துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி
மொழிபெயர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மொழிபெயர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

17.12.23

உதயத்தில் ஓர் அஸ்தமனம்-மொழிபெயர்ப்புச் சிறுகதை

 

                                  உதயத்தில் ஓர் அஸ்தமனம்

  • மணிப்புரி மூலம் – குரு ஆரிபம் கானப்பிரியா
  • ஆங்கிலத்தில் – அகோய்ஜம் தனிதா
  • ஆங்கில வழி தமிழாக்கம்; எம் ஏ சுசீலா


எங்கள் பகுதிக்கு வாடகை ஜீப்கள் வரத்தொடங்கிய பிறகு தினமும் கல்லூரி செல்வதற்கு அவற்றையே பயன்படுத்த ஆரம்பித்தேன்.  எங்கள் வீட்டு வாசலிலிருந்துதான் அவை கிளம்பிக் கொண்டிருந்தன என்பதால் பயணம் மிகவும் வசதியாக ஆகிவிட்டது.

குறிப்பிட்ட அந்த நாளன்று வழக்கம் போல் நான் கல்லூரியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தேன்.  ஜீப் கிளம்பியபோது கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தாலும், பயணத்தின் முடிவில் நாலுபேர் மட்டுமே எஞ்சியிருந்தோம்.  என் வீட்டிலிருந்து கால் கிலோ மீட்டர் தொலைவில் ஒரு பெண் வண்டியை விட்டு இறங்கிக் கொண்டாள். அதற்குப் பிறகு இருந்த குறுகிய தூரத்தில் என்னோடு பயணம் செய்த ஒரு இளம்பெண் ஏதோ அவசரத்தில் இருப்பதுபோல் காணப்பட்டாள்.  அவளது உடைகளை வைத்துப் பார்க்கும்போது மணமாகாதவளாக இருக்கலாம் என்று தோன்றியது.

அது யாராக இருக்கும் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது அதுவும் அந்த வாடகை வண்டிப் பயணத்தின் இறுதிக் கட்டத்தில்…!  அந்தப் பெண்ணைப் பார்த்தால் உள்ளூர்க்காரி போலவும் தோன்றவில்லை.  அவளை ஒரு முறை எறெடுத்துப்  பார்த்தேன்; அவள் சரியான மனநிலையில் இருக்கிறாளா என்பது எனக்கு சந்தேகமாகத்தான் இருந்தது.  அங்கிருந்த வேறு இரண்டு சக பயணிகளும் கூட அவளைச் சற்றுத் திகைப்போடு பார்த்துக் கொண்டிருந்ததால் அவர்களும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது புலப்பட்டது. 

அவள் களைத்துப் போனது போலத் தெரிந்தாள்.  மூச்சு வாங்கிக்கொண்டிருந்தது.  கவலை அவள் முகத்தில் கருநிழல் போலப் படர்ந்திருந்தது.  அவளது முடியிலிருந்து ஈரம் சொட்டிக் கொண்டிருந்தாலும் அவள் அதைக் கழுத்துக்கு மேல் ஒரு கொண்டையாக முடிச்சிட்டு வைத்திருந்தாள்.  அவளது உடைகளும் ஈரமாகத்தான் இருந்தன.  மிகவும் இளமையாகவோ, மிகவும் முதிர்ச்சியாகவோ இல்லாமல் பார்க்க இனிமையாகத் தெரிந்தாள் அவள்.  பொதுவாக ஒரு பெண்ணுக்கு உரியதாகச் சொல்லப்படும் மென்மையான… நளினமான அழகு அவளிடம் இருந்ததாக சொல்லமுடியாது.  மாறாக அவளது வலிமையையும் துணிச்சலையும் அவளிடமிருந்த ஏதோ ஒன்று எடுத்துக்காட்டிக் கொண்டிருந்தது.  முன்னால் தெரிகிற சாலையைக் கூடப் பார்க்காமல் ஏதோ ஓர் ஓரத்தில் ஒண்டிக்கொண்டு அன்று அவள் பயணம் செய்து கொண்டிருந்தது, தனக்குள் ஏதோ ஒரு கதையை ஒளித்து வைத்திருந்தது.  அந்தக் காரணத்தை அறிந்துகொள்ள வேண்டுமென்று நான் ஆசைப்பட்டாலும் நானாகப் போய் அதை எப்படிக் கேட்பது ?

ஜீப் எங்கள் வீட்டு வாசலுக்கு வந்து சேர்ந்தது.  எல்லோரும் கீழே இறங்கினார்கள்.  ஜீப் டிரைவர், எல்லோரிடமிருந்தும் கட்டண வசூல் செய்ய ஆரம்பித்திருந்தார்.  நான் திரும்பிப் பார்த்தேன்;  அவள் இன்னும் கூட உள்ளேதான் உட்கார்ந்திருந்தாள்.

வீட்டுக் கதவை நான் திறக்கும் போது ‘இபெம்மா!’ (தங்கச்சி) என்று என்னை அழைத்தாள் அவள்.  நான் நின்றபடி திரும்பிப் பார்த்தேன்.  ஜீப்பிலிருந்து இறங்கிவந்த அவள்,

‘‘இது உன் வீடா?’’

என்று கேட்டாள்.

        ‘‘ஆமாம்’’

        ‘‘சரி, வா, உள்ளே போகலாம்’’

        அவள் என்னையும் முந்திக் கொண்டு திறந்த கதவின் வழி உள்ளே சென்றாள்.  நான் குழப்பம் அடைந்தேன்.  என்ன நடக்கிறது இங்கே?

        ‘‘உன்னோடு கூடப் பிறந்தவர்கள் எத்தனைபேர்?’’ என்று நாங்கள் சேர்ந்து நடந்து போகும்போது கேட்டாள் அவள்.

        ‘‘நான் ஒரே ஒரு குழந்தைதான்’’

        ‘‘உன் தந்தை என்ன செய்கிறார்’’

        ‘‘அரசின் தலைமைச் செயலகத்தில் ஒரு பிரிவுக்கு அதிகாரியாக இருக்கிறார்.’’

        ‘‘இன்னிக்கு ‘இச்சே’ (அக்கா) கொஞ்ச நேரம் உன் வீட்டிலே இருக்கப் போறேன்’’

        எனக்குத் தங்கை ஸ்தானத்தைக் கொடுத்து விட்டுத் தமக்கை என்ற இடத்தைத் தான் எடுத்துக் கொண்டிருந்தாள் அவள்.  நான் எந்த பதிலும் சொல்லவில்லை.  இன்னதென்று அறியாத ஒரு பயம் என் நெஞ்சுக்குள் ஊர்ந்தது.

        ‘அவள் யார்’ என்று எனக்குள் மறுபடியும் கேட்டுக் கொண்டேன்.

        நேராக என் அறையை நோக்கிச் சென்றேன்.  அவளும் என்னை மிக நெருக்கமாகப் பின் தொடர்ந்தாள்.  கல்லூரிக்குக் கொண்டுபோன பையை மேஜை மீது வைத்தேன் அது என் வீடுதான் என்றாலும் கூட அடுத்து என்ன செய்வது என்பது தெரியாத குழப்பத்தில் இருந்தேன் நான்.  அதை உணர்ந்து கொண்ட அவள்,

        ‘‘உனக்கு இதெல்லாம் ஆச்சரியமாத்தான் இருக்கும்.  எல்லாத்தையும் உன்கிட்டே சொல்லிடறேன் இப்ப’’ என்றபடி தன் கதையை என்னிடம் சுருக்கமாக சொல்லி முடித்தாள்.  அவள் பேசியதைக் கேட்டதும் ஆரம்பத்தில் என்னுள் இருந்த வியப்பு விலகி விட்டாலும், இன்னும் கூடக் குழப்பத்துடனேயே இருந்தேன் நான்.

        ‘‘வீட்டிலே  ஃபோன் இருக்கா’’

        ‘‘இருக்கு’’

        ‘‘எங்கே இருக்கு? நான் ஒரு ‘கால்’ பண்ணிக்கிறேன்’’

        ‘‘அடுத்த ரூமிலே இருக்கு. போய்ப் பண்ணிக்கங்க ‘இச்சே’. வீட்டிலே வேற யாரும் இல்லை’’

        அவள் பக்கத்து அறையில் இருந்தபோது, வெளியே சென்றிருந்த அம்மா திரும்பி வந்தாள்.

        ‘‘வீட்டுக்கு வந்திட்டியா ‘இபெம்மா’

        ‘‘ஆமாம் ‘இமா’ (அம்மா)’’

        ‘‘அப்ப டிரெஸ் மாத்திட்டு சாப்பிட வேண்டியதுதானே ? ஏன் இப்படி மரம் மாதிரி நிலைகுத்திப் போய் நிக்கிறே ?’’

        ‘இமா’ வழக்கம் போல் – கொஞ்சம் கூட நிறுத்தாமல் என்னைத் திட்டிக் கொண்டே போனாள்.  என் உதட்டின் மீது ஆள் காட்டி விரலை வைத்து அவளை அமைதியாக இருக்கச் சொல்லி சைகை செய்தேன்.  அதைப் பார்த்ததும் தன் பேச்சை இடையிலேயே நிறுத்தி விட்டு என்னைக் கலவரத்தோடு பார்த்தாள் அவள்.  பக்கத்து அறையில் நடக்கும் தொலைபேசி உரையாடலும் அவள் காதில் இப்போது சட்டென்று விழுந்திருக்கவேண்டும்.  உள்ளே வேகமாகப் பார்த்து விட்டு என் பக்கம் திரும்பி, சத்தம் வரும் திசையில் தலையை அசைத்தபடி ‘‘யார்?’’ என்று கேட்டாள்.

        ‘‘ஏதோ போராட்டக் குழுவைச் சேர்ந்தவங்களா இருக்கணும்னு தோணுது’’

என்று கிசுகிசுப்பான குரலில் பதிலளித்தேன்.

        ‘‘என்னது? அவ எப்படி இங்கே…?’’

        நான் அவள் கதையை அம்மாவிடம் சுருக்கமாகச் சொன்னேன்.

