துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

13.6.23

மொழிபெயர்ப்பு-உரையாடல்,இலக்கிய வெளி

 ஐந்து மொழிபெயர்ப்பாளர்களிடம் ஐந்து கேள்விகள் என்ற தலைப்பில் கனடாவிலிருந்து வெளிவரும் ’இலக்கிய வெளி’ இதழில் வெளிவந்திருக்கும் என் பதில்கள்




1. உங்களுடைய மொழிபெயர்ப்புத்தேர்வு எந்த அடிப்படையில் அமைந்துள்ளது?

விடை:
என் முதல் இரு மொழிபெயர்ப்புப் பணிகளும், அதற்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களும் - அவை இரண்டுமே என் தெரிவுகளாக அல்லாமல் தற்செயலாக வாய்த்தவை மட்டுமே என்பது பலருக்கும்  வியப்பூட்டலாம். என் பேராசிரியப் பணிக்கு நடுவே 1979 ஆம் ஆண்டு முதல் இடையிடையே- சிறுகதைகளை மட்டுமே எழுதி வந்தேன். தமிழ் வார மாத இதழ்களில் அவை வெளிவந்து கொண்டிருந்தன. நான் பணி ஓய்வு பெற்றபின் 2006 இல் ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கியின் புகழ் பெற்ற செவ்வியல் படைப்பான  ‘குற்றமும் தண்டனையும்'- Crime and Punishment-  நாவலை மொழிபெயர்த்துத் தர வேண்டும் என்ற கோரிக்கையோடு ஒரு பதிப்பாளர் என்னை அணுக, மொழிபெயர்ப்பு என்ற துறையை  நான் முதல் முறையாக முயன்று பார்த்தது அப்போதுதான். அதற்குக் கிடைத்த 
வரவேற்பையும்,ஊக்கத்தையும் தொடர்ந்து  அதே பதிப்பாளர்  தேர்வு செய்த தஸ்தயெவ்ஸ்கியின் 'அசடன்'- The Idiot நாவலையும் மொழி பெயர்த்தேன். இந்தப்   பணிகளுக்குப் பிறகு நான் மொழிபெயர்த்த படைப்புக்கள் அனைத்தும் என் தேர்வுகள் மட்டுமே. முதல் இரண்டும் ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புக்களாக அமைந்து போய்.., எனக்கும் அவரது பாணியும்,கதைக்கூற்று முறையும்,அவரது மன அமைப்பும் பழகியும் பிடித்தும் போனதால் தொடர்ந்து அவரது மூன்று  குறுநாவல்கள்,பல சிறுகதைகள்... மற்றும் அவரது இன்னொரு பெரும் நாவல் படைப்பு என்று நானே தேர்வு செய்து, தொடர்ந்து தமிழில் மொழியாக்கம் செய்து வருகிறேன். இடையே சில இணைய இதழ்கள் மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் வேண்டுமென்று என்னிடம் கேட்டபோது தஸ்தயெவ்ஸ்கியின் கதைகளோடு இந்தியநாட்டின் வங்க மொழி எழுத்தாளர்களான மகாஸ்வேதாதேவி, ஆஷா பூர்ணாதேவி, வட கிழக்கு மாநில எழுத்தார் டெம்சுலா ஆவ் ஆகியோரின் சிறுகதைகளையும், அயலக எழுத்தாளர்களான ஆண்டன் செக்காவ்,டால்ஸ்டாய் போன்றோரின் கதைகளையும் தெரிவு செய்து கொண்டேன். மொழிபெயர்ப்புக்கான 
என் தெரிவின் அடிப்படைகள் இவைதான்: 
ஒரு படைப்பு என்னை ஈர்த்துக் கட்டிப்போட வேண்டும். அதன் முதல் வாசிப்பிலேயே அதன் மொழியாக்கம் என்னுள் தன்னிச்சையாக ஓடத்தொடங்க வேண்டும். இவை அமையும்போது குறிப்பிட்ட படைப்புக்கள் என் தெரிவுகளாகி விடும். என் அளவுகோல் அது மட்டும்தான்.

2. தஸ்தயெவ்ஸ்கி படைப்புக்களைத் தமிழாக்கம் செய்யும்போது அவரது மொழி கடினமானது என்பதை நாம் அறிவோம். அத்தகைய சூழலில் அதனை நீங்கள் எவ்வாறு எதிர்கொண்டீர்கள்?

விடை:
முதல் கேள்விக்குச் சொன்ன விடையிலேயே இதற்கான பதிலும் அடங்கி இருக்கிறது. தஸ்தயெவ்ஸ்கியின் மாபெரும் செவ்வியல் ஆக்கங்களை முதலில் செய்து விட்டதால் அவரது போக்கு எனக்குப் பிடிபடத் தொடங்கி விட்டது. ஆங்கிலம் வழியாக அந்தப் படைப்புக்களைப் பெயர்க்கும்போது ஒரே படைப்புக்குப் பல ஆங்கில மொழிபெயர்ப்புக்களை ஒப்பு நோக்கிக் கருத்துப் பிழை வந்து விடாமல் இருக்க கவனம் எடுத்துக் கொள்வேன். தெளிவாக எனக்குள் அதை உட்செலுத்திக்கொண்ட பின்பே தமிழில் வைப்பேன். பொதுவாக தஸ்தயெஸ்கியின் படைப்பு மொழி சிக்கலானதுதான். குறிப்பாக நிலவறைக் குறிப்புகள் போன்ற இருத்தலியல் நாவல்களில் மிகவும் சிக்கலானதும், இருண்மையானதும் கூட. சில வேளைகளில் அவரது பெரிய நாவல்களை விடவும் கூடுதல் சிரத்தை எடுத்துக்கொண்டுதான் அவரது குறுநாவல்களையும் செய்ய வேண்டி இருந்தது.  படைப்பின் மீதும் படைப்பாளி மீதும் கொண்ட பற்றின் காரணத்தால்  அவற்றை என் முன் நிற்கும் சவாலாகக் கருதி என்னால் இயன்ற வரை நியாயம் செய்தபடி, தமிழுக்குச்  சரியாகக் கொண்டு வந்து சேர்க்க முயற்சி மேற்கொண்டு வருகிறேன்.

3.
நீங்கள் சிறுகதைளையும், நாவல்களையும் தொடர்ச்சியாக மொழிபெயர்த்து வருகிறீர்கள். அவ்வகையில் எந்த மொழி இலக்கியங்கள் மொழிபெயர்ப்பதற்கு இலகுவாக இருப்பதாகக் கருதுகிறீர்கள்?

விடை:
ரஷ்ய நாவல்கள், வங்கக்கதைகள் என்று எல்லாவற்றையுமே நான் ஆங்கிலத்தை இடைமொழியாகக் கொண்டு அதன் வழியாக மட்டுமே மொழிபெயர்த்து வருகிறேன்.  ஆங்கிலத்திலேயே நேரடியாக எழுதப்பட்ட டெம்சுலா ஆவின் சிறுகதைகள், பஞ்சாப் எழுத்தாளர் ஹரீந்தர் சிக்காவின்  'செஹ்மத் அழைக்கிறாள்' என்ற நாவல்   ஆகியவற்றையும் செய்திருக்கிறேன். அவை இரண்டும் ஆங்கிலத்திலிருந்து நேரடியாக செய்யப்பட்ட என் மொழியாக்கங்கள். பிறமொழிகளிலிருந்து நான் பெயர்ப்பதில்லை என்பதால் பிற மொழிகளை ஒப்புநோக்கிக் கருத்துக் கூற என்னால் இயலவில்லை.

