பாரதத்தின் சிற்பி மேதகு அப்துல் கலாம் என்றால் எங்கள் பாத்திமாவின் சிற்பி இவர்...
மதுரை பாத்திமாக் கல்லூரியின் முதல் முதல்வராய்ப் பெண்கல்விக்குப் பெரும் பணியாற்றிய பேராசிரியை செல்வி சகுந்தலா அவர்கள் 29/7/15 காலையில் தான் மிகவும் நேசித்த மதுரை மண்ணிலேயே இயற்கை எய்தி விட்டார்கள். அவர் ஏற்றிய தீபங்களாய் உலகெங்கும் பரவிக்கிடக்கும் மாணவச்செல்வங்களோடும் சக ஆசிரியைகளோடும் இத் துயரச்செய்தியைக்கண்ணீர் மல்கப்பகிர்ந்தபடி அவர்களுக்கு என் நெகிழ்வான அஞ்சலியைக் காணிக்கையாக்குகிறேன்....
பெண்கல்வி தலைதூக்கித் தழைக்கத் தொடங்கியிருந்த இந்திய விடுதலையை அடுத்த காலகட்டம். பெண்கள் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் செல்வது இயல்பான நடப்பாக மாறிப்போகத் தொடங்கியிருந்தாலும் சுற்றிலும் கிராமங்கள் மொய்த்துக்கிடந்த மதுரையைப்போன்ற ஓரிடத்தில் வாழ்ந்த பெண்கள் பலருக்கும் உயர்கல்வி என்பது ஓர் எட்டாக்கனியாகவே இருந்து கொண்டிருந்தது. அந்தக்காலகட்டத்தில் மிஷினரிகளான வெளிநாட்டுப்பெண் துறவிகளின் பணி இத் துறையில் மகத்தான பங்களிப்பைச்செய்தது. குறிப்பாகப் புனித வளனாரின் லியான்ஸ் பிரிவைச்சேர்ந்த அன்னை ரோஸ் அவர்களும் அவருக்குத் துணை நின்ற அயல்நாட்டு, மற்றும் இந்தியப்பெண் கத்தோலிக்கத் துறவிகளும் மதுரையிலும் மதுரை சார்ந்த பகுதிகளிலும் பெண்கல்வியைப் பரவலாக்குவதில் தங்கள் கல்வி நிறுவனங்கள் வாயிலாக அரும்பணி ஆற்றியபடி இருந்தனர், மதுரை வீதிகளில் கால்நடையாக…..வீடு வீடாகச்சென்று பெண்களைக் கல்வி பயில அனுப்புமாறு தூண்டுதல் தந்து கொண்டிருந்தார் அன்னை ரோஸ்.
நான் பணியாற்றியதுதான் பாத்திமாவிலேயே தவிர நான் அந்தக்கல்லூரி மாணவி இல்லை.என்றாலும் என்னை நானாகச்செதுக்கி வடிவமைத்து ஒரு முழுமை பெற்ற தன்னுணர்வு கொண்ட பெண்ணாக ஆக்கியது பாத்திமா மண்ணும் அதன் முதல்வர் பேராசிரியை செல்வி சகுந்தலா அவர்களும் மட்டுமே என்பதை பாரதி போல நான் நாற்பதாயிரம் கோயிலில் சொல்லுவேன்...
1970இல் இளம் தமிழ் விரிவுரையாளராக நான் பாத்திமாக் கல்லூரியில் அடியெடுத்து வைத்தேன் . அப்போது கிராமமாகவோ நகரமாகவோ இல்லாத சிற்றூராக மட்டுமே இருந்த காரைக்குடியில் முதுகலைத் தமிழ்க்கல்வி முடித்து ஆசிரியப்பணியில் சேர்ந்திருந்த என்னை....பள்ளிக்கல்வியைத் தமிழ்வழிக்கல்வியாகக் கற்றிருந்த என்னை மதுரையே ஒரு பேரூராக மிரட்டிக்கொண்டிருந்தது.
