துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

29.5.12

இமயத்தின் மடியில்-6

பத்ரிநாத் ஆலய வாயிலில் உடன் வந்த குழுவினருடன் நான்...


பயணம் தொடர்கிறது...[இறுதிப்பகுதி]


அலக்நந்தாவில் ஓர் ஆனந்தக் குளியல்..
பயணக் களைப்பில் சற்றே உறங்கிவிட்ட நாங்கள் வண்டிகள் நிறுத்தப்பட்டுக்  கண்விழித்தபோது..உச்சகட்ட பரவசக் காட்சி ஒன்றை .சூரிய உதயத்தின் பின்னணியோடு கண்டோம்...
கண்ணனின் கறுநிறச்சாயலில் கட்டற்ற ஆர்ப்பரிப்போடு பெருகி வரும் அலக்நந்தா ஒரு புறம்

கறுப்பு வண்ணத்தில்....


பச்சைநிறத் திருமாலின் வண்ணம் காட்டிப் பாய்ந்து வரும் பாகீரதி மறுபுறம்..

பச்சை வண்ணத்தில்....
என இவை இரண்டும் ஒன்றிணைந்து ஒருங்கே கூடிக் கங்கையாய்ச் சங்கமித்து மலையிலிருந்து கீழிறங்கும் அற்புதக் காட்சி…! இந்தச் சங்கமம் நிகழும் இடமே தேவப்பிரயாகை...

கருமையும் பசுமையும் ஒன்றுகலக்கின்றன...
பிரபஞ்சப் பேரழகின் அந்த தரிசனம்….அரியாய்…சிவனாய்…அகிலமாய்..அனைத்துமாய், அனைத்திலும் உறைந்து கிடக்கும் ‘மூலமும் நடுவும் ஈறும்’அற்ற பேராற்றலின் பருவடிவங்களாகவே தென்பட...’’வானில் பறக்கின்ற புள்ளெல்லாம் நான்’’என்ற பாரதியின் வரிகள் மனதுக்குள் ஓட...‘’எங்கும் உன் ஆடலடி தாயே..’’என இசைக்கும் பித்துக்குளி முருகதாஸின் இசை காதுக்குள் கேட்க....உலகம் யாவையும் தாம் உளவாக்கி அவற்றில் நீக்கமற நிறைந்து….தன் அலகிலா விளையாட்டான இப் பிரபஞ்சத்தையே தன் அருட்கொடையாக நல்கியிருக்கும் இறைப்பேராற்றல் நம்மையெல்லாம் தூசாக உணர வைக்கும் கணமாக அதை உணர்ந்து மெய் சிலிர்த்தேன்...…
சங்கமத்தில் நீராடுவது பாவங்களைப் போக்குமென்னும் மரபு சார் நம்பிக்கை ஒரு புறமிருக்க….நதிகளின் சங்கமம் போல சாதி மத இன மொழி பேதம் கடந்த மானுட சங்கமம் எப்போது நிகழும் என்னும் ஆவலும் அப்போது கிளர்ந்த்து.
தங்கள் குல முன்னோர்களை எண்ணி அவர்களின் ஆன்மசாந்திக்கான சடங்குகளைப் ‘பண்டா’க்களின் துணையோடு அத்தகைய சங்கமங்களில் செய்வது மரபு. பயணிகளில் பலரும் அதைச் செய்யத் தவறவில்லை.

வையத்து மாந்தரெல்லாம் வளமுற்று வாழ வேண்டியபடி நானும் பாகீரதியுடன் பிணைந்து கிடந்த அலக்நந்தாவில் ஆனந்தக் குளியலை முடித்தேன். சங்கமப்படித்துறை அருகிலேயே இரு சிறிய குகை மறைப்புக்கள் இருந்ததால் உடை மாற்றிக் கொள்வதில் சிக்கல் ஏதுமில்லை.


எங்கள் வண்டிகள் நின்றிருந்த இடத்திலிருந்து கிட்டத்தட்ட முந்நூறு படிகள் இறங்கிச் சங்கம இடத்துக்கு வந்து சேர்ந்திருந்தோம். அந்த அலுப்பும் களைப்பும் ஆற்றுநீர்க்குளியலில் அடியோடு மாறிப்போய் உடலின் செல்கள் புத்துணர்வு பெற்றது போல் புதுத்தெம்பு பெற்றிருந்தன…..உடல் முழுவதும் புது ரத்தம் பீறிட்டுப் பாய்வதான உணர்வு..! இப்போது மறுபடியும் 200படிகளுக்கு மேல் ஏறிச் சென்று தேவப்பிரயாகை ஆலயத்தை அடைந்தோம். துல்லியமான சுத்தத்துடன் மிளிர்ந்த அந்தச் சிறு கோயில் வடநாட்டுக் கோயில்களின் பாணியில் இருந்தது.
தேவப்பிரயாகை ஆலயம்..
 ’கண்டி என்னும் கடிநகர்’ எனப் பெரியாழ்வார் பாசுரத்தில் குறிப்பிடப்படும்
வைணவத் திருக்கோயிலான இதன் முதன்மையான மூர்த்தி ‘ரகுநாத்ஜி’ என வடக்கே சொல்லப்படும் இராம பிரான். புண்டரீகவல்லித் தாயாரும் கருடாழ்வாரும் உடன் காணப்படுகின்றனர்.

பாண்டவர்கள் பாரதப் போர் முடிந்த பின் வேள்வி நடத்திய இடம் இது எனக் கருதப்படுகிறது. அது போலவே இலங்கையில் இராவணவதம் முடித்துத் திரும்பிய இராம இலக்குவர்களும் இங்கே ஒரு யாகம் செய்தார்கள் என்ற குறிப்பு (ஆங்கிலம் மற்றும் இந்தியில்) கோயிலின் புற மதிலில் காணப்படுகிறது. அதற்கு வலுச் சேர்க்கும் வகையில் பிரகாரச் சுற்றில் இராமரின் பாதச் சுவடுகள் தாங்கிய கற்பலகைகள் [இராமேசுவரத்தில் உள்ள இராமர் பாதம் போல] தனியே ஒரு மண்டபத்தில் காணப்படுகின்றன.

இராமர் பாதம் பதிந்த கற்பலகை......
ஆலயச் சுற்றில் சிறுசிறு லிங்கங்கள் நிறைந்த சிவன் சன்னதி,அன்னபூரணியின் சன்னதி,அனுமன் சன்னதி,ஆதிசங்கரரின் திரு உருவம் ஆகியனவும் உள்ளன.
எங்கள் குழுவைச் சார்ந்தவர்கள் மட்டுமே அந்த நேரம் ஆலயத்தில் இருந்ததால் பலரும் வரிசையில் அமர்ந்து அத் திருத்தலம் பற்றிய பெரியாழ்வாரின் பத்துப் பாசுரங்களையும் சந்த லயத்தோடு உரக்கச் சொல்லியது நெஞ்சை நெக்குருகச் செய்தது.
தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடிந்த வெம் தாசரதி போய்
எங்கும் தன் புகழோடிருந்து அரசாண்ட எம் புருடோத்தமன் இருக்கை
கங்கை கங்கையென்ற வாசகத்தாலே கடுவினை களைந்திடுகிற்கும்
கங்கையின் கரை மேல் கைதொழ நின்ற கண்டம் என்னும் கடிநகரே

’’மூன்றெழுத்ததனை மூன்றெழுத்ததனால் மூன்றெழுத்துஆக்கி மூன்றெழுத்தை
ஏன்று கொண்டு இருப்போர்க்கு இரக்கம்நன்குடைய எம்புருடோத்தமன் இருக்கை
மூன்றடி நிமிர்ந்து மூன்றினில் தோன்றி மூன்றினில் மூன்றுருவானோன்
கான் தடம்பொழில் சூழ் கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடிநகரே’’
என இத் திருத்தலம் குறித்துப் பெரியாழ்வார் பாடிய இரு பாசுரங்களும் கருவறைக்குக் கீழே மதுரையிலுள்ள அன்பர் ஒருவரின் நன்கொடையாகப் பளிங்கில் செதுக்கி வைக்கப்பட்டிருந்தன.


’’சிற்றஞ்சிறுகாலை வந்துன்னைச் சேவித்து..’’என்ற ஆண்டாள் திருப்பாவைப் பாடலைச் சொல்லி 
‘’எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உற்றோமே யாமாவோம் உமக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்..’’
என்ற அதன் இறுதி வரிகளை அனைவரும் கூட்டாக ஒரே குரலில் உரத்து முழங்கியபோது...அந்த ஒரு கணம், உலுக்கிப் போட்டது போல உடல் சிலிர்த்து…மெய்யெல்லாம் விதிர்விதிர்த்தது...…உண்மைதான்..! பிற உலகியல் ஆசைகளை (காமம் என்ற சொல்லை எல்லா வகையான ஆசைகளையும் குறிப்பதாகவே ஆண்டாள் இங்கே பயன்படுத்தியிருக்கிறாள்) மாற்றி….ஈசனடியை….அவன் வடிவைக் கணந்தோறும் காட்டியபடி இருக்கும் இயற்கையின் அழகு லயத்திலே மட்டுமே தோய்ந்திட முடிந்தால்..அது வாழ்வின் பெரும் பேறல்லவா?


