துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

31.12.11

புத்தாண்டு வாழ்த்துக்கள்...



’’எனக்கு நீ வேண்டும்...
நீதான் வேண்டும்..
என்னுடைய இருதயம் விடாமல் சொல்லிக் கொண்டிருக்கட்டும் 
கடைசிவரையில்....
என்னுடைய மற்ற ஆசைகள் எல்லாம்
காலையிலும் மாலையிலும் அலைக்கழிப்பவை
வெறுமையானவை

’’காக்கை குருவி..’’



’’காற்றடித்ததிலே மரங்கள்
        கணக்கிடத் தகுமோ
நாற்றினைப் போலே சிதறி
        நாடெங்கும் வீழ்ந்தனவே..’’

-பாரதியின் ’பிழைத்த தென்னந்தோப்பு’பாடலிலிருந்து....

’’நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே-இந்த
நேரமிருருந்தால் என் படுவோம்..’’

- பாரதியின்  ’புயற்காற்று'
புதுவையையும் புயலையும் பார்த்ததும்... கொஞ்சம் பாரதியின் ஞாபகம்...
பாரதி வாழ்ந்த காலத்தில் ஒரு முறை கடும்புயல் புதுவையைத் தாக்கத் தாங்க முடியாத உயிர்ச்சேதங்கள்.பொருட்சேதங்கள்....

’அசடன்’ -மேலும் ஒரு பதிவு


திரு இளங்கோ என் வலையுலக நண்பர்.
எனது மொழிபெயர்ப்பான குற்றமும் தண்டனையும் நாவல் குறித்த தனது பதிவின் வழி எனக்கு அறிமுகமான அவரைச் சென்ற டிசம்பர் கோவையில் நிகழ்ந்த விஷ்ணுபுரம் விருது விழாவில் நேரில் ஓரிரு நிமிடங்கள் காணும் வாய்ப்பு கிடைத்தது.

25.12.11

’பறவைகள் ஒலி கேட்டேன்...’

வடபத்ரசாயி ஆலயம்
மதுரைக்கு மிக அருகிலேயே வில்லிபுத்தூர் இருந்தாலும் ஆண்டாளை நான் சற்றுத் தாமதமாகத்தான் கண்டு கொண்டேன்...
இலக்கியத்தில் அல்ல.
அவளது சிலா வடிவத்தையும் அவள் பிறந்த பூமியையும் காண்பதில்தான்...

ஒரு புறம் ஓங்கி நிற்கும் பழமையான வடபத்ரசாயி ஆலயம்,மறுபுறம் பின்னாளில் உருவாக்கப்பட்ட ஆண்டாள் கோயில்..இரண்டுக்கும் இடையே அவள் ஜனித்த அல்லது கிடந்து கண்டெடுக்கப்பட்ட துளசிவனம்.என் ஆர்வம்...இடையிலிருந்த இடத்துக்குத்தான்...

23.12.11

விருதுகள்

இவ்வாண்டுக்கான தமிழ் இலக்கிய விருதுகள் பலதரப்புக்களிலிருந்தும் வரிசையாக அறிவிக்கப்பட்டு வருவது மகிழ்ச்சியளிக்கிறது.
சாகித்திய அகாதமி பரிசுக்குத் தேர்வாகியிருக்கும் திரு சு.வெங்கடேசன் மதுரை மண்ணின் மைந்தர்.
மதுரையின் கடந்தகால வரலாற்றை அடித்தளமாகக் கொண்டு மிகப் பெரும் முயற்சியையும் உழைப்பையும் செலவிட்டு அவர் உருவாக்கியுள்ள ‘காவல் கோட்டம்’என்னும் அவரது முதல் நாவலே சாகித்திய அகாதமி பரிசுக்கு உரியதாகத் தேர்வாகியிருப்பது பெருமைக்குரியது.

21.12.11

அசடன் நாவல்-ஒரு பதிவு(ஜெயமோகன்)

அசடன் மொழியாக்க நாவல் குறித்து என் மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய எழுத்தாளர் திரு ஜெயமோகன் அவர்கள் தனது தளத்தில் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார்.அவருக்கு என் நன்றி.


அசடன்


//அசடன் நாவல் தமிழில் எம்.ஏ.சுசீலாவால் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவந்துள்ளது. பாரதிபுத்தகாலயம் வெளியீடு. அவர்கள் வெளியிட்ட முந்தைய ருஷ்ய செவ்விலக்கிய நூல்களைப்போலவே அகலமான வடிவமைப்பில் கதைமாந்தர்களின் முகங்களைக் காட்டும் திரைப்படக் காட்சிப்படங்களுடன் இந்நூல் வெளியாகியிருக்கிறது. 
சிறந்த கட்டமைப்பு கொண்ட நூல்.நான் இந்நூலுக்கு அசடனும் ஞானியும் என்ற சிறிய முன்னுரை ஒன்றை எழுதியிருக்கிறேன்.

20.12.11

தேரும் யானையும்...

அதியமான் நெடுமான் அஞ்சிக்கும் ஔவைக்கும் இருந்த நட்பும் உறவும் பால் பேதம் வயது பேதம் ஆகியவை கடந்தவை.
அதியமானைப் பல பாடல்களில் பாடியிருக்கும் ஔவை அவனது வேறுபட்ட ஆளுமைகள் பற்றி முன் வைக்கும் இரு உவமைகள் அற்புதமானவை...

அதியனுக்கு எதிராகப் போர்க்களம் புகும் பகைவரை நோக்கி இவ்வாறு அறை கூவுகிறாள் ஔவை.
‘’ஒரே நாளில் எட்டுத் தேர் செய்யும் வல்லமை படைத்த ஒரு தச்சன் ஒரு மாதம் முழுவதும் முயன்று - அதே நேரத்தையும்,உழைப்பையும் செலவிட்டு- அந்தத் தேரின் ஒரு காலை மட்டும் செய்தால் அது எந்த அளவு வலிமையுடன் இருக்குமோ அந்த அளவு வலிமை பெற்றவன் அதியமான்.

18.12.11

’குந்தியும் நிஷாதப் பெண்ணும்’

விளிம்புநிலை மக்களைத் தங்களின் சுயநலத்துக்காகக் காவு கொடுக்கும் அதிகார வர்க்கத்துக்கு ஒரு சாட்டையடியாக அமைந்திருப்பது வங்கமொழி இலக்கியத்தின் புகழ் மிக்க படைப்பாளியும்,சமூகப் போராளியுமான மகாஸ்வேதா தேவியின் குந்தியும் நிஷாதப் பெண்ணும்என்னும் மீட்டுருவாக்கச் சிறுகதை. இன்றைய சமூகத் தளத்திலும் -கூடங்குளம் முதல் முல்லைப் பெரியாறு வரை...பல வகையான அர்த்தப் பரிமாணங்களிலும் வைத்து வாசிக்க இடம் தரும் அந்தக் கதை குறித்துச் சில பகிர்வுகள்...

பாரதப் போர் முடிந்த பின்பு வானப் பிரஸ்தவனவாசம் மேற்கொள்ளும் திருதிராஷ்டிரனுக்கும்,காந்தாரிக்கும் உதவியாகத் தானும் உடன் சென்று காட்டில் - பர்ணசாலையில் அவர்களோடு தங்கிப் பணிவிடை செய்கிறாள் குந்தி.தன் மகன்களால் காந்தாரியின் பிள்ளைகள் ஒட்டு மொத்தமாகக் கொன்றழிக்கப்பட்ட குற்ற உணர்வின் உறுத்தலும் அவளுக்குள் ஓடிக் கொண்டே இருக்கிறது.காந்தாரியோ வருவதை ஏற்பகும் பக்குவம் கொண்டவளாக...குந்திக்கும் கூட ஆறுதல் சொல்லித் தேற்றுபவளாக-வரப் போகும் மரணத்தை அமைதியோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு நிதானத்தோடு இருக்கிறாள்.குந்திக்கு.. எப்போதுமே ஒரு பதற்றம்...தான் செய்த தவறுகளை யாருமற்ற அந்தத் தனிமைச் சூழலில் நினைத்துப் பார்க்கும்போது அவள் நெஞ்சே அவளைத் தீயாகச் சுடுகிறது.


அன்றாடச் சமையலுக்கும் பூசைக்கும் தேவையான மரக்குச்சிகள் மற்றும் பிற பொருட்களைச் சேகரிக்க அந்தக் காட்டுக்குள் செல்லும் வேளைகளில் அங்கு நடமாடும் ’நிஷாத’ப் பெண்கள் பலரைக் காண்கிறாள் குந்தி.அந்த மலைக் காட்டையே தங்கள் வாழிடமாகக் கொண்டிருக்கும் காட்டுவாசிப் பெண்களான அவர்களை நகர நாகரிகங்கள் அதிகம் தீண்டியிருக்கவில்லை. மலையில் விறகு பொறுக்கித் தலைச் சுமையாகக் கட்டித் தூக்கிக் கொண்டு போகும் பல நடுத்தர வயது நிஷாதப் பெண்களின் உறுதியான உடல்வாகு, பேச்சு சிரிப்பு,இயற்கையின் மக்களாய் இயைந்து போகும் லாவகம்-இதெல்லாம் அரண்மனைக் கிளியாக மட்டுமே வாழ்ந்து ஆரண்ய வாழ்வை ஒரு சுமையாக-தண்டனை போலவே முன்பு எதிர்கொண்டிருந்த குந்தியை மலைக்க வைத்து வியப்பூட்டுகின்றன. ஆனாலும் அவர்களோடு அவள் எதுவும் பேசுவதில்லை.அவர்கள் பேசும் மொழியைத் தெரிந்து கொள்ள விரும்பியதுமில்லை.அரண்மனையில் பணி விடைசெய்த பெண்களிடமிருந்தே சற்று விலகியிருந்து பழகிய அரச குடியல்லவா அவளுடையது? அவர்களோடு உரையாடுவதில் அவளுக்கே உரித்தான ஓர் உயர்குடித் தயக்கம்..

மலைக் காட்டின் தனிமையில் வெறுமையில் பிரபஞ்சத்திடம்...இயற்கை அன்னையிடம் தான் செய்த குற்றங்களைச் சொல்லிப் புலம்பிக் கழுவாய் தேடிக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது குந்திக்கு..தன் குற்றங்களிலேயே பூதாகாரமாக அவளுக்கு உறைப்பது கர்ணனுக்கு அவள் செய்த துரோகம்தான்..தானே விரும்பி வரவழைத்த சூரிய மணாளன் மூலம் பெற்ற கர்ணனை ஒரு முறை கூட மகனாக அங்கீகரிக்காமல்,அவன் கொண்ட சோகத்தைப் பற்றி ஒரு கணம் கூட சிந்தித்துப் பார்க்காத தன் மனத்தை அவளே குற்றம் சாட்டுகிறாள்.அரச வாழ்வுக்கே உரிய தருமத்தில் காவு கொடுக்க வேண்டியவைதான் எத்தனை எத்தனை...?பஞ்ச பாண்டவர்களும் கூட அவளுக்கும் மாத்ரிக்கும் வெவ்வேறு தேவர்கள் மூலம் ஜனித்தவர்கள்தான்..ஆனாலும் அது நிகழ்ந்தது பாண்டுவின் ஒப்புதலோடு.ராஜ குடும்பத்தின் சம்மதத்தோடு.கர்ணனைச் சுமந்தது இவளாய் விரும்பி ஏற்றது;அவனைத் துறந்ததும் அந்த ராஜ தருமம் கருதியதுதான்…

தன் குழந்தையாக ஒரு பொழுதும் சீராட்டியிருக்காத கர்ணனைப் பாண்டவர் உயிர் காப்பதற்காக மட்டும் சந்திப்பதற்கும்,தாய் என்ற உரிமை பாராட்டிக் கொண்டு அவனிடம் அதை ஒரு கோரிக்கையாக வைப்பதற்கும் அவளுக்குத் தார்மீக உரிமை என்ன இருக்கிறது..?
இதையெல்லாம் வாய் விட்டு அவள் புலம்பிக் கொண்டிருக்கும் அந்தத் தருணத்தில் சற்றுத் தள்ளியிருந்து நிஷாத இனப் பெண்கள் அவளைப் பார்த்துத் தஙளுக்குள் ஏதோ பேசிச் சிரித்துக் கொள்கிறார்கள்.அவளைப் பொறுத்தவரை அந்த மலைப் பாறைகளுக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் அதிகமில்லை..எவருக்கும் எதுவும் புரியப் போவதில்லை.குந்தியின் புலம்பல் வடிகால் நாளும் தொடர்ந்து கொண்டே போகிறது.இப்போது சற்று வயதான ஒரு நிஷாத இனப் பெண் மட்டும் குந்தியைக் கொஞ்சம் நெருங்கி வரத் தொடங்கியிருக்கிறாள்.ஆனால்..குந்தி அவளைப் பெரிதாகப் பொருட்படுத்தியிருக்கவில்லை.



ஒரு நாள் காடு வழக்கத்துக்கு மாறாகச் சலசலப்புக் கூடியதாக இருக்கிறது.பறவைகள் கூட்டைக் காலி செய்து விட்டு எங்கோ செல்கின்றன; நிஷாத இனப் பெண்களும் மூட்டை முடிச்சுக்களோடு வேறு இடம் பெயர்ந்து செல்ல முற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அப்போது குந்தியின் முன்வந்து நிற்கிறாள் அந்த வயதில் மூத்த நிஷாத இனப் பெண்.
‘’என்ன குந்தி ..உன் பாவங்களையெல்லாம் சொல்லி முடித்து விட்டாயா இன்று சொல்ல எதுவும் மீதம் இல்லையா’’ என்கிறாள்.
குந்திக்கு வியப்பு.
‘’எங்களுக்கும் உங்கள் மொழி புரியும்,பேசவும் தெரியும்….ஆனால் அதைப் பற்றியெல்லாம் உனக்கென்ன கவலை..நாங்களெல்லாம் இதோ இங்கிருக்கும் மரங்களையும் கற்களையும் போலத்தானே உங்களுக்கு’’ என்கிறாள் அந்தப் பெண்.
‘’என் பெயர் அது எப்படி..’’-இது குந்தி.
‘’ஓ அரச வம்சத்துப் பெண்ணின் பெயரைச் சொல்லி விட்டேனென்று அதிர்ச்சியாகிறாயோ..அத உன்னைக் காயப்படுத்துகிறது அப்படித்தானே…எனக்கு உன் பெயர் தெரியும் குந்தி..அதை என் நினைவில் முடிந்து வைத்திருக்கிறேன்…உனக்காகவே இத்தனை ஆண்டுகள் காத்துக் கொண்டும் இருக்கிறேன்.நாங்கள் நகரங்களுக்குள் அதிகம் பிரவேசிப்பதில்லை.என்றாவது ஒரு நாள் நீ இங்கே இந்தக் காட்டுக்கு வந்தே தீருவாய் என நான் காத்திருந்தேன்.அது உன் விதி.நான் காத்திருந்த அந்த நாள் இன்று வந்தே விட்டது.’’


