துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

28.4.22

இணைய உரை- தமிழ் இலக்கியத்தில் மனித உளவியல்

28.04.2022 அன்று பூ சா கோ கிருஷ்ணம்மாள் மகளிர் கலை அறிவியல் கல்லூரி இணைய வழி நடத்திய ‘தமிழ் இலக்கியங்களில் உளவியல் சிந்தனைகள்’ குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கில் ‘காலந்தோறும் தமிழ் இலக்கியத்தில் மனித உளவியல்’ என்ற தலைப்பில் என் தொடக்க உரை.



 

27.4.22

பிரம்மாஸ்திரம்-மொழியாக்கச் சிறுகதை

 சொல்வனம் இணைய இதழில் வெளிவந்திருக்கும் என் மொழியாக்கச் சிறுகதை-ஏப்ரல் 24,2022



                                      பிரம்மாஸ்திரம்

வங்க மூலம்: ஆஷாபூர்ணாதேவி

ஆங்கில வழி தமிழாக்கம்: எம் ஏ சுசீலா

 


ப்படி ஒரு யோசனையை ரோனபிர் முன்வைக்கக்கூடும் என்று ஓஷிமா இதுவரை கனவு கூடக் கண்டதில்லை.

சிறிது நேரம் அமைதியாக இருந்தபின், ‘’அது சாத்தியமா என்ன?’’என்றாள்.

‘’ஏன் அப்படிச் சொல்றே.. , அதென்ன அப்படி நடக்கவே முடியாத ஒரு காரியமா?”

சிறிது எள்ளல் கலந்த தொனியில் எரிச்சலோடு சொன்னான் ரோனபிர்.

‘’ஒருவேளை இதை செஞ்சா புத்தியில்லாத முட்டாள் மாதிரி வெட்கப்பட்டுக் கூசிக்குறுகிப் போக வேண்டியிருக்கும்னு நினைக்கிறியோ?’’

’’அதுக்காக இல்லை, இது ஒண்ணும் வெட்கப்பட வேண்டிய சமாச்சாரம் இல்லையே. ஆனா, எத்தனையோ நாளா சந்திக்கவே இல்லை, எந்த வகையான தொடர்பும் இல்லை. அப்படி இருக்கும்போது திடீர்னு இப்படி ஒரு விஷயத்தை எடுத்துக்கிட்டுப் போனா…’’

தன் குரலைக் கசப்புணர்ச்சியால் நிறைத்து வைத்திருந்த ரோனபிர் அவள் சொன்னதைக்கேட்டு பலமாகச் சிரித்தான்.
‘’பின்னே? புருஷனோடயும்,குழந்தைகளோடயும் வாழ்ந்துக்கிட்டிருக்கிற கல்யாணமான ஒரு பொண்ணு, தன்னோட காதலனை தினம் தினமா இப்படி ஒரு கோரிக்கையோட சந்திச்சுக்கிட்டிருப்பா? நீயே சொல்லேன்’’

‘’நிறுத்துங்க. இப்படி அநாகரிகமா பேசாதீங்க’’


’‘இதுக்கு முன்னாலே நான் ரொம்ப ரொம்ப நாகரிகமான ஒரு மனுஷனாத்தான் பேசிக்கிட்டிருந்தேன், ஆனா நீ அதைக் கொஞ்சம் கூட சட்டை செய்யாம இருந்ததுதான் எனக்கு எரிச்சல் மூட்டிடிச்சு. இத பாரு…ஏன் அது சாத்தியமில்லைன்னு சொல்றே? அப்படி என்ன இருக்கு அதிலே? சின்னவங்களா இருக்கும்போது ’அப்படி இப்படி ஏதாச்சும் ஒரு விஷயம்’ நடந்திருக்கலாமில்லே, ஆனா, எத்தனை வருஷமானாலும் மனுஷங்களாலே அதை அத்தனை சுலபமா மறந்திட முடியறதில்லை. அதையெல்லாம் அப்படி மறந்திடத்தான் முடியுமா என்ன? வாலிப வயசிலே கோஷல் சாஹிப் உன்னைக் காதலோட பார்த்திருக்கார்.அதனாலே இப்ப நீ கேக்கற உதவியைக் கட்டாயம் செய்வார், சொல்லப்போனா ரொம்பசந்தோஷமாவே செய்வார்’’

ஓஷிமா அவன் பக்கம் திரும்பி சற்றுக்கோபமாகவே சொன்னாள்.

‘’ நீங்க ‘அப்படி இப்படி ஏதோ ஒரு விஷயம்’ , சின்ன வயசிலேன்னு இன்னிக்கு என்னென்னெவோ புதுசு புதுசா சொல்றீங்க. உங்க மனசிலே நீங்க என்ன நெனைக்கிறீங்கன்னும் எனக்குப் புரியுது . ஆனா, எது எப்படி இருந்தாலும்..ஒரு வேளை அந்த மனுஷனுக்கே கூட அதிலே சந்தோஷம் இருந்தாலும் நான் எப்படி அதிலே சந்தோஷப்பட முடியும்னு நினைக்கிறீங்க? என்னோட நெலைமையைப் பத்தி எப்பவாவது யோசிச்சுப் பார்த்திருக்கீங்களா?”