முதுகலைத் தமிழில் மிக நல்ல மதிப்பெண்ணோடு பல்கலைக்கழக மூன்றாமிடத்தைப் பெற்றவளாக இருந்தாலும் உலக அநுபவம்,வாழ்க்கைக்கல்வி ஆகியவற்றை அதிகம் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாத முதிர்ச்சியற்ற 21வயதுப்பெண்ணாக ....மனதளவில் அதை விடவும் இளையவளாக....பலரும் கலந்து பழகும் இடத்திலிருந்து கூச்சம் கொண்டு விலகிச் செல்பவளாக மட்டுமே அப்போது நான் இருந்தேன்...
தமிழ்வழிக்கல்வி பயின்றாலும் என் அம்மா தலைமை ஆசிரியை என்பதால் வீட்டில் என் ஆங்கிலப்பின்னணி வலுவாகவே இருந்தது,ஆனாலும் கூடப் பேச்சு மொழியாக ஆங்கிலத்தைக் கையாளுவதில் எனக்கிருந்த இனம் புரியாத கூச்சமே என்னைப் பிறரிடமிருந்து ஒதுங்கிப்போகச் செய்து கொண்டிருந்தது.
ஆசிரியப்பணியில் அளவு கடந்த ஆர்வம்...தமிழ் இலக்கியத்தின் மீது கொண்ட கரை காணாக்காதல்...அதை மாணவரிடையே முழு வீச்சோடு கொண்டு சேர்க்கும் துடிப்பு,ஏதோ கொஞ்சம் சொற்பொழிவாற்றும் சக்தி இவை மட்டுமே அப்போதைய என் தகுதிகள்; பாத்திமாவின் படிகளில் கால்வைக்கும் வரை அவை தவிர வேறு எந்த ஆளுமைத் திறனும் அற்றவளாக மட்டுமே இருந்த என்னை உருவாக்கிய பேராசிரியை முதல்வர் சகுந்தலா அவர்கள்..
அப்போது புகுமுக வகுப்பு எனப்படும் பி யூ சி மாணவர்கள் பலரும் தமிழ்வழி படித்தவர்களாக இருப்பார்கள் என்பதால் ஆங்கிலத்துக்குப்பாலம் போடுவது போல முதல் ஒரு மாதம் அடிப்படை ஆங்கிலம்,ஆங்கில இலக்கணம் ஆகியவற்றை ஆங்கில ஆசிரியர்கள் மட்டுமன்றி வேறுதுறை ஆசிரியர்களும் கூட நடத்துவதுண்டு[BRIDGE COURSE] ;அப்படி ஒரு வகுப்பை எடுக்க என்னையும் என் தமிழ்த்துறைத் தோழி இன்னொருவரையும் பணித்தார் முதல்வர்.என் தோழியாவது சென்னையில் பயின்றவர்,ஆங்கிலத்தில் சரளமாகப்பேசுபவர்..ஆங்கிலம் பேசவே அஞ்சிக்கொண்டிருந்த நான் எப்படி...? அழுத கண்ணீரோடு முதல்வர் முன் நின்ற என்னை’எனக்குத் தெரியாது,உனக்கு இந்த வேலை தரப்பட்டிருக்கிறது நீதான் செய்தாக வேண்டும்’என்ற கட்டளை பிறந்தது. அதை முனைந்து செய்து சிறப்பாகவும் முடித்ததும் என் மீதே எனக்கு நம்பிக்கை பிறக்க நான் புதிதாய்ப்பிறந்தேன்....
இது பதச்சோறான ஒரு உதாரணம்மட்டுமே..
நீச்சல் கற்க அஞ்சுபவனை நீர்நிலைக்குள் தூக்கிப்போடுவது போல எந்த வேலைக்கெல்லாம் அச்சம் வருமோ அந்தப்பணியில் முதல் ஆளாய்த் தூக்கிப்போட்டுப் பழக்கி விடுவது அவருக்கே கை வந்த அருங்கலை.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் மாணவர்களுக்குக் கொடுக்க மதுரைப் பழ மண்டியில் போய் மொத்தமாய் ஆப்பிள் வாங்குவது முதல் ஆசிரியர்களுக்கான உணவகத்துக்கு அன்றாட மெனு தந்து நிர்வகிப்பது வரை.-.
விடுதியில் இருக்கும்போது விடுமுறை நாட்களில் ஊருக்குக்கூடச்செல்லாமல் சித்திர குப்தன் பதிவேடு என்று எங்களால் செல்லமாய்ச்சொல்லப்படும் பதிவேட்டில் மொத்தக்கல்லூரி மாணவிகளின் மதிப்பெண்களையும் பதிந்து வைப்பது முதல் தேசிய சேவைத் திட்டம் , வயது வந்தோர் கல்வித் திட்டம் ஆகிய பலவற்றின் பொறுப்பாளராக நிர்வாகம் செய்வது வரை ஆசிரியர்களான எங்களுக்கு முதல்வர் அளிக்காத பயிற்சி இல்லை.
கல்லூரி வாயிலில் காரை நிறுத்திக்கொண்டு என்னையும் இன்னொரு பேராசிரியையும் அழைப்பார்;கார் நகர்ந்த பின்பே ஏதோ ஒரு கூட்டத்தில் பேச அழைத்துச்செல்கிறார் என்பது தெரியும்..தலைப்பும் கூட அப்போதுதான் தரப்படும்..
இது எப்படி சாத்தியம் என்றால்....உன்னால் முடியும் என்பார்..அது பலிதமாகவும் செய்யும்...அதுதான் அவர்...அதுதான் பேராசிரியை முதல்வர் சகுந்தலா !!
என்னிடம் ஏட்டுச்சுரைக்காயாய் மட்டுமே இருந்த கல்வி பட்டை தீட்டப்பட்டு என்னைப் பற்றியும் என்னுள் உறைந்து கிடக்கும் வேறு பல திறன்களைப்பற்றியும் நானே உள்ளபடி அறியவும் என் ஆளுமைமுழுமை பெறவும் உதவியவராய் என்னை இன்றைய நானாகச் செதுக்கிய சிற்பி பேராசிரியை முதல்வர் சகுந்தலா !!
நான் கதை எழுதத் தொடங்கி என் முதல் சிறுகதை 1979இல் ’அமரர் கல்கி நினைவுச்சிறுகதைப்போட்டி’யில் முதல் பரிசு பெற்ற காலத்தில் என்னைக்கொண்டாடி வரவேற்றது தொடங்கி என் அண்மைய நாவலான ‘யாதுமாகி’வரை என் முதன்மையான வாசகராக இருந்தவர் என் நேசத்துக்குரிய பேராசிரியை முதல்வர் சகுந்தலா !!
’80களில் பல தமிழ் வார இதழ்களிலும் என் சிறுகதைகள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்தபோது அவை பற்றி நான் அறியும் முன்பேஅவர் படித்து முடித்து விட்டு அன்றைய காலையை அது பற்றிய அவரது விமரிசனங்களோடு தொடங்கிய இனியநாட்கள் பல என்னுள்சேமிக்கப்பட்டிருக்கின்றன. சென்ற மாதம் அவர் இறுதிப்படுக்கையில் இருந்தபோது மதுரையில் அவரைக்காணச் சென்றஎன்னிடம் ‘சுசீலா’என்று கூட பெயர் சொல்லி அழைக்காது’யாதுமாகி’என என் நாவல் பெயர்சொல்லி நெகிழ்ந்தபடி என்னை ஆரத் தழுவிய கரங்கள் அவருடையவை.
அறிவியல் பேராசிரியராக அவர் இருந்தாலும் தமிழ்மீது அவர் கொண்டிருந்த பற்று அளப்பரியது.எங்கள் கல்லூரி முத்தமிழ் விழாக்களில் அவர் காட்டிய முனைப்பும், கி வா ஜ தொடங்கி குமரி அனந்தன்,கண்ணதாசன், ஜெயகாந்தன்,லா ச ரா எனப் புகழ் பெற்ற தமிழ் ஆளுமைகளைக்கல்லூரிக்கு வருவித்து அவர்களுக்கு உரிய மரியாதை வழங்குவதில் காட்டிய முனைப்பும் மாணவர்களின் பல்துறை வளர்ச்சியில் அவர் காட்டிய கரிசனத்தின் அடையாளங்கள்.
மாணவர் நலனும் உயர்வும் மட்டுமே அவரது உயிர்மூச்சாய் அவரின் சுவாசமாய் இருந்து வந்தது கண்டு நான் வியந்து பணிந்திருக்கிறேன்....கல்விக்கூடத்தில் கழிக்கும் நாட்களில் மாணவியர் உச்ச பட்ச அறிவைப் பெற்று விட வேண்டுமென்ற துடிப்போடு ஆசிரியர்களையும் அது நோக்கி அவர் உந்தியபடி இருந்தபோது கடுமையின் தெறிப்புக்கள் அதில் இருந்திருக்கலாம்....ஆனால் தான் ஊட்டும் உணவின் முழுப்பயனும் தன் மகவை அடைந்தேஆக வேண்டும் என்ற தாய்மையின் ஆவேசம் அது என்பதைப்புரிந்து கொண்ட ஆசிரியர்களுக்கு அவர் மீது புகார் ஏதும் இருக்க முடியாது.
ஆயிரக்கணக்கில் இருக்கும் மாணவிகளின் பெயரை மட்டுமல்லாமல் அவர்களது குடும்பத்தினரையும் நினைவு கூர்ந்து உரையாடும் அவரது ஆளுமைத் திறன் அந்தப்பொறுப்பில் இருப்போர் பயின்றாக வேண்டிய ஒன்று.[தலைமை ஆசிரியையாய் இருந்த என் தாய்க்கும் இதே பண்பு இருந்திருக்கிறது..அதில் மட்டும் நான் என்னவோ சற்று ஞாபக மறதிப் பேர்வழிதான்]
கல்லூரி வளாகத்துக்குள்ளேயே ஒரு அறையில் தங்கியிருந்த அவர் காலை 7 மணிக்கெல்லாம் கல்லூரி அலுவலகம் வந்துசேர்ந்து விடுவார்...இரவு 7 மணி..சில நேரங்களில் 9 மணி வரை அவரது இருப்பு அங்கே நீளுவதுண்டு.சோர்வோ களைப்போ சற்றும் இன்றி ....நறுவிசாக அணிந்து வந்த உடையிலோ,கூந்தல் முடிப்பிலோ எந்த ஒரு சிறு நலுங்கலும் இல்லாமல் புதுமலர் போல அவர் பொலிவதைக் காணும்போது மனதுக்குப்பிடித்ததைஉற்சாகமாக மனமொன்றிச்செய்யும் தவமுனிவராக அவர் தீட்சண்யத்தோடு துலங்குவதாய்த் தோன்றும்.
கண்டிப்பாக இருக்கும் ஆசிரியர்களைப்பொதுவாக இன்றைய மாணவ உலகம் விரும்புவதில்லை; ஆனால் எந்த அளவு கண்டிப்பாக இருந்தாரோ அதற்குப்பல மடங்கு மேலாகத் தன் மாணவச்செல்வங்களால் நேசிக்கப்படுபவராகவும் இருந்திருக்கிறார் முதல்வர் சகுந்தலா .இது அவரது அணுகு முறையை உள்ளபடி விளங்கிக்கொண்டதால் அவரது மாணவியர் அவருக்களித்த வரம்.
எம் ஃபில் பி எச்டி என்று உயராய்வு மேற்கொள்ள ஆசிரியர்களுக்கு உந்துசக்தியாக விளங்கினாரே தவிர தனக்கென வாழாப்பெருந்தகையான அவர் எம் எஸ்சிக்குப்பிறகு தன்னை மேம்படுத்திக்கொள்ள ஒருபோதும் நினைக்கவே இல்லை....அவரது மூச்சும் முனைப்பும் பாத்திமாவை மேம்படுத்துவது மட்டுமே....
சகுந்தலா அவர்களின் கலை அழகியல் ரசனைகளைச் சொல்லிக்கொண்டே போக முடியும்.கல்லூரி விழாக்களில் மாவிலைத் தோரணம் கட்டுவது முதல் மாக்கோலம் போடுவது வரை அவரது பார்வை எல்லைக்குள்ளேதான் நடக்கும்; ...இனிய உணவு...இனிய இசை நல்ல கலைகள் இவற்றை ரசித்துத் தோயும் அவர் அந்த வேளைகளில் சிறு பிள்ளையாகி விடுவதும் உண்டு.
இன்னும் சொல்லநினைப்பது ஏராளம்....
சொற்கள் மயங்கித் தயங்கி நிற்கின்றன...
நான் அறியாத பல நுணுக்கமான பல செய்திகள் அவரது நேரடியான மாணவியருக்கு இன்னும் கூடத் தெரிந்திருக்கக்கூடும்...
ஆனாலும் நானும் கூட அவரதுமாணவியாக என்னை எப்போதும் கருதிக்கொள்பவள் மட்டுமே...
பாத்திமாவில் பணி நிறைவுக்குப்பின் திருச்சி காவேரி கலைக்கல்லூரியில் சில ஆண்டுகள் முதல்வராய்ப்பணியாற்றிப்பிறகு சமூகப்பணிகளில் மட்டுமே தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் அவர்.
எங்கள் கல்லூரிப்பொன்விழாவின்போது எடுத்த ஒரு குறும்படத்துக்காக அவரை நேர்காணச்சென்றபோது அவரது வாழ்க்கையையே ’சாகுந்தலம்’என்ற தலைப்பில் குறும்படமாக எடுக்க வேண்டும் என்ற என் ஆசையை அவரிடம் வெளியிட்டேன்;அதை நிறைவேற்றுவதற்கு முன் காலம் அவரைக்கவர்ந்து சென்று விட்டது.
பாரதத்தின் சிற்பி மேதகு அப்துல் கலாம் என்றால் எங்கள் பாத்திமாவின் சிற்பி இவர்...இருவருமே இளைஞர் நலனை உயிரெனக் கொண்ட தன்னலம் துறந்த பெருந்தகையாளர்கள்.......இருவரது இறப்பும் ஒருசேரத் தாக்க உறைந்து நிற்கிறேன்...
காவியங்களுக்கு என்றும் எப்போதும் அழிவில்லை,
எங்கள் பாத்திமாவின் சாகுந்தலமும் அவர் ஏற்றி வைத்த சுடர்களாய் ஒளிரும் மாணவச்செல்வங்கள் வழி தொடர்ந்து அவரது பணியை முன்னெடுத்துச்சென்று பாத்திமாவின் புகழைப்பாரெங்கும் கொண்டு செல்லும்... .
எங்கள் இனிய சாகுந்தலம் இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறட்டும்.
என் கை கூப்புக்களும் அஞ்சலியும்
மதுரை பாத்திமாக் கல்லூரியின் முதல் முதல்வராய்ப் பெண்கல்விக்குப் பெரும் பணியாற்றிய பேராசிரியை செல்வி சகுந்தலா அவர்கள் 29/7/15 காலையில் தான் மிகவும் நேசித்த மதுரை மண்ணிலேயே இயற்கை எய்தி விட்டார்கள். அவர் ஏற்றிய தீபங்களாய் உலகெங்கும் பரவிக்கிடக்கும் மாணவச்செல்வங்களோடும் சக ஆசிரியைகளோடும் இத் துயரச்செய்தியைக்கண்ணீர் மல்கப்பகிர்ந்தபடி அவர்களுக்கு என் நெகிழ்வான அஞ்சலியைக் காணிக்கையாக்குகிறேன்....
பேராசிரியை செல்வி சகுந்தலா |
பெண்கல்வி தலைதூக்கித் தழைக்கத் தொடங்கியிருந்த இந்திய விடுதலையை அடுத்த காலகட்டம். பெண்கள் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் செல்வது இயல்பான நடப்பாக மாறிப்போகத் தொடங்கியிருந்தாலும் சுற்றிலும் கிராமங்கள் மொய்த்துக்கிடந்த மதுரையைப்போன்ற ஓரிடத்தில் வாழ்ந்த பெண்கள் பலருக்கும் உயர்கல்வி என்பது ஓர் எட்டாக்கனியாகவே இருந்து கொண்டிருந்தது. அந்தக்காலகட்டத்தில் மிஷினரிகளான வெளிநாட்டுப்பெண் துறவிகளின் பணி இத் துறையில் மகத்தான பங்களிப்பைச்செய்தது. குறிப்பாகப் புனித வளனாரின் லியான்ஸ் பிரிவைச்சேர்ந்த அன்னை ரோஸ் அவர்களும் அவருக்குத் துணை நின்ற அயல்நாட்டு, மற்றும் இந்தியப்பெண் கத்தோலிக்கத் துறவிகளும் மதுரையிலும் மதுரை சார்ந்த பகுதிகளிலும் பெண்கல்வியைப் பரவலாக்குவதில் தங்கள் கல்வி நிறுவனங்கள் வாயிலாக அரும்பணி ஆற்றியபடி இருந்தனர், மதுரை வீதிகளில் கால்நடையாக…..வீடு வீடாகச்சென்று பெண்களைக் கல்வி பயில அனுப்புமாறு தூண்டுதல் தந்து கொண்டிருந்தார் அன்னை ரோஸ்.
