முழுமையான தீமை என்றோ...முழுமையான தீயவர்கள் என்றோ உலகில் எதையும் யாரையும் வரையறுக்க முடியாது என்பதை எப்போதுமே தன் படைப்புக்களில் முன்னிறுத்துபவர் தஸ்தயெவ்ஸ்கி என்பது அவரைப் பற்றி ஓரளவேனும் அறிமுகமுடைய வாசகர்கள் அறிந்திருப்பதுதான்.
காமுகனான சுவிட்ரிகைலோவ்,கண்டிப்பான கடுமை காட்ட வேண்டிய நிலையில் இருக்கும் நீதிபதி போர்ஃபிரி பெத்ரோவிச் ஆகியோரிடமும் கூட வற்றாமல் சுரக்கும் மானுடக் கருணையின் தெறிப்புக்களைக் குற்றமும் தண்டனையும் நாவலிலும் கூட மிக இயல்பாகச் சித்திரித்திருக்கிறார் தஸ்தயெவ்ஸ்கி. அவரது இடியட்/அசடன் நாவலும் அதிலிருந்து விலக்குப் பெற்றதில்லை என்பதோடு கூடுதலான ஒரு பரிமாணமும் அதில் சேர்ந்திருப்பதே அவரது பிற படைப்புக்களிலிருந்து தனித்து நிற்கும் தகுதியை அசடனுக்கு அளிக்கிறது.
அசடனாகச் சொல்லப்படும் இளவரசன் மிஷ்கினின் பாத்திரத்தை அப்போதுதான் மண்ணில் ஜனித்த ஒரு குழந்தையைப் போன்ற பரிசுத்தத்துடன் - கபடுகளும் சூது வாதுகளும் வன்மங்களும் வஞ்சனை எண்ணங்களும் கிஞ்சித்தும் தலை காட்டாத ஒரு பாத்திரமாக மட்டுமே - மிகப் பெரிய இந்த ஆக்கத்தின் எல்லாக் கட்டங்களிலும் முழுக்க முழுக்கக் காட்ட முயற்சி மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் தஸ்தயெவ்ஸ்கி.பிறரைப் பற்றிய தவறான எண்ணம் தற்செயலாக மனதில் தோன்றும் தருணங்களிலும் - அந்த எண்ணம் அல்லது கணிப்பு உண்மையாகவே இருந்தாலும் கூட- அப்படி நினைத்து விட்டதற்காகவே தன்னைத் தானே கடிந்து கொள்ளும் ஓர் உன்னத மாமனிதன் மிஷ்கின்.பிறர் துயர் கண்டு இரங்கி நெகிழ்வதோடு நின்று விடாமல்,அந்தத் துயர் தீர்க்கத் தன்னையே ஒப்புக் கொடுத்துக் களபலியாக்கத் துணியும் உள்ளம் மிஷ்கினைப் போல அத்தனை எளிதாக எவருக்கும் வாய்த்து விடுவதில்லை.
தன்னை வேடிக்கைப் பொருளாக்கி அலைக்கழிக்கும் பெண்களாகட்டும்..வன்மத்தோடும்,பொருளாசையால் தூண்டப்பட்ட சுரண்டல் விருப்பங்களோடும்,கொலை வெறியோடும் தன்னை அணுகும் மனிதர்களாகட்டும்..! இவர்களில் எவருமே எப்போதுமே அவனது வெறுப்புக்கும் கசப்புக்கும் உரியவர்களாவதில்லை; மாறாக அவர்களின் நிலை கண்டே அவன் கசிந்து உருகுகிறான் ; அவர்களது எதிர்காலம் குறித்தே அவன் கவலை கொள்கிறான்.உலகத்தின் லௌகீகப் பார்வையில் அவன் அசடனாகப் பார்க்கப்படுவதற்கான காரணமும் அதுவே...
''எனக்கு இருபத்தேழு வயதாகிறது..
ஆனாலும் கூட நான் ஒரு குழந்தையைப் போலத்தான் இருக்கிறேன்...
என்னுடைய பாவனைகள் எல்லாமே...எப்போதுமே இடத்துக்குப் பொருத்தமற்றவையாகவே இருக்கின்றன.நான் சொல்ல நினைத்த கருத்துக்கு எதிரான கருத்தையே அவை வெளிப்படுத்தி விடுகின்றன.
அதனாலேயே நகைப்புக்கு இடமாகி நான் சொல்ல வந்த கருத்துக்களைத் தரம் தாழ்த்தியும் விடுகின்றன..
எதை..எப்படி..எந்த அளவுக்குச் சொல்வது என்ற அறிவு என்னிடம் சுத்தமாகவே இல்லை.அதுதான் முக்கியமான விஷயம்..! ’’
என்றபடி தன் நடத்தை மீதான ஒப்புதல் வாக்கு மூலத்தை அவனே அளித்தபோதும் - ஒரு புறம் அவனை அசடனாக்கிப் பரிகசிக்கும் உலகம் அவன் ஒரு தூய ஆன்மா என்பதை மட்டும் மறுதலிப்பதே இல்லை.
ஆளுக்கொரு புறமாக அவனை அலைக்கழித்து ஆட்டிப் படைக்கும் இரு பெண்பாத்திரங்களுமே அவனது இதயத்தின் பரிசுத்தத்தை வியக்கிறார்கள்.
’அன்பான நல்லிதயம் படைத்த நேர்மையான வெகுளித்தனம் கொண்ட ஒரு மனித’னாக அவனைக் காணும் நஸ்டாஸியா ஃபிலிபோவ்னா,பலதரப்பட்ட ஆண்களின் வஞ்சகங்களுக்கு ஆளாகி வாழ்வில் நொந்து போனவள்.மிஷ்கினின் தன்னலம் துறந்த அன்பும் காருண்யமும் அவளுக்கு வியப்பூட்ட,‘’என் வாழ்க்கையில் சந்தித்த முதல் மனிதர் நீங்கள்தான்!’’
என்கிறாள் .
மிஷ்கினின் வாழ்வில் குறுக்கிட்டுக் குறும்பு செய்யும் இன்னொரு பெண்ணான அக்லேயா இவானோவ்னா,
’’உங்களுடைய சுண்டுவிரல் அளவுக்குக் கூடத் தகுதியானவர்கள் இங்கே இல்லை.உங்களுடைய மனம்,உங்களுடைய இதயம் ஆகியவற்றுக்கு ஈடு கொடுக்கும் இணையான தகுதி படைத்தவர்கள் இங்கே யாருமே இல்லை.அவர்கள் எல்லோரையும் விட நீங்கள் மிகவும் நேர்மையானவர்;மிகவும் மேன்மையானவர்;சிறந்தவர்;அன்பானவர்.அவர்கள் எல்லோரையும் விட அறிவுக் கூர்மை படைத்தவர் நீங்கள்.இவர்களில் சிலர் நீங்கள் நழுவ விட்ட கைக் குட்டையை எடுக்கும் தகுதி கூட இல்லாதவர்கள்’’
என்று அவனுக்கு நற்சான்று வழங்குகிறாள். ’’எப்படிப்பட்ட அன்பான இதயம் கொண்ட மனிதன்....ஆனால் தன்னைத்தானே அழித்துக் கொள்ள வேண்டுமென்பதே அவனது விதியாக இருக்கிறது’’
’’உங்களுடைய சுண்டுவிரல் அளவுக்குக் கூடத் தகுதியானவர்கள் இங்கே இல்லை.உங்களுடைய மனம்,உங்களுடைய இதயம் ஆகியவற்றுக்கு ஈடு கொடுக்கும் இணையான தகுதி படைத்தவர்கள் இங்கே யாருமே இல்லை.அவர்கள் எல்லோரையும் விட நீங்கள் மிகவும் நேர்மையானவர்;மிகவும் மேன்மையானவர்;சிறந்தவர்;அன்பானவர்.அவர்கள் எல்லோரையும் விட அறிவுக் கூர்மை படைத்தவர் நீங்கள்.இவர்களில் சிலர் நீங்கள் நழுவ விட்ட கைக் குட்டையை எடுக்கும் தகுதி கூட இல்லாதவர்கள்’’
என்று அவனுக்கு நற்சான்று வழங்குகிறாள். ’’எப்படிப்பட்ட அன்பான இதயம் கொண்ட மனிதன்....ஆனால் தன்னைத்தானே அழித்துக் கொள்ள வேண்டுமென்பதே அவனது விதியாக இருக்கிறது’’
என்கிறார் அவனது தூரத்து உறவினரான தளபதி இபான்சின்.
அவனுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டிருக்கும் கன்யா,ரோகோஸின் போன்றவர்களும் கூட அவன் தூயவன் என்னும் உண்மையை ஆமோதிக்கவும் அங்கீகரிக்கவும் தயங்குவதில்லை என்பதிலேயே இந்த நாவலின் அழகு பொதிந்திருக்கிறது.
[மேலும்-
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக