துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

28.7.15

கலாமுக்குப் பிடித்த கதை

காலம் சென்ற அப்துல் கலாம் அவர்கள் இளைஞர்களிடம் கடைசியாகத் தொடுக்க எண்ணிய கேள்வி பாராளுமன்றத்தை ஆக்கபூர்வமான செயல்பாடுடையதாக ஆக்குவது பற்றியது என இன்றைய செய்தித் தாள்களில் படித்தபோது அரசாங்கச் செயல்பாடுகள் பற்றிய அவரது ஆர்வத்தை எடுத்துக்காட்டும் சம்பவம் ஒன்று என் நெஞ்சில் நிழலாடியது.

[//எங்கோ தொடுவானத்தில் சமநீதி என்னும் உதயத்தின் விடியல் மெல்லியதொரு கீற்றாய்த் தெரிகிறது.//
என்ற கதையின் கடைசி வரியையும் தன் உரையில் வாசித்துக் காட்டினார்....

தொகுப்பில் பல வகைப்பாடுகள் கொண்ட கதைகள் இருந்தாலும் அரச நீதி என்பது சமநீதியின் பாற்பட்டதாக இருக்க வேண்டும் எனச்சொல்லும் அந்தக்கதையை அவர் தேர்வு செய்த நுட்பம் கண்டு நான் வியந்து போனேன். இந்தக்கதை எழுதப்பட்ட நோக்கத்தை நிறைவு சேய்யும் வகையில் அதன் மிகச்சிறந்த வாசகர் ஒருவரை அது சென்றடைந்து விட்டதான பூரிப்பும் மனநெகிழ்வும், நிறைவும் எனக்கு ஏற்பட்டன. 


ஒரு கதை சொல்லிக்கு வேறென்ன வேண்டும்? 

கலாமின் மனதை இலேசாகத் தொட்ட அந்தக்கதையை இங்கே மீள் பிரசுரம் செய்வதில் நெகிழ்ச்சியடைகிறேன்.....

அதற்கு முன் அது குறித்த ஒரு பின்னணி;
‘90களின் நடுப்பகுதி; தமிழ் முதுகலை மாணவிகளுக்குக் குலசேகரர் பாசுரங்களில் சிலவற்றைக் கற்பித்துக் கொண்டிருந்தபோது இராமாவதாரத்தைச் சிறப்பித்துப் பேசிக்கொண்டு வந்த ஆழ்வார் ஓரிடத்தில் ‘சம்புகனைக்கொன்று’ என்றார்.
எனக்குப் பயிற்சி இருக்கும் அளவில் கம்பனில் சம்புகன் பற்றிய எந்தக் குறிப்பும் இருந்ததாய் நினைவில்லை என்பதால் நூலகத்தில் உள்ள மேற்கோள் விளக்கக்கதைகளைச் சரணடைந்தபோதுதான் உத்தர காண்டத்தில்[கம்பர் அதைத் தொடவில்லை] சம்புகவதம் பற்றிய குறிப்பு இருப்பதைக்கண்டேன்.அதை வெறுமே விளக்கிச் சொல்வதோடு என் மனம் நிறைவுறவில்லை.மனதுக்குள் கிடந்து அதை உழுதபோது கிடைத்ததே இக்கதைக்கரு.

இக்கதையில் இராமன் ஒரு பாத்திரமாக வந்தபோதும் அவனை மட்டுமே குற்றம் சாட்டுவதோ...குற்றவாளிக்கூண்டில் ஏற்றுவதோ என் நோக்கமில்லை.
இராமன் இங்கே ஆளும் வர்க்கத்தின் ஒரு குறியீடு மாத்திரமே. 
சட்டங்களைப்புதிதாக இயற்றவும்,உளுத்துப் போன சட்டங்களைக் கைவிடுவதற்குமான அதிகாரம்,ஆட்சிப்பொறுப்பில் இருப்பவர்களுக்கு மட்டுமே கிடைத்திருக்கும் வரம். - வல்லமை பொருந்திய அந்தப்பதவில் இருக்கும்போது அதைச் செயலாக்காமல் தாங்களும் அந்தச் சட்டங்களைக் காட்டி அவர்கள் ஒளிந்து கொண்டு விடுகிறார்களே என்னும் ஆதங்கத்தை வெளிப்படுத்திக் கொள்ள,இந்தத் தொன்மக்கதை எனக்கு ஒரு கருவியாக அமைந்தது.அவ்வளவே.

