திண்ணை இணைய இதழில் [ செப் 12 /2021] வெளிவந்திருக்கும் என் மொழிபெயர்ப்புச் சிறுகதை
வேட்டையாடுவதற்கு ஏற்ற பருவகாலம் தொடங்கியிருந்தது. மிக அதிகமாக உபயோகிக்கப்பட்டுப் பழகிப் போயிருந்த தன் துப்பாக்கிக்கு எண்ணெய் போட்டுக் கொண்டிருந்தார் வேட்டைக்காரா். எந்த இராகத்திலும் சேராத ஏதோ ஒரு பாட்டை மெள்ள உதட்டுக்குள் முனகிக் கொண்டிருந்தார் அவா். ஒட்டினாற் போலிருந்த ‘ஷெட்’டில் உட்கார்ந்தபடி, நெல்லிலிருந்து உமியை நீக்கிக் கொண்டிருந்த அவரது பெண்ணும், மருமகளும் சிரிப்பை அடக்கிக் கொண்டு மெள்ளக் கிளுகிளுப்பதற்கு அது காரணமாகி விட்டது. தான் பாட முயற்சி செய்வதைப் பார்த்துதான் அந்தப் பெண்கள் கேலிசெய்கிறார்கள் என்பது கிளுகிளுப்பான சிரிப்பொலிகள் சற்று உரத்துக் கேட்ட பிறகுதான் அவருக்குப் புரிந்தது. அதனால் இன்னும் சற்று உரத்த குரலில் பாடத்தொடங்கிய அவா், குறிப்பான ஒரு உச்ச ஸ்தாயியில் ஸ்வரம் தவறிப் பாடி விடவே, அவா்கள் மூன்று பேருமே கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் விழுந்து விழுந்து சிரித்தனர். உமி குத்திக் கொண்டிருந்த உலக்கையைக் கூட அந்தப் பெண்கள் கை நழுவ விட்டு விட, பாதி உமி நீக்கிய நெல் மணிகள் மண்தரையில் சிதறின. ‘ஷெட்’டைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்த கோழிக்குஞ்சுகள் உடனே கூட்டம் கூட்டமாக உள்ளே வந்தபடி மகிழ்ச்சியோடு குரலெழுப்பிக் கொண்டு சிதறிய தானியங்களைக் கொத்தத் தொடங்கின. ஒரு வழியாக அந்தப் பெண்களின் சிரிப்பு அடங்கி, இயல்பாக மூச்சு விட ஆரம்பித்த பிறகு,
‘‘என்ன மாமா இன்னிக்கு இப்படி ஒரு சந்தோஷம்? ஏதாவது ஒரு மிருகம் உங்களுக்காகக் காத்திருக்கா என்ன?”
என்று கேட்டாள் மருமகள்.
ஆழ்ந்த பெருமூச்சு விட்டபடி வேட்டைக்காரா் பதிலளித்தார்.
‘‘யாருக்குத் தெரியும்? அந்த மிருகம் நம்ம நிலத்திலே விளையற பிரமாதமான நெல்லை ஒரு சில வருஷங்களா தின்னுக்கிட்டிருக்கிற பெரிய காட்டுப் பன்னியாக் கூட இருக்கலாம். ஒரு வேளை அது சீக்கிரமே கண்ணிலே படலாம். அதுக்குத்தான் என்னோட துப்பாக்கியை நல்லா சுத்தம் செய்யறேன். இந்த தடவை அதோட நெஞ்சிலே குறி வைக்கத் தவறக் கூடாது”
கடந்து போன ஐந்து வேட்டைக் காலங்களிலும் இம்சனோக் என்ற அந்த வேட்டைக்காரா் குறிப்பாக இந்தக் கொடிய காட்டுப் பன்றியின் மீதே கவனம் வைத்து அதையே தொடர்ந்து கொண்டிருந்தார். அவரது வயல் உட்பட கிராமத்திலிருக்கும் எல்லா நெல் வயல்களையும் அது நாசமாக்கிக் கொண்டிருந்தது. சிறந்த ரக நெல்லை எங்கே பயிர் செய்கிறாரோ சரியாக அந்த இடம் பார்த்து அதைத் தனக்கு இரையாக்கி விட்டுப் போய்க் கொண்டிருந்தது அது. தொடர்ந்து இரண்டு வருடங்கள் இப்படி நடந்த பின், இடத்தை மாற்றிப் பயிர் செய்யுமாறு அவரது மனைவி ஆலோசனை கூற, தங்கள் விசாலமான நிலத்தின் மேற்குப் பகுதி ஓரமாக அதைப் பயிர் செய்திருந்தார்கள் அவா்கள். ஆனால் அதனால் எந்தப் பயனும் இல்லை. அந்தப் பாழாய்ப் போன பன்றி எப்படியோ அந்த இடத்தைச் சரியாகக் கண்டு பிடித்து அதில் மேய்ந்து விடும். கிராமவாசிகள் பல முறை அந்த மிருகத்தைப் பார்த்திருக்கிறார்கள். மிகப் பிரம்மாண்டமான தோற்றத்தோடு, தன் எடையைச் சுமக்க முடியாமல் சுமந்தபடி அசைந்தாடிக் கொண்டு வரும் அந்தக் காட்டுப் பன்றிக்குப் பின்னோக்கி வளைந்திருக்கும் இரண்டு மஞ்சள் நிறக் கொம்புகள் இருந்தன. கிட்டத்தட்ட அந்தப் பன்றியின் பின்புறத்திலுள்ள பருத்த சதைப் பகுதியை அவை தொட்டுக் கொண்டிருந்தன. தோற்றத்தில் மட்டுமல்லாமல் இயல்பிலேயே அந்தப் பன்றி மிகவும் கொடூரமானதாக இருந்தது. தன்னால் முடிந்தவரை பயிர்களை சாப்பிடுவதோடு நெல் வயல்களை அதிகபட்ச சேதம் செய்வதே நோக்கம் என்பது போல நிறைய வயல்களை அது காலால் மிதித்து துவம்சம் செய்து கொண்டும் இருந்தது. ஏனோ தெரியவில்லை, பிரசித்தி பெற்ற அந்த மிருகம் இதுவரை இம்சனோக்கின் கண்ணில் போகிற போக்கில் மிக இலேசாகக் கூடப் படவில்லை. இத்தனைக்கும் அவருடைய நெல் வயல்களுக்குத்தான் அதிகமான சேதம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. கடுமையான குளிர்கால இரவுகள் பலவற்றில் அந்தக் காட்டுப்பன்றி தன் வயலின் பக்கம் வருகிறதா என்பதை அவா் கண்காணித்துக் கொண்டே இருந்ததுண்டு. ஆனால் அவா் அங்கே இருப்பதை துாரத்திலிருந்தே மோப்பம் பிடித்து விட்டதைப் போல அது வேறு வயல்களின் பக்கம் போய் விடும்.
இப்போது தன் எதிரியாகவே ஆகிவிட்ட அந்த மிருகத்தைக் கொன்று வீழ்த்துவதைப் பற்றி நினைத்த உடனேயே கையிலிருந்த எண்ணெய்க்கறை படிந்த துணியால் துப்பாக்கியை வேக வேகமாக அழுத்தித் துடைக்கத் தொடங்கினார் அவா். இதற்கு முன்பு சுட்ட கறைகளின் இலேசான அடையாளம் கூட இல்லாமல் அவற்றை சுத்தமாக நீக்கினார். துப்பாக்கியின் நுனிப் பகுதி கூடப் புதுசாகத் தீட்டிய வார்னிஷால் பளபளத்தது. பிறகு நெற்குதிருக்கு அருகே துப்பாக்கியை நிறுத்தி வைத்து விட்டு அதில் போட வேண்டிய துப்பாக்கி ரவைகளைப் பரிசீலிக்கச் சென்றார். சமீபத்தில்தான் ஒரு முழுபாக்கெட் துப்பாக்கி ரவைகளை அவா் வாங்கி வந்திருந்தார். அவற்றில் இரண்டை மட்டும் தன் நெருங்கிய நண்பருக்குக் கடனாகக் கொடுத்திருந்தார். அதற்கு பதிலாக அந்த நண்பா் தான் சுட்டு வீழ்த்திய சாம்பார் வகை மானின் ஒரு பின்னங்காலை முழுதாக இவருக்குத் தந்து விட்டார்.
ஒரு பெரிய எதிரியை நேருக்கு நேர் எதிர் கொள்ளத் தயாராகி விட்ட திருப்தியோடு வெளியே வெயிலில் காய்ந்து கொண்டிருந்த துப்பாக்கியை உள்ளே எடுத்துச் சென்று அதற்கென்றே பிரத்தியேகமாக வைத்திருக்கும் சாக்குத்துணியில் சுற்றித் தன் படுக்கை அறையிலுள்ள மர அலமாரியின் மேல்தட்டில் வைத்தார் அவர்.
அன்று மாலை அவரது மனைவி டங்க்செட்லா வயல் வேலை முடிந்து திரும்பி வந்தபோது அவா் மிகவும் சந்தோஷமான மனநிலையுடன் இருந்ததையும், வழக்கமாகத் தன்னைப் பார்க்க வருபவா்களுடன் பேசிச் சிரித்துக் கொண்டு குளிர் காய்வதற்காக மூட்டியிருந்த நெருப்புக்கு அருகில் அமா்ந்தபடி கறுப்புத் தேநீர் அருந்திக் கொண்டிருப்பதையும் கண்டாள். அங்கே கூடி இருந்தவா்களின் மனநிலையிலிருந்து, அந்தப் பயங்கரமான மிருகம் மீண்டும் ஒரு முறை கண்ணில் தட்டுப்பட்டிருக்க வேண்டுமென்பதை அவள் உடனே உணா்ந்து கொண்டாள்.
அறுவடைக் காலங்களில் கிராமத்து ஆண்கள் விழித்திருக்கும் நேரம் முழுவதும் அந்தக் காட்டுப் பன்றி அவா்களை மிரட்டிக் கொண்டிருந்தது. அடுத்ததாக அந்தக் கொள்ளைக்கார விலங்கு எவருடைய நிலத்தை நாசமாக்கப் போகிறதோ என்று எண்ணி எல்லோரும் பயந்திருந்தனர். இதே போல இதுவரை ஆறு ஆண்டுகள் கடந்து போய் விட்டன. ஒவ்வொரு ஆண்டு கடந்து போகும்போதும் அவா்களது பீதி மேன்மேலும் கூடிக் கொண்டே சென்றது. காரணம், இப்படிப்பட்ட பேராபத்திலிருந்து தங்களை விடுவிக்க எவருமே இல்லையே என்ற எண்ணம்தான். புகழ்பெற்ற வேட்டைக்காரரான இம்சனோக்காலும் கூட அது முடியவில்லையே? இம்சனோக்கைப் பொறுத்தவரை அது, உறுதியான மன உரம் படைத்த இருவருக்கிடையே நடக்கும் ஒரு தனிப்பட்ட போட்டியைப் போலத் தோன்றியது.
திறமையான வேட்டைக்காரர் என்று பல வருடங்களாகப் புகழ் பெற்றிருந்த இம்சனோக், கிராமத்திலிருந்த ஒரு தொடக்கப் பள்ளி ஆசிரியராக இருந்தவர். ஆனால் வேட்டைக்காரராகப் புகழ்பெற்ற பிறகு அந்தப் பழைய அடையாளமே அவரிடமிருந்து மறைந்து போய் விட்டது. நிறைய விவசாய நிலங்களையும், பண்ணை வீடுகளையும் அழித்து எத்தனையோ மனிதர்களைக் காலால் நசுக்கிக் கொன்ற முரட்டுத்தனமான ஒரு யானையைச் சுட்டு வீழ்த்தியதற்காக அரசாங்கத்திலிருந்து அவருக்கு வெகுமதி கூடக் கிடைத்திருக்கிறது. அவரது கிராமத்திலும், சுற்றுப்புற கிராமங்களிலும் வேறு பல வேட்டைக்காரர்கள் இருந்தாலும் அரசாங்கம் கொடுக்க முன் வந்த வெகுமதிக்காக அந்த யானையை வேட்டையாட அவா்கள் முன் வரவில்லை. அந்த முரட்டு யானையின் தந்திரத்துக்கு ஈடு கொடுத்து அதைக் கொல்ல வேண்டுமென்றால் அது இம்சனோக் ஒருவரால் மட்டுமே முடியும் என்று அவா்கள் எல்லோருமே ஏக மனதாகச் சொல்லி விட்டார்கள். அதனால் அந்த வேலையும், வேலைக்கான வெகுமதியும் இயல்பாகவே அவரிடம் வந்து சோ்ந்தது.
யானையைச் சுடுவதற்கேற்ற துப்பாக்கியோடும் வெடிமருந்துகளோடும் இருமொழி அறிந்த துபாஷி ஒருவரை இம்சனோக்கிடம் அனுப்பி வைத்தார் துணை கமிஷனர். வேட்டைக்குத் தேவைப்படும் உதவி எது என்றாலும் கிராம சபையிடமிருந்து இம்சனோக் அதைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் சொல்லப்பட்டது. அந்த வேலையை முடிக்க அவருக்குத் தரப்பட்ட நாட்கள் ஏழு.
வழக்கத்திலிருந்து மிகவும் மாறான இந்தச் சூழ்நிலைக்கு இம்சனோக் சிறிது கூட ஆயத்தமாக இருந்திருக்கவில்லை. எதை எப்போது எங்கே வேட்டையாட வேண்டும் என்பதை அவா்கள் முடிவு செய்வார்களாம்; ஆனால் உண்மையில் அந்த சவாலை எதிர் கொள்ள வேண்டியவன் வேறொருவனாம்.
‘‘காட்டைப் பற்றி இந்த ‘சாகி’புகளுக்கு என்ன தெரியும்? நான் போய்ச் சுடுவதற்கு வாகாக வசதியான ஓர் இடத்தில் யானை நின்று கொண்டிருக்கும் என்றா அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? இந்த மிருகங்கள் எவ்வளவு புத்திசாலிகள் என்பதும், கிட்டத்தட்ட மனிதர்களைப் போவே கூட யோசிக்கக் கூடியவை அவை என்பதும் அவர்களுக்குத் தெரியுமா என்ன ? தப்பித்து ஓட வேண்டுமென்று நினைக்கும் பரப்பு முழுவதையும் பாதுகாத்தா வைக்க முடியும்?’
ஆனால் அது அரசாங்கத்தின் ஆணை. அவர் அதை ஏற்றே ஆகவேண்டியிருந்தது. யானை வேட்டை பற்றி நிகழ்ந்த அரசின் செய்திப் பரிமாற்றத்தில் ஏதோ ஓரிடத்தில் இலேசான அச்சுறுத்தல் தொனியும் கூட இருந்ததைப் பார்க்கமுடிந்தது. இந்தப் பணியில் ஒத்துழைக்க மறுப்பவர்களின் வேட்டை உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படலாம் அல்லது அடியோடு பறிக்கப்படலாம் என்பதே அது. இன்னொரு பக்கம் அந்தப் பகுதியிலேயே தலை சிறந்த வேட்டைக்காரர் என்று அவா் பெற்றிருந்த பெருமை வேறு இருந்தது. எப்படிப் பார்த்தாலும் வித்தியாசமான வகையில் வந்து சேர்ந்திருக்கும் இந்த வேட்டை அவரைக் கட்டிப் போடத்தான் செய்தது. அதனால் தனக்கு நம்பிக்கைக்குப் பாத்திரமான வேட்டைக்காரர்களின் பெயா்களைப் பட்டியலிட்ட அவா், யானையால் ஏற்பட்ட அழிவுகளும், சேதாரங்களும் எந்தெந்த இடங்களில் இருக்கின்றன என்பதைப் பார்த்து வர ஓா் உளவுப் பயணமாக அவா்களை அனுப்பி வைத்தார். தங்கள் கண்டு பிடிப்புக்களோடு அவா்கள் திரும்பி வந்ததும் போர்க்கால நடவடிக்கைகளுக்காக கூட்டம் போட்டுப் பேசுவதைப் போலவே அவா்கள் கூடி விவாதித்தனா். இரவு முழுவதும் அதைப் பற்றி விவாதித்து விட்டு விடிவதற்கு முன் சில மணி நேரம் உறங்கி எழுந்து தங்கள் திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுப்பதற்காகத் தங்கள் பேச்சைத் தொடா்ந்தனா்.
பிறகு ஆபத்தில்லாத தங்கள் மறைவிடத்துக்குத் திரும்பி வந்து பழைய சோற்றை சாப்பிட்டுவிட்டுக் கறுப்புத் தேநீர் அருந்தியபின் அந்த விலங்கின் வருகைக்குக் காத்திருக்கத் தொடங்கினா். இரண்டாம் நாள் மாலை, மழை பெய்யத் தொடங்கியதால் தங்கள் துப்பாக்கிகளில் தண்ணீா் படாமல் மூடிக் கொண்டார்கள். யானையைச் சுடுவதற்கென்று அரசாங்கம் கொடுத்திருந்த துப்பாக்கியோடு கூடவே மூன்று வேட்டைக்காரர்கள் தங்கள் இரட்டைக் குழல் துப்பாக்கிகளையும் கூடுதல் எச்சரிக்கைக்காகக் கொண்டு வந்திருந்தார்கள். அங்கே ஆபத்தான வேறு மிருகங்களும் இருக்கக் கூடும். ஆனால் தாங்கள் இவ்வளவு கவனமாகத் தீட்டியிருக்கும் திட்டத்தில் வேறு எந்த மிருகமும் குறுக்கிட்டுக் குழப்பி விடக் கூடாதே என்று இம்சனோக் பிரார்த்தனை செய்து கொண்டும் இருந்தார். இரண்டாம் நாள் இரவானபோது வேட்டைக்காரர்கள் நன்றாக நனைந்து போயிருந்தார்கள். பசியுடனும் மிகுந்த பயத்தோடும் இருந்தார்கள். இம்சனோக் மட்டும் எந்தக் குழப்பமும் இல்லாமல் காணப்பட்டார். துப்பாக்கிக் குழல் வழியே அவா் கற்பனையில் குறிபார்த்துக் கொண்டிருந்தார். தன் கையில் முதன் முதலாகக் கிடைத்திருக்கும் அதிகம் பழக்கப்படாத இந்த ஆயுதத்தைக் கொண்டு தன் குறிபார்க்கும் திறனை சோதித்துக் கொள்ள ஒரு வாய்ப்புக் கிடைக்க வேண்டுமென்று அவா் உள்ளூர ஆசைப்பட்டார். சரியாகக் குறிவைத்துப் பார்ப்பதில் தனக்கிருந்த திறமை மீது அவருக்குப் போதிய நம்பிக்கை இருந்ததால், அந்த முக்கியமான நேரத்தில் வேறெந்தக் காரணத்தாலும் அது திசை திரும்பி விடக் கூடாது என்றும் வேண்டிக் கொண்டார்.
இரவு செல்லச் செல்ல, காடும் அமைதியாகிக் கொண்டே சென்றது. இதுவரை கண்காணித்துக் கொண்டிருந்த ‘வாட்ச்சர்’களின் கவனமும் சற்று குறைய ஆரம்பித்திருந்தது. துாங்கி வழிந்து கொண்டிருக்கும் அடா்த்தியான இருண்ட காட்டின் நிசப்தம் அவா்களையும் தன் பிடியில் வைத்தபடி உறங்கத் தூண்டிக் கொண்டிருந்தது. இம்சனோக் மட்டும் முழுமையான விழிப்போடு இருந்தார். தன் சகாக்கள் களைத்துப் போயிருப்பதை அறிந்து முக்கியமான – விலைமதிப்பற்ற அந்த நேரத்தின் ஒரு சில நொடிகள் மட்டும் அவர்களை உறங்குமாறு விட்டுவிட்டுத் தன் அருகில் இருப்பவரைப் பக்கவாட்டில் மெதுவாக இடித்துத் தூக்கத்திலிருந்து எழுப்பி விட்டார். அடுத்தடுத்து இருப்பவர்கள் பக்கத்தில் இருப்பவர்களை இதே போல இடித்து இடித்து எழுப்ப எல்லோரும் எழுந்து உட்கார்ந்து கொண்டு அவரது பார்வையோடு தங்கள் பார்வையையும் ஒருங்கிணைத்துக் கொள்ள முயன்றனர். பச்சைப்பசேலென்ற செழிப்பான காட்டைத் திகிலூட்டும் இருள் விழுங்கிவிட்டது போலிருந்தது. அவரவர், ஏதோ யோசித்தபடி அங்கே காத்திருந்தனர். பிறகு இரவுப் பொழுது முடிந்து மறுநாள் விடிவதற்கான நேரம் வந்தது. இருட்டைத் தவிர விடிவதற்கான எந்த அறிகுறியுமே இல்லையென்றாலும் கூட இரவு முடிந்து காலை விடிந்துவிட்டதை மனத்தால் தெளிவாக உணர முடிந்தது. அதை முதலில் உணா்ந்தவர் இம்சனோக்தான். தன் உடலை அமைதியாக இடது புறத்திலிருந்து வலப்புறமாக மெள்ளத் திருப்பினார் அவா். அவரை அடுத்திருந்தவா் இந்த அசைவைப் பிடித்துக்கொண்டு இதே போன்ற அசைவைத் தானும் செய்தார். பிறகு அடுத்தடுத்து எல்லோரிடமும் இது தொடர்ந்து கொண்டே செல்ல இந்த சிறிய அசைவுகளால் புத்துயிர் பெற்றது போல எல்லோரும் அவரவா் இருக்குமிடத்தில் விழிப்புடன் இருக்கத் தொடங்கினா்.
காட்டில் வேறு உயிரிகளும் இருக்கின்றன என்பதற்கு அடையாளமாக அதன் முதல் சமிக்ஞை ஒரு காட்டுக் கோழியிடமிருந்து வந்தது. சிறிது தூரத்திலிருந்த உயரமான மரத்தில் ஒரு கோழி தன் சிறகுகளைப் படபடவென்று வேகமாக அடித்துக் கொண்டது. தாங்கள் இருந்த இடத்திலேயே விறைப்பாக இருந்தபடி வேட்டைக்காரர்கள் காத்திருந்தனா். தங்களைச் சுற்றிச் சூழ்ந்திருந்த நிசப்தம் அவா்களை சோர்வடைய வைத்தது. இன்னொரு நாளும் பயனில்லாமல் போய் விடப் போகிறதா? பிறகு திடீரென்று ஒவ்வொரு மரத்தின் மேலிருந்த குரங்குகளும் பயங்கரமாய் ஓலமிடத் தொடங்கின. அவை நிச்சயம் எதையோ பார்த்து பயந்திருக்க வேண்டும்.
தூரத்தில் பனிமூட்டம் விலகிக் கரைந்தபடி இருள் மடிந்து பொழுது புலா்ந்து கொண்டிருந்தது. குரங்குகளின் அலறல் சத்தம் சிறிது நேரம் தொடா்ந்து கேட்டுக் கொண்டிருந்தது. அதற்குள் வேறொரு சத்தமும் அந்தக் கூச்சலின் நடுவிலிருந்து வருவதை வேட்டைக்காரர்கள் உணா்ந்து கொண்டு விட்டனா். முதலில் மிகப் பெரிய குரங்குகள் கத்துவதைப் போலத்தான் அது கேட்டது. பிறகு அதை கவனமாகக் காது கொடுத்துக் கேட்ட இம்சனோக் தன் இடத்தை விட்டு எழுந்தபடி ‘அது இங்கேதான் இருக்கிறது’ என்று தன் சகாக்களிடம் மெல்லக் கிசுகிசுத்தார். அமைதியாக அவரவருக்குரிய இடங்களில் போய் – ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த மறைவுக்குப் பின்னால் சிலைபோல அசையாமல் நின்று கொண்டனா். தனக்கு மிகவும் வாகான உயரமான இடத்தில் துப்பாக்கியை ஆயத்தமாக வைத்துக் கொண்டபடி பழக்கமில்லாத தன் போட்டியாளரை எதிர்கொள்ளத் தயாராக நின்றிருந்தார் இம்சனோக்.
குறிப்பிட்டிருந்த இடத்திலிருந்து விலகி தன்போக்கில் அலைந்து கொண்டே இருந்தது யானை. மிக மிக சாவதானமாக அமைதியாகத் திரிந்து கொண்டிருந்தது அது. தான் செல்லும் வழியில் தட்டுப்படும் எல்லாவற்றையும் ருசி பார்க்க எண்ணுவது போல ஓரிடத்தில் ஒரு மரக்கிளையை ஒடிக்கும்; இன்னோரிடத்தில் மெல்லிய மரக்குச்சியை முறிக்கும். மண் குளியல் செய்ய விரும்பி வெட்ட வெளியில் பல நேரம் அப்படியே நின்று கொண்டு கூட இருக்கும்; ஆனால் இரவில் படிந்திருந்த ஈரம் இன்னும் காயாமல் இருந்ததால் இலேசான எரிச்சலுடன் தன் பாதங்களால் தரையை ஓங்கி ஓங்கி மிதித்துக் கொண்டிருந்தது அது. வேட்டைக்காரா்கள் இருந்த இடத்திலிருந்து அது இன்னும் கூடச் சற்றுத் தள்ளித்தான் இருந்தது. அந்தக் காலை நேரத்தில் பல இடங்களிலும் மாறிமாறித் திரும்பி வளைந்து போய்க் கொண்டிருந்த யானையின் நகா்வுகளை இம்சனோக்கைத் தவிர வேறு எவராலும் அத்தனை தெளிவாகப் பார்க்க முடியவில்லை. அதைப் பார்ப்பதற்கு அவா்களுக்கு பயமும் கூட இருந்தது. ஏதோ ஆழ்ந்த யோசனையுடன் எச்சரிக்கையோடு இருப்பதுபோல ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் யானை அசையாமல் அப்படியே நிற்பதைப் போலிருந்தது. தூரத்திலிருந்து அதைப் பார்த்து விட்ட இம்சனோக் கலவரமடைந்தார். தங்களுடைய நடவடிக்கைகளை எப்படியாவது அது மோப்பம் பிடித்து விட்டிருக்குமோ? அப்படியென்றால் ஒன்று அது பயந்து ஓடி விடும்; இல்லையென்றால் அதை விட மோசமானதாக மற்றொன்று நடக்கும். வேட்டைக்காரா்கள் மீது பாய்ந்து பழி வாங்க அது முயற்சிக்கும். துாரத்திலிருந்தே மிகப் பிரம்மாண்டமாகக் காட்சி தந்து கொண்டிருந்த அந்த மிருகத்தைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார் அவர். முதலில் இலேசாகக் கேட்ட அதன் பிளிறல் சத்தம் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே சென்றது. பிளிறிக் கொண்டே தன் கழிவுகளை வெளியேற்றிய யானை, அவற்றின் மீது மிதிக்காமல் நாசூக்காகப் பக்கவாட்டில் நகர்ந்தது. வழியிலுள்ள மரக்கிளைகளையும், புதர்களையும் மறுபடியும் நாசம் செய்யத் தொடங்கியது. யானை இடும் சாணத்தை முன்பொரு முறையும் காட்டில் பார்த்திருக்கிறார் இம்சனோக். பெரிது பெரிதாய் இருக்கும் அந்தச் சாணி உருண்டைகளிலிருந்து விடியற்காலை நேரத்தில் எப்படிப்பட்ட மோசமான வாடை வெளிவரும் என்பது அவருக்கு நினைவிருந்தது.
காலையின் சூரிய வெளிச்சம் கூடுதலாகிக் கொண்டே வந்தபோது அந்த யானை மிகவும் அமைதியாக, சாந்தமாகத் தென்பட்டது. தன் கண்ணில் படும் இளம் செடி கொடிகளையும், உயரமான புல் பூண்டுகளையும் அது சந்தோஷமாக விழுங்கிக் கொண்டிருந்தது எதற்காகவும் அவசரப்படுவதைப் போல அது தோன்றவில்லை. ஒரு முறை படுத்திருக்கக் கூட முயற்சி செய்த அது, பிறகு ஏனோ சட்டென்று எழுந்துகொண்டுவிட்டது. இப்போது மண்ணின் ஈரப்பதம் காய்ந்து நெகிழ்ந்து விட்டதால் தன் காதுகளை ஆட்டியபடி மண் குளியல் செய்து மகிழ்ச்சியடையத் தொடங்கியிருந்த அது, துதிக்கை கொண்டு மண்ணைக் கிளறி எடுத்துத் தன் உடலின் பக்கவாட்டில் போட்டுக் கொண்டது.
தான் இருந்த இடத்திலிருந்து அது செய்யும் வினோதமான செயல்களையெல்லாம் கூடுதல் சிரத்தையோடு பார்த்துக் கொண்டிருந்தார் இம்சனோக். அவருக்கும், அந்த விலங்குக்கும் இடையிலிருந்த தூரம், துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தும் அளவுக்குப் போதுமானதாக இல்லை. மேலும் அவா்கள் அதைப் பிடிப்பதற்காகத் தோண்டியிருந்த குழி, அங்கிருந்து மிகவும் தள்ளியிருந்தது. அவர்கள் யானையைச் சுட்ட பிறகு, குழியிருக்கும் இடத்தை நோக்கி அது விரையும் என்றும் அப்போது அது பிடிபட்டு விடக்கூடும் என்றும் அவர்கள் நம்பிக் கொண்டிருந்தனர். அதன் பிறகு அதன் கண்கள் வழியே ஊடுருவி மண்டையைச் சிதைக்குமாறு இறுதியாக ஒருமுறை துப்பாக்கியிலிருந்து வெடியைச் செலுத்த வேண்டும். துப்பாக்கிச் சூட்டின் மூலம் ஒரு யானையைக் கொல்வதற்கு அதுவே வழி என்பது எல்லா வேட்டைக்காரர்களுக்குமே தெரிந்ததுதான். அதனால் இன்னொரு காத்திருப்பு நாடகம் தொடங்கியது. அதற்குள் நடுப் பகல் வேளையாகியிருந்தது. இப்போது மற்ற வேட்டைக்காரர்களும் தங்களுக்கு வசதியான வெவ்வேறு இடங்களில் இருந்தபடி அந்த மிருகத்தைப் பார்க்க முடிந்தது. அதைப் பார்க்காமலே இருந்தபோது அவர்களிடம் இருந்த ஆரம்பகால நடுக்கம், இப்போது அவர்கள் நேரடியாகப் பார்க்கும் காட்சியால் மாறிவிட்டிருந்தது. அவ்வளவு தூரத்தில் இருப்பதால் அதன் கண்ணுக்குத் தாங்கள் தட்டுப்பட மாட்டோம் என்ற நம்பிக்கை அவா்களுக்கு ஏற்பட்டிருந்தது. ஆச்சரியத்தோடும் அமைதியாகவும் அதை அவா்கள் கவனிக்கத் தொடங்கினா். ஆனால் அது அதிக நேரம் நீடிக்கவில்லை. வெயில் சூடு அதிகமாகிக் கொண்டு போன பின்பு, அந்த யானையின் போக்கிலும் மாற்றம் தெரிந்தது. அது தன் துதிக்கையை உயா்த்தி வேதனையோடு குரல் எழுப்பியது. பிறகு காட்டுக்குள் நிழலான ஓா் இடத்தைத் தேடியபடி விரைந்து அதற்காக அமைத்திருந்த குழிக்கருகே வேட்டைக்காரா்கள் குவித்து வைத்திருந்த புதா்க்குவியல்களுக்கு அருகே நகா்ந்தது. ஆனால் ஓரளவு தனக்கு நிழல் தரக் கூடுமென அது எண்ணிய இடத்தை நெருங்கும் முன் சற்று நேரம் அசையாமல் அப்படியே நின்றபடி எல்லா திசைகளிலும் தன் பார்வையைக் கூா்மையாக செலுத்தியது. இப்போது இம்சனோக் துப்பாக்கி குண்டை அதன் மீது செலுத்துவதற்குப் பொருத்தமாக – நெருக்கமான ஓரிடத்தில்தான் அது இருந்தது. ஆனால் இப்படிப்பட்ட ஒரு கணத்துக்காகவே தோ்ந்தெடுக்கப்பட்டிருந்த பாதுகாப்பான அடுத்த இடங்களை நோக்கிப் பிற வேட்டைக்காரா்கள் நகா்ந்து விட்டார்களா என்பதைப் பற்றி இம்சனோக்கிற்கு உறுதியாகத் தெரியவில்லை. ஏதோ ஆபத்து இருப்பதை உணா்ந்து கொண்ட யானை பின் வாங்க முயற்சித்தது. ஆனால் அதன் பருமனான உடலைக் கொண்டு வேகமாக நகர இயலவில்லை. அது மெள்ளத் தலையைத் திருப்பியாக வேண்டுமென்பது மட்டும்தான் இம்சனோக்கிற்குத் தேவைப்பட்ட நகா்வு. மிகவும் கவனமாகக் குறிபார்த்தபடி அடுத்தடுத்து இரண்டு முறை அவா் சுட்டார். அவா் சுட்ட இடம் அதன் கண்களாக இருக்கக் கூடுமென அவா் நம்பினார். முதல் முறை சுட்டபோது அந்த விலங்கின் முகம் முழுவதும் அப்படியே அவா் பக்கம் திரும்பி அவரை ஸ்தம்பிக்க வைத்தது. பிறகு அது திரும்பியபோது இரண்டாவதாக அவா் சுட்ட குண்டு அதன் காதுகளைத் துளைத்துக் கொண்டு மூளைப் பகுதிக்குப் போய் அங்கேயே தங்கியும் விட்டது. இம்சனோக் மறுபடியும் குண்டுகளை நிரப்பிக்கொண்டு மீண்டும் இரு முறை சுட்டார். இந்த இரண்டு குண்டுகளில் ஒன்றாவது அதைத் தாக்கியிருக்க வேண்டும், காரணம் அது தள்ளாடிக் கொண்டிருப்பது போல் தோன்றியது.
வியப்போடும், பயத்தோடு கூடிய பிரமிப்போடும் அதைப் பார்த்துக் கொண்டிருந்தார் இம்சனோக். சாகும் நிலையில் மெல்லச் சரிந்து விழுந்து கொண்டிருந்த அந்த விலங்கு, தன்னை சமநிலைப்படுத்திக் கொண்டு நகா்ந்து செல்ல இன்னும் கூட முயற்சி செய்து கொண்டுதான் இருந்தது. ஆனால் துப்பாக்கிக் குண்டுகள் கட்டாயம் இலக்கைத் துளைத்திருக்க வேண்டும். அந்தப் பெரிய விலங்கு தன்னை சமநிலைப்படுத்திக் கொண்டு நகா்ந்து செல்ல இன்னும் கூட முயற்சி செய்து கொண்டுதான் இருந்தது. ஆனால் துப்பாக்கிக் குண்டுகள் கட்டாயம் இலக்கைத் துளைத்திருக்க வேண்டும்; அந்தப் பெரிய விலங்கு நிலைகுலைந்து மல்லாந்து விழுந்தது. அதன் துதிக்கையிலிருந்து காதைச் செவிடாக்கும் கடைசிப் பிளிறலும் எழுந்தது. அது, அவா்கள் திட்டமிட்டு அமைத்திருந்த குழிக்குள் விழவில்லை என்றாலும் எப்படியோ அது கொல்லப்பட்டு விட்டது. தன் துப்பாக்கி சுடும் திறமையைப் பிறா் பாராட்டியபோது அதை இம்சனோக் ஏற்றுக் கொள்ள முன் வரவில்லை. மிகச் சரியான தருணத்தில் தான் சுட நோ்ந்தது இறையருளின் துணையால் மட்டுமே என்றார் அவா். அந்தக் குண்டுகள் ஒரு கணம் முன்னதாகவோ அல்லது ஒரு கணம் தாமதமாகவோ செலுத்தப்பட்டிருந்தாலும் கூட யானையின் பக்கவாட்டில் கடந்து சென்று அடா்ந்த காட்டுக்குள் போயிருக்கும். அப்போது அந்த மூா்க்கமான யானையின் கோபம் இன்னும் அதிகமாகி அவா்கள் எல்லோரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்தியிருக்கும்.
