துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

27.6.09

தேவந்தி


தேவந்தியின் கதையை மீட்டுருவாக்கம் செய்துள்ள இச் சிறுகதையைத் தொடங்குமுன் சிலப்பதிகாரத்தை அடியொற்றி அவள் குறித்த ஒரு முன் குறிப்பு

சிலப்பதிகாரக் காப்பியத்தில் , தலைவி கண்ணகியின் உற்ற தோழி தேவந்தி. மதுரையில் கண்ணகிக்கு நிகழப் போகும் தீமை பற்றித் தனக்கு முன்னறிவிப்பாக ஏற்பட்ட கனவைக் கண்ணகி பகிர்ந்து கொள்வது தேவந்தியோடுதான்.
தேவந்தியும் கண்ணகியைப் போலவே கணவனைப்பிரிந்திருப்பவள்தான்.
பூம்புகார் நகரிலுள்ள சோமகுண்டம் , சூரிய குண்டம் ஆகிய நீர்த் துறைகளில் மூழ்கிக் காம வேள் கோட்டத்தைக் கை தொழுதால் பிரிந்த கணவன் திரும்பி வருவான் என்று தேவந்தி கூறக் கண்ணகி அதை மறுத்து விடுகிறாள்.
தேவந்தி இடம்பெறும் 'கனாத் திறம் உரைத்த காதை' என்ற இந்தக் காட்சியில் , தேவந்தியின் கிளைக் கதையைச் சற்று விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறார் இளங்கோ .

அந்தணக் குலத்தில் பிறந்த தேவந்தியின் மாமனாருக்கு இரு மனைவிகள்.அவர்களில் மாலதி என்பவளுக்கு மட்டும் குழந்தைகள் இல்லை.மற்றவளுக்கு ஒரு குழந்தை இருக்கிறது.
குழந்தையின் பெற்றோர் வெளியே சென்றிருக்கும் சமயத்தில் மாலதி , மாற்றாளின் குழந்தைக்குப் பாலூட்டப் பால் விக்கி அது இறந்து விடுகிறது. அஞ்சி நடுங்கிய மாலதி குழந்தையைத் தூக்கிக் கொண்டு புகார் நகரிலுள்ள கோவில்களுக்கெல்லாம் ஓடுகிறாள்.அங்கேயே 'பாடு' (தவம்)கிடக்கிறாள்.
ஒரு கட்டத்தில் பிணங்களைத் தின்னும் இடாகினி என்னும் பேய் குழந்தையைத் தூக்கிக் கொண்டு மறைந்து விடுகிறது.
செய்வதறியாமல் மயங்கும் மாலதியின் மனதிற்குள் பாசண்டச் சாத்தன் என்ற தெய்வ உருவம் தோன்றி ஆறுதல் அளிக்கிறது. தானே குழந்தையாக வந்து அவளது துயரைத் தீர்ப்பதாகக் கூறும் அது ..அவ்வாறே அவள் முன் ஒரு குழந்தை வடிவில் கிடக்கிறது.அளவற்ற மகிழ்ச்சியுடன் அதை எடுத்துச் செல்லும் மாலதி அவனைத் தங்கள் மகனாக எண்ணியே வளர்க்கிறாள்.

பாசண்டச் சாத்தனும் மனித உருவில் வளர்ந்து ஆளாகித் தன் தாய் தந்தையர்க்குச் செய்ய வேண்டிய அனைத்துக் கடமைகளையும் - நீர்க்கடன் கழிப்பது வரை செம்மையாகச் செய்து முடிக்கிறான்.
தனது உலகியல் கடமைகளில் ஒரு பகுதியாகத் தேவந்தியை மணந்து எட்டு ஆண்டுக் காலம் அவளோடு வாழ்கிறான்.
(சாத்தன் தீவலம் செய்து தேவந்தியை மணமுடித்து அவளோடு சேர்ந்து வாழ்ந்தபோதும் அவர்கள் கணவன் மனைவி உறவுடன் வாழவில்லை - தேவந்தியும் சாத்தனும் உடல் உறு கூட்டம் இல்லாத் தெய்வக் கற்புக் காதலர் என அறிஞர் தெ. பொ.மீஅவர்கள் குறிப்பிடுவார்)

எட்டு ஆண்டுகள் முடிந்தபின் ,(தாய் தந்தையர்க்கு ஆற்ற வேண்டிய கடமைகள் முடிந்ததும்) தான் கடவுள் என்பதை அவளுக்கு உணர்த்திவிட்டு அவளோடு இணைந்து வாழாமல்- தன் கோட்டத்திற்குள்(கோயில்)சென்று - அவள் தன்னைக் காண வேண்டுமென்றால் இனிமேல் அங்கேதான் வந்தாக வேண்டுமெனக் கூறிவிட்டு மறைந்து போகிறான்.
உண்மையை ஊராரிடம் உள்ளபடி கூற முடியாத தேவந்தி , தன் கணவன் தீர்த்த யாத்திரை சென்றிருப்பதாகவும் ,அவன் விரைவில் வர வேண்டுமென்பதற்காகவே தான் கோயில் குளங்களைச் சுற்றி வருவதாகவும் கூறி நாட்களை நகர்த்துகிறாள்.
இறுதியாகக் காப்பியம் முடியும்போது , சேரன் கண்ணகிக்காக எடுத்த கோயிலுக்கு வந்து தன் தோழியை எண்ணிப் புலம்புகிறாள்.அவள் மீது ஆவேசிக்கும் (தெய்வம் ஏறிய நிலை) சாத்தன் வழியாகவே கோவலனின் தாய் , கண்ணகியின் தