துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

27.6.09

தேவந்தி


தேவந்தியின் கதையை மீட்டுருவாக்கம் செய்துள்ள இச் சிறுகதையைத் தொடங்குமுன் சிலப்பதிகாரத்தை அடியொற்றி அவள் குறித்த ஒரு முன் குறிப்பு

சிலப்பதிகாரக் காப்பியத்தில் , தலைவி கண்ணகியின் உற்ற தோழி தேவந்தி. மதுரையில் கண்ணகிக்கு நிகழப் போகும் தீமை பற்றித் தனக்கு முன்னறிவிப்பாக ஏற்பட்ட கனவைக் கண்ணகி பகிர்ந்து கொள்வது தேவந்தியோடுதான்.
தேவந்தியும் கண்ணகியைப் போலவே கணவனைப்பிரிந்திருப்பவள்தான்.
பூம்புகார் நகரிலுள்ள சோமகுண்டம் , சூரிய குண்டம் ஆகிய நீர்த் துறைகளில் மூழ்கிக் காம வேள் கோட்டத்தைக் கை தொழுதால் பிரிந்த கணவன் திரும்பி வருவான் என்று தேவந்தி கூறக் கண்ணகி அதை மறுத்து விடுகிறாள்.
தேவந்தி இடம்பெறும் 'கனாத் திறம் உரைத்த காதை' என்ற இந்தக் காட்சியில் , தேவந்தியின் கிளைக் கதையைச் சற்று விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறார் இளங்கோ .

அந்தணக் குலத்தில் பிறந்த தேவந்தியின் மாமனாருக்கு இரு மனைவிகள்.அவர்களில் மாலதி என்பவளுக்கு மட்டும் குழந்தைகள் இல்லை.மற்றவளுக்கு ஒரு குழந்தை இருக்கிறது.
குழந்தையின் பெற்றோர் வெளியே சென்றிருக்கும் சமயத்தில் மாலதி , மாற்றாளின் குழந்தைக்குப் பாலூட்டப் பால் விக்கி அது இறந்து விடுகிறது. அஞ்சி நடுங்கிய மாலதி குழந்தையைத் தூக்கிக் கொண்டு புகார் நகரிலுள்ள கோவில்களுக்கெல்லாம் ஓடுகிறாள்.அங்கேயே 'பாடு' (தவம்)கிடக்கிறாள்.
ஒரு கட்டத்தில் பிணங்களைத் தின்னும் இடாகினி என்னும் பேய் குழந்தையைத் தூக்கிக் கொண்டு மறைந்து விடுகிறது.
செய்வதறியாமல் மயங்கும் மாலதியின் மனதிற்குள் பாசண்டச் சாத்தன் என்ற தெய்வ உருவம் தோன்றி ஆறுதல் அளிக்கிறது. தானே குழந்தையாக வந்து அவளது துயரைத் தீர்ப்பதாகக் கூறும் அது ..அவ்வாறே அவள் முன் ஒரு குழந்தை வடிவில் கிடக்கிறது.அளவற்ற மகிழ்ச்சியுடன் அதை எடுத்துச் செல்லும் மாலதி அவனைத் தங்கள் மகனாக எண்ணியே வளர்க்கிறாள்.

பாசண்டச் சாத்தனும் மனித உருவில் வளர்ந்து ஆளாகித் தன் தாய் தந்தையர்க்குச் செய்ய வேண்டிய அனைத்துக் கடமைகளையும் - நீர்க்கடன் கழிப்பது வரை செம்மையாகச் செய்து முடிக்கிறான்.
தனது உலகியல் கடமைகளில் ஒரு பகுதியாகத் தேவந்தியை மணந்து எட்டு ஆண்டுக் காலம் அவளோடு வாழ்கிறான்.
(சாத்தன் தீவலம் செய்து தேவந்தியை மணமுடித்து அவளோடு சேர்ந்து வாழ்ந்தபோதும் அவர்கள் கணவன் மனைவி உறவுடன் வாழவில்லை - தேவந்தியும் சாத்தனும் உடல் உறு கூட்டம் இல்லாத் தெய்வக் கற்புக் காதலர் என அறிஞர் தெ. பொ.மீஅவர்கள் குறிப்பிடுவார்)

எட்டு ஆண்டுகள் முடிந்தபின் ,(தாய் தந்தையர்க்கு ஆற்ற வேண்டிய கடமைகள் முடிந்ததும்) தான் கடவுள் என்பதை அவளுக்கு உணர்த்திவிட்டு அவளோடு இணைந்து வாழாமல்- தன் கோட்டத்திற்குள்(கோயில்)சென்று - அவள் தன்னைக் காண வேண்டுமென்றால் இனிமேல் அங்கேதான் வந்தாக வேண்டுமெனக் கூறிவிட்டு மறைந்து போகிறான்.
உண்மையை ஊராரிடம் உள்ளபடி கூற முடியாத தேவந்தி , தன் கணவன் தீர்த்த யாத்திரை சென்றிருப்பதாகவும் ,அவன் விரைவில் வர வேண்டுமென்பதற்காகவே தான் கோயில் குளங்களைச் சுற்றி வருவதாகவும் கூறி நாட்களை நகர்த்துகிறாள்.
இறுதியாகக் காப்பியம் முடியும்போது , சேரன் கண்ணகிக்காக எடுத்த கோயிலுக்கு வந்து தன் தோழியை எண்ணிப் புலம்புகிறாள்.அவள் மீது ஆவேசிக்கும் (தெய்வம் ஏறிய நிலை) சாத்தன் வழியாகவே கோவலனின் தாய் , கண்ணகியின் தாய் , மாதரி முதலியோரின் பழம் பிறப்புக்கள் உணர்த்தப்படுகின்றன. கண்ணகி கோயில் பூசனைக்கும் தேவந்தியையே பொறுப்பாக்குகிறான் சேரன் செங்குட்டுவன்.
தேவந்தி கதையின் இந்த அடிப்படை , கீழ்க் காணும் என் சிறுகதைப் படைப்பில் பெண்ணிய நோக்கில் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.


இனி......சிறுகதை...
(நன்றி: இக் கதையைப்பிரசுரம் செய்த 'வடக்கு வாசல்' இதழுக்கு -நவ.'07)

அந்தப்புர மேன் மாடத்தை அழகுபடுத்திக் கொண்டிருந்த சிலைகளோடு
தானும் ஒருசிலையாய்ச்சமைந்து போய் அசைவற்று நின்று கொண்டிருந்தாள் கண்ணகி.
இரு நிதிக் கிழவனான அவள் தந்தை மாநாய்கன் , தன் செல்வப் புதல்விக்குச் சீதனமாய்த் தந்திருந்த எழுநிலை மாடங்கள் கொண்ட பிரம்மாண்டமான அந்த மாளிகையின் தனிமை ...அவள் முகத்தில் அறைந்தது.அதிலும் கோவனோடு பல நாட்கள் ஒன்றாகக் கூடியிருந்து நிலவின் பயனை இருவருமாய்த் துய்த்திருந்த அந்த முத்து மாடம் ....அவளது அந்தரங்கக் கதைகளை ஒவ்வொன்றாகக் காதுக்குள் ஓதியபடி , அந்த வெறுமையின் அவலத்தை மேலும் விசிறி விட்டுக் கொண்டிருந்தது. நினைவு நதி கிளர்த்திவிட்ட எண்ண அலைகளின் ஓங்காரச் சுழலுக்குள் சிக்கிச் சுழன்றபடி அவள் போராடிக் கொண்டிருந்த அந்தத் தருணத்தில் ....அருகே நிழல் தட்டியது.

''கண்ணகி ! நீ இப்போது துணுக்குற்றுத் திரும்பிப் பார்த்த கோலம் எப்படி இருந்தது தெரியுமா ? கோவலரை நீ எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்ததுபோலத்தான் எனக்குத் தோன்றியது.''

''என் நிலைமை ...நீ கூடப் பழிக்கும்படி ஆகிவிட்டதல்லவா தேவந்தி ? ஆனால் ஒரு வகையில் பார்த்தால் நீ சொல்வதிலும் உண்மை இல்லாமல் இல்லை. ஒரு வேளை ...இன்று காலை நான் கண்ட கனவு மெய்ப்பட்டால் ...அவர் விரைவில் என்னை நாடி வருவது உறுதி ! அவர் வருவதில் மகிழ்ச்சிதானென்றாலும் , அந்தக் கனவின் கோரமான மற்றொருபக்கம்தான் என்னை மிரட்டிக் கொண்டிருக்கிறது...''

முகம் தெரியாதஒரு பட்டினத்தில்...இனம் தெரியாத ஏதோ ஒருவகை ஆபத்து தங்களை எதிர்கொள்ளக் காத்திருப்பதாக அன்று அதிகாலையில் தான் கண்ட கனவைத் தேவந்தியிடம் கொட்டித் தீர்த்தாள் கண்ணகி.

''இப்படி அந்தப்புரச் சிறையிலேயே அடைந்து கிடந்தால் ...உனக்கு வேறு எந்த மாதிரியான கனவுகள்தான் வரக் கூடும் கண்ணகி ...? உன்சீறடியை அலங்கரித்த சிலம்பைக் கழற்றி விட்டாய் ! நெற்றியில் திலகம் அணிவதையும் நிறுத்தி விட்டாய் ! மங்கலத் தாலி ஒன்றைத் தவிரப் பிற எல்லா அணிகலன்களையும் துறந்து விட்டாய் ! இன்னும் எத்தனை நாள்தான் இப்படி அவரது வருகையை எதிர்நோக்கி இங்கேயே தவமிருக்கப் போகிறாய் ? ..நானும் உன்னைப் போலக் கணவரைப் பிரிந்திருப்பவள்தான் ! ஆனாலும் கோயில்...வழிபாடு ....நோன்பு என்று ஏதேதோ செய்து என் மனதை ஆற்றிக் கொள்ளவில்லையா ?..நீயும் வெளியே வா கண்ணகி ! வெளிக் காற்றைச் சற்றே சுவாசி !''

''தேவந்தி ! போதும் நிறுத்திக் கொள் ! உன்னை இன்னும் கொஞ்சம் பேச விட்டால் ..சோமகுண்டம் , சூரிய குண்டம் என்று புகார் நரத்திலுள்ள புனிதக் குளங்களையெல்லாம் பட்டியலிடத் தொடங்கி விடுவாய் ! காமவேள் கோட்டத்தைத் தொழுவதற்குக் கூட என்னை அழைக்க ஆரம்பித்து விடுவாய் !''

''அதில் தவறென்ன கண்ணகி ?''

''அது எனக்குப் பெருமையில்லை தேவந்தி ! அது...பீடில்லாத செயல் என்று நினைப்பவள் நான் . என் கணவர் என்னிடம் திரும்பி வருகிறார் என்றால் ...அது என் அன்பின் வலிமையால்தான் சாத்தியப்பட வேண்டும் ! அது எப்போது முடியவில்லையோ ...அப்போது பிற புறக் காரணிகளுக்கு அங்கே வேலையில்லை.''

தேவந்தி அதைக் கேட்டு ஏளனமாகச் சிரித்தாள்.

''உன் அன்புக்கோ ...அல்லது நான் செய்து கொண்டிருக்கிற நோன்புக்கோ அந்த வலிமை நிச்சயம் இல்லையடி பயித்தியக்காரி !''

அந்த வார்த்தைகள் கண்ணகியைச் சற்றே வியப்பில் ஆழ்த்தின.

''பிறகு நீ ஏன் இப்படிக்....''

''கோயில் கோயிலாக வலம் வருகிறேன் என்றுதானே கேட்கப் போகிறாய் ? ..தெரிந்துதான் செய்கிறேன் கண்ணகி ! இதனாலெல்லாம் என் கணவர் நிச்சயம் வரப்போவதில்லை என்பதை நன்றாகத் தெரிந்து கொண்டுதான் இப்படியெல்லாம் நான் செய்து கொண்டிருக்கிறேன்''

''அப்ப்டியெல்லாம் பேசாதே தேவந்தி ! மாதவியின் கலை மயக்கத்தில் கட்டுண்டு கிடக்கும் கோவலர் கூடக் கட்டாயம் திரும்பி வந்து விடுவார் என்று நான் நம்பிக்கையோடு இருக்கும்போது உனக்கு ஏன் இந்த விரக்தி ?''

''இது விரக்தியில்லை கண்ணகி ! நிஜம் ! சுட்டெரிக்கும் நிஜம் !''

''உன் கணவர் தீர்ர்த்தத் துறைகளில் படிந்து வரத்தானே போயிருக்கிறார் ?''

''அது ...இந்த உலகின் கண் முன்னே அரங்கேறும் நாடகம் ! ஆனால் உண்மை வேறெங்கோ பாதாளத்தில் பதுங்கிக் கொண்டு கண்ணா மூச்சி ஆடிக் கொண்டிருக்கிறது.''

''என்னிடம் அதைப் பகிர்ந்து கொள்வதால் உனக்கு ஆறுதல் கிடைக்குமென்று நீ நினைத்தால்...''

கண்ணகி வார்த்தையை முடிப்பதற்கு முன் தேவந்தி வெடித்தாள்.

''என்றாவது ஒரு நாள் உன்னிடம் மட்டுமே அதைச் சொல்லியாக வேண்டும் என்ற
தாகத்துடன் ...என் நெஞ்சக் கூட்டுக்குள் அடைகாத்து வருகிறேன் கண்ணகி !என் கதையின் மூல வேரை ..அதன் சரியான அர்த்தத்தில் உள் வாங்கிக் கொள்ள உன் ஒருத்தியால்தான் முடியும் !''

கண நேரம் அமைதி காத்த தேவந்தி ...தன் கதையைத் தொடங்கினாள்.

''என் கணவரின் தந்தைக்கு இரண்டு மனைவியர். மூத்தவளான மாலதிக்குக் குழந்தை இல்லாமல் போய் விட்டதால் இரண்டாவதாக ஒரு பெண்ணை அவர் மணந்து கொண்டார் . அவளுக்குப் பிறந்த அந்த ஆண் குழந்தையைப் பொறுப்போடும் , கரிசனத்தோடும் சீராட்டி வளர்த்ததெல்லாம் மூத்த மனைவி மாலதிதான்''

(சிறுகதையின் தொடர்ச்சி அடுத்த பதிவில்)

15.6.09

அறிவிப்பும்,அழைப்பும்

மதுரை , பாத்திமாக் கல்லூரித் தமிழ் உயர் ஆய்வு மையத்தில் என் நெறிகாட்டுதலின் கீழ் முனைவர் பட்ட(Ph.D.,) ஆய்வை மேற்கொண்டு -
தலைப்பு : ஈழக் கவிதைகளில் இருப்பியல் சிக்கல்கள் - சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்திருந்த செல்வி சு.ர.பூங்கொடியின் இறுதிக் கட்ட வாய்மொழித் தேர்வு 22.06.09 முற்பகல் 11 மணி அளவில் , பாத்திமாக் கல்லூரி வளாகத்தில் (அறை எண்:A2) நடைபெற இருக்கிறது.

ஆய்வேட்டை மதிப்பீடு செய்த மூன்று புற நிலைத் தேர்வாளர்களும் ஆய்வேடு , முனைவர் பட்டம் பெறத் தகுதியானதே என அறிக்கை அளித்துள்ளபோதும் பொது வாய்மொழித் தேர்வில் பலராலும் எழுப்பப்படும் வினாக்களுக்கு ஏற்ற வகையில் விடையளித்துத் தன் தகுதிப்பாட்டை மெய்ப்பித்துக்காட்டிய பிறகே முனைவர் பட்டம் உறுதி செய்யப்பட வேண்டுமென்ற நடைமுறைக்கேற்ப இத் தேர்வும் நடைபெற உள்ளது.

இலக்கிய ஆர்வலர்கள்,படைப்பாளிகள், ஆய்வு மாணவர்கள் என அனைவரும் இவ் வாய் மொழித் தேர்வில் கலந்து கொண்டு வினாத் தொடுக்கலாம். மதுரை பாத்திமாக் கல்லூரி நூலகத்தில் 16.06.09 முதல் ஆய்வேடு பார்வைக்கு வைக்கப்படுகிறது.அதைப் படித்துப்பார்த்தும் கேள்விகளைக் கேட்கலாம். முனைவர் பட்ட வாய்மொழித் தேர்வுகள் வெறும் சடங்கு- சம்பிரதாயமாக மாறிவிடாமல் தடுக்க வேண்டுமென்றால் தரமான பார்வையாளர்கள் - உண்மையாகவே ஆய்வுப் பொருளில் ஈடுபாடு கொண்டவர்கள் அதிக அளவில் பங்கேற்று , உரிய - பொருத்தமான விடைகளை ஆய்வு செய்தவரிடமிருந்து வரவழைக்க வேண்டும்.அப்போதுதான் தரமான ஆய்வேடு என்ற சரியான முத்திரை அதற்குக் கிடைக்கும்.

ஆய்வேட்டை மதிப்பீடு செய்திருக்கும் புறநிலைத் தேர்வாளர்களில் ஒருவரான முனைவர் நசீம்தீன் (பெஸ்கி ஆய்வு மையம் , திராவிடப் பல்கலைக் கழகம், குப்பம், ஆந்திரப்பிரதேசம்) அவர்கள் வாய்மொழித் தேர்வுக்கு வருகை புரிந்து மதிப்பீடு செய்த தேர்வாளர்களின் சார்பில் வினாக்களைக் கேட்டுத் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவிருக்கிறார்கள்.நெறியாளர் என்ற முறையில் வாய்மொழித் தேர்வைப் பொறுப்பேற்று நடத்துவது என் கடமையாகிறது.

கவிதைகளிலும்- குறிப்பாக ஈழக் கவிதைகளிலும் ஆர்வம் கொண்ட தமிழ் ஆர்வலர்களும் , திறனாய்வாளர்களும் , ஆய்வு மாணவர்களும் ,எழுத்தாள நண்பர்களும் மேலும் மதுரையிலுள்ள என் நண்பர்கள் என அனைவரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டு தரமானதொரு ஆய்வு அமர்வாக இதை ஆக்கித் தர வேண்டுமென , இவ் வலை வழி அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறேன்.

8.6.09

கழுகும் மனுஷியும்

ஈழப் புலம்பெயர் குறும்படங்களில் பெண் இருப்புக் குறித்து இந்திரா காந்தி திறந்த வெளிப் பல்கலக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டிருக்கும் ஒரு மாணவி,அது குறித்த சில விவாதங்களுக்காக என்னை நாடி வந்தபோது , அத்தகைய குறும்படங்கள் சிலவற்றைக் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.அவற்றுள் ஒன்று கவிஞர் சுமதிரூபன் நடித்து அவரது கணவர் ரூபன் இயக்கிய 'ஒரு மனுஷி' என்ற ஏழு நிமிடக் குறும்படம்.

தங்கள் வாழ்வில் பல பெண்கள் அன்றாடம் எதிர்ப்படும் நடப்பியல் சிக்கலை வசனம் ,பின்னணி இசை ஆகிய எதுவுமின்றி - யதார்த்தமாகக் கண் முன் கொணர்கிறது இக் குறும்படம்.புலம் பெயர்ந்து வாழும் வெளிநாடு ஒன்றில் ஒரு பெண்ணின் மாலை நேரம் சித்தரிப்பிற்குரிய பொருளாகியிருக்கிறது.

எங்கோ சென்று உழைத்துக்களைத்து மாலையில் வீடு திரும்புகிறாள் ஒரு பெண்.வழியிலேயே வீட்டுச் சமையலுக்கான காய்கறி , மற்றும் பிற பொருட்களை வாங்கித் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு கொண்டு வீட்டுக்குள் நுழைகிறாள்.தொலைக்காட்சியில் உச்ச ஸ்தாயியில், ஏதோ ஒரு திரைப்படப் பாடல் ஓடிக் கொண்டிருக்க, சற்றே திரும்பிப் பார்க்கிறாள். அவள் கணவன் ஹாலில் , ஒரு கட்டிலில் சாய்வாக...சௌகரியமாகப் படுத்துக் கொண்டு உள்ளங்காலை நெருடியபடி பாடலை ரசித்துக் கொண்டு அதில் ஆழ்ந்து போய்க் கிடக்கிறான். அவள் உள்ளே நுழைந்ததோ சாமான்களை மிகவும் சிரமத்துடன் சுமந்து கொண்டு வந்ததோ அவனிடம் எந்த அசைவையும் ஏற்படுத்தவில்லை.அவளை அவன் ஏறெடுத்துக் கூடப் பார்க்கவில்லை.

உள்ளே சென்று நைட்டிக்கு மாறி வந்து சமையலறையில் வேலை தொடங்குகிறாள் அவள். அவளும் கூட அவனிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லையென்றபோதும் வேலைக்கு இடையிடையே அவனைப் பார்க்கும் அவளது பார்வையில்தான் எத்தனை வன்மம்? வந்த காலோடு வேலை செய்யும் அலுப்பு ஒருபுறம் இருக்க , அதை விடவும்... தன் இருப்பை அவன் கொஞ்சம் கூட லட்சியம் செய்யாத மனக் குமுறலும் அதை நேரடியாக எதிர்க்கத் துணிவில்லையே என்ற ஆதங்கமும் - தனது கைலாகாத்தனத்தால் தன் மீதே விளைந்த கோபமும் மற்றொரு புறம்...! காய்கறியோ மாமிசமோ வெட்டும்போது மட்டும் அதை ஓங்கி அடித்துச் சத்தம் எழுப்பும் அவளது செயலில் மிகச் சிறியதானதொரு எதிர்ப்பை அவள் பதிவு செய்கிறாள் என்று விளங்கிக் கொள்ள முடிகிறது.சமைத்து முடித்து , சமையல் மேடை ,மற்றுமுள்ள பிற இடங்களைப் பெருக்கிக்கழுவித் தூய்மை செய்கிறாள் அவள்.அப்போதும் அவனிடம் எந்த எதிர் வினையுமில்லை. தன் வசதிக்காகச் சற்றே புரண்டு படுத்துக்கொண்டு மீண்டும் தொலைக் காட்சியில் லயித்துப் போகிறான் அவன்.

தட்டில் உணவைப் போட்டு அவன் இருக்குமிடத்திற்கே எடுத்து வருகிறாள் அவள்.அவளை நிமிர்ந்து கூடப் பார்க்காமல், தொலைக் காட்சியில் பதித்த கண்களைக் கொஞ்சமும் மீட்டுக் கொள்ளாமல் இயந்திரமாகத் தட்டை வாங்கிச் சாப்பிடுகிறான் அவன். அவள் , தனக்கான உணவைத் தானே பரிமாறிக் கொண்டு உணவு மேசையில் தனியே உட்கார்ந்து சாப்பிடுகிறாள். நடுவில் அவன் இருக்கும் திசையில் அவள் கண்தான் பதிகிறதேயன்றி , அவள் அங்கே இருப்பது அவனுக்கு ஒரு பொருட்டாகவே படவில்லை.சாப்பிட்டு முடித்த தட்டை மட்டும் - சற்றுக் கருணை கூர்ந்து ( அல்லது அடுத்த காட்சியின் தடங்கலின்மைக்காகவோ) கழுவும் தொட்டியில் போட்டுவிட்டுத் தன் பழைய வேலையை -தொலக் காட்சி பார்த்தபடி காலைச் சுவாரசியமாகச் சுரண்டும்வேலையைத் தடங்கலின்றித் தொடர்கிறான் அவன்.
.
காட்சி மாறுகிறது. எல்லா வேலைகளையும் முடித்துவிட்டுப் படுக்கை அறைக்குள் அலுத்துச் சலித்து நுழையும் அவளை ஆவலுடன் எதிர்கொள்ள அவளுக்கு முன்பாகவே கட்டிலில் கழுகு போலக் காத்திருக்கிறான் அவன். அதைக் காணும் அவளது முக மாற்றத்தை , மெல்லிய முகச் சுளிப்பைக் காட்டியபடி படம் முற்றுப் பெற்று விடுகிறது.

பெண்ணை - அதிலும் வாழ்க்கைத் துணையாக ஏற்ற மனைவியை, ஒரு மனுஷியாக - சக ஜீவனாகக் கூடப் பார்க்காமல் புறக்கணிப்பிற்கு ஆளாக்கிவிட்டுத் தன் சுய தேவைக்காக மட்டுமே அவளை இரையாக்கும் ஆணாதிக்க மனோபாவத்தை மிகையின்றி முன் வைக்கிறது இக் குறும்படம்.

நேர்த்தியான மிகையற்ற நடிப்பும் ,பொருள் மற்றும் பாத்திரங்களின் சலனங்களைத் தவிர வேறு எதையும் காட்டாத காட்சியமைப்பும் இப் படத்தின் உள்ளடக்கம் அழுத்தமாய்ப் போய்ச் சேரப் பெரிதும் துணை புரிந்திருக்கின்றன. சுமதிரூபன் அவர்களால் எழுதப்பட்ட கீழ்க் காணும் கவிதையின் காட்சிச் சித்திரமாகவே இக் குறும் படம் உருவாக்கப் பட்டிருக்கிறது. அந்தக் கவிதைக்குத் திரை வடிவம் என்பது இதைத் தவிர வேறு எவ்வாறும் இருக்க இயலாது.

கழுகு

அவள் காலச் சக்கரங்கள்
ஓய்வின்றிச் சுழல்கிறது
சூரியப் புலவின் முன் இங்கேயும்
பெண்ணின் பெருமைக்காய் எழுதல்
நிகழத்தான் செய்கிறது
குளிரோ வெயிலோ
காலத்தோடு புணர்தல்
கடமைக்காய் பம்பரமாதல்
புலம் பெயர்ந்தபோதும் மாறுபடாத ஒன்று


உழைப்பு பெருக்கப்பட்டு
உடல் வகுக்கப்பட்டாலும்
பத்தினி பட்டத்திற்காய்ப் புன்னகைத்து
பாடாய்ப் படுவது
முதுகில் ஏற்றப்பட்ட புதிய பளு
அவன் புருஷ லட்சணத்திற்காய்
எட்டு மணி நேர உழைப்பு போக


சோபாவில் கால் நீட்டி
வாய் பிளந்து தூங்குதல்
காப்புக்கை சாப்பாடு சுவையென்று
புருவம் தூக்கிச் சப்புக் கொட்டி உண்ணுதல்
காலித் தட்டைக் கழுவிப் போட்டுச்
தொலைக் காட்சி செய்தி பார்த்தல்

முடிவில்
கழுகு போல
கட்டிலில் காத்திருப்பான்
அவள்வரவுக்காய்.


(நன்றி: பறத்தல் அதன் சுதந்திரம்)

(இதற்கு முன் 'கால்களின் ஆல்பம்' என்ற மனுஷ்ய புத்திரனின் கவிதையும் கூட - சற்றும் மாறாமல் குறும்படமாக ஆகியிருக்கிறது. சிறுகதைகளோடு கூடவே கவிதைகளையும் நல்ல குறும்படங்களாக்க முடியும் என்பதற்கு இவ்வாறான முயற்சிகள் தகுந்த உதாரணங்கள்).

புலம் பெயர்ந்தும் மாறாத மரபுகளை இக் கவிதையும் , குறும் படமும் சுட்டுகின்றன. அதே வேளையில் புலம் பெயர்ந்து வேற்றுப் பண்பாட்டு மரபுடன் இணைந்து விடுவதனாலேயே காலத்துக்கொவ்வாத மரபுகளிலிருந்து மீட்சியும், விடுதலையும் கிடைத்துவிடும் நன்மையும்கூடச் சில நேரங்களில் சாத்தியமாவதுண்டு.பெண் பார்க்கும் சடங்கு, வரதட்சிணை வழக்கம் ஆகிய தீமைகளிலிருந்து புலம் பெயர்ந்த பெண் , விடுதலையாகிவிட வாய்ப்புண்டென்பதை வசந்தி ராஜா (இவர் சுமதி ரூபனின் சகோதரி எனத் திரு ஜெயமோகன் வழி அறிந்து கொண்டேன்) எழுதிய
'கூரை எரிந்ததில் நிலவை ரசிக்கும் நான் 'என்ற கவிதை பின்வருமாறு எடுத்துக் காட்டுகிறது.

''காசு கொடுத்து ஆம்பிளை வாங்கி
அதற்குப் பணிவிடை செய்யும் அவலங்கள்
நான் சொல்ல
விழி விரித்துக் கேட்கிறாள் மகள்
ராஜா ராணி கதை கேட்கும் பாவனையில்
போர் தருகின்ற சோகங்களுக்குள்ளாலேயும்
ரகசியமாய் சிலிர்த்துக் கொள்கிறேன்
புலம் பெயர்ந்தமை
தங்கத் தட்டில் தந்த சுதந்திரம்
என் மகள்களுக்கும் நம் பெண்களுக்கும்''


( நன்றி; பறத்தல் அதன் சுதந்திரம்)

5.6.09

இயக்கங்களும் பண்பாட்டு அதிர்வுகளும்

மனித குல வரலாற்றின் பக்கங்கள் புரளும்போதெல்லாம் , 'மாற்றம் என்பது மட்டுமே என்றென்றும் மாறாத மெய்ம்மை ' என்ற தத்துவம் , மீண்டும் மீண்டும் நிரூபணமாகிக் கொண்டு வருகிறது. பண்பாட்டு மாற்றங்களும் இதிலிருந்து விலக்குப் பெற்றதில்லை.

மனிதன் தன்னை ஆறறிவு பெற்றவனாக உணரத் தொடங்கிய நாள் முதல் அவன் வாழ்வில் நாகரிகமும் , பண்பாடும் படிப் படியாகத் தலையெடுக்கத் தொடங்கின.இவற்றுள் எல்லாக் காலத்திற்கும் பொருந்தி வரக் கூடிய சிறந்த கூறுகளும் உண்டு;கால மாற்றங்களுக்கேற்பக் கழற்றி மாற்றியாக வேண்டிய சில தவறான போக்குகளும் அவற்றில் உண்டு ; சக மனிதர்களை அடக்கி ஆளும் ஆதிக்க மனப் போக்கு மனிதனிடம் தலையெடுக்கத் தொடங்கிய பிறகு வலிந்து புகுத்தப்பட்ட கூறுகள் என்று அவற்றைக் கூறலாம்.

மனித இனம் ,வருணங்களாலும் , சாதிகளாலும் பிளவுபட்டு அவற்றின் அடிப்படையில் எழுந்த மேலாதிக்கம் , உடல் அளவில் மட்டுமே மாறுபட்டிருக்கும் ஆண் - பெண் வேறுபாட்டை அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தித் தன்னை உயர்வான தளத்தில் நிலைநிறுத்திக் கொண்ட ஆணாதிக்கம் ஆகிய ஆதிக்க சக்திகளின் முயற்சிகளால்'பண்பாடு' என்ற பெயரில் -அந்தப்போர்வையில் நுழைக்கப்பட்ட - திணிக்கப்பட்ட கற்பிதங்களை இந்திய வரலாற்றில் ஏராளமாகக் காண இயலும். மேலே குறிப்பிட்ட சக்திகளுக்கு எதிராக , ஒடுக்கப்பட்ட இனம் எழுச்சி கொள்ளும் காலகட்டம் சம்பவிக்கும்போது , பொய்மையான பண்பாட்டு வேலிகள் , இயல்பாகவே தகர்ந்து விடுகின்றன.

காலத்திற்கும் , மனித நேயத்திற்கும் ஒவ்வாத பண்பாட்டுக் கூறுகளின் அடிப்படைகள் ஆட்டம் காணுகையில் ,இது நாள் வரையில் தங்கள் வசதிக்காக அவற்றை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருந்த 'போலிப் பண்பாட்டுக் காவலர்க'ளும் அதிர்ச்சிக்கு ஆட்பட்டுவிடுகின்றனர். சமூகப்பொதுப்புத்தியில் அவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் சில கருத்துருவாக்கங்களால் -குறிப்பிட்ட ஒரு வட்டத்திற்குள் மட்டுமே தங்கள் சிந்தனையைச் சுருக்கி வைத்திருக்கும் சமூகத்தின் ஒரு பகுதியினரும் எந்த வழியில் செல்வதென்பதை அறியாதவர்களாய் அதிர்ந்துபோய் மிரண்டு போய்விடுகிறார்கள்.வழிவழி வந்த மரபுகள், மறு பரிசீலனைகளுக்கும் , மறுபார்வைக்கும் உட்படுத்தப்படுவதைக் காலங்காலமாக மூளைச் சலவைக்கு ஆட்பட்டு வந்த அவர்களால் தாங்கிக் கொள்ளவும் ஏற்றுக் கொள்ளவும் இயலாமல் போய் விடுகிறது.

கலகக் குரல்களாக வெடிக்கும் இத்தகைய மாற்றுப்பண்பாடுகள் , எதிர் பண்பாடுகள் ஆகிய பண்பாட்டுப் புரட்சிகள் , தனி மனித முயற்சிகளால் ஓரிரவுக்குள் சாத்தியமாகக் கூடியவை அல்ல. தகுந்த சித்தாந்தப் பின் புலமும் , மனித சக்தியும் பின்னிப் பிணைந்திருக்கும் சமூக , அரசியல் , பொருளாதார இயக்கங்களே பண்பாட்டு ரீதியாக மாற்றுக் கருத்துக்களைத் தனி மனித மனங்களில் படிப் படியாகத் தூவுகின்றன.அந்த இயக்கங்களை அடியொற்றி , அவற்றின் தாக்கத்தால் வெளிவந்த இலக்கியங்களுக்கும் இம் மாற்றங்களில் குறிப்பிடத்தக்க பங்கு உண்டு.

இந்தியாவைப் பொறுத்தவரை , 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நேர்ந்த கல்விப்பெருக்கம் , நகர்மயமாதல் , தொழிற்புரட்சி ஆகியவற்றால் விளைந்த பண்பாட்டு மாற்றங்களே , குறிப்பிட்டுச் சொல்லத்தக்க வகையில், முதல் அடியை எடுத்து வைத்த முதன்மையான மாற்றங்கள்.நாட்டில் வீறு பெற்றுவந்த தேசிய இயக்கம் , சமய , சமூக மறுமலர்ச்சி இயக்கங்கள் ,பகுத்தறிவு இயக்கம் , பொதுவுடைமை இயக்கம் ஆகியனவும் , அவ்வியக்கங்களின் தாக்கங்களை அழுத்தமாக உள்ளடக்கியபடி வெளிவந்த படைப்பிலக்கியங்களும் மனித மனதில் அழுத்தமாக வேரோடிப் போயிருந்த பண்பாடு குறித்த கண்ணோட்டத்தில் தொடக்க நிலையிலான சில அடிப்படையான மாற்றங்களைத் தோற்றுவித்தன. தொடர்ந்து நவீனத்துவ , பின் நவீனத்துவ கால கட்டங்களில் தமிழ் இலக்கிய வெளியிலும் , சமூகப்பரப்பிலும் தலித்திய - பெண்ணிய இயக்கங்கள் வலுப் பெறத் தொடங்கின. அவற்றின் பாதிப்பால் வெளிவரும் படைப்புக்களின் உள்ளடக்கம் மட்டுமன்றிப் படைப்பு மொழியுமே கூட மாற்றம் பெற்றதாகச் சில வலுவான பண்பாட்டு அதிர்வுகளை ஏற்படுத்தி வருவதைக் காண முடிகிறது.

நேற்றைய அதிர்வுகள் , இன்று இயல்பானவையாகி விடலாம்; இன்றைய அதிர்ச்சிகள் நாளை மிகவும் எளிதாக ஏற்கவும் படலாம்.
'பழையன கழிதலும் புதியன புகுதலும்' வழுவில்லாததுபோலவே , பண்பாட்டில் படிந்துள்ள கசடுகள் நீங்குவதிலும் , மனித மாண்புக்கு வழிகோலும் புதிய பண்பாடுகள் தழைப்பதிலும் எந்தத் தவறும் இல்லை. எனினும் சமூக மேம்பாட்டுக்கு அவற்றால் பயன் கிடைக்க வேண்டும் என்பதே சமூக நலனிலும் , இலக்கிய வளர்ச்சியிலும் மெய்யான அக்கறை கொண்டோரின் உண்மையான விழைவாகும்.

1.6.09

'மாதவிக்குட்டி மரிச்சு....'



'என் பெயர் கமலாதாஸ்' என்ற பெயரில்(தமிழ் மொழியாக்கத்தின் தலைப்பு) தன் வாழ்க்கை வரலாற்றை மனத் தடைகள் இன்றிப் பதிவு செய்த மாதவிக்குட்டி என்கிற சுரைய்யா தனது 75ஆம் வயதில் பூனேயில் காலமாகி விட்டதாகச் செய்தி வந்திருக்கிறது.தன் தாய் மொழியான மலையாளத்துடன் , ஆங்கிலத்திலும் பல குறிப்பிடத்தக்க படைப்புக்களை உருவாக்கியவர் கமலாதாஸ்.(அவரது வாழ்க்கை வரலாறு இந்திய மொழிகள் பலவற்றில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளி வந்திருக்கிறது. தனது 42 ஆம் வயதில் , கமலாதாஸ் பெற்ற முதல் இலக்கிய வெற்றி , 'My Story' என்ற அவரது இந்தத் தன்வரலாற்று நூலுக்கானதாகவே இருந்தது).தேசிய , சர்வதேச இலக்கியப் பரிசுகள் பலவற்றைத் தன் படைப்புக்களுக்காகப் பெற்றிருக்கும் கமலாதாஸின் எழுதுத்துக்கள் வழி வழி வந்த மரபுக் கோட்பாடுகள் பலவற்றை உடைத்துத் தகர்ப்பவையாக - அவர் அவற்றை எழுதத் தொடங்கிய காலச் சூழலுக்கு அதிர்ச்சி ஏற்படுத்துவனவாக இருந்தன.

'மாதவிக்குட்டி' என்ற புனை பெயரில் எழுதிய அவரது சில மலையாளச் சிறுகதைகளும் , நாவல்களும் குறிப்பிடத்தக்கவை.கவிதை எழுதுதுவதிலும் தனித் தேர்ச்சி பெற்றவராக விளங்கியவர் அவர்..

உலகெங்கும் தன் எழுத்துக்குப் பரவலான வாசகர்களைப் பெற்றிருந்த கமலாதாஸின் வாழ்க்கை , அவரது படைப்புக்களைப் போலவே சர்ச்சைகளும் சுவாரசியங்களும் நிறைந்தது.10 ஆண்டுகளுக்கு முன் திடீரென இஸ்லாத்துக்கு மாறித் தன் பெயரையும் சுரைய்யா என்று மாற்றிக் கொண்டார் அவர்.

ஓவியக் கலையிலும் திறமை பெற்றிருந்த அவரின் ஓவியங்கள் கண்காட்சிகளாக்கப்பட்டதுடன் பல பரிசுகளையும் வென்றிருக்கின்றன.

அவரது எழுத்துக்களின் மீது பல விமரிசனங்களும் ,வாதப் பிரதிவாதங்களும் இருந்து வந்த போதும் இந்திய - மலையாள இலக்கியத்தின் தனித்துவமான ஒரு படைப்பாளியாக அவர் இருந்து வந்திருக்கிறார் என்பது உண்மை.

அவரது மறைவுக்கு மன நெகிழ்வோடு கூடிய அஞ்சலி.

கமலாதாஸின் ஆங்கிலப் படைப்புக்கள் சில:

'The Sirens' (Asian Poetry Prize winner),
'Summer in Calcutta' (Kent's Award winner),
'The Descendants' (poetry), 'The Old Playhouse and Other Poems' (poetry), 'Alphabet of Lust' (novel), 'The Anamalai Poems' (poetry), 'Padmavati the Harlot and Other Stories' (short stories) 'Only the Soul Knows How to Sing' (poetry) and 'Yaa Allah' (poems).

மலையாள ஆக்கங்கள்:

'Pakshiyude Manam' (short stories), 'Naricheerukal Parakkumbol' (short stories), 'Thanuppu' (short story and Sahitya Academy award winner), 'Balyakala Smaranakal', 'Varshangalkku Mumbu', 'Palayan' (all novels), 'Neypayasam' (short story), 'Dayarikkurippukal' (novel), 'Neermathalam Pootha Kalam' (novel and Vayalar Award winner), 'Chekkerunna Pakshikal' (short stories), 'Nashtapetta Neelambari' (short stories), 'Chandana Marangal' (novel), 'Madhavikkuttiyude Unmakkadhakal' (short stories) and 'Vandikkalakal' (novel).

விருதுகள்:

Asian Poetry Prize
Kent Award for English Writing from Asian Countries
Asan World Prize
Ezhuthachan Award
Sahitya Academy Award
Vayalar Award
Kerala Sahitya Academy Award
Muttathu Varkey Award[4]
(நன்றி; தகவல்- விக்கிபீடியா)

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....