அவள் சொன்னதைக்கேட்டு ஆச்சரியமடைந்தவனைப் போலக் காட்டிக்கொண்ட ரோனபிர்,

’’இதிலே அவ்வளவு யோசிக்க என்ன இருக்கு, இப்போதைக்கு..இந்த சமயத்திலே அந்த மனுஷன் கையிலே நிறைய அதிகாரம் இருக்கு. நீ எப்பவும் சொல்லுவியே ‘கடவுளோட கருணை’ ன்னு,அந்த மாதிரி ஏதோ ஒண்ணு அவன் கிட்ட இருக்கு. அதனாலே அவன் மட்டும் நினைச்சா எனக்கு ரொம்ப சுலபமா ஒரு நல்ல வேலை வாங்கிக் கொடுத்திடலாம். அவனைப் போய்ப் பார்த்துக் கேட்டாதான் அது நடக்கும். அதை அவன் கிட்டே போய்க் கேக்கறதிலே உன்னோட கௌரவம் அப்படி என்ன பெரிசாய்ப் பாழாப்போயிடும்னு எனக்குத் தெரியலை. அதுதான் என்னாலே புரிஞ்சுக்கவே முடியலை”

’’உங்களைப் புரிஞ்சிக்க வைக்கிறது இன்னும் கஷ்டம் எனக்கு” என்றபடி மேஜை மேலிருந்த சாமான்களைத் தேவையில்லாமல் இடம் மாற்றி மாற்றி வைத்துக்கொண்டிருந்தாள் ஓஷிமா.

ரோனபிரின் தாடைச் சதை இறுகியது, புருவம் முடிச்சிட்டுக் கொண்டது, நெற்றியில் கோடுகள்..
‘’சொந்தப்பெண்டாட்டியை ஒரு மனுஷன் இந்த அளவுக்குத் தாஜா பண்ண வேண்டியிருக்குன்னா..அப்றம் அவனோட வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை”

“என்னது தாஜாவா? நீங்க என்ன என்னை இப்பத் தாஜாவா பண்ணிக்கிட்டிருக்கீங்க?”

ஓஷிமாவின் முகத்தில் சிவப்பேறியது.

“பின்னே என்னவாம்” என்று எரிச்சலும் கேலியும் கலந்த குரலில் சொன்னான் ரோனபிர்.

“இத்தனை நேரம் நான் செஞ்சுக்கிட்டிருந்ததெல்லாம் தாஜா ( நம்ம பாஷையிலே ஹாஷாமோட்) இல்லாம வேற என்னவாம்? என்னவோ யார் வீட்டிலேயோ போய்த் தீயை வச்சுட்டு வான்னு நான் உன்கிட்டே சொன்ன மாதிரியில்லை நீ நடந்துக்கறே? சொல்லப்போனா, இது ஒரு பெரிய விஷயமே இல்லை. கோஷால் சாஹிபுக்கும் உனக்கும் ஒருத்தரை ஒருத்தர் ரொம்ப காலமாவே தெரியும். அதனாலே நீ சுலபமாக் கேட்டுப் பார்த்திட முடியும். அதுக்குத்தான் நான் ரொம்ப நேரமா இவ்வளவு கஷ்டப்பட்டு முயற்சி பண்ணிக்கிட்டிருக்கேன்”

‘சுலபம்’! ஓஷிமாவின் முகத்தில் ஒரு மெல்லிய, மிக மெல்லிய புன்னகை அரும்பியது.
‘எத்தனை சுலபம்!’

பதினோரு வருடங்கள் எந்தவிதத் தொடர்புமே இல்லாமல் இருந்தபிறகு இப்போது தேவப்ரத்தின் (கோஷால் சாஹிப்) வீட்டுக்கு அவளாகவே வலியச் செல்ல வேண்டும்,வேலையில்லாமல் இருக்கும் தன் கணவனுக்கு வேலை கேட்க வேண்டும்…ஆஹா,அதுதான் எத்தனை சுலபம்? ரோனபிரின் உறவுக்காரர்களுக்கு வேண்டுமானால் அது ஒரு எளிய காரியமாகத் தோன்றலாம். ஒருவேளை அவர்கள் அப்படி ஒரு கணக்கைப் போட்டிருக்கலாம். ஒரு காலத்தில் ஓஷிமாவுடன் கூடப் படித்தவன், இரண்டுபேருக்கும் இடையே ஓரளவு நெருக்கம் இருந்தது என்பதும் ரோனபிருக்குத் தெரியும். அந்தப் பள்ளித் தோழன் இப்போது தன் திறமையால் உயர்ந்து அதிருஷ்ட தேவதையைத் தன் கைப்பிடிக்குள் வைத்திருக்கிறான். அந்தச் செய்தியையும் கூட ரோனபிர்தான் எங்கிருந்தோ தெரிந்து கொண்டு வீட்டில் வந்து ஓஷிமாவிடம் சொன்னான். கோஷால் அண்ட் கம்பெனியில் செல்வ வளம் கொழிப்பதைப்பற்றி எந்தத் தகவலைக் கேள்விப்பட்டாலும் அவன் உடனே ஓடி வந்து ஓஷிமாவிடம் அதைப் பற்றிச் சொல்லி விடுவான்.

ஓஷிமா ஒருபோதும் அதில் ஆர்வம் காட்டியதே இல்லை. அவள் எப்போதும் எரிச்சலைத்தான் வெளிப்படுத்துவாள்.


