30.8.20
‘இரட்டையர்-ஓர் எதிர்வினை
‘இரட்டையர்’ (The Double- Fyodor Dostoevsky)நாவல் மொழியாக்கம் குறித்த காத்திரமான ஓர் எதிர்வினை.
நன்றி:https://m.facebook.com/story.php?story_fbid=3186179088144629&id=100002577069027 வாசிப்போம்- தமிழ் இலக்கியம் வளர்ப்போம்.
//மனப்பிளவு என்கிற பிணி புதியதே அல்ல. காலத்தில் பயணம் செய்கிற கதைகளை குழந்தைகளின் தொடர்களில் எல்லாம் விவரித்துப் புரிய வைத்ததைப் போல், இதைப்பற்றிக் கூட விஸ்தீரனமாகவும், அதீதமாகவும் எல்லாம் சொல்லி விட்டார்கள். ஒரு புனைவில் மனம் சிதறுண்ட ஒரு ஆள் கதாபாத்திரமாக வந்து போவதும், அதன் குறிப்புகளை மற்றவர்களின் கோணங்களில் அறியப்படுவதேல்லாம் நடைமுறையில் இருப்பது தான். பிளவுபட்டு விட்ட மனிதனின் ஒரு பக்க மனமாகவே தொழிற்படுவது அத்துமீறல். படிக்கிற யாரும் மிரட்சியில் இருந்து விடுபட முடியாதபடி அதை செய்திருக்கிறார் தஸ்தயேவ்ஸ்கி.நுணுக்கி நுணுக்கி எழுதியிருக்கிறார். சொன்னதை சொல்லுவதைக் கூட நிகழ்த்தியிருக்கிறார். ஆனால் அவர் தொகுத்திருக்கிற சொற்களின் அணிவகுப்பு ஒவ்வொரு முறையும் வெவ்வேறு அர்த்தங்களின் மீது ஒளிர்கிறது. கோலியாட்கின் அலைபாய்கிற வெளிகளெங்கிலும் சுற்ற வேண்டியிருக்கிற வாசகன் பீதியுறும் நிலைக்கு சென்று முட்ட வேண்டியிருக்கிறது. ஆசிரியரின்’இரட்டையர்’எழுதியவரின் அபூர்வம் அல்லவென்பதும் ஒவ்வொரு மனிதனுக்குப் பக்கத்திலும் நின்று கொண்டிருக்கிற அபாயம் தான் என்பதுமே அந்தப் பீதிக்குக் காரணம். எப்படியும் நாம் பலரும் இவ்வுலகில் அனாதிகளாக இருக்கிறோம். அடையாளமற்று இருக்கிறோம். நாம் பொருமுகிற அற உணர்வுகளுக்கு எதிரொலிகள் இல்லை, அளவற்றுத் திரள்கிற ஆசைகளுக்கு முடிவும் இல்லை. எந்தக் கணத்தில் நாம் நம்முள்ளே பேசுவதை நிறுத்தி விட்டு நமக்கு அருகிலேயே இருக்கிற மற்றொரு நானிடம் பேசுவோமோ, தெரியாது. அதற்கு அப்புறம் நானே என்னிடம் பகை கொண்டு அலைந்தவாறு நான் நார்மலாகத்தான் இருக்கிறேன் என்கிற குழப்பத்தை ஒப்புக் கொள்ளக்கூடிய உலக அங்கீகாரத்துக்கு அலைய மாட்டேன் என்பதில் கூட ஒரு நிச்சயமும் இல்லை. எழுத்தாளர் தனது நிலையில் வெகு குஷியாக இருந்தவாறு விளையாடியிருக்கிறார் என்பதை விளங்கிக் கொண்டே வருவதில் இருந்து தான் இந்நாவலை அத்துமீறல் என்றேன், இந்நாவலை நூற்றி ஐம்பது வருடமாக ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள் என்கிற செய்தியை முன்னுரையில் படித்த போது வியப்பு தோன்றவில்லை, அதை செய்துதான் ஆக வேண்டியிருக்கிறது.நாவலின் உச்சம் என்று கருதிக் கொள்ள வேண்டிய பகுதி நாவலில் ஒரு பெண் எழுதப்படுவதாக சொல்லும் கடிதம். தனது மனதிலேயே அவர் அந்தப் பெண்ணுக்கு உபதேசங்கள் சொல்லும் பகுதி திடுக்கிடலாக இருந்தது. அடப்பாவி என்று நான் எழுத்தாளரை சபித்தேன். சன்னலில் இருந்து அவரோடு வருவதற்கு அவள் குதிரை வண்டியை எடுத்து வர சொல்லுகிறாள். கோலியாட்கினின் ஆழ்மனம் ஒரு பெண்ணை விரும்பியதை பெரிய குற்றமென்று சொல்ல முடியாதுதான், ஆனால் அவளுக்கு நன்னடத்தை கூறி, சட்ட எச்சரிக்கைகள் செய்வதெல்லாம் புனைவின் உச்சம்.அதிகம் எழுதவில்லை.அனுபவிக்க முடிகிறவர்கள் படிக்கலாம்.தஸ்தயேவ்ஸ்கியின் ஒவ்வொரு நாவலை படிக்க நேரும்போதும் அவரது மேதமையை வியந்து கொள்ளாமல் மீள முடிவதில்லை. இதுவும் அப்படித்தான். தமிழில் செய்தவர் எம் ஏ சுசீலா. மகத்தான பணி.நற்றிணை வெளியீடு.//
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)