துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

9.8.23

‘ சிறுமைகளும் அவமதிப்புக்களும்’ - ஓர் எதிர்வினை.

 கோவை வாசகி திருமதி சுஜாதா அவர்களிடமிருந்து ‘ சிறுமைகளும் அவமதிப்புக்களும்’ மொழிபெயர்ப்புக்குக் கிடைத்த ஆழ்ந்த வாசிப்போடு கூடிய எதிர்வினை..

நன்றி..சுஜாதா,


அன்புள்ளசுசீலா அம்மா,

நான் முதலில் ஓர் இலக்கிய வாசகியாக என்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறேன். என் தந்தையும் பாட்டியும் நல்ல வாசகர்கள், எனவே வாசிக்கும் ஆர்வம் சிறுவயதிலேயே எனக்கு உண்டாயிற்று. வாசிப்பைப் பொழுதுபோக்காகக் கொள்ளாமல் வாழ்க்கை அனுபவமாகவே எண்ணுகிறேன். பதின்ம வயதில் தந்தை மூலம் ரஷ்ய இலக்கியத்தில் ஆர்வம் ஏற்பட்டது. தல்ஸ்தோய்,துர்கனேவ்,தஸ்தயெவ்ஸ்கி,ஷோலகோவ் போன்ற இலக்கியவாதிகளின் பெயர்கள் வீட்டில் புழங்கிக் கொண்டிருக்கும். இனிய அழகிய நாட்கள் அவை. தாங்கள் மொழிபெயர்த்துள்ள "சிறுமைகளும் அவமதிப்புகளும்" வாசித்துப் பரவசமும்,பூரிப்பும் அடைந்தேன். பரவசம் தங்களின் அற்புத மொழிபெயர்ப்புக்காக. பூரிப்பு ,ரஷ்ய மொழியில் எழுதப்பட்டிருக்கும் புதினத்தின் காலத்தையும்,கதையையும், வனப்பையும் அப்படியே தமிழில் மொழி மாற்றம் செய்ய இயலும் என்பதை உணர்ந்து ...நம் மொழி வளத்தை நினைத்து.

தங்களுடைய மொழி ஆளுமையையும் ,ஆழ்ந்த ஈடுபாட்டையும் நினைத்து மிகவும் வியப்பும் மகிழ்ச்சியும் அடைகிறேன். நீங்கள் கடினமாக உழைத்து 1000 பக்கங்கள் எழுதியதை - இவ்வளவு பரபரப்பும்,மன ஓட்டங்களும் உள்ள நாவலை- ஏழே நாட்களில் சிறிதும் சோர்வோ,மன விலக்கமோ அடையாமல் என்னால் வாசிக்க இயன்றதென்றால் அது தங்களின் கடும் உழைப்பினாலேயே.

நான் இந்நாவலை முதலில் திரு லா ச ரா அவர்கள் அளித்து 1988 இல் என்
இருபதுகளின் ஆரம்பத்தில் படித்தேன். பின் மணமான பிறகு என் கணவரின் அன்பளிப்பாக ராதுகா பதிப்பகம்,மாஸ்கோ வெளியீட்டில் படித்தேன். மீண்டும் முப்பது ஆண்டுகளுக்குப் பின் உங்கள் அழகிய மொழிபெயர்ப்பின் வழியாக இந்த அற்புத நாவலைப் படிக்கும் அரிய வாய்ப்பினைப் பெற்றேன்.

என்றென்றும் மறக்கவியலா நெல்லியையும்,நடாஷாவையும்,வாந்யாவையும்,அல்யோஷாவையும், வால்காவ்ஸ்கியையும் தங்கள் அற்புத மொழிபெயர்ப்பின் மூலம் மற்றுமொருமுறை சந்தித்தேன். சரளமான,சிறிது கூடத் தடங்கலில்லாத ஆற்றொழுக்கான மொழிபெயர்ப்பு நடை தங்களுக்கு வாய்த்துள்ளது. நெருடலான மொழிபெயப்பினால் படிக்க இயலாது பத்து புத்தகங்களாவது என் புத்தக அலமாரியில் உறங்குகின்றன. உங்கள் மொழிபெயர்ப்புத் திறமை கா ஸ்ரீ ஸ்ரீ, த நா குமாரசாமி,சு கிருஷ்ணமூர்த்தி,க நா சு போன்ற ஜாம்பவான்களின் வரிசையில் வைக்கத் தக்கது. நீங்கள் அவர்களில் ஒருவராகவே விளங்குகிறீர்கள்.

வால்காவ்ஸ்கியின் தனிப்பேச்சும் (monologue) நெல்லி மற்றும் அவள் தாயின் துயரங்களின் விவரிப்பும்,நடாஷாவின் தந்தையின் பாசமும்,பிரிவாற்றாமையும் படிக்கும்போதே மெய்சிலிர்க்க வைப்பவை. மிகவும் சிறப்பான பகுதிகள். மிகவும் ஆழ்ந்து ரசித்து வாசித்தேன். நீங்கள் மொழிபெயர்த்துள்ள குற்றமும் தண்டனையும், இரட்டையர் மற்றும் தஸ்தயெவ்ஸ்கி சிறுகதைகள் அனைத்தும் படித்தேன். தஸ்தயெவ்ஸ்கி உங்கள் மேல் ஆவிர்ப்பரித்திருப்பதாகவே எண்ணுகிறேன்.

நீங்கள் மேன்மேலும் பல மொழிபெயர்ப்புகளைத் தந்து தமிழுக்கும்,தமிழ் வாசகர்களுக்கும் சேவை செய்ய வேண்டுகிறேன்.
அன்புடன்,
எஸ் சுஜாதா,கோவை

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....