        ‘‘அவளுக்கு மலேரியா வியாதி வந்திட்டதாலே சிகிச்சை செஞ்சுக்கிறதுக்காக முகாமை விட்டு வெளியே வந்திருக்கா.  பக்கத்திலே இருந்த ஒரு வீட்டிலே அடைக்கலம் தேடிக்கிட்டப்ப அவங்கள்ளே மூணு நாலு பேரை சுத்தி வளைச்சிட்டாங்க.  வீட்டோட ஒரு மூலையிலே இருந்த குளத்திலே அவ அப்ப குளிச்சிக்கிட்டிருந்ததாலே அதிருஷ்டவசமா தப்பிச்சிட்டா.  நடந்த கலாட்டா சத்தத்தைக் கேட்டு சுத்திமுத்திப் பார்க்கறப்ப வீட்டை போலீஸ் வளைச்சிருந்தாங்க’’

        ‘‘ஆமாம்! கொஞ்ச நேரத்துக்கு முன்னாலே துப்பாக்கி வெடிக்கிற சத்தம் கேட்டது.  அதுவாதான் இருக்கணும்.  ஆனா, அவ இங்கே எப்படி வந்தா ?’’

        ‘‘பக்கத்து வீடுகளுக்குள்ளெல்லாம் புகுந்து நுழைஞ்சு ரோடு வரைக்கும் தப்பிச்சு வந்திட்டா.  அப்புறம் நான் வந்த ஜீப்பிலே ஏறியிருக்கா… அப்படித்தான் இங்கே வந்து சேர்ந்தா’’

        அந்த நேரத்தில் அந்தப் பெண் அறையை விட்டு வெளியே வந்து அவர்களது பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாள்.

        ‘‘இமா!’ நீங்கதான் ‘இபெம்மா’ வோட அம்மாவா?’’

        ‘‘ஆமாம்’’

        ‘‘நான் ரொம்ப நேரம் இங்கே இருக்கமாட்டேன்.  சந்தடியெல்லாம் கொஞ்சம் அடங்கிப்போனப்புறம் என்னைக் கூட்டிக்கிட்டுப் போக அவங்க ஆளனுப்பி வச்சிடுவாங்க.  ஒரு மூணு நாலு மணிநேரம் நான்  உங்களைக் கஷ்டப்படுத்த வேண்டியிருக்கும்.  நீங்க அதைப் பெரிசா எடுத்துக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்.’’

        ‘‘நாங்க ஏன் அப்படி எடுத்துக்கப்போறோம் ?’’

        ‘இமா’ அதைப் பெரிதுபடுத்தவில்லை என்றாலும் கூட மிகுந்த கவலையுடனும், பீதியுடனும் அவள் இருப்பதை ‘இச்சே’ அனுமானித்துக் கொண்டாள்.

        ‘‘ ‘இமா’ தயவு செய்து எதுக்கும் பயப்படாதீங்க.  இந்த வீட்டிலே இருக்கிறவங்களை சம்பந்தப்படுத்தற மாதிரி நான் எதுவும் செய்ய மாட்டேன்’’

        இன்னும் கூட ஈரம்படிந்த ஆடைகளுடனேயே அவள் இருப்பது எனக்கு வருத்தமாக இருந்தது, ஒரு மேலாடையும், ‘ஃபேனக்’ * [பாரம்பரிய மணிப்புரி ஆடை- பாவாடை போல உடலில் சுற்றிக்கொள்வது] கும் தந்து அவளை மாற்றிக் கொள்ளச் சொன்னேன்.  என்ன செய்வதென்றோ என்ன பேசுவதென்றோ தெரியாமல் ஸ்தம்பித்துப் போயிருந்தேன் நான்.  அவள் இங்கே இருப்பது எனக்கு பயமாகவும், பதட்டமாகவும் இருந்தது.  அவள் அவ்வப்போது ஜன்னல் வழியே வெளிப்பக்கம் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தாளே தவிர வேறு எதைப் பற்றியும் கவலைப்பட்டு அலட்டிக் கொள்வதைப் போல் தோன்றவில்லை.

        நான் அங்கிருந்து வெளியேற வழிதேடிக் கொண்டிருந்தேன்.

        ‘‘ ‘இச்சே… நீங்க வசதியா உட்கார்ந்திருங்க’’ என்று சொன்னபடி அறையை விட்டு வெளியேற முயன்றேன்.’’

        ‘‘உனக்கு எதுவும் வேலை இருக்கா?’’

        ‘‘இல்லையே? அப்படி ஒண்ணும் இல்லை’’

        ‘‘அப்படீன்னா கொஞ்ச நேரம் என்னோட இங்கே உட்காரு’’

        அவளுடைய இயல்பு காரணமா…. அல்லது அப்படிப்பேசுவதற்கு அவள் பழகிப் போயிருந்தாளா… என்று தெரியவில்லை.  ஆனால் கண நேரம் அவளுடைய வார்த்தைகள் என்னை மந்திரம் போல் கட்டிப் போட்டுவிட்டன.  என்னுடைய அசௌகரியம், இருப்புக்கொள்ளாத பதட்டம் என்று எல்லாமே சட்டென்று மறைந்து போய்விட்டது.  இலகுவான மனநிலைக்கு வந்திருந்த நான்

        ‘‘இச்சே… உங்க வீடு எங்கே இருக்கு?’’ என்று கேட்டேன்.

        அவள் அதற்கு உடனே பதிலளிக்கவில்லை மாறாக என்னை ஆழமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

        ‘‘நான் யாருன்னு உனக்குத் தெரியணும் அப்படித்தானே?’’

        நான் எந்த பதிலும் சொல்லவில்லை.

        ‘‘நான் சுதந்திரத்துக்காகப் போராடற ஒரு போராளி’’

        ‘‘இச்சே…. உங்களாலே ஜெயிச்சிட முடியும்னு நினைக்கிறீங்களா?’’

        ‘‘யுத்தகளத்திலே இருந்து புறங்காட்டி ஓடிப் போறவங்களுக்குத்தான் தோல்வியெல்லாம்.  எதுக்கும் பணிய மாட்டேன்னு மறுத்து சாவைத் தழுவறவங்கதான் வெற்றி பெற்ற போராளிகள்’’

        பேசும்போது அவள் கண்கள் இரத்தம் போலச் சிவந்திருந்தன.  மூச்சு வேகமாக இரைத்தது.  தன்னை அமைதிப்படுத்திக் கொள்ளப் போராடியபடி

        ‘‘அதனாலே நான்….’’ என்று தொடர்ந்தாள் அவள்.

        அவள் பேச்சை முடிப்பதற்குள் வெளியே ‘ஹாரன்’ ஒலி கேட்டது. உடனே எழுந்து நின்று ஜன்னல் வழியே பார்த்தாள்.

        ‘‘என்னைத் தேடி அவர்கள் வந்துவிட்டார்கள்.  நான் இப்போது போயாக வேண்டும்.  உங்களுக்கு நான் மிகுந்த சிரமம் கொடுத்துவிட்டேன்.  கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.’’

~oOo~

        மறுநாள் காலை சூரிய வழிபாட்டுக்காக நான் வெளியே வந்தபோது அன்றைய செய்தித்தாள் வராந்தாவில் கிடந்தது.  அதைக் கடந்துபோக என்னால் முடியவில்லை.   வேகவேகமாக அதன் முதல் பக்கத்தில் கண்களை ஓட்டினேன்.

        ‘புரட்சி இயக்கத்தின் பெண் தலைவியான பேச்சா லிக்லாய் சானு, சி ஆர் பி எப் நடத்திய நேரடி மோதலில் கொல்லப்பட்டார்’ என்று தலைப்புச் செய்தி வெளியாகி இருந்தது.  அதனுடன் கூடவே மிகப் பெரிய ஒரு புகைப்படமும் இருந்தது. அதைப் பார்த்ததும் எனக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது.

        ‘ஐயோ… இவ்வளவு சீக்கிரமாகவா…? எத்தனை அழகு… எவ்வளவு வலிமை… எவ்வளவு துணிச்சல்? எப்படிப்பட்ட ஒரு இழப்பு?’’

9.10.23

என் குழந்தைகளின் புகைப்படங்கள்-மொழிபெயர்ப்புச் சிறுகதை

 அக்டோபர். 2023  தேதியிட்ட சொல்வனம் இணைய [304 ஆம் ] இதழில் வெளிவந்திருக்கும் என் மொழிபெயர்ப்புச் சிறுகதை.

என் குழந்தைகளின் புகைப்படங்கள்

மணிப்புரி மூலம் : சத்யவதி நிங்கோம்பாம்
ஆங்கிலத்தில்: சபம் ஸ்வீட்டீ
 ஆங்கில வழி : தமிழாக்கம்; எம் ஏ சுசீலா

“அம்மா! நான் பெரியவனா வளர்ந்தப்புறம் ஏரோப்பிளேன்லே பறந்து போவேன்தானே?’’


‘‘கட்டாயம் போவே குழந்தை’’


‘‘நான் பெரிய ஆளா ஆனப்புறம் நியூஸ் பேப்பரிலே என்னோட ஃபோட்டோ வரும் இல்லையாம்மா?’’


‘‘நிச்சயமா வரும் மகனே’’


‘‘அக்கா பெரியவளா வளர்ந்த பிறகு என்னவா ஆவா?’’


‘‘உன்னோட அக்கா ஒரு பொண்ணு.  அவளுக்குக் கல்யாணம் ஆகும்.  அவங்க, வேறே ஒரு வீட்டுக்கு அவளைக் கூட்டிக்கிட்டுப் போயிடுவாங்க.’’


‘‘சே! சே! அப்படியெல்லாம் ஒண்ணும் ஆகாது.  அவளை அவங்க அப்படிக் கூட்டிக்கிட்டுப்போக எல்லாம் நான் விட மாட்டேன். அக்காவை என்னோட கூடவே பிளேனிலே உட்கார வச்சுக்கிட்டு அமெரிக்காவுக்குப் பறந்து போயிடுவேன்.  அவ அங்கேயே இருக்கட்டும்.  அப்படின்னா அவ கல்யாணம் பண்ணிக்க வேண்டியிருக்காதுதானே? “


‘‘கிறுக்குப்பையா? அக்காவை உனக்கு அவ்வளவு பிடிக்குமா?’’