’‘அந்த கம்பெனி பிரமாதமாக் கொழிக்குதுன்னா கொழிச்சிட்டுப்போகட்டும். அதுக்கும் எனக்கும் என்ன வந்தது’’

ரோனபிர் கண்களைச் சுருக்கிக்கொண்டு முகம் முழுக்க சிரிப்போடு இப்படி பதில் தருவான்.
’’அதென்ன அப்படி சொல்லிட்டே? ஒரு காலத்திலே உங்களோட உறவு இனிமையாத்தானே இருந்தது? அவன் இப்ப சக்தி படைச்சவனா.. ரொம்பப் பெரிய ஆளாயிட்டான்னு கேள்விப்பட்டா உனக்கு சந்தோஷமா இருக்குமில்லையா, அதனாலேதான் அதைப்பத்தி சொல்லிக்கிட்டிருக்கேன்’’

அது எப்பொழுதோ அவன் சொன்னது, அது கூடப்போய்த் தொலையட்டும். ஆனால் இப்போது ரோனபிர் முன்வைத்திருக்கும் வேண்டுகோள் கொஞ்சம் கூட அறிவுக்குப் பொருத்தமில்லாததாக இருந்தது. தேவப்ரத் இப்போது ஒரு மிகப்பெரிய நிறுவனத்தில் பங்குதாரராகி விட்டதால் அவன் நினைத்தால் ரோனபிருக்கு ஒரு வேலை தர முடியும்,அதனால் அவனிடம் சென்று குழந்தைகளும் தாங்களும் மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பதால் தன் கணவருக்கு ஒரு வேலை தருமாறு அவள் பணிவோடு கேட்டுக்கொள்ள வேண்டுமாம்.

சீச்சீ..!

ஓஷிமா பதட்டமில்லாத குரலில் இப்படிச்சொன்னாள்.

’’எது சுலபம்,எது கஷ்டம்ங்கிறதிலே ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வகையான அபிப்பிராயம் இருக்கும். அதிருக்கட்டும், இப்ப இதுக்கு பதில் சொல்லுங்க. தினமும் அவருக்குக் கீழ்ப்படிஞ்சு வணக்கம் வச்சுக்கிட்டு உங்களாலே வேலை பார்க்க முடியுமா?’’

’’அதென்ன அத்தனை பெரிய விஷயமா? அது என்னாலே முடியுமான்னு வேற கேக்கறே..ஹ்ம்ம்..’’ என்றபடி தன் முகத்தை ஆந்தை போலக் கடுகடுப்பாக வைத்துக்கொண்டபடி தொடர்ந்து பேசினான் ரோனபிர்.

‘’பிச்சைக்காரனுக்கு மரியாதை வேற வேணுமா என்ன? அப்படிச் செய்ய முடியாததுன்னு அதிலே என்ன இருக்கு? அவனோட நான் என்ன ஒண்டிக்கு ஒண்டி சண்டைக்கா போகப்போறேன்? அவனுக்கு நான் யாருன்னு கூடத் தெரியப்போறதில்லை. நான் உன்னை இப்ப அவன் கிட்ட போகச் சொல்றேன், நீயும் யாருக்கும் தெரியாம ரகசியமா அவனைப் போய்ப் பார்க்கப்போறே. நான் பாட்டுக்கு வழக்கமான விதிகளை ஒட்டி வேலைக்கு ஒரு மனுவைப் போடுவேன். நீ செய்ய வேண்டியதெல்லாம் என்னோட பேரையும் அட்ரஸையும் அவன் கிட்ட குடுத்திட்டு அதைக்கொஞ்சம் ஸ்பெஷலா கவனிச்சுக்கங்கன்னு சொல்றதுதான். அவ்வளவோட சரி! ஒரு குள்ளநரி இன்னொரு நரிக்குத் தந்திரமா செய்யற உதவி. அந்த வேலை மட்டும் முடிஞ்சதுன்னா..,யாரு என்னன்னு யாருக்குத் தெரியும்? கம்பெனியிலேயே ஒசந்த எடத்திலே அவன் இருப்பான், நானோ ஒரு அற்பமான மீனைப்போல அங்கே இருக்கப்போறேன், எனக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம் இருக்கப்போகுது?‘’

அவன் இதை உண்மையிலேயே தீவிரமாகத்தான் எடுத்துக் கொண்டிருக்கிறான் என்பது புரிந்ததும்

’‘அவனுக்கு என்னை ஒருவேளை அடையாளம் தெரியலைன்னா..’’ என்று கேட்டாள் ஓஷிமா. ’’பணக்கார மனுஷங்க தங்களோட ஏழை நண்பர்களை மறந்து போறது இயற்கைதானே? ஒருக்கால் அவனுக்கு என்னை யாருன்னே கூடத் தெரியாம இருந்திடலாம்’’

ரோனபிர் ஒரு கபடப்புன்னகை செய்தான்.

’’இதோ பாரு, சும்மா வறட்டு வாதம் பண்ணிக்கிட்டிருக்காதே. அவனுக்கு உன்னை நல்லாத் தெரியும்கிறது உனக்கும் தெரியும், எனக்கும் தெரியும். உன்னை ஒருதரம் பார்த்தவங்க கூட உன்னை எப்பவுமே மறக்க முடியாதே?’

மீண்டும் ஒருமுறை ஓஷிமாவின் முகம் சிவந்தது. ஆனாலும் அவள் பதட்டப்படாமல் அமைதியாகவே பேசினாள்.

’’சரி, அவனுக்கு என்னைஅடையாளம் தெரியுதுன்னே வச்சுக்கிட்டாலும் நம்ம கேக்கிறதை அவன் ஏத்துப்பான் அப்படீங்கிறதுக்கு என்ன உத்தரவாதம்? அப்ப என் மூஞ்சியை நான் எங்கே கொண்டுபோய் வச்சுக்கறது?’’

‘’என்னது ஒத்துக்குவான் அப்படீங்கிறதுக்கு என்ன உத்தரவாதமா?’ ரோனபிரின் கபடப்புன்னகை இன்னும் சற்றுக் கூடுதலாயிற்று.

’’அதெல்லாம் நிச்சயம் ஒத்துக்குவான், அது எனக்குத் தெரியும்’’

ஓஷிமாவின் முகம் முழுவதும் சட்டென்று தழல் போல் சிவந்தது. அதற்கு மேலும் தன் குரலின் பதட்டத்தை அவளால்கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை.

’’உங்களுக்கு அந்த அளவு தெரியும்னா என்னை அங்கே எப்படித் துணிஞ்சு அனுப்பறீங்க’’

’’ஐயோ..கடவுளே, அது சும்மா ஒரு வேடிக்கைக்காக சொன்னேன்னு கூடவா உனக்குப் புரியாது?’’

மறுபடியும் ஒரு முறை வாய் விட்டுச்சிரித்தான் ரோனபிர்.

’’இதோ பாரு, உனக்கு என்னைப் பத்தித்தெரியாதா, என்னோட பலமே நீதான், எனக்கு தைரியம் கொடுக்கிறதே நீதான். நான் ஏதோ வேடிக்கையாப் பேசினதை இப்ப விட்டுத்தள்ளு. நீங்க பழைய காலத்து நண்பர்கள்ங்கிறதாலே கோஷால்சாஹிப் மறுத்துச் சொல்ல மாட்டார்னு நான் உறுதியா நினைக்கிறேன். ஒருவேளை அந்த இடத்திலே நான் இருந்தா..அதை நிச்சயம் மறுக்க மாட்டேன்’’

’’சரி.நல்லது. உங்களுக்கு எப்படி விருப்பமோ அப்படிப் புரிஞ்சுக்கங்க. இப்ப என்னை விட்டுடுங்க, என்னாலே இதைச் செய்யமுடியாது’’

’’என்னது,முடியாதா? இவ்வளவு நேரம் நான் எடுத்துச் சொன்னப்புறமும் இப்படி வெட்டொண்ணு துண்டு ரெண்டா மாட்டேங்கிறியே?’’

’’அப்படிச் சொல்லறதைத் தவிர என்னாலே வேற என்ன பண்ணமுடியும்.? அதுவும் என்னாலே செய்ய முடியாத ஒண்ணை..’’


’’ஏன் உன்னாலே அது முடியாது?’’ என்றபடி கோபத்தோடு அவளைப் பார்த்து முகம் சுளித்தான் அவன்.

’’உன்னோட கௌரவம் பாழாப் போயிடும்னு நினைக்கிறே அப்படித்தானே? ஹ்ம்…கௌரவம் ! இன்னும்கூட அப்படி இங்கே ஏதாவது மிச்சம் இருக்கா? நம்மளை சுத்தி என்ன நடக்குதுன்னு உனக்குத் தெரியுதா இல்லியா? நம்ம வீடு எப்படி இருக்கு, குழந்தைங்க நெலைமை எந்த மாதிரி இருக்குங்கிறதெல்லாம் உன் கண்ணிலே படுதா இல்லியா?’’

ஓஷிமா தன்னைச் சுற்றிலும் ஒரு முறை இலக்கின்றி வெறித்துப் பார்த்தாள். வீட்டு நிலவரம்,குழந்தைகள் படும் பாடு இதையெல்லாம் சுற்று முற்றும் பார்த்துத்தானா அவள் விளங்கிக்கொள்ள வேண்டும்? சிறிது காலமாகவே ஓட்டாண்டியாய்ப் போயிருக்கும் குடும்பம், சம்பாதிக்கும் ஒரே மனிதனோ பதினேழு மாதங்களாய் வேலை இல்லாமல்! வீட்டை நடத்திச்செல்ல வேண்டிய பொறுப்பில் இருக்கும் அவளுக்கு இதெல்லாம் தெரியாதா என்ன?

ஆனாலும் கூட ஓஷிமா தன்னைச் சுற்றி வெறித்த பார்வையை செலுத்தினாள்.பிறகு அதே வெறித்த பார்வையுடன் கணவனின் பக்கம் திரும்பி

’’எனக்கென்ன அதெல்லாம் தெரியாதா?” என்றாள்.

’’உனக்கு அதெல்லாம் தெரிஞ்சதுக்கான எந்த அடையாளமுமே இல்லியே? நீ உன்னோட சொந்த கௌரவத்தைப் பத்தி மட்டும்தான் நினைக்கிறியே தவிர குழந்தைங்களோட வாழ்க்கையைப் பத்தி எங்கே நினைக்கிறே? நீயே சொல்லு, இந்த வீட்டிலே பால் வாங்கி எத்தனை நாளாச்சு, எத்தனை நாள்?’’


