உதயத்தில் ஓர் அஸ்தமனம்
- மணிப்புரி மூலம் – குரு ஆரிபம் கானப்பிரியா
- ஆங்கிலத்தில் – அகோய்ஜம் தனிதா
- ஆங்கில வழி தமிழாக்கம்; எம் ஏ சுசீலா
எங்கள் பகுதிக்கு வாடகை ஜீப்கள் வரத்தொடங்கிய பிறகு தினமும் கல்லூரி செல்வதற்கு அவற்றையே பயன்படுத்த ஆரம்பித்தேன். எங்கள் வீட்டு வாசலிலிருந்துதான் அவை கிளம்பிக் கொண்டிருந்தன என்பதால் பயணம் மிகவும் வசதியாக ஆகிவிட்டது.
குறிப்பிட்ட அந்த நாளன்று வழக்கம் போல் நான் கல்லூரியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தேன். ஜீப் கிளம்பியபோது கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தாலும், பயணத்தின் முடிவில் நாலுபேர் மட்டுமே எஞ்சியிருந்தோம். என் வீட்டிலிருந்து கால் கிலோ மீட்டர் தொலைவில் ஒரு பெண் வண்டியை விட்டு இறங்கிக் கொண்டாள். அதற்குப் பிறகு இருந்த குறுகிய தூரத்தில் என்னோடு பயணம் செய்த ஒரு இளம்பெண் ஏதோ அவசரத்தில் இருப்பதுபோல் காணப்பட்டாள். அவளது உடைகளை வைத்துப் பார்க்கும்போது மணமாகாதவளாக இருக்கலாம் என்று தோன்றியது.
அது யாராக இருக்கும் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது அதுவும் அந்த வாடகை வண்டிப் பயணத்தின் இறுதிக் கட்டத்தில்…! அந்தப் பெண்ணைப் பார்த்தால் உள்ளூர்க்காரி போலவும் தோன்றவில்லை. அவளை ஒரு முறை எறெடுத்துப் பார்த்தேன்; அவள் சரியான மனநிலையில் இருக்கிறாளா என்பது எனக்கு சந்தேகமாகத்தான் இருந்தது. அங்கிருந்த வேறு இரண்டு சக பயணிகளும் கூட அவளைச் சற்றுத் திகைப்போடு பார்த்துக் கொண்டிருந்ததால் அவர்களும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது புலப்பட்டது.
அவள் களைத்துப் போனது போலத் தெரிந்தாள். மூச்சு வாங்கிக்கொண்டிருந்தது. கவலை அவள் முகத்தில் கருநிழல் போலப் படர்ந்திருந்தது. அவளது முடியிலிருந்து ஈரம் சொட்டிக் கொண்டிருந்தாலும் அவள் அதைக் கழுத்துக்கு மேல் ஒரு கொண்டையாக முடிச்சிட்டு வைத்திருந்தாள். அவளது உடைகளும் ஈரமாகத்தான் இருந்தன. மிகவும் இளமையாகவோ, மிகவும் முதிர்ச்சியாகவோ இல்லாமல் பார்க்க இனிமையாகத் தெரிந்தாள் அவள். பொதுவாக ஒரு பெண்ணுக்கு உரியதாகச் சொல்லப்படும் மென்மையான… நளினமான அழகு அவளிடம் இருந்ததாக சொல்லமுடியாது. மாறாக அவளது வலிமையையும் துணிச்சலையும் அவளிடமிருந்த ஏதோ ஒன்று எடுத்துக்காட்டிக் கொண்டிருந்தது. முன்னால் தெரிகிற சாலையைக் கூடப் பார்க்காமல் ஏதோ ஓர் ஓரத்தில் ஒண்டிக்கொண்டு அன்று அவள் பயணம் செய்து கொண்டிருந்தது, தனக்குள் ஏதோ ஒரு கதையை ஒளித்து வைத்திருந்தது. அந்தக் காரணத்தை அறிந்துகொள்ள வேண்டுமென்று நான் ஆசைப்பட்டாலும் நானாகப் போய் அதை எப்படிக் கேட்பது ?
ஜீப் எங்கள் வீட்டு வாசலுக்கு வந்து சேர்ந்தது. எல்லோரும் கீழே இறங்கினார்கள். ஜீப் டிரைவர், எல்லோரிடமிருந்தும் கட்டண வசூல் செய்ய ஆரம்பித்திருந்தார். நான் திரும்பிப் பார்த்தேன்; அவள் இன்னும் கூட உள்ளேதான் உட்கார்ந்திருந்தாள்.
வீட்டுக் கதவை நான் திறக்கும் போது ‘இபெம்மா!’ (தங்கச்சி) என்று என்னை அழைத்தாள் அவள். நான் நின்றபடி திரும்பிப் பார்த்தேன். ஜீப்பிலிருந்து இறங்கிவந்த அவள்,
‘‘இது உன் வீடா?’’
என்று கேட்டாள்.
‘‘ஆமாம்’’
‘‘சரி, வா, உள்ளே போகலாம்’’
அவள் என்னையும் முந்திக் கொண்டு திறந்த கதவின் வழி உள்ளே சென்றாள். நான் குழப்பம் அடைந்தேன். என்ன நடக்கிறது இங்கே?
‘‘உன்னோடு கூடப் பிறந்தவர்கள் எத்தனைபேர்?’’ என்று நாங்கள் சேர்ந்து நடந்து போகும்போது கேட்டாள் அவள்.
‘‘நான் ஒரே ஒரு குழந்தைதான்’’
‘‘உன் தந்தை என்ன செய்கிறார்’’
‘‘அரசின் தலைமைச் செயலகத்தில் ஒரு பிரிவுக்கு அதிகாரியாக இருக்கிறார்.’’
‘‘இன்னிக்கு ‘இச்சே’ (அக்கா) கொஞ்ச நேரம் உன் வீட்டிலே இருக்கப் போறேன்’’
எனக்குத் தங்கை ஸ்தானத்தைக் கொடுத்து விட்டுத் தமக்கை என்ற இடத்தைத் தான் எடுத்துக் கொண்டிருந்தாள் அவள். நான் எந்த பதிலும் சொல்லவில்லை. இன்னதென்று அறியாத ஒரு பயம் என் நெஞ்சுக்குள் ஊர்ந்தது.
‘அவள் யார்’ என்று எனக்குள் மறுபடியும் கேட்டுக் கொண்டேன்.
நேராக என் அறையை நோக்கிச் சென்றேன். அவளும் என்னை மிக நெருக்கமாகப் பின் தொடர்ந்தாள். கல்லூரிக்குக் கொண்டுபோன பையை மேஜை மீது வைத்தேன் அது என் வீடுதான் என்றாலும் கூட அடுத்து என்ன செய்வது என்பது தெரியாத குழப்பத்தில் இருந்தேன் நான். அதை உணர்ந்து கொண்ட அவள்,
‘‘உனக்கு இதெல்லாம் ஆச்சரியமாத்தான் இருக்கும். எல்லாத்தையும் உன்கிட்டே சொல்லிடறேன் இப்ப’’ என்றபடி தன் கதையை என்னிடம் சுருக்கமாக சொல்லி முடித்தாள். அவள் பேசியதைக் கேட்டதும் ஆரம்பத்தில் என்னுள் இருந்த வியப்பு விலகி விட்டாலும், இன்னும் கூடக் குழப்பத்துடனேயே இருந்தேன் நான்.
‘‘வீட்டிலே ஃபோன் இருக்கா’’
‘‘இருக்கு’’
‘‘எங்கே இருக்கு? நான் ஒரு ‘கால்’ பண்ணிக்கிறேன்’’
‘‘அடுத்த ரூமிலே இருக்கு. போய்ப் பண்ணிக்கங்க ‘இச்சே’. வீட்டிலே வேற யாரும் இல்லை’’
அவள் பக்கத்து அறையில் இருந்தபோது, வெளியே சென்றிருந்த அம்மா திரும்பி வந்தாள்.
‘‘வீட்டுக்கு வந்திட்டியா ‘இபெம்மா’
‘‘ஆமாம் ‘இமா’ (அம்மா)’’
‘‘அப்ப டிரெஸ் மாத்திட்டு சாப்பிட வேண்டியதுதானே ? ஏன் இப்படி மரம் மாதிரி நிலைகுத்திப் போய் நிக்கிறே ?’’
‘இமா’ வழக்கம் போல் – கொஞ்சம் கூட நிறுத்தாமல் என்னைத் திட்டிக் கொண்டே போனாள். என் உதட்டின் மீது ஆள் காட்டி விரலை வைத்து அவளை அமைதியாக இருக்கச் சொல்லி சைகை செய்தேன். அதைப் பார்த்ததும் தன் பேச்சை இடையிலேயே நிறுத்தி விட்டு என்னைக் கலவரத்தோடு பார்த்தாள் அவள். பக்கத்து அறையில் நடக்கும் தொலைபேசி உரையாடலும் அவள் காதில் இப்போது சட்டென்று விழுந்திருக்கவேண்டும். உள்ளே வேகமாகப் பார்த்து விட்டு என் பக்கம் திரும்பி, சத்தம் வரும் திசையில் தலையை அசைத்தபடி ‘‘யார்?’’ என்று கேட்டாள்.
‘‘ஏதோ போராட்டக் குழுவைச் சேர்ந்தவங்களா இருக்கணும்னு தோணுது’’
என்று கிசுகிசுப்பான குரலில் பதிலளித்தேன்.
‘‘என்னது? அவ எப்படி இங்கே…?’’
நான் அவள் கதையை அம்மாவிடம் சுருக்கமாகச் சொன்னேன்.
‘‘அவளுக்கு மலேரியா வியாதி வந்திட்டதாலே சிகிச்சை செஞ்சுக்கிறதுக்காக முகாமை விட்டு வெளியே வந்திருக்கா. பக்கத்திலே இருந்த ஒரு வீட்டிலே அடைக்கலம் தேடிக்கிட்டப்ப அவங்கள்ளே மூணு நாலு பேரை சுத்தி வளைச்சிட்டாங்க. வீட்டோட ஒரு மூலையிலே இருந்த குளத்திலே அவ அப்ப குளிச்சிக்கிட்டிருந்ததாலே அதிருஷ்டவசமா தப்பிச்சிட்டா. நடந்த கலாட்டா சத்தத்தைக் கேட்டு சுத்திமுத்திப் பார்க்கறப்ப வீட்டை போலீஸ் வளைச்சிருந்தாங்க’’
‘‘ஆமாம்! கொஞ்ச நேரத்துக்கு முன்னாலே துப்பாக்கி வெடிக்கிற சத்தம் கேட்டது. அதுவாதான் இருக்கணும். ஆனா, அவ இங்கே எப்படி வந்தா ?’’
‘‘பக்கத்து வீடுகளுக்குள்ளெல்லாம் புகுந்து நுழைஞ்சு ரோடு வரைக்கும் தப்பிச்சு வந்திட்டா. அப்புறம் நான் வந்த ஜீப்பிலே ஏறியிருக்கா… அப்படித்தான் இங்கே வந்து சேர்ந்தா’’
அந்த நேரத்தில் அந்தப் பெண் அறையை விட்டு வெளியே வந்து அவர்களது பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாள்.
‘‘இமா!’ நீங்கதான் ‘இபெம்மா’ வோட அம்மாவா?’’
‘‘ஆமாம்’’
‘‘நான் ரொம்ப நேரம் இங்கே இருக்கமாட்டேன். சந்தடியெல்லாம் கொஞ்சம் அடங்கிப்போனப்புறம் என்னைக் கூட்டிக்கிட்டுப் போக அவங்க ஆளனுப்பி வச்சிடுவாங்க. ஒரு மூணு நாலு மணிநேரம் நான் உங்களைக் கஷ்டப்படுத்த வேண்டியிருக்கும். நீங்க அதைப் பெரிசா எடுத்துக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்.’’
‘‘நாங்க ஏன் அப்படி எடுத்துக்கப்போறோம் ?’’
‘இமா’ அதைப் பெரிதுபடுத்தவில்லை என்றாலும் கூட மிகுந்த கவலையுடனும், பீதியுடனும் அவள் இருப்பதை ‘இச்சே’ அனுமானித்துக் கொண்டாள்.
‘‘ ‘இமா’ தயவு செய்து எதுக்கும் பயப்படாதீங்க. இந்த வீட்டிலே இருக்கிறவங்களை சம்பந்தப்படுத்தற மாதிரி நான் எதுவும் செய்ய மாட்டேன்’’
இன்னும் கூட ஈரம்படிந்த ஆடைகளுடனேயே அவள் இருப்பது எனக்கு வருத்தமாக இருந்தது, ஒரு மேலாடையும், ‘ஃபேனக்’ * [பாரம்பரிய மணிப்புரி ஆடை- பாவாடை போல உடலில் சுற்றிக்கொள்வது] கும் தந்து அவளை மாற்றிக் கொள்ளச் சொன்னேன். என்ன செய்வதென்றோ என்ன பேசுவதென்றோ தெரியாமல் ஸ்தம்பித்துப் போயிருந்தேன் நான். அவள் இங்கே இருப்பது எனக்கு பயமாகவும், பதட்டமாகவும் இருந்தது. அவள் அவ்வப்போது ஜன்னல் வழியே வெளிப்பக்கம் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தாளே தவிர வேறு எதைப் பற்றியும் கவலைப்பட்டு அலட்டிக் கொள்வதைப் போல் தோன்றவில்லை.