பிற உலகியல் கடமைகள்,தேடல்கள்,அலைச்சல்கள் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு......மலைகளோடும்....அவற்றிலிருந்து ஊற்றெடுத்துப் பெருகும் வற்றாத ஜீவநதிகளுடனும் மட்டுமே...ஊடாடி ஒன்றுகலந்த அனுபவத் துளிகளை அசை போட்டபடி மதியம் 2 மணியளவில் ஹரித்துவாரம் வந்து சேர்ந்தோம்.பிற பயணிகள் ரிஷிகேசம் குருட்சேத்திரம் என அடுத்து வந்த நாட்களில் சுற்றுலாவைத் தொடர...அந்த இடங்களை முன்பே கண்டிருந்ததால் அத்துடன் என் பயணத்தை முடித்துக் கொண்டு அன்று மாலையே சதாப்தி எக்ஸ்பிரஸில் தில்லி நோக்கிச் செல்லத் தொடங்கினேன்..
வண்டிப் பயணத்திலும்....வீடு திரும்பிய பின்....தொடர்ந்து வந்த பல நாட்களிலும் இன்னமும் கூட....கண் இமைகளை மூடினால்...மலையும் நதியுமே மனக் காட்சிக்குள் சுழன்று சுழன்று அலையடித்துக் கொண்டிருக்கின்றன....

28.5.12

இமயத்தின் மடியில்-5



பயணம் தொடர்கிறது...


சீன எல்லைப் பகுதியில்....
இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதியை அமிர்தசரஸ் அருகிலுள்ள வாகாவிலும் இந்திய நேபாள எல்லைப் பகுதியை காளி நதி ஆற்றின் கரையில் பிதோரகர் பயணத்திலும் நான் முன்பே கண்டதுண்டு.இந்திய சீன எல்லைப் பகுதியாகிய மானா நான் செல்லும் மூன்றாவது எல்லைப்பகுதி. 

இந்தியாவின் கடைசிக் கிராமம் என்னும் குறிப்பைத் தாங்கியபடி தென்பட்ட மானாவின் பெயர்ப்பலகை எங்களை வரவேற்றது. .
மானா..
இராணுவப் பாசறைகளும்ஸ்கௌட் மற்றும் தேசிய மாணவர் படை முகாம்களும் ஆங்காங்கே அந்தப் பகுதியிலிருந்து தென்பட்ட மலைக்காட்சிகளும் இமயத்தின் எழிலான முகங்கள் பலவற்றைக் காட்டியபடியே இருந்தன

மானாவிலிருந்து மலைப்பாதைகளிலும் படிக்கட்டுகளிலும் ஓரிரு கிலோ மீட்டர் மேலேறிச் சென்றால் வியாசர்,கணேஷ் குகைகளைக் காணலாம் என்றும்,நிலத்துக்கு அடியிலேயே முகம் மறைத்து ஓடும் சரஸ்வதி ஆற்றின் சிறிய தரிசனம் ஒன்று கிடைக்கும் என்றும் கேள்விப்பட்டிருந்ததால் மேலே ஏறத் தொடங்கினோம். ஆனால் கடல் மட்டத்திலிருந்து 10000 அடி உயரத்துக்கும் மேல் அமைந்திருக்கும் அந்த மலைப் பகுதியில் பிராணவாயு, போகப்போகக் குறைந்து விடுவதால் எனக்கும் என் தோழிக்கும் இன்னும் சிலருக்கும் மேலே ஏறிச் செல்வது அசாத்தியமானதாகத் தோன்ற அங்கிருந்த தேநீர்க்கடை ஒன்றிலேயே அமர்ந்து கொண்டோம். 10,15 பேர் மட்டும் கால்நடையாகவும் டோலிகளில் ஏறியும் மேலே சென்றனர்.
டோலி சுமக்கும் வாலிபன்...
 கூடை நாற்காலி போன்ற டோலிகளில் யாத்திரிகர்களை அமர வைத்துத் தூக்கிச் செல்வது மிக உயரமான மலைப்பிரதேசங்களிலுள்ள புனிதத் தலங்களில் பல இளைஞர்களாலும் ஒரு அன்றாடத் தொழிலாகவே கைக் கொள்ளப்பட்டு வருவதும் அவர்களது வாழ்க்கை ஓடுவதே இந்த வருமானத்திலேதான் என்பதும் உண்மைதான்என்றாலும் நம் உடற்சுமையை இன்னொருவர் தோள் மீது ஏற்ற எனக்கும் என் தோழிக்கும் தயக்கமாகத்தான் இருந்தது. அதனால் அவ்வறு செல்வதைத் தவிர்த்து விட்டு அங்கே கொட்டிக் கிடந்த அழகுக் குவியல்களை நிதானமாக அசை போட்டு ரசிக்கத் தொடங்கினோம்

.
இந்திய சீன எல்லையில் நான்...

வியாசர் குகை நோக்கி....
வியாசர் குகை மற்றும்சரஸ்வதி ஆற்றைக் கண்டு திரும்பியவர்கள் கூறிய எழுச்சியூட்டும் அனுபவங்களில் மகிழ்வோடு பங்கு கொண்டோம். குறிப்பிட்ட அந்த இடம் மகாபாரதத்துடன் பல வகைகளிலும் தொடர்புடையதாகச் சொல்லப்படுகிறது. குறிப்பிட்ட அந்த குகையிலே அமர்ந்தபடியே வியாசர் மகாபாரதத்தை உருவாக்கினார் என்னும் கருத்தும் நிலவுகிறது. 
வியாசர் குகை...( இன்றைய நவீன முகப்புக்களுடன்..)
மிக அதிகமான திருப்பங்களும் சிண்டும் சிடுக்குமான முடிச்சுகளும் சிக்கலான பகுதிகளும் நிறைந்த அந்த மாபெரும் இதிகாசத்தை மனித ஆரவாரங்களின் குறுக்கீடு எதுவும் இல்லாத அப்படிப்பட்ட மலைக் குகை ஒன்றில் அமர்ந்துதான் வியாசரால் சாதித்திருக்க முடியும் என்றே தோன்றியது.
பஞ்ச பாண்டவர்கள் தங்கள் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் சுவர்க்கம் நோக்கிச் சென்ற இடமும் கூட அதை ஒட்டியே அமைந்திருப்பதாக எண்ணப்படுகிறது.
சரஸ்வதி ஆற்றின் அரியதொரு சிறு காட்சி...[தோழியர் தந்த புகைப்படம்]
பீம் புல் எனப்படும் இந்த இடத்தில் ஆற்றுநீரோட்டத்தைத் தடுத்துத்
தாங்கள் சுவர்க்கம் செல்ல பீமன் வழி ஏற்படுத்தித் தந்ததாகச் சொல்லப்படுகிறது.
..
மானாவிலிருந்து விடுதிக்குத் திரும்பியதும் பனிக்குளிரின் கடுமை கூடுதல் வீரியத்துடன் தாக்குதல் தொடுக்க இரவு உணவை முடித்துக் கொண்டு போர்வைகளுக்குள் சுருண்டு கொண்டோம்.


மறுநாள்- மே 9ஆம் தேதி,காலைச் சூரியன் விடிகாலை நான்கரை மணிக்கே முகம் காட்டத்தொடங்கி விட்டான். வட நாட்டில் கோடை காலங்களில் சூரிய உதயம் மிகச் சீக்கிரமாகவே நிகழ்ந்து விடுவது வழக்கம்தான்.எனினும் குளிரும் கூடவே இருந்ததால் காலை ஆறு மணிக்கு மேலேயே கண் விழித்தோம். ஒரு சிலர் தப்த குண்ட வெந்நீர் ஊற்றுக்களில் நீராடச்செல்ல…..நான்,மலைச் சரிவுகளுக்குள் காலாற நடந்து சென்று இமயத்தின் எழிலுக்குள் சற்றுநேரம் திளைத்துவிட்டு வந்தேன்.
சிற்றுண்டிக்குப் பிறகு பிரியவே மனமின்றி அந்த இமய முகடுகளிலிருந்து விடை பெற்றோம்.
திரும்ப ஹனுமான் சட்டி,விஷ்ணுப்பிரயாகை,கோவிந்த்காட் என நாங்கள் வந்த பாதியிலேயே எங்கள் பயணம் கீழ்நோக்கித் தொடர்ந்தது.
கருடகங்கா...
கருடகங்கா என்னும் இடத்தில் சற்றுக் கீழிறங்கிச் சென்று சலசலத்து ஓடும் ஆற்றுநீரில் கால்  நனைத்தபடி கருடனைக் கண்டோம்.வட நாட்டு ஆலயங்களில் அரிதாகவே காணக் கிடைக்கும் நேர்த்தியான கல்சிற்பமாக கருடனின் உருவம் வடிவமைக்கப்பட்டிருந்த்து.
கருடகங்காவில் நான்...
 இந்த இமயப் பயணத்தில் ‘மலர்ப்பள்ளத்தாக்கு’ என்பதும் தவற விடக் கூடாத ஓர் இடம்தான்…அது நாங்கள் சென்று கொண்டிருந்த வழியில் இருந்த கோவிந்த்காட்டிலிருந்து சற்று அருகாமையிலேதான் இருக்கவும் செய்தது; எனினும் பயணத் திட்டத்தில் அது இடம் பெறாததால் அதைத் தவற விட வேண்டியதாயிற்று.
பகல் 12 மணிக்கு மேல் மலைப்பாதையின் தகிப்பு மிகுதியாகியது…குளிரும் வெயிலும் ஒரே நாளில் தாக்குதல் தொடுத்திருந்ததால் சற்றே சோர்ந்து போயிருந்த நாங்கள் மாலை 6 மணி அளவில் ஸ்ரீநகரிலுள்ள சுபகாம்னா தங்கும் விடுதிக்கு வந்து சேர்ந்து ஓய்வு கொண்டோம்.

நதியோடு கை கோர்த்து மலையோடு கை குலுக்கி நாங்கள் செய்த இந்தப் பயணத்தின் இறுதிக் கட்டப் பரவசம் எங்களுக்காக தேவப்பிரயாகையில் காத்திருந்தது.
(மேலும் அடுத்த இறுதித் தொடர்ப்பதிவில்..)

21.5.12

இமயத்தின் மடியில்-4



பத்ரி விஷால்..

நாற்புறமும் பனிப்போர்வையோடு கூடிய மலைத் தொடர்கள் சூழ்ந்திருக்க…நடுவே இயற்கையின் எழில் கொஞ்சும் கம்பீரத்தோடு வீற்றிருந்தது பத்ரிநாத்.பத்ரி என்பதன் பொருள் இலந்தை. இலந்தை மரங்கள் அடர்ந்திருந்த வனத்துக்கு நடுவே இருந்ததாலேயே பத்ரி என்னும் பெயர் இதற்கு உரியதாயிற்று. நர நாராயண மலைத் தொடர்களுக்கு மத்தியில் நீலகண்ட சிகரத்தின் நிழலில் அலக்நந்தா ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் இந்தத் தலம் 108 வைணவத் திருப்பதிகளில் முதன்மையானது என்பதோடு சமணர்களும் கூட இங்குள்ள பத்ரிநாதரைத் தங்கள் முதல் தீர்த்தங்கரராக-ஆதிநாதராகக் கருதிப் போற்றுகின்றனர்.

பயணம் மேற்கொள்வதற்கு மிகவும் அரிதான இத் திருத்தலத்தை ‘வதரி’ எனக் குறிப்பிடும் திருமங்கையாழ்வார்., இத் திருப்பதியைக் காண விழைவோர் மூப்பு வந்து தங்களைப் பற்றிக் கொள்வதற்கு முன் அதைச் செய்து முடித்து விட வேண்டும் என்பதைத் தன் மூன்றாம் திருமொழியின் முதல் பத்துப் பாடல்கள் முழுவதிலும் மாய்ந்து மாய்ந்து சொல்லிக் கொண்டு போகிறார்.
 ‘’முதுகு பற்றிக் கைத்தலத்தால் முன்னொரு கோல் ஊன்றி
விதிர்விதிர்த்துக் கண் சுழன்று மேற்கிளை கொண்டு இருமி
இது என் அப்பர் மூத்தவாறுஎன்று இளையவர் ஏசாமுன்
மது உண் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே
-பெரியதிருமொழி-முதல்பத்து 3ஆம் திருமொழி
[நடக்க முடியாமல் முதுகை ஒரு கையால் பிடித்துக் கொண்டு...
ஒரு கையில் கோலை ஊன்றிக் கொண்டு,நெடுமூச்சு வாங்கி..இடைவிடாமல் இருமியபடி..’இந்தக் கிழவனைப் பார்’ என இளைஞர்களெல்லாம் கேலிபேசும் நாள் வருவதற்கு முன்னர் தேன் உண்டு வண்டுகள் பண்பாடும் வதரி என்னும் பத்ரியை வணங்குவோம்..]


