயத்தை வெளிச்சத்திற்கு இட்டு வந்து விடும் அவரது எழுத்தை முழுமையாக வாசிக்கும்போதுதான் நீட்ஷேயின் கூற்றிலுள்ள உண்மை துலங்கும்

மேற்குறித்த தருணங்களில்உணர நேரும் இத்தகைய உச்ச கட்ட கணங்களை - அவற்றிலிருந்து முரண்படாத உயிரோட்டத்துடன் தரவேண்டுமெனில் அதற்கேற்றதாக மொழிபெயர்ப்பாளனின் மொழி அமைந்தாக வேண்டும்; தட்டையான-நேரடியான மொழியாக்கத்தைத் தவிர்த்து மூலப்படைப்பிலேயே பயணிக்கும் உணர்வை ஏற்படுத்தும் வகையில்அதுவே ஒரு தனிப்படைப்பு போலத் தோற்றமளிக்குமாறு செய்வதற்கு மொழிபெயர்ப்பாளன் சற்றுக்கூடுதலான உழைப்பைச் செலவிட்டே ஆக வேண்டும்.
எளிய சொற்களில் ,மிகச்சரளமான இலகுவான நடையில் சிறு சிறு வாக்கியங்களாகத் தெளிவு படச் சொல்லுவதே அந்நிய மொழிச் சூழல் கொண்ட ஒரு படைப்புக்குள்அலுப்புத் தட்டாமல்,சோர்வை ஏற்படுத்தாமல் வாசகனை ஆழ்த்தக்கூடியது.
குறிப்பிட்ட ஒரு மொழியில் உருவாக்கப்பட்ட ஒரு படைப்புஇன்னொரு மொழியில் உரு மாறி வருகையில்,அதிலும் அப்படைப்பின் ஜீவனும் வீரியமும் குறையாத சொற்களில் அது முன் வைக்கப்படும்போது மட்டுமே  முன்னவர் கற்பனை செய்திருக்கும் மூலப்பொருளை இன்னொரு மொழியில் காட்சிப்படுத்துவது சாத்தியமாகிறது.
நவீன- பின் நவீன வாசிப்புப்பழக்கம் கொண்ட வாசகனாயினும், நல்ல எழுத்துக்களைத் தேடிக்கண்டடையும் எளிய வாசகனாயினும் இன்றைய வாசகனை மொழியாக்கத்துக்குள் கொண்டுவர...அதில் அவனை ஈடுபடச்செய்யத் தேவைப்படுவது, இன்றைய காலகட்டத்தோடு ஒட்டிய தேய்வழக்குகள் தவிர்த்த- நவீன நடைமட்டுமே. சமகாலப்புனைவுகள் -புனைவுகள் இவற்றோடு மொழிபெயர்ப்பாளர் கொண்டிருக்கும் தொடர்ந்த ஊடாட்டமும்,தொடர் வாசிப்புமே மொழியின் வாயில்களை நமக்குத் திறந்து விட்டு, அத்தகைய மொழிநடையை நமக்கு வசப்படுத்துபவை.
குற்றமும் தண்டனையும் ,அசடன்-இவ்விரு நாவல்களையும் தமிழுக்குக் கொணரும் முயற்சியில் பலரும் அவ்வப்போது முனைந்திருந்தபோதும் –மூலத்திலிருந்து கொஞ்சமும் சுருக்கப்படாத முழுமையான வடிவம் தரப்பட்டது குறிப்பிட்ட இந்த மொழியாக்கங்களிலேதான்; எனினும் இவ்விரண்டு மொழிபெயர்ப்புக்களும் - ரஷிய மொழி தெரியாததால்- ஆங்கிலத்தின் வழியாகச் செய்யப்பட்டவையே.. 
மூல மொழியிலிருந்து நேரடியாகச் செய்யப்படும் மொழியாக்கங்கள் இன்னும்கூட நம்பகத்தன்மை கொண்டவை என்பது உண்மையான வாதமே.. ஆனால் அது உரியமுறையில் நிகழும் வரை -உலக இலக்கியத் தளத்தில் நிகழும் முயற்சிகள் எதையுமே தெரிந்து கொள்ள வழியின்றி முடங்கிப் போய் இருப்பதை விட மூலத்துக்குப் பக்கமான ஒரு மொழிபெயர்ப்பை இன்னொரு மொழி வழி முயற்சிப்பதில் பிழையிருக்க முடியாது.
நோபல்பரிசு பெற்ற நாவல்கள் உட்பட- உலகின் தலை சிறந்த  படைப்புக்கள் பலவற்றையும் பல்வேறு மொழிகளிலிருந்து தமிழுக்குக் கொணர்ந்து தமிழ் வாசிப்பையும்,எழுத்தையும் கிணற்றுத் தவளை நிலையிலிருந்து மீட்டெடுத்த .நா.சுஅவர்கள் ஆங்கிலத்தையே அதற்குரிய வாயிலாகக் கொண்டார்பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவில் வழங்கும் அஸ்ஸாமிய,ஒரிய,மணிப்புரிக் கதைகளைத் தமிழில் மொழியாக்கம் செய்ய இந்தியே இடை மொழியாக நின்று உதவியிருக்கிறது.
கா.ஸ்ரீ ஸ்ரீ(மராத்தி), சு.கிருஷ்ணமூர்த்தி(வங்கம்), தி.சு.சதாசிவம்,பாவண்ணன்(கன்னடம்), ஜெயமோகன்(மலையாளம்) , ஸ்ரீராம்-யவனிகா(பிரெஞ்ச்) போன்ற வெகு சிலரே-   மூல மொழியிலிருந்து நேரடியாக மொழிபெயர்ப்புச் செய்பவர்களாக இருக்கிறார்கள். மூல மொழி தெரிந்திருந்தாலும்,போதிய சொல்வளமோ,கதையோட்டத்தைக் காட்சிப்படுத்தும்  அனுபவமோ அற்ற ஒரு நபரால்  செய்யப்படும் மொழியாக்கங்கள் வறட்சியான  மொழிநடையுடன்  உயிரற்றதாக ஆகிவிடுகிறதென்பதையும் கருத்தில் கொள்ளாமல் இருக்க இயலாது.
பொதுவாக பிறமொழிப் படைப்புக்களுக்குப்  பல ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் இருப்பதால்,’குற்றமும் தண்டனையும்மற்றும் அசடன்நாவல்களை மொழிபெயர்ப்புச் செய்தபோது ஒவ்வொன்றுக்கும் கிட்டத்தட்ட மூன்று நான்குஆங்கில மொழியாக்கங்களை ஒப்புநோக்கித் தெளிவு பெற்ற பின்பே அவற்றுக்கு இறுதி வடிவம் அளிக்கப்பட்டிருக்கின்றன.
மூலத்துக்கு மிக நெருக்கமாகவும் சிறப்பாகவும் CARNACE GARNETT இன் மொழிபெயர்ப்பே கருதப்பட்டு வருவதால் அந்த ஆங்கில மொழிபெயர்ப்பே இவ்விரு நாவல்களுக்கும்   அடிப்படையாக அமைந்தது.  தெளிவு கிடைக்காத சில இடங்களில்,மாஸ்கோவின் முன்னேற்றப்பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ஆங்கிலமொழிபெயர்ப்புக்கள், வேர்ட்ஸ்வர்த் கிளாசிக்மொழியாக்கங்கள் ஆகியவற்றை ஒப்புநோக்கி சில புரிதல்களைப்பெற முடிந்தது. மொழிபெயர்ப்பின் தெளிவுக்காகப்பல முறை,-பல பதிப்புக்களை ஒப்பிட்டுப்படித்தபோது,’நவில்தொறும் நூல் நயமாக’ இந்நாவல்களின் மர்ம முடிச்சுக்கள் ஒவ்வொன்றாக அவிழ்ந்துகொண்டே வந்தன.ஒரு கட்டத்தில் தஸ்தயெவ்ஸ்கி என்னுள் புகுந்து கொண்டு-தமிழில் தன்னைத்தானே எழுதிக்கொண்டு போவது போன்ற மனமயக்கம் கூட என்னுள் ஏற்பட்டதுண்டு.
ஒரு குற்றத்தைப் புரிந்து விட்டு அதையே தண்டனையாய்க் கொண்டு ஒருவன் படும் அவதிகளை- அந்த ஒற்றைப் பார்வையை மட்டுமே முன்னிலைப்படுத்திய ஆக்கம் ‘குற்றமும் தண்டனையும்’. இடியட்/அசடன் பன்முகத்தன்மையையும் பற்பல வகைமாதிரியான(types) பாத்திரங்களையும் கொண்டது.பல்வேறு முடிச்சுக்களும்,உணர்வுப் போராட்டங்களும் இணைந்த ஒரு கலவையாய் இருப்பது. ஆழமான உளவியல்,தத்துவச் சிக்கல்கள் பலவற்றை நீண்ட மனஓட்டங்கள் மற்றும் உரையாடல்கள் வழி விவரித்துக் கொண்டே செல்வது. இடையிடையே ஃபிரெஞ்சுப் பழமொழிகள்,தொடர்கள்,கலைச்சொற்கள் ஆகியவை விரவி வருவது.இந்தக் காரணங்களால் கொஞ்சம் அதிகமான முயற்சி,உழைப்பு,நேரம் ஆகியவை இந்நூலின் மொழிபெயர்ப்பைச் செய்து முடிக்கத் தேவையாகி விட்டன.

குற்றமும் தண்டனையும் மொழியாக்கத்தில் எட்டு மாதங்களும் அசடன் மொழிபெயர்ப்பில் ஒன்றரை ஆண்டுகளுமாய்த் தொடர்ந்த இந்த இருபயணங்களையும் மேற்கொண்டிருந்த காலகட்டத்தில் மனித மனங்களின் ஆழங்காண முடியாத புள்ளிகளைத் தஸ்தயெவ்ஸ்கியின் எழுத்தின் வழி எட்டவும்,தரிசிக்கவும் முடிந்தபோது என்னுள் விளைந்த பரவசச் சிலிர்ப்பு சொல்லுக்குள் அடங்காத மகத்துவமும் உன்னதமும் வாய்ந்தது; அந்தப் பேரனுபவத்தின் ஒருசில துளிகளையாவது இம்மொழிபெயர்ப்புக்கள் அளித்திருக்குமானால் அதுவே இம்முயற்சிகளுக்குக் கிடைத்த வெற்றியாக அமையும்.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....