இனி....கதைக்குள்....
''சாத்திரம் அன்று சதி''
                 ’’சூத்திரனுக்கொரு நீதி-தண்டச்
                          சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி
                    சாத்திரம் சொல்லிடுமாயின் -அது
                           சாத்திரம் அன்று சதியெனக் கண்டோம்’’
                                                                                     -பாரதி 
                                                                    ‘உயிர் பெற்ற தமிழர் பாட்டு’’''
முதமாய்ப் பொழிந்து கொண்டிருக்கும் நிலவொளியில் அதன் இனிமையும் குளுமையும் கூட உணர்வில் பதிவாகாத ஒரு மோன நிலையில் தன்னை மறந்த ஒரு மௌனத் தவத்தில் ஆழ்ந்தவனாய் அரண்மனை மேல் மாடத்தில் நின்றுகொண்டிருக்கிறான் இராமன்எதிரே வெள்ளி ஓடையாகச் சலசலத்து ஓடும் சரயு ஆறு அவனுள் பல எண்ணக்குமிழிகளை அடுக்கடுக்காகக் கிளர்த்தியபடி வேதனைப்பள்ளத்தாக்குகளின் விளிம்புகளுக்கே அவனை இட்டுச் சென்று கொண்டிருக்கிறது.

இதே இடத்தில் இருந்து கொண்டு இந்த நிலவொளியில் தகதகத்து ஓடும் சரயுவின் ஜொலிப்பைக் குழந்தைப்பருவத்தில் கைகொட்டி ரசித்திருக்கிறேன் என் சகோதரர்களோடு
பின்னாளில் இளமையும்,வனப்பும் வாய்ந்த சீதையின் தோழமை இந்தக் காட்சிக்கு வேறு வகையில் மெருகூட்டி இருக்கிறது.இன்றுநிலவுஅதில் நனையும் சரயுகாலம்கட்டுக்குலைக்காத இந்த அரண்மனை மாடங்கள் இவை அனைத்தும் கருக்கழியாமல் இருக்க..,நான் மட்டும் ஓர் ஏகாங்கியாய்..தனிமைப்பட்டுப் போனவனாய்!
தனிமை,பிரிவு இவையெல்லாம் இந்த அவதாரத்தின் சாபக்கேடுகளா….இல்லை அப்படி ஒரு பெயர் சூட்டி என்னை நானே ஏமாற்றிக் கொண்டிருக்கிறேனா? களங்கமற்ற சீதையைக் கடுஞ்சொல் கூறியே மண்ணுக்குள் சமாதியாக்கியதும்,முனிவனின் சொல் கேட்டு இலக்குவனை சரயுவில் மூழ்கடித்ததும் இன்னும் அரச தர்மம் என்ற பெயரால் நான் சுமந்த பாரங்கள்தான் எத்தனை? இன்னும் இந்தப் பிறவியில் எஞ்சியிருக்கும் சுமைகள்தான் எத்தனை?

நீண்டதொரு வாழ்க்கைப் பயணத்தின் நெடிதான களைப்புணர்வு இராமனைத் திடீரென்று பற்றிக்கொள்ள,அசதியுடன் இருக்கையில் சாய்கிறான்.சலிப்புடன்மூடிக்கொண்ட அவன் இமைகள் மெலிதான ஓர் அரவம் கேட்டு விழிக்கையில் வாயிலில் ஒரு காவலன் நிற்கிறான்.

‘’
அந்தணர்களின் கூட்டம் ஒன்று தங்களைக் காண அவசரமாய் வந்திருக்கிறது பிரபோ’’
இந்த வேளையிலா?’ – ஒரு கணம் திடுக்கிட்டுப் போன இராமன் தன்னைச் சுதாரித்துக் கொண்டு அவர்களைக் காண விரைந்து வருகிறான்.
கவலை கப்பிய முகங்களுடன் தலை கவிழ்ந்து உட்கார்ந்திருக்கும் ஐந்து முதியவர்களும் இராமனைக் கண்டதும் எழுந்திருக்க முயல்கிறார்கள்.