அவள் எதை நோக்கிக் காய் நகர்த்துகிறாள் என்பது குந்திக்கு இன்னும் விளங்கவில்லை.
‘’இங்கே நீ நிராயுதபாணியாக நிற்கிறாய் குந்தி.உன் புதல்வர்கள் யாரும் இங்கில்லை.எங்களைத் தண்டிக்க அவர்கள் தங்கள் படைகளைக் கூட இங்கே அனுப்ப முடியாது.’’
‘’நீ யார்..உனக்கு என்னதான் வேண்டும்’’என்கிறாள் குந்தி.
‘’உன்னுடைய மிகப் பெரிய பாவம் ஒன்றை நீ இன்னும் ஒப்புக் கொண்டாகவில்லை’’என்கிறாள் அந்தப் பெண்.
‘’இல்லை நான் அதைச் சொல்லி விட்டேன்…உனக்குத்தான் அந்த மொழி புரியவில்லை’’
‘’கர்ணனைப் பற்றிச் சொன்னதுதானே…உங்களைப் போன்ற அரச குடும்பத்தவர்களுக்கு வேண்டுமானால் அது ஒரு பாவச் செயலாக இருக்கலாம்....மனம் விரும்பிய காதலனோடு மகிழ்வதும் அவன் மூலம் ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதும் எங்களைப் பொறுத்தவரை ஒரு கொண்டாட்டம்.நாங்கள் இயற்கையின் நியதியை மதிப்பவர்கள்;அதன் ஒழுங்குக்கேற்ப வாழ்பவர்கள்.அதெல்லாம் உனக்குப் புரியாது’’
‘’என் ஒப்புதல் வாக்குமூலத்துக்குச் சற்றும் மதிப்பில்லை என்று எதை வைத்துச் சொல்கிறாய்..’’
‘’உன்னைப் பொறுத்தவரை உங்கள் ராஜநீதிகளைப் பொறுத்தவரை அது சரியானதாக இருக்கலாம்.எங்களைப் பொறுத்தவரை-தங்களது சுயநலத்துக்காக அப்பாவி மக்களைப் பலியிடுவதுதான் மன்னிக்க முடியாத பெருங்குற்றம்.நீ அந்தப் பாவத்தைச் செய்திருக்கிறாய்’’


குந்தி இன்னும் அவள் சொல்வதைப் புரிந்து கொள்ளவில்லை.அப்போது வாரணாவதத்தையும் அரக்கு மாளிகையையும் அந்த மாளிகை எரியூட்டப்பட்டபோது மடிந்து போன ஒரு அப்பாவித் தாய் மற்றும் அவளது ஐந்து புதல்வர்களையும் அவளுக்கு நினைவூடுகிறாள் அந்த முதியவள்.
‘’எங்கள் இனத்தைச் சேர்ந்த அவர்கள் அந்தத் தீயில் மடிந்து போனது வேண்டுமென்றே உங்கள் ராஜநீதி வகுத்த திட்டம்;பாண்டவர்களும் நீயும் அந்தத் தீயில் கருகி விட்டீர்கள் என்று வெளியுலகுக்குக் காட்டுவதற்காகப் போடப்பட்ட ஒரு நாடகம்.அதில் இறந்து போனது என் மாமியாரும் கணவர் மற்றும் அவரது சகோதரர்களும்..’’
’’ஆனால்..’’என்று ஏதோ சொல்ல வாயெடுக்கிறாள் குந்தி.அந்தப் பெண் அவளைப் பேச விடவில்லை.
‘’பாவப்பட்ட எங்கள் இனத்துப் பெண்கள் அரக்கு மாளிகைக்குத் தேவையான அன்றாடப் பொருட்களைச் சுமந்து கொண்டு அங்கே வந்து போய்க் கொண்டிருந்தார்கள்.காட்டுக்குப் பக்கத்தில் அந்த மாளிகை இருந்ததால்
அவர்களை வேண்டுமென்றே வரவழைத்து விருந்தில் கலந்து கொள்ளச் செய்தாய் நீ..இதற்கு முன்பும் எத்தனையோ முறை அந்தணர்களுக்கு விருந்து படைத்ததுண்டு நீ.அப்போதெல்லாம் எங்களைப் போன்ற மலை சாதிப் பழங்குடிப் பெண்களை..தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்களை ஒரு முறையாவது நீ அழைத்ததுண்டா…அந்த ஒரு முறை மட்டும் வருந்தி வருந்தி வேண்டுமென்றே அவர்களை அழைத்தாய்..எக்கச்சக்கமான மது அந்த விருந்தில் வெள்ளமாகப் பெருக்கெடுக்கப் போகிறது என்று சொல்லிச் சொல்லியே அவர்களுக்கு வலை வீசினாய்…’’
‘’ஆனால் உங்களைப் பார்த்தால் விதவைகளைப் போலத் தெரியவில்லையே..’’
அந்தப் பெண் சத்தமாகச் சிரிக்கிறாள்.
‘’இங்கும் உங்கள் அரச நியதிகள் எங்களுக்குப் பொருந்துவதில்லை.விருப்பம் போல மறுமணம் புரிந்து கொள்ளும் உரிமை எங்களுக்கு உண்டு.அதோ சற்றுத் தள்ளி நின்று கொண்டிருக்கிறார்களே..அவர்களும் என் கணவருடன் மாண்டு போன சகோதரர்களின் மனைவியர்தான்…நாங்களெல்லாம் வேறு திருமணம் செய்து கொண்டு பிள்ளைகுட்டிகளோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..’’