இத்தகைய நெடும் பயணத்தை மேற்கொண்டு பார்த்தால்தான் ஆழ்வார் பாசுரத்தின் உட்பொருள் முழுமையாக விளங்கும். போக்குவரவுக்கான நல்ல வாகனங்களும் அவை சென்றுவர ஒழுங்கான மலைப்பாதைகளும் இருக்கும் இன்றைய காலகட்டத்திலேயே இந்தப் பயணம் சிரமங்களும் அபாயங்களும் நிறைந்ததாகத் தோன்றுகிறதென்றால் எந்த ஒரு சிறு வசதியும் இல்லாத ஒரு காலகட்டத்தில் ஆழ்வார்கள் இங்குள்ள தலங்களைக் கண்டிருப்பதும் அவை குறித்துப் பாடியிருப்பதும் வியப்பூட்டுபவைதான்.

நகரின் மையத்தில் பேருந்து நிலையத்துக்கு எதிரே இருந்த பாங்கட் தர்மசாலாவில் எங்களுக்கு அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.
பாங்கட் தர்மசாலா...
விடுதியருகில் நான்...
விடிகாலை 3 மணிக்கு ஜோஷிமட்டை நோக்கிக் கிளம்பும்போதே குளிரைத் தாங்குவதற்கு ஏற்ற கம்பளி உடைகளை அணிந்து கொண்டு விட்டபோதும் குளிர்மலைகளுக்கு இடையே பொதிந்து கிடக்கும் பத்ரிநாத்தின் குளிரைப் பொறுக்க அவை போதுமானவையாக இல்லை என்பதால் மேல் கோட், சால்வை, கை உறை,கால் உறை எனப் பலவற்றையும் அவரவர் வசதிப்படி உடனே போட்டுக் கொண்டோம்காலை 9 மணி முதல் 11 மணி வரை ஆலயத்தில் தரிசனம் செய்வதற்கான டோக்கன்களை சுற்றுலா அமைப்பாளர்கள் அளிக்க, காலைச் சிற்றுண்டியை முடித்துக் கொண்டு நாங்கள் தங்கியிருந்த விடுதியிலிருந்து கோயிலை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.

நாங்கள் தங்கியிருந்த விடுதியிலிருந்து கோயில் ஓரிரு கிலோமீட்டர்தானென்றபோதும் ஏற்ற இறக்கமான மலைப்பாதைச்சரிவுகள்! அவற்றில் வரிசையாக நிறைந்து கிடக்கும் கடைகளில்…..பாசிமணிமாலைகள், ருத்திராட்சங்கள், பல வண்ணப் பைகள், புகைப்படஅட்டைகள்,கடவுள் உருவங்கள் ,கம்பளி ஆடைகள் மற்றும் போர்வைகள் என மலை சார்ந்த கோயில் தலங்களுக்கு வழக்கமாக உரிய பொருட்கள் மண்டிக் கிடந்தன. என்றாலும் கூடக் காசி ஹரித்துவார் போன்ற புனிதத் தலங்களைப் போல அழுக்கும் குப்பையும் நிரம்பி வழியாமல் ஓரளவு தூய்மையுடனேதான் இருந்தது பத்ரிநாத்.(இந்த ஆண்டுக்கான பக்தர் கூட்டம் இப்போதுதான் வரத் துவங்கியிருப்பதும் கூட இதற்கான காரணமாக இருக்கலாம்). ஒரு புறம் தேவபூமிகளாகப் போற்றிக் கொண்டே- மறுபுறம் அடிப்படைச் சுத்தம் கூட இல்லாமல் அவற்றை நாம் பராமரிக்கத் தவறி விடுகிறோம்  என்பது உண்மையிலேயே வருத்தத்துக்குரியதுதான்

.இமயச் சிகரங்களின் பின்னணியில்பெருகி ஓடும் அலக்நந்தா ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் ஆலய தரிசனம் சற்றுத் தொலைவிலிருந்தே  அற்புதமாகக் கிடைத்து விடுகிறது
ஆலய வாயிலில் குழுவினரோடு நான்...

தென்னாட்டுக் கோயில்கள் போன்ற கோபுர அமைப்போ, வட நாட்டுக் கோயில்கள் போன்ற கூம்பு வடிவ மேற்கூரையோ கொண்டிராத வித்தியாசமான வடிவமைப்புடன் புத்த விகாரைகளைப் போல- அதே வேளையில்- வண்ண மயமாகக் காட்சியளிக்கும் பத்ரிநாத் ஆலய முகப்பு கண்ட அளவிலேயே நம்மைக் கட்டிப் போட்டு விடுகிறது. .


.பத்ரிநாதரின் காலடிகளை நாளெல்லாம் தழுவிச் செல்லும் குளிர்ச்சியான ஆற்று நீரோட்டத்தோடு கூடவே கொதிக்கும் வெந்நீர் ஊற்றாக தப்தகுண்டமும் நாரதஷீலாவும் (இதிலுள்ள நீர் அத்தனை சூடாக இல்லை) இயற்கையின் அதிசயங்களாக அங்கே அமைந்திருப்பது வியப்பூட்டுகிறது. தப்தகுண்டக் குளியல் மறுநாள் என்பதால் கொதிக்கும் நீரில் கால்களை மட்டும் நனைத்துக் கொண்டோம்.



ஒன்பதாம் நூற்றாண்டை ஒட்டி சாளக்கிராமக் கல்லில் அமைந்த பத்ரிநாதரின் உருவச் சிலையை அலக்நந்தா ஆற்றிலிலிருந்து  கண்டெடுத்த ஆதிசங்கரர் அருகிலுள்ள குகை ஒன்றில் அதைப் பிரதிஷ்டை செய்தார் என்றும் பின்னாளில் கட்வால் மன்னர்களால் 16ஆம் நூற்றாண்டில் அச் சிலை வடிவம் தற்போதுள்ள ஆலயத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிகிறது.


மேற்கூரையுடன் கூடிய பாதையில் பக்தர்கள் வரிசையாகச் செல்ல வசதி செய்யப்பட்டிருக்கிறது; கூட்டம் அதிகமாகச் சேரத் தொடங்கியிராததால் வரிசை விரைவாக நகர்ந்து செல்ல அரை மணி நேரத்துக்குள்ளேயே உள்ளே செல்வது சாத்தியமாகி விட்டது.


கருவறைக்குள் முதன்மைத் திருவுருவம் இளம் கறுப்புநிற சாளக்கிராமத்தில் அமைந்த பத்ரி விஷாலின் திருவுரு. பத்மாசனத்தில் தலைக்கு மேல் சக்கரத்துடன் அமைந்திருக்கும் அத் தோற்றம் புத்தரை நினைவூட்டுகிறது. [புத்தரும் திருமாலின் அவதாரங்களில் ஒன்றே எனச் சொல்லப்படுவதுமுண்டு] ருத்திர மூர்த்தியாக காளியாக அவ்வடிவத்தைக் காண்போரும் உண்டு…அரியோ..சிவனோ…அம்மையோ..அப்பனோ…. இவை அனைத்துமே ஈடு இணையற்ற பிரபஞ்சப் பெருவெளியின் மகத்தான சக்திக்கான குறியீடுகள் என்று புரிந்து கொண்டால் மட்டுமே பேதங்கள் அழிந்து சமநிலை தழைக்கும்…

பத்ரிநாதருடன் குபேரனின் மிகப்பெரிய முக வடிவம்,கருடாழ்வாரின் சிறிய சிலா வடிவம்,உற்சவ மூர்த்தி (இவரே குளிர்காலத்தில் ஜோஷிமட் செல்பவர்) நாரதர் ஆகியோரின் திரு உருக்களும் அங்கே உடனிருந்தன. கருவறையின் மற்றுமொரு தனிச் சிறப்பு நர நாராயண வடிவங்கள், பளிச்சிடும் கறுநிற சாளக்கிராம உருவங்களாகக் காட்சி தருவதே.
நர நாராயண தத்துவம் குறித்த கருத்துக்கள் மிகவும் சுவாரசியமானவை.  நரன்,நாராயணன் என இரு முனிவர்களின் வடிவங்களில் வரலாற்றுக்கெட்டாத காலம் தொடங்கி பூவுலகின் அனைத்து உயிர்களின் நன்மைக்காகவும் விஷ்ணுவே கடுமையான தவம் இயற்றி வருகிறார் என்கிறது பாகவத புராணம். இது பற்றியே பத்ரிநாத் கருவறையில் அவ்விரு வடிவங்களின் சாளக்கிராமங்களும் மூலவருடன் இடம் பெற்றிருக்கின்றன. மேலும் பத்ரிநாத் அமைந்துள்ள இடத்துக்கு இருபுறமும் உள்ள இமயச் சிகரங்கள் இரண்டும் கூட நர,நாராயணர் என்றே அழைக்கப்படுகின்றன.