‘ஐயோ நிறுத்துங்க’’

பெண்மனம்தானே..., கட்டாயம் இதற்கு வளைந்து கொடுத்து இளகிவிடும் என்று எண்ணிக்கொண்டிருந்த ரோனபிர் ‘நிறுத்துங்க’ என்று ஓஷிமா கத்தியதைக்கேட்டதும் தன் அணுகுமுறையில் நம்பிக்கை இழந்தான்.’சரி,வேறு வகையில்தான் இதைக்கையாள வேண்டும் ’ என்று நினைத்துக்கொண்டான்.

ரோனபிரின் முகம் இப்போது அஷ்டகோணலாகச் சுருங்கியது. அதில் கலவையான வெவ்வேறு உணர்ச்சிகள் வெளிப்பட்டுக்கொண்டிருந்தன.


‘’ஹ்ம்…இப்ப நீ இப்படி திட்டறதை வேற நான் வாங்கிக்கிட்டாகணும். வேலையில்லாம இருக்கற மனுஷனுக்கு மரியாதையாவது,கௌரவமாவது? சரி, போ..நான் போய்ப் பிச்சையெடுக்கிறேன், புருஷன் நடைபாதையிலே பிச்சையெடுத்துக்கிட்டிருக்க, பசியாலே இரண்டு பிள்ளைங்களும் ஒண்ணு பின்னாலே ஒண்ணு செத்துப் போகப்போகுது, ஆனா,அதைப்பத்தி எல்லாம் என்ன கவலை? மஹாராணியோட மதிப்பு முனை முறியாம அப்படியே இருக்கு இல்லியா, அதுதானே எல்லாத்தையும் விட முக்கியம்”

இப்போது ரோனபிர் அவளுக்கு மரண அடி கொடுத்திருந்தான். அவள் இதை எப்படி எதிர்கொள்ளப்போகிறாள் என்று பார்ப்போம் என்று நினைத்தபடி ஓரக்கண்ணால் அவள் முகத்தைப் பார்த்தான். தன் பேச்சுக்கு அவள் எப்படி எதிர்வினை ஆற்றப்போகிறாள் என்பதைப்பார்க்க முயற்சி செய்து கொண்டிருந்தான் அவன். ஆனால் அவனால் அவளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. கோபம்,அவமானம்,வருத்தம், செருக்கு என்று எந்த வகையான உணர்ச்சியும் அவள் முகத்தில் வெளிப்படவில்லை. அது கல்லாய் இறுகிப் போயிருந்தது. அந்த முகம் வெளிறிப்போகவும் இல்லை, இரத்தச் சிவப்பாய் மாறவும் இல்லை. அது இருண்டுபோகவும் இல்லை, கவலைக்குறி காட்டவும் இல்லை.. உயிரற்ற ஒன்றைப்போல அது இறுகிக் கிடந்தது!

’’சரி, நான் போறேன்” என்று மட்டும் சட்டென்று சொல்லி விட்டு அறையை விட்டு வெளியே சென்றாள் அவள்.

அவ்வளவுதான், விஷயம் முடிந்தது. இனிமேல் கவலைப்பட வேண்டியதில்லை. ஓஷிமா அதை ஒத்துக்கொண்டு விட்டதால் தன் முடிவில் இனிமேல் தடுமாற மாட்டாள். அவள் போன காரியம் முடிந்தது போலத்தான் என்பது ரோனபிருக்கு உறுதியாகத் தெரியும்.

தங்கள் பழைய நட்பை அடிப்படையாக வைத்து,அவள் கோஷால் சாஹிபிடம் சென்று தன் கணவனுக்கு வேலை கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை அவன் முதலில் வைத்தபோது அவள் கண்கள் அனல் கக்கியதை அவன் பார்க்கத் தவறவில்லை.அந்த அனலுக்கான உண்மையான காரணம் அவனுக்குப் புரியாமலும் இல்லை. ரோனபிர் ஒன்றும் அந்த அளவுக்கு ஒரு முட்டாள் இல்லை.

இன்று இப்படி ஒரு நிலையில் அவன் இருக்கக் காரணம் விதியிட்ட கட்டளை மட்டுமே தவிர வேறேதும் இல்லை. மற்றபடி சொல்லப்போனால் படிப்பில் கோஷாலை விட எந்த வகையிலும் விட ரோனபிரும் குறைந்தவன் இல்லை. கோஷாலும் கூட ஒரு சாதாரணப்பட்டதாரி மட்டும்தான். விதி! நெற்றியில் எழுதி வைக்கப்பட்ட விதி! எங்கோ ஓரமாக நின்று பணக்காரர்களைப் பார்த்துப் பொறாமைப்பட்டபடி சோம்பேறிகளும் கையாலாகாதவர்களும் தங்களைத் தேற்றிக்கொள்வது போல் அவனும் அப்படித் தன்னைத் தேற்றிக்கொண்டான். முயற்சியோ உழைப்போ அறிவுத்திறமையோ எதுவுமே காரணமில்லை ! விதி ஒன்றுதான் காரணம் என்று நினைத்து ஆறுதல்படுத்திக் கொள்வதைத் தவிர அவனால் வேறென்ன செய்ய முடியும்?

சரி, வேறொரு சமயம் அவன் அவளைக் கொஞ்சம் சமாதானப்படுத்தி விட வேண்டும், அவளிடம் இன்னும் சற்று விளக்கமாக எடுத்துச் சொல்ல வேண்டும். இவ்வளவு காலத்துக்குப் பிறகு அவள் தன்னைத் தேடி வந்து உதவி கேட்பது கோஷால் சாஹிபுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும் என்பதையும் அவளிடம் சொல்ல வேண்டும். ஆண்களின் குணத்தைப்பற்றி ரோனபிருக்குத் தெரியாதா என்ன?               

                      **************************************

தினசரி வாழ்க்கை பொறுக்க முடியாத அவலத்துடன்தான் இருந்தது, பலசரக்குகள் இல்லாமல் சமையலறை வெறிச்சோடிக்கிடந்தது. இரவும் பகலும் ‘இல்லை..இல்லை’ என்ற குரலே அவர்கள் உலகத்தில் கேட்டுக்கொண்டிருந்தது. ஆனாலும் கூடப் பூட்டி வைத்திருந்த அவர்களின் பெட்டிகளுக்குள் நல்ல துணிமணிகள் இல்லாமல் போய்விடவில்லை. ஆபரணங்களும் அவை போன்ற மற்றவைகளும் குடும்பத்தேவைக்காக ஆரம்பத்திலேயே பயன்படுத்தப்பட்டு அவர்களை விட்டு எப்போதோ விடைபெற்றுப் போயிருந்தன. ஆனால் புடவை, துணிமணிகள் இவையெல்லாம் மட்டும் வீட்டில் தங்கிப் போயிருந்ததால் வெளி இடங்களுக்குச் செல்லும்போது சற்று நல்ல விதமாக உடுத்திக்கொண்டு போக முடிந்தது.

ஓஷிமாவும் அன்று மிக நன்றாக உடுத்திக்கொண்டு வெளியே சென்றாள். வீடு திரும்பியதும் தன் கையிலிருந்த டம்பப் பையைப் படுக்கை மீது வீசி எறிந்து விட்டு அங்கேயே ஒரு பக்கம் அமர்ந்து கொண்டாள். தான் உடுத்திக்கொண்டிருந்த பட்டுப்புடவையைக் கழற்றிப்போட வேண்டும் என்ற ஞாபகம் கூட அவளிடம் இல்லை.

ரோனபிர் ஜன்னலின் அருகே ஒரு பிரம்பு நாற்காலியில் அமைதியாக உட்கார்ந்திருந்தான். அவளை அனுப்பி வைத்தது முதல் எதிர்பார்ப்பு, கவலை, கூச்சம், சுய பச்சாதாபம் போன்ற பல உணர்வுகளும் அவனை சுமையாக அழுத்திக் கொண்டிருந்தன.

திரும்பி வந்திருந்த ஓஷிமாவோ வார்த்தைகள் அற்ற கனத்த மௌனத் திரையால் தன்னைப் போர்த்தி வைத்திருந்தாள். அவளுக்கு ஆறுதல் சொல்லி அமைதிப்படுத்தும் துணிவு அவனிடம் இல்லை.

அவள் கிளம்பிப் போனபின் அவன் தன்னைத்தானே நியாயப்படுத்திக்கொள்வதற்குச் சாதகமான வாதங்களைத் தன் மனதுக்குள் வரிசையாக அடுக்கிக் கொண்டிருந்தான். அவன் என்ன எப்போதுமா இப்படி இருந்திருக்கிறான்? இதனால் அவனது சுயகௌரவம் குறைந்து விட்டதா என்ன? இந்த நிலைமையில் அவன் வேறென்னதான் செய்ய முடியும்? பற்றாக்குறை என்பது மனிதர்களின் மொத்த ஆளுமையையுமே அல்லவா சிதைத்துப் போட்டுவிடுகிறது?

ஓஷிமா தானாகவே ஏதாவது சொல்லக்கூடுமோ என்ற எதிர்பார்ப்பில் ரோனபிர் ஓரிரு நிமிடங்கள் காத்துக்கொண்டிருந்தான். ஒரு நிமிடம் போவது ஒரு மணி நேரமாகத் தோன்றியது. இப்படிப்பட்ட அமைதியை அதற்கு மேலும் பொறுத்துக்கொள்ள அவனால்முடியவில்லை. அதனால் சில நிமிடங்களுக்குப் பிறகு தன் நாற்காலியை லேசாக நகர்த்திக்கொண்டு நேரடியாகவே பேச்சைத் தொடங்கி விட்டான் அவன்.
’’என்ன…? உன்னோட சந்தேகமெல்லாம் நிஜமாயிடுச்சாக்கும்? உன்னோட பணக்கார நண்பனாலே உன்னை யாருன்னு தெரிஞ்சுக்க முடியலியா”

ஓஷிமா எழுந்து நின்றாள். அவளது உதட்டோரத்தில் ஒரு கேலிப்புன்னகை நெளிந்தது.
’’என்னது? என்னை யாருன்னு தெரிஞ்சுக்க அவனாலே முடியலியான்னா கேக்கறீங்க? என்னைத்தான் ஒருதரம் யார் பார்த்திருந்தாலும் ஜன்மத்துக்கும் மறந்திட முடியாதே?”

ரோனபிர் ஓஷிமாவைத் தலைமுதல்கால் வரை ஒரு முறை நன்றாகப்பார்த்தான். இந்தத் தோற்றம் ஒன்றும் அவனுக்குப் புதியதில்லை, ஆனால் கிட்டத்தட்ட அவன் மறந்து போயிருந்த தோற்றம் அது. அவளது முகத்தைக் கடைசியாக இப்படிப்பட்ட ஒப்பனைகளோடு மிருதுவாய்…பளபளப்பாய்ப் பார்த்து எத்தனை நாள் ஆகியிருக்கும்? அவளது உருவத்தை இப்படிப் பட்டுப் புடவையில் பார்த்துமே எவ்வளவு காலம் ஆகியிருக்கும்?