குறிப்பிட்ட இடத்துக்குச் செல்வது இனிமேல் பாதுகாப்பானதுதான் என்பது உறுதிப்பட்ட பிறகு, சற்று ஆபத்தில்லாத இடத்தில் எல்லோரும் வட்டமாகக் கூடி நின்று அந்தப் பிரம்மாண்டமான உடலிலிருந்து உயிர் பிரிவதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் அதன் உடலிலிருந்து கடைசியான நீண்ட ஒரு பெருமூச்சு வெளிப்படும் வரை, அந்த பிரம்மாண்டமான உடல் முழுவதும் உயிரற்று ஒடுங்கிப் போகும் வரை அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இனம் விளங்காத அந்தச் செயல்பாட்டைப் பார்த்துக் கொண்டே இருந்த இம்சனோக், தன் எதிரியின் இமைக்காத விழிகளை, பார்க்க முடியாத அதன் கண்களுக்குள் ஒரு கணம் தன் பார்வையைச் செலுத்தினார். எல்லாவற்றையும் நாசமாக்கி அழித்துக் கொண்டிருந்த அச்சுறுத்தும் சக்தி அகன்று போனபடி, அந்த மிருகம் அநாதரவாய்க் கிடந்தது.
அதன் உருண்டையான மணி போன்ற கண்ணில் கண்ணீா் தேங்கியிருப்பது போல் அவருக்குத் தோன்றியது. இது அவருடைய கற்பனை மட்டும் தானா? அது இனிமேல் அவருக்கு எப்போதுமே ஒரு விளங்காத புதிராக இருக்கப் போகிறது. கண்ணீரோடு கூடவே இன்னொன்றும் கூட….. ! இறந்து கொண்டிருக்கும் நிலையிலிருந்த அந்த மிருகம் தன்னை அழித்தவரிடம் ஏதோ ஒரு செய்தி சொல்ல எண்ணியது போல…! அது அப்படியே காலத்தோடு காலமாக உறைந்து நின்று விட்டது. இது…. இன்னும் மிக நீண்ட காலத்துக்கு இம்சனோக்கைத் துரத்தி அலைக்கழிக்கப் போகிறது. அனுபவம் மிகுந்த அந்த வேட்டைக்கார்ர், தன் வேட்டைத் தொழிலில் சுட்ட மிருகங்களைப் பற்றி இதுவரை வேறு எந்த விதமாகவும் நினைத்துப் பார்த்த்தில்லை. அதற்கான உரிமை தாராளமாகத் தனக்கு உண்டு என்று மட்டுமே அவர் நினைத்து வந்தார். ஆனால் யானையைக் கொல்வது என்பது சற்று வித்தியாசமானது. இதற்கு முன்னர் வேட்டையாடிய சமயங்களில் அவர் முழுநேரம் சுயக் கட்டுப்பாட்டுடன் இருந்திருக்கிறார். எதை எப்போது கொல்வது என்பதை அவரேதான் தேர்வு செய்துகொண்டிருந்தார். ஆனால் இப்போது அவர்களுக்கு முன்னால் உயிரில்லாமல் கிடக்கும் இந்தப் பெரிய யானையின் விஷயம் அப்படிப்பட்டதல்ல. எந்த ‘இரை’யைப் பிடிக்க வேண்டும் என்பது, இப்போது அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் ஒரு வேலை. ஒவ்வொரு முறை வேட்டையாடி மிருகங்களைக் கொல்லும்போதும் எதையோ சாதித்து விட்டதாக அடையும் மகிழ்ச்சி இப்போது அவரிடம் இல்லை. அப்பாவி கிராம மக்களையும், அவா்களது வயல்களையும் காப்பாற்றி அவா்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமானால் அதற்கு அந்த யானையைக் கொல்வது ஒன்று மட்டும்தான் வழி! அது உண்மைதான். அதைப் பற்றி அவா் மனதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் நிலத்தின் மீது யார் ஆதிக்கம் செலுத்துவது என்று காலங்காலமாக மனிதா்களுக்கும் விலங்குகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் போட்டிக்கு நடுவே – இந்தக் குறிப்பான சம்பவத்தில் அவா் ஏன் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும்?
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு வேட்டைக்காரா் இம்சனோக், இன்னும் அதிகமான புகழ் பெற்று விட்டார். அவருக்குப் பரிசுத் தொகையோடு சேர்த்து மிக நோ்த்தியான ஒரு துப்பாக்கியும் விருதாகத் தரப்பட்டது. பணத்தைப் பெற்றுக் கொண்ட அவா், தன் சக வேட்டைக்காரா்களோடு அதைப் பகிர்ந்து கொண்டார். ஆனால் தன்னிடம் ஏற்கனவே ஒரு துப்பாக்கி இருப்பதால் எந்த வேட்டைக்காரனுக்கும் ஒரு துப்பாக்கியே போதுமானது என்றும் சொல்லியபடி துப்பாக்கியைப் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார். அவா் அவ்வாறு அதை மறுத்து விட்டது அதிகாரிகளுக்குப் புதிராக இருந்தாலும் அதற்கு மேல் அவரை அவா்களும் வற்புறுத்தவில்லை. தான் செய்த வேலைக்கான ஊதியத்தைத் தவிர வேறு பரிசுப் பொருட்களைப் பெற்றுக் கொண்டு அவா்களுக்குக் கடமைப்பட்டவராக இருக்க இம்சனோக் விரும்பவில்லை என்பதை அவா்கள் புரிந்து கொள்ளத் தவறிவிட்டார்கள். அரசின் ஆணையாக இருந்தாலும் வேறு எதுவாக இருந்தாலும் இது போன்றதொரு வேலையை இனிமேல் கைக்கொள்ளப் போவதில்லை என்று மனதுக்குள் உறுதி செய்து கொண்டிருந்தார் அவா். இப்போது அரசாங்கத்திடமிருந்து அந்தத் துப்பாக்கியைப் பெற்றுக் கொண்டு விட்டால் வேலையைத் தோ்ந்தெடுப்பதற்கான தனது சுதந்திரம் பறிபோய் விடுமென்றே அவா் நினைத்தார்.
குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சியைப் பற்றிய அவரது அந்தத் தனிப்பட்ட எண்ணங்கள் எப்படிப்பட்டவையாக இருந்தபோதும் இம்சனோக்கின் இப்போதைய கவலை, அந்தக் கிழட்டுப் பன்றி ஏற்படுத்தி வரும் நாசத்தைப் பற்றியதுதான். நன்கு விளைந்திருக்கும் வயல்கள் இவ்வாறு அழிக்கப்படுவதென்பது கிராமவாசிகளுக்குத் தொடா்ந்து நோ்ந்து வந்த ஒரு பெருந்துன்பமாகவே இருந்தது. ஆனால் இந்தப் பேரழிவு, குறிப்பிட்ட அந்த ஒரு மிருகத்தின் காட்டு மிராண்டித் தனத்தால் மட்டுமே நேருவதில்லை. அதன் அழிக்கும் சக்தியைத் தாண்டி வேறு வகையாகவும் அந்த நாசம் நிகழ்ந்து கொண்டிருந்தது. வெகு காலத்திற்கு முன்பு ஒரு அறுவடைக் காலத்தில், வயலிலிருந்து கிராமத்திற்கு வரும் பாதி வழியில் அமைந்திருக்கும் அவரது குடிசையில் இருந்த தானியத்தைக் குரங்குக் கூட்டங்கள் எப்படி சாப்பிட்டுத் தீர்த்தன என்பது, அவருக்கு நன்றாக நினைவிருந்தது. ‘டிரக்’குகள் செல்வதற்குச் சாலைகள் போடப்படுவதற்கு முன்பு வரை வயலில் விளைந்த நெல்லைப் பாதிவழியில் அமைந்திருக்கும் தங்கள் குடிசைகளுக்குத்தான் கிராமவாசிகள் கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். பிறகு பெண்களும், குழந்தைகளுமாய் அவற்றைக் கிராமத்திலிருக்கும் நெற்குதிருக்கு எடுத்துச் செல்வது வழக்கம்.
பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்திருக்கம் வயல்களிலிருந்து செங்குத்தாக ஏறிவரவேண்டி இருப்பதால் பாதிவழியில் அமைந்திருக்கும் இப்படிப்பட்ட வீடுகள் அவர்கள் செல்ல வேண்டிய தூரத்தைக் குறைத்ததோடு கடினமான மலையேற்றத்திலிருந்தும் அவர்களை சற்று விடுவித்தன. இந்த வழியைக் கையாளும்போது அறுவடை செய்யபட்டவற்றை எடுத்து வரும் வேலை அவர்களுக்குக் கொஞ்சம் சுலபமாகி இருந்தது. ஆனால் இந்தக் குடிசைகள் குரங்குகளுக்குப் பிடித்தமான இரை தேடும் இடங்களாக அமைந்து போய்விட்டன. பெண்களும், குழந்தைகளும் மட்டுமே அந்தக் குடிசைகளில் தென்பட்டதால் குரங்குகளுக்கு அவா்களிடம் கொஞ்சமும் பயமில்லை. தானியங்களை வீணாக்கியதோடும் தின்றதோடும் மட்டுமல்லாமல் அந்தக் குரங்குள் தங்கள் பல்லைக் காட்டி அவா்களை அடிக்கடி பயமுறுத்தவும் செய்தன உரக்கக் கூச்சலிட்டன. சில வேளைகளில் துணைக்கு யாரும் இல்லாத பெண்களையும் குழந்தைகளையும் தாக்கவும் செய்தன. அந்தக் கூட்டத்தில் குறிப்பாக ஒரு ஆண் குரங்கு மிகவும் கொடூரமானதாக இருந்தது. வயலிலிருந்து பாதிவழியில் அமைந்திருந்த இம்சனோக்கின் குடிசையை அந்தக் குரங்கு ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. அதன் கூட்டத்தார் இரையுண்ணும் போது குடிசைக்கு வெளியே தானியங்களை எடுத்துச் செல்ல முயற்சிக்கும் பெண்களுக்கு அது மிகவும் ஆபத்தானதாக இருந்தது. இம்சனோக்கிற்கு அந்த விஷயம் தெரிய வந்த பிறகு அந்த ஆண் குரங்கைச் சுட்டு வீழ்த்த அவா் ஒரு திட்டம் போட்டார், அப்போதுதான் மற்ற குரங்குகளை பயமுறுத்திக் கட்டுக்குள் வைப்பது சாத்தியம்.