‘‘ஆமாம்!’’


‘‘எவ்வளவு பிடிக்கும்?’’


‘‘இதோ இ…வ்..வ..ள…வு’’ என்று தன் சின்னஞ்சிறு கைகளை முதுகு வரை விரித்து சைகை காட்டினான் அவன்.


‘‘அம்மா அப்பா, அக்கா- எங்க மூணுபேரிலே உனக்கு யாரை ரொம்பப் பிடிக்கும்?’’


‘‘உங்க மூணு பேரையுமே எனக்குப் பிடிக்கும்தான்’’


‘‘அட…. இந்தக் காலத்துக் குழந்தைகளைப் பாரு! இத்தனூண்டா இருந்துகிட்டு அவங்க வாயிலிருந்து வர்ற வார்த்தைகள்தான் எப்படி இருக்கு?’’


மோமோச்சா, முடிவே இல்லாத கேள்விகள் பலவற்றையும் கேட்டுக் கொண்டே இருப்பான்.  அவை அவனது பெற்றோருக்கு மிகவும் பிடிக்கும்; அவர்களைக் களிப்பூட்டும்.
‘திருமண பந்தத்தில் பிணைக்கப்பட்டிருக்கும்.  ஆணையும் பெண்ணையும் அதில் வலுவாகக் கட்டிப்போட்டிருப்பது தங்களது குழந்தை மீது அவர்கள் வைத்திருக்கும் அன்புதான்.  உலகம் முழுவதும் உள்ள பொதுவான நடைமுறை இது’ என்று அவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.

இன்று, இம்பாலில் உள்ள ஏதோ ஒரு அமைப்பு ஏற்பாடு செய்திருக்கும் ஓவியப்போட்டியில் அவர்களது பெண் பங்கெடுத்துக் கொள்ள இருக்கிறாள்.  தன் பள்ளி சார்பாக அவள் இதில் கலந்துகொள்கிறாள் . மோமோச்சாவும் கூடப் போகிறான்.  

மதிய உணவை சீக்கிரமே முடித்து விட்டு அம்மா அவர்களுக்கு உடையணிவித்துவிடுகிறாள்.  தங்கள் வீட்டில் வைத்து வழிபடும் ‘சனமஹி’* (* ‘மைதேயி’ பழங்குடி மக்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் தங்கள் வீட்டில் வைத்து வழிபாடு செய்யும் கடவுள் ‘சனமஹி’) என்ற தெய்வ உருவத்தின் அருகில் அவர்களை அழைத்துச் செல்கிறாள்.  அதன் பிறகு முற்றத்திலுள்ள துளசிச் செடிக்குக் கீழே எல்லோரும் விழுந்து வணங்குகிறார்கள்.


‘‘ஓவியப் போட்டியிலே நல்லா வரைஞ்சுட்டு வா பொண்ணே’’


‘‘சரிம்மா’’

‘‘இன்னிக்கு க்வைராம்பாண்ட் மார்க்கெட்டுக்கு மோமோச்சோவைக் கூட்டிக் கிட்டுப் போகலாம் நாம’’


‘‘அவனுக்கு ஒரு நல்ல சட்டை வாங்கித் தாங்கப்பா’’


‘‘கட்டாயம் வாங்கித்தரேன், பின்னே என் பையனுக்கு நான் வாங்காமலா?’’


‘‘அக்காவுக்கும்தான்’’


‘‘நிச்சயம் வாங்கறேன்’’


‘‘அம்மாவுக்கும் கூட’’


‘‘சரி, சரி…’’


‘‘அம்மா… பைபை …’’

அவள் வீட்டுவாசலில் நின்றபடி குழந்தைகளின் சின்னக் கையசைப்பை எவ்வளவு நேரம் பார்க்க முடியுமோ, அவ்வளவு நேரம் பார்த்தபடி நிற்கிறாள்.  பிறகு தங்கள் அப்பாவை முந்திக் கொண்டு வேகமாக நடை போட்டுப் போய் விடுகிறார்கள் அவர்கள்.

                                            ***********************

மாலை மறைந்து இருள் படர ஆரம்பித்துவிட்டது.  கணவனும், குழந்தைகளும் திரும்பி வருகிறார்களா என்று பார்ப்பதற்காக வாசற் கதவுப் பக்கம் வந்து வந்துபோய்க் கொண்டிருக்கிறாள் மோமோ-மா.  வழியைப் பார்த்துப் பார்த்து அவள் கண்கள் பூத்துப் போய் விடுகின்றன.


‘‘எங்கேதான் இருப்பாங்க அவங்க? ஏன் இவ்வளவு நேரம் ஆகுது? வெளியே போயிட்டா போதும், எப்ப திரும்பி வரணுங்கிறதே அவருக்குத் தெரியாது’ என்று கணவரை மனதுக்குள் குறை சொல்லிக் கொண்டிருக்கிறாள் அவள்.  எண்ணெய் விளக்கை ஏற்றி வைத்தபடி கதவருகே உட்கார்ந்து அவர்கள் எப்போது வருவார்கள் என்று தன் விழிகளால் துருவிப் பார்த்துக்கொண்டிருக்கிறாள்.

தெருவில் வருகிறவர்கள் போகிறவர்கள், அவளுக்கு அறிமுகமானவர்கள் எல்லோரும்
‘‘மோமோ-மா இங்கே என்ன செய்யறே’’ என்று பரிவோடு கேட்கிறார்கள்.
‘‘யாருக்காகக் காத்திருக்கே இபெம்மா? “(தங்கச்சி) என்று விசாரிக்கிறார்கள்.

 தான் நெய்த துணிகளை மார்க்கெட்டில் இருக்கும் சிறு வியாபாரிகளிடம் விற்பனை செய்வதற்காகச் சென்றிருந்த ஒரு நெசவாளிப் பெண், நூல்கண்டுகள் அடங்கிய தன் பெட்டியை இறுகப்பிடித்துக் கொண்டு , அந்த இருளில் தெருவுக்குள் ஓட்டமும் நடையுமாக விரைந்து செல்கிறாள்.  அவள் மிரண்டு போயிருக்கிறாள் என்பது, எடுத்த எடுப்பிலேயே தெரிகிறது.

‘‘இபெம்மா! க்வைராம்பாண்டிலே இன்னிக்குத் துப்பாக்கிச் சூடு நடக்குது.  காயப்படாம, செத்துப்போகாம தப்பிச்சது என்னோட நல்லநேரம்.  பஸ் எதுவுமே வரலை.  ஏதோ அதிர்ஷ்டம் இருந்திருக்கு, எப்படியோ சாமி புண்ணியத்திலே தப்பிச்சு வந்திட்டேன். இது ரொம்ப மோசமான நேரம்… போர் நடக்கற நேரம்* (இனக்குழுக்களுக்குள் அடிக்கடி நிகழும் கலவரங்களே போர்ச்சூழலாக இங்கு சித்தரிக்கப்படுகின்றன). கூட்ட நெரிசலான ஒரு மார்க்கெட்டுக்குள்ளே குண்டு வெடிச்சா ஜனங்க கட்டாயம் செத்துத்தான் போவாங்க.  வீட்டிலே இருக்கிற எல்லாருக்கும் கவலைதான்’’ என்று போகிற போக்கில் வேகமாகச் சொல்லிக் கொண்டே கடந்துபோகிறாள் அவள்.

மோமோ-மா அதிர்ச்சியால் திக்பிரமை பிடித்தவளாய் வாயடைத்துப்போய் நிற்கிறாள்.அக்கம்பக்கத்திலுள்ளவர்களும், உறவுக்காரர்களும் அவளைத் தேற்றவும் அவள் பயத்தைக் கொஞ்சம் குறைக்கவும் முயற்சி செய்கிறார்கள்.

‘‘வண்டி எதுவும் ஓடாததாலே அப்பாவும், குழந்தைகளும் எங்கேயாவது மாட்டிக்கிட்டிருப்பாங்க.’’

‘‘இதோ பாரும்மா, ராத்திரிக்கு முன்னாடி அவங்க இங்கே வந்து சேர்ந்துடுவாங்க. நீ வேணும்னா பாரு! இம்பால் ஒண்ணும் அவ்வளவு தூரம் இல்லையே?’’

மோமோ-மாவை அண்டை வீட்டுக்காரர்கள் அவள் வீட்டுக்குள் கொண்டு போய் விடுகிறார்கள்.

                                       *****************************

காலை விடிந்துவிட்டது.  செய்தித்தாள்கள் மட்டும் எப்படி இவ்வளவு சரியாக வந்து சேர்ந்துவிடுகின்றன?

‘‘இறந்தவர்கள்….இறந்தவர்கள்…உறுதிப்படுத்தப்பட்டவர்கள்…உறுதிப்படுத்தப்பட்டவர்கள்,’’ என்று அந்தச் செய்திகளையே செய்தித்தாள்கள் கூச்சலிட்டுக்கொண்டிருந்தன.

எல்லோரும் மோமா-மா எங்கே என்று விசாரிக்க ஆரம்பித்திருந்தார்கள்.  குறிப்பிட்ட அந்தப் பகுதி முழுவதையும் அவர்கள் அலசித் தேடினார்கள்.  சிலர் குளங்களுக்குள் குதித்துப் பார்த்தார்கள் . நெற்குதிர்கள் மீது ஏறியும் பார்த்தார்கள்.  காலியாய்க் கிடந்த வயல் வெளிகளில், அடர்ந்த காட்டுப் புதர்களிலெல்லாம் அவளைத் தேடிப் பார்த்தார்கள்.  

கடைசியில் மூன்று நான்கு ஆண்கள் ஒன்று சேர்ந்து மோமோ-மாவைக் கைத் தாங்கலாய்ப் பற்றி இழுத்துக் கொண்டு வந்து சேர்த்தார்கள்.  தலை வாராமல், முடிச்சு தளர்ந்திருக்க அவளது அடர்ந்த கூந்தல் , முதுகுப்புறம் அவிழ்ந்து கிடந்தது.  மேலாடை தளர்ந்திருந்தது.  இறுகப் பிணைத்து வைத்திருந்த அவளது கரங்களை அவர்களால் பிரிக்க முடியவில்லை.