இப்போது அப்படி அவளைப்பார்ப்பது ரோனபிருக்கு சந்தோஷமாகவா இருந்தது? அப்படி சந்தோஷமாக இருந்தால் அவன் கண்கள் எரிச்சல் எடுப்பானேன்?

நான்கைந்து நாட்களாய் சவரம் செய்யப்படாமல் இருந்த தன் கன்னத்தை ஏதோ ஞாபகத்தோடு கையால் தடவிக்கொண்டே சிறிது கஷ்டப்பட்டுப் புன்னகை செய்தபடி ரோனபிர் பேசத்தொடங்கினான்.
“சரிதான், என்னோட அஸ்திரத்தாலேயே என்னைக் கொல்லறியா? அதிருக்கட்டும், நீ போன காரியம் என்ன ஆச்சு? ஏன் இப்படி முகத்தை வச்சுக்கிட்டிருக்கே?’’

“வேறென்ன செய்யறது நான்?“ என்றபோது அவள் உதடு வெறுப்பில் சுளித்தது.

“இருநூத்தி எழுபத்தஞ்சு ரூபாய் சம்பளத்துக்கு ஒரு வேலை கிடைச்சதுக்கு முகத்தை இரண்டு மடங்கு பூரிப்பாவா வச்சுக்க முடியும்? நிச்சயமா என்னாலே அது முடியாது”

இருநூற்று எழுபத்தைந்து ரூபாய்! இருநூற்று எழுபத்தைந்து ரூபாய் சம்பளம் கிடைக்கும் ஒரு வேலை!

ரோனபிருக்குத் தன் பழைய வேலையில் கிடைத்ததை விடக் கூடுதல் தொகை இது. இதுவரை தன் முகத்தில் ஒரு புன்னகையைக் கொண்டு வரப் பாடுபட்டுக் கொண்டிருந்த அவன், இப்போது அதை அடக்கிக்கொள்வதைக் கடினமாக உணர்ந்தான்.

“அப்படியா..? நீ சொல்றது நெஜம்தானா…இல்லே சும்மா வேடிக்கைக்கு ஜோக் பண்றியா?”

“ஜோக் பண்ணணும்னு எனக்கென்ன தேவையா?”

ரோனபிரின் முகத்திலும் கண்ணிலும் பேராசையும் பரவசமும் பொங்கி வழிந்தது. ஒரு வேலை கிடைத்திருக்கிறது என்பதை விடவும் சந்தோஷமான வேறு விஷயம் உண்டா என்ன? சம்பளத்தொகை பேராசையைக் கிளர்த்தப் போதுமானதாக இருந்தது. ஆமாம்..அது நிஜம்தான், அது உண்மைதான். எப்படியோ இன்னும் கூட ஓஷிமாவுக்கு ஒரு பெரிய மதிப்பு இருந்துகொண்டிருப்பதும் நிஜம்தான்.

ரோனபிர் தன் கண்களோடு சேர்ந்து உடம்பும் எரிந்து கொண்டிருப்பது போல் உணர்ந்தான். ஏதோ…அந்த விஷயம் நடக்க முடியாது என்று நம்பிக்கொண்டிருந்ததைப்போல..! அது நடக்காமல் போயிருந்தால் இன்னும் சந்தோஷப்பட்டிருப்போமோ என்று எண்ணுவதைப்போல.

அதிகபட்சம் மோசமாய்ப் போனால் இன்னும் சிறிது காலத்துக்கு வீட்டில் பால் இருந்திருக்காது, அவர்களின் குழந்தைகளான குக்கூ, கோகா ஆகிய இரண்டு பேரின் மார்பெலும்புகளும் இன்னும் கூட அதிகமாகத் துருத்திக் கொண்டிருக்கக்கூடும்….., அதற்கு மேல் இன்னும் மோசமாய்ப்போனால்…

ஆமாம், அப்படிப் பல விஷயங்கள் நடந்திருக்கும்தான். ஆனாலும் அவையெல்லாம் ரோனபிரை இந்த அளவுக்கு சிறுமைப்படுத்தி இருக்காது. ஓஷிமாவை வேலை கேட்டுப் போகுமாறு அவன் தூண்டியதற்கான அடிப்படைக்காரணம் வேலை கிடைத்து விடும் என்ற நம்பிக்கையால் அல்ல, அந்த முயற்சி பலித்து விடக்கூடாது என்ற விருப்பத்துடனும், நம்பிக்கையுடனும்தான்.

எப்படியோ அவன் இப்போது அதைப்பற்றிப் பேசியே ஆக வேண்டும்.அந்த விஷயத்தை சாதிப்பதற்கு ஓஷிமா எந்த அளவுக்குத் தீனி போட வேண்டியிருந்தது என்பதை அவன் கண்டுபிடித்தாக வேண்டும். அதைத் தெரிந்து கொண்டால் ஒரு வேளை அவனுக்கு ஆறுதல் கிடைக்கலாம்.

’’அப்படீன்னா..நீ அவனை நேராவே பார்த்திட்டே,அப்படித்தானே”

“அப்படிப்பாக்கலைன்னா இத்தனை சீக்கிரம் எப்படி என்னாலே திரும்பி வந்திருக்க முடியும்”

“என்ன இருந்தாலும் நீங்க ரெண்டு பேரும் பழைய நண்பர்கள் இல்லியா? இன்னும் கூட அதிக நேரம் அவன் உன்னைப் பிடிச்சு வச்சுக்குவான்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். இத்தனை சீக்கிரம் போக விட்டுடுவான்னு நினைக்கலை”

இருண்டு கிடந்த ரோனபிரின் முகத்தையே சிறிது நேரம் உற்றுப்பார்த்துக்கொண்டிருந்த ஓஷிமா

“அப்படி ஒரு எண்ணம் வந்தா அது ரொம்ப இயற்கையானதுதான்…,வேலை வெட்டி இல்லாத சோம்பேறித்தனமான மனசு பிசாசோட கூடாரம்னு ஒரு சின்னக் குழந்தைக்குக் கூடத் தெரியுமே” என்று தெளிவான குரலில் வெடுக்கென்று சொன்னாள்.

தான் உட்கார்ந்திருந்த நாற்காலியை விட்டு சட்டென்று எழுந்திருந்த ரோனபிர்,

“ஏன் இப்படி எப்ப பார்த்தாலும் வார்த்தைகளோடயே விளையாடிக்கிட்டிருக்கே, என்னதான் நடந்ததுன்னு என் கிட்டே நேரடியா சொல்ல முடியாதா உன்னாலே”

இப்படி அவன் திட்டிய பிறகும் ஓஷிமா மசிவதாய் இல்லை. அவன் பேச்சைக்கேட்டு அவள் நடுங்கவும் இல்லை.

“என்ன நடந்ததுன்னு சொல்றது அத்தனை முக்கியமா என்ன? நான் போனேன், அவன் கிட்டே விஷயத்தை சொன்னேன், காரியம் முடிஞ்சது. அவ்வளவுதான். அவனுக்கும் சந்தோஷம். வேலைக்கான உத்தரவையும் என் கிட்டே போட்டுக் கொடுத்திட்டான். நாளையிலே இருந்து வேலைக்குப் போகணும்”

’’என்ன அதுக்குள்ளேயே வேலைக்கான உத்தரவுமா? நாளைக்கேவா போகணும்?”

கடைசியாகத் தன் சீற்றத்தை வெளிப்படுத்த இப்போது ரோனபிருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருந்தது.


“முதலிலே வேலை என்ன…, அதோட விவரங்கள் என்ன அப்படீன்னு எதுவுமே எனக்குத் தெரியாது. அது எனக்குப் பொருத்தமானதா இருக்குமாங்கறதையும் நான் இன்னும் தெரிஞ்சுக்கலை, அதுக்குள்ளே வேலைக்கான உத்தரவா? ஒருவேளை நாளைக்கு நான் போகாம இருந்திட்டா..”

சட்டென்று ஓஷிமா பலமாகச் சிரித்தாள். இந்த வீட்டுக்குள் பல நாட்களாகக் கேட்டிராத சிரிப்பு அது. வீட்டுச் சுவர்களில்…மேற்கூரையில் என்று எல்லா இடங்களிலும் வாத்தியத்தின் இசை போல மோதி எதிரொலித்த சிரிப்பு அது

’’நீங்க எதுக்கு போகணும்? நான் தனியாவே போயிடுவேனே? ஆஃபீஸ் தர்மதலாவிலேதான் இருக்கு. அங்கே போறதுக்கு வழி தெரியாமலும் இல்லை எனக்கு”

“ஓ..அப்படீன்னா, அந்த வேலை உனக்குத்தான் கிடைச்சிருக்கா?”

’’பின்னே? கடைசி கடைசியா நீங்க இதுக்கு ஒத்துக்க மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும். அதனாலே நான் உங்களைப்பத்தியே எதுவும் சொல்லாம என்னைப் பத்தி மட்டுமே சொன்னேன். அதிலே என்ன தப்பு? நான் பட்டம் வாங்கலைதான், ஆனாலும் கடைசி வருஷம் வரைக்கும் படிச்சிருக்கேனே, அது நிஜம்தானே? சும்மா வீட்டிலே உட்கார்ந்துக்கிட்டு யாரோ சம்பாதிச்சுப் போடற பணத்தில் வாழ்க்கை நடத்திக்கிட்டிருக்கறது எனக்கு சலிச்சுப் போச்சு, எனக்கு ஒரு வேலை தருவியான்னு கேட்டேன். ‘இதோ இப்பவே ..இந்த நிமிஷமே…சந்தோஷமாத் தரேன்’னு அவனும் தந்திட்டான்.”

அவள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த அவனது இருண்ட முகம்…தொடர்ந்து எரிந்து சாம்பலாவதைப் பார்த்த பிறகும் ஓஷிமா ஏன் எதுவும் செய்யாமல் …. அசையாமல் இருந்தாள்?

அந்தரங்கமான தனது தனித்த உலகத்தைத் தீ வைத்துப் பொசுக்கி விடுமாறு நிர்ப்பந்தப்படுத்தப்பட்ட அந்தப்பெண்மணி , அதே பிரம்மாஸ்திரத்தை இன்னொருவன் மேல் விடும்போது மட்டும் இரக்கம் காட்ட வேண்டுமா என்ன?
                             #************************************************#

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....