‘’
எல்லோரும் என் வணக்கத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.இப்படி ஒரு அகால வேளையில் அவசரமாய் என்னைத் தேடி வரும் அளவுக்கு இந்த ஆட்சியில் தங்களுக்கு என்ன துன்பம் நேர்ந்து விட்டதோ என்று அஞ்சுகிறேன்’’
‘’இந்த நள்ளிரவுப்பொழுதில் உன் அமைதிக்குப் பங்கம் விளைப்பதில் எங்களுக்கும் உடன்பாடு இல்லை ராமா….ஆனாலும் அடுத்தடுத்து நிகழ்ந்து விட்ட அகால மரணங்கள் பொழுது அகாலமானது என்று கூடப்பார்க்க இயலாமல் எங்களை இங்கே வரும்படி நிர்ப்பந்த்தித்து விட்டன’’

‘’
நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?’’
‘’கொஞ்சம் விளக்கமாகவே சொல்கிறேன் அரசே!சிறிது காலமாகவே எங்கள் அந்தணர் தெருவில் அடுத்தடுத்து மரணங்கள்! அதிலும்அசம்பாவிதமாய்அகாலமாய் நேரும் குழந்தை மரணங்கள்!இராம ராஜ்யம் நடந்து வரும் இந்த பூமியில் உன் நல்லாட்சி மீது களங்கம் கற்பிக்க விரும்பவில்லை என்பதால் விதிப்பயன் என்று இத்தனை நாளும் பொறுமையோடுதான் இருந்தோம்….ஆனால் இன்று கோயில் பூசை செய்யும் குருராஜ பட்டரின் வீட்டில் நிகழ்ந்த பிள்ளைச் சாவு எங்கள் எல்லோரையுமே உலுக்கி விட்டது’’

‘’
ஆமாம் அரசே! பிள்ளை வரம் கேட்டுத் தவமிருந்து பெற்ற செல்வ மகன்! ஐந்து வயது கூட நிரம்பாத அழகு மகன்….தலை நோவு என்று படுத்த ஒரு நாழிகையில் நிரந்தரமாய்த் தலை சாய்த்து விட்டானென்றால் பெற்ற மனம் எப்படித் துடிக்கும்? இந்த மரணங்கள் இப்படித் தொடர் சங்கிலியாகிக் கொண்டு போவதைத் தடுப்பது உன் கடமை என்று அறிவுறுத்தவே நாங்கள் ஓடோடி வந்தோம் மன்னா!’’
கவலைக் கோடுகள் உழுதிருக்கும் இராமனின் முகம் பின்னும் களை இழக்கிறது.

‘’
சான்றோர்களே..! அயோத்தி நகரத்தைத் தங்கள் அறிவுக் கூர்மையாலும்,ஆலோசனைத் திறத்தாலும் பொலிவுபடுத்தி வருபவர்கள் நீங்கள்! தாங்கள் அறியாதது என்ன இருக்க இயலும்? பிரச்சினையை முன் வைத்த நீங்களே அதனைத் தீர்ப்பதற்கான வழியினையும் முடிவு செய்து என்னிடம் நாளை தெரிவியுங்கள்.தாங்கள் கூறும் தீர்வு எதுவாயினும் பணிவோடு ஏற்க நான் சித்தமாயிருக்கிறேன்.இராமன் விடும் மூச்சுக் காற்றும் கூட இந்த மண்ணின் நன்மைக்காகத்தான் என்ற நம்பிக்கை உங்களிடம் இருக்குமானால் இப்பொழுது அமைதியோடு வீடு செல்லுங்கள்! நாளை நிச்சயம் நல்லதொரு தீர்வு காண்போம்…!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


மைதி இழந்த இராமனுக்கு மறுநாள் ஆலோசனைக் கூடத்தில் அறிவுரை சொல்லிக் கொண்டிருக்கிறார் வசிட்டர்.

‘’
இந்தப் பிரச்சினையில் நீ இந்த அளவு மனதை அலைக்கழித்துக் கொள்ள வேண்டாம் இராமா…! உலகில் பிறப்பும் இறப்பும் விதி வகுத்துத் தந்திருக்கும் நிர்ணயங்கள் ! அந்த அந்தணர்கள்தான் அதை அரச நீதியோடு சேர்த்துக் குழப்புகிறார்களென்றால் நீயுமா அதை எண்ணிக் கலங்குவது?’’

’’என்னால் அந்த விஷயத்தில் அத்துணை எளிதாக அமைதி காண முடியவில்லை வசிட்டரே..! தருமத்தின் ஆட்சி நடப்பதாக நான் பெருமை பேசிக் கொண்டிருக்கும் இந்த சாம்ராஜ்ய எல்லைக்குள் எங்கோ அறம் தலை தடுமாறிக் கொண்டிருப்பதாகவும்,அரசன் என்ற முறையில் நான் அதைத் தடுத்து நிறுத்தத் தவறி விட்டதனாலேயே தங்கள் வீடுகளில் அகாலச் சாவுகள் அடுத்தடுத்து நேருவதாகவும் அல்லவா நேற்று என்னைச் சந்தித்த அந்தணப் பிரதிநிதிகள் இன்று மீண்டும் வந்து தீர்ப்பு வழங்கி விட்டுப் போயிருக்கிறார்கள்?’’
‘’சரி..ஒரு வாதத்துக்காக அதை சரியென்றே வைத்துக் கொண்டாலும் நாட்டின் ஏதோ ஒரு மூலையில் எவனோ ஒருவன் செய்து கொண்டிருக்கும் ஒரு செயலுக்கு நீ எப்படிப் பொறுப்பாக முடியும்? எனக்கென்னவோ அந்தணர்களின் குற்றச்சாட்டும் அவர்களின் எதிர்பார்ப்பும் மிகவும் அதீதமானவை என்றே தோன்றுகிறது.அது,உன்னை அபாயத்தின் எல்லைக்கே கொண்டு சென்று விடுமோ என்றும் நான் அஞ்சுகிறேன் இராமா’’

‘’என் மீது கொண்ட பாசம் தங்களையும் கூடக் கோழையாக்கி விட்டது குருதேவா!அறம் என்ற வேள்வியில் ஆகுதியாவதற்கென்றே பிறந்தவன் இந்த இராமன்…! அந்த யாகத்துக்குக் காணிக்கை செலுத்த நான் மறுத்திருந்தால் அன்று என் தந்தை தொடங்கி,இன்று என் மனைவி,தம்பி இலக்குவன் வரை என் உறவுகள் எல்லாவற்றையும் நான் காப்பாற்றிக் கொண்டிருக்க முடியும். இப்பொழுதுஎல்லாமே என்னை விட்டுப் போன நிலையில் அறம் என்ற ஒரு பற்றுக்கோடைத் தவிர எனக்கு வேறு என்னதான் மிச்சமிருக்கிறது? அந்த நெருப்பில் இப்பொழுது நானே கள பலியாகிறேன். இந்தப்பணிக்காக வேறு எவரையும் அனுப்பப்போவதில்லை. என் நாடு முழுவதும்,என் தாயகத்துத் திருமண் முழுவதும் என் பாதங்கள் தேயத் தேய நானே அலைந்து திரியப் போகிறேன். அந்தணர்கள் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டின் மூலப்பொருளை நானே கண்டறிந்து களையெடுக்கப்போகிறேன்.’’

-
சிறிது இடைவெளிக்குப் பின் இராமன் மீண்டும் தொடர்கிறான்.

‘’ஒருவேளை இதுவே என் இறுதிப் பயணமாகக் கூட அமைந்து விடலாம்.தாங்கள்தான் எனக்கு ஆசி கூறி வழியனுப்பி வைக்க வேண்டும்!’’
-தன் கால்களில்பணிந்தெழுந்த இராமனைத் தூக்கி நிறுத்தித் தழுவிக்கொண்ட வசிட்ட முனியின் கண்களில் யமுனை பெருக்கெடுக்கிறது.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

பொறுப்புக்களின் சுமை இதயத்தில் கனத்து வழிந்தாலும் இராமனுக்கென்னவோ படை குடைகளின்றி ஆள் சேனை அம்பாரிகள் இன்றி தேசாந்திரியாய் மலைச் சாரல்களிலும் நதி ஓரங்களிலும் அலைந்து திரியும் அந்த அனுபவம் சுகமாய்த்தான் இருக்கிறது. வனவாச நாட்களின் சுதந்திரத்தை நீண்ட இடைவெளிக்குப் பின் அவனால் பூரணமாக உணர முடிந்தாலும்,சீதையும் இலக்குவனும் உடனிருந்து இனிமை சேர்த்த வசந்த காலங்கள் இனிமேல் திரும்ப இயலாத இறந்த காலங்கள் என்ற கசப்பான உண்மையும் அவன் நெஞ்சில் முள்ளாய் இடறத் தவறவில்லை.

ஒரு கோடைப் பருவத்தின் முடிவில் தொடங்கிய பயணம் அடுத்ததொரு கோடையின் ஆரம்பத்தை எட்டும்போதுதான் வித்தியாசமான அந்தக் காட்சி இராமனுக்குப் புலனாகிறது.அடுக்கடுக்காய் மலைத் தொடர்கள் நிறைந்த ஒரு காட்டுப் பகுதியில் சூரியச் சூடு தீர ஊற்றுநீரைப் பருகி விட்டுத் தலை நிமிர்கையில் பரந்து விரிந்திருக்கும் அரசமர நிழல் ஒன்றில் கறுத்து மெலிந்து எலும்புக் கூடாய்ப்போன உருவம் ஒன்று தலை கீழாய்ச் சிரசாசனம் செய்து கொண்டிருக்கும் காட்சியை அவன் காண்கிறான்.கண்கள் மூடிய நிலையிலிருக்கும் அந்த மனிதனின் உதடுகள் விடாமல் எதையோ உச்சரித்துக் கொண்டிருப்பதை வைத்து அது ஒரு தவம் என்ற உண்மையை அவன் அறிந்து கொள்கிறான்.

தவம் செய்பவனின் விழிகள் தாமாக விலகும் வரை அங்கே பொறுமையுடன் காத்திருந்த இராமன்,அவனுக்கு வணக்கம் செலுத்த அந்தத் தவஞானியோ திடுக்கிட்டுப் போகிறான்.

‘’இராமா..! நீயா..? உண்மையிலேயே நீதானா ?’’

‘’தவமுனியே தாங்கள் என்னை அறிவீர்களா?’’

‘’குடிமக்களைத் தனித்தனியே அறிந்து கொள்ள ஒரு மன்னனுக்கு வாய்ப்பில்லாமல் போகலாம்….ஆனால் உன்னைப்போன்ற ஓர் அரசனைத் தெரிந்து கொள்ளாத குடிமக்கள் இருக்க முடியுமா ராமா..’’

‘’தாங்கள் யார் என்பதையும் தனிமையான இந்தக்காட்டுச் சூழலில் தாங்கள் எந்த நோக்கத்திற்காக இந்தத் தவத்தை மேற்கொண்டிருக்கிறீர்கள் என்பதையும் நான் அறிந்து கொள்ளலாமா பெரியவரே?’’

‘’பொதுவாகத் தவம் என்பதே தனி மனித முக்திக்காக மேற்கொள்ளப்படுவதுதான்! சம்புகனாகிய என் தவமும் இந்த நடைமுறையை ஒட்டியதுதான் என்றாலும் என் செயலுக்கு நீண்ட வரலாற்றுப் பின்னணியும்,அழுத்தமானதொரு சமூகக் காரணமும் கூடுதல் துணையாக இருக்கின்றன ராமா’’
’’அதனை நான் தெரிந்து கொள்வதில்..?’’

‘’அரசன் என்ற முறையில் அது பற்றி நீ கட்டாயம் தெரிந்து கொண்டே ஆக வேண்டும் ராமா..’’-பெருமூச்சு ஒன்றை வெளியிட்டபடி தன் கதையைத் தொடர்கிறான் சம்புகன்.

‘’என்றோ யாரோ வகுத்து விட்டுப் போன வருணப் பாகுபாட்டின் வேர்கள் ஆழமாகப் புரையோடிப் போயிருக்கும் இந்த மண்ணில் கடைப்பட்ட ஒரு சாதியில் பிறந்தது என் குற்றமில்லை! ஆனால் நான் பிறந்த இனத்துக்குப் பொருந்தாத வகையில் வேதங்களைப் பயில்வதிலும் அவற்றின் உட்பொருளை அறிவதிலும் என் நாட்டம் சென்றதுதான் நான் செய்த பெரும் குற்றம்உலகத்தோடு ஒட்டாதவன் என்று நான் பிறந்த குலம் என்னை ஒதுக்கி வைக்க,நான் தேடிச் சென்ற வைதீக நெறியோ நான் அதற்கு அருகதையற்றவன் என்று தன் கதவுகளை இறுக மூடிக்கொண்டது.ராமராஜ்யத்திலும் கூட சமநீதி இல்லையென்றால் உலகின் எந்த மூலைக்குச் சென்று அதை எவ்வாறு பெறுவது?என்னுள் வெறி மூண்டது….தவம்..! கடுந்தவம்..! உடம்பில் ஜ்வாலை மூள மூளக் கடுந்தவம் செய்து இந்த உடம்போடு சொர்க்கம் புக வேண்டும். வேதத்தின் வழியை எனக்குக் காட்ட மறுத்தவர்களும் கூட எட்டியிருக்காத ஒரு சிகரத்தை நான் வென்று காட்ட வேண்டும்இதுவே இன்று என் முன் இருக்கும் ஒரே சிந்தனை! ஒரே லட்சியம்..!’’