4. மொழிபெயர்ப்பில் உங்கள் முன்னோடி யார்?


விடை:
மொழிபெயர்ப்புக்குள் நான் பிரவேசித்ததே முற்றிலும் தற்செயல் என்பதால்  முன்னோடி என்று குறிப்பாக எவரையும் நான் கருதிக்கொள்ளவில்லை. எனினும் சிறு வயதிலிருந்தே மொழியாக்கப் புனைவுகளையும் படித்து வருவதால் த நா சேனாபதி,
த நா குமாரஸ்வாமி,காண்டேகரை மொழிபெயர்த்த திரு கா ஸ்ரீ ஸ்ரீ, 
வங்க நூல்கள் பலவற்றை மொழிபெயர்த்திருக்கும் திரு சு.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மீது எனக்குப் பெரு மதிப்பு உண்டு. முன்னோடிகளின் வழியிலோ, கோட்பாடுகளை அடிப்படையாகக்கொண்டோ செய்யாமல், மொழியின் துணை கொண்டு  உள்ளுணர்வின் தடம் பற்றி மட்டுமே
என் மொழியாக்கங்களை செய்து வருகிறேன்.தொடக்கத்தில் சொந்தப்புனைவுகளை, சிறுகதைகளை எழுதியிருப்பதால், இப்போது மொழியாக்கத்துறையில் ஈடுபட்ட பிறகும்,சொந்தப்படைப்பாக்கத்திலும் ( நாவல்,சிறுகதை என) கருத்துச் செலுத்தி வருகிறேன். மொழியாக்கத்துக்கு எடுத்துக் கொள்ளும் கதைகளைக் கதைப்போக்கு குலையாமல் மொழியாக்கம் செய்ய சொந்தப்படைப்பாக்க அனுபவமும் எனக்குத் துணை நிற்கிறது.

5. தமிழின் நவீன புனைகதைகளில் உலக மொழிகளில் மொழிபெயர்த்து வழங்கும் அளவுக்கு தரமான படைப்புக்கள் என்று எவற்றைக் கருதுவீர்கள்?

இளம் படைப்பாளிகள்...
புகழ் பெற்ற படைப்பாளிகள் என்று தரமான நூல்கள் பல தரப்புக்களிலிருந்தும் இன்று தமிழில் வந்து கொண்டேதான் இருக்கின்றன.  அவற்றை இனம் கண்டு  உலக மொழிகளுக்குக் கொண்டு சேர்ப்பது அந்தந்த மொழிகளில் தேர்ச்சி பெற்ற மொழிபெயர்ப்பாளர்களின் விருப்பம்.  சமகால நூல்களிலிருந்து  அப்படி எதையும் தரம் பிரித்துத் தனியே சுட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை.

இந்த உலகம் -மொழியாக்கச் சிறுகதை

                                           இந்த உலகம்



வங்க மூலம்: ஆஷா பூர்ணாதேவி

ஆங்கில வழி தமிழாக்கம்எம்  சுசீலா

[கனடாவிலிருந்து வெளிவரும் ’இலக்கிய வெளி’ இதழில் வெளிவந்திருக்கும் என் மொழியாக்கச் சிறுகதை]


இந்த உலகம் 


வங்க மூலம்: ஆஷா பூர்ணாதேவி
ஆங்கில வழி தமிழாக்கம்: எம் சுசீலா


(
வங்காளத்தின் புகழ் பெற்ற கவிஞரும் நாவலாசிரியருமான ஆஷா பூர்ணா தேவி, ஞான பீட விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர். சாகித்திய அகாதமி, பத்மஸ்ரீ ஆகிய விருதுகளையும் வென்றிருக்கும் இவரது பெரும்பாலான புனைவுகள், வங்காளக் கூட்டுக்குடும்பங்களில் பெண்களின் நிலையை மையப்படுத்துவனவாய் அமைந்திருக்கின்றன. MATCH BOX என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள அவரது சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கதையே உலகம் இவ்வளவுதான்.)

 


நள்ளிரவு நேரங்களில்டாக்டர் பாபு, டாக்டர் பாபுஎன்று அழைக்கும் சத்தம் கேட்டால், டாக்டர் வீட்டிலுள்ள எவருமே அதைக் கேட்டுப் பெரிதாகப் பரபரப்படைந்து விடுவதில்லை. அதற்குப் பின்னால் இருப்பது என்னவென்பது வேறு யாருக்குத் தெரியுமோ தெரியாதோ அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அந்த அழைப்பில் வருமானம் வருவதற்கான வாய்ப்பு ஓரளவு இருக்குமோ என்று எண்ணி அதற்காகக்கூட அவர்கள் மகிழ்ந்து போய்விடுவதில்லை.

அப்படி ஒரு அழைப்பு வந்ததுமே டாக்டரின் தாய், கோபத்தால் கொதித்தபடி..
எல்லாரும் துஷ்டனுங்க, துரோகிங்க. என்னோட பிள்ளையை உயிரோடயே விடப் போறதில்லை அவங்கஎன்று சொல்வாள்.

டாக்டரின் மனைவியோ

 இவங்களுக்கெல்லாம் நடு ராத்திரியை விட்டா சாகறதுக்கு வேற நேரமே கிடைக்காது போல இருக்குஎன்று அந்த நோயாளியைப் பற்றியே,சுலபமாய் இப்படிச் சொல்லி விடுவாள்.

டாக்டரின் மகள் எழுந்து சென்று அழைத்தது யார் என்று பார்ப்பாள், பிறகு, புருவத்தைச் சுருக்கியபடி
அப்பாவுக்கு முடியலியே, இப்பதான் படுக்கப் போயிருக்கார். இப்ப போய் அவரை எப்படி எழுப்பறது,சொல்லுங்கஎன்பாள்.

ஏதோ கொஞ்சம் பணம் கிடைப்பதற்கான சாத்தியக்கூறு இருந்தால், அதைக்கூட ஒதுக்கித் தள்ளி விட்டு இப்படியெல்லாம் அவர்களால் சொல்லி விட முடியும்.

ஆனால்குறிப்பிட்ட ஒருவர் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் எந்தச் சாக்குப் போக்கு சொல்லவும் முடியாதென்றால்? அப்போது என்னதான் செய்வது? எரிச்சலும் கோபமும் எந்த அளவுக்கு உச்ச பட்ச நிலையை எட்டும்…? எப்படி உயர்ந்து கொண்டே போகும்? டாக்டர் போஷோக்கின் மனைவி திருமதி துர்காவதியின் முகத்தில் கொப்பளிக்கும் கோபத்தை எந்தக் கருவியைக்கொண்டும் அளந்து விட முடியாது. தெர்மாமீட்டரை வைத்தால் அதுவும் கூட உடைந்து சிதறி விடும். ஆனாலும் அவள் தன் அளவு கடந்த கோபத்தை அடக்கி வைத்துக்கொண்டு அமைதியாகத்தான் இருந்தாக வேண்டும். ஒரு சிறிய முணுமுணுப்புக் கூட அவளிடமிருந்து வெளிப்பட்டு விட முடியாது. காரணம், நள்ளிரவின் அமைதியைக் குலைப்பது, டாக்டர் போஷோக்கின் உயிர் நண்பர் ஷுதாகாந்தோவின் மூத்த மகன் ஷுகந்தோ.

