துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

1.9.21

விதியை நம்புபவன்,ஐஸக் பேஷவிஸ் சிங்கர்,மொழிபெயர்ப்புச் சிறுகதை

 கனலி அமெரிக்க சிறப்பிதழில் வெளியாகியிருக்கும் என் மொழிபெயர்ப்புச் சிறுகதை

விதியை நம்புபவன்,

மூலம்; ஐஸக் பேஷவிஸ் சிங்கர்*:  (யூத அமெரிக்கர்; நோபல் பரிசு பெற்றவர், யித்திஷ் மொழியில் இவர் எழுதிய The Fatalist என்ற சிறுகதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருப்பவர், ஜோசஃப் சிங்கர் 

தமிழில்; எம் ஏ சுசீலா


                                                      ஐஸக் பேஷவிஸ் சிங்கர்

                 சிற்றூர்களில் ’தொப்புள்’காரன் ஹேய்ம், ’கேக்’ புகழ் யெகெல் , ’வம்பு’க்கார சாரா, ’வாத்து’ப் பையன் கிட்டெல் என்று இவை போலச் சூட்டப்படும் செல்லப்பெயர்கள் நமக்குப் பழக்கமானவை, மிகவும் பரிச்சயமானவை. ஆனால் என் இளம் வயதில் போலந்தில் உள்ள ஒரு சிற்றூருக்கு ஆசிரியராக வந்தபோது ’விதியை நம்பும்’ பெஞ்சமின் என்று ஒரு ஆளைப் பற்றிக் கேள்விப்பட்டேன். உடனே எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. இப்படி ஒரு சின்ன ஊரில் போய் ’விதியை நம்புபவன்’ என்ற சொல்லை எப்படி இவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்? அப்படிப்பட்ட ஒரு பட்டப்பெயர் கிடைக்கும் வகையில் இவன் என்னதான் செய்தான்? நான் ஹீப்ரூ மொழி கற்பித்து வந்த இளம் சீயோன் அமைப்பின் செயலாளர் என்னிடம் அந்த விஷயத்தைச் சொன்னார்.

’குறிப்பிட்ட அந்த மனிதன் இந்தப்பகுதியைச் சேர்ந்தவனில்லை. கூர்லாந்தின் ஏதோ ஒரு இடத்திலிருந்து வந்தவன் அவன். 1916 இல் இந்தச் சிற்றூருக்கு வந்த அவன், தான் ஜெர்மன் மொழி கற்றுத் தரப்போவதாக ஆங்காங்கே அறிவிப்புக்களை ஒட்டி வைத்தான். அது ஆஸ்திரிய ஆக்கிரமிப்புக் காலம் என்பதால் எல்லோருமே ஜெர்மன் மொழியைக் கற்க விரும்பினர். கூர்லாந்தில் ஜெர்மன்மொழிதான் பேசப்பட்டு வந்தது. அதனால் அந்த மொழியை பெஞ்சமின் ஷ்வார்ட்ஸ் அறிந்திருந்தான். அவனது உண்மைப்பெயர் அதுதான். அவன் கற்பித்த வகுப்புக்களில் இரு பால் மாணவர்களும் அதிகமாகச் சேர்ந்து பயின்றனர்’

இவ்வாறு சொல்லிக்கொண்டே போன செயலாளர் சட்டென்று ஜன்னலைச் சுட்டிக்காட்டி ’இதோ அவனே போகிறான் பார்’ என்றார்.

நான் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தபோது குள்ளமாய்க் கறுப்பாய்த் தொந்தி தொப்பையோடு - அப்போது காலாவதியாகிப் போயிருந்த முறுக்கு மீசை வைத்திருந்த மனிதன் ஒருவன் நடந்து போய்க்கொண்டிருந்தான் அவனிடம் ஒரு கைப்பெட்டி இருந்தது. ஆஸ்திரியர்களின் ஆதிக்கம் முடிவுக்கு வந்த பின்பு ஜெர்மன் மொழி படிக்கும் ஆர்வம் அங்கே எவருக்கும் இல்லை, அதனால் போலந்துக்காரர்கள்,  பெஞ்சமின் ஷ்வார்ட்ஸுக்கு ஆவணக் காப்பகத்தில் ஒரு வேலை ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார்கள் எவருக்காவது பிறப்புச் சான்றிதழ் தேவைப்பட்டால் அவனைத்தான் நாடி வருவார்கள். அவனது கையெழுத்து வித்தியாசமான கவர்ச்சியோடு இருந்தது. போலிஷ் மொழியையும் அவன் கற்றுக்கொண்டிருந்தான். எல்லோருக்கும் அதிகார பூர்வமில்லாத ஒரு வக்கீலைப்போலவே அவன் ஆகிப்போயிருந்தான்.