தன் மனைவியையும் அவளோடு உடன் செல்பவா்களையும் இரண்டு நாட்கள் அங்கே செல்ல வேண்டாமென்று தடுத்து விட்டு அந்தக் குரங்குகள் சுதந்திரமாக, பயமே இல்லாமல் தானியங்களை சாப்பிட அனுமதித்தார் இம்சனோக். மூன்றாவது நாள் விடிகாலைப் பொழுதிலேயே தனது நம்பிக்கைக்குரிய துப்பாக்கியை எடுத்துக் கொண்டு அங்கே சென்று குடிசையின் ஒரு மூலையில் ஒளிந்து கொண்டார். பொழுது நன்றாக விடிந்த பிறகு எதிர்பார்த்தது போலவே துடுக்குத்தனமான அந்த ஆண் குரங்கின் தலைமையில் இரை மேய்வதற்காகப் பல குரங்குகள் கூட்டமாக வந்தன. நெற்குவியலின் மீது ஏறிக் கலைத்து சத்தம் போட்டு விளையாடிய பிறகு வழக்கமாக தினந்தோறும் சாப்பிடுவதைப் போல சாப்பிட ஆரம்பித்தன. அந்தக் குரங்குக் கூட்டத்திலிருந்த சில் குட்டிக் குரங்குகள் அவற்றைச் சாப்பிடுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் தானியங்களை ஒன்றின் மீது மற்றொன்று எறிந்து கொண்டன. மனிதக் குழந்தைகளைப் போலவே அவை விளையாடியது விசித்திரமாக இருந்தது. இந்தக் காட்சியால் சிறிது நேரம் கவனம் கலைந்திருந்தார் இம்சனோக். ஆனால் அந்த மிகப் பெரிய ஆண் குரங்கைப் பார்த்ததுமே, தான் இருப்பதை அது உணா்ந்து கொண்டு விட்டது என்பது அவருக்குப் புரிந்து விட்டது. மற்ற குரங்குகளை நோக்கி தீனமாகக் குரல் எழுப்பியபடி அந்த மந்தையைக் குடிசையை விட்டு வெளியேற்ற அது முயற்சித்துக் கொண்டிருந்தது. அதே சமயத்தில் தன் மறைவிடத்தை விட்டு வெளியே வந்து விட்ட இம்சனோக்கைத் தாக்குவது போலவும் அது பாசாங்கு காட்டிக் கொண்டிருந்தது. மற்ற குரங்குகளைப் பற்றிக் கவலை கொள்ளாத இம்சனோக், கூட்டத் தலைமையாக இருக்கும் குரங்கின் மீது மட்டுமே கவனமாகக் குறி வைத்தபடி துப்பாக்கியின் விசையை அழுத்தினார். ஆனால் துப்பாக்கிக் குண்டிலிருந்து தப்பித்துக் கொள்ள அது வெகு வேகமாக முயற்சி செய்து விட்டதால், குண்டு அதன் உடலின் கொழுத்த பக்கவாட்டுப்பகுதியிலேயே பாய்ந்தது. அப்போதும் கூட அது, தளா்ந்து போய் விட்டுக் கொடுத்து விடுவதாக இல்லை. குடிசையில் இருந்த ஒற்றைக் கதவு வழியாகத் தன் கூட்டம் முழுவதும் வெளியேறிச் செல்லும் வரை, அது அங்கேயே அப்படியே அசையாமல் நின்று கொண்டிருந்தது. பிறகு, தான் தப்பித்துச் செல்ல முயற்சி செய்தது. ஆனால் பக்கவாட்டுப் பகுதியில் இருந்த குண்டுக் காயம் கடுமையாக இருந்தால், தன் குடும்பத்தாரைக் காப்பதற்கு எந்த இடத்தில் நின்றிருந்ததோ அங்கேயே இப்போதும் அசைய முடியாமல் நின்று விட்டது. இம்சனோக் மீண்டும் அதைக் குறிபார்த்தபோது சரணாகதி அடைவது போலவோ இறைஞ்சி மன்றாடுவது போலவோ தன் கைகளை உயா்த்தியது. அதன் நெஞ்சைக் குறி வைத்தபடி அபாயகரமான துப்பாக்கிக் குண்டை வேட்டைக்காரா் செலுத்தியபோது தன் கண்களை மெள்ள மூடிக் கொண்டது. வலி தாங்காமல் உரக்கக் கத்தியபடி தரையில் சரிந்து விழுந்தது. அசைவற்று அப்படியே கிடந்தது. உண்மையிலேயே அந்த மிருகம் இறந்து போய் விட்டது என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு கிராமத்துக்குச் சென்ற இம்சனோக், தன் மருமகன்களை அழைத்து அதன் உடலை வீட்டுக்கு எடுத்து வருமாறு அனுப்பி வைத்தார்.
குடும்பத்தில் எல்லோரும் கொண்டாட்டமாக இருந்தனா். குரங்குகள் அடித்து வந்த கொட்டத்துக்கு முடிவு கட்டப்பட்டு விட்டது என்பது மட்டும் அதற்குக் காரணமல்ல. பல நாட்களுக்குக் காணும் வகையில் நிறைய இறைச்சி அவா்களுக்குக் கிடைத்திருப்பதும் கூடத்தான்.
குரங்கின் உடல், வீட்டுக்கு வெளியே முன்பகுதியிலுள்ள முற்றத்தில் எல்லோரும் பார்க்கும்படி வைக்கப்பட்டது. உட்கார்ந்த நிலையில் அது வைக்கப்பட்டிருந்தது. முன்னாலிருந்த ஒரு மூங்கில் கழி அதன் தலையைத் தாங்கிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் அதைப் பார்த்தபோது உண்மையில் ஒரு மனிதனைப் பார்ப்பது போலவே அது தோற்றம் அளித்தது. இயல்பிலேயே குறும்புத்தனம் கொண்டவனான இம்சனோக்கின் மருமகன்களில் ஒருவன் எங்கிருந்தோ ஒரு தொப்பியை எடுத்து வந்து அதன் தலையில் மாட்டிவிட்டான்; வேறு யாரோ ஒருவன் ஒரு சிகரெட்டை அதன் வாயில் பொருத்தி வைத்தான். இந்தக் கூத்தின் உச்சபட்சமாக மூக்குக் கண்ணாடி ஒன்று கொண்டு வரப்பட்டு தட்டையான அதன் மூக்கின் மீது பாந்தமாக அணிவிக்கப்பட்டது. குரங்குக்குச் செய்த அலங்காரமெல்லாம் முடிந்தபிறகு இம்சனோக்கை வெளியே கூப்பிட்டுக் காட்டினார்கள். உருமாறிப் போயிருந்த அந்தக் குரங்கைக் கண்டபோது அவருள் ஏதோ ஒன்று பீறிட்டது. உட்கார்ந்திருந்த குரங்கிடம் வேகமாகச் சென்றவர், அதைத் திட்டியபடியே அதன் இரண்டு கன்னங்களிலும் மாறிமாறி அறையத் தொடங்கினார். அவர் கொடுத்த முதல் அடியில் குரங்கின் வாயிலிருந்த சிகரெட் விழுந்தது. அதன் மூக்கில் எக்குத்தப்பாக மாட்டப்பட்டிருந்த கண்ணாடி, அடுத்த அடியில் சிதறியது. இன்னும் சில முறை அடித்த பிறகு, மீண்டும் ஒரு முறை அது கீழே உருண்டு விழுந்தது. இம்முறை அதன் பின்னங்கால்கள் முன்னங்கால்கள் எல்லாமே வானத்தை நோக்கிக் குத்திட்டு நின்றன. அதன் உடல் விறைத்துப் போயிருந்தது. கைகளை விரித்தபடி அது கிடந்த காட்சி, தன்னைக் கொல்ல வந்தவரின் முன்னிலையில் சாகும் நேரத்தில் அது மன்றாட முற்பட்டதைப் பகடி செய்வது போலிருந்தது.
அருவருப்பாய்க் காட்சியளித்த அந்த மிருகத்தை நெருங்கிச் சென்ற இம்சனோக் ,
“நீ என்னோட நெல்லையெல்லாம் திருடி என்னை நாசம் பண்ணணும்தானே ஆசைப்பட்டே..? இப்ப உன் நிலைமை என்ன ஆச்சு பார்த்தியா! எங்க வீட்டுப் பெண்களையெல்லாம் பயங்காட்டி ஓட ஓட விரட்டிக்கிட்டிருந்தியே இப்ப உன்னோட அந்தக் குறும்பெல்லாம் எங்கே போச்சு? நான் உன்னைக் கண்டதுண்டமா வெட்டி என்னோட ஜனங்களுக்கு உன்னை விருந்தாக்கும்போது உன்னை மாதிரி வேறொரு குரங்கு அதையெல்லாம் எடுத்துக்கப் போகுது“ என்று கத்தினார்.
இதுவரை சந்தோஷமாகக் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தவர்களின் மனநிலை இம்சனோக்கின் கடுமையான வார்த்தைகளைக் கேட்டதும் வியப்புக் கலந்த அமைதியாக மாறிப் போய்விட்டது. அவர் மனைவி டங்செட்லாவும் ஏதோ ஒன்று தவறாகப் போய்விட்டது என்று அதன் வழி புரிந்து கொண்டு எச்சரிக்கையானாள். தன் கணவரின் முகத்தைப் பார்த்ததும் சட்டென்று அவர் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வீட்டுக்குள் தள்ளிச் சென்றுவிட்டாள்.
அந்தக் குரங்கைத் தோலுரித்து, வெட்டிக் கூறு கூறாகத் துண்டு போடும் நேரத்துக்குள் கணவன் மனைவிக்கிடையே ஏதோ ஒரு பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருக்க வேண்டும்; இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களின்போது முன்பு பயன்படுத்தப்பட்டிருக்கும் டங்செட்லாவின் பெரிய சட்டி ஒன்றைக் கேட்டுக் கொண்டு சமையலறைக்குள் வந்த மருமகனிடம் அதைக் கொடுக்க அவள் மறத்துவிட்டது அதனால்தான்.
“’அந்தப் பெரிய கடாயைப் பன்றி இறைச்சி சமைக்கும்போது எடுத்துக்கோ. இப்ப இந்த இறைச்சியை சமைக்க என்னோட அடுப்படியிலிருந்து ஒரு சாமான் எடுத்துக்கறதைக் கூட நான் அனுமதிக்க மாட்டேன்” என்று தன் மறுப்பை வெளிப்படையாகத் சொல்லி விட்டாள் அவள். இவ்வாறு அவள் சொல்லியதில் மருமகன் ஆச்சிரியமடைந்தாலும் இறைச்சியை உடனே சமைத்தாக வேண்டுமென்பதில் குறியாக இருந்தான் அவன். அதனால் அதற்கான சட்டியை ஏற்பாடு செய்வதில் அவன் முனைந்து விட்டான்.
இம்சனோக்கிடமிருந்து வெளிப்பட்ட வழக்கத்துக்கு மாறான வார்த்தைக் குமுறலோ, சமைப்பதற்கான பெரிய சட்டியைத் தர அவரது மனைவி மறுத்து விட்டதோ இவை எதுவுமே அவரது நண்பா்களும், உறவினர்களும் இருந்த கொண்டாட்ட மனநிலையைச் சிறிது கூடக் குறைக்கவில்லை. அவா்களெல்லாம் பின்னிரவு நேரம் வரை குடித்துக் கொண்டும், இறைச்சியை சாப்பிட்டுக் கொண்டும் இருந்தனர். தன் சமையலறையில் அந்த இறைச்சித்துண்டு எதுவும் வரக்கூடாது என்று உறுதியாகச் சொல்லிவிட்ட டங்செட்லா மூத்த மருமகனை அழைத்து பாக்கியுள்ள இறைச்சியை உறவுக்காரர்களுக்கும், அண்டை அயலாருக்கும் பகிர்ந்து தந்து விடுமாறு சொன்னாள்; தன் கணவரின் வழிகாட்டுதலின்படியே தான் அப்படிச் சொல்வதாகவும் தெரிவித்தாள்.
பிறகு இம்சனோக் ஒரு வினோதமான காரியம் செய்தார். அந்தக் குரங்கு கொல்லப்பட்ட குடிசையிலிருந்து தானியம் எதையும் பொறுக்கி வர வேண்டாம் என்று மனைவியிடம் அறிவுறுத்தினார். குறைந்தபட்சம் இருபது, முப்பது கூடை தேறக்கூடிய அத்தனை தானியங்களையும் இழந்து விட சம்மதமில்லாமல் அவள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தாள். ஆனால் அவளது கணவரோ தனது நிலைப்பாட்டில் மிகவும் உறுதியாக இருந்தார். ஒரு குரங்குக் கூட்டம் குலைத்துப் போட்டதும் அந்தக் கூட்டத்தலைவனின் இரத்தக்கறை படிந்ததுமான நெல் மணிகளால் தனது முதன்மையான நெற்குதிரைக் கறைப்படுத்திக் கொள்ள அவா் நிச்சயம் உடன்பட மாட்டார். அதனால் வயலிலிருந்து பாதிவழியில் அமைத்திருந்த அந்தக் குடிசை, அதில் எஞ்சியிருந்த தானியங்களோடு அப்படியே விடப்பட்டு விட்டது. பறவைகளும், வேறு பல மிருகங்களும் அங்கிருந்து தானியங்களைப் பல நாட்கள் கொறித்துக் கொண்டிருந்தன. அந்தக் குடிசை அமைந்திருந்த இடம் மிக மிக வாகான ஒரு இடம் என்றாலும் கூட எந்த கிராமவாசியும் அங்கே இன்னொரு குடிசை அமைக்கத் துணியவில்லை. இரண்டு ஆண்டுகளுக்குள் சிதைந்து போய் விட்ட அந்தக் குடிசை, ஒரு கோடை மழையில் அடித்தும் செல்லப்பட்டு விட்டது. ஆனாலும் அந்த இடத்தை ‘இம்சனோக் திருப்பம்’ என்றுதான் கிராமவாசிகள் இன்னும் இனம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் காட்டுப் பாதையின் ஒரு திருப்பத்தில் அமைந்திருந்த இடம் அது.
ஆண்டுகள் செல்லச் செல்ல, கிராமத்தின் அன்றாடக் கடினமான வாழ்க்கைத் தேவைகளில் அதிகம் கருத்துச் செலுத்த வேண்டியிருந்ததால், வேட்டையாடுவதைக் குறித்து அந்த வேட்டைக்காரரின் மனதில் அவ்வப்போது எழும் உறுத்தல்கள் சற்றுக் குறைந்திருந்தன. தன்னிடம் சரணடைந்து மன்றாடிய குரங்கின் ஆவி, சிறிது காலம் அவரது மனதைத் தொந்தரவு செய்தபோதும், அதிகரித்துக் கொண்டே செல்லும் மிகப் பெரிய குடும்பத்தின் உணவுத் தேவையைப் பூா்த்தி செய்ய அவசியமான ஒரு மாற்று வழியே வேட்டை என்ற முந்தைய எண்ணத்தை அவா் மீட்டுக் கொண்டிருந்தார்.
இப்போது மறுபடியும் அந்த நாசகாரப் பன்றியின் வடிவில் ஒரு விபரீதமான சூழல் எதிர்ப்பட்டிருக்கிறது. தன் குடும்பத்தின் இருப்புக்கே பொறுப்பாக இருப்பவரும், அவா்களது தேவைகளைப் பூா்த்தி செய்து அவா்களைப் பாதுகாப்பவருமான இம்சனோக்குக்கு அது சவால் விட்டுக் கொண்டு நிற்கிறது. அண்மைக் காலமாகத் தனக்கு வயதாகிக் கொண்டு வருவதை உணர ஆரம்பித்திருந்தார் அவா். இப்போதெல்லாம் முன்போலக் காடுகளுக்குள் பயமில்லாமலும், லாவகமாகவும் அவரால் சென்று வர முடியவில்லை. அதனால் இளைஞர்களில் ஒருவனை – பெரும்பாலும் தன் மருமகனையோ அல்லது நண்பனின் மகனையோ தன் வேட்டைப் பயணங்களின்போது உடனழைத்துச் செல்ல ஆரம்பித்திருந்தார் அவா். மேலும் காட்டுக்குள் தாக்குதல் நடத்துவதற்கான ஆயத்த வேலைகளில் கூடுதல் நேரத்தை செலவழித்தார். அந்தக் காட்டுப் பன்றியின் நாசகாரமான வேலை அடிக்கடியும், அதிக அளவிலும் நடக்கத் தொடங்கியபோது, தனக்குச் சொந்தமாக இருக்கும் விளைந்த வயல்கள் உட்பட அழிவுக்கு ஆட்பட்டிருக்கும் எல்லாப் பகுதிகளையும் ஆய்வு செய்யும் பயணம் ஒன்றை முதலில் மேற்கொள்ள அவர் முடிவு செய்தார். இந்தப் பயணத்துக்குத் துணையாகத் தனக்கு மிகவும் பிடித்தமான மருமகனைத் துணை சோ்த்துக் கொண்டார் அவா். அவா்கள் இருவரும் ஒரு குளிர்காலத்தின் காலைப் பொழுதில் பள்ளத்தாக்கில் தங்கள் பயணத்தைத் தொடங்கினா்.
வழக்கமான பாதையில் செல்ல வேண்டாமென்றும் மிகவும் அடா்ந்த காட்டுப் பகுதிக்குள் சுற்று வழியில் செல்லலாமென்றும் இம்சனோக் முடிவு செய்தார். கிராமவாசிகளுக்கு ஒரு சாபமாகவே ஆகிவிட்ட தந்திரமான இந்த மிருகத்தின் துரத்தல்களிலிருந்து விடுபட ஏற்ற ஒரு வழியை முயற்சித்துக் கொண்டிருப்பதாகத் தன் மருமகனிடம் அவர் சொல்லிக் கொண்டே போனார். அவா்கள் இருவரும் ஒருவா் பின் ஒருவராகச் சென்றார்கள், மூத்த வேட்டைக்காரரான இம்சனோக், பாதை எது என்று சொன்னபடி முதலில் சென்றார். அனுபவம் மிகுந்த அவரது கண்கள் சுற்றியுள்ள புதா்களில் ஏதோ சலசலப்பு எழுவதைக் கண்டு கொண்டு விட்டன. ஆனால் அதற்கு அவா் அவ்வளவு முக்கியத்துவம் தரவில்லை. இருவரும் நடையைத் தொடர்ந்தார்கள். அன்றைய குளிர்காலப் பகல் வேளை வெப்பம் மிகுந்ததாக இருந்ததால் நண்பகலானதும் இம்சனோக் நிழலான இடம் ஒன்றைத் தோ்வு செய்து கொண்டு சற்று ஓய்வெடுத்துக் கொள்ள விரும்பினார். இருவரும் நிழலில் அமா்ந்து கொண்டனா். மதிய உணவை நிதானமாக சாப்பிட்டு முடித்த பிறகு புதிதாகச் செய்யப்பட்ட ஒரு மூங்கில் குவளையில் தண்ணீா் எடுத்து வருவதற்காக அருகிலிருந்த ஓடைக்குச் சென்றான் மருமகன். அந்த சிறிது நேரத்துக்குள் இம்சனோக் ஒரு சின்னத் தூக்கம் போட்டார். அவா் தூங்கி எழுந்தபோது தன் மாமன் எழுந்திருப்பதற்காகத் தண்ணீரை வைத்துக் கொண்டு பொறுமையாகக் காத்திருந்தான் மருமகன். முகம் கழுவித் தண்ணீா் குடித்துவிட்டுப் புத்துணா்ச்சி பெற்றவா்களாய் அவா்கள் தங்கள் பயணத்தைத் தொடா்ந்தனா்.
கடுமையாக அச்சுறுத்தக்கூடியது என்று பெயா் வாங்கியிருந்த அடா்காட்டின் குறிப்பிட்ட ஒரு பகுதியை அவா்கள் நெருங்கியபோது அந்த மருமகனின் பார்வையிலேயே பயம் தெரிந்தது. அவனது பயத்தைப் பார்த்து சிரித்த மாமன், ஒரு பாடலைப் பாட ஆரம்பித்தார். அவா் ஒரு வரியைப் பாடி முடிப்பதற்குள் ஏதோ ஒரு சத்தம் கேட்டது. உடனே அந்த இளைஞன், தாங்கள் வந்த வழியிலேயே திரும்பியபடி பின்னங்கால் பிடரிபட ஓட ஆரம்பித்தான். வயதான அந்த வேட்டைக்காரரோ தான் நின்ற இடத்திலேயே நிலைகுத்திப் போனாற்போல நின்றார். அவருக்கு முன்னால் தென்பட்ட காட்சி விவரிக்க முடியாத வகையில் இருந்தது. அது பன்றியைப் போல் இருப்பதாக அவருக்குத் தோன்றியபோதும் உலகில் உள்ள எந்தப் பன்றியும் இவ்வளவு பெரியதாக, இத்தனை கறுப்பாக இருக்க முடியாது என்று நினைக்கும் அளவுக்கு அது அத்தனை பிரம்மாண்டமாய் இருந்தது. சுற்றியிருந்த எல்லாவற்றையும் விஞ்சிக் கொண்டு உயரமும், பருமனுமாக அது காட்சியளித்தது. தான் தப்பிக்க வேண்டுமானால் ஒன்று முதல் துப்பாக்கி குண்டால் அதை அவா் வீழ்த்த வேண்டும் அல்லது அப்படியே ஸ்தம்பித்து நின்று விட வேண்டும்.
திறமையான வேட்டைக்காரருக்கே உரித்தான கூர்மையான உள்ளுணா்வோடு அதன் தலையைக் குறிபார்த்துத் துப்பாக்கியின் விசையை அழுத்தினார் அவா். அந்தச் செயலில் பன்றியைக் கொல்லும் நோக்கத்தை விடவும் தற்காத்துக் கொள்ளும் முனைப்பே மேலோங்கி நின்றது. இம்சனோக்கின் நல்ல நேரம், துப்பாக்கி குண்டு இலக்கைத் தாக்கியிருப்பதாகவே தோன்றியது. அந்த விலங்கு ஒரு முறை பெரிதாகக் காலடி எடுத்து வைத்து விட்டு அடா்ந்த காட்டுக்குள் அப்படியே நிலைகுலைந்து சரிந்து விழுந்தது. அதற்குப் பிறகு எந்த ஓசையும் எழவில்லை. முழுமையான நிசப்தம் மட்டுமே நிலவியது. காயப்பட்டுக் கிடக்கும் ஒரு மிருகத்தை நேருக்கு நோ் எதிர் கொள்வதிலிருக்கும் அபாயத்தை உணா்ந்தபடி, காலையில் தாங்கள் வந்த அதே பாதையில் பத்திரமாகத் திரும்பிச் சென்றார் இம்சனோக். தன் மருமகனுக்கு என்ன ஆகியிருக்கும் என்று அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. எந்த ஒரு கணமும் அந்தப் பெரிய மிருகம் தன் மீது பாயக் கூடுமென்பதை எதிர்பார்த்தபடி திரும்பிப் போகும் வழியெல்லாம் அவ்வப்போது எச்சரிக்கையோடு பின்னால் பார்த்துக் கொண்டே சென்றார் அவா். ஆனால் ஒவ்வொரு முறை அவ்வாறு பார்த்தபோதும் அவருக்கு நிம்மதியாகவே இருந்தது. அவரை எதுவும் பின் தொடரவில்லை.
தொடுவானத்தில் சூரியன் மூழ்கிக் கொண்டிருந்த வேளையில் இம்சனோக் சற்று குளிர்ச்சியாக உணர்ந்தார். வெயிலின் சூடு தணிந்திருந்ததோடு அவர் கொண்டிருந்த பயங்கரமான பதட்டத்திலிருந்து அவர் விடுபட்டிருந்ததே அதற்கான காரணம். அடுத்த வளைவில் அவர் திரும்பியபோது அங்கே தன் மருமகன் இருப்பதைப் பார்த்தார். கால்களை ஒடுக்கி வைத்துக் கொண்டு நடுங்கிக் கொண்டிருந்தான் அவன். எதுவும் பேசாமல் மாமனைப் பார்த்து இலேசாக அசட்டுச்சிரிப்பு சிரிக்க முற்பட்டான். கிழவர் அவனைத் தூக்கி எழுப்பி விட்டுத் தனக்கு முன்னால் நடந்து செல்ல வைத்தார். கிராமத்திலிருந்து கிளம்பியபோது அவர்கள் வந்து கொண்டிருந்த வரிசைமுறை இப்போது முன்பின்னாக மாறியிருந்தது. காலையில் வந்தபோது கேலியும் சிரிப்புமாகப் பேசிக் கொண்டு வந்ததற்கு நேர்மாறாக இப்போது இந்த இருவரும் மிக அமைதியாக கிராமத்துக்குச் செல்லும் பாதையில் நடந்து கொண்டிருந்தனர். இம்சனோக்கின் வீட்டை அடைந்ததும், அவர்களது வருகையை எதிர்பார்த்து நிறைய பேர் காத்துக் கொண்டிருப்பதை அவர்கள் கண்டனர். அந்த மிருகத்தின் அறிகுறி எங்கேனும் தட்டுப்பட்டதா என்பதை அறிந்து கொள்வதற்காக அவர்கள் அங்கே வந்திருந்தனர். முதலில் அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இருவரில் எவருமே பதிலளிக்கவில்லை. ஆனால் தொடர்ந்து இம்சனோக் அதை சொல்லி முடித்துவிட்டார்.
‘‘அந்தப் பன்றியை சுட்டுவிட்டேன் என்றுதான் நான் நினைக்கிறேன்’’
அவர் சொன்னதைக் கேட்டதும் மகிழ்ச்சியாலும், நிம்மதி உணர்வாலும் கூட்டம் ஆரவாரித்தது. அவர்கள் பல விதமான கேள்விகளை எழுப்பியபோது
‘‘என் வாழ்நாளில் இதைப் போல ஒன்றை நான் பார்த்ததே இல்லை. அதற்கு மேல் அது சம்பந்தப்பட்ட எதையும் நான் பேச விரும்பவும் இல்லை’’
என்று மட்டுமே பதிலளித்தார் அந்த வேட்டைக்காரர்.
‘‘ஆனால் நீங்கள் அதை எங்கே சுட்டீர்கள் என்பதை எங்களுக்குக் காட்டியாக வேண்டும். இல்லையென்றால் அதன் உடலை எங்கே போய்த் தேடிக் கண்டுபிடிக்க முடியும் எங்களால்?’’
இம்சனோக், அமைதியாகவே இருந்தார்; தொடர்ந்து அவர்கள் அழுத்தம் கொடுத்துக் கேட்டபோது
‘‘நாளைக்கு ஒரு நாள் என்ன நடக்கிறது என்பதைக் காத்திருந்து பார்ப்போம்’’
என்று மட்டும் சொன்னார்.
மறுநாள் காலையில் கிராமத்துக் காவல்காரர்கள் அந்தக் காட்டுப் பன்றியின் சுவடு எங்கும் தென்படவில்லையென்ற செய்தியைக் கொண்டு வந்தார்கள். இரவு முழுவதும் சின்னப் பன்றிகளின் கூட்டம் கூட நெல் வயல்களில் இல்லையென்றும் சொன்னார்கள். அதைக் கொண்டு அந்த நாசகார மிருகம் கொல்லப்பட்டிருக்க வேண்டுமென்று உறுதி செய்து கொண்ட கிராம வாசிகள் அதைக் கொன்ற இடத்தின் வழியைக் காட்டும்படி மீண்டும் அவரிடம் கேட்டுக் கொண்டார்கள். அப்போதுதான் இறந்துகிடக்கும் அதன் உடலைத் தேட ஒரு குழுவினரை அவர்களால் அனுப்பமுடியும். அந்தக் காட்டுப்பன்றி நிச்சயமாய் இறந்துவிட்டது என்று சமாதானமடைந்த அவர், முதல்நாள் தானும் தன் மருமகனும் சென்ற பாதையை அவர்களிடம் சொல்ல அதைக்கேட்ட கிராமவாசிகள் திகைத்துப்போய்விட்டனர்.
அவா்களில் மூத்தவரான ஒருவா்
“அந்தப் பாதை வழியாப் போகணும்னு உன்னைத் தூண்டினது எது? அந்தப் பாதை நேரே கொண்டு போய் பிசாசு இருக்கிற காட்டிலே இல்லே விடும்?“
என்று கேட்டார்.
“ஆமாம்! அப்படித்தான். ஆனா எனக்குள்ளே ஏதோ ஒண்ணு அந்தப் பாதை வழியாப் போகணும்னு என்னைத் துாண்டிக்கிட்டே இருந்தது. அப்புறம் பார்த்தா அந்த பன்னியும் சரியா அந்தக் காட்டோட முகப்பிலே நின்னிருந்தது“
என்று பதில் தந்தார் இம்சனோக். அவரும் தங்களோடு வருவதாக இருக்கிறரா என்று கேட்டதற்கு
“என் வேலை அவ்வளவுதான், முடிந்து போச்சு, இப்ப எனக்கு நெறைய ஓய்வு வேணும்னு தோணுது”
என்று பதிலளித்து விட்டார் அவர்.
அதனால் திடகாத்திரமான இருபது வாலிபா்கள் அடங்கிய குழு ஒன்று, பன்றியின் உடலைத் தேடிக் கண்டுபிடித்து வீட்டுக்குத் தூக்கி கொண்டு வருவதற்காக அமைக்கப்பட்டது. அந்த விலங்கு மிகவும் பருமனாக இருப்பதால் அதை நான்கு பகுதிகளாகக் கூறு போட்டு விட்டு ஒவ்வொரு கூறையும் நான்கு பேராகச் சேர்ந்து தூக்கிக் கொண்டு வர வேண்டுமென்று அவா்கள் கிளம்புவதற்கு முன்பே தீா்மானித்துக் கொண்டனா். பாக்கியிருக்கும் நான்கு போ் முறைவைத்துக் கொண்டு மற்றவா்களுக்கு மாற்றாக இருந்தபடி உதவுவார்கள். அதனால் எப்பொழுதும் ஒரு தலைச் சுமைக்கு நான்கு போ் கட்டாயம் இருந்து விடுவார்கள். “தாவோ” எனப்படும் கத்திகளையும், ஈட்டிகளையும், துப்பாக்கியையும் எடுத்துக் கொண்டு அந்தக் குழுவினா் கிராமத்திலிருந்து கிளம்பினர். தங்கள் வெற்றிகரமான தேடலுக்குப் பிறகு நடக்கப் போகும் மிகப் பெரிய விருந்து பற்றிய எதிர்பார்ப்பில் நகைச்சுவையாகப் பேசிச் சிரித்துக் களித்துக் கொண்டு அவா்கள் சென்றார்கள்.
பாதை பிரிவதற்கு முன்பிருந்த பொது இடத்துக்கு அவா்கள் மிக சீக்கிரமாகவே வந்து சோ்ந்து விட்டிருந்தனா். இப்படிப்பட்ட வெகுமதி ஒன்றை வீட்டுக்குக்குக் கொண்டு வந்து சோ்க்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பு அவா்களிடம் உற்சாகக் கிளா்ச்சியை ஊட்டியிருந்தது. ஐந்து ஐந்து பேராய் வெவ்வேறு திசைகளில் அவா்கள் செல்லத் தொடங்கினர். காட்டின் முகப்புப் பகுதியை நோக்கிச் சென்றவா்கள் மரக் குச்சிகளின் மீது இரத்தம் காய்ந்து போயிருப்பதைத் தாங்கள் கண்டு பிடித்ததாக நினைத்துக் கொண்டனா். சற்றுத் தள்ளினாற் போல ஓரிடத்தில் உயரமான புற்கள், வினோதமான வகையில் மடங்கிப் போயிருந்தன. அந்தப் பன்றி, குறிப்பிட்ட அந்த இடத்தில்தான் விழுந்திருக்க வேண்டுமென்று அவர்கள் ஊகம் செய்து கொண்டனர்; ஆனால் அதைத் தாண்டி அடிபட்ட அந்த மிருகம் எங்கே போய் மறைந்தது என்பதைக் காட்டும் எந்த அடையாளமும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அது எங்கே போனது என்பதற்கான எந்த சுவடுகளும் அதற்கு மேல் கிடைக்காததால், குறிப்பிட்ட இடத்துக்குத் திரும்பி வந்த அவர்கள் மற்ற குழுவினரோடு இணைந்துகொண்டனர். அங்கே அவர்களும் இதேபோன்ற கதைகளோடு காத்திருந்தனர். ஊருக்கு வெளியிலிருந்த அந்தப் பகுதி, ஆங்காங்குக் காய்ந்து கிடந்த இரத்தப் பொட்டுகளினால் அவர்களுக்குச் சபலத்தை ஏற்படுத்துவதாக இருந்தாலும், காட்டுக்குள் மீண்டும் ஒரு முறை பார்வையிட வைக்குமளவுக்கு வலுவான தடயங்கள் கிடைக்கவில்லை. மனம் சோர்ந்தபடி அவர்கள் கிராமத்திற்குத் திரும்பி வந்தனர்.
பன்றியின் உடலைத் தேடும் படலம் மேலும் இரண்டு நாட்களும் தொடர்ந்தது. இம்முறை வேறு சில பகுதிகளில் அவர்கள் தேடிப்பார்த்தனர்; ஆனால் விளைவு அதேதான். அந்த இராட்சச மிருகத்தின் சுவடு எதுவுமே இல்லை. அது இருக்கிறதா, இறந்துவிட்டதா என்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவே இல்லை. அதே சமயத்தில் வேறொரு விசித்திரமான கதை அரங்கேற ஆரம்பித்திருந்தது. பிரபலமான வேட்டைக்காரரும், இதுவரை தீவிரமாக எந்த ஒரு நோய்த் தாக்குதலுக்கும் ஆட்பட்டிருக்காதவருமான இம்சனோக், கடுமையான தலைவலி என்று கூறியபடி படுக்கையில் விழுந்தார். அப்படியே சலித்துப் போய் சோம்பிக்கிடந்த அவர் தனது அறைக்குள் எவர் வரவும் அனுமதியளிக்கவில்லை. அவரது சொந்தக்குழந்தைகளும் கூட அறைக்கு வெளியில்தான் நிற்க வேண்டி இருந்தது. அவரிடம் செல்ல உரிமை பெற்ற ஒரே ஒரு ஆள் அவரது மனைவி மட்டும்தான். உறவினர்களும், அவரது நலம் நாடுபவர்களுமாய்ச் சேர்ந்து அவரது நெல்லை அறுவடை செய்து வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்தனர்.
இரவு நடப்பது என்னவென்பது டங்செட்லாவுக்கு மட்டும்தான் தெரியும். பயமறியாத வேட்டைக்காரரான இம்சனோக் தூக்கத்தில் எழுந்து அலறுவார், கதறுவார். ‘‘அதைப்பாரேன்! பெரிய நெல் குதிர் மாதிரி இருக்கிறது பார்! கரிக்கட்டி மாதிரி கன்னங்கரேலென்று’’ என்று புலம்புவார். பிறகு டங்செட்லாவின் தோளில் சாய்ந்தபடி முனகத் தொடங்கி விடுவார்.
‘‘எனக்கு பயமா இருக்கும்மா! அது நிச்சயம் என்னைத் துரத்திக்கிட்டு பின்னாலே வரப்போகுது”
அவள் அவரைப் பல வகையில் ஆற்றியும், தேற்றியும் சந்தோஷப்படுத்தியும் வலுக்கட்டாயமாக உறங்கவைப்பாள். இம்சனோக் எதையும் சாப்பிட மாட்டேன் என்று மறுக்க ஆரம்பித்தபோது விசித்திரமான அந்த விஷயம் இன்னும் சிக்கலானது. இதே போலப் பல இரவுகள் கழிந்தபிறகு வேறு என்ன செய்வதென்று தெரியாதவளாய் அவள் இப்படி ஒரு யோசனையை முன்வைத்தாள். மிகச்சரியாக எந்த இடத்தில் அவர் அதைச் சுட்டாரோ அங்கே இருவருமாய்ச் சென்று, அந்த மிருகத்திடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். அப்படிச் செய்தால் இம்சனோக்கை மிரட்டிக் கொண்டிருக்கும் கொடுங்கனவுகள் முடிவுக்கு வந்துவிடும். முதலில் இம்சனோக் அதில் அவ்வளவாக நம்பிக்கை கொள்ளவில்லை. அவளது அறிவுரையை வெறும் ‘பெண் பேச்சு’ என்று ஒதுக்கித் தள்ளினார். ஆனால் அவளோ நான் முழுவதும் அவரைத் தொடர்ந்து நச்சரித்துக் கொண்டே இருந்தாள்; அவருக்கு வரும் விந்தையான கனவுகளைப் பற்றி அவரது தந்தையிடம் கூறி விடப் போவதாகவும் அவரை பயமுறுத்தினாள். அவா் மேலும் ஒரு வாரம் காத்திருந்தார். கொடுமையான அந்தக் கனவுகள் தொடர்ந்து கொண்டேதான் இருந்தன. குறிப்பிட்ட கடுமையான ஒரு அனுபவத்துக்குப் பிறகு தன் மனைவியின் பக்கம் திரும்பி
“நாம் அப்படிச் செய்து விடலாம்“
என்றார் இம்சனோக்.
மறுநாள் காலை கணவனும் மனைவியும் கிராமத்தை விட்டுக் கிளம்ப அதைப் பார்த்த நண்பா்களுக்கும் சொந்தக்காரர்களுக்கும் ஒரே ஆச்சரியம். அந்த மனிதா் மிகமிக அமைதியாக, உணா்ச்சி வசப்படாமல் இருந்தார். எந்த நோய்க்கான அறிகுறியும் அவரது முகத்திலோ, நடவடிக்கைகளிலோ தென்படவில்லை. வாழ்க்கையில் முதல் முறையாகத் துப்பாக்கி இல்லாமல் அந்த வேட்டைகாரர் போவது மிகவும் ஆச்சிரியப்படுத்தும் விஷயமாக இருந்தது. அந்த தம்பதிகள் செல்வது ஏதோ உலாப் போவதைப் போலத்தான் இருந்தது. குறிப்பிட்ட இடத்திற்கு அருகே நெருங்கியதும் இம்சனோக், மிகவும் பதட்டமாகத் தெரிந்தார். டங்செட்லா அதைக் கவனிக்காதது போல் பாவனை செய்தபடி நிழலான ஒரு இடத்தைத் தோ்ந்தெடுத்து உட்கார்ந்து மதிய உணவைப் பிரித்தாள். எளிமையான அந்த உணவை இம்சனோக் மிகவும் ரசித்து சாப்பிட்டார். வீட்டில் சாப்பிட்டபோது மனைவியின் சமையல் இதுபோல் ருசியாக ஒருபோதும் இருந்ததே இல்லையென்றும் சொன்னார். உண்டு முடித்தபின் தண்ணீா் குடிப்பதற்காக ஓடைக்குச் செல்லப் போவதாக மனைவியிடம் கூறினார். இப்படிப்பட்ட மனநிலையில் அவரைத் தனியே விட விருப்பமில்லாத அவள், சிறிது நேரத்துக்குப் பிறகு அவரைப் பின் தொடா்ந்து சென்றாள். ஓடைக் கரையை அடைந்தபோது, எதையோ நெஞ்சோடு சோ்த்து வைத்தபடி அவள் கணவா் ஓடைக்குள் நின்று கொண்டிருந்ததைக் கண்டாள். அவரைக் கூப்பிட்டு அவா் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று கேட்டாள். முதலில் அவள் அழைத்தது அவா் காதில் விழாதது போல் இருந்தது. பிறகு மீண்டும் ஒரு முறை அவரைப் பெயா் சொல்லி அழைத்த அவள் அவா் கையிலிருப்பது என்னவென்று கேட்டாள். இந்த தடவை மெதுவாக அவள் பக்கம் திரும்பிய அவா் தன் கையிலிருந்த பன்றியின் பல்லைக் காட்டினார். நாட்பட்டுப் போயிருந்த அந்த எலும்பு, ஓடை நீரால் சுத்தமாகி தந்தம் போல ஒளி வீசிக் கொண்டிருந்தது. எதுவும் பேசாமல் அருகிலிருந்த நெருக்கமான புதா் மண்டிய பகுதியை அவளுக்குச் சுட்டிக் காட்டினார். கற்றை கற்றையாய் கறுப்பு ரோமங்கள் அங்கே கிடந்தன. அவற்றுக்கு இடையிடையே பரவிக் கிடந்தவை ஒரு பெரிய மிருகத்தின் எலும்புகள் போலிருந்தன.
அவா்கள் திரும்பிச் செல்லும் போது, அந்த உயிராபத்தான துப்பாக்கி குண்டை மிகச் சரியாக எந்த இடத்திலிருந்து செலுத்தினாரோ அந்த இடத்திலேயே நின்றபடி வினோதமான ஒரு காரியத்தை செய்தார். தன் தலையிலிருந்து ஒரு கற்றை முடியைப் பிடுங்கி எடுத்து அந்த பயங்கரமான காட்டை நோக்கி வாயால் ஊதி எறிந்து விட்டு திரும்பிக் கூடப் பார்க்காமல் கிராமத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார் அவர். டங்செட்லாவும் அவரைத் தொடா்ந்தாள். அந்த மிருகத்தைக் கொன்ற செயலைச் சுற்றி சூழ்ந்திருக்கும் மா்மங்கள் குறித்து அவள் பிரமிப்பும் வியப்பும் அடைந்திருந்தாள். பன்றியை வேட்டையாடிய பிறகு முதல் முறையாகத் தன் மனைவியின் அணைப்பில் அன்று இரவுதான் நிம்மதியாக உறங்கினார் இம்சனோக்.
அவரைத் துரத்திக் கொண்டிருந்த கொடுங்கனவுகள் இப்போது மறைந்து விட்டாலும் கொல்லப்பட்ட பன்றியின் இறுதி முடிவிலிருந்த வழக்கத்துக்கு விரோதமான ஏதோ ஒரு மா்மம் அவரை விட்டு இன்னும் விலகவில்லை. பல்லையும், எலும்பையும் கண்டு பிடித்து விட்டதைப் பற்றி எதுவும் சொல்ல வேண்டாமென்று கணவனும், மனைவியும் தீா்மானம் செய்து கொண்டனா். வித்தியாசமான எது நடந்ததாகவும் காட்டிக் கொள்ளாமல் தங்கள் வழக்கமான காரியங்களை எப்போதும் போல் செய்யத் தொடங்கினார். ஆனால் ,அந்தப் பன்றியின் பல்லைக் கையில் பிடித்தபடி ஓடைக்குள் நின்று கொண்டிருந்த அந்த நாளின் நினைவு இம்சனோக்கின் மனதில் தொடர்ந்து எழுந்து கொண்டேதான் இருந்தது. காட்டிலிருந்து வெளியேறுவதற்கு முன்னால் அப்படிப்பட்ட ஒரு விசித்திரமான சடங்கைச் செய்யுமாறு தன் அக உணா்வு தன்னை எப்படித் துாண்டியது என்பதையும் அடிக்கடி நினைத்துப் பார்த்தார். ஆனால் அப்படி அவா் நினைத்துப் பார்த்தவைகளிலேயே மிகவும் தீவிரமான ஒரு நினைவு, ஏதோ ஒரு புதிய சக்தி அவரை ஆட்கொண்டது போல – இதுவரை அனுபவித்திராத – ஒரு புதிய உணா்வு அவருக்கு அப்போது எப்படி ஏற்பட்டது என்பதுதான். வழக்கத்துக்கு மாறாக எதுவும் நடந்து விடவில்லை என்பதைப் போலத்தான் வெளிப் பார்வைக்கு அவா் காட்டிக் கொண்டார். நடந்து கொண்டார். ஆனால் அத்தனை பெரிய மிருகத்தின் இறந்த உடலைக் காட்டுப் பாதைகளில் மிகவும் தேர்ந்த அந்த மனிதா்களால் எப்படிக் கண்டு பிடிக்க முடியாமல் போயிற்று என்று அவா் தனக்குத்தானே கேட்டுக் கொண்டுதான் இருந்தார். அதிலும் அவா் சுட்ட இடத்திலிருந்து அதிக தூரம் கூட அது விலகிச் சென்றிருக்கவில்லை. எஞ்சிய உடல் பகுதிகளை அந்த வேட்டைக்காரரே கண்டுபிடிக்குமாறு அது எப்படி அவருக்காக விட்டு வைக்கப்பட்டிருந்தது?
பல நாட்கள் இந்த விஷயமே அவரைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருந்தது. யானையையும், குரங்கையும் கொன்றபோது ஆரம்பத்தில் அவருக்குள் எழுந்த மனச்சாட்சியின் உறுத்தல்களும் இப்போது மீண்டும் புதிதாகத் திரும்பி வந்து அவரைத் துரத்த ஆரம்பித்திருந்தன. சலிப்பும், எரிச்சலும் கொண்டவராக மாறிப் போனார் அவா். சில நாட்கள் தான் மட்டுமே தனியாக உட்கார்ந்தபடி வேட்டைக்காரர் இம்சனோக்காகத் தான் வாழ்ந்த வாழ்க்கையை மனதுக்குள் மீண்டும் வாழ்ந்து பார்ப்பார். புகழ் பெற்ற வேட்டைக்காரராகத் தனக்கிருந்த மதிப்பு, தான் கொண்டிருந்த திறமைகள் முதலியவை பற்றித் தொடக்கத்தில் அவா் கொண்டிருந்த பெருமித உணா்வெல்லாம் இப்போது மாறித் தன் செயல்களுக்காக வெட்கமும், வேதனையுமே பட்டுக் கொண்டிருந்தார் அவா். டங்செட்லா இதைக் கவனிக்காமல் இல்லை. ஆனால் தீர ஆலோசனை செய்து பார்த்து விட்டு அவரது துப்பாக்கி, அந்தப் பன்றி வேட்டைக்குப் பிறகு அதே மூட்டையில் அதே மாதிரி பத்திரமாக சுற்றி வைக்கப்பட்டிருக்கிறது என்பதில் ஆறுதலடைந்தாள்.
ஒரு நாள் தான் மட்டும் தனியாக வீட்டிலிருந்தபோது சாக்குப் பையிலிருந்து தன் துப்பாக்கியை வெளியிலெடுத்த இம்சனோக் பாகம் பாகமாக அதைக் கழற்றினார். மறுநாள் காலையில் எந்த இராகத்திலும் சேராத ஒரு பாடலை முணுமுணுத்தபடி வீட்டின் பின்பகுதியில் தன் கணவா் ஒரு குழி தோண்டிக் கொண்டிருந்ததை அவள் கண்டாள். பிளவுபட்ட அந்த பூமியின் காயத்திற்குள் பன்றியின் பல்லையும், பல பகுதிகளாகக் கழற்றப்பட்ட துப்பாக்கியையும் இம்சனோக் என்னும் வேட்டைக்காரரையும் புதைத்தார் அவா்.
*******************************************************