சொல்வனம் இணைய இதழில் 22/08/2021 இதழ் எண்,253.
என் கனவு
மூலம்; லியோ டால்ஸ்டாய்
ஆங்கில வழி தமிழாக்கம்; எம் ஏ சுசீலா
“இனிமேல் அவள் எனக்கு மகள் இல்லை. என்ன, புரிகிறதா இல்லையா? அப்படி ஒரு மகள் எனக்கு இல்லவே இல்லை. ஆனாலும் கூட அந்நியர்களின் தயவில் நான் அவளை அப்படிவிட்டு விடவும் முடியாது. அவள் எப்படி வாழ ஆசைப்படுகிறாளோ அதற்கான வசதிகளை மட்டும் செய்து தந்து விடுகிறேன். ஆனால் அவளைப் பற்றி எது கேட்கவும் எனக்கு விருப்பமில்லை. இப்படிப்பட்ட ஒரு கொடுமையை நினைத்தாவது பார்த்திருக்க முடியுமா…..? என்ன மாதிரி கொடுமை..”
அவர் தன் தோள்களை உயர்த்தியபடி தலையை உலுக்கி விட்டுக் கொண்டார். கண்களை நிமிர்த்திப் பார்த்தார்.
மத்திய ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு மாகாண கவர்னராக இருந்த தன் சகோதரரிடம்
இவ்வாறு சொல்லிக்கொண்டிருந்தார் இளவரசர் மைக்கேல் இவானோவிச். அவருக்குப் பத்து வயது இளையவரான இளவரசர் பீட்டருக்கு ஐம்பது வயதிருக்கலாம்.
ஒரு வருடத்துக்கு முன்னால் வீட்டை விட்டு ஓடிப்போய் விட்ட தன் மகள் இங்கே தன் குழந்தையோடு குடியேறி இருப்பதைக் கண்டுபிடித்த அந்த மூத்த சகோதரர், செயிண்ட் பீட்டர்ஸ்பர்கிலிருந்து இந்த மாகாணத்தைச் சேர்ந்த நகரத்துக்கு வந்திருந்தார். அங்கேதான் இந்தப்பேச்சு வார்த்தை நடைபெற்றுக்கொண்டிருந்தது.
இளவரசர் மைக்கேல் இவானோவிச், நல்ல உயரமான அழகான மனிதர். வெண்ணிற முடியும், புது நிறமும் கொண்டவர், கவர்ச்சியான, பெருமிதத்தோடு கூடிய தோற்றப்பொலிவு உடையவர்.
மனைவி, ஒரு மகன், இரண்டு மகள்கள் கொண்டது அவரது குடும்பம். சின்னச்சின்ன விஷயங்களுக்காகக் கூட அவரை நச்சரித்துப் பிடுங்கி எடுப்பவள் மோசமான அவரது மனைவி. மகன் ஒரு உதவாக்கரை, ஊதாரி. தந்தை வகுத்திருந்த அளவுகோலின்படி ஒரு கனவான் ஆகும் தகுதி இன்னும் அவனுக்கு வாய்த்திருக்கவில்லை. இரண்டு பெண்களில் மூத்தவளுக்கு நல்லபடியாகத் திருமணம் நடந்து செயிண்ட் பீட்டர்ஸ்பர்கிலேயே அவள் வாழ்ந்து வந்தாள். அவரது செல்லப்பெண்ணான இளைய மகள் லீஸா ஒரு வருடம் முன்பு வீட்டிலிருந்து காணாமல் போய்விட்டாள். சற்று முன்புதான் அந்த மாகாண நகரத்தில் குழந்தையோடு அவளைக் கண்டுபிடித்திருந்தார் அவர்.
லீஸா எப்படிப்பட்ட சூழலில் வீட்டை விட்டுப்போனாள் என்பதையும் அந்தக்குழந்தையின் தகப்பன் யாராக இருக்கலாம் என்பதையும் தன் சகோதரரிடம் கேட்க நினைத்தார் இளவரசர் பீட்டர். ஆனாலும் ஏனோ அதற்கு அவர் மனம் துணியவில்லை.
அன்று காலை, மைத்துனரை சமாதானப்படுத்தும் முயற்சியில் அவரது மனைவி ஈடுபட்டிருந்தபோது தன் சகோதரரின் முகத்தில் வலியோடு கூடிய வேதனை இருப்பதை இளவரசர் பீட்டர் கவனித்திருந்தார். ஆனால், எளிதில் எவராலும் நெருங்க முடியாத அகம்பாவத் தோரணையுடன் கர்வத் திரை போர்த்திக்கொண்டு அந்தத் துயரமான முகபாவத்தை உடனே மறைத்துக்கொண்டு விட்டார் மைக்கேல். அவர்களுடைய குடியிருப்பைப்பற்றியும் அதற்கு அவர்கள் என்ன விலை கொடுத்தார்கள் என்றும் அவளை அவர் விசாரிக்கத்தொடங்கியிருந்தார்.
மதிய உணவு வேளையில் விருந்தினர்களுக்கும் குடும்பத்தார்க்கும் முன்னிலையில் அவர் வழக்கம் போலவே வேடிக்கையாகவும் கிண்டலாகவும் இயல்பாகத்தான் பேசிக்கொண்டிருந்தார். ஆனாலும், குழந்தைகளிடம் மட்டும் மிகுந்த பரிவோடும் மென்மையோடும் நடந்து கொண்டாரே தவிர மற்ற எல்லோருடமிருந்தும் ஒதுங்கியிருந்தபடி செருக்குடனேயே நடந்து கொண்டார். அது எப்போதும் உள்ள அவரது இயல்பான குணம் என்பதால் அப்படி ஒரு கர்வத்தோடு இருப்பதென்பது அவரது தனிப்பட்ட உரிமை என்பது போல எல்லோருமே அதை அங்கீகரித்திருந்தனர். மாலையில் அவரது சகோதரர் ’விஸ்ட்’ என்ற ஒரு விளையாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
எல்லாம் முடிந்து தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குத் திரும்பி வந்த மைக்கேல் இவானோவிச்,தன் பல்செட்டைக் கழற்றிக்கொண்டிருந்தபோது கதவை மென்மையாக இரண்டு விரல்களால் மட்டுமே எவரோ தட்டுவது கேட்டது.
“யாரது?”
“நான்தான் மைக்கேல்”
இளவரசர் மைக்கேல் அது தன் தம்பி மனைவியின் குரல் என்பதை அடையாளம் கண்டுகொண்டு முகத்தைச் சுளித்தபடி பல்செட்டை மீண்டும் பொருத்திக்கொண்டார்.
’அவளுக்கு என்னதான் வேண்டும்’
என்று தனக்குத்தானே பேசிக்கொண்டவர்,
“உள்ளே வரலாம்”
என்றார் சத்தமாக.
அவரது தம்பி மனைவி அமைதியான சுபாவம் கொண்டவள், மென்மையான ஒரு பெண்மணி. தன் கணவனின் விருப்பத்துக்கு இணங்கிச் செல்பவள். ஆனால் பலருக்கும் அவள் ஒரு பைத்தியக்காரியைப்போலவே தோன்றினாள், அவளை ஒரு முட்டாள் என்று அழைக்கக் கூட சிலர் தயங்கியதில்லை. அவள் அழகானவள்தான், ஆனால் தன் தலையலங்காரத்தைப்பற்றியோ புறத்தோற்றம் பற்றியோ அவள் அதிகம் லட்சியம் செய்யாததால் வெளிப்பார்வைக்கு அவலட்சணமாகவே தெரிந்தாள். அதை அவள் பெரிதாகப் பொருட்படுத்துவதும் இல்லை. அவள் கொண்டிருந்த சில எண்ணங்கள் மிக வித்தியாசமானவையாக மேட்டுக்குடிமக்களுக்குப் பொருந்தாதவையாக இருந்தன. அதிலும் மிக உயர் பதவியில் இருக்கும் ஒருவரின் மனைவிக்கு அவை எந்த வகையிலும் ஏற்புடையவை அல்ல. எவரும் எதிர்பாராத வகையில் எல்லோருக்கும் வியப்பூட்டும் வகையில் அவள் கொண்ட அந்த எண்ணங்கள் வெளிப்படும்போது அவற்றைக்கேட்டு அவளது கணவர் மட்டுமல்லாமல் அவளுடைய தோழிகளுமே கூட ஆச்சரியமடைந்துவிடுவதுண்டு.
“இதோ பார், நீ என்னைத் திருப்பி அனுப்ப நினைத்தாலும் நான் இங்கிருந்து போவதாக இல்லை. அதை முதலிலேயே உனக்குச் சொல்லி விடுகிறேன்” என்று எதையும் சட்டை செய்யாதவள் போல அவளுக்கே உரிய பாணியில் சொன்னாள் அவள்.