நான் அங்கிருந்து வெளியேற வழிதேடிக் கொண்டிருந்தேன்.
‘‘ ‘இச்சே… நீங்க வசதியா உட்கார்ந்திருங்க’’ என்று சொன்னபடி அறையை விட்டு வெளியேற முயன்றேன்.’’
‘‘உனக்கு எதுவும் வேலை இருக்கா?’’
‘‘இல்லையே? அப்படி ஒண்ணும் இல்லை’’
‘‘அப்படீன்னா கொஞ்ச நேரம் என்னோட இங்கே உட்காரு’’
அவளுடைய இயல்பு காரணமா…. அல்லது அப்படிப்பேசுவதற்கு அவள் பழகிப் போயிருந்தாளா… என்று தெரியவில்லை. ஆனால் கண நேரம் அவளுடைய வார்த்தைகள் என்னை மந்திரம் போல் கட்டிப் போட்டுவிட்டன. என்னுடைய அசௌகரியம், இருப்புக்கொள்ளாத பதட்டம் என்று எல்லாமே சட்டென்று மறைந்து போய்விட்டது. இலகுவான மனநிலைக்கு வந்திருந்த நான்
‘‘இச்சே… உங்க வீடு எங்கே இருக்கு?’’ என்று கேட்டேன்.
அவள் அதற்கு உடனே பதிலளிக்கவில்லை மாறாக என்னை ஆழமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘‘நான் யாருன்னு உனக்குத் தெரியணும் அப்படித்தானே?’’
நான் எந்த பதிலும் சொல்லவில்லை.
‘‘நான் சுதந்திரத்துக்காகப் போராடற ஒரு போராளி’’
‘‘இச்சே…. உங்களாலே ஜெயிச்சிட முடியும்னு நினைக்கிறீங்களா?’’
‘‘யுத்தகளத்திலே இருந்து புறங்காட்டி ஓடிப் போறவங்களுக்குத்தான் தோல்வியெல்லாம். எதுக்கும் பணிய மாட்டேன்னு மறுத்து சாவைத் தழுவறவங்கதான் வெற்றி பெற்ற போராளிகள்’’
பேசும்போது அவள் கண்கள் இரத்தம் போலச் சிவந்திருந்தன. மூச்சு வேகமாக இரைத்தது. தன்னை அமைதிப்படுத்திக் கொள்ளப் போராடியபடி
‘‘அதனாலே நான்….’’ என்று தொடர்ந்தாள் அவள்.
அவள் பேச்சை முடிப்பதற்குள் வெளியே ‘ஹாரன்’ ஒலி கேட்டது. உடனே எழுந்து நின்று ஜன்னல் வழியே பார்த்தாள்.
‘‘என்னைத் தேடி அவர்கள் வந்துவிட்டார்கள். நான் இப்போது போயாக வேண்டும். உங்களுக்கு நான் மிகுந்த சிரமம் கொடுத்துவிட்டேன். கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.’’
~oOo~
மறுநாள் காலை சூரிய வழிபாட்டுக்காக நான் வெளியே வந்தபோது அன்றைய செய்தித்தாள் வராந்தாவில் கிடந்தது. அதைக் கடந்துபோக என்னால் முடியவில்லை. வேகவேகமாக அதன் முதல் பக்கத்தில் கண்களை ஓட்டினேன்.
‘புரட்சி இயக்கத்தின் பெண் தலைவியான பேச்சா லிக்லாய் சானு, சி ஆர் பி எப் நடத்திய நேரடி மோதலில் கொல்லப்பட்டார்’ என்று தலைப்புச் செய்தி வெளியாகி இருந்தது. அதனுடன் கூடவே மிகப் பெரிய ஒரு புகைப்படமும் இருந்தது. அதைப் பார்த்ததும் எனக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது.
‘ஐயோ… இவ்வளவு சீக்கிரமாகவா…? எத்தனை அழகு… எவ்வளவு வலிமை… எவ்வளவு துணிச்சல்? எப்படிப்பட்ட ஒரு இழப்பு?’’
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக