தாய்வழிச் சமூக அமைப்புக்கு முதன்மை தரும் இனக் குழுவாழ்க்கை சென்று,தேய்ந்து,மறைந்து சிற்றரசுகளும்,பேரரசுகளும் படிப்படியே தலையெடுக்கத் தொடங்கித் தனிச் சொத்துரிமைநோக்கிய மதிப்பீடுகள் வலுப்பெற ஆரம்பித்திருந்த சங்கக்களத்தில் பெண்ணின் குரல் அன்றைய சமூக நிறுவனங்கள் ஏற்படுத்தியிருந்த சட்டகங்களுக்குள் (frame work) எந்த முரண்பாடுகளும் இன்றிப் பொருந்திப் போனதாகவே பெரும்பாலும் ஒலிக்கிறது.
‘’எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே..’’
என்றபடி ஆணுக்கு முன்னுரிமை வழங்கியுள்ள சமூக அமைப்பை மறுப்பின்றி ஏற்கும் ஔவையின் எழுத்தும்,
(ஆடவர் ஒழுக்கமானவர்களாக இருந்தால்தான் உலகம் அறவழிப்பட்டதாக இருக்க முடியும் என்பதாலேயே ஔவை ஆடவரை மட்டும் முன்னிறுத்திப் பேசுவதாக இன்றைய மாறிய கண்ணோட்டத்தில் இதற்கு விளக்கம் தருவோரும் உண்டு)
குடும்ப நிறுவனத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் பாகப் பிரிவினை போல ஒதுக்கப்பட்டிருந்த பங்கு நிலைகளை
‘’ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே
சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே’’
என அமைதியாக ஒத்துக் கொண்டு வழி மொழிந்த பொன்முடியார் பாடலும் இதற்குச் சான்றுகள்.
காதலுக்கும்,வீரத்துக்கும் மட்டுமே முதன்மை தரப்பட்ட சங்க காலச் சமூக அமைப்பில் தனது தந்தை,கணவன்,மகன் ஆகியோரின் வீர வெளிப்பாடுகள் கண்டு விம்மிதம் அடைபவளாய்...
புறப்புண் படாமல் இறந்த மகனின் உடலைக் கண்டு
‘’ஈன்ற ஞான்றினும் பெரிது உவப்ப’’வளாய்
ஒரு மகனைத் தவிர வேறு எவருமற்ற நிலையிலும் அவனைச்
‘’செருமுகம் நோக்கிச் செல்’’கென விடுப்பவளாய்..
‘உன் மகன் எங்கே’எனக் கேட்பவர்களிடம்
‘’தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே’’
என்றும்,
‘’இந்த வயிறு அந்த வீரப்புலி சிறிது காலம் தங்கியிருந்த ஒரு கற்குகை மட்டுமே’’
என்றும் கூறித் தன்னிறைவு பெற்றுக் கொள்பவளாய்...
இவ்வாறு மட்டுமே பெரும்பாலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறாள்சங்கப் பெண்.
குறிப்பிட்ட அந்தக் காலகட்டத் தகுதிப்பாட்டின் உயர் இலக்கை எட்டும் ஓர் அடையாளமாகப் புறங்கொடாத மகனை உருவாக்குவதே சிறந்த தாய்ப் படிமம் என்ற சிந்தனையை மாற்றுக் கருத்தின்றிச் சங்கப் பெண் எழுத்து ஏற்றுப் போற்றியிருக்கிறது.
காலப் போக்கில் பரவலாகத் தொடங்கியிருந்த சமயம் சார்ந்த சில மரபுகளின் தாக்கம் பெண்கள் மீதுசுமத்திய சில கொடுமைகளைப் புறநானூற்றுப் பெண் பாடல்கள் சில பதிவு செய்திருக்கின்றன.
ஆயினும் அம் மரபுகளுக்கு எதிரான தங்கள் உணர்வுகளை வெளிப்படையாகப் பதிவு செய்யும் சூழல் இல்லையென்பதாலோ..
அல்லது அவற்றை ஏற்றுப் பணிதலே பெண்மையின் இலக்கணம் எனக்காலங்காலமாகக் கற்பிக்கப்பட்டதாலோ
குறிப்பிட்ட கொடுமைகளுக்கு எதிரான விமரிசனங்களை அவை முன் வைக்கவில்லை.
விதவை நிலைக்கு ஆளான பெண்கள் உடன்கட்டை ஏறத் துணிவதாகக் காட்டும் மாறோக்கத்து நப்பசலையும்,பெருங்கோப் பெண்டும் இத்தகைய மரபுகளையோ அவற்றுக்குக் காரணமான அமைப்புக்களையோ பழிக்காமல் , பழைய சோற்றையும்,எள்ளுத் துவையலையும் உண்டு கட்டாந்தரையில் பாயின்றி உறங்கும் விதவை மகளிரையே
‘’கழி கல மகளிர்’’
‘’உயவற்பெண்டிர்’’
என்றும் பழிக்கின்றனர்.
ஒரு வகையில் இந்தச் சொற்கள் ஆழ்ந்த தன்னிரக்கத்தின் எதிர்மறை வெளிப்பாடுகள் எனக் கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது.
கணவனை இழந்த பெண்ணின் கற்பு அவனது இறப்பைத் தொடர்ந்த அவளது செயல்பாட்டின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டுத்
தலைக்கற்பு-கணவன் இறந்ததும் தானாகவே மனைவியின் உயிர் நீங்குதல்
இடைக்கற்பு-கணவனை இழந்ததும் மனைவி உடன்கட்டைஏறியோ,தீப்பாய்ந்தோ பிற வழிகளிலோ வலிந்து தன் உயிரை மாய்த்துக் கொள்ளல்.
கடைக்கற்பு-கணவனைப் பறி கொடுத்த பெண் தொடர்ந்து உயிர் வாழ்ந்தபடி கைம்மை நோன்பு நோற்றல்
எனத் தர நிர்ணயம் செய்யப்படும் ஒரு சமூக அமைப்பில் , கைம்மையால் நேரும் சமூக அவமதிப்புக்களைச் சுமந்து வாழ்வதை விடவும் உடன்கட்டை ஏறி ஒரு கணத்தில் உயிர்நீத்தலே மேலானது என்னும் ஆழ்மன உந்துதலும் கூட இப் பாடல்களின் அடிநாதமாக இருக்க வாய்ப்பிருக்கிறது.
பொன்முடியார் எழுதியுள்ள புறப் பாடல் ஒன்று, மாதவிலக்கில் தீண்டத் தாகாதவளாக ஒதுக்கப்பட்டிருக்கும் பெண்களைப் போலத் தோற்றுப் போன மன்னனின் குதிரைப்படைகள் கூச்சம் கொண்டு நின்றதாகக் காட்டுகிறது.
‘’தண்ணடை மன்னர் தாருடைப் புரவி
அணங்குடை முருகன் கோட்டத்துக்
கலம் தொடா மகளிரின் இகந்து நின்றவ்வே’’-புறம்;299
பகை நாட்டுப் படைகளின் தயக்கத்தைவெளிக்காட்ட இப்படிப்பட்ட ஓர் உவமையை ஒரு பெண்பாற்புலவர் இயல்பாகக் கையாண்டிருப்பது , மிக அரிதான ஒரு நிகழ்வாகவே இருந்தபோதும் அப்படிப்பட்ட ஒதுக்கம் ஒரு பெண்ண்ணின் உள்ளத்தில் எத்தகையதொரு தாழ்வுணர்ச்சியை விதைத்திருக்கும் என்பதை எடுத்துக்காட்டும் ஆவணமாக இந்தப் பாடல் அமைந்திருப்பது இதைக் குறிப்பிடத்தக்கதாக்குகிறது.
சங்கப் பெண் எழுத்துக்களின் சொல்லாடல்கள் நிறுவன மரபுகளின் பாதிப்புக்களால் தனித்த ஆளுமை சிதைக்கப்பட்ட நிலையில் விளையும் ஆழ்ந்த சோகத்தின் அழுத்தமான சுவடுகளையே நனவு நிலையிலோ,நனவிலி நிலையிலோ பதிவு செய்திருக்கின்றன என்பதை மட்டும் எளிதில் ஒதுக்கி விடுவதற்கில்லை..