ஷுகந்தோ அவரை டாக்டர் பாபு என்று கூடக்கூப்பிடுவதில்லை. சித்தப்பா என்றுதான் அவன் அவரை அழைப்பது வழக்கம்.
ஆனால் அவன் வந்து இப்படிக்கூப்பிடுவது ஒரு தரம் இரண்டு தரம்தானா? இல்லை. அப்படி இருந்திருந்தால் துர்காபாய் இந்த அளவு கொதித்துப் போயிருக்க மாட்டாள். இது ஒரு தினசரி வழக்கம் போல அல்லவா ஆகிப் போய்விட்டது?

ஷுதாகாந்தோவின் மனைவி ஓர் இதய நோயாளி. திடீரென்று எந்த நேரமும் மரணத்தின் விளிம்பில் போய் நின்று விடுபவள் அவள். அதிலும் குறிப்பாக நடு இரவு நேரத்திலேதான் அது நிகழும். அதனால் தூக்கம் அப்பிக் கிடக்கும் விழிகளோடு ஷுகந்தோ இங்கே ஓடி வருவதும் ஜன்னலுக்குக் கீழே நின்றபடிசித்தப்பா, சித்தப்பாஎன்று குரல் கொடுப்பதும் வாடிக்கையாக நடந்து கொண்டிருந்தது. அவன் வெகுதூரம் ஓடி வர வேண்டிய தேவையில்லை என்பது உண்மைதான், ஷுதாகாந்தோவின் வீட்டிலிருந்து ஐந்தாறு வீடுகள் தள்ளித்தான் டாக்டர் வீடும் இருந்தது. டாக்டரின் பாலிய கால நண்பர் ஷுதாகாந்தோ.

சித்தப்பாஎன்ற குரலைக்கேட்டதுமே டாக்டர் எழுந்து உட்கார்ந்து விட்டார். அவரது தூக்கம் சட்டென்று கலைந்து விட்டது. துர்காவும் ஆழ்ந்த உறக்கத்தில் இல்லையென்பதால் அவளும் விழித்துக் கொண்டாள்.
யாரோ கூப்பிடற மாதிரி இருக்கேஎன்று சொன்னார் டாக்டர்.
புதுசா வேற யாரும் இல்லை. எல்லாம் உங்க ஷுதாவோட பையன்தான். அவரோட பொண்டாட்டிக்கு மறுபடி சாவு நெருங்கியிருக்கும்னு நெனக்கிறேன். யப்பாடிஎப்படி கல்லு மாதிரி ஒரு உசிரு அது? சாவே வர மாட்டேங்குதே?”

ஆமாம் …, அவ சாகறதிலே உனக்கென்ன லாபம்…? அவ உயிரோட இருந்தா , உன்னோட பயிர் பச்சையெல்லாம் பாழாப்போயிடுமா என்ன?”

அப்படிக் கூட நடந்தாலும் நடக்கலாம், யார் கண்டா? ராத்திரி பகல்னு இல்லாம எப்ப பார்த்தாலும் உங்களுக்குத் தொந்தரவு கொடுத்துக்கிட்டே இருக்கா அவ.”

அவ அப்படித்தான் செய்வா,அவளாலே அப்டித்தான்செய்ய முடியும். டாக்டர்னா எல்லாரும்தான் தொந்தரவு தருவாங்க

ஒருவேளை சுகதுக்கங்களாலே பாதிக்கப்படாதவராஒரு சன்யாஸி மாதிரி இருக்க உங்களாலே முடியலாம். ஆனா தினம் இப்படி தூக்கம் கலைஞ்சு போறது என் உடம்புக்கு ஒத்து வர மாட்டேங்குது

உனக்கு ஒரு டாக்டர் மாப்பிளையைத் தேடிக்கொண்டு வந்தப்ப உங்கப்பா இல்லே அதைப்பத்தி யோசிச்சுப் பார்த்திருக்கணும்? ஆச்சரியமாத்தான் இருக்கு. பொதுவா பொம்பளைங்கன்னா அன்பாஅக்கறையா இருப்பாங்க. ஷுதாவோட மனைவி இறந்திட்டா அவங்க குடும்பம் என்ன கதியாகும், கொஞ்சமாவது அதை யோசிச்சுப் பார்த்தியா நீ?”

அப்படியும் துர்கா மசிந்து கொடுக்கவில்லை. அவளது கோபமும் எரிச்சலும் கூடிக்கொண்டே போக, டாக்டர் படிகளில் இறங்கி விரைந்தபோதும் கூட அவள் அவரோடு வாதிட்டுக்கொண்டுதான் இருந்தாள்.
இன்னும் எப்படித்தான் இருக்கா அந்த உசிரை வச்சுக்கிட்டு? அவ எப்பவோ செத்துப் போயாச்சு. அவளாலே அந்தக்குடும்பத்துக்கு இனிமே என்னதான் பிரயோஜனம் இருக்கு?” என்று டாக்டரைத் தொடர்ந்து சென்றபடியே கேட்டாள் அவள். டாக்டர் அதற்கு என்ன பதில் சொன்னார் என்பது காதில் விழவில்லை. அவர் வெகு வேகமாகக் கீழே இறங்கிச் சென்றிருந்தார்.

இப்போது தன் அறையிலிருந்து வெளிப்பட்ட டாக்டரின் தாய்,
மருமகப்பொண்ணே, நானி என்னதிரும்பவும் வெளியே போய்ட்டானா?” என்று விசாரித்தாள்.
ஆமாம்,போய்ட்டார்என்று எரிச்சலோடு பதில் சொன்னாள் துர்கா.


ஐயோ..அவன் படற பாடு என்னைக் கொல்லுதே. பாவம்,இப்பதான் வந்து படுத்தான். ஆமாம்..இப்ப வந்தது யாரு, எங்கே இருந்து?”


வேற யாரு எங்கே இருந்து வரப்போறாங்க? எல்லாம் அந்த ஷுதாபாபுவோட பையன்தான்


நானும் அப்படித்தான் இருக்கும்னு நெனச்சேன். நான் என்னத்தை சொல்றது போ! நான் ஏதாவது சொல்லப்போனா இந்தக்கிழவி ஒரு வம்புக்காரின்னு சொல்லிடுவீங்க. ஆனா இந்த ஷுதாவோட பொண்டாட்டி இருக்காளே..அவ போடறதெல்லாம் வெறும் வேஷம்தான். பைசா பெறாத வியாதிக்கு இப்படிக் கூத்து கட்டறா அவ! இன்னிக்குக் காலையிலே நான் கங்கையிலே குளிச்சிட்டு வரும்போது கூட அவளைப் பார்த்தேன், வீட்டு வாசல்லே நின்னு யாரோ ஒரு துணி வியாபாரி கிட்டே எதையோ வாங்கிக்கிட்டிருந்தா. அதுக்குள்ளே…,இந்தக்கொஞ்ச நேரத்துக்குள்ளே அப்படி
என்னதான் ஆகியிருக்கும்?”

அதை உங்க பையன்கிட்டேயே கேட்டுக்கங்கஎன்று வெடுக்கென்று சொல்லி விட்டுத் தன் அறைக்குள் சென்று படுத்துக்கொண்டாள் துர்கா.

படுக்கையில் படுத்தபடி விழித்திருந்த டாக்டரின் பதினாறு வயது மகளின் மன ஓட்டம் வேறு வகையில் இருந்தது. தன் தந்தை இளைஞராக இருந்த காலத்தில் ஷுதா மாமாவின் மனைவி மீது அவருக்கு விசேஷமான ஏதோ ஒரு ஈர்ப்பு இருந்திருக்க வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது. இல்லையென்றால்அப்பா ஏன் இப்படி ஓட வேண்டும்?

ஏதேதோ நாவல்களைப் படித்து மகள் அப்படி நினைத்துக் கொண்டிருந்தாலும் அது உண்மை இல்லை. பாலியத்திலிருந்து நண்பராக இருக்கும் ஷுதாகாந்தோ மீது டாக்டர் உயிருக்கு உயிரான  நட்புக் கொண்டிருந்தார். ஷுதாவின் மனைவி நோயுற்றபோது தன் மனைவியே நோய்வாய்ப்பட்டது போல உணர்ந்தார் அவர். ஒருக்கால் ஷுதாகாந்தோவின் மனைவி இறக்க நேரிட்டால் டாக்டரும் கூடத் தன் உலகம் உடைந்து சிதறிப்போனது போல உணரக் கூடும்.

டாக்டர் நானி போஷோக் , தன் மருத்துவக்கல்வியை முடித்து டாக்டராகப் பணியைத் தொடங்கியதிலிருந்து ஷுதாகாந்தோவின் குடும்ப டாக்டர் அவர்தான். ஷுதாவின் தந்தை நோயால் துன்பப்பட்டு இறந்தார், அவரது தங்கை ஒருத்தி ஐந்து வருடங்கள் தன் நோயுடன் போராடி மீண்டாள். ஷுதாகாந்தோவின் குழந்தைகள் சிறுவர்களாக இருந்தபோது வருடத்தில் பன்னிரண்டு மாதங்களும் அவர்களுக்கு ஏதாவது உடம்பு முடியாமல் போய்க்கொண்டேதான் இருக்கும். நானி டாக்டர் , அந்தக்குடும்பத்திலுள்ள எல்லோருடைய துன்பங்களையும் தானும் சுமந்து கொண்டிருந்தார்.

முன்பெல்லாம் இப்படிப்பட்ட நெருக்கடியான நேரங்களில் ஷுதாகாந்தோவே டாக்டரை அழைக்க வந்து கொண்டிருந்தார். இப்போது அவருக்கு வயதாகி விட்டதால் அவரது மூத்த மகன் அந்தப் பொறுப்பைத் தன் தோள்களில் ஏற்றிருந்தான். ஆனால் டாக்டரின் வேலைச் சுமையை அவரது வளர்ந்த மகனால் நிச்சயம் ஏற்க முடியாதுதான். அதனால் டாக்டருக்கும் ஷுதாகாந்தோவுக்கும் ஒரே வயதுதான் என்றாலும் அவர் ஒரு இளைஞனைப் போலத்தான் இருக்க வேண்டியிருந்தது. நள்ளிரவு நேரத்திலும் கூட ஐந்து வீடுகளை ஒரு நிமிட நேரத்தில் கடந்து வைத்தியம் பார்க்க அவர் போயாக வேண்டும்.

…………………………………….

அன்றிரவு டாக்டர் போஷோக் வீடு திரும்பியபோது கிட்டத்தட்ட விடியும் நேரம் ஆகி விட்டது. உண்மையிலேயே இறுதிக் கட்டம் வந்துவிட்டது போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டிருந்தாள் துர்கா. கூடவே அவளுக்கு பயமும் இல்லாமல் இல்லை. ‘ இன்னிக்கு நான் கட்டாயம் வெளியே வந்து அவ செத்துப்போகட்டும்னே சொல்லிடப் போறேன், எப்டியும் செத்துக்கிட்டுதான் இருக்கா, செத்துதான் போகப்போறா, என்னவோ நான் அதுக்குப் பொறுப்புங்கிற மாதிரி ஏன் நினைக்கணும்

டாக்டர் இரவு முடியும் தருவாயில் வீட்டுக்குத் திரும்பி வந்து சேர்ந்தார்.
மருமகப்பொண்ணே..நானி திரும்பி வந்தாச்சா?” என்று உடைந்த குரலில் டாக்டரின் தாய் குரல் கொடுத்தாள்.
மருமகள் எந்த பதிலும் சொல்லவில்லை. தூங்கி விட்டது போல பாவனை செய்து கொண்டிருந்தாள் அவள். தன் கணவரை நேருக்கு நேர் பார்க்க அப்போது அவளுக்கு தைரியம் இல்லை. ஆனால் சற்று நேரத்திலேயே பய உணர்வு அவளை விட்டு அகன்று விட்டது.

மகன் தாய்க்குச் சொல்லிக் கொண்டிருந்த பதில் அவள் காதில் விழுந்தது.
ஆமாம் அம்மா, நான் இப்பதான் உள்ளே வரேன்
அவ எப்படி இருக்கா? வழக்கம் போல ரொம்ப அலட்டிக்கிறாளோ?“
அதெல்லாம் இல்லை, எப்பவும் உள்ளதுதான்..” டாக்டரின் குரலில் சோர்வும் களைப்பும் தெரிந்தது.
ஷுதா எப்படிக் கவலைப்படுவான்னு உங்களுக்குத் தெரியாதாம்மா? கொஞ்சம் கொஞ்சமா அது ஒரு மன வியாதி போலவே ஆகிப் போச்சு. இலேசா ஏதாவது இருந்தால் கூட அவன் பயந்து போய்ப் பெரிசா பரபரப்பாக்கிடறான்

வேற எந்தக் காரணமும் இல்லாதப்ப சும்மா அதைப்பத்தி ஏதாவது பேசிக்கிட்டே இருக்கணும், மத்தபடி ஒண்ணுமே இல்லைஎன்று நினைத்துக்கொண்டாள் துர்கா. ‘மனைவியின் நீண்ட நாள் நோய்த் துன்பங்கள் பாவப்பட்ட அந்த மனிதரைக் களைப்படைய வைத்திருக்க வேண்டும்,இப்போது அவர் அதைப் பெரிதுபடுத்திக்கொண்டிருக்கிறார், அவ்வளவுதான்என்ற எண்ணம் அவளுக்குள் ஓடியது.

மாமியார் ஏதோ சொல்ல ஆரம்பித்ததும் அவள் தன் காதைக்கூர் தீட்டிக்கொண்டாள்.
அப்படீன்னா நீ எதுக்கு பொழுது விடியற வரைக்கும் போராடணும் மகனே, வீட்டுக்கு வந்து ஒண்ணு ரெண்டு மணி நேரம் தூங்கியிருக்கலாம் இல்லையா

ஐயோ என்னை எதுவும் கேக்காதீங்களேன்….எனக்கே சாகலாம் போல இருக்கு
டாக்டரின் குரலில் இப்போது சோர்வும் களைப்பு. மேலும் கூடியிருந்தது.
சரி, போய்ப் படு, கொஞ்ச நேரமாவது தூங்குஎன்றாள் மாமியார்.
அவளுமே திரும்பப் போய்ப்படுத்துக் கொஞ்சநேரம் தூங்க வேண்டுமென்றுதான் நினைத்திருந்தாள்.

துர்கா ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. எந்த வகையான சத்தமும் எழுப்பவும் இல்லை. தூக்கத்தில் சுயப்பிரக்ஞை இழந்தது போல் இருந்தாள் அவள். ‘ இனிமே, ராத்திரி நேரத்திலே வைத்தியம் பார்க்கப் போக மாட்டேன்னு ஒரு நாள் என் தலை மேலே அடிச்சு சத்தியம் பண்ண வைக்கிறேன் அவரை..’ என்று நினைத்துக்கொண்டாள் அவள்.

ஒரு சிநேகிதரோட பெண்டாட்டி,
நான் செத்துக்கிட்டிருக்கேன்னு கத்துவாளாம், இவரும் அழுது புலம்பிக்கிட்டு ஒவ்வொரு ராத்திரியும் போய்ட்டு வந்து தூக்கத்தைக் கெடுத்துக்கிட்டு அப்புறம் சாகணும் போல இருக்குன்னு சொல்லுவாராம்

ஆனால் துர்காவின் இந்தக்கோபத்தாலும் காழ்ப்புணர்ச்சியாலும் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. காரணம், இந்த விஷயத்தைப் பொறுத்தவரை மிகவும் உறுதியாக எதற்கும் அசைந்து கொடுக்காதவராக இருந்தார் நானி டாக்டர்.

நோய்க்கொடுமை மிகுதியாக இருப்பதாகத் தன்னை அவர்கள் அழைக்காத சமயங்களிலும் கூட அந்த வழியாக வரும்போதும் போகும்போதும் தன் நண்பர் வீட்டில் ஒரு நிமிடம் தாமதித்து நிற்காமல் அவர் கடந்து செல்வதில்லை. ஷுதாகாந்தோ, வீட்டில் இருந்தாலும் இல்லாவிட்டாலும்,
ஷுதா , வீட்டிலே இருக்கியாஎன்று குரல் கொடுக்காமல் போக மாட்டார் அவர்.
உள்ளேயிருந்து ஷுதாபாபுவின் பையனோ பெண்ணோ வெளியே வருவார்கள்.
உங்க அம்மா எப்படி இருக்காங்க?” என்று கேட்பார் டாக்டர்.
கொஞ்சம் தேவலை
என்றோ..
அதே மாதிரிதான்என்றோ அவர்களிடமிருந்து பதில் கிடைக்கும்.

வீடு திரும்பியதும்ஒரு வேளை இந்த மாத்திரை சரியாக இல்லையோ., நான் வேறு மருந்து மாற்றித்தர வேண்டுமோஎனறு அவருக்குத் தோன்றுவதுண்டு.
‘’
என்ன? அம்பாள் காலடியிலே பூப்போட்டுட்டு வந்தாச்சா இன்னிக்குஎன்று வீட்டுக்கு வந்த அவரிடம் கேட்பாள் துர்கா.
யப்பாஇந்தப் பொம்பளைங்கதான் எவ்வளவு பொறாமை பிடிச்சவங்களா இருக்கீங்க?” என்று சிரித்துக்கொண்டே சொல்வார் டாக்டர்.


ஷுதா பாபு பெண்டாட்டியோட வியாதியைப் பத்தியும், அவ இப்ப இருக்கிற நிலைமையைப் பத்தியும், அவளுக்கு இதுவரை செஞ்சிருக்கிற வைத்தியத்தைப் பத்தியும் யார் கேள்விப்பட்டாலும் அப்றம் உங்களை ஒரு டாக்டர்னே யாரும் நினைக்க மாட்டாங்க. பதினோரு வருஷமா சிகிச்சை பண்ணியும் தவிக்க விட்டுக்கிட்டே இருக்கிறவர் எப்படி ஒரு டாக்டரா இருக்க முடியும்?”
டாக்டர் அதைக்கேட்டுவிட்டு சிரித்துக்கொள்வார்.


ஒவ்வொரு முறை போய்ப் பார்க்கிறதுக்கும் நான் பணம் வாங்கினாஅப்பதான் நான் வேணும்னே அவளை இழுத்தடிச்சுக்கிட்டிருக்கேன்னு ஜனங்க சொல்லுவாங்க. டாக்டரைப் பொறுத்த வரைக்கும் ஒவ்வொரு இதய நோயாளியும் பணம் கொழிக்கிற ஒரு எஸ்டேட்டுக்கு சமம்

ஒவ்வொரு தடவை நீங்க போனதுக்கும் அவங்க பணம் கொடுத்திருந்தா உங்க சிநேகிதரோட குடும்பம் எப்பவோ பிழைச்சுப் போயிருக்குமேஎன்று மனதில் நினைத்துக்கொண்டாலும் வாய் விட்டு அதைச் சொல்ல மாட்டாள் துர்கா. அப்படிச் சொன்னால் அதுவரை புன்னகையோடு இருந்த டாக்டர், தன் நண்பரும் அவர் குடும்பமும் அவமானப்படுத்தப்படுவதாய் எண்ணி இறுகிப் போய் விடுவார். அவரது ஒரே ஒரு பலவீனம் அதுதான்.

ஷுதாகாந்தோவின் மனைவி உடல் நலம் இல்லாதது போல் பாவனை செய்கிறாளா, அதை டாக்டர் தெரிந்து வைத்திருக்கிறாரா என்பதையெல்லாம் அந்த வீட்டிலுள்ள எவருமே அவரை நேருக்கு நேர் கேட்டு விட முடியாது. அதைப்பற்றி இலேசாக எவராவது ஏறுக்கு மாறாகப் பேசினாலும் கூடத் தன் நண்பரின் குடும்பத்தை அவர்கள் அவமானப்படுத்துவதாக டாக்டருக்குத் தோன்றி விடும்.

ஒரு டாக்டர் என்ற வகையில்,அந்தப் பெண்மணிக்கு வந்திருக்கும் நோய் அவர்கள் நினைப்பது போல அப்படி ஒன்றும் பைஸா பெறாதது இல்லை என்பதை மட்டும் அவர் அறிந்து வைத்திருந்தார். அதனாலேயே அதைப்பற்றி விட்டுக்கொடுத்துப் பேசவும் அவருக்கு மனம் இல்லை. அதை விடவும் பெரிய விஷயம், ஷுதாகாந்தோவின் மனைவி மிகப்பெரிய தொட்டாற்சிணுங்கி என்பதுதான், எதற்கெடுத்தாலும் மிக அதிகமாக உணர்ச்சி வசப்பட்டு விடும் சுபாவம் அவளுடையது. காலையில் கூப்பிட்டு அனுப்பிய டாக்டர் உடனே வராமல் சற்றுக் கால தாமதமாக வந்தாலும் கூட, உடனே கோபம் கொண்டு புண்பட்டுப் போய்விடுவாள் அவள். எடுத்த எடுப்பில் அவரிடம் நேரடியாகப் பேசுவதைக்கூடத் தவிர்க்கவே செய்வாள்..

பிறகு..“நான் ஒரு கேடு கெட்ட பொம்பளை, இப்படி ஒரு சாபக்கேடா இருக்கேனே, செத்தும் தொலைய மாட்டேங்கிறேன், டாக்டர் சலிச்சுப் போய்க் கை விட்டப்பறமும் இன்னும் வாழ்ணும்னு இல்லே நினைக்கிறேன்என்று தன்னைப் பற்றியே புலம்ப ஆரம்பித்து விடுவாள். நானி டாக்டர்தான் அவளுக்கு ஆறுதல் சொல்லி மருந்துகளை மாற்றிக்கொடுத்துத் தேற்றியாக வேண்டும்.

டாக்டரின் நண்பர் ஷுதாகாந்தோவுக்கு டாக்டரிடம் நன்றி இல்லாமல் இல்லை.
நீ இருக்கறதாலேதான் உங்க அண்ணி ஏதோ இந்த பூமியிலே சுவாசிச்சுக்கிட்டாவது இருக்காஎன்று அவர்கள் சந்தித்துக்கொள்ளும்போதெல்லாம் சொல்லத் தவறுவதில்லை அவர்.

நானி டாக்டர் சிரித்துக்கொண்டே தன் நண்பரின் தோளில் தட்டிக்கொடுத்தபடி
போதும் போதும்..இப்படி நிறைய கேட்டாச்சு உன் கிட்டே இருந்து
என்பார்.
சித்தப்பா மட்டும் இல்லைன்னா என்ன ஆகியிருக்கும்என்று ஷுதாகாந்தோவின் பையன்கள் சொல்லுவாகள்.
அதற்கும் டாக்டர் சிரித்துக் கொண்டே இவ்வாறு பதிலளிப்பார்.
அப்படி என்ன ஆகியிருக்கும்,சொல்லுங்க பார்ப்போம். கடல் பொங்கியெழுந்து ஆகாசத்துக்குப் போயிடுமா, இல்லேன்னா மலையெல்லாம் பாதாளத்திலே விழுந்து முழுகிப்போயிடுமா?”

‘’
சித்த்தப்பா நம்ம பக்கத்திலே இருக்கிற வரைக்கும் இந்த உலகத்திலே வியாதி..துக்கம்னு எதுவுமே இல்லாத மாதிரி தோணுது
என்று ஷுதாகாந்தோவின் பெண்கள் சொல்வார்கள்
டாக்டர் அதைக்கேட்டு சத்தமாகச் சிரிப்பார்.
அந்த ரெண்டு கூடவும்தானே நாங்க வேலை செய்ய வேண்டியிருக்கு, அதனாலே அதோட கண்ணிலே மண்ணைத் தூவி மூடி மறைச்சிடுவோம்.”

ஆனால் அந்தப் பெண்கள் சொன்னதில் எந்த மிகையும் இல்லை. நோயாளியின் குடும்பச் சூழலைக் கலகலப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் அதுவும் ஒரு மருந்து போன்றதுதான் என்பதில் நானி டாக்டருக்கு உறுதியான நம்பிக்கை இருந்தது. அதனால்தான் அங்கிருந்த எல்லாரோடும் கலகலப்பாகப் பேசி அங்கே நிலவும் வருத்தமான சூழலை மாற்றும் பொறுப்பைத் தன்னுடையதாக ஏற்றுக்கொண்டிருந்தார் அவர். அதில் வெற்றியும் கண்டிருந்தார். இயல்பிலேயே உற்சாகமும் குதூகலமும் கொண்ட மனிதரான அவர், தன் புத்திசாலித்தனமான பேச்சுக்களால் நோயாளியின் வீட்டில் நிலவிய துயரத்தின் கனத்தை உண்மையிலேயே இலகுவாக்கிக் கொண்டிருந்தார்.

………………………………………


அன்று காலையில் கூடத் நண்பர் வீட்டில் உட்கார்ந்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அரட்டையடித்திருந்தார் அவர். அப்போது ஷுதா பாபுவின் மனைவி அவர் பேச்சைக் கேட்டும், பாவனைகளைப் பார்த்தும் விழுந்து விழுந்து சிரித்திருக்கிறாள்.

ஆனால்..இப்போது திடீரென்று அதே நாள் இரவில்…,
ஆமாம்…, ! ஷுகந்தோவின் கவலை தோய்ந்த பதட்டமான குரல்தான் டாக்டர் வீட்டு வாசலில் இருந்துசித்தப்பாசித்தப்பாஎன்று அவரை அழைத்தது. ஆனால் வழக்கம் போல நடு ராத்திரி நேரத்தில் இல்லை, இன்றுசற்று சீக்கிரமாகவே!

டாக்டர் போஷோக் இன்னும் வீடு திரும்பியிருக்கவில்லை. யாரோ ஒரு நோயாளி உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதால், வீடு திரும்ப மிகவும் தாமதமாகக்கூடும் என்று ஏற்கனவே சொல்லி அனுப்பியிருந்தார் அவர். அவர் வர வெகு நேரமாகும் என்பது வீட்டிலுள்ள எல்லோருக்குமே தெரியும். அதோடு கூடவே பழக்கப்பட்ட அந்த மோசமான நோயாளியின் வீட்டிலிருந்து வரும் வழக்கமான எரிச்சலூட்டும் அழைப்பும் இப்போது சேர்ந்து கொண்டது.

துர்காவே படியிறங்கி வந்தாள்.
என்ன ஆச்சு இப்ப?”
என்று கேட்டாள்.
அம்மா போயிடுவாங்க போல் இருக்கு, ரொம்ப தவிக்கிறாங்கஎன்று பதட்டத்தோடு சொன்னான் ஷுகந்தா.
தயவு செஞ்சு அவர் வந்ததும் உடனேயே அனுப்பி வைச்சிடுங்க, வீட்டுக்குள்ளே நுழைஞ்சு செருப்பைக் கழட்டறதுக்கும் முன்னாலேயே

துர்காவின் பொறுமை முற்றாகத் தொலைந்திருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை., அல்லது ஒருவேளை அவளே பொறுமை இழந்த நிலையில் படி இறங்கி வந்திருக்கலாம்.

இந்த உலகத்திலேயே உங்கம்மாவோட உயிர் ஒண்ணுதான் உயிரா? வேற யாரோட உயிரும் உயிர் இல்லியா?”

ஒரே நேரத்தில்உயிர்என்ற சொல்லின் அம்புகள் தன் மீது விதவிதமாகத் தைத்ததில் குழம்பிப்ப்போன ஷுகந்தோ
நீங்க என்ன சொல்றீங்கஎன்று கேட்டான்.

நான் என்ன சொல்றேனா.. ? நோயாளியை மட்டும் காப்பாத்திக்கிட்டிருந்தா போதுமா, டாக்டர் உயிரோட இருக்க வேண்டாமான்னுதான் நான் கேக்கறேன். அந்த மனுஷன் காலங்கார்த்தாலே வெளியே போனவர். இன்னும் திரும்பிக்கூட வரலை. இது வரைக்கும் ஒண்ணும் சாப்பிடலை,தண்ணி கூடக் குடிக்கலை. நீ என்னடான்னா, வீட்டுக்குள்ளே நுழைஞ்சு செருப்பைக் கழட்டறதுக்கு முன்னாலே அவரை அனுப்பி வையுங்கன்னு சொல்றே. மனுஷங்கன்னா, கொஞ்சமாவது ஈவு இரக்கம் வேண்டாமா?”

இந்த முறை அதைப்புரிந்து கொள்வதில் ஷுகந்தோவுக்கு சிக்கலோ, குழப்பமோ எதுவும் இல்லை.
எங்களுக்கு உதவறதுக்கு வேற யாருமே இல்லை சித்தி, அதுக்காகதான் இங்கே வந்தேன். நீங்க மட்டும் இப்ப அம்மாவோட நிலைமையைப் பார்த்தா அப்ப புரிஞ்சுப்பீங்க

இன்று டாக்டர் வீட்டில் இல்லை. அதனால் விஷயம் இப்போது துர்காவின் பிடியில்

ஷுகந்தோ சொன்ன வார்த்தைகளும் கூட அவளை சங்கடப்படுத்தவில்லை.
அப்படி உதவிக்கு யாருமே இல்லாம ஏன் இருக்கணும்? இந்த உலகத்திலே என்னவேற டாக்டர்களே இல்லாம போய்ட்டாங்களா என்ன? உங்க சித்தப்பாவாலே இத்தனை நாளா உங்கம்மாவை குணப்படுத்த முடிஞ்சதா என்ன?”
என்று வறட்சியான குரலில் அவனிடம் பேசினாள் அவள்.

ஆனால் அவள் பேசி முடிக்கும் வரை ஷுகந்தோ அங்கே காத்துக்கொண்டிருக்கவில்லை. ‘உலகத்திலே வேற டாக்டர்களே இல்லாம போய்ட்டாங்களா…’ என்ற வார்த்தைகளுடனேயே அவன் வீதியில் இறங்கி நடக்க ஆரம்பித்திருந்தான்.

துர்காவிற்கு அப்படிப் பேசியதில் பயம் இல்லை என்றும் சொல்லி விட முடியாது. ஆனாலும் அவள் தன் மனதையும் அதில் ஓடும் எண்ணங்களையும் கடினமாக்கிக் கொண்டாள். ‘சரிஅப்படியே அவர்கள் கோபப்பட்டால் படட்டுமே, அதனால் என்ன? எப்படியோ நாம் தப்பித்துக் கொண்டு விடலாம்என்று நினைத்துக்கொண்டாள் அவள்.

அந்தக் குடும்பத்தாருக்கு உண்மையிலேயே கோபம்தான் என்பது சிறிது நேரம் கழித்துதான் தெரிந்தது.

டாக்டர் போஷோக் ஒரு நோயாளியைக் கொன்று தீர்த்து விட்டு, மரணச் சான்றிதழிலும் கையெழுத்துப் போட்டு விட்டு வீடு திரும்பிய பிறகுதான் அது நடந்தது. அப்போது நள்ளிரவு ஒரு மணி இருக்கும். டாக்டரை இப்போது கூப்பிட வந்தது ஷுகந்தோ இல்லை, அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பணியாள்தான் அதற்காக வந்திருந்தான்.

அழைக்க வந்தது பணியாள் என்பதாலா…, அல்லது மருத்துவ மனையிலிருந்த நோயாளியின் உயிரைக் காப்பாற்ற நீண்ட நேரம் எமனோடு போராடி..இறுதியில் அவனிடம் தோற்றுப் போன களைப்பாலா தெரியவில்லை. நொந்து போன சலிப்பான குரலில்,
என்னப்பா இதுபெரும் தொல்லையாப் போச்சே? அம்மா உடம்பு மறுபடி ரொம்ப மோசமாப் போயிடிச்சா? போய் அவங்க கிட்ட சொல்லு, சித்தப்பா இப்பதான் திரும்பி வந்திருக்கார், களைப்பா இருக்கார்..ஆமாம்ரொம்ப ரொம்பக் களைப்பா இருக்கார். இப்ப வர முடியாது,காலையிலே வரேன்னு சொன்னார்னு சொல்லு
என்று டாக்டரே அவனிடம் சொல்லி விட்டார். அந்த வேலையாளும் உடனே எதுவும் பேசாமல் திரும்பிப் போய்விட்டான்.

ஆனால்..அடுத்த நிமிடமே டாக்டர் வேறு மாதிரி யோசிக்க ஆரம்பித்து விட்டார். ‘ சே..என்ன காரியம் செஞ்சிட்டேன், நான் அவனை அப்படித் திருப்பி அனுப்பாம இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும். உடுப்பையெல்லாம் மாத்தறதுக்கு முன்னாலே அவளை ஒரு நடை போய்ப் பார்த்திட்டு வந்திருக்கணும் நான்

ஆனால் இனிமேல் அவரால் அப்படிப் போக முடியாது. நடந்ததையெல்லாம் பார்த்துக்கொண்டும், கேட்டுக்கொண்டும் துர்கா அங்கேயேதான் இருந்தாள். அது மட்டுமல்லாமல் உண்மையில் அவருக்கும் உடம்பே முறிந்து போவது போல சோர்வாகத்தான் இருந்தது.

நானி டாக்டர் என்ற அந்த முட்டாள் டாக்டருக்கு இந்த உலகத்தின் போக்கு பற்றி எதுவும் தெரியவில்லை என்றே சொல்ல வேண்டும். வாழ்நாள் முழுவதும் அவர் கட்டியெழுப்பியிருந்த கனவு மாளிகை, சாதாரணமான அவரது உடம்பு முறிவால், அந்த வலியால் முறிந்து போய்விடப்போகிறது என்று எண்ணிக்கூடப் பார்க்காதது அவரது தவறுதான். அவர் கொஞ்சம் கூட அப்படி நினைக்கவில்லை. ஆனால் நடந்ததென்னவோ அதுதான். அந்த ஒரு முறை அங்கே செல்லத் தவறிய அவரது செயல், என்றென்றும் சாஸ்வதம் என்று அவர் நினைத்துக்கொண்டிருந்த அவரது நண்பர் ஷுதாவின் குடும்பத்தில் நஞ்சைப் பாய்ச்சி விட்டது.

மறுநாள் காலையில் பொழுது கூட விடிவதற்கு முன்பே நானி டாக்டர் ,தன் நண்பர் வீட்டுக்குச் சென்று விட்டார். ஆனால் இரண்டாவது மாடியிலிருந்த ஷுதாகாந்தோ இறங்கி வரவே இல்லை. மூத்த மகன் ஷுகந்தோவும் வரவில்லை. மூத்த மகள் ஷுபோசனா மட்டும் முகத்தைக் கடுகடுவென்று வைத்தபடி இறங்கி வந்து,
அம்மா தூக்கத்துக்கு மருந்து போட்டுத் தூங்கறாங்க. இப்ப பார்க்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை
என்று எரிச்சலோடு சொன்னாள்.

தூக்க மருந்தா? வானத்திலிருந்து அப்படியே தலை குப்புறக் கீழே விழுந்து விட்டது போல் இருந்தது டாக்டருக்கு. அந்த நோயாளிக்கு அவர் அப்படி எந்தத் தூக்க மருந்தையும் தந்திருக்கவில்லை.

எதுவுமே தெரிஞ்சுக்காம, எதையும் புரிஞ்சுக்காம இந்த ஷுதா, ஒரு இதய நோயாளிக்குப் போய்த் தூக்க மருந்தை வாங்கிக்கொடுத்திருக்கானேஎன்ற எண்ணமே அவருக்குள் ஓடிக் கொண்டிருக்க, ஷுபோசனாவின் பேச்சில் தொனித்த வழக்கத்துக்கு மாறான போக்கையும் கூட அவர் சரியாகக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.
அவன் எங்கே போய்த் தூக்க மருந்தை வாங்கினான்? சட்டுனு அதை எப்படிக்கொடுத்தான்என்று கவலையுடன் கேட்டார்.

அவர் பேச்சை முடிப்பதற்குள்ளாகவே தன் புருவத்தை உயர்த்தியபடி பேச ஆரம்பித்தாள் ஷுபோசனா.
அப்பாவுக்கு எப்படித் தெரியும் அதெல்லாம்? டாக்டர்தான் வந்திருந்தார், அதைக்கொடுத்தார். பால் டாக்டர்தான் அந்த மருந்தைக் கொடுக்கச் சொன்னார்

கோபால்சந்திரோ பால் என்ற டாக்டர் , பக்கத்தில் ஒரு சிறிய மருத்துவமனை நடத்தி வந்தார். அவர் பெயரைக் கேட்டாலே எல்லோரும் சிரிப்பதுதான் வழக்கம்.
கோபால் பால்கோரூர் பால்என்று ஊரார் அவரைக் கேலி செய்வார்கள்.
இப்போது நானி டாக்டரால் தன் எரிச்சலை வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை.
ஏன்..உங்க அப்பாவாலே ரெண்டு மணி நேரம் காத்திருக்க முடியலையாக்கும்? அந்த பால் டாக்டரைப் போய் யார் கூப்பிட்டது?”

