துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

29.12.23

’அஞ்சு திங்கள் முஞ்சுதல் பிழைத்தும் ‘ - நூலறிமுகம்

      ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் என்ற பகுதியில் ’அஞ்சு திங்கள் முஞ்சுதல் பிழைத்தும் ‘ நாவல் குறித்து எழுத்தாளர் பாவண்ணன் அவர்களின் அறிமுகக்கட்டுரை

[bookday.in December 25, 2023 இணைய தளம்]


*ஒரு மருத்துவரின் இலட்சியப்பயணம்*
சங்க இலக்கியத்தில் அலர் தூற்றுதல் தொடர்பாக பல பாடல்கள் உள்ளன. திருக்குறளில் அலர் அறிவுறுத்தல் என்ற தலைப்பில் ஓர் அதிகாரமே உள்ளது. அலர் என்னும் சொல்லுக்கு பழித்தல் என்றும் இட்டுக்கட்டிப் பேசுதல் என்றும் வெவ்வேறு பொருள்களுண்டு. அலர் ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலிருக்கும் தனிப்பட்ட நெருக்கத்தைப் பெரிதுபடுத்தி பொதுவில் பேசிப்பேசி, அவ்வுறவை அம்பலப்படுத்தி,
சிறுமைப்படுத்த முயற்சி செய்கிறது. ஆனால், எதார்த்தத்தில் ஒன்றுக்கு எதிராக அல்லது மதிப்பற்றதாக பேசப்படும் சொற்களே அதை மேன்மேலும் கொழுந்துவிட்டு எரியச் செய்துவிடுகிறது. ’ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல் நீராக நீளும் இந்நோய்’ என்பது திருக்குறள்.

காதலர்கள் பழிச்சொல்லைக் கண்டு அஞ்சுவதில்லை என்பது இலக்கியக்கூற்றாக இருந்தாலும் நடைமுறையில் பழிச்சொல்லுக்கு அஞ்சி காதலைக் கைவிடுகிறவர்களும் இருக்கிறார்கள். பழிச்சொல்லின் வழியாக ஆற்றல் பெற்று வெற்றியை நோக்கி நடக்கும் காதலர்களின் எண்ணிக்கைக்கு நிகராக பழிச்சொல்லால் மனம்சுருங்கி காதலையே கைவிட்டுச் செல்பவர்களின் எண்ணிக்கையும் இருக்கிறது. அதுவே
நடைமுறை உண்மை.பழிச்சொல்லால் ஏற்படும் நன்மையும் தீமையும் காதலில்
மட்டுமன்றி பொதுவாழ்விலும் உண்டு.

தம்மைப்பற்றி புனைந்துரைக்கப்படும் பழிச்சொல்லைக் கேட்டு மனம்கசந்து ஒதுங்கிச் செல்கிறவர்களும் உண்டு. அதை கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல் மானுடத்தின்பால் தீராத பற்று கொண்டு தன் இலட்சியப்பாதையில் தொடர்ந்து முன்னேறி வெற்றி கொள்கிறவர்களும் உண்டு.

அந்த உண்மையை மையப்பொருளாகக் கொண்டு ’அஞ்சு திங்களில்முஞ்சுதல் பிழைத்தும்’ என்னும் தலைப்பில் தன் புதிய நாவலை எழுதியிருக்கிறார் எம்.ஏ.சுசிலா. கடந்த சில ஆண்டுகளாக, தஸ்தாவெஸ்கியின் பிரதானமான படைப்புகளை தொடர்ச்சியாக தமிழில் மொழிபெயர்த்தளித்த எம்.ஏ.சுசிலா இந்த நாவல் வழியாக மீண்டும் தன் சொந்தப் படைப்புலகத்துக்குத் திரும்பியிருக்கிறார்.

நாவலின் மையப்பாத்திரம் காயத்ரி. மிகப்பெரிய மகப்பேறு மருத்துவர். மருத்துவச்சேவை புரிவதிலும் மருத்துவ ஆராய்ச்சியிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவருடைய அகத்தையும் புறத்தையும் அடைந்ததையும் இழந்ததையும் ஒருசேரக் காட்சிப்படுத்தியிருக்கிறார் சுசிலா.

சில உடற்குறைகளின் காரணமாக நேரிடையான பிள்ளைப்பேறுக்கு வழியில்லாத இணையரின் மனக்குறையைத் தீர்க்கும் விதமாக மருத்துவ அறிவியல் உலகம் கடந்த நூற்றாண்டின் எழுபதுகளில் பரிசோதனைக்குழாய் வழியாக கருத்தரிக்கவைக்கும் முறையை அறிமுகப்படுத்தியது. எழுபதுகளின் இறுதியிலேயே அது இந்தியாவிலும்

அறிமுகமானது. கணவன், மனைவி இருவருடைய உயிரணுக்களையும் தனித்தனியாகச் சேகரித்து ஒரு பரிசோதனைக்குழாயில் இணைத்து ஆழ் உறைநிலையில் குறிப்பிட்ட காலம் வைத்திருப்பதன் வழியாக உருவாகும் கருவை தாயின் கருப்பைக்குள் மீண்டும் செலுத்தி பாதுகாப்பதன் மூலம் மகப்பேறு அடைவதற்கு அம்முறை வழிவகுத்தது. அதன் விளைவாக ஏராளமானோர் பயனடைந்தனர்.

மகப்பேறு மருத்துவம் படித்து மருத்துவ உலகில் நற்பெயரடைந்து, மகப்பேறு சேவைக்காக மட்டுமேயென ஒரு மருத்துவமனையைத் திறந்து நடத்தி வரும் காயத்ரி என்னும் மருத்துவரின் இறந்தகால வாழ்க்கையையும் நிகழ்கால வாழ்க்கையையும் சுசிலாவின் புதிய நாவல் மாறிமாறி காட்சிப்படுத்தியிருக்கிறது. எங்கோ வட இந்தியாவில் தொடங்கிய பரிசோதனைக்குழாய் முறையை தமிழ்ச்சூழலில்
அறிமுகப்படுத்தி, தாய்மையடையத் தவிக்கும் பெண்களுக்கு உற்ற துணையாக இருக்கவேண்டுமென கனவு காண்கிறார் காயத்ரி. தன் மருத்துவமனையையே ஒரு சோதனைக்களமாக மாற்றி அதில் வெற்றி காண விழைகிறார்.

பல ஆண்டுகள் காத்திருந்து, வெவ்வேறு விதமான சோதனைகளால் மனத்துயரத்துக்கு ஆளாகி வேதனையுடன் காயத்ரியை நாடிவருகிறார்கள் ஓர் இணையர். பரிசோதனைக்குழாயில் உருவான கருவை அவருடைய கருப்பை ஏற்றுக்கொண்டுவிட்டது என்று தெரிந்த நாள்முதலாக அவரை மருத்துவமனையிலேயே பேறுகாலம் வரைக்கும் படுக்கையில் வைத்திருந்து ஒரு பெண்குழந்தையைப் பெற்றெடுக்க உதவி செய்கிறார்.

ஆறாத்துயரை ஆற்றி தம் குலக்கொடி தழைத்து வளர உதிவிய
மருத்துவரின் பெயரையே தன் குழந்தைக்கும் சூட்டி மகிழ்கின்றனர் அந்தப்
பெற்றோர்.

தம் சேவையால் பிறருடைய குடும்பத்தின் துயரத்தை ஆற்றும் காயத்ரி தன் சொந்தக் குடும்பச் செயல்களுக்கு போதுமான நேரத்தை ஒதுக்கவில்லை என்று குற்றம் சுமத்துகிறான் அவள் கணவன். அதையே காரணமாக முன்வைத்து, அவன் அவளிடமிருந்தும் குழந்தையிடமிருந்தும் பிரிந்துபோகிறான். தன் தாயின் உதவியோடு குழந்தையை தனித்து வளர்க்கும் சூழலுக்குத் தள்ளப்படுகிறாள் அவள். அப்போதும் கலங்காமல் மருத்துவத்துகாகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டதுபோல செயலாற்றுகிறாள் அவள்.

3. மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மகள் கவர்னர் கையால் விருது பெறும் முக்கியமான நிகழ்ச்சியில் தன் தாய் கலந்துகொள்ளவில்லை என்னும் வருத்தத்தால் மனம் கசந்துபோன மகளும் ஒருநாள் விலகிச் செல்கிறாள். அடுத்தடுத்து துயரங்கள் அவள் வாழ்வில் வந்துகொண்டே இருக்கின்றன. மருத்துவச் சேவையிலும் ஆராய்ச்சியிலும் உள்ள அவளுடைய ஈடுபாடு ஒன்றே அவளுக்கு துயரக்கடலைக் கடக்க உதவும் மரக்கலமாக அமைகிறது. அதுவும் அவளுக்கு நீண்ட காலம்
நீடிக்கவில்லை.

நல்லெண்ணத்துடன் அவள் ஆற்றிவரும் சேவையை பணமீட்டும் ஆசையால் செய்வதாக ஊரார் அலர் எழுப்புகின்றனர். அந்தச் செய்தி அவள் காதுவரை எப்படியோ வந்தடைகிறது. தன் மனப்போக்கை இவர்களுக்கெல்லாம் எப்படிப் புரியவைப்பது என தெரியாமல் ஒருசில கணங்கள் அவள் தடுமாறினாலும் உறுதி குன்றாது தன் பாதையில் தொடர்ந்து செல்கிறாள்.

ஆனால் ஒருநாள் அவள் பெற்ற மகளே அந்தப் பழிச்சொல்லைச் சொல்லித் தூற்றுவதை காதுகொடுத்துக் கேட்கும் கரிய தருணமொன்று வந்தமைகிறது. அந்தப் பழிச்சொல்லை அவளால் தாங்கிக்கொள்ள இயலவில்லை.

உலகம் நம்பாவிட்டாலும் குடும்பம் நம்பும் என இருந்த அவள் மனநிலை சுக்குநூறாக உடைந்துவிடுகிறது. தான் அவ்விதமானவள் அல்ல என்பதை இந்த உலகத்துக்கோ அல்லது அவளுக்கோ எப்படி சொல்லி, எப்படி புரியவைப்பது என தெரியாமல் தடுமாறுகிறாள். காயத்ரி தன்னைப்பற்றி எங்கெங்கும் ஒலிக்கும் பழிச்சொற்களை
கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல் தன்னால் தாய்மையடைந்து மனநிறைவோடு வீடு திரும்பும் தாய்மார்களின் முகங்களை மட்டும் பார்த்து நிறைவோடு தன் இலட்சியப்பாதையில் தொடர்ந்து சென்றிருக்கலாம். அதற்கு மாறாக, காய்த்ரி மருத்துவத்தால் தான் ஈட்டும் பொருள் தனக்கு ஒரு பொருட்டே அல்ல என்பதை அமைதியாக தன் மகளுக்கும் இந்த உலகத்துக்கும் நிரூபிக்கும் வகையில்
மருத்துவமனையையே மூடிவிட்டு திருச்சி நகரத்தைவிட்டே
வெளியேறிவிடுகிறாள்.

அவளைப்போலவே அந்த இலட்சியப்பாதையில் இயங்கும் வேறொரு இளம் பெண்மருத்துவரோடு இணைந்து கொள்கிறாள். தென்காசிக்கு அருகில் பண்பொழில் என்னும் சிற்றூரில் மருத்துவ ஆராய்ச்சிக்காகவும் சேவைக்காகவும் அந்த இளம்மருத்துவர் தொடங்கும் ஆசிரமத்தில் அவளும் இணைந்துகொள்கிறாள். ஆறாத ரணமாக அந்தப் பழிச்சொல் அவளை வாட்டியபடியே இருக்கிறது. தன் வழியில் எதிர்காலத்தில் தன் மகளும் மருத்துவம் படித்து இணைந்துகொள்வாள் என நினைத்திருந்த அவள் கனவு கலைந்துவிடுகிறது. ஏதோ ஒரு பட்டப்படிப்பைப் படிக்க,

4. அவள் திருச்சியிலிருந்து கண்ணுக்குத் தெரியாத பெங்களூருக்குச் சென்றுவிடுகிறாள். அது ஒரு காலகட்டம். கால் நூற்றாண்டுக்குப் பிறகு இன்னொரு
காலகட்டம் வருகிறது. பெற்ற அம்மாவைத் தூற்றினோம் என எவ்விதமான குற்ற உணர்வுமின்றி மேற்படிப்புக்கு அமெரிக்காவுக்குச் சென்று படித்து முடித்து பட்டம் பெற்று அங்கேயே தனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறாள் காயத்ரியின் மகள். அவளுக்கு ஒரு மகள் பிறந்து அவளும் பெரியவளாகி அவளும் ஏதோ ஒரு துறையில் வலம்வந்தபடி இருக்கிறாள். ஒருவரும் மருத்துவத்தின் திசையில்
திரும்பவில்லை. அக்குடும்பத்தில் அது காயத்ரியிலிருந்து தொடங்கி
காயத்ரியிலேயே முடிவடைந்துவிடுகிறது.

அந்த மனிதக்கணக்கை விதி வேறொரு கணக்காக மாற்றி எழுதுவதுதான் காயத்ரியின் உலகில் நிகழும் திருப்புமுனை. ஊழ் வேறொரு திசையில் நுழைந்து அவளுடைய கனவை சிந்தாமல் சிதறாமல்
ஏந்திக்கொள்கிறது.

நீண்ட காலமாக பூட்டப்பட்டு கிடந்த அந்த மருத்துவமனைக் கட்டடத்தை விற்பனை செய்துவிட திட்டமிடுகிறாள் அமெரிக்காவில் இருக்கும் மருத்துவரின் மகள். அந்த விற்பனை வேலையை முடிக்கவும் தென்காசியில் ஆய்வுத்துறையிலேயே தன்னை மூழ்கடித்துக்கொண்ட பாட்டியைச் சந்திக்கவும் நினைத்து திருச்சிக்கு வருகிறாள் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த பேத்தி. அதே நேரத்தில் மருத்துவர் காயத்ரியின்
முயற்சியால் மகப்பேறடைந்த திருச்சி தம்பதியினரின் மகளான சின்ன
காயத்ரியும் அங்கே வருகிறாள். அவள் மகப்பேறு மருத்துவம் படித்தவள்.