‘‘மார்க்கெட்டிலிருந்து வந்தவங்ககிட்டே இருந்து செய்தித்தாள்களைப் பிடுங்கிக்கிட்டா அவ’’ என்று யாரோ சொன்னார்கள்.
‘‘ஒருவேளை பைத்தியம் பிடிச்சுத் தெருவிலே அலையப்போறாளோ அவ?”

‘‘ஹி ஹி ஹி!!’’ என்று வெறிபிடித்தாற் போலச் சிரித்தாள் அவள்.  கசங்கிப்போன அந்த செய்தித்தாளை ஒருமுறை பார்த்துவிட்டுத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.  பிறகு அதைத் தன் உதட்டருகே கொண்டுவந்து முத்தமிட்டபடி
‘‘ஆஹா.. இன்னிக்கு என் குழந்தைங்களோட படம் பேப்பர்களிலே வந்தாச்சு’’ என்று சந்தோஷமாகக் கூச்சலிட்டாள்.

                                                &**********************&

1992இல் மணிப்புரி மொழியில் எழுதிப் பிரசுரிக்கப்பட்ட (Ichagi Photo) இந்தச் சிறுகதையின் ஆசிரியர் சத்யவதி நிங்கோம்பாம்.

(Source CRAFTING THE WORD WRITINGS FROM MANIPUR
EDITOR , THINGNAM ANJULIKA SAMOM ZUBAAN)

13.6.23

மொழிபெயர்ப்பு-உரையாடல்,இலக்கிய வெளி

 ஐந்து மொழிபெயர்ப்பாளர்களிடம் ஐந்து கேள்விகள் என்ற தலைப்பில் கனடாவிலிருந்து வெளிவரும் ’இலக்கிய வெளி’ இதழில் வெளிவந்திருக்கும் என் பதில்கள்




1. உங்களுடைய மொழிபெயர்ப்புத்தேர்வு எந்த அடிப்படையில் அமைந்துள்ளது?

விடை:
என் முதல் இரு மொழிபெயர்ப்புப் பணிகளும், அதற்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களும் - அவை இரண்டுமே என் தெரிவுகளாக அல்லாமல் தற்செயலாக வாய்த்தவை மட்டுமே என்பது பலருக்கும்  வியப்பூட்டலாம். என் பேராசிரியப் பணிக்கு நடுவே 1979 ஆம் ஆண்டு முதல் இடையிடையே- சிறுகதைகளை மட்டுமே எழுதி வந்தேன். தமிழ் வார மாத இதழ்களில் அவை வெளிவந்து கொண்டிருந்தன. நான் பணி ஓய்வு பெற்றபின் 2006 இல் ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கியின் புகழ் பெற்ற செவ்வியல் படைப்பான  ‘குற்றமும் தண்டனையும்'- Crime and Punishment-  நாவலை மொழிபெயர்த்துத் தர வேண்டும் என்ற கோரிக்கையோடு ஒரு பதிப்பாளர் என்னை அணுக, மொழிபெயர்ப்பு என்ற துறையை  நான் முதல் முறையாக முயன்று பார்த்தது அப்போதுதான். அதற்குக் கிடைத்த 
வரவேற்பையும்,ஊக்கத்தையும் தொடர்ந்து  அதே பதிப்பாளர்  தேர்வு செய்த தஸ்தயெவ்ஸ்கியின் 'அசடன்'- The Idiot நாவலையும் மொழி பெயர்த்தேன். இந்தப்   பணிகளுக்குப் பிறகு நான் மொழிபெயர்த்த படைப்புக்கள் அனைத்தும் என் தேர்வுகள் மட்டுமே. முதல் இரண்டும் ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புக்களாக அமைந்து போய்.., எனக்கும் அவரது பாணியும்,கதைக்கூற்று முறையும்,அவரது மன அமைப்பும் பழகியும் பிடித்தும் போனதால் தொடர்ந்து அவரது மூன்று  குறுநாவல்கள்,பல சிறுகதைகள்... மற்றும் அவரது இன்னொரு பெரும் நாவல் படைப்பு என்று நானே தேர்வு செய்து, தொடர்ந்து தமிழில் மொழியாக்கம் செய்து வருகிறேன். இடையே சில இணைய இதழ்கள் மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் வேண்டுமென்று என்னிடம் கேட்டபோது தஸ்தயெவ்ஸ்கியின் கதைகளோடு இந்தியநாட்டின் வங்க மொழி எழுத்தாளர்களான மகாஸ்வேதாதேவி, ஆஷா பூர்ணாதேவி, வட கிழக்கு மாநில எழுத்தார் டெம்சுலா ஆவ் ஆகியோரின் சிறுகதைகளையும், அயலக எழுத்தாளர்களான ஆண்டன் செக்காவ்,டால்ஸ்டாய் போன்றோரின் கதைகளையும் தெரிவு செய்து கொண்டேன். மொழிபெயர்ப்புக்கான 
என் தெரிவின் அடிப்படைகள் இவைதான்: 
ஒரு படைப்பு என்னை ஈர்த்துக் கட்டிப்போட வேண்டும். அதன் முதல் வாசிப்பிலேயே அதன் மொழியாக்கம் என்னுள் தன்னிச்சையாக ஓடத்தொடங்க வேண்டும். இவை அமையும்போது குறிப்பிட்ட படைப்புக்கள் என் தெரிவுகளாகி விடும். என் அளவுகோல் அது மட்டும்தான்.

2. தஸ்தயெவ்ஸ்கி படைப்புக்களைத் தமிழாக்கம் செய்யும்போது அவரது மொழி கடினமானது என்பதை நாம் அறிவோம். அத்தகைய சூழலில் அதனை நீங்கள் எவ்வாறு எதிர்கொண்டீர்கள்?

விடை:
முதல் கேள்விக்குச் சொன்ன விடையிலேயே இதற்கான பதிலும் அடங்கி இருக்கிறது. தஸ்தயெவ்ஸ்கியின் மாபெரும் செவ்வியல் ஆக்கங்களை முதலில் செய்து விட்டதால் அவரது போக்கு எனக்குப் பிடிபடத் தொடங்கி விட்டது. ஆங்கிலம் வழியாக அந்தப் படைப்புக்களைப் பெயர்க்கும்போது ஒரே படைப்புக்குப் பல ஆங்கில மொழிபெயர்ப்புக்களை ஒப்பு நோக்கிக் கருத்துப் பிழை வந்து விடாமல் இருக்க கவனம் எடுத்துக் கொள்வேன். தெளிவாக எனக்குள் அதை உட்செலுத்திக்கொண்ட பின்பே தமிழில் வைப்பேன். பொதுவாக தஸ்தயெஸ்கியின் படைப்பு மொழி சிக்கலானதுதான். குறிப்பாக நிலவறைக் குறிப்புகள் போன்ற இருத்தலியல் நாவல்களில் மிகவும் சிக்கலானதும், இருண்மையானதும் கூட. சில வேளைகளில் அவரது பெரிய நாவல்களை விடவும் கூடுதல் சிரத்தை எடுத்துக்கொண்டுதான் அவரது குறுநாவல்களையும் செய்ய வேண்டி இருந்தது.  படைப்பின் மீதும் படைப்பாளி மீதும் கொண்ட பற்றின் காரணத்தால்  அவற்றை என் முன் நிற்கும் சவாலாகக் கருதி என்னால் இயன்ற வரை நியாயம் செய்தபடி, தமிழுக்குச்  சரியாகக் கொண்டு வந்து சேர்க்க முயற்சி மேற்கொண்டு வருகிறேன்.

3.
நீங்கள் சிறுகதைளையும், நாவல்களையும் தொடர்ச்சியாக மொழிபெயர்த்து வருகிறீர்கள். அவ்வகையில் எந்த மொழி இலக்கியங்கள் மொழிபெயர்ப்பதற்கு இலகுவாக இருப்பதாகக் கருதுகிறீர்கள்?

விடை:
ரஷ்ய நாவல்கள், வங்கக்கதைகள் என்று எல்லாவற்றையுமே நான் ஆங்கிலத்தை இடைமொழியாகக் கொண்டு அதன் வழியாக மட்டுமே மொழிபெயர்த்து வருகிறேன்.  ஆங்கிலத்திலேயே நேரடியாக எழுதப்பட்ட டெம்சுலா ஆவின் சிறுகதைகள், பஞ்சாப் எழுத்தாளர் ஹரீந்தர் சிக்காவின்  'செஹ்மத் அழைக்கிறாள்' என்ற நாவல்   ஆகியவற்றையும் செய்திருக்கிறேன். அவை இரண்டும் ஆங்கிலத்திலிருந்து நேரடியாக செய்யப்பட்ட என் மொழியாக்கங்கள். பிறமொழிகளிலிருந்து நான் பெயர்ப்பதில்லை என்பதால் பிற மொழிகளை ஒப்புநோக்கிக் கருத்துக் கூற என்னால் இயலவில்லை.

4. மொழிபெயர்ப்பில் உங்கள் முன்னோடி யார்?


விடை:
மொழிபெயர்ப்புக்குள் நான் பிரவேசித்ததே முற்றிலும் தற்செயல் என்பதால்  முன்னோடி என்று குறிப்பாக எவரையும் நான் கருதிக்கொள்ளவில்லை. எனினும் சிறு வயதிலிருந்தே மொழியாக்கப் புனைவுகளையும் படித்து வருவதால் த நா சேனாபதி,
த நா குமாரஸ்வாமி,காண்டேகரை மொழிபெயர்த்த திரு கா ஸ்ரீ ஸ்ரீ, 
வங்க நூல்கள் பலவற்றை மொழிபெயர்த்திருக்கும் திரு சு.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மீது எனக்குப் பெரு மதிப்பு உண்டு. முன்னோடிகளின் வழியிலோ, கோட்பாடுகளை அடிப்படையாகக்கொண்டோ செய்யாமல், மொழியின் துணை கொண்டு  உள்ளுணர்வின் தடம் பற்றி மட்டுமே
என் மொழியாக்கங்களை செய்து வருகிறேன்.தொடக்கத்தில் சொந்தப்புனைவுகளை, சிறுகதைகளை எழுதியிருப்பதால், இப்போது மொழியாக்கத்துறையில் ஈடுபட்ட பிறகும்,சொந்தப்படைப்பாக்கத்திலும் ( நாவல்,சிறுகதை என) கருத்துச் செலுத்தி வருகிறேன். மொழியாக்கத்துக்கு எடுத்துக் கொள்ளும் கதைகளைக் கதைப்போக்கு குலையாமல் மொழியாக்கம் செய்ய சொந்தப்படைப்பாக்க அனுபவமும் எனக்குத் துணை நிற்கிறது.

5. தமிழின் நவீன புனைகதைகளில் உலக மொழிகளில் மொழிபெயர்த்து வழங்கும் அளவுக்கு தரமான படைப்புக்கள் என்று எவற்றைக் கருதுவீர்கள்?

இளம் படைப்பாளிகள்...
புகழ் பெற்ற படைப்பாளிகள் என்று தரமான நூல்கள் பல தரப்புக்களிலிருந்தும் இன்று தமிழில் வந்து கொண்டேதான் இருக்கின்றன.  அவற்றை இனம் கண்டு  உலக மொழிகளுக்குக் கொண்டு சேர்ப்பது அந்தந்த மொழிகளில் தேர்ச்சி பெற்ற மொழிபெயர்ப்பாளர்களின் விருப்பம்.  சமகால நூல்களிலிருந்து  அப்படி எதையும் தரம் பிரித்துத் தனியே சுட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை.

26.3.23

“சிறுமைகளும் அவமதிப்புகளும்”-மொழி பெயர்ப்பு நாவல்

 என் மொழிபெயர்ப்பில் நற்றிணை பதிப்பக வெளியீடாக,ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கியின் மகத்தான நாவல்களில் ஒன்றான

"The Insulted and Humiliated" ன் தமிழ் மொழிபெயர்ப்பு “சிறுமைகளும் அவமதிப்புகளும்”:



சிறுமைகளின் கருநிழலால் சிறிது நேரமேனும் போர்த்தப்படாதவர்களோ, அவமானங்களாலும், அவமதிப்புக்களாலும் தீண்டப்படாதவர்களோ, புண்படுத்தப்படாதவர்களோ எவரும் இல்லை. இதுவே வாழ்க்கை நமக்குக் கணந்தோறும் புகட்டிக்கொண்டிருக்கும் பாடம். ஆனாலும் ஒரு மிகப்பெரிய நாவலின் பாடுபொருளாக அதை மட்டுமே அமைத்துக்கொள்வதற்கு , அதையே பாத்திரங்கள் வழியாகவும் காட்சிகள் மற்றும் உரையாடல்கள் வழியாகவும் நெஞ்சில் சுமந்து அசைபோட்டு உருத்தந்து படைப்பாய் வெளிக்கொணர்வதற்கு மிக வலுவான ஆன்ம உரம் தேவைப்படுகிறது. அது, இலக்கிய உலகின் மாபெரும் மேதையான தஸ்தயெவ்ஸ்கிக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது.‘பாவப்பட்ட மனிதர்கள்’ - ( Poor Folks )என்ற சிறுநாவலுக்குப்பிறகு, தஸ்தயெவ்ஸ்கி எழுதிய சில சிறுகதைகள் குறுநாவல்களைத்தொடர்ந்து - அவரது பிற்காலப்பெரும் படைப்புக்களான குற்றமும் தண்டனையும்,அசடன்,கரமஸோவ் சகோதரர்கள் ஆகிய காலத்தால் அழியாத மாபெரும் புனைவுகளுக்குக் கட்டியம் கூறும் வகையில் அவர் உருவாக்கியிருக்கும் மகத்தான செவ்வியல் படைப்பே ‘சிறுமைகளும் அவமதிப்புகளும்’. இரத்தமும், சதையுமாய் அன்றாடம் நம் கண்முன்னர் உலவும் கள்ளம் கபடற்ற எளிய மக்களின் கண்ணீருக்குள் நம்மைக் கரைந்து போக வைத்து, அவர்கள் படும் சிறுமைகளுக்குள்ளும், காயங்களுக்குள்ளும் நம்மையும் மூழ்க வைத்து அவர்கள் பெறும் அனுபவங்களுக்குள் நம்மையும் சஞ்சரிக்க வைக்கும் உணர்ச்சிப் பெருக்கான இந்த நாவலை மொழிபெயர்த்த அனுபவம் என்றென்றும் என் மனதில் நிலைத்திருக்கும்.
‘ குற்றமும் தண்டனையும், ‘ அசடன்’ மொழிபெயர்ப்புகளை செம்பதிப்பாக வெளியிட்டிருப்பதோடு ‘தஸ்தயெவ்ஸ்கி கதைகள்’ ( 2015 ) தொடங்கி இன்று வரை தொடர்ந்து என் மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டு வரும் நற்றிணை பதிப்பகத்தார்க்கு என் நன்றி




30.8.20

‘இரட்டையர்-ஓர் எதிர்வினை

‘இரட்டையர்’ (The Double- Fyodor Dostoevsky)நாவல் மொழியாக்கம் குறித்த காத்திரமான ஓர் எதிர்வினை.
நன்றி:https://m.facebook.com/story.php?story_fbid=3186179088144629&id=100002577069027 வாசிப்போம்- தமிழ் இலக்கியம் வளர்ப்போம். //மனப்பிளவு என்கிற பிணி புதியதே அல்ல. காலத்தில் பயணம் செய்கிற கதைகளை குழந்தைகளின் தொடர்களில் எல்லாம் விவரித்துப் புரிய வைத்ததைப் போல், இதைப்பற்றிக் கூட விஸ்தீரனமாகவும், அதீதமாகவும் எல்லாம் சொல்லி விட்டார்கள். ஒரு புனைவில் மனம் சிதறுண்ட ஒரு ஆள் கதாபாத்திரமாக வந்து போவதும், அதன் குறிப்புகளை மற்றவர்களின் கோணங்களில் அறியப்படுவதேல்லாம் நடைமுறையில் இருப்பது தான். பிளவுபட்டு விட்ட மனிதனின் ஒரு பக்க மனமாகவே தொழிற்படுவது அத்துமீறல். படிக்கிற யாரும் மிரட்சியில் இருந்து விடுபட முடியாதபடி அதை செய்திருக்கிறார் தஸ்தயேவ்ஸ்கி.நுணுக்கி நுணுக்கி எழுதியிருக்கிறார். சொன்னதை சொல்லுவதைக் கூட நிகழ்த்தியிருக்கிறார். ஆனால் அவர் தொகுத்திருக்கிற சொற்களின் அணிவகுப்பு ஒவ்வொரு முறையும் வெவ்வேறு அர்த்தங்களின் மீது ஒளிர்கிறது. கோலியாட்கின் அலைபாய்கிற வெளிகளெங்கிலும் சுற்ற வேண்டியிருக்கிற வாசகன் பீதியுறும் நிலைக்கு சென்று முட்ட வேண்டியிருக்கிறது. ஆசிரியரின்’இரட்டையர்’எழுதியவரின் அபூர்வம் அல்லவென்பதும் ஒவ்வொரு மனிதனுக்குப் பக்கத்திலும் நின்று கொண்டிருக்கிற அபாயம் தான் என்பதுமே அந்தப் பீதிக்குக் காரணம். எப்படியும் நாம் பலரும் இவ்வுலகில் அனாதிகளாக இருக்கிறோம். அடையாளமற்று இருக்கிறோம். நாம் பொருமுகிற அற உணர்வுகளுக்கு எதிரொலிகள் இல்லை, அளவற்றுத் திரள்கிற ஆசைகளுக்கு முடிவும் இல்லை. எந்தக் கணத்தில் நாம் நம்முள்ளே பேசுவதை நிறுத்தி விட்டு நமக்கு அருகிலேயே இருக்கிற மற்றொரு நானிடம் பேசுவோமோ, தெரியாது. அதற்கு அப்புறம் நானே என்னிடம் பகை கொண்டு அலைந்தவாறு நான் நார்மலாகத்தான் இருக்கிறேன் என்கிற குழப்பத்தை ஒப்புக் கொள்ளக்கூடிய உலக அங்கீகாரத்துக்கு அலைய மாட்டேன் என்பதில் கூட ஒரு நிச்சயமும் இல்லை. எழுத்தாளர் தனது நிலையில் வெகு குஷியாக இருந்தவாறு விளையாடியிருக்கிறார் என்பதை விளங்கிக் கொண்டே வருவதில் இருந்து தான் இந்நாவலை அத்துமீறல் என்றேன், இந்நாவலை நூற்றி ஐம்பது வருடமாக ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள் என்கிற செய்தியை முன்னுரையில் படித்த போது வியப்பு தோன்றவில்லை, அதை செய்துதான் ஆக வேண்டியிருக்கிறது.நாவலின் உச்சம் என்று கருதிக் கொள்ள வேண்டிய பகுதி நாவலில் ஒரு பெண் எழுதப்படுவதாக சொல்லும் கடிதம். தனது மனதிலேயே அவர் அந்தப் பெண்ணுக்கு உபதேசங்கள் சொல்லும் பகுதி திடுக்கிடலாக இருந்தது. அடப்பாவி என்று நான் எழுத்தாளரை சபித்தேன். சன்னலில் இருந்து அவரோடு வருவதற்கு அவள் குதிரை வண்டியை எடுத்து வர சொல்லுகிறாள். கோலியாட்கினின் ஆழ்மனம் ஒரு பெண்ணை விரும்பியதை பெரிய குற்றமென்று சொல்ல முடியாதுதான், ஆனால் அவளுக்கு நன்னடத்தை கூறி, சட்ட எச்சரிக்கைகள் செய்வதெல்லாம் புனைவின் உச்சம்.அதிகம் எழுதவில்லை.அனுபவிக்க முடிகிறவர்கள் படிக்கலாம்.தஸ்தயேவ்ஸ்கியின் ஒவ்வொரு நாவலை படிக்க நேரும்போதும் அவரது மேதமையை வியந்து கொள்ளாமல் மீள முடிவதில்லை. இதுவும் அப்படித்தான். தமிழில் செய்தவர் எம் ஏ சுசீலா. மகத்தான பணி.நற்றிணை வெளியீடு.//

20.6.20

கனலி - இணைய வழிக் கலந்துரையாடல்

கனலி இணைய இதழ் தொடங்கிய முதற்கட்டத்திலிருந்தே என்னோடு நட்பின் இனிமையோடு பழகி வரும் திரு விக்னேஸ்வரன், அவ்விதழில் என் கட்டுரைகளும் மொழிபெயர்ப்புக்களும் வெளிவர வேண்டுமென்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுபவர்.அவரது தூண்டுதலால் தஸ்தயெவ்ஸ்கி குறித்த கட்டுரை ஒன்றும்,செக்காவின் சிறுகதை மொழிபெயர்ப்பு ஒன்றும் கனலி இணைய இதழில் வெளிவந்திருக்கின்றன.தற்போது என் மொழிபெயர்ப்பு அனுபவங்கள் குறித்த கலந்துரையாடலாக- ஒரு இணையக்கூடலை 21/6/20 ஞாயிறு மாலை 6 மணிக்கு கனலி கலை இலக்கிய தளம் ஏற்பாடு செய்திருக்கிறது.ஆர்வமுள்ள இலக்கிய அன்பர்கள் அனைவரும் ஸூம்செயலி வழி நிகழ்வில் பங்கு பெறலாம்.

6.5.20

கிறிஸ்துமஸ் சமயத்தில்…-ஆண்டன் செக்காவ்[மொழிபெயர்ப்புச் சிறுகதை}


                                                     AT CHRISTMAS TIME
                                 Anton Chekhov

                         கிறிஸ்துமஸ் சமயத்தில்…
                           ஆண்டன் செக்காவ்
                    [ஆங்கில வழி தமிழாக்கம் - எம் ஏ சுசீலா]




1

பேனாவை மைக்கூட்டுக்குள் நனைத்துக்கொண்டே
’’என்ன எழுதணும்..?’’என்று கேட்டான் யெகர்.

வஸிலிஸா தன் மகளை நேரில் பார்த்து நான்கு வருடங்களாகி இருந்தன. திருமணம் முடிந்து பீட்டர்ஸ்பர்க் சென்று விட்ட அவளது பெண் யெஃபிமியா முதலில் இரண்டு கடிதங்கள் எழுதினாள்.  அதன் பிறகு ஏனோ அவர்களது வாழ்க்கையிலிருந்தே அவள் காணாமல் போய்விட்டது போலிருந்தது.  அவளைப் பார்க்கவும் முடியவில்லை;அவளிடமிருந்து எந்தச் செய்தியும் இல்லை.  அவள் உயிரோடு இருப்பதற்கான எந்த வகை அறிகுறியும் இல்லை.காலை நேரங்களில் பசுவிடமிருந்து பால் கறந்து கொண்டிருக்கும்போதும்,அடுப்பு மூட்டும்போதும்,இரவில் அரைத் தூக்கம் கொள்ளும்போதும்- எந்த நேரமானாலும் கிழவிக்கு ஓயாத ஒரே ஒரு சிந்தனை மட்டும்தான்.’மகள் யெஃபிமியாவுக்கு என்னதான் ஆகியிருக்கும்..,அவள் அங்கே உயிரோடுதான் இருக்கிறாளாஎன்பதுதான் அது. அந்தத் தாய் ஒரு கடிதம் போட்டிருக்கலாம்;ஆனால் வயதான அந்தத் தகப்பனுக்கு எழுதத் தெரியாது. எழுதுவதற்கு அவர்களுக்கு யாருமே இல்லை.

ஆனால்..இப்போதோ கிறிஸ்துமஸ் வேறு வந்து விட்டதால் வஸிலிஸாவால் அதற்கு மேலும் அதைப்பொறுத்துக்கொள்ள முடியாமல் யெகரைத் தேடி அவனிருந்த மதுக்கடைக்கே வந்து விட்டிருந்தாள். மதுக்கடை உள்ளிட்ட அந்தத் தங்கும் விடுதிக்குப் பொறுப்பாய் இருந்தவனுடைய மனைவியின் தம்பிதான் யெகர். இராணுவத்திலிருந்து திரும்பி வந்தது முதல் வேறெந்த வேலை வெட்டியும் இல்லாமல் மதுக்கடையே பழியாய்க்கிடந்து கொண்டிருந்தவன் யெகர்.  உரியபடி பணம் கொடுத்தால் கடிதங்களை நல்ல முறையில் அவன் எழுதித் தருவான் என்று எல்லோரும் பேசிக்கொள்வதைக் கேள்விப்பட்டதால் அந்தக் கடையிலிருந்த சமையல்காரியிடமும்,வீட்டுக்காரியிடமும் அது பற்றிப் பேசி உறுதிப்படுத்திக்கொண்டு அவள் வந்திருந்தாள்.அதற்கான கட்டணம் பதினைந்து கொபெக் என்று பேசி அதற்கு அவர்களும் ஒப்புக்கொண்டிருந்தார்கள்.

அதனால்..இப்போது- கிறிஸ்துமஸ் விடுமுறையின் இரண்டாவது நாளன்று, மதுக்கடையிலுள்ள சமையலறையில் அந்த வேலை நடந்து கொண்டிருந்தது. பேனாவைக் கையில் பிடித்தபடி மேஜையருகே உட்கார்ந்திருந்தான் யெகர்.அவனுக்கு முன்னால் கவலையும் வருத்தமும் தோய்ந்த முகத்தோடு நின்றுகொண்டிருந்தாள் வஸிலிஸா. மிகவும் மெலிந்த தோற்றமும் பழுப்பு நிற வழுக்கைத் தலையும் கொண்ட வயது முதிர்ந்த அவள் கணவன் பியோடர் அவளோடு கூட வந்திருந்தான். கண் தெரியாதவனைப்போல் வெறுமே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் அவன். அடுப்பிலிருந்த சட்டியில் வறுபட்டுக்கொண்டிருந்த பன்றிக்கறி ஆவிபறக்கக் கொதித்தபோது எழுந்த ஓசை ’ ஃப்ளூ, ஃப்ளூஎன்று கத்துவது போலிருந்தது. அது பயங்கரச்சூடாக இருந்தது.

 ‘’நான் என்னதான் எழுத வேண்டும்?’’என்று மீண்டும் ஒரு தரம் கேட்டான் யெகர்.
‘’ம்..என்னது’’என்று கேட்டபடி அவனைக் கோபத்தோடும் சந்தேகத்தோடும் பார்த்தாள் வஸிலிஸா.
‘’இதோ பாருங்கள்..என்னை சங்கடப்படுத்த வேண்டாம்.நீங்கள் ஒன்றும் ஓசியாக எழுதவில்லை.பயமே வேண்டாம்,உங்களுக்கு என்ன பணம் உண்டோ அதைக்கொடுத்து விடுவோம்.சரி..இப்படி எழுதுங்கள்எங்கள் அன்பு மருமகன் ஆண்ட்ரீ ஹ்ரிஸன்ஃபிச்சுக்கும் எங்களது ஒரே பிரிய மகள் யெஃபிமியா பெட்ரோவ்னாவுக்கும் என்றென்றும் எங்கள் அன்பும் வந்தனமும் பெற்றோரான எங்கள் ஆசிகளும் உரித்தாகட்டும்.’

 ‘’ம்..எழுதியாயிற்று ,மேலே சொல்லுங்கள்’’
‘’..ம்..அப்புறம்..அவர்களுக்கு மகிழ்ச்சியோடு எங்கள் வாழ்த்துக்களைத்  தெரிவிக்கிறோம். நாங்கள் உயிரோடுதான் இருக்கிறோம், நன்றாக இருக்கிறோம். நீங்களும் அப்படியே இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறோம்.பரமண்டலத்தில் இருக்கும் தேவன் அதற்கு அருள் செய்யட்டும்’ ’’

குழம்பிப்போனது போல் கிழவரை ஒரு முறை பார்த்தாள் வஸிலிஸா.
’’ ம்நீங்களும் அப்படியே இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறோம்.பரமண்டலத்தில் இருக்கும் தேவன் அதற்கு அருள் செய்யட்டும்’ ‘’என்று அதையே திரும்பச்சொல்லியபடி அழத் தொடங்கினாள் அவள்.


அதற்கு மேல் அவளால் எதுவும் சொல்ல முடியவில்லை. இதற்கு முன்னாலும் எத்தனையோ இரவுகள் தூக்கமில்லாமல் - இதே சிந்தனையாக இருந்த நேரங்களிலும் கூட- டஜன் கடிதங்கள் எழுதினாலும் தான் சொல்ல நினைப்பதைத் தன்னால் முழுமையாகச் சொல்லி விட முடியாது என்றே அவளுக்குத் தோன்றியிருக்கிறது. மகளுக்குத் திருமணமாகிக் கணவனோடு சென்றபிறகு இன்றுவரை எத்தனையோ விஷயங்கள் நடந்து முடிந்து விட்டன. அந்த முதிய தம்பதியர் பிரிவின் வேதனையோடுதான் நாட்களைக்கழித்துக்கொண்டிருந்தனர். தங்கள் மகளைப் புதைத்து விட்டது போன்ற ஏக்கத்தோடு இரவு முழுவதும் நெடுமூச்செறிந்தபடி..

அவள் போன பிறகு, கிராமத்திலேயும் கூடத்தான் எத்தனை சம்பவங்கள் நடந்திருக்கின்றன? எத்தனை திருமணங்கள்...எவ்வளவு மரணங்கள்? எத்தனை நீண்டதொரு குளிர்காலம்? எவ்வளவு நீளமான ஒரு கோடைகாலம்?


 வெப்பம் மிக அதிகம்என்று தன் வெயிஸ்ட் கோட் பட்டனைக் கழற்றிக்கொண்டே சொன்னான் யெகர்.
எழுபது டிகிரி* ( கிட்டத்தட்ட 140 டிகிரி ஃபாரன்ஹீட்) கூட இருக்கலாம். சரி..இன்னும் என்ன எழுத வேண்டும் சொல்லுங்கள்
வயதான அந்த தம்பதியர் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தனர்.
ஆமாம்..உங்கள் மருமகன் பீட்டர்ஸ்பர்கில் என்ன செய்து கொண்டிருக்கிறான்
அவர் ஒரு இராணுவ வீரராய் இருந்தவர் நண்பரேஎன்று பலவீனமான குரலில் பதிலளித்தார் கிழவர்.
இராணுவப்பணியிலிருந்து நீங்கள் விலகிய அதே சமயத்திலேதான் அவரும் அதிலிருந்து வெளியேறினார். அவரைப்பற்றி இன்னும் சொல்ல வேண்டுமென்றால் இப்போது..பீட்டர்ஸ்பர்கில் ஒரு நீர்சிகிச்சை மருத்துவ மையத்தில் வேலை பார்க்கிறார். நோயாளிகளைத் தண்ணீர் மூலம் குணப்படுத்தும் ஒரு டாக்டரிடம் வாயிற்காவலராய் வேலை பார்த்து வருகிறார் என்று நிச்சயமாய்த் தெரியும்.”

தன் சட்டைப்பையிலிருந்து கடிதம் ஒன்றை எடுத்துக்காட்டிய கிழவி
இதோ, இதில் இருக்கிறது பாருங்கள்..இது யெஃபிமியாவிடமிருந்து எப்போதோ வந்த கடிதம். எப்போது வந்ததோ அது கடவுளுக்குத்தான் தெரியும். ம்…இந்த உலகத்திலேயே அவர்கள் இருக்கிறார்களோ இல்லையோ

சற்று நேரம் யோசித்து விட்டு வேகமாக எழுத ஆரம்பித்தான் யெகர்.
‘’இப்போது உங்கள் வாழ்க்கை இராணுவப்பணியோடு பிணைக்கப்பட்டிருப்பதால் போர்நடவடிக்கைகளுக்கான அலுவலகம் வகுத்திருக்கும் ஒழுங்கு விதிமுறைகள்,மற்றும் அடிப்படைச் சட்டங்கள்  பற்றி நீங்கள் அறிந்து கொள்வது நல்லதென உங்களுக்கு அறிவுறுத்த விரும்புகிறோம். இராணுவ அதிகாரிகள் கைக்கொள்ள வேண்டிய நாகரிக நடைமுறைகளையும் அந்தச்சட்டங்களிலிருந்தே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்’’ 

தான் எழுதிய பகுதியை அவன் வாய்விட்டு சத்தமாய் வாசித்துக் கொண்டிருந்தபோது வஸிலிஸா தான் சொல்ல நினைத்ததையெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தாள்.
போன வருடம் அவசியத் தேவைக்குக்கூடப்பணம் இல்லாமல் அவர்கள் எப்படித் தவித்துக்கொண்டிருந்தார்கள்,அவர்கள் வைத்திருந்த சோளத்தை வைத்து கிறிஸ்துமஸ் வரை கூடத்தாக்குப் பிடிக்க முடியாமல் போனது எப்படி,அவர்கள் வைத்திருந்த பசுவை ஏன் விற்க வேண்டியதாயிற்று...’ என்பதையெல்லாம்…!
அதோடு தங்களுக்குக் கொஞ்சம் பணம் வேண்டும் என்றும்… நோயுற்றிருக்கும் அவளது வயதான தந்தை எப்படிக்கஷ்டப்படுகிறார் என்றும்… அவர் சீக்கிரமே கடவுளிடம் போய்ச் சேர்ந்து விடப்போகிறார் என்பதில் சந்தேகமே இல்லை என்பதையும் கூட! ஆனால்..இந்த விவரங்களையெல்லாம் வார்த்தையில் சொல்வது எப்படி? எதை முதலில் சொல்வது,எதை அடுத்தத்தாகச்சொல்லுவது?

 ‘’இதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்’’ என்றபடி தொடர்ந்து எழுதிக்கொண்டு போனான் யெகர்.
‘’இராணுவச் சட்டங்கள் பாகம் ஐந்தின்படி ஒரு இராணுவ வீரர் பொதுச்சொல்லாலும் குறிக்கப்படுகிறார், சிறப்புச்சொல்லாலும் குறிப்பிடப்படுகிறார். முதல் படிநிலையில் இருப்பவர் தளபதி, இறுதிப் படிநிலையில் இருப்பது தனிப்பட்ட….’’

தன் உதடுகளை ஈரப்படுத்திக்கொண்டு மெதுவாக இப்படிச்சொன்னார் கிழவர்.
பேரக்குழந்தைகளை ஒரு தரம் பார்க்க முடிந்தால் நன்றாக இருக்கும்
என்னது பேரக்குழந்தைகளா?” என்று வெடுக்கென்று கேட்ட முதியவள்
அப்படி யாருமே இல்லாமல் கூட இருக்கலாம்என்று கோபமாய்ச்சொன்னாள்.
ஒருவேளை அப்படி இருந்தாலும் இருக்கலாமே..யாருக்குத் தெரியும்


யெகர் வேகமாகத் தொடர்ந்து எழுதிக்கொண்டே போனான்.
‘’அதன்படி உள்ளே இருக்கும் எதிரி யார் அது இல்லாமல் இருக்கும் எதிரி யார் என்று நீங்களே எடை போட்டு விடலாம். நமக்குள்ளே இருக்கும் எதிரிகளிலெல்லாம் மிகப்பெரிய எதிரி ‘பாக்கஸ்’தான்’’
(பாக்கஸ் என்பது ஒயின் வகை மதுவின் ரோமானியக் கடவுளைக் குறிப்பது.Bacchus: Roman god of Wine). மீன் தூண்டில்களைப்போல் தாளை உழுதபடி தனக்குத் தந்த வேலையை முடிக்கும் மதர்ப்போடு அவனது பேனா கிறீச்சிட்டுக்கொண்டிருந்தது..

யெகர் ஒவ்வொரு வரியையும் மிக வேகமாகப் பலமுறை படித்து முடித்தான். ஒரு ஸ்டூலில் உட்கார்ந்தபடி மேஜைக்கடியில் தன் கால்களை அகலப்பரத்தி வைத்துக்கொண்டிருந்தான் அவன். நல்ல ஊட்டத்தினால் கொழுத்துக்கிடந்த அவன் முகம் பண்படுத்தப்படாத ஒரு மிருகத்தின் முகத்தை ஒத்திருந்தது. அவனது சிவந்த கழுத்து காளைமாட்டின் கழுத்துப்போல் இருந்தது. மொத்தத்தில் அவனைப்
பார்க்கவே அசிங்கமாய் அருவருப்பாய் இருந்தது.
நாகரிகமில்லாத காட்டுமிராண்டி போலத் தோற்றமளித்த அவனுக்கு, தான் அந்த மதுக்கடையிலேயே பிறந்து வளர்ந்தவன் என்பதில் ஒரு பெருமையும் கூட இருந்தது. வஸிலிஸாவுக்கு அவனது அநாகரிக நடவடிக்கைகள் நன்றாகப் புரிந்தாலும் வாய் விட்டு ஏதும் சொல்ல முடியவில்லை; யெகரைக் கோபமாகவும் சந்தேகத்தோடும் பார்க்க மட்டுமே அவளால் முடிந்தது.

அவளுக்குத் தலை வலிக்கத் தொடங்கி இருந்தது; அவன் போட்ட சத்தத்திலும் அவன் பேசிய மூளையில்லாத வார்த்தைகளைக்கேட்டதிலும், அங்கிருந்த வெம்மையிலும் புழுக்கத்திலும் அவள் எண்ணங்கள் பலவாறாகக் குழம்பிக்கொண்டிருந்தன. அவளால் அதற்கு மேல் எதையும் யோசிக்கவோ பேசவோ முடியவில்லை. அவன் தாளில் கிறுக்கிக்கொண்டிருந்ததை முடிக்கும் வரை அவள் வெறுமே காத்திருந்தாள்.அவ்வளவுதான். ஆனால் அந்தக்கிழவரோ முழுமையான நம்பிக்கையோடு காணப்பட்டார். தன்னை அங்கே அழைத்து வந்த தன் வயதான மனைவியிடத்திலும் யெகர் மீதும் அவர் நம்பிக்கை வைத்திருந்தார். அதிலும் குறிப்பாக அந்த நீர் சிகிச்சை மையத்தைப்பற்றி அவர் குறிப்பிடும்போது அந்த நிறுவனத்தின் மீதும், வியாதியை குணமாக்குமென்று சொல்லப்படும் தண்ணீரின் மீதும்  அவர் உண்மையாகவே நம்பிக்கை வைத்திருந்தார் என்பது நன்றாகப் புலப்பட்டது.

கடிதத்தை எழுதி முடித்துத் தன் இடத்தை விட்டு எழுந்து கொண்ட யெகர் மறுபடியும் ஒருமுறை முதலிலிருந்து அதை வாய் விட்டுப் படித்தான். கிழவருக்கு எதுவும் புரியாவிட்டாலும் அதை நம்பும் பாவனையில் தலையை ஆட்டி ஆமோதித்தார்.
போதும்..சரியா இருக்கு, கடவுள் உங்களுக்கு நல்ல சுகத்தைத்தரட்டும்..போதும்..அவ்வளவு போதும்

மேஜை மீது ஐந்து கொபெக் மதிப்புள்ள மூன்று நாணயங்களை வைத்து விட்டு அவர்கள் மதுக்கடையிலிருந்து வெளியே வந்தார்கள். இந்தப்பக்கம் அந்தப்பக்கம் திரும்பாமல் - கண் பார்வை அற்றவர் போல நேர்ப்பார்வை பார்த்தபடி இருந்தார் முதியவர். அவர் முகம் பூரண நம்பிக்கையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.

ஆனால் வஸிலிஸாவோ அந்தக்கடையிலிருந்து வெளியே வந்தபோது எதிர்ப்பட்ட நாய் ஒன்றைக் கையால் விரட்டியபடி..
சீ போ..சனியன் பிடிச்ச பிசாசேஎன்று கோபமாய்க் கத்தினாள்.

அன்று இரவு முழுவதும் அந்த முதியவள் உறங்கவில்லை. ஏதேதோ எண்ணங்கள் அவளை சஞ்சலத்துக்குள்ளாக்கியபடி இருந்தன. விடிந்ததும் எழுந்து பிரார்த்தனை செய்து விட்டுக் கடிதத்தை அனுப்புவதற்காக ஸ்டேஷனை நோக்கிச் சென்றாள் அவள்.
அங்கிருந்து ஸ்டேஷன் ஏழெட்டு மைல் தொலைவில் இருந்தது.

2

டாக்டர் பி மோஸல்வெய்ஸரின் நீர்சிகிச்சை மையத்தில் புத்தாண்டு தினத்தன்றும் பிற நாட்களைப் போலவே வேலை நடந்து கொண்டிருந்தது. மையத்தின் வாயிற்காவலனான ஆண்ட்ரீ ஹ்ரிசான்ஃபிச் மட்டும் புதிய பின்னல் வேலைப்பாடுகளுடன் கூடிய  சீருடையில் இருந்தான். அவனது காலணிகள் கூடுதலாக பாலிஷ் செய்யப்பட்டு மின்னிக்கொண்டிருந்தன. எதிர்ப்படும் ஒவ்வொரு நபருக்கும் புத்தாண்டு வாழ்த்து சொல்லிக்கொண்டிருந்தான் அவன்.

அப்பொழுது காலை நேரம்;கதவருகே நின்றபடி செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தான் ஆண்ட்ரீ ஹ்ரிசான்ஃபிச். சரியாகப் பத்து மணியானபோது வழக்கமாக அங்கே வரும் வாடிக்கையாளர்களில் ஒருவரான ஜெனரல் ஒருவர் உள்ளே வந்தார்; அவரைத் தொடர்ந்து ஒரு போஸ்ட்மேனும் .

ஜெனரல் தன் மேல்கோட்டைக்கழற்ற உதவிக்கொண்டே
 மேன்மை தங்கிய தளபதி அவர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
என்றான் ஆண்ட்ரீ ஹ்ரிசான்ஃபிச்.
நன்றி நண்பரே உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்

மாடிப்படியில் ஏறி மேலே போனபிறகு, அங்கிருந்த அறைக்கதவைச் சுட்டிக்காட்டி
அந்த அறையில் என்ன இருக்கிறதுஎன்று கேட்டார் ஜெனரல்.
(தினமும் அதே கேள்வியைக்கேட்பதும் அதை எப்போதும் மறந்து விடுவதும் அவருக்கு வாடிக்கை)
அது மஸாஜ் செய்யும் அறை ஜெனரல்

ஜெனரலின் காலடிச்சத்தம் தேய்ந்து மறைந்தபின் அன்று வந்திருந்த அஞ்சல்களைப் பார்த்த ஆண்ட்ரீ ஹ்ரிசான்ஃபிச் அதில் ஒன்று தன் பெயரிலும் வந்திருப்பதைப்பார்த்தான். அதைப்பிரித்துப் பார்த்து அதிலுள்ள பலவரிகளையும் படித்த பிறகு செய்தித்தாளைப்பார்த்துக்கொண்டே தன்னுடைய அறைக்கு மெள்ள நடந்து சென்றான். அவனது அறை மாடிப்படிக்குக் கீழுள்ள வழிநடையை ஒட்டினாற்போல் இருந்தது.

அவனது மனைவி யெஃபிமியா படுக்கையில் அமர்ந்து குழந்தைக்குப் பால் கொடுத்துக்கொண்டிருந்தாள். இன்னொரு மூத்த குழந்தை அவளருகில் நின்றபடி தன் சுருட்டைத் தலையை அவள் முழங்கால் மீது வைத்துக்கொண்டிருந்தது.மூன்றாவது குழந்தை படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்தது.

அறைக்குள் நுழைந்த ஆண்ட்ரீ மனைவிடம் கடிதத்தைத் தந்தபடி
ஊரிலிருந்து வந்திருக்குன்னு நினைக்கிறேன்என்றான்.

பிறகு கையிலிருந்த பேப்பரிலிருந்து கண்ணை நகர்த்தாமல்  அறையை விட்டு வெளியே சென்றான். கடிதத்திலிருந்த ஆரம்ப வரிகளை நடுங்கும் குரலில் யெஃபிமியா படித்துக்கொண்டிருந்தது அவன் காதில் விழுந்து கொண்டிருந்தது. அதைப் படித்தபிறகு… அதற்கு மேல் எதையுமே அவளால் படிக்க முடியவில்லை. உடைந்து சிதறிப்போய்க் கண்ணீர் பெருக்கியவளாய்த் தன் முதல் குழந்தையை மார்போடு தழுவி முத்தமிட்டபடி பேசத் தொடங்கினாள் அவள். அப்போது அவள் சிரித்துக்கொண்டிருந்தாளா அழுது கொண்டிருந்தாளா என்றெல்லாம் இனம் பிரித்துச் சொல்வது கடினம்.

’’இது பாட்டி கிட்டே இருந்து வந்திருக்கு,உங்க தாத்தா கிட்டே இருந்து வந்திருக்கு..என்னோட ஊரிலே இருந்து வந்திருக்கு. வானலோகத்திலே இருக்கிற அன்னை கிட்டே இருந்து….அங்கே உள்ள ..புனிதர்கள்…தியாகிகள் கிட்டே இருந்து வந்த மாதிரி..! இந்த நேரம்…எங்க கிராமத்திலே இருக்கிற கூரை மேலே எல்லாம் பனி அப்பிக்கிடக்கும். மரங்களெல்லாம் வெள்ளை வெளேர்னு இருக்கும். பையங்க எல்லாம் ஸ்லெட்ஜிலே சறுக்குவாங்க. எனக்குப் பிரியமான உன்னோட வழுக்கைத் தாத்தா கணப்பு கிட்டே குளிர் காய்ஞ்சுக்கிட்டிருப்பார். அப்புறம் பழுப்பு நெறத்திலே ஒரு குட்டி நாய்…எனக்கு மட்டுமே சொந்தமான என் செல்லங்கள்’’’

அவள் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்தபோதுதான் மூன்று நான்கு முறை அவள் ஏதோ கடிதங்களைத் தன்னிடம் கொடுத்து போஸ்ட் செய்யச்சொன்னது ஆண்ட்ரீ ஹ்ரிசான்ஃபிச்சுக்கு நினைவு வந்தது. ஆனால் ஒவ்வொரு தடவையும் ஏதாவது அவசர வேலை குறுக்கே வந்து விடுவதால் அவன் அதை மறந்து விடுவான்;பிறகு அந்தக் கடிதங்களும் எங்கோ தொலைந்து போய்விடும்.

‘’அங்கே இருக்கிற வயல்களிலே சின்னச்சின்ன முயல்கள் துள்ளி ஓடிக்கிட்டிருக்கும்,’’
ஜபம் செய்வது போலத் தொடர்ந்து ஏதேதோ பேசியபடி தன் மகனை முத்தமிட்டுக் கண்ணீர் பெருக்கியபடி இருந்தாள் யெஃபிமியா.
‘’உன்னோட தாத்தா அன்பானவர்;மென்மையான மனசு அவருக்கு. பாட்டியும் நல்லவங்க,இளகின மனசும் கூட. அங்கே கிராமத்துக்காரங்க எல்லாருமே இதமான உள்ளம் கொண்டவங்கதான். எல்லாருக்குமே கடவுள் பயமும் உண்டு. அங்கே ஒரு சின்ன சர்ச்சும் இருக்கு. விவசாயம் பண்றவங்க எல்லாரும் ஒண்ணா சேர்ந்து அங்கே பாடுவாங்க. புனித அன்னையே, எங்களைக் காப்பாத்து கடைத்தேற்றுன்னு எல்லாரும் வேண்டிக்குவாங்க’’

மீண்டும் ஒரு வாயில் மணி அடிப்பதற்குள் சற்றுப் புகைத்து விட வேண்டுமென்று தோன்றியதால் ஆண்ட்ரீ ஹ்ரிசான்ஃபிச் அறைக்குள் நுழைந்தான். உடனே யெஃபிமியா தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு தான் பேசிக்கொண்டிருந்ததை நிறுத்திக்கொண்டாள். கண்ணீரையும் துடைத்துக்கொண்டாள்; ஆனாலும் அவள் உதடுகள் இன்னும் கூட நடுங்கிக்கொண்டுதான் இருந்தன. அவள் எப்போதுமே அவனைக்கண்டால்  பயந்து நடுங்குபவள். அப்பா…! எப்படிப்பட்ட பயம் அது? அவனது காலடிச் சத்தம் கேட்டால்…, ஏன் அவன் கண்ணைப் பார்த்தாலே கூட அவள் அச்சத்தால் விதிர்விதிர்த்துப்போவாள். அவன் முன்னிலையில் எந்த ஒரு வார்த்தையும் சொல்ல அவள் ஒருபோதும் துணிந்ததில்லை.

ஆண்ட்ரீ ஹ்ரிசான்ஃபிச் சிகரெட்டைப்பற்ற வைத்துக்கொண்டதுமே மாடியிலிருந்து அழைப்பு மணி அடித்தது. பற்ற வைத்த சிகரெட்டைப் போட்டு விட்டுத் தீவிரமான முக பாவனையுடன் வாசலுக்கு விரைந்தான் அவன்.

அப்போதுதான் குளியலை முடித்திருந்த ரோஜா நிறப் பளபளப்போடு படிகளில் இறங்கி வந்துகொண்டிருந்தார் ஜெனரல்.
அறைக் கதவொன்றைச் சுட்டிக்காட்டியபடி அங்கே என்ன இருக்கிறதென்று அவர் கேட்க ட்ரௌசர் பைக்குள் தன் கைகளை விறைப்பாக நுழைத்துக்கொண்டபடி 
’’சார்கோட் குளியல்* ஐயா’’ (*சார்கோட் குளியல் என்பது, ழீன் மார்டின் சார்கோட் என்ற பிரெஞ்சு மருத்துவரின் பெயர் கொண்டது; கணுக்கால் வரை சுடுநீரிலும்  உடலின் பிற பகுதிகள் குளிர்நீரிலும் மூழ்கியிருக்கும்படி மேற்கொள்ளும் குளியல் இது)
என்று உரத்த குரலில் பதில் தந்தான் ஆண்ட்ரீ ஹ்ரிசான்ஃபிச்.

             ********>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>********


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....