 

செயலாளர் பேச்சைத் தொடர்ந்தார்.

 

‘ஏதோ சொர்க்கத்திலிருந்து நேரடியாக வந்து இறங்கியவனைப்போலத்தான் இங்கே அவன் வந்தான். அப்போது தன் ’இருபது’களில் இருந்த அவனுக்குத் திருமணமாகியிருக்கவில்லை, படித்த மனிதன் எவனாவது எங்கள் ஊருக்கு வந்தால் அதைக் காரணமாக வைத்து இளைஞர்களுக்கென்று  இருந்த ஒரு சங்கத்தில் அதைக்  கொண்டாடுவது எங்கள் வழக்கம். அந்தச் சங்கத்துக்கு அவனை அழைத்திருந்தோம்; அவனைப் பெருமைப்படுத்தும் வகையில்  ஒரு ’பாக்ஸ் - மாலை’க்கும் ஏற்பாடு செய்திருந்தோம். அங்கே வைக்கப்பட்டிருந்த பெட்டியில் கேள்விகள் போடப்படும்; அவற்றை வெளியிலெடுத்து அவன் பதில் தர வேண்டும்.

 

கடவுளால்  வகுக்கப்பட்டிருக்கும் ஊழ்வினைக்கோட்பாட்டில் அவனுக்கு நம்பிக்கை உண்டா என்று ஒரு பெண் கேட்டாள். அதற்கு ஒரு சில சொற்களில் பதில் தராமல் அவன் ஒரு மணி நேரம் அதைப் பற்றிப் பேசினான். அற்ப விஷயங்கள் உட்பட எல்லாமே முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்டிருப்பவைதான் என்றான் அவன். இரவுச்சாப்பாட்டில் ஒருவன் வெங்காயம் சாப்பிடுகிறானென்றால் அதற்குக் காரணம் அப்போது வெங்காயம்  சாப்பிட வேண்டுமென்று அவனுக்கு விதிக்கப்பட்டிருப்பதுதான்; எத்தனையோ கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அது அவ்வாறு விதிக்கப்பட்டு விட்டது. சாலையில் போகும்போது ஒரு கூழாங்கல் தடுக்கி நீங்கள் விழ நேர்ந்தால் நீங்கள் அப்படி விழுந்தாக வேண்டுமென்பது விதிக்கப்பட்டிருக்கிறது. ’விதியை நம்புபவன்’ என்று அவன் தன்னைப்பற்றிச் சொல்லிக்கொண்டான். எங்கள் ஊருக்கு அவன் வர நேர்ந்தது தற்செயல் போலத் தோன்றினாலும் அவன் இங்கே அவ்வாறு வந்தாக வேண்டுமென்பது முன்பே முடிவு செய்யப்பட்டு விட்டது என்றான்.

வெகுநேரம் நீளமாகப் பேசிக்கொண்டே இருந்தான் அவன். அதை ஒட்டி விவாதங்களும் தொடர்ந்தன.

‘’அப்படியென்றால் வாய்ப்பு என்ற ஒன்றே இல்லையா என்ன?’’ என்று யாரோ கேட்டார்கள்.

‘’இல்லை…! வாய்ப்பு என்ற ஒன்று இல்லவே இல்லை’’என்று பதிலளித்தான் அவன்.

‘’அப்படியென்றால் படிப்பதற்கு,வேலை செய்வதற்கு இதற்கெல்லாம் என்ன அர்த்தம்? வணிகம்..தொழில் என்று இவற்றையெல்லாம் ஏன் கற்றுக்கொள்ள வேண்டும்… பிள்ளைகளை ஏன் வளர்க்க வேண்டும்? அது இருக்கட்டும்..! அப்புறம் சீயோனிசத்தின் வளர்ச்சிக்கெல்லாம் ஏன் பாடுபட வேண்டும்..யூதர்களின் சொந்த நாட்டுக்காக ஏன் போராட வேண்டும்”

 

‘’விதியின் புத்தகங்களில் எவ்வாறு எழுதப்பட்டிருக்கிறதோ அவ்வாறுதான் நடக்கும்’’ என்று அவன் பதிலளித்தான்.

 

‘’ஒரு கடை நடத்த ஆரம்பித்து ஒருவன் திவாலாக வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தால் அதை அவன் அனுபவித்துத்தான் ஆக வேண்டும்’’

 

’மனித முயற்சிகள் எல்லாம் விதிவழிப்பட்டவை மட்டுமே ; சுயமாக அமையும் வாய்ப்பு என்பது ஒரு பிரமை மட்டும்தான் என்றான் அவன். இரவு முழுவதும் அந்த விவாதம் தொடர்ந்து நடந்தது. அப்போது முதல் அவன் ’விதியை நம்புபவன்’ என்று என்று எல்லோராலும் அழைக்கப்பட ஆரம்பித்தான். அந்தச் சிற்றூரின் பேச்சு வழக்கிலும் ’விதியை நம்புபவன்’ என்னும் வார்த்தை புதிதாகச்சேர்ந்து கொண்டது. வீட்டைக் காவல்காக்கும் பாவப்பட்ட சேவகனிலிருந்து தொடங்கி, மிகப்பெரிய யூதக்கோயிலின் காவலர் வரை ’விதியை நம்புபவன்’ என்று என்ற அந்தச் சொல்லை எல்லோருமே அறிந்து வைத்திருந்தார்கள்.

அன்றைய அந்த மாலைக்குப்பிறகு இப்படிப்பட்ட விவாதங்களில் களைத்துப்போனவர்களாய்த் தங்கள் கண் எதிரே இருக்கும் நிகழ்காலப் பிரச்சினைகளை நோக்கி மக்கள் திரும்பிச்சென்று விடுவார்கள் என்றே நாங்கள் நினைத்தோம். தர்க்கபூர்வமான விவாதங்களால் இதைத் தீர்மானித்து விட முடியாது என்று பெஞ்சமினும் கூடச் சொன்னான். நம்புகிறோமோ இல்லையோ.. இளைஞர்களான எங்கள் எல்லாரது உள்ளங்களையும் இந்தக்கேள்வி மட்டுமே ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. பாலஸ்தீனத்துக்கான சான்றிதழ்கள் குறித்தோ கல்வியைப் பற்றியோ பேச எண்ணி நாங்கள் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்வோம். ஆனால் விவாதம் அவற்றைச்சார்ந்ததாக மட்டுமே இல்லாமல் விதிக்கோட்பாட்டை நோக்கிப்போய் விடும்.

 

அப்போது எங்கள் நூலகத்தில் லெர்மெண்டோவ் எழுதிய  நம் காலத்தின்கதாநாயகன் என்ற புத்தகம் ஒன்று இருந்தது. யித்திஷ்மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருந்த அந்த நூல்,பெட்கோரின் என்ற 

பெயர் கொண்ட விதியை நம்பும் ஒருவனைப்பற்றி விவரித்திருந்தது. எல்லோருமே 

அந்த நாவலைப் படித்தோம்; அவரவர் அதிருஷ்டம் எப்படி இருக்கிறதென்றுசோதித்துப் பார்க்கவும் ஒரு சிலர் ஆசைப்பட்டோம். ரஷ்ய ரூலெட்* குறித்து நாங்கள் முன்பே அறிந்திருந்தாலும் ஒரு துப்பாக்கி மட்டும் இருந்திருந்தால் எங்களில் ஒரு சிலர் அதை முயற்சி செய்து சோதித்துக்கூடப் பார்த்திருக்கலாம். ஆனால் எங்கள் ஒருவரிடமும் அது இல்லை.

 

சரி..இப்போது இந்த விஷயத்தைக் கொஞ்சம் கேட்டுக்கொள். 

எங்களோடு ஹெய்லி மின்ஸ் என்று ஒரு பெண்ணும் இருந்தாள். அவள்அழகானவள்,சுறுசுறுப்பு மிக்கவள்.  இயக்கத்தில் தீவிரமாகப்பங்காற்றிய அவள் ஒரு பணக்கார வீட்டுப்பெண். அவளது தந்தை உலர் பொருட்கள் விற்பனை செய்யும் மிகப்பெரிய அங்காடி ஒன்றை நகரத்தில் நடத்தி வந்தார். 