பேச்சு நீண்டுகொண்டே போகிறதே ஒழிய அவளது எதிர்பார்ப்பு இன்னதுதான் என்று குந்திக்குத் தெரியவில்லை.
‘’உனக்கு என்னதான் வேண்டும்..?நீ இப்போது என்னை என்ன செய்யப் போகிறாய்.’’
‘’இல்லை…கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் என்பதெல்லாம் உங்கள் ராஜ நீதி சொல்வது.…குருட்சேத்திரப் போரே அதன் விளைவுதானே..எங்கள் வழிகளே வேறு..’’
‘’சரி...சொல் நான் என்ன செய்ய வேண்டும்..’’
‘’ நீ செய்தது ஒரு பாவம் என்பது கூட உனக்குத் தோன்றவில்லை.உங்கள் சுயநலத்துக்காக ஆறு அப்பாவிக் காட்டுவாசிகளைப் பொசுக்கியது ஒரு பாவம் என்று உங்கள் புத்தகங்களில் எழுதப்பட்டிருக்கவில்லை..உன் ஞாபகத்திலும் கூட அது இல்லை.ஆனால் எங்களின் தருமப்படி…இயற்கைஅன்னையின் சட்டப்படி நீ,உன் மைந்தர்கள் அவர்களது கூட்டாளிகள் என்று எல்லோருமே குற்றவாளிகள்தான்…’’


அந்த முதியவள் குந்தியை நெருங்கி வருகிறாள்..
‘’இப்போது இந்தக் காட்டைப் பார்த்தாயா….வெகு சீக்கிரத்தில் இங்கே காட்டுத் தீ வரப் போகிறது.காட்டிலுள்ள பிற ஜீவராசிகளைப் போலக் காற்றின் வாசத்தை வைத்தே அதை எங்களால் சொல்லி விட முடியும்..அதனால்தான் நாங்கள் இங்கிருந்து போய்க் கொண்டிருக்கிறோம்…காட்டுதீ தீண்ட முடியாத தொலைதூர மலைகளுக்கு…ஏரிகளும் நதிகளும் நிறைந்த இடத்துக்கு..’’
‘’என்ன காட்டுத்தீ வரப் போகிறதா..’’
’’ஆமாம்…ஆனால் இங்குள்ள மூன்று குருடர்களால் எங்களைப் போல இங்கிருந்து தப்பிச் செல்ல முடியாது.ஒருவன் குருடனாகவே பிறந்தவன்.இன்னொருத்தி வேண்டுமென்றே தன்னை அவ்வாறு ஆக்கிக் கொண்டவள்.நீ…ஆமாம் நீயோ மூவரிலும் மிக மோசமான ஒரு குருடி..அப்பாவிகளைக் கொன்று விட்டு அதைப் பற்றி மிகச் சுலபமாக மறந்து விட முடிபவள் நீ..’’
‘’நிஷாதப் பெண்ணே என்னை மன்னிப்பதென்பது உன்னால் அத்தனை சாத்தியமில்லாததா என்ன?…’’
‘’மன்னிப்புக்காக இறைஞ்சுவதென்பது ராஜவம்சத்துக்கே உரிய ஒரு பலவீனம்.நாங்கள் ஐந்து பேரும் இங்கே வந்தபோது மற்றவர்களும் எங்களோடு வந்து விட்டார்கள்.வருடக் கணக்காக இந்தக் காடுதான் எங்களுக்கு எல்லாமே..’’
‘’ஆனால்..இப்போது காட்டுத் தீ வரப் போகிறதே..’’
‘’ஆமாம்..அதற்கென்ன..அது பாட்டுக்கு வந்து தன் வேலையைப் பார்த்து விட்டுப் போகும்;பிறகு மழை பெய்து தீயை அணைக்கும்;கருகிப் போன செடிகளில் மீண்டும் பச்சைநிறம் துளிர்க்கும்’’-


அந்தப் பெண் பேசிக் கொண்டே பறந்து போய்விட குந்தி உறைந்து போய் நிற்கிறாள்.அவள் மனம் வெறுமை மண்டிக் கிடக்கிறது.ஆசைகளோ விருப்பங்களோ எண்ணங்களோ உணர்ச்சிகளோ எதற்குமே அதில் இடமில்லை.தான் இருந்த இடத்தை விட்டு ஆசிரமத்துக்குச் சென்றபடி காட்டுத் தீயின் வரவுக்காகக் காத்திருக்க ஆரம்பிக்கிறாள் அவள்.தங்கள் நூறு பிள்ளைகளைப் பறி கொடுத்த திருதிராஷ்டிரனும்,காந்தாரியும்அங்கேதான் தங்கள் சாவுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.


குந்தியும் இப்போது மரணத்தை வரவேற்கும் மனநிலைக்கு வந்து விட்டிருக்கிறாள்.காட்டுத் தீயில் வெந்து பொசுங்கும் வேளையில் அதே போன்ற கோரத் தீயில் கருகிப் போன முகம் மறந்து போன ஒரு நிஷாதப் பெண்ணிடம் அவள் மன்னிப்பைக் கோர முற்படப் போகிறாளா..?
அரச வம்சத்தில் பிறந்தவர்கள் அப்பாவிகளைக் கொன்றழித்த குற்றத்துக்கு மன்னிப்புக் கோருவதும் உண்டா..?
குந்திக்குத் தெரியவில்லை என்று அவளது மனப் போராட்டத்தோடு கதையை முடிக்கிறார் மகா ஸ்வேதாதேவி.


மலை வாழ் பழங்குடி மக்கள்,ஆதிவாசிகள்,விளிம்பு நிலை மக்கள் ஆகியோரின் நலன் மீது ஆத்மார்த்தமான அக்கறை கொண்டு அவர்களின் போராட்டங்கள் பலவற்றில் ஒரு சமூகப் போராளி(social activist)யாகவும் பங்கேற்றிருப்பவர்  மகா ஸ்வேதாதேவி என்பதனாலேயே - அந்த மக்களின் சார்பில் மகாபாரதக் கதையை அறச் சீற்றத்தோடு மறு ஆக்கம் செய்திருக்கிறது அவரது எழுதுகோல்.



பி.கு;
கிட்டத்தட்ட இதே போக்கிலமைந்த வங்க மொழி நாடகம் ஒன்றும் உண்டு;அதில் சொர்க்க லோகத்தை நோக்கிச் செல்லும் தரும்னை வழி மறித்து அங்கே செல்லும் தகுதி அவனுக்கு உண்மையில் இருக்கிறதா என வினத் தொடுக்கிறான் ஒருவன்.தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்து தன் தாய் மற்றும் சகோதரர்களோடு பாண்டவர்களுக்காக இதே அரக்கு மாளிகை சம்பவத்தில் களபலியானவன் அவன்.அந்த நாடகம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு பரீக்‌ஷா ஞாநியால் மேடை நாடகமாக்கப்பட்டிருக்கிறது[இப்போது பெயர்,ஆசிரியர் நினைவில்லை.எவரேனும் நினைவிருந்தால் தெரிவித்தால் நல்லது]

குருட்சேத்திரப் போருக்குப் பின்.[After Kurukshethra-ஸ்வேதா தேவி கதைகளின் ஆங்கில மொழியாக்கம்]என்னும் அவரது சிறுகதைத் தொகுப்பில் இப் படைப்பு இடம் பெற்றிருக்கிறது.

மொழிபெயர்ப்பென்னும் சவால்..


''ஒரு கலாசாரச் சூழலில் இருந்து மற்றொரு கலாசாரச் சூழலுக்கு ஒரு படைப்பைப் பரிவுடன் விரல் பற்றி இட்டுச் செல்வதுதான் மொழிபெயர்ப்பின் தலையாய சவால்.இச் சவால் தமிழிலிருந்து ஐரோப்பிய மொழிகளுக்கு இடம் பெயரும்போது பேருருவம் கொள்கிறது.அடிப்படையான கலாசார இடைவெளிதான் இதற்கான இயங்கு காரணி’’

’’மொழிபெயர்ப்புக்குத் தேர்ந்தெடுக்கும் படைப்பில் மொழிபெயர்ப்பாளனுக்கு ரசனை கலந்த ஈடுபாடு வேண்டும்
It should be a labour of love. 
மூலப் படைப்பாளியின் படைப்பாளுமை குறித்த பொருளார்ந்த பிரக்ஞையும் புரிதலும் கூடுதல் சிறப்பு....''

-ஜெயகாந்தனின் படைப்புக்கள் பலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனின்இலக்கிய ஆளுமைகள்என்னும் நூலிலிருந்து

13.12.11

’அசட’னின் வருகை...

அக்டோபர் மாதமே வரக் கூடுமென எதிர்பார்ப்புக்கள் இருந்தபோதும் பதிப்புப் பணியில் நேரிட்ட ஒரு சில நடைமுறைச் சிக்கல்களால் சற்றுத் தாமதமான ‘அசட’னின் வெளியீடு இப்போது நிகழ்ந்து நூலும் வெளிவந்து விட்டது. நடப்பாண்டுக்குள் அந்த வெளியீடு சாத்தியமாக முடிந்ததில் மகிழ்ச்சி.

மதுரை பாரதி புத்தக நிலையம் வெளிட்டிருக்கும் இந்த மொழியாக்க நாவலை வாங்க எண்ணுவோரும்,முன்னமே முன் பதிவு செய்து கொண்டவர்களும் கீழ்க்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Bharathi Book House,
F-59 / 3 & 4 , Corporation Shopping Complex,
(Shopping Complex Bus Stand,)
Periyar Bus Stand,
Madurai-625001
"durai pandi pandi" <bharathibooks@yahoo.co.in>

பதிப்பாளரிடமிருந்து நூலின் பிரதிகள் போதிய அளவு அனுப்பி வைக்கப்பட்டபின்பு,ஆன்லைன் வழி உடுமலை.காமில் பதிவு செய்து கொண்டவர்களுக்குப் பிரதிகள் கிடைக்கும்.

நூலின் பிரதிகள் எழுத்தாளர்கள் திரு ஜெயமோகன்,மற்றும் திரு எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டதும்  அவர்கள் மின்னஞ்சல் வழி எனக்கு அளித்த வாழ்த்துச் செய்திகள்...

திரு ஜெயமோகன்;
அன்புள்ள சுசீலா
அசடன் நாவல் நேற்று கூரியரில் வந்தது. சிறப்பான கட்டமைப்பு. பிரம்மாண்டமாக இருக்கிறது. 
வாழ்த்துக்கள்

திரு எஸ்.ராமகிருஷ்ணன்
அன்பு சுசீலா அம்மா அவர்களுக்கு
அசடன் நூல் கிடைத்தது, மிகச்சிறப்பாக வந்திருக்கிறது, உங்களின் அயராத மொழியாக்கப்பணிக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள்
மிக்க அன்புடன்
எஸ்ரா


11.12.11

வீரிய வாசகம்

இன்று பாரதியின் பிறந்த நாள்!
தமிழர்கள் எல்லோருக்குமே பாரதி செல்லப் பிள்ளை.
எனக்கும் அப்படித்தான்...
பாரதியின் கண்ணன் பாட்டில் குருவாகவும் சீடனாகவும்,ஆண்டானாகவும் சேவகனாகவும் ஒரே வேளையில் கண்ணன் மாறி மாறிப் பாரதிக்குத் தோற்றம் தருவதைப் போலவே எனக்கும்

9.12.11

’தேவந்தி’-மற்றுமொரு எதிர்வினை...


எனது தேவந்தி சிறுக்தைத் தொகுப்பு பற்றி சி.சு.என்பவர் அனுப்பிய மின் அஞ்சலைப் பிரதி எடுத்து வெளியிட்டிருக்கிறேன்.மிகவும் தேர்ந்த ஒரு வாசக எதிர்வினை அது

2.12.11

தேவந்தி மதிப்புரை- பதிவுகள்...


புது தில்லியிலுள்ள வடக்கு வாசல் பதிப்பக வெளியீடாக,ஜூலை 29 அன்று முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்களால் வெளியிடப்பட்ட என் சிறுகதைத் தொகுப்பாகிய தேவந்தி பற்றிய இரு வலைப்பதிவுகள்....
சும்மா வலைப்பூவை எழுதி வரும் என் அன்பு மாணவியும் அருமை மகளுமான தேனம்மையின் பதிவு
http://honeylaksh.blogspot.com/2011/10/blog-post_19.html

மூன்றாம் கோணம் இணைய இதழில்-வாசிக்கலாம் வாங்க பகுதியில் மதிப்புரை வழங்கியுள்ள இணையத் தோழி திரு ஷஹிதாவின் கட்டுரைக்கான இணைப்பு..
எம். ஏ. சுசீலாவின் தேவந்தி - வாசிக்கலாம் வாங்க

மதிப்புரை வழங்கிய தேனம்மைக்கும், ஷஹிதாவுக்கும் என் நன்றி....

பின் குறிப்பு
தேவந்தி நூல் கிடைக்குமிடங்கள் பற்றி மதுரைநண்பர்கள் கேட்டிருந்தார்கள்.மதுரை தானப்ப முதலி தெரு மயூரா வளாகத்தில் உள்ள
மீனாட்சி புத்தக நிலையத்தில் தேவந்தி நூல் கிடைக்கும்.
இணைய வழி பெற உடுமலை.காமில் தொடர்பு கொள்ளலாம்.
உடுமலை.காம்
வடக்கு வாசல் பதிப்பகத்தையும் தொடர்பு கொள்ளலாம்.அதன் முகவரி வலையின் முகப்புப் பக்கத்திலேயே உள்ளது.


1.12.11

தமிழ்மகனின் புதிய நாவல்

எனது மதிப்பிற்குரிய நண்பரும் தினமணி உதவி ஆசிரியருமான திரு தமிழ்மகனின் ’ஆண்பால் பெண்பால்’என்னும் நாவல்,வரும் டிசம்பர் மூன்றாம் தேதி சென்னை-ஸ்பென்ஸர் எதிரில் உள்ள புக் பாயிண்ட் அரங்கத்தில் மாலை ஆறு  மணிக்கு வெளியாகிறது. 
அந்தப் படைப்பின் அறிமுகமாக அவர் எனக்கு அனுப்பியுள்ள மின் அஞ்சல் கீழே..


மீண்டும் மூன்றாண்டு ழைப்புக்குப் பிறகு ஆண்பால் பெண்பால் நாவலை எழுதி முடித்திருக்கிறேன்.
 ஆணுலகத்தையும் பெண்ணுலகத்தையும் சற்று உளவியல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தொட்டுப் பார்க்கும் முயற்சி இது. இந்த எல்லா அம்சங்களிலும் அவர்களுக்குள் ஏராளமான முரண்பாடுகள் ஏற்படுகின்றன.
ஒரு சம்பவத்தை ஆண் சொல்லிச் செல்வதற்கும் அதை பெண் சொல்லிச் செல்வதற்கும் சில தன்மை வேறுபாடுகள் உண்டு. ஒரு நாவலையே பெண்ணும் ஆணும் சொல்லிச் செல்லும் விதமாக இந்த நாவலைப் படைத்திருக்கிறேன்.
திருமண பந்தம் மட்டுமே ஒரு ஆணையும் பெண்ணையும் இணைத்துவிட போதுமானதாக இருப்பதில்லை.  அதனால்தான் இணைந்து இருப்பதற்காகவோ, பிரிந்து போவதற்கோ தினந்தோறும்  இருவருமே முயற்சி செய்தபடியே இருக்கிறார்கள். அந்த முயற்சிக்கு புத்திசாலித்தனங்களும் முட்டாள்தனங்களும் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறது. சமயத்தில் பிரிவதற்கு புத்திசாலித்தனமும் இணைந்திருப்பதற்கு முட்டாள்தனமும் முக்கியமாகிவிடுகிறது.
கணவனால் பொருட்படுத்தப்படாத சில காரணங்கள், மனைவிக்கு எத்தனை பொருள் நிறைந்தததாக இருக்கிறது என்பதற்காக சில காரணங்களைச் சொல்லியிருக்கிறேன்.
முக்கியமாக இரண்டு காரணங்கள். ஒன்று, பெண்களின் அழகைக் கேள்விக் குறியாக்கும் ஓர் உடற்குறைபாடு... வெண்புள்ளி. இரண்டு,  பெண்களால் பெரிதும் ஆராதிக்கப்பட்ட ஒரு அரசியல் தலைவர்... எம்.ஜி.ஆர். ஒன்று நோய், இன்னொன்று அரசியல். இரண்டுமே நோய் என்பார் உளர்(பவர்). இரண்டுக்கும் பொது அம்சம் தோற்றக் கவர்ச்சி. இதில் பெரும்பாலும் மாற்றுக் கருத்து இல்லை.
கையெழுத்துப் பிரதியைப் பார்த்துவிட்டு இது பொம்பளை கையெழுத்து மாதிரி இருக்கிறதே என்றனர். பெண்களுக்கென்று விசேஷமாக கையெழுத்து இருக்க முடியுமா?
இருக்கும் என்கிறார்கள். பெண்கள் கையெழுத்தில் ஒரு கவனக் குவிப்பு இருப்பதைச் சுட்டிக் காட்டினர். கையெழுத்தில் அழுத்தம் அதிகம் இருக்கும் என்கிறார்கள்.
யாரோ போனில் பேசினார். அந்த ஆளோட குரல் பொம்பளை குரல் மாதிரி இருக்கிறது என்றார் ஒருவர்.
ஒருவன் நடந்து போனான். அவன் நடை பெண்ணோட நடை மாதிரி இருக்கிறது கருத்து சொன்னான் பக்கத்தில் இருந்தவன்.
எதுக்குடா பொம்பளை மாதிரி பயப்படறே என்று தைரியமூட்டுகிறான் ஒருவன்.
இந்த வழக்கமான பேச்சுகளின் பின்னணியை ஆராய, மனிதகுல வரலாற்றின் தொன்மையான காலந்தொட்டு ஏற்பட்ட சமூக மாற்றங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது.
பெண்ணுக்கும் ஆணுக்குமான சிந்தனை, பயம், ஏதிர்பார்ப்பு, ஆர்வம், அலட்சியம், தன்னலம், பாசம், பக்தி, தேவை, அணுகுமுறை எல்லாவற்றிலும் மெல்லிய வேறுபாடுகள் இருப்பதைப் பார்க்கிறேன். இத்தகைய விஷயங்களில்தான் தினமும் அவர்களுக்குள் வாக்குவாதங்கள் ஆரம்பிக்கின்றன.
அதே விஷயங்களில் மெல்லிய வேறுபாடுகள் ஆண்களுக்குள் இல்லையா, பெண்களுக்குள் இல்லையா என்று கேட்கலாம்.
கணவன், மனைவியாக மாறும்போது இந்த பிரச்னைகள் சில நேரங்களில் சேர்ந்து வாழ்வதையே கேள்விக்குறியாக்கிவிடுவதைப் பார்க்கிறோம். அதனால் குடும்பம் பாதிப்புக்குள்ளாவதும் வாரிசுகள் பாதிக்கப்படுவதையும் பார்க்கிறோம். கணவன், மனைவி பிரிவது உறவுச் சங்கலித் தொடரின் பாதிப்பாக இருக்கிறது. அதுதான் இதன் தீவிரம்.
நாவலில் இந்தப் பிரச்னைகளை ஒருவித அமானுஷ்யத் தன்மையுடன் சொல்ல முயன்று இருக்கிறேன். சொல்லும் உத்தியிலும் சில முயற்சிகள் செய்திருக்கிறேன். கதையின் முடிவை கதையின் நடுவிலேயே... ஐன் இரம்பத்திலேயே சொல்லுவதாகவும் பின்னால் நடக்கப் போவதை முன்னரேயும் முன்னால் நடந்ததைப் பின்னரும் சொல்லியிருக்கிறேன்.
கதையை கதையில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் சொல்லிச் செல்கின்றன. அந்தக் கதாபாத்திரங்கள் எழுத்தாளர்கள் இல்லை என்பதால் அவர்கள் அப்படித்தானே சொல்ல முடியும் என்பது போன்ற உத்தி.
இந்த நாவலை நான் எழுதவில்லை என்பதை ஆதாரபூர்வமாக விளக்குவதே  நாவலின் ஆரம்பம்... வாசகர்களுக்குப் புதிய அனுபவ வாசலைத் திறந்து வைக்கும் என்று நம்புகிறேன்.


அறிவியல் சிறுகதைகள் உட்படச் சிறந்த பல சிறுகதைகளையும்,நாவல்களையும் உருவாக்கியுள்ளவர் திரு தமிழ்மகன். 
அவரது வெட்டுப்புலி நாவல்,திராவிட இயக்க வரலாற்றுப் பின்னணியின் தாக்கம் தமிழகத்தின் மனநிலையில் ஏற்படுத்திய பல மாற்றங்களை விரிவாகப் பதிவு செய்திருக்கிறது.மிகுதியும் பேசபட்ட அந்த நாவலத் தந்த தமிழ்மகன் தனது புதிய நாவலான ஆண்பால்-பெண்பால் வழி அடுத்த உயரத்தையும் எட்டியிருப்பார் என எண்ணுகிறேன்.அப் படைப்பை விரைவில் படிக்கத் தூண்டும் ஆவலை அவரது அழுத்தமான முன்னுரை கிளர்த்தியிருக்கிறது.
தமிழ்மகனுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.
காண்க;
வெட்டுப்புலியின் வீச்சுக்கள் 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....