-இராமனின் சிந்தனையில் பளீரென்று ஒரு மின்னல் வெட்டுகிறது.குழந்தைச் சாவுகளைக் காரணம் காட்டிச் சம்புகனின் தவத்தைத் தடுப்பதற்காக….அவன் தங்களை விட மேன்மை பெறுவதைக் குலைப்பதற்காக அயோத்தி அந்தணர்கள் தீட்டிய சதித் திட்டத்திற்குத் தான் கருவியாகி விட்டோம் என்ற அவலம் அவனுள் கொடுமையாக உறைக்கிறது! அதே வேளையில் அவன் கைகள் அனிச்சையாகக் கோதண்டத்தை வளைத்துச் சரம் தொடுக்க ஆயத்தமாகின்றன.

’’சம்புகரே உங்கள் வாதம் நியாயமானதுதான்….ஆனாலும் இந்த யுகத்தின் தர்மங்கள் வரையறுக்கப்பட்டவை….அவற்றின் எல்லைக் கோடுகளை எவர் மீறினாலும் அவர் தண்டனைக்குரியவரே..’’

‘’ராமா..நீ….நீ...என்ன சொல்கிறாய்…? நீ என்னைத் தண்டிக்கப் போகிறாயா?’’

‘’ஆமாம் சம்புகரே ! உங்கள் நோக்கம் உன்னதமானதென்றபோதும் இந்த யுகம் விதித்துள்ள அறக்கோட்பாடுகளின்படி நீங்கள் சார்ந்திருக்கும் வருணத்தவர் தவம் செய்ய அதிகாரமற்றவர்கள் ! ஒரு செயலைச் செய்யும் அதிகாரமற்றவர்கள் வரம்பு மீறி அதில் முனையும்போது அதைத் தடுக்கும் பொறுப்பு அரசனுக்குரியதாகிறது..’’

‘’ராமா நீயா இப்படிப்பேசுவது? குகனோடு ஐவராகிக் குரங்குத் தலைவன் சுக்கிரீவனைக் கூட்டாளியாக்கி சடாயுக் கழுகிற்கு ஈமச்சடங்கு முடித்து..விபீஷணனுக்கு அடைக்கலம் அளித்த நீயா இப்படிப் பேசுவது? அந்த நிகழ்ச்சிகளில் பொதிந்து கிடக்கும் செய்திகளெல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போய்விட்டதா என்ன?’’
இராமனின் தசைநார்களில் ஓர் இறுக்கம் படர,உணர்ச்சியற்ற குரலில் பசையற்ற சொற்களை உதிர்க்கிறான்.

‘’நீங்கள் குறிப்பிட்ட சம்பவங்கள் இராமன் என்ற தனி மனிதனுக்குரியவை.உங்கள் முன் இப்போது நிற்கும் இராமன் யுகதர்மம் என்னும் நியதிகளால் கைவிலங்கிடப்பட்ட ஓர் அரசன்! அந்த தர்மங்கள் சட்ட பூர்வமாக மாற்றியமைக்கப்படாதவரை தன்னிச்சையாக அவற்றை மாற்றியமைக்க உரிமை பெறாத ஓர் அரசன்..’’
-தலைகீழ் நிலையில் அதுவரை தவம் செய்து கொண்டிருந்த சம்புகன் அந்த நிலையைத் துறந்து மெள்ள எழுதுகிறான்.கணை தொடுக்க ஆயத்தமாகத் தன் முன் நிற்கும் ராமனின் கோலத்தை முழுமையாக அளந்தபின் விரக்தியான சிரிப்பொன்று அவன் இதழ்க்கடையில் விரிகிறது.

‘’சற்று முன்னர் முதன்முதலாக உன் தரிசனம் கிடைத்தபோது மோட்சத்தின் மூல வித்தே என் கண் முன்பு பிரசன்னமாகி விட்டதைப்போலப் புல்லரித்து நின்றிருந்தேன்…உயிர்க்குலங்களிடையே பேதம் காட்டாத ஓர் உத்தமனைக்கண்ட மகிழ்ச்சியில் பூரித்துப் போயிருந்தேன்.இப்பொழுதோ ஒரு சந்தர்ப்பவாதியின் கைகளால் என் சாவு நிகழப்போகிறதோ என்று சஞ்சலப்படுகிறேன்.அரசுப்பொறுப்பில் ராமனும் கூட ஒர் சந்தர்ப்பவாதியாக மற முடியும் என்றால் இந்த வாழ்க்கையில்தான் என்ன அர்த்தமிருக்கிறது…? என்னைக் கொன்று என் வாழ்வை முடித்து விடு ராமா..’’
-சம்புகனின் வார்த்தைகள் முற்றுப்பெறுவதற்குள் இராமனின் இலக்குத் தவறாத பாணம் அவன் வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்டு வந்து சாதுவாய்த் திரும்பி வந்து தன் தலைவனின் அம்பறாத் தூணியில்பதுங்கிக் கொள்கிறது.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

’நீ ஒரு சந்தர்ப்பவாதி!’-மலை முகடுகளில் பள்ளத்தாக்குகளின் பாதாள ஆழங்களில் முட்டி மோதி எதிரொலிக்கும் இந்தக்குரல் சம்புகனுடையதா…?அன்று சைல மலை அடிவாரத்தில் ஒலித்து இன்று சரயு நதி தீரம் வரை விரட்டிக்கொண்டு வந்திருக்கும் தன் மனச்சாட்சியின் குரலாகவே இராமனுக்கு அது ஒலிக்கிறது.

‘சம்புகன் சொல்வதில் தவறென்ன? குகனிடம் தேனும்,மீனும் பெற்றுத் தோழன் என்று தழுவினேன்.அவன் கங்கையைக் கடக்க ஓடம் தந்தான்; சபரியிடம் எச்சில் கனி உண்டேன்.சுக்கிரீவனிடம் செல்ல அவள் வழி சொன்னாள்;சுக்கிரீவனை அரசனாக்கினேன்.அவனோ இலங்கைச் சேனையை எதிர்கொள்ள ஒரு பட்டாளத்தையே துணையாய்த் தந்தாள்.’வெளியே’இருந்து மதிப்பிடும்போது இவைகளெல்லாம் சந்தர்ப்பவாதமேயன்றி வேறென்ன?

‘உண்மையிலேயே ஆன்ம ஒற்றுமை கொண்ட அழுத்தமான பிடிப்போடு நான் வழங்கியிருக்கும் சமநீதிகள் என்றால் நான் அரசனான பிறகு அதனைச் சட்டமாக்க…புதிய தர்மமாக்கத் தவறியது ஏன்? இரட்டை வேடம் போடுவதைப்போல் என் ஒவ்வொரு செயலையும் மனித அறமென்றும்,அரச தர்மம் என்றும் பிரித்துப்பேசி முகமூடிகளை மாற்றி மாற்றி அணிந்து கொண்டு வந்தேன். இன்று என் முகத்திரை இந்த சம்புகனால் முற்றாகக்கிழிந்தது….பளுவாக இதுவரை அழுத்தி வந்த பாவ மூட்டைகளின் சுமையால் ஏற்கனவே இற்றுப்போய்விட்ட என் முதுகை முறிக்கப்போகிற இறுதித் துரும்பு இந்த சம்புகன் வதம்! சாதிகளற்ற மனிதத்தை உருவாக்கக் கிடைத்த அரியதொரு வாய்ப்பைத் தவற விட்ட இந்தப் பிறவி இந்த இறுதித் துரும்பினாலேயே…சம்புக வதத்தினாலேயே முற்றுப்பெறட்டும்!’’

சரயு நீரைக் கண்ணில் ஒற்றித் தலையில் தெளித்தபடி ஆற்றில் இறங்கி அதன் ஆழத்தில் அமிழ்ந்தபடி போய்க்கொண்டே இருக்கிறான் இராமன்…எங்கோ தொடுவானத்தில் சமநீதி என்னும் உதயத்தின் விடியல் மெல்லியதொரு கீற்றாய்த் தெரிகிறது.

[நன்றி;செம்மலர்]

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....