அந்த நர நாராயணர்கள்தான் முறையே அர்ச்சுனனாகவும்[நரன்[,கண்ணனாகவும்[நாராயணனாகவும் வந்தவர்கள் என்றும்,இணைபிரியாத இரட்டையர்களான அவர்கள் இருவருமே முன்பிறவியில் நர நாராயணர்களாக பத்ரியில் தவமிருந்தவர்கள் என்றும் சொல்கிறது மகாபாரதம்.பகவத் கீதையில் அர்ச்சுன்னைப் பார்த்து ‘’முன்பு நீயே நரனாக இருந்தாய்!நாராயணனின் தோழனாக..அவனுடன் இணைபிரியாமல் இருந்தபடி பத்ரியில் தவம்செய்தாய்..’’ என்று கண்ணன் சொல்வதும் இதை ஒட்டியதே.நரநாராயணர் விஷ்ணுவின் 5ஆம் அவதாரமாகவும் கருதப்படுகின்றனர்

நர,நாராயண வடிவங்கள்-நன்றி;விக்கிபீடியா...


சன்னதிக்குள் பத்து நிமிடங்களுக்கு மேல் செலவிட்டு அங்கிருந்த மூர்த்தங்கள் இன்னவென்பதைத் தெளிவுபடுத்திக் கொண்டோம்.
பிரகாரத்தில் வலம் வருகையில் அங்கும் நர நாராயண சன்னதி ஒன்று தனியாகவே அமைந்திருந்ததைக் காண முடிந்தது. ஆதி கேதார்நாத் என்னும் பெயருடன் சிறிய சிவலிங்கத்துடன் கூடிய சன்னதி ஒன்றும் அங்கிருக்க அதை வழிபட்டு அப்போதைக்கு கேதார்நாத் செல்ல முடியாத குறையைப் போக்கிக் கொண்டோம்.
தென்னாட்டுக் கோயில்கள் போலக் கருவறையில் கற்பூர ஆரத்தி,சடாரியைத் தலை மீது வைத்தல் முதலிய சம்பிரதாயங்கள் இங்கு இல்லை; தீர்த்தம் மட்டும் வழங்கி செந்தூரத்தை நம் நெற்றியில் பூசிவிட்டுச் சிறிய சர்க்கரைக் கட்டிகளைப் பிரசாதமாகத் தருவதே இங்குள்ள கோயில்களின் மரபு.
கோயிலுக்குள்ளிருந்து வெளியே வந்த பிறகும் சூழ்ந்திருந்த சுற்றுப்புறக் காட்சிகளிலேயே கொஞ்ச நேரம் லயித்துப் போயிருந்தபோது கோயிலுக்கும் ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் செதுக்கப்படாத
கற்பாறை ஒன்று நந்தியின் வடிவில் இருப்பது கண்ணுக்குத் தென்பட்டது.
                                                கல்லில் மறைந்திருப்பது நந்தியா..செம்மறி ஆடா..?

(ஒருவகையில் பார்த்தால் செம்மறி ஆட்டின் மிகப்பெரிய சிற்பமாகவும் கூட அது தோன்றியது). இந்த இயற்கைதான் தன்னைத்தானே எப்படியெல்லாம் செதுக்கிக் கொள்கிறது?
மறுநாள் காலை வரை பத்ரிநாத்திலேதான் தங்கப்போகிறோம் என்பதால் மதிய உணவுக்குப் பிறகு அங்கிருந்து 3 கி.மீ தொலைவிலிருந்த இந்திய-சீன   
எல்லையோரத்து கிராமமான மானாவுக்குச் சென்றோம்.
(மேலும் அடுத்த தொடர்ப்பதிவில்..)
புகைப்படங்கள்;பதிவர்.
காண்க;
.





LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....