“அப்படியா, சரிதான்…கடவுள் காப்பாற்றட்டும்” என்று அவருக்கே உரித்தான மிகையான பணிவோடு கூறியபடி அவளுக்கு ஒரு இருக்கையைக் கொண்டு வந்து தந்தார் அவர்.
“ஆமாம்…அது உன்னை வருத்தப்படுத்தவில்லையா?” என்று கேட்டபடியே ஒரு சிகரெட்டை எடுத்துக்கொண்டாள் அவள்.
“மனதுக்குக் கஷ்டமான எந்த விஷயத்தைப் பற்றியும் நான் பேசப்போவதில்லை மைக்கேல். ஆனால்…லிஸோச்கா பற்றி மட்டும் ஒன்று சொல்லியாக வேண்டும்”
மைக்கேல் பெருமூச்செறிந்தார். அந்த வார்த்தை அவருக்கு வலி ஏற்படுத்தியது. ஆனால் வழக்கம் போல உடனே தன்னிலைக்கு மீட்டுக்கொண்டு விட்ட அவர் வலிந்து புன்னைகை செய்தபடி இவ்வாறு பதிலளித்தார்.
“நம் உரையாடல் ஒரே ஒரு விஷயத்தைப்பற்றியதாக மட்டும்தான் இருக்க முடியும், நீயும் அதைப்பற்றித்தான் பேச ஆசைப்படுகிறாய்”
பேசும்போது அவளைப் பார்ப்பதைத் தவிர்த்துக்கொண்டிருந்த அவர் அது என்ன விஷயம் என்று குறிப்பிடக்கூட விரும்பவில்லை. ஆனால் கொழுகொழுவென்றிருந்த அழகான அவரது தம்பி மனைவியோ அதைப்பற்றிப் பேச வெட்கப்படவில்லை. தன் நீலக்கண்களால் மன்றாடுவது போன்ற பார்வையோடு மென்மையாக அவரைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருந்தாள் அவள். முன்பை விட ஆழமான ஒரு பெருமூச்சு அவளிடமிருந்து எழுந்தது.
“மைக்கேல் , என் பிரியத்துக்குரிய நண்பனே…! பாவம் மைக்கேல் அவள். அவளிடம் இரக்கம் காட்டு. அவளும் ஒரு மனிதப்பிறவிதான் இல்லையா”
“எனக்கு அது பற்றி ஒருபோதும் சந்தேகம் எழுந்ததில்லையே” என்று கசப்பான புன்னகையோடு சொன்னார் மைக்கேல் இவானோவிச்.
“அவள் உன் மகள்”
“அது முன்பு எப்போதோ. ஆனால் ஆலின்..இப்போது ஏன் நாம் அதைப்பற்றிப் பேச வேண்டும்”
“ அன்புக்குரிய மைக்கேல்..நீ அவளைப் பார்க்கக்கூட மாட்டாயா? நான் உன்னிடம் சொல்ல விரும்பியது உண்மையிலேயே குற்றம் செய்திருப்பது யார் என்பதைத்தான் “
மைக்கேல் கோபத்தால் சிவந்தார். அவர் முகம் கொடூரமாகத் தோன்றியது.
“கடவுளுக்குப் பொதுவாகக் கேட்கிறேன். இந்தப்பேச்சை நிறுத்தி விடுவோம். நான் போதுமான அளவு அனுபவித்து விட்டேன். இப்போது எனக்கு இருப்பது ஒரே ஒரு ஆசை மட்டும்தான். மற்றவர்களைச் சார்ந்திருக்கத் தேவையில்லாத ஒரு நல்ல நிலையில் அவளை வைத்துவிட வேண்டும் என்பது மட்டும்தான் அது. அப்போது என்னோடு தொடர்பு வைத்துக்கொள்ளவும் அவளுக்கு அவசியம் ஏற்படாது இல்லையா? அதன் பிறகு அவள் வாழ்க்கையை அவள் பார்த்துக்கொள்ளட்டும். எனக்கும், என் குடும்பத்துக்கும் அவளைப்பற்றி எந்த விஷயத்தைத் தெரிந்து கொள்ளவும் அவசியமிருக்காது. என்னால் செய்யக்கூடியது அது மட்டும்தான்”
“மைக்கேல் ‘நான் நான்’ என்பதைத்தவிர நீ வேறெதுவும் சொல்வதில்லை. அவளுக்குள்ளும் ஒரு ‘ நான்’ உண்டு”
“அதிலென்ன சந்தேகம்? ஆனால்..அன்பு ஆலின் ! தயவு செய்து இந்தப்பேச்சை இதோடு விட்டு விடலாமே. நான் உண்மையிலேயே ஆழமாக யோசித்தபிறகுதான் இப்படிச்சொல்கிறேன்”
அலெக்ஸாண்ட்ரா டிமிட்ரேய்வ்னா சில கணங்கள் அமைதியாக இருந்தாள். தலையை ஆட்டினாள்.
“ ஆமாம்..? உன் மனைவி மாஷாவும் கூட இப்படித்தான் நினைக்கிறாளா”
“ ஆமாம்..உறுதியாக அப்படியேதான்”
பொருள் புரியாத ஏதோ ஒரு சத்தம் அலெக்ஸாண்ட்ராவிடமிருந்து எழுந்தது.
‘’சரி… இந்தப் பேச்சு போதும், இதோடு முடித்துக்கொள்வோம்,குட் நைட்’’ என்றார் அவர்.
ஆனால் அவள் அங்கிருந்து போகவில்லை. அமைதியாக ஒரு நிமிடம் அங்கே நின்றுகொண்டே இருந்தாள்.பிறகு,
“அவள் எந்தப்பெண்ணோடு குடியிருக்கிறாளோ அவளிடம் நீ பணத்தைத் தர இருப்பதாக பீட்டர் சொன்னார். உன்னிடம் அந்த முகவரி இருக்கிறதா?”
“ இருக்கிறது”
“பணத்தை அந்தப் பெண்ணிடம் கொடுக்காதே மைக்கேல், நீயே நேரில் போ. அவள் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்பதைக் கொஞ்சம் பார்.. அவளைப் பார்க்க வேண்டாம் என்று நினைத்தால் பார்க்க வேண்டாம். அவன் அங்கே இல்லை, யாருமே அங்கே இல்லை”
மைக்கேல் இவானோவிச் உடல் நடுங்க ஆவேசமாகக் கத்தினார்.
“என்னை ஏன் இப்படி வதைக்கிறாய்.. இது விருந்தினர்களுக்கு இழைக்கும் பாவமில்லையா”
அலெக்ஸாண்ட்ரா டிமிட்ரேய்வ்னா இடத்தை விட்டு எழுந்திருந்தாள். அவ்வாறு அவரிடம் முறையிட்டதில் நெகிழ்ந்து போயிருந்ததால் அவள் கண்களில் கண்ணீர் வரப் பார்த்தது.
“ அவள் நிலை மிகமிகப் பரிதாபம். ஹ்ம்ம்.. எத்தனை அருமையான பெண் அவள்”
அவர் எழுந்து நின்றபடி அவள் பேச்சை முடிக்கக் காத்திருந்தார்.
அவள் அவருக்குக் கை கொடுத்தபடி,
“மைக்கேல் நீ செய்வது சரியில்லை, அவ்வளவுதான்” என்றபடி அவரை விட்டு அகன்றாள்.
அவள் சென்ற பின் வெகுநேரம் சதுரத் தரைவிரிப்பின் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டே இருந்தார் மைக்கேல். எரிச்சலோடு முகம் சுளித்தார், நடுங்கினார்..’’ஓ..ஓ’’ என்று முனகவும் செய்தார். பிறகு ஒரு கட்டத்தில் தன் சொந்தக்குரலே தனக்குப் பீதியூட்டுவதாய் அமைந்து விட, அதன் பிறகு அமைதியாகி விட்டார்.
தனது தன்முனைப்புக்கு ஏற்பட்ட காயம், அவரைச் சித்திரவதை செய்து கொண்டிருந்தது.
அவர் பெற்ற மகள்,
தன் சொந்தத் தாய்வீட்டில் சீராட்டி வளர்க்கப்பட்ட மகள்!
புகழ்பெற்ற அவளது தாய் அவ்தோத்யா போரிசோவ்னாவைப் பார்க்கப் பலமுறை அரசியே நேரில் வருகை தந்து பெருமைப்படுத்தியிருக்கிறாள். யாரோடு அறிமுகம் கொள்வதை இந்த உலகமே ஒரு பெரும் கௌரவமாக நினைக்கிறதோ அந்த அரசியே !
அவள் …அவர் பெற்ற மகள்,
பழங்கால இராணுவ வீரராக…எந்த அச்சமும் இல்லாமல்,எந்தப்பழிச்சொல்லுக்கும் இடம் தராமல் வாழ்ந்தவர் அவர்.
ஒரு ஃபிரெஞ்சுப்பெண் மூலம் அவருக்குப் பிறந்த மகனை வேறொரு நாட்டில் அவர் குடியமர்த்தி விட்டார்; அது எந்த வகையிலும் அவரது மதிப்புக்குக் குந்தகம் ஏற்படுத்தி இருக்கவில்லை.
இப்போது, இவள்..இந்த மகள்..!
ஒரு தகப்பன் மகளுக்குச் செய்யக்கூடியதையெல்லாம்…செய்ய வேண்டியதையெல்லாம் செய்திருக்கிறார்,அற்புதமான கல்விப்பயிற்சியையும் அளித்திருக்கிறார்,
உயர்ந்த ரஷ்ய சமூகத்தைச் சேர்ந்த வாலிபன் ஒருவனைத் தனக்குத் துணவனாக்கிக் கொள்ளும் அளவுக்கு எல்லா வகையான வாய்ப்புக்களையும் தகுதியையும் அவளுக்கு அவர் உருவாக்கித் தந்திருக்கிறார்.
ஒரு மகள் எதையெல்லாம் ஆசைப்படுகிறாளோ அதையெல்லாம் கொடுத்ததோடு நிறுத்திக்கொள்ளாமல் உண்மையிலேயே அவர் தன் பாசத்தைப் பொழிந்து வளர்த்திருக்கும் மகள்,
எந்தப் பெண்ணை வியந்து வியந்து பாராட்டினாரோ..
எவளைக்கண்டு பெருமைப்பட்டாரோ..,அதே பெண்தான் வேறெந்த மனிதர்களையும் ஏறெடுத்துக் கூடப் பார்க்க முடியாத இப்படிப்பட்ட ஒரு இழிவை இப்போது அவருக்குப் பரிசாகத் தந்திருக்கிறாள்.
அவள் அவரது குடும்பத்தில் ஒருத்தியாக ..அவரது குழந்தையாக மட்டுமல்லாமல் அவரது செல்லக் கண்மணியாக, அவரது ஆனந்தமாக…அவர் பெருமைப்படும் பொக்கிஷமாக இருந்த அந்தக் காலத்தை அவர் இப்போது நினைவு கூர்ந்தார்.
எட்டு ஒன்பது வயதுச் சிறுமியாக ,பிரகாசிக்கும் கருவிழிகளோடும் செம்பழுப்பு நிறக் கூந்தலோடும் துறுதுறுப்பும் புத்திசாலித்தனமும் கொண்டவளாய்த் துள்ளிக் களிக்கும் உயிர்த்துடிப்போடு உலாவிய அவளை அவர் இப்போது மீண்டும் தன் கற்னையில் பார்த்தார்.
தன் முழங்கால் மீது அவள் ஏறிக்குதிப்பதையும் தன்னைக் கட்டித் தழுவிக்கொண்டு கழுத்தில் கிச்சு கிச்சு மூட்டுவதையும் ஞாபகப்படுத்திக் கொண்டார். தான் வேண்டாம் வேண்டாமென்று சொல்லச்சொல்ல அவள் எப்படித் தனக்கு கிச்சு கிச்சு மூட்டுவாள் என்பதும், ,தன் உதடுகளிலும் கன்னத்திலும் கண்ணிலும் எப்படி அவள் முத்த மாரி பொழிவாள் என்பதும் அவர் நினைவில் எழுந்தது. இப்படிப்பட்ட வெளிப்படையான விஷயங்கள் இயல்பாகவே அவருக்குப் பிடிக்காதவைதான்..ஆனாலும் இப்படிப்பட்ட களியாட்டமான அன்பு அவரையும் அசைத்து விட, அவளது சீராட்டுக்கெல்லாம் அவரும் ஈடு கொடுத்து இணங்கிப் போனார். அவளைக் கொஞ்சுவது தனக்கு எவ்வளவு இனிமை தருவதாக இருந்தது என்பதையும் இப்போது எண்ணிப்பார்த்தார்.
இவற்றையெல்லாம் நினைவுபடுத்திக்கொண்டபோது அப்படி இனிமையாக இருந்த ஒரு குழந்தை, நெஞ்சில் நினைத்துப் பார்க்கக்கூட வெறுப்பூட்டுபவளாக எப்போது மாறிப்போனாள் என்பது குறித்தும் கூடவே சிந்தித்தார்.
சிறுமியாக இருந்த நிலையிலிருந்து ஒரு பெண்ணாக அவள் வளர்ச்சியடைந்த பருவத்தை அவர் நினைவுபடுத்திக் கொண்டார். மற்ற ஆண்களின் கண்களில் அவள் ஒரு பெண்ணாகத் தென்படத் தொடங்கியபோது தன்னுள் தோன்றிய
பயமும் கோபமும் கலந்த மிக வித்தியாசமான ஓர் உணர்வும் கூட அவருக்கு நினைவு வந்தது. ‘பால்’ நடனத்துக்காக உடையணிந்தபடி அவள் கவர்ச்சியோடு காதல் பாவனை காட்டும்போது அவளது அழகைக்கண்டு அவருள் மூளும் பொறாமை கலந்த அன்பைப் பற்றியும் அவர் யோசித்துப் பார்த்தார்.
அவள் மீது பேராசையோடு படியும் பிறரது பார்வைகளைப் பார்த்தும், அவற்றைப் பற்றிப்புரிந்து கொள்ளாமல் அவள் சந்தோஷப்படுவதைக் கண்டும் அவர் நடுநடுங்கிப் போயிருக்கிறார்.
“தான் தூய்மையானவள் என்பதில் பெண் கொண்டிருக்கும் மூட நம்பிக்கை! ஆனால் உண்மையில் பார்த்தால் அதற்கு நேர்மாறாக..அவர்களுக்குக் கூச்சமில்லை,அறிவில்லை என்பதுதான் நிஜம்”
அவர் கொண்டு வந்த மிகப்பொருத்தமான இரண்டு வரன்களை எந்தக் காரணகாரியமும் இல்லாமல் அவள் நிராகரித்து ஒதுக்கியதையும்,தான் ஈடுபடும் கேளிக்கைகளில் அடைந்து வரும் வெற்றிகள் அவளை மேலும் மேலும் கவர்ந்து இழுத்துக்கொண்டே சென்றதையும் அவர் எண்ணிப்பார்த்தார்.
ஆனால் இந்த வெற்றி வெகுகாலத்துக்கு நீடிக்கவில்லை. ஒரு வருடம்…பிறகு இரண்டு,மூன்று …அதோடு முடிந்து விட்டது. அவள் எல்லோருக்கும் அறிமுகமானவள்,அழகி அவ்வளவுதான். ஆனால் தொடக்கத்திலிருந்த இளமை அவளிடம் இப்போது இல்லை,’பால்’ நடன அரங்கத்தைச் சேர்ந்த ஒரு சாமானாக மட்டுமே அவள் ஆகிப் போயிருந்தாள். மணமாகாத கன்னியாகவே அவள் தொடர்ந்து கொண்டிருப்பதைக் கண்டபோது அவளுக்காகத் தான் ஒரு ஏற்பாடு செய்ய ஆசைப்பட்டதைப் பற்றியும் அவர் எண்ணிப்பார்த்தார்.
‘எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவளுக்குஒரு திருமணம் செய்து வைத்து விட வேண்டும். முன்பே ஏற்பாடு செய்திருந்தால் மிகவும் நல்ல வரன்கள் அமைந்திருக்கலாம், ஆனாலும் கூட மரியாதைக்குரிய பொருத்தமான ஒருவனைத் தேட வேண்டும்’.
ஆனால் அவளோ துடுக்குத்தனத்தோடு அகம்பாவமாக நடந்து கொள்வதாக அவருக்குத் தோன்றியது. இதை நினைவுபடுத்திக்கொண்டபோது அவள் மீதான சினம் இன்னும் உக்கிரமாக அவருள் மூண்டெழுந்தது. நாகரிகமான பல ஆண்களை அவள் நிராகரித்தது இப்படிப்பட்ட ஒரு கேவலமான முடிவுக்குத்தான்.
“ஐயோ..ஐயோ” என்று மீண்டும் தனக்குள் கதறிக் குமுறினார் அவர்.