ஷுபோசனா தன் குரலை இனிமையாக்கிக்கொண்டு அவருக்கு பதிலளித்தாள்.
எங்களுக்கு உதவி செய்ய அப்ப யாருமே இல்லாம போனதாலேதான் அவரைக் கூப்பிட வேண்டியதாப் போச்சு சித்தப்பா. நம்ம கண்ணுக்கு முன்னாடியே எந்த சிகிச்சையோ மருந்தோ கொடுக்காம ஒரு நோயாளி செத்துக்கிட்டிருக்கிறதை சும்மாவா பார்த்துக்கிட்டிருக்க முடியும்? அதனாலேதான் அவரைக் கூப்பிட்டோம், அவர் எல்லாப் பரிசோதனையும் செஞ்சு பார்த்திட்டு,இதுவரைக்கும் கொடுத்த எல்லா சிகிச்சையுமே தப்புன்னு சொல்லிட்டார்

அதைக்கேட்டதும் டாக்டர் பாபுவுக்குத் தலை முதல் கால் வரை தகிக்கத் தொடங்கியது. துர்காவால் நடந்து முடிந்த குழப்பங்கள் டாக்டருக்குத் தெரியாது என்பதால் முதல் நாள் இரவு , தான் அங்கே வராமல் போனதுதான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று எண்ணியபடி மனதுக்குள் குமுறிக்கொண்டிருந்தார் அவர். குறிப்பாகச்சித்தப்பாஎன்று அன்போடு அழைத்தபடி தன்னிடம் மிகுந்த பிரியத்தோடு நடந்து கொள்ளும் அந்தப் பெண் இப்போது முரட்டுத்தனமாக, வெறுப்புணர்ச்சியோடு அப்படி ஒரு செய்தியைத் தன்னிடம் தெரிவித்ததில் அவர் கோபத்தில் கனன்று கொண்டிருந்தார்.

நீ சொன்னதைக் கேட்டு ரொம்ப திருப்தியா சந்தோஷமா இருக்கும்மா. சரி உங்கப்பாவைக் கொஞ்சம் கூப்பிடு,பார்த்திட்டுப்போறேன்
என்று அவளிடம் சினத்தோடு பேசினார் அவர்.

ஷுபோசனா, தான் இருந்த இடத்தை விட்டுக்கொஞ்சமும் நகராமல்
இப்ப எப்படி நான் அப்பாவைக் கூப்பிட முடியும்? அவர் ராத்திரி முழுக்க தூங்காம இருந்திட்டு இப்போதான்பொழுது விடியற நேரம் கொஞ்சம் படுத்திருக்கார்
என்று அலட்சியத்தோடு பதிலளித்தாள்.

இல்லை..,அதற்கு மேல் டாக்டரால் அங்கே நின்று கொண்டிருக்க முடியவில்லை. தன் பாலிய நண்பனின் வீட்டு வாசலிலிருந்து விலகிச் சென்றார் அவர்….அதன் பிறகு நண்பர் வீட்டுக் கதவு டாக்டருக்கு முற்றிலுமாய் அடைக்கப்பட்டு விட்டது. அப்படி, அதைத் திறந்து வைக்க வேண்டிய தேவையும்தான் என்ன? மூன்று நான்கு முறை அங்கே வந்து அதற்கான ஊதியமும் பெற்றுக்கொண்டு அந்தப் பதினோரு வருட நோயாளியை குணமாக்கி விட்டிருந்தார் டாக்டர் பால். அதற்குப் பிறகு மரணத்தின் விளிம்புக்குப் போகும் நிலை ஷுதாகாந்தோவின் மனைவிக்கு ஒருபோதும் ஏற்படவே இல்லை.

அதன் பிறகு, தெருவில் எப்போதாவது சந்தித்துக் கொள்ள நேரும்போது (அது என்னவோ அடிக்கடி நிகழ்ந்து கொண்டுதான் இருந்தது) ஷுதாகாந்தோவின் மகன்கள் தங்கள் சித்தப்பாவை அடையாளம் தெரியாதது போல பாவனை செய்தபடி தாண்டிப்போய் விடுவார்கள்; மகள்களோ கண்ணுக்கெதிரே அவரை எதிர்ப்பட நேர்ந்தாலும் தங்கள் பார்வையை வலிந்து திருப்பிக் கொண்டு தங்களுக்குள் மிகையாக எதையோ பேசிச் சிரித்தபடி அவரைக் கடந்து செல்வார்கள்.

நண்பர் ஷுதாகாந்தோவே எதிர்ப்பட்டால்
..இப்பதான் வேலை முடிஞ்சுவரியாஎன்பது போல சட்டென்று ஓரிரு வார்த்தைகளில் பேச்சை முடித்துக்கொண்டு அங்கிருந்து விரைவாக நகர்ந்து விடுவார்.

அப்புறம்..?
அப்புறம் என்ன?
’’
ஓசியில் வைத்தியம் பார்த்துக் கொண்டதால்தான் நானி டாக்டர் தன் நண்பரின் மனைவிக்குக் கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் சிகிச்சை செய்தார். வருஷக் கணக்கில் அந்த மனுஷி பெயருக்கு மட்டுமே வாழ்ந்து கொண்டிருந்தாள். இப்போது பாருங்கள்வைத்தியம் வேறொரு ஆள் கையில் மாறிய பிறகு அவள் உடல்நலம் தேறி நன்றாக குணமும் அடைந்து விட்டாள். ஒரு நோயாளிக்கு வைத்தியம் பார்க்கும்போது இப்படியா கண்ணையும் காதையும் மூடிக்கொண்டு கண்ட கண்ட பழைய காலத்து மருந்துகளைக்கொடுப்பது? நிஜத்தில் சொல்லப்போனால் அந்த மோசமான வைத்தியத்தால்தான் அவள் சாகும் நிலைக்குப் போக நேர்ந்திருக்கிறது. ஏதோ அவளோட ஆயுள் கெட்டியா இருந்ததாலே’’ என்றெல்லாம் ஊரார் பேசிக்கொள்வது காதில் விழுந்தது.

ஈக்களாலும்,கொசுக்களாலும், வேறு பல கிருமிகளாலும் பரவும் காலரா, மலேரியா, சளித்தொல்லை இவைகளைப் போல அக்கம்பக்கத்துப் பெண்கள் பரப்பிக்கொண்டிருந்த இப்படிப்பட்ட வம்புச் செய்திகளும் நானி டாக்டர் வீட்டுக்குள் வந்து சேர்ந்தன.

ஷுதா பாபுவோட பெண்டாட்டியை உங்களாலே குணப்படுத்த முடியாம போயிருக்கலாம். ஆனா..உங்களோட நாள்பட்ட வியாதி ஒண்ணை, சக்தியுள்ள ஒரு மருந்தாலே அவ குணப்படுத்திட்டா. இந்த உலகம் எப்படிப்பட்டதுங்கிறது இப்ப உங்களுக்குக் கட்டாயம் புரிஞ்சிருக்குமே?’
துர்கா தன் கணவரிடம் இப்படித்தான் கேட்க நினைத்தாள். ஆனால் அவளால் அதைக்கேட்க முடியவில்லை. தன் கணவரின் முகம் இருந்த இருப்பைப் பார்த்து விட்டு அவளால் எப்படி அதைக்கேட்க முடியும்? ஒருவேளை டாக்டரே அப்படிச் சொன்னால் கூட அதைத் தாங்கிக் கொள்ள அவள் ஒன்றும் கல்லால் ஆனவள் இல்லையே?

 

            &*******************************************************&


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....