பெரிய காயத்ரியைப்போலவே மருத்துவச்சேவையாற்ற வேண்டும் என ஆசை கொண்டிருக்கிறாள் அவள். வெகுகாலமாக பூட்டியிருக்கும் பெரிய காயத்ரியின் மருத்துவமனைக் கட்டிடத்தை வாங்கி, அவர் ஆற்றி வந்த சேவையை மீண்டும் தொடங்கி ஆற்றவேண்டும் என்பது அவள் எண்ணமாக இருக்கிறது. தன் பாட்டியின் உள்ளார்ந்த அர்ப்பணிப்புணர்வின் விளைவாக உருவாகிப் பிறந்து மருத்துவராக வளர்ந்து நிற்கும் சின்னகாயத்ரியின் ஆர்வத்தைப் புரிந்துகொள்ளும் பேத்தி தாரா அந்தக் கட்டிடத்தை அவளுக்கே அளித்துவிடுகிறாள். காயத்ரியின் கொடிவழியாக
அல்லாமல், வேறொரு வழியாக மக்களுக்கான மருத்துவம் தொடர்கிறது.

காயத்ரி என்னும் பெரிய மருத்துவர் இவ்வாழ்வில் பெற்றதற்கு இணையாக தன் பாதையில் இழந்ததும் அதிகம். தன் பணி பணத்தாசையால் அல்ல என்பதை உணர்த்தும் வேகத்தில் மருத்துவமனையை மூடி மருத்துவச்சேவையிலிருந்து வெளியேறினாளே தவிர, அவள் மருத்துவ ஆராய்ச்சியிலேயே முழுமூச்சாக இறங்கி தன் இலட்சியத்தை அடைந்தாள்.

5. அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும் என்று இந்த நாவலுக்குத்
தலைப்பிட்டிருக்கிறார் சுசிலா. திருவாசகத்தின் போற்றித் திரு அகவலில்
இடம்பெற்றிருக்கும் வரி இது. மானுடப்பிறப்பு என்பது எத்தனை அரிதாக வாய்க்கக்கூடியது என்பதையே இவ்வரி உணர்த்துகிறது. கருவியல் சார்ந்த அறிவியல் கருத்துகளையே இந்த அகவல் முன்வைக்கிறது.

தாயின் வயிற்றில் வளரும் கருவுக்கு ஐந்தாம் மாதம் என்பது மிகமுக்கியமான மாதம். அம்மாதத்தில் உருவாகும் உணவு ஒவ்வாமையின் காரணமாக சரியான முறையில் உணவை உட்கொள்ளமுடியாத சூழலுக்கு ஆட்படுகிறாள் தாய். உண்ணாமையின் காரணமாக அவள் உடல் மெலிகிறது.

அவள் மெலிந்தால், கருவும் மெலியும். போதிய வளர்ச்சி இல்லாமல் குன்றும். சிற்சில தருணங்களில் அழிந்துவிடவும் வாய்ப்புண்டு. ஐந்தாவது மாதம் என்பது ஒரு திருப்புமுனையான காலகட்டம். ஒரு குழந்தை உயிர்த்திருப்பதைத் தீர்மானிக்கும் தருணம் அது.

மகப்பேறு சார்ந்த ஒரு வரி என்றபோதும், அவ்வரியின் பொருளை இலட்சியத்தை அடையும் பெரும்பயணத்துக்கும் பொருத்திப் பார்க்கமுடியும். மசக்கை போல இடைவழியில் இலட்சியத்தைக் கைவிட வைக்கும் தருணங்களே இவ்வாழ்வில் அதிகம். அதையெல்லாம் கடந்து இலட்சியத்தை அடைபவனே வெற்றியாளன்.

மகப்பேறு போல அதுவும் ஒரு பேறு. இந்த நாவலின் நாயகியான காயத்ரி அடைந்ததும் அத்தகு ஒரு பேறு.

நூலின் பெயர்: அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும் {நாவல்}
ஆசிரியர் : எம்.ஏ.சுசிலா. ஹெர்
வெளியீடு : ஸ்டோரீஸ் வெளியீடு, 15, மகாலட்சுமி அப்பார்ட்மெண்ட்ஸ், 1, ராக்கியப்பா
தெரு, சென்னை – 600 004.
விலை:ரூ.160

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....