அன்னை ரோஸ் |
அந்த முயற்சியின் முதல் படியாக உருவான புனித வளனார் உயர்நிலைப்பள்ளியை மேலும் முன்னெடுத்துச்செல்லும் தொலை நோக்குடன் அவர் கண்ட கனவால் அயரா உழைப்பால் பிறந்ததே இன்று மதுரையின் தலை சிறந்த உயர்கல்வி நிறுவனமாகப்பெயர் பெற்று மதுரை மாநகரின் ஓர் அடையாளமாகவே விளங்கும் பாத்திமா கல்லூரி.
தான் விரும்பிய நிறுவனத்தைத் தொடங்கியதோடு தன் கனவு மெய்ப்பட்டு விட்டதாக அமைதியுறாத அன்னை ரோஸ் அதை மேலும் மேலும் அர்ப்பணிப்போடு வளர்த்துச்செல்லும் சீரிய தலைமைக்கும் தகுந்த ஒரு நபரைத் தேர்ந்து தெளிந்தார். அவர் கண்டெடுத்த நல்முத்தாக….வாராது வந்த மாமணியாக மதுரைக்கு வாய்த்தவரே பேராசிரியை செல்வி சகுந்தலா அவர்கள். கத்தோலிக்க நிறுவனம் ஒன்றில் ஓர் இந்துவை முதல்வராக்குவதில் அன்னைக்கோ பிற அருட்சகோதரிகளுக்கோ அன்று எந்த விதமான மனத் தடையும் இல்லை; இன்று பாத்திமாக்கல்லூரி எட்டியிருக்கும் உயரங்களுக்குக் காரணம் மதம் கடந்த அந்தச் சமூக இலக்கு மட்டுமே.
அன்னை ரோஸ் கண்ட கனவுகளுக்காகவே தன் உடல் பொருள் ஆவி என அனைத்தையும் அர்ப்பணித்துக்கொண்டவராய், அவரது நோக்கங்களின் நிறைவேற்றங்களை மட்டுமே தன் வாழ்நாளின் ஒரே இலட்சியமாய்க்கொண்டவராய் அந்த நொடி முதல் பாத்திமாக்கல்லூரியின் வளர்ச்சிக்காக மட்டுமே தன் வாழ்வைத் தத்தம் செய்து கொண்டார் பேராசிரியை செல்வி சகுந்தலா . தனக்கென ஒரு வாழ்க்கை, தனக்கெனக் குழந்தைகள் என எந்த வகையான சொந்தத் தேடல்களும் பந்தங்களும் அற்றவராய்ப் பாத்திமா பூமியையும் அங்கே சஞ்சரிக்கும் மாணவிகள்,ஆசிரியைகள்,அருட்சகோதரிகள் ,பணியாளர் கள்,ஆகியோரை மட்டுமே தன் சுற்றமாக்கிக்கொண்டார். 1953இல் தொடங்கிய அந்தத் தியாக வேள்வி 1983 வரை- அவர் பணி நிறைவு பெறும்வரை 30 ஆண்டுக்காலம் அயராது ஓய்வின்றித் தொடர்ந்தது.
அந்தக் காலகட்டத்தில் பதின்மூன்று ஆண்டுகள் அந்த அரிய முதல்வரோடு நெருக்கமாய்ப்பழகவும், அவரால் பயிற்சியளிக்கப்படவும் நான் பேறு பெற்றிருந்தேன் என்பதைக் கண்கள் பனிக்க எண்ணியபடி அவர்கள் இறைவனோடு ஒன்றிக்கலந்து விட்ட இந்தத் தருணத்தில் அவர்களோடான என் எண்ண அலைகளை.....நெகிழ்ச்சி,துயரம்,பெருமிதம் எனக்கலவையான பல உணர்வுகளோடு என் உள்நெஞ்சிலிருந்து மீட்டெடுக்கிறேன்…