இளைஞர்கள் எல்லோருக்குமே அவள் மீது ஒரு கண் இருந்தது. ஆனால்ஹெய்லி தனக்கென்று தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள்  கொண்டிருப்பவள். ஒவ்வொருவரிடமும் தாவது ஒரு குற்றத்தைக் கண்டுபிடித்து விடுவாள் அவள்.  ஸ்க்லாக்ஃபெர்டிக் என்று ஜெர்மன் மொழியில் குறிப்பிடுவது போல அவளுக்கு நாத்துடுக்கு கொஞ்சம்  அதிகம். நீங்கள் ஏதாவது சொன்னால் போதும், உடனே அவள் அதற்கு நேரெதிராக வரிந்து கட்டிக்கொண்டு வெடுக்கென்று பதிலளிக்க ஆரம்பித்து விடுவாள். எவரையாவது கேலி செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்டால் புத்திசாலித்தனத்தோடு நகைச்சுவை  கலந்து அவர்களைக் கிண்டலடித்து விடுவாள். இந்த ஊருக்கு வந்து சேர்ந்துமே ’விதியை நம்புபவன்’ அவள் மீது காதல் கொண்டு விட்டான். அது பற்றி அவனுக்கு எந்தக் கூச்சமும் இல்லை.

 

ஒரு நாள் நேரடியாகவே அவளிடம் வந்தவன்,

‘’ஹெய்லி, நீ என்னைத் திருமணம் செய்து கொண்டாக வேண்டும் என்பது விதிக்கப்பட்டிருக்கும் ஒன்று. அது எப்படியோ கட்டாயம் நடந்துதான் தீரப்போகிறது,  அதற்கு ஏன் காலம் தாழ்த்திக்கொண்டிருக்க வேண்டும்’’ என்றான்.

 

எல்லோரும் கேட்குமாறு இதை சத்தமாகவே சொன்னான்; அதனால் அது ஒரு சலசலப்பை உண்டாக்கியது.

 

‘’நீ ஒரு முட்டாள் என்றும், அதோடு கூடவே அதிகம் கொழுப்பெடுத்தவன் என்றும் உன்னிடம் சொல்ல வேண்டுமென்று எனக்கு விதிக்கப்பட்டிருக்கிறது, அதனாலேயே நான் இதைச் சொல்கிறேன். அதற்காக நீ என்னை மன்னித்தாக வேண்டும். கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இறை நூல்களில் இது முடிவு செய்யப்பட்டு விட்டது’’ என்று பதிலளித்தாள் ஹெய்லி.

 

சீக்கிரத்திலேயே ஹ்ரூபீஸோவைச்சேர்ந்த இளைஞனும், அங்குள்ள பவுல் சீயோன் அமைப்பின் தலவனுமான ஒரு இளைஞனோடு ஹெய்லியின் திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டது. மணமகனின் சகோதரிக்கு ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டிருந்த திருமணம் முதலில் நிகழ வேண்டுமென்பதால் இந்தத் திருமணம் ஓராண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்து. பையன்களெல்லாம் ’விதியை நம்புப’வனைக் கிண்டல் செய்ய அவனோ ‘’ஹெய்லி எனக்குரியவள் என்பது விதிக்கப்பட்டிருந்தால்  கட்டாயம் அவள் எனக்குத்தான் சொந்தமாவாள்’’ என்று பதில் தந்தான்.

‘’நான் ஓஸெர் ருபின்ஸ்டினுக்கு உரியவள், உனக்குரியவள் அல்ல,விதியின் விருப்பம் அதுதான்’’ என்று பதிலடி கொடுத்தாள் ஹெய்லி.

ஒரு குளிர்கால மாலைப் பொழுதில் மீண்டும் விதி குறித்த விவாதம் வெடித்தபோது

‘’ஐயா…ஷ்வார்ட்ஸ்…! விதியை நம்புபவரே..நீங்கள் சொல்வதில் உண்மையிலேயே உங்களுக்கு நம்பிக்கை இருந்தால்- உங்களிடம் துப்பாக்கி இருந்து ரஷ்ய ரூலெட்டை விளையாடக்கூட  நீங்கள் தயார் என்றால் நான் உங்களுக்காக இன்னும் கூட ஆபத்தான வேறொரு விளையாட்டை ஆயத்தமாக வைத்திருக்கிறேன்’’

என்று அவனிடம் சொன்னாள் ஹெய்லி.

’அந்தக்கால கட்டத்தில் நமது ஊர் வரை ரயில்பாதை போடப்பட்டிருக்கவில்லை. அது இங்கிருந்து இரண்டு மைல் தள்ளித்தான் இருந்து, அதிலும் அந்த இடத்தில் எந்த ரயிலும் நிற்காது. வார்ஸாவிலிருந்து லாவ் வரை செல்லும் ரயில்தான் அந்தப் பாதையில் போய்க்கொண்டிருந்தது.