பிறகு சிறிது நேரம் நிலையாக ஓரிடத்தில் நின்றபடி ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டார். வேறு விஷயங்களைப் பற்றி யோசிக்க முயற்சி செய்தாலும் நினைவுகள் அவரை வட்டமிட்டுக்கொண்டேதான் இருந்தன.
சிறிது காலம் முன்பு நடந்ததுதான் இது. அப்போதே அவள் இருபத்து நான்கு வயதைக் கடந்திருந்தாள். ஊரில் தங்களோடு வசித்து வந்த பதினான்கு வயதே ஆன காலாட்படை பயிற்சி மாணவனான கொகோவோடு அவள் அப்போது பழகத் தொடங்கியிருந்தாள். அவனைக் கிட்டத்தட்ட ஒரு அரைப்பைத்தியமாகவே அவள் ஆக்கியிருந்தாள். கவனம் சிதறிப்போய் அவன் அழுதது கூட உண்டு. முட்டாள்தனமான இந்த விஷயத்தை எப்படியாவது ஒரு முடிவுக்குக் கொண்டு வர நினைத்த அவர் அவனை அங்கிருந்து அனுப்பி விட்டபோதுதான் தன் தந்தையைக் கடுமையாக தீவிரமாக ஏன் முரட்டுத்தனமாகக் கூட அவள் எதிர்க்கத்தொடங்கினாள். அந்தச் செயலின் வழி அவர் தன்னை அவமானப்படுத்தி விட்டதாக அவளுக்குத் தோன்றியது. அப்போது தொடங்கி மகளும் தந்தையும் வெளிப்படையாகவே பகைமை பாராட்டத் தொடங்கி விட்டனர்.
“நான் நினைப்பது சரிதான், அவள் ஒரு மோசமான வெட்கம் கெட்ட பெண்”என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டார் அவர்.
பிறகு மாஸ்கோவிலிருந்து அவள் எழுதிய அந்தக்கடிதம் பற்றிய கோரமான அந்த நினைவு அவரைத் தாக்கியது.
இனிமேல் தன்னால் வீட்டுக்குத் திரும்பி வர முடியாது என்றும் கடும் துன்பத்தில் இருக்கும் கைவிடப்பட்ட பெண்ணான தன்னை மறந்து மன்னித்து விடுமாறும் அவள் அதில் எழுதியிருந்தாள்.
பிறகு தானும் தன் மனைவியும் சேர்ந்து எதிர்ப்பட நேர்ந்த கொடுமையான காட்சிகள் அவருள் ஓடின. அவர்கள் கொண்டிருந்த ஊகங்களும், சந்தேகங்களும் உறுதிப்படுத்தப்பட்ட அந்த நாள்!
அந்தக்கொடிய சம்பவம் ஃபின்லாந்தில் நடந்தது. அப்போது தன் அத்தை வீட்டுக்கு அவர்கள் அவளை அனுப்பி வைத்திருந்தார்கள். அந்தப் போக்கிரி மிகச்சராசரியான ஒரு ஸ்வீடிஷ் மாணவன். மூளையில்லாத ஒரு உதவாக்கரை,ஏற்கனவே மணமானவன்.
இப்போது, படுக்கையறைத்தரை விரிப்பில் முன்னும் பின்னுமாய் நடந்து கொண்டிருந்தபோது இந்த நினைவுகள் எல்லாம் அவருக்குள் ஓடிக்கொண்டிருந்தன. அவள் மீது தான் கொண்டிருந்த பழைய பாசம்..அவளைப்பற்றித் தான் கொண்டிருந்த கர்வம் என்று எல்லாம்..!
தேற்றிக்கொள்ளவே முடியாதபடி நடந்து முடிந்து விட்ட அவளது வீழ்ச்சி அவரை அச்சத்தால் நிலைகுலையச் செய்தது. தன்னை இந்த அளவுக்குத் துயரப்பட வைத்ததற்காக அவர் அவளைக் கடுமையாக வெறுத்தார். தம்பி மனைவியிடன் நடந்த உரையாடல் நினைவுக்கு வந்தபோது அவளை எப்படித் தன்னால் மன்னிக்க முடியும் என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டார். ’தான்’ என்ற தன்னகங்காரம் தோன்றிய அந்தக்கணத்திலேயே அச்சம், வெறுப்பு, புண்பட்ட தன்முனைப்பு ஆகிய உணர்வுகள் அவரது உள்ளத்தில் குமுறியெழத் தொடங்கி விட்டன. வாய் விட்டு மெள்ள அரற்றிய அவர் வேறு விஷயங்களைப் பற்றி நினைத்துப் பார்க்க முயற்சித்தார்.
‘இல்லை, அது சாத்தியமில்லாதது. பேசாமல் பீட்டரிடம் பணத்தைக் கொடுத்து மாதா மாதம் அவளுக்குத் தந்து விடுமாறு சொல்லி விடலாம். என்னைப்பொறுத்தவரை இனி அப்படி ஒரு மகள் எனக்கு இல்லை’
திரும்பவும் வினோதமான வேறொரு உணர்வு அவரை ஆட்கொண்டது. அவள் மீது கொண்டிருந்த நேசத்தை நினைவுபடுத்திக்கொண்டதால் விளைந்த சுய பச்சாதாபம், தன்னை இப்படிப்பட்ட வேதனைக்கு ஆளாக்கி விட்டாளே என்று பொங்கியெழும் கோபம் ஆகிய இருவேறு உணர்வுகளின் கலவை அது.
2
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளும் எப்படி வாழ்ந்து வந்தாளோ அதே போலத்தான் – அதில் எந்தக் குழப்பமும் ஐயமும் இல்லாதவளாகத்தான் கடந்த வருடமும் வாழ்ந்து வந்தாள் லீஸா. திடீரென்று தன் வாழ்க்கை முழுவதும் ஒருவெறுமை படர்ந்ததை அவள் உணர்ந்தாள். செயிண்ட் பீட்டர்ஸ்பர்கிலுள்ள மேட்டுக்குடி மக்களுக்கு நடுவே அதே மாதிரி ஒரு வீட்டில் வாழும் தன் வாழ்வு, இழிவானதாக, அருவருக்கத்தக்கதாக, மிருகத்தனமான ஒரு வாழ்க்கையாக அவளுக்குத் தோன்றியது. வாழ்க்கையின் அடியாழம் வரை ஊடுருவிச்செல்லாத…அதைத் தொடாத மேம்போக்கான ஒரு ஒரு வாழ்க்கை.
ஒன்றிரண்டு வருடங்கள் எல்லாமே நன்றாகத்தான் இருந்தன. மூன்று வருடங்கள் வரையிலும் கூடத்தான். ஆனால் விருந்துகளும்,’பால்’ நடனங்களும், இரவு உணவுகளும்,கச்சேரிகளுமாக மட்டுமே ஏழெட்டு ஆண்டுகள் தொடர்ந்து சென்றபோது…-
உடலழகைக் காட்டும் ஆடைஅணிகலன்களும்..முடி அலங்காரங்களுமாய்-
இளைஞர்கள் வயதானவர்கள் என்று எல்லோருமே ஒன்றுபோல அவற்றை ரசிப்பவர்களாய்-
எல்லாவற்றையும் அனுபவிக்க…எதைப்பார்த்தும் நகைக்கத் தாங்கள் ஏகபோக உரிமை பெற்றவர்கள் என்று ஒரே மாதிரி நினைப்பவர்கள் போல்!
ஒரே கதியில் கழியும் கோடைக்கால மாதங்கள்..
ஒவ்வொன்றிலும் மேலோட்டமாக மட்டுமே கிடைக்கும் இன்பங்கள்- இசை..வாசிப்பு என்று இவையெல்லாம் கூட வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தொட்டு விட்டு மட்டுமே போய்க் கொண்டிருந்தனவே தவிர மாற்றத்துக்கான எந்த உத்தரவாத்தையும் தரவில்லை..
போகப் போக இவற்றிலெல்லாம் கவர்ச்சி இழந்து போன அவள் நம்பிக்கை வறட்சி கொண்டு விரக்தியடைந்தாள். என்ன செய்வதென்று அறியாத கையற்ற பல மனநிலைகள் அவளை சாவுக்குத் தூண்டின.
பிறருக்கு உதவும் செயல்களில் அவளது தோழிகள் அவளது எண்ணத்தைத் திருப்பினர். யதார்த்தமான குரூரமான வறுமை…அதை விடக் கூடுதல் வெறுப்பூட்டுவதும் பரிதாபகரமானதுமான போலித்தனமான வறுமை ஆகிய இரண்டும் ஒரு புறமிருக்க, இன்னொரு புறமோ அதையெல்லாம் சற்றும் கண்டுகொள்ளாத கொடூரமான அலட்சிய பாவனையோடு ஆயிரக்கணக்கில் மதிப்பிடக்கூடிய விலையுயர்ந்த ஆடைகள் அணிந்தபடி கோச்சு வண்டிகளில் வந்து போகும் புரவலச் சீமாட்டிகளையும் அவள் கண்டாள்.
நாட்கள் செல்லச்செல்ல வாழ்க்கை என்பது பொறுத்துக்கொள்ளவே முடியாததாக ஆகியது. உண்மையான ஒன்றுக்காக அவள் ஏங்கினாள். இப்படிப்பட்ட விளையாட்டுத்தனங்களோ…இனிப்பான பக்கத்தை மட்டுமே கடைந்தெடுத்துச் சுவைப்பதோ வாழ்க்கையாகி விடாது என்று எண்ணினாள். உண்மையான வாழ்க்கை அவை எதிலுமே இல்லை.
வயதில் தன்னை விடச் சிறியவனான இராணுவப்பயிற்சி மாணவன் ஒருவனோடு அவள் கொண்டிருந்த நேசம் குறித்த நினைவுகளே மிகச் சிறந்த ஞாபகங்களாக அவளுக்குள் இருந்தன. அந்த நேசம், நேர்மையும் உண்மையுமான எழுச்சியில் பிறந்த ஒன்று. இப்போது அதைப்போல எதுவும் இல்லை, இனியும் இருக்க முடியாது.
அவள் மேலும் மேலும் மனச்சோர்வுக்கு ஆளாகிக்கொண்டே சென்றாள். அந்த இருண்மையான மனநிலையுடன்தான் ஃபின்லாந்தில் வசித்து வரும் தன் அத்தையைப் பார்க்க அவள் சென்றாள். அங்கே இருந்த பசுமையான சூழலும்,சுற்றுப்புறமும் அவள் இதற்கு முன் அறிந்திராத முற்றிலும் வேறுபட்ட மனிதர்களும்.. ஏதோ ஒரு வகையில் அவளுக்கு உகப்பான புதிய அனுபவத்தைக் கொடுத்தன.
எல்லாம் எப்போது எப்படித் தொடங்கியது என்பது அவளுக்குத் தெளிவாக நினைவில்லை. அவளது அத்தை வீட்டுக்கு ஒரு ஸ்வீடிஷ்காரன் வந்திருந்தான். தன் வேலையைப்பற்றி, தன் நாட்டு மக்களைப்பற்றி..ஸ்வீடிஷ் மொழியில் தான் எழுதிக்கொண்டிருக்கும் நாவல் பற்றி..இப்படிப் பலவற்றையும் அவன் பேசினான்.பார்வைகளையும், புன்னகைகளையும் பரிமாறிக்கொள்ளும் அளவுக்கு அப்படி ஒருகவர்ச்சியும் மயக்கமும் அவர்களிடையே எப்போது தொடங்கியது என்பது அவளுக்கே தெரியவில்லை. அதற்கெல்லாம் என்ன பொருள் என்பதை வார்த்தைகளால் விளக்கவும் முடியவில்லை.
இந்தப் பார்வைகளும் புன்னகைகளும் ஒருவரின் ஆன்மாவை அடுத்தவருக்குப் புலப்படுத்தியதோடு மிக முக்கியமான பிரபஞ்சம் தழுவிய ஒரு புதிரையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தாகத் தோன்றின. புன்னகையோடு இணைந்து வரும் அவர்களின் ஒவ்வொரு சொல்லும் ஏதோ ஒரு அற்புதமான அபரிமிதமான முக்கியத்துவம் கொண்டிருந்தைப்போல் இருந்தது. அவர்களும் இருவரும் சேர்ந்து இசை கேட்கும்போதும்..இணைந்து பாடும்போதும் அந்த இசையுமே கூட அதே போன்ற ஆழமான உட்பொருளைப் பொதிந்து வைத்திருப்பது போல் இருந்து.
புத்தகங்களிலிருந்து அவர்கள் சத்தமாக வாசிக்கும் வார்த்தைகளும் கூடத்தான். சில சமயம் அவர்கள் விவாதித்துக் கொள்வதும் உண்டு. ஆனால் அவர்களது கண்கள் சந்தித்துக்கொள்ளும் அந்தக் கணத்தில் அவர்களிடையே ஒரு புன்னகை மின்னலடிக்கும், விவாதம் எங்கோ தூர விலகி ஓடி விடும்.
அவர்கள் அதையெல்லாம் தாண்டிக்கடந்து தங்களுக்கென்றே புனிதமாக உள்ள அதை விட உயர்வான இடத்தில் சஞ்சரிக்கத் தொடங்கி விடுவார்கள்.
பிறகு அந்தப்பிசாசு…அது எப்படி வந்தது? புன்சிரிப்புக்களுக்கும் பார்வைகளுக்கும் பின்னால் மறைவாக இருந்தபடி அவர்களைப் பற்றிக்கொண்ட அந்தப் பிசாசு முதலில் எப்படி எப்பொழுது வந்தது என்பதை அவளால் சொல்ல முடியவில்லை. பய உணர்வு அவளைப் பற்றிக்கொள்ள ஆரம்பிப்பதற்கு முன்பே அவர்கள் இருவரையும் பிணைத்திருந்த கண்ணுக்குத் தெரியாத கயிறுகள் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து முடிச்சிட்டுக் கொண்டு விட்டன. அதிலிருந்து தன்னைக் துண்டித்துக்கொள்ளும் வலு அவளுக்கு இல்லை. அவள் அவனைத்தான்..அவனது கௌரவத்தைத்தான் நம்ப வேண்டியிருந்தது. அவன் தனது பலத்தைப் பிரயோகிக்க மாட்டான் என்ற நம்பிக்கையோடு அவள் இருந்தாள். அதேநேரத்தில் அவளுக்கு அது குறித்த இனம்விளங்காத ஒர் ஆசையும் இருந்தது.
இந்தப் போராட்டத்தில் அவளுக்குப் பக்கபலமாக எதுவுமே இல்லாததால் அவளிடம் பலவீன உணர்வே மேலோங்கி இருந்தது. முன்பு தான் வாழ்ந்த கேளிக்கை மிகுந்த சமூக வாழ்வில் அவள் சலிப்புற்றிருந்தாள். தாயிடமும் அவளுக்கு ஒட்டுதல் இல்லை. தந்தை தன்னை விலக்கி வைத்து விட்டதாகவே அவள் எண்ணினாள். விளையாட்டையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு உண்மையான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று அவள் மிகவும் ஏங்கினாள். ஒரு பெண் ஓர் ஆணிடம் கொண்டிருக்கும் பரிபூரணமான அன்பு ஒன்றே இந்த வாழ்க்கையைக் குறித்து அவளுக்கு நம்பிக்கையூட்டும் ஒரே ஒரு அம்சமாக இருந்தது.
அதிகமாக உணர்ச்சிவசப்படும் அவளது இயல்பும் அவளை அந்தப் பக்கம் இழுத்து கொண்டிருந்தது. உயரமான பலசாலியான அந்த மனிதன்..,அவனது அழகிய தலைமுடி, இலேசாக மேல் நோக்கியபடி இருக்கும் அவனுடைய மீசை ..அதற்குக்கீழே நெளியும் கவர்ச்சிகரமான தவிர்க்க முடியாத அவனது புன்னகை இவற்றில் எல்லாம் எப்படிப்பட்ட வாழ்வுக்காக அவள் ஏங்கிக்கொண்டிருந்தாளோ அதன் பொருள் பொதிந்திருப்பதாக நினைத்தாள்.
நம்ப முடியாத அழகுடன் இருக்கும் ஒன்றைக் குறித்து நம்பிக்கையூட்டுவதாக இருந்த புன்னகைகளும் பார்வைகளும் பிறகு..அவர்கள் போயே தீர வேண்டிய அந்த இடத்துக்கு அவர்களை இட்டுச்சென்றன. எந்த இடத்துக்குப் போவதற்கு அவள் பயந்து கொண்டிருந்தாளோ..ஆனாலும் அடி மனதில் எதை எதிர்பார்த்துக் காத்திருந்தாளோ அதே இடம்..
அதுவரை அழகாய் மகிழ்ச்சி தருவதாய் ஆன்மாவுக்கு இதமளிப்பதாய்..எதிர்காலம் குறித்த உத்தரவாதத்தை அளிப்பதாய் எவையெல்லாம் இருந்ததோ அவை எல்லாமே திடீரென்று மிருகத்தனமாய்.., அருவருக்கத்தக்கதாய், சோகமாய், அவநம்பிக்கை ஊட்டுவதாய் மாறிப்போயிருந்தன
அவள் எந்த பயமும் இல்லாதது போல,எல்லாம் எப்போதும் போல எப்படி இருக்க வேண்டுமோ அப்படியே இருப்பதாய் பாவனை செய்தபடி, அவன் கண்களைப் பார்த்து சிரிக்க முயற்சித்தாள். ஆனால் எல்லாம் முடிந்து போய் விட்டதென்பதைத் தன் உள்ளத்தின் ஆழத்தில் அவள் உணரவே செய்தாள். தான் தேடியது அவனிடம் கிடைக்கவில்லை என்பதை அவள் கண்டுகொண்டாள். கொகோவுடனான நட்பில் முன்பு அது தனக்குக் கிடைத்திருந்ததை அவள் அறிவாள்.
தன்னை மணந்து கொள்ள விரும்புவதாகத் தன் தந்தைக்குக் கடிதம் எழுதுமாறு அவனிடம் சொன்னாள். அப்படியே சத்தியம் செய்து தந்த அவன், மறுமுறை அவளை சந்தித்தபோது தன்னால் இப்போது உடனே அப்படி எழுத முடியாதென்றான். தெளிவில்லாத கபடமான அவனது பார்வையைக் கண்டபோது அவன் மீதான அவநம்பிக்கை அவளுக்குள் மேன்மேலும் பெருகியது.
மறுநாள் அவனிடமிருந்து அவளுக்கு ஒரு கடிதம் வந்தது. தனக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டதாகவும் தன் மனைவி தன்னை விட்டு எப்போதோ விலகிப் போய்விட்டதாகவும் அதில் அவன் எழுதியிருந்தான். இதைக்கேட்டு அவள் தன்னை வெறுக்கக்கூடும் என்பதை அறிந்திருப்பதாகவும் அதற்காக அவளிடம் மன்னிப்புக் கேட்பதாகவும் குறிப்பிட்டிருந்தான். அவனை நேரில் வரச்செய்த அவள், தான் அவனை உண்மையாக நேசிப்பதால் – திருமணம் செய்து கொண்டாலும்,செய்யாவிட்டாலும் அவனோடு என்றென்றும் பிணைக்கப்பட்டிருப்பதாக உணருவதாகவும் அவனிடமிருந்து ஒருபோதும் பிரிந்து செல்லப்போவதில்லை என்றும் கூறினாள்.
மறுமுறை அவர்கள் சந்தித்தபோது தானும் தன் பெற்றோரும் மிகவும் ஏழைகள் என்றும் அவளுக்கு மிகக்குறைந்த அடிப்படை வசதியை மட்டுமே தன்னால் செய்து தர முடியும் என்றும் அவன் சொன்னான். தனக்கு அப்படி எந்தத் தேவையும் இல்லை என்று பதிலளித்த அவள் அவன் எங்கே செல்ல விரும்பினாலும் உடனடியாக அவனுடன் செல்லத் தான் தயாராக இருப்பதாகக் கூறினாள். ஆனால் அவனோ அதை ஏற்காமல் அவளைத் தடுக்கவே முயன்றான். சில காலம் காத்திருக்குமாறு அவளுக்கு யோசனை சொன்னான், அதனால் அவளும் காத்திருந்தாள்.
ஆனால் அவ்வப்போது சந்தித்துக் கொண்டும் கடிதத்தொடர்பு வைத்துக்கொண்டும் குடும்பத்துக்குத் தெரியாமல் மறைவாய் ரகசியமான ஒரு வாழ்க்கையை நடத்துவது மிகவும் பதட்டமும் துன்பமும் தருவதாக இருந்தது. தன்னைக் கூட்டிச் சென்று விடுமாறு மீண்டும் அவள் அவனிடம் வற்புறுத்தினாள்.
செயிண்ட் பீட்டர்ஸ்பர்குக்கு முதல் முறை அவள் திரும்பிவந்தபோது தானும் அங்கே வருவதாக வாக்களித்து அவன் கடிதம் எழுதினான். பிறகு கடிதங்கள் வருவதும் குறைந்து போய் நின்று போயின. அவனைப்பற்றி அதற்குப் பிறகு எந்தச்செய்தியுமே அவளை எட்டவில்லை.
தன் பழைய வாழ்க்கைக்கு மீண்டும் திரும்ப அவள் முனைந்தாள், ஆனால் அவளுக்கு அது சாத்தியமாகவில்லை. நோய்வாய்ப்பட்டாள். மருத்துவர்கள் மேற்கொண்ட முயற்சிகளும் அதிகம் பயன் தருவதாக இல்லை. என்ன செய்வதென்று புரியாத நிலையில் தன்னைத்தானே மாய்த்துக்கொள்ள அவள் முடிவு செய்தாள். ஆனால்..அதை எப்படிச் செய்வது? அந்தத் தற்கொலை உண்மையான மரணத்தைப் போலத் தோன்ற வேண்டுமானால் அவள் என்ன செய்ய வேண்டும்?
உண்மையிலேயே உயிரை விட்டுவிட வேண்டுமென்று
ஆசைப்பட்ட அவள், அப்படி ஒரு உறுதியான தீர்மானத்துக்குத் தான் வந்து சேர்ந்து விட்டதாக முடிவு கட்டிக்கொண்டாள். விஷம் வாங்கி வந்து ஒரு கண்ணாடிக் கோப்பையில் அதை ஊற்றிக்கொண்டாள். அவள் அதை விழுங்குவதற்குள்…, மிகச்சரியாக அதே நேரத்தில் பாட்டி கொடுத்த பொம்மையை அவளிடம் காட்டுவதற்காக அவளது சகோதரியின் ஐந்து வயது மகன் அவளது அறைக்குள் ஓடி வந்து விட்டான். அவனைக் கொஞ்சியபடி தான் செய்ய முற்பட்ட செயலைச் சட்டென்று நிறுத்தி விட்டுக் கண்ணீர் விடத் தொடங்கினாள் அவள்
அவன் மட்டும் திருமணமாகாதவனாக இருந்திருந்தால் தானும் கூட ஒரு தாயாகி இருக்கக் கூடும் என்ற எண்ணம் அவளை ஆட்கொண்டது. தாய்மையின் மனக் காட்சி முதன்முதலாகத் தன் சொந்த ஆன்மாவுக்குள் ஊடுருவி நுழைந்து பார்க்குமாறு அவளைத் தூண்டியது. பிறர் தன்னைப் பற்றி என்ன சொல்வார்கள் என்பதைப்பற்றி நினைக்காமல் தன் சொந்த வாழ்க்கையைப் பற்றி மட்டுமே அவள் நினைத்துப் பார்க்க ஆரம்பித்தாள். உலகம் என்ன சொல்லும் என்பதற்காக உயிரைப் போக்கிக் கொள்வது சுலபம்தான், ஆனால் தன் சொந்த வாழ்க்கையே அந்த உலகத்திலிருந்து விலகிக்கிடக்கும்போது – அதை உணர்ந்து கொண்ட அந்தக்கணத்தில் அதற்காக உயிரை விடுவது பொருளற்றதென்றே அவளுக்கு பட்டது. விஷத்தைத் தூக்கியெறிந்த அவள் தற்கொலை பற்றி சிந்திப்பதையும் நிறுத்தி விட்டாள்.
அதற்குப் பிறகுதான் அவளுக்குள் இருக்கும் சொந்த அக வாழ்க்கை தொடங்கியது. அதுவே அவள் வாழ்ந்த உண்மையான வாழ்க்கை, ஒருவேளை அதிலிருந்து திரும்பி வர வாய்ப்புக் கிடைத்திருந்தாலும் அவள் அப்படி வந்திருக்க மாட்டாள். அவள் பிரார்த்தனை செய்யத் தொடங்கினாள், ஆனால் அதில் எந்த வகையான ஆறுதலும் அவளுக்குக் கிடைக்கவில்லை. ஆனால் தன் தந்தை எப்படித் துன்பப்படுவார் என்பதை அவளால் அனுமானிக்க முடிந்ததால் – அதை அவள் புரிந்து வைத்திருந்ததால்,அதோடு ஒப்பு நோக்கும்போது தான் படும் துன்பம் குறைவென்றே அவளுக்குத் தோன்றியது.
மாதங்கள் இவ்வாறு ஓடிக்கொண்டிருக்க அவளது வாழ்வையே முழுமையாகப் புரட்டிப்போடும் விஷயம் ஒன்றும் நடந்தது. ஒரு நாள் தன் படுக்கையின் மீது அமர்ந்து ஏதோ கைவேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென்று ஏதோ வித்தியாசமான ஒன்றை அவள் தன்னுள்ளே உணர்ந்தாள். இல்லை…அப்படி இருக்க வாய்ப்பே இருக்காது என்றுதான் அவளுக்குத் தோன்றியது. கையில் இருந்த வேலையோடு அவள் அப்படியே ஸ்தம்பித்து அமர்ந்திருந்தாள். கருவுற்றிருப்பதற்கான அடையாளமா இது..? அது சாத்தியம்தானா? அவனது கீழ்மை,துரோகம்…தன் தாய்-தந்தையின் வருத்தம் எல்லாவற்றையும் மறந்து போனவளாய் அவள் புன்னகை செய்தாள். தன்னோடு சேர்த்து அந்த உயிரையும் கொல்ல முற்பட்டு விட்ட தன் செயல் நினைவுக்கு வந்தபோது அவளுக்கு நடுக்கம் ஏற்பட்டது.
இப்போது அவளது எண்ணங்களெல்லாம் எங்காவது கண்காணாத ஓரிடத்துக்குச் சென்று அந்தக்குழந்தையைப் பெற்றுக் கொள்வதில் மட்டுமே குவிந்திருந்தன. அவள் பரிதாபத்துக்குரிய பாவப்பட்ட ஒரு தாயாகத்தான் இருப்பாள், ஆனாலும் அதே சமயத்தில் எப்படியோ ஒரு அன்னையாகவும் இருப்பாள். எல்லாவற்றையும் கச்சிதமாகத் திட்டமிட்டு ஏற்பாடு செய்தாள் அவள். வீட்டை விட்டு வெகுதூரத்தில், தொலைதூர மாகாணத்திலிருக்கும் ஊர் ஒன்றில்…! அங்கே தன்னைக் கண்டுபிடிக்க எவராலும் முடியாது என்றும் தன் சொந்தக்காரர்களிடமிருந்து தான் விலகி இருப்போம் என்றும் அவள் நினைத்தாள்.
ஆனால் துரதிருஷ்டவசமாக – அவளால் முன்கூட்டியே எண்ணிப் பார்க்க முடியாத ஒரு நிகழ்வாக, அவளது தந்தையின் சகோதரரே அங்கே பதவியேற்று வந்து விட்டார். மரியா என்னும் ஒரு மருத்துவத் தாதியின் வீட்டில் அவள் நான்கு மாத காலம் வாழ்ந்து வந்தாள். தன் சித்தப்பா அதே ஊருக்கு வந்து விட்டதை அறிந்ததும் இன்னும் கூடத் தள்ளியிருக்கும் மறைவான ஓர் இடத்துக்குப் பறந்து செல்ல வேண்டும் என்றுதான் அவள் எண்ணிக் கொண்டிருந்தாள்.
3
மைக்கேல் இவானோவிச் மறுநாள் காலையில் சீக்கிரமே கண்விழித்தார். தன் சகோதரரின் படிக்கும் அறைக்குள் சென்று குறிப்பிட்ட தொகை நிரப்பப்பட்டிருந்த ஒரு காசோலையை அவரிடம் தந்தார். அதிலுள்ள தொகையில் மாதாமாதம் ஒரு பகுதியைத் தன் மகளுக்குத் தருமாறு கேட்டுக்கொண்டார். செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் செல்லும் ரயில் எப்போது கிளம்புகிறதென்றும் விசாரித்தார். பயணம் கிளம்பும் முன் இரவுச்சாப்பாட்டைச் சற்று முன்கூட்டியே முடித்துக்கொள்ள வசதியாக இரவு ஏழு மணிக்கு வண்டி புறப்படுவதை அறிந்து கொண்டார். தம்பி மனைவியோடு சேர்ந்து அமர்ந்து காலை சிற்றுண்டி அருந்தினார். அவருக்கு வேதனையளிக்கும் விஷயத்தைப் பேசாமல் தவிர்த்தாலும் அவள் சற்று தயக்கத்துடனேயே அவரைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
சிற்றுண்டிக்குப் பிறகு வழக்கமான காலை நடைக்கு அவர் கிளம்பினார்.
அலெக்ஸாண்ட்ரா டிமிட்ரேய்வ்னா, ஹால் வரை அவரைப்பின் தொடர்ந்து சென்றாள்.
“ பொதுப்பூங்காவுக்குப் போ மைக்கேல்! அது மிகவும் அழகான இடம், ’எல்லாவற்றுக்கும் அருகிலும்’ கூட” என்றாள் அவள்.
அவரது சோர்வான பார்வையை அவளது கண்கள் இரக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தன.
மைக்கேல் இவானோவிச் அவளது ஆலோசனைப்படியே ’எல்லாவற்றுக்கும் பக்கத்தில்’ இருக்கும் அந்தப் பொதுப் பூங்காவுக்குச் சென்றார். பெண்களிடம் உள்ள முட்டாள்தனம்,பிடிவாதம்,இதயமில்லாத போக்கு என்று இவற்றைப் பற்றியெல்லாம் அவர் அசை போட்டுக்கொண்டிருந்தார்.
‘அவள் என்னைப்பற்றித் துளிக்கூடக் கவலைப்படவில்லை’ என்று தன் தம்பி மனைவியைப் பற்றி நினைத்துக்கொண்டார்.
“நான் படும் வேதனையை அவளால் விளங்கிக்கொள்ள முடியவில்லையே…? என்ன பிரயோஜனம் அவளால்?”
பிறகு அவர் தன் மகளைப்பற்றி சிந்திக்க ஆரம்பித்தார்.
“இப்படிப்பட்ட இந்தச் சித்திரவதை என்னை எப்படிப்பாதிக்கும் என்று அவளுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். வயதான காலத்தில் இது எப்படிப்பட்ட ஒரு அடி? இதனால் என் ஆயுள் கூடக் குறைந்துதான் போகப் போகிறது. அது போனால் போகட்டும்…, இப்படி ஒரு துன்பத்தை சுமந்து கொண்டிருப்பதை விட அது எவ்வளவோ மேல்..’ ‘ ஐயோ’ என்று துயரத்தோடு மெள்ள முனகினார் அவர். ஊரிலிருக்கும் எல்லோருக்கும் விஷயம் தெரிந்து போனால் எப்படியெல்லாம் பேசுவார்கள் என்று நினைத்துப் பார்த்தபோது வெறுப்பும் கோபமும் அலையலையாய் அவருள் மண்டி எழுந்தன.( இதற்குள் எல்லோருக்கும் அது தெரிந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை)
அவள் எப்படிப்பட்ட ஒரு காரியத்தைச் செய்திருக்கிறாள் என்பதைப் பொட்டில் அறைந்து புரிய வைக்க வேண்டும் என்பது போன்ற ஓர் ஆவேசம் அவரை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது.
‘இந்தப் பெண்களால் ஒருபோதும் அதைப்புரிந்து கொள்ள முடியாது’.
‘அது ’எல்லாவற்றுக்கும் அருகில்’ இருக்கிறது’
என்ற வார்த்தைகள் சட்டென்று அவருக்கு நினைவு வர, குறிப்பேட்டை எடுத்து அவளது முகவரியைப் பார்த்தார்.
’வேரா இவானோவ்னா ஸில்வெஸ்ட்ரோவ்னா,
குகான்ஸ்கயா தெரு,
ஏப்ரோமோவ் வீடு’
இந்தப் பெயருடன்தான் அவள் அங்கே வசித்து வந்தாள். அவர் பூங்காவை விட்டு வெளியே வந்து வாடகைக்கு ஒரு வண்டியைப் பிடித்தார்.
“உங்களுக்கு யாரைப் பார்க்க வேண்டும் ஐயா?”
புழுக்கம் நிறைந்த செங்குத்தான படிக்கட்டுக்குச் செல்லும் குறுகலான பகுதியில் அவர் காலெடுத்து வைத்தபோது இவ்வாறு கேட்டாள் மருத்துவத் தாதியான மரியா இவானோவ்னா.
“மேடம் ஸில்வெஸ்ட்ரோவ்னா இங்கேதானே வசிக்கிறார்கள்”
“ஓ வேரா இவானோவ்னாதானே? ஆமாம்..இங்கேதான் இருக்கிறாள். உள்ளே வாருங்கள். அவள் இப்போது வெளியே போயிருக்கிறாள், இதோ மூலையில் இருக்கும் கடைக்குத்தான், ஒரு நிமிடத்தில் திரும்பி வந்து விடுவாள்”
பருமனாக இருந்த மரியா இவானோவ்னாவைத் தொடர்ந்து ஒரு சிறிய வரவேற்பறைக்குச்சென்றார் மைக்கேல். அடுத்தாற்போல் ஒட்டி இருந்த அறையிலிருந்து ஒரு குழந்தை கிறீச்சிடும் ஓசை கேட்டது. அந்த ஓசை அவருள் வெறுப்பை நிறைத்தது. எரிச்சலும் கோபமும் ஊட்டும் அந்த அழுகுரல் அவரை வாள் கொண்டு பிளப்பது போல் இருந்தது.
மரியா அவரிடம் மன்னிப்புக்கேட்டுக் கொண்டு அடுத்த அறைக்குள் சென்றாள். குழந்தையை அவள் சமாதானப்படுத்திக் கொண்டிருப்பது அவருக்குக் கேட்டது. குழந்தை சற்று அமைதியான பிறகு அவள் திரும்பி வந்தாள்.
“இது அவளுடைய குழந்தைதான். இப்போது ஒரு நிமிடத்தில் அவள் இங்கே வந்து விடுவாள், நீங்கள் அவளுக்குத் தெரிந்த நண்பராக இருக்கலாமென்று நினைக்கிறேன்…சரிதானே”
“ அ ..அ…ஆமாம்.நண்பர்தான்..ஆனால் நான் இப்போது போய்விட்டுப் பிறகு எப்போதாவது வரலாமென நினைக்கிறேன்”
என்று சொன்னபடி கிளம்ப ஆயத்தமானார் மைக்கேல்..
அவளைப் பார்ப்பதற்குச் செய்து கொள்ள வேண்டியிருந்த ஆயத்தமும்..கொடுக்க வேண்டியிருந்த விளக்கமும் அவரால் சகித்துக் கொள்ள முடியாதவையாக இருந்தன.
அங்கிருந்து கிளம்ப எண்ணித் திரும்பியபோது படிக்கட்டில் விரைவான மெல்லிய காலடி ஓசைகள் கேட்டன, லீஸாவின் குரலையும் அவர் இனம் கண்டுகொண்டார்.
“மரியா, நான் போனதிலிருந்தே அவன் அழுது கொண்டிருக்கிறானா என்ன? நான்..” என்று பேசத் தொடங்கியவள் சட்டென்று அங்கே தன் தந்தை இருப்பதைக் கண்டாள். அவள் கையில் பிடித்திருந்த பொட்டலம் நழுவிக் கீழே விழுந்தது.
“ அப்பா” என்று அலறிக்கொண்டே கதவருகே அவள் உறைந்து நின்றாள். வெளிறிப்போயிருந்த அவள் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது.
அவர் அவளையே வெறித்துப் பார்த்தபடி அசையாமல் நின்றார். அவள் மிகவும் மெலிந்து போயிருந்தாள். அகலமான விழிகள், எடுப்பான நாசி. அவளது கைகள் மட்டும் காய்த்துப் போய் எலும்பும் தோலுமாய் இருந்தன. அவருக்கு என்ன செய்வதென்றும் தெரியவில்லை, என்ன பேசுவதென்றும் புரியவில்லை. தனக்கு ஏற்பட்ட அவமதிப்பினால் தான் அடைந்த துக்கத்தையெல்லாம் அவர் இப்போது மறந்து போயிருந்தார். அவளுக்காக மட்டுமே வருந்தினார்…அளவு கடந்து வருந்தினார். அவள் இப்படி வற்றி மெலிந்து போயிருப்பதற்காக,அவள் அணிந்திருந்த மோசமான முரட்டுத்துணிகளுக்காக, எல்லாவற்றையும் விடப் பரிதாபகரமான அவளது முகத்துக்காக, மன்றாடும் அந்த விழிகளுக்காக…!
“அப்பா..என்னை மன்னித்து விடுங்கள்”என்று சொன்னபடி அவருகே வந்தாள் அவள்.
“ நீ என்னை மன்னிக்கவேண்டும்.. ஆமாம்..என்னை மன்னித்து விடு”என்று முணுமுணுத்த அவர் ஒரு குழந்தையைப் போல விம்ம ஆரம்பித்திருந்தார். அவளது முகத்திலும் கண்களிலும் முத்தம் கொடுத்தபடி அவற்றைத் தன் கண்ணீரால் நனைத்தார்.
அவளுக்காக மனமிரங்கிக் கசிந்தபோதுதான் அவர் தன்னைப் பற்றியே புரிந்து கொண்டார். தான் எப்படி இருந்தோம் என்று தனக்குத்தானே யோசித்துப் பார்த்தபோதுதான்..தான் அவளுக்கு எப்படிக் கொடுமை இழைத்திருக்கிறோம் என்பதும், தன் அகம்பாவமும், அவளிடம் காட்டிய கடுமையும், தான் கொண்டிருந்த கோபமும் எல்லாமே தவறு என்பதும், உண்மையில் தானே குற்றவாளி என்ற குற்ற உணர்வும் அவருக்கு விளைந்தது. தவறு செய்திருப்பவர் அவர்தான். அவர் மன்னிப்பதற்கு அங்கே எதுவும் இல்லை. உண்மையில் மன்னிக்கப்பட வேண்டியவர் அவர்தான். அவள் தன் சிறிய அறைக்கு அவரை அழைத்து சென்று தன் வாழ்க்கையைப்பற்றிச் சொன்னாள். ஆனால் தன் குழந்தையை அவரிடம் காட்டவோ இறந்த காலம் பற்றிப் பேச்செடுக்கவோ அவள் முயலவில்லை, அது அவருக்கு எப்படிப்பட்ட வேதனையை அளிக்கக்கூடும் என்பதை அவள் அறிந்திருந்தாள்.
அவள் வேறுவகையாக வாழ வேண்டும் என்றார் அவர்.
“ஆமாம்..ஆனால்…ஊரில் வாழ வாய்ப்புக் கிடைத்தால் மட்டுமே அது சாத்தியம்” என்றாள் அவள்.
“ அது பற்றி நாம் பேசுவோம்” என்றார் அவர்.
திடீரென்று குழந்தை அழவும், வீறிடவும் தொடங்கியது. அவள் தன் கண்களைஅகலத் திறந்து பார்த்தாள். தன் தந்தையின் முகத்திலிருந்து கண்ணெடுக்காமல் பார்த்தபடி தயக்கத்தோடு அசையாமல் அமர்ந்திருந்தாள்.
“அவனுக்கு நீ இப்போது ஆகாரம் தர வேண்டுமென்று நினைக்கிறேன்” என்றார் மைக்கேல் இவானோவிச்.
அவள் தான் அமர்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்து கொண்டாள். தான் ஆழமாக நேசித்த ஒருவரிடம் , இந்த உலகிலுள்ள எல்லாவற்றையும் விட உயர்வாகத் தான் இப்போது நேசிக்கும் அந்தக்குழந்தையைக் காட்ட வேண்டும் என்ற தீவிரமான ஆசை அவளைப் பற்றிக்கொண்டது. ஆனால்..முதலில் தன் தந்தையின் முகத்தைப் பார்த்தாள். அவர் கோப்படுவாரா,மாட்டாரா? ஆனால் அந்தத் தந்தையின் முகத்தில் கோபத்துக்கு பதிலாக வருத்தமே நிறைந்திருந்தது.
“ சரி …நீ உள்ளே போ. கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும், நான் நாளை திரும்பவும் வருகிறேன். அப்போது எல்லாம் முடிவு செய்து கொள்ளலாம், குட்பை கண்ணா,போய் வருகிறேன்” என்றார் அவர்.
தொண்டையில் விழுங்க முடியாமல் ஏதோ அடைத்துக் கொண்டிருப்பதை மீண்டும் உணர்ந்தார் அவர்.
தன் சகோதரரின் வீட்டுக்குத் திரும்பி வந்த மைக்கேல் இவானோவிச்சிடம் உடனே ஓடி வந்தாள் அலெக்ஸாண்ட்ரா டிமிட்ரேய்வ்னா.
“உம்..அப்புறம்”
“அப்புறம் என்ன? ஒன்றும் இல்லை”
“ நீ பார்த்தாயா”
அவரது முக பாவனையைக்கொண்டு ஏதோ நடந்திருக்குமென்பதை ஊகித்து விட்ட அவள் இவ்வாறு கேட்டாள்.
“ஆமாம்” என்று சுருக்கமாக பதில் தந்த அவர் அழ ஆரம்பித்தார்.
“ எனக்கு வயதாகிக்கொண்டு வருகிறது..முட்டாளாகவும் ஆகிக்கொண்டு வருகிறேன்” என்றார் தன் உணர்வுகளைக் கட்டுக்குள் கொணர்ந்தபடி..
“இல்லை, இப்போதுதான் நீ அறிவாளியாக ஆகியிருக்கிறாய். மிக மிக அறிவாளியாக”
‘என் கனவு’ உங்களுக்குப் பிடித்திருக்கும் இல்லையா?”
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக