துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

13.6.23

மொழிபெயர்ப்பு-உரையாடல்,இலக்கிய வெளி

 ஐந்து மொழிபெயர்ப்பாளர்களிடம் ஐந்து கேள்விகள் என்ற தலைப்பில் கனடாவிலிருந்து வெளிவரும் ’இலக்கிய வெளி’ இதழில் வெளிவந்திருக்கும் என் பதில்கள்
1. உங்களுடைய மொழிபெயர்ப்புத்தேர்வு எந்த அடிப்படையில் அமைந்துள்ளது?

விடை:
என் முதல் இரு மொழிபெயர்ப்புப் பணிகளும், அதற்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களும் - அவை இரண்டுமே என் தெரிவுகளாக அல்லாமல் தற்செயலாக வாய்த்தவை மட்டுமே என்பது பலருக்கும்  வியப்பூட்டலாம். என் பேராசிரியப் பணிக்கு நடுவே 1979 ஆம் ஆண்டு முதல் இடையிடையே- சிறுகதைகளை மட்டுமே எழுதி வந்தேன். தமிழ் வார மாத இதழ்களில் அவை வெளிவந்து கொண்டிருந்தன. நான் பணி ஓய்வு பெற்றபின் 2006 இல் ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கியின் புகழ் பெற்ற செவ்வியல் படைப்பான  ‘குற்றமும் தண்டனையும்'- Crime and Punishment-  நாவலை மொழிபெயர்த்துத் தர வேண்டும் என்ற கோரிக்கையோடு ஒரு பதிப்பாளர் என்னை அணுக, மொழிபெயர்ப்பு என்ற துறையை  நான் முதல் முறையாக முயன்று பார்த்தது அப்போதுதான். அதற்குக் கிடைத்த 
வரவேற்பையும்,ஊக்கத்தையும் தொடர்ந்து  அதே பதிப்பாளர்  தேர்வு செய்த தஸ்தயெவ்ஸ்கியின் 'அசடன்'- The Idiot நாவலையும் மொழி பெயர்த்தேன். இந்தப்   பணிகளுக்குப் பிறகு நான் மொழிபெயர்த்த படைப்புக்கள் அனைத்தும் என் தேர்வுகள் மட்டுமே. முதல் இரண்டும் ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புக்களாக அமைந்து போய்.., எனக்கும் அவரது பாணியும்,கதைக்கூற்று முறையும்,அவரது மன அமைப்பும் பழகியும் பிடித்தும் போனதால் தொடர்ந்து அவரது மூன்று  குறுநாவல்கள்,பல சிறுகதைகள்... மற்றும் அவரது இன்னொரு பெரும் நாவல் படைப்பு என்று நானே தேர்வு செய்து, தொடர்ந்து தமிழில் மொழியாக்கம் செய்து வருகிறேன். இடையே சில இணைய இதழ்கள் மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் வேண்டுமென்று என்னிடம் கேட்டபோது தஸ்தயெவ்ஸ்கியின் கதைகளோடு இந்தியநாட்டின் வங்க மொழி எழுத்தாளர்களான மகாஸ்வேதாதேவி, ஆஷா பூர்ணாதேவி, வட கிழக்கு மாநில எழுத்தார் டெம்சுலா ஆவ் ஆகியோரின் சிறுகதைகளையும், அயலக எழுத்தாளர்களான ஆண்டன் செக்காவ்,டால்ஸ்டாய் போன்றோரின் கதைகளையும் தெரிவு செய்து கொண்டேன். மொழிபெயர்ப்புக்கான 
என் தெரிவின் அடிப்படைகள் இவைதான்: 
ஒரு படைப்பு என்னை ஈர்த்துக் கட்டிப்போட வேண்டும். அதன் முதல் வாசிப்பிலேயே அதன் மொழியாக்கம் என்னுள் தன்னிச்சையாக ஓடத்தொடங்க வேண்டும். இவை அமையும்போது குறிப்பிட்ட படைப்புக்கள் என் தெரிவுகளாகி விடும். என் அளவுகோல் அது மட்டும்தான்.

2. தஸ்தயெவ்ஸ்கி படைப்புக்களைத் தமிழாக்கம் செய்யும்போது அவரது மொழி கடினமானது என்பதை நாம் அறிவோம். அத்தகைய சூழலில் அதனை நீங்கள் எவ்வாறு எதிர்கொண்டீர்கள்?

விடை:
முதல் கேள்விக்குச் சொன்ன விடையிலேயே இதற்கான பதிலும் அடங்கி இருக்கிறது. தஸ்தயெவ்ஸ்கியின் மாபெரும் செவ்வியல் ஆக்கங்களை முதலில் செய்து விட்டதால் அவரது போக்கு எனக்குப் பிடிபடத் தொடங்கி விட்டது. ஆங்கிலம் வழியாக அந்தப் படைப்புக்களைப் பெயர்க்கும்போது ஒரே படைப்புக்குப் பல ஆங்கில மொழிபெயர்ப்புக்களை ஒப்பு நோக்கிக் கருத்துப் பிழை வந்து விடாமல் இருக்க கவனம் எடுத்துக் கொள்வேன். தெளிவாக எனக்குள் அதை உட்செலுத்திக்கொண்ட பின்பே தமிழில் வைப்பேன். பொதுவாக தஸ்தயெஸ்கியின் படைப்பு மொழி சிக்கலானதுதான். குறிப்பாக நிலவறைக் குறிப்புகள் போன்ற இருத்தலியல் நாவல்களில் மிகவும் சிக்கலானதும், இருண்மையானதும் கூட. சில வேளைகளில் அவரது பெரிய நாவல்களை விடவும் கூடுதல் சிரத்தை எடுத்துக்கொண்டுதான் அவரது குறுநாவல்களையும் செய்ய வேண்டி இருந்தது.  படைப்பின் மீதும் படைப்பாளி மீதும் கொண்ட பற்றின் காரணத்தால்  அவற்றை என் முன் நிற்கும் சவாலாகக் கருதி என்னால் இயன்ற வரை நியாயம் செய்தபடி, தமிழுக்குச்  சரியாகக் கொண்டு வந்து சேர்க்க முயற்சி மேற்கொண்டு வருகிறேன்.

3.
நீங்கள் சிறுகதைளையும், நாவல்களையும் தொடர்ச்சியாக மொழிபெயர்த்து வருகிறீர்கள். அவ்வகையில் எந்த மொழி இலக்கியங்கள் மொழிபெயர்ப்பதற்கு இலகுவாக இருப்பதாகக் கருதுகிறீர்கள்?

விடை:
ரஷ்ய நாவல்கள், வங்கக்கதைகள் என்று எல்லாவற்றையுமே நான் ஆங்கிலத்தை இடைமொழியாகக் கொண்டு அதன் வழியாக மட்டுமே மொழிபெயர்த்து வருகிறேன்.  ஆங்கிலத்திலேயே நேரடியாக எழுதப்பட்ட டெம்சுலா ஆவின் சிறுகதைகள், பஞ்சாப் எழுத்தாளர் ஹரீந்தர் சிக்காவின்  'செஹ்மத் அழைக்கிறாள்' என்ற நாவல்   ஆகியவற்றையும் செய்திருக்கிறேன். அவை இரண்டும் ஆங்கிலத்திலிருந்து நேரடியாக செய்யப்பட்ட என் மொழியாக்கங்கள். பிறமொழிகளிலிருந்து நான் பெயர்ப்பதில்லை என்பதால் பிற மொழிகளை ஒப்புநோக்கிக் கருத்துக் கூற என்னால் இயலவில்லை.

4. மொழிபெயர்ப்பில் உங்கள் முன்னோடி யார்?


விடை:
மொழிபெயர்ப்புக்குள் நான் பிரவேசித்ததே முற்றிலும் தற்செயல் என்பதால்  முன்னோடி என்று குறிப்பாக எவரையும் நான் கருதிக்கொள்ளவில்லை. எனினும் சிறு வயதிலிருந்தே மொழியாக்கப் புனைவுகளையும் படித்து வருவதால் த நா சேனாபதி,
த நா குமாரஸ்வாமி,காண்டேகரை மொழிபெயர்த்த திரு கா ஸ்ரீ ஸ்ரீ, 
வங்க நூல்கள் பலவற்றை மொழிபெயர்த்திருக்கும் திரு சு.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மீது எனக்குப் பெரு மதிப்பு உண்டு. முன்னோடிகளின் வழியிலோ, கோட்பாடுகளை அடிப்படையாகக்கொண்டோ செய்யாமல், மொழியின் துணை கொண்டு  உள்ளுணர்வின் தடம் பற்றி மட்டுமே
என் மொழியாக்கங்களை செய்து வருகிறேன்.தொடக்கத்தில் சொந்தப்புனைவுகளை, சிறுகதைகளை எழுதியிருப்பதால், இப்போது மொழியாக்கத்துறையில் ஈடுபட்ட பிறகும்,சொந்தப்படைப்பாக்கத்திலும் ( நாவல்,சிறுகதை என) கருத்துச் செலுத்தி வருகிறேன். மொழியாக்கத்துக்கு எடுத்துக் கொள்ளும் கதைகளைக் கதைப்போக்கு குலையாமல் மொழியாக்கம் செய்ய சொந்தப்படைப்பாக்க அனுபவமும் எனக்குத் துணை நிற்கிறது.

5. தமிழின் நவீன புனைகதைகளில் உலக மொழிகளில் மொழிபெயர்த்து வழங்கும் அளவுக்கு தரமான படைப்புக்கள் என்று எவற்றைக் கருதுவீர்கள்?

இளம் படைப்பாளிகள்...
புகழ் பெற்ற படைப்பாளிகள் என்று தரமான நூல்கள் பல தரப்புக்களிலிருந்தும் இன்று தமிழில் வந்து கொண்டேதான் இருக்கின்றன.  அவற்றை இனம் கண்டு  உலக மொழிகளுக்குக் கொண்டு சேர்ப்பது அந்தந்த மொழிகளில் தேர்ச்சி பெற்ற மொழிபெயர்ப்பாளர்களின் விருப்பம்.  சமகால நூல்களிலிருந்து  அப்படி எதையும் தரம் பிரித்துத் தனியே சுட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை.

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....