’’புகைவண்டி அந்தப்பகுதியைக்கடந்து செல்வதற்குச் சற்று முன்பு நீ தண்டவாளத்தின் மீது படுத்துக்கொண்டு விட வேண்டும். உயிர் வாழ வேண்டும் என்பது உன் விதியானால் நீ பிழைத்துக்கொள்வாய்., அதில் பயப்பட எதுவுமில்லை. ஆனால் ஒருக்கால் உனக்கு விதியின் மீது நம்பிக்கை இல்லையென்றால்…’’

என்று இப்படி ஒரு திட்டத்தை விதியை நம்புபவனிடம் வைத்தாள் ஹெய்லி.

நாங்களெல்லாம் விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தோம். ஏதாவது ஒரு காரணத்தை முன்வைத்து இதிலிருந்து அவன் பின்வாங்கி விடக்கூடும் என்றே நாங்கள் உறுதியாக நினைத்தோம். தண்டவாளத்தின் மீது படுத்தால் மரணம் நிச்சயம்.

ஆனால் விதியை நம்பும் அவனோ இப்படிச் சொன்னான்.

‘’இதுவும் கூட ரஷ்ய ரூலெட் போல ஒரு விளையாட்டுத்தான். விளையாட்டு என்று வந்து விட்டால் சக போட்டியாளரும் கூடக் கட்டாயம் ஏதேனும் ஒன்றைப் பணயம் வைத்தே ஆக வேண்டும்.’’ என்றவன் மேலும் தொடர்ந்தான்.

‘’நான் தண்டவாளத்தின் மீது படுத்துக்கொள்ள சம்மதிக்கிறேன், ஆனால் நான் உயிர் பிழைத்து விட்டால் ஓஸெர் ருபின்ஸ்டனுடனான திருமண ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டு என்னைத் திருமணம் செய்து கொள்வதாக நீயும் எனக்குப் புனிதமான ஒரு சத்தியத்தைச் செய்து தர வேண்டும்’’

நாங்கள் கூடியிருந்த இடத்தில் மயான அமைதி நிலவியது. வெளிறிப்போயிருந்த ஹெய்லி

‘’நல்லது,அப்படியே செய்யலாம். உன் நிபந்தனைகளை நான் ஏற்றுக்கொள்கிறேன்’’ என்றாள் அவள்.

‘’எங்கே எனக்கு சத்தியம் செய்து கொடு’’ என்றான் அவன்.

அவன் கைகளைப் பற்றிக்கொண்டு வாக்களித்த ஹெய்லி

’’எனக்குத் தாய் இல்லை,அவள் காலராவில் இறந்து விட்டாள். அவளது ஆத்மாவின் மீது சத்தியம் செய்து தருகிறேன். நீ உன் வாக்கைக் காப்பாற்றினால் நானும் அவ்வாறே செய்வேன். நான் அப்படிச் செய்யத் தவறினால் என் மதிப்பு குன்றிப்போகட்டும், என் கௌரவம் கறை படிந்ததாகட்டும்’’

எங்கள் எல்லோரையும் பார்த்தபடி அவள் மேலும் தொடர்ந்தாள்.

‘’நீங்கள் எல்லோரும் இதற்கு சாட்சி. நான் சொன்ன சொல் தவறினால் நீங்கள் என் மீது காறி உமிழலாம்’’

’சரி..மீதத்தை நான் சுருக்கமாகச்சொல்லி முடித்து விடுகிறேன்’ என்று என்னிடம் பேச்சைத் தொடர்ந்தார் செயலாளர்.

’எல்லாமே அன்று மாலை முடிவு செய்யப்பட்டு விட்டது. மதியம் இரண்டு மணி அளவில் ரயில் எங்கள் ஊரை ஒட்டிச்செல்லும்.  நாங்கள் எல்லோரும் தண்டவாளத்தின் அருகே ஒன்றரைமணிக்குக்  கூடி விட வேண்டுமென முடிவு செய்தோம், உண்மையிலேயே அவன் விதியை நம்புகிறவன்தானா அல்லது வீண் ஜம்பம் அடிக்கிறானா என்பது அப்போது வெளிப்பட்டு விடும். பெரியவர்களுக்குத் தெரிந்தால் மிகவும் பதட்டத்துக்கு ஆளாகி விடுவார்கள் என்பதால், இந்த விஷயத்தை எங்களுக்குள் மட்டுமே ரகசியமாக வைத்துக்கொள்ள முடிவு செய்தோம்.

அன்று இரவு முழுவதும் நான் விழி மூடித் தூங்கவே இல்லை; நான் அறிந்த வரை எவருமே தூங்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். கடைசி நிமித்தில் அவன் மனம் மாறிப்போய் எடுத்த முடிவில் பின்வாங்கி விடுவான் என்றே நாங்கள் உறுதியாக நினைத்துக் கொண்டிருந்தோம்.

ரயில் கண் பார்வையில் பட்டவுடனோ அல்லது தண்டவாளம் அதிரத் தொடங்கியதுமோ உடனே நாங்கள் எல்லோரும் சேர்ந்து அந்த விதியை நம்புபவனை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அகற்றி விட வேண்டுமென்றும் கூட ஒரு சிலர் யோசனை தெரிவித்தார்கள். ஆனால் இப்படிப்பட்ட எல்லா விஷயங்களுமே திகிலூட்டக்கூடிய அளவுக்கு அபாயகரமாக இருந்தன. இப்போது இந்த நிமிடம் இதைப்பற்றிப்பேசும்போது கூட என் உடலுக்குள் ஒரு நடுக்கம் பரவுவதை உணர முடிகிறது.

மறுநாள் நாங்கள் சீக்கிரமே எழுந்து கொண்டோம். சிற்றுண்டியைத் தொண்டைக்குள் விழுங்கக்கூட முடியாதபடி நான் பயந்து போயிருந்தேன். லெர்மாண்டோவின் புத்தகத்தை நாங்கள் படிக்காமல் இருந்திருந்தால் இவ்வளவும் நடந்திருக்காது.

எங்கள் கூட்டத்தைச் சேர்ந்த எல்லோரும் அந்த இடத்துக்குப் போகவில்லை, ஹெய்லி மிண்ட்ஸ் உட்பட ஆறு பையன்களும் நான்கு பெண்களும் மட்டும்தான். வெளியே உறைய வைக்கும் குளிர். ’விதியை நம்புபவன்’ ஒரு மெல்லிய ஜாக்கெட்டும் தொப்பியும் அணிந்திருந்து எனக்கு நினைவிருக்கிறது.

ஊர்ப்புறத்தில் இருக்கும் ஸமோச்க் சாலையில் நாங்கள் சந்தித்தோம்.

‘’ஷ்வார்ட்ஸ், நேற்று இரவு எப்படித் தூங்கினாய்’’

என்று அவனிடம் கேட்டேன்.

‘’எல்லா இரவுகளையும் போலத்தான்’’

அவன் மனதில் என்ன எண்ணம் ஓடுகிறது என்பதை உள்ளபடி தெரிந்து கொள்ள எவராலும் முடியவில்லை. ஆனால் அப்போதுதான் டைஃபாய்ட் காய்ச்சலிலிருந்து குணமானவள் போல ஹெய்லி வெளுத்துப் போயிருந்தாள்.

‘’நீ ஒரு மனிதனை அவனது மரணத்தை நோக்கி அனுப்பிக்கொண்டிருக்கிறாய் என்பது உனக்குத் தெரிந்திருக்கிறதா’’என்று அவளிடம் கேட்டேன்.

‘’நான் ஒன்றும் அனுப்பவில்லை. மனத்தை மாற்றிக்கொள்ள அவனுக்கு நிறைய நேரம் இருக்கிறது’’என்றாள் அவள்.

’வாழும் வரை அந்த நாளை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. எங்கள் எவராலுமே மறக்க முடியாது. நாங்கள் நடந்து சென்றபோது முழு நேரமும் எங்கள் மீது பனி பொழிந்து கொண்டே இருந்து.  தண்டவாளத்தின் அருகே நாங்கள் நெருங்கி விட்டோம். பனிப்பொழிவு காரணமாக ரயில் ஓடாமல் இருக்கலாமோ என்று நான் நினைத்தேன், ஆனால் யாரோ வேண்டுமென்றே அதை அப்புறப்படுத்தியிருந்தார்கள். ஒரு மணி நேரம் முன்பாகவே நாங்கள் அந்த இடத்துக்கு வந்து விட்டோம்; நான் செலவழித்த நேரங்களிலேயே எனக்கு மிக நீண்டதாகத் தோன்றியது அந்த ஒரு மணி நேரம்தான்.

 

‘ரயில் வந்து சேரக் குறிக்கப்பட்டிருந்த நேரத்துக்குப் பதினைந்து நிமிடம் முன்பு ஹெய்லி இவ்வாறு சொன்னாள்,

‘’ஷ்வார்ட்ஸ் , நான் எல்லாவற்றைப் பற்றியும் யோசித்துப்பார்த்து விட்டேன். எனக்காக நீ உயிர் விடுவதில் எனக்கு விருப்பமில்லை. தயவு செய்து எனக்கொரு உதவி செய், இந்த விஷயம் முழுவதையும் அப்படியே மறந்து விடு’’

 

அவன் அவளைப்பார்த்து இப்படிக்கேட்டான்

 

‘’ஓ அப்படியென்றால் நீ உன் மனதை மாற்றிக்கொண்டு விட்டாயா? ஏதாவது செய்து அந்த ஹ்ரூபீஸோக்காரனை  உன்னுடையவனாக்கிக் கொள்ள வேண்டுமென்று விரும்புகிறாய்....ஹ்ம்..அப்படித்தானே’’

 

‘’இல்லை, அந்த ஊர்க்காரனைப்பற்றி எனக்குக் கவலையில்லை. உன் உயிரைப் பற்றித்தான் கவலைப்படுகிறேன். உனக்கு ஒரு தாய் இருக்கிறார் என்று அறிந்து கொண்டேன். என்னை முன்னிட்டு அவர் தன் மகனை இழக்க நேருவதை நான் விரும்பவில்லை’’

என்றாள் அவள்.

 

இந்தச் சொற்களுமே பெரும் தடுமாற்றத்தோடுதான் அவளிடமிருந்து வெளிப்பட்டன. இதைச் சொல்லியபடி நடுங்கிக்கொண்டிருந்தாள் அவள்.

 

‘’இதோ பார், நீ சொன்ன சொல் தவறாமல் இருந்தால் நானும் என் வாக்கைக் காப்பாற்றுவேன், ஆனால் ஒரே ஒரு நிபந்தனை. சற்றுத் தள்ளி நின்றுகொள். கடைசி நிமித்தில் என்னைப் பின் வாங்கச்சொல்லி நீ வற்புறுத்தப் பார்த்தால் அவ்வளவுதான் விளையாட்டு அதோடு முடிந்தது’’ என்று சொல்லிக்கொண்டே வந்த ’விதியை நம்புபவன்’ திடீரென்று கூச்சலிட்டான்.

 

‘’எல்லோரும் இருபது தப்படி விலகிச்செல்லுங்கள்’’

 

அவனது வார்த்தைகள் மாய மந்திரம் போல எங்களைக் கட்டிப்போட்டன. நாங்களும் பின்வாங்கத் தொடங்கினோம்.

 

அவன் மீண்டும் இவ்வாறு குரலெழுப்பிக்கத்தினான்

‘’என்னை எவராவது தள்ளிவிட முயற்சித்தால் அவனுடைய கோட்டைப்பிடித்து இழுத்து என் பக்கம் தள்ளிக்கொண்டு விடுவேன், அப்புறம் அவனும் என் விதியில் பங்கு போட வேண்டியதாகி விடும்’’

அது எவ்வளவு அபாயகரமானதாக இருக்கும் என்பதை நாங்கள் உணர்ந்து கொண்டோம். தண்ணீரில் மூழ்குபவனைக் காப்பாற்றுவதாகச் சென்று கூடவே தானும் மூழ்கிப்போக நேர்வது பல முறை சம்பவித்திருப்பதுதான்.

 

நாங்கள் பின்புறம் நகர்ந்த அளவில் தண்டவாளம் இலேசான ஒலியோடுஅதிரத்தொடங்கியது. ரயிலின் விசில் சத்தத்தையும் நாங்கள் கேட்டோம். நாங்கள் எல்லோரும் ஒன்றாகக்குரல் கொடுத்தோம்.

 

 ஷ்வார்ட்ஸ், அப்படிச் செய்ய வேண்டாம். ஷ்வார்ட்ஸ் கொஞ்சம் தயவு செய்.”

 

ஆனால் நாங்கள் கத்திக்கொண்டிருக்கும்போதே அவன் 

தண்டவாளத்தின் குறுக்கே நீட்டிப்படுத்து விட்டான். அங்கே ஒரு ரயில் பாதை மட்டுமே 

இருந்தது. வந்திருந்த பெண்களில் ஒருத்தி மயக்கம் போட்டு 

விழுந்து விட்டாள். இன்னும் ஒரு நொடிக்குள் ஒரு மனித உடல் இரு கூறாக சிதைவதைப்பார்க்கப்போகிறோம் என்பது எங்களுக்கு உறுதியாகி இருந்தது. அந்தச் சில வினாடிகளில் நான் எப்படித் தவித்தேன்...என்ன பாடுபட்டேன்என்பதையெல்லாம் இப்போது உங்களிடம் என்னால் விவரிக்கக்கூட இயலாது. அளவுக்கு மீறிய உணர்ச்சிக் கொந்தளிப்பால் என் இரத்தம் கொதிக்கத் தொடங்கியிருந்தது. சரியாக அந்த நேரத்தில் கிறீச்சென்ற பலத்த சத்தம்கேட்டது. விதியை நம்புபவன் இருந்த இடத்துக்கு சரியாக ஒரு கஜ தூரத்துக்குமுன் ரயில் ஒரு பெரிய குலுக்கலோடு நின்றது.

 

பனி மூட்டத்துக்கு இடையே ரயில் ஓட்டும் பொறியாளரும், நெருப்புப் போடும்உதவியாளரும் இறங்கி வருவது என் கண்ணில் பட்டது. அவர்கள் இருவரும்அவனைப் பார்த்து சத்தம் போட்டுக்கொண்டே தண்டவாளத்திலிருந்து அவனை அங்கிருந்து இழுத்து வெளியேற்றினர். ரயில் பயணிகள் பலரும் கூடக் கீழேஇறங்கியிருந்தனர். எங்களில் சிலர் கைதாகி.விடுவோமோ  என்ற அச்சத்தில்  ஓடி விட்டனர்.  பெரிய கூச்சலும் குழப்பமுமாக இருந்தது.  நான்மட்டும் இருந்த இடத்தை விட்டு நகராமல் நடப்பதையெல்லாம்கவனித்துக்கொண்டிருந்தேன். ஹெய்லி என்னிடம் ஓடோடி வந்து தன்கைகளை என் தோளில் போட்டபடி கதறியழத் தொடங்கினாள். அது,

 வெறும்அழுகையாக இல்லை...ஒரு மிருகத்தின் 

உறுமலைப் போலத்தான் அது  இருந்தது...’

 

சரி..ஒரு சிகரெட் இருந்தால் கொடு, என்னால் இதற்கு மேல் அதைப்பற்றிப்பேச முடியவில்லை, மூச்சுத் திணறுவது போல்

இருக்கிறது...மன்னித்துக்கொள்

செயலாளரிடம் ஒரு சிகரெட்டைக் கொடுத்தேன். அதைப்பிடித்திருந்த அவரது விரல்களுக்கிடையே அது நடுங்கியதை என்னால் பார்க்க முடிந்து. புகையை வெளியில் விட்டுக்கொண்டே

‘’நடந்த கதை இதுதான்’’

என்றார் அவர்.

’’அவள் அவனைத் திருமணம் செய்து கொண்டாளா’’ என்று கேட்ட்டேன் நான்.

‘’அவர்களுக்கு இப்போது நான்கு குழந்தைகள்’’

’’சரியான சமயத்தில் ஓட்டுநர் வண்டியை நிறுத்தியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் ’’ என்றேன்.

’’ஆமாம்..ஆனால் ரயில் சக்கரங்கள் அவனிருந்த இடத்திலிருந்து  ஒரு கஜ தூரத்தில்தான் இருந்தன’’

‘’அப்படியென்றால் இது விதியின் செயல்தான் என்பதில் உங்களுக்கும் நம்பிக்கை ஏற்பட்டு விட்டதென்று சொல்லுங்கள்’’

’’இந்த உலகத்தின் செல்வ வளங்கள் எல்லாவற்றையும் நீங்கள் எனக்குத் தருவதாக இருந்தாலும் இப்படி ஒரு பந்தயத்துக்கு நான் துணிய மாட்டேன்’’

’’அவன் இன்னும் விதியை நம்பிக்கொண்டுதான் இருக்கிறானா’’

‘’ஆமாம்..இன்னும் அப்படித்தான்’’

’’மறுபடியும் இப்படி ஒரு காரியத்தைச் செய்ய அவன் துணிவானா’’

‘’ஹெய்லிக்காகச் செய்ய மாட்டான்’’ என்றபடியே புன்னகைத்தார் செயலாளர்.

                   ************************************

அடிக்குறிப்பு;

* ரஷ்ய ரூலெட்- இது ஒரு அபாயகரமான விளையாட்டு. துப்பாக்கியின் ஏதாவது ஒரு அறையில் மட்டுமே குண்டு வைக்கப்பட்டுத் துப்பாக்கியின் உருளை சுழற்றி விடப்படும். பிறகு துப்பாக்கி முனையைத் தன் தலைக்கு நேராக வைத்தபடி சுட்டுக்கொள்ள வேண்டும். குண்டு குறிப்பிட்ட இடத்திலிருந்தால் மரணம், அப்படி இல்லையென்றால் பிழைக்கலாம்.

 

              *#********************************************#*

 

 

 

 

 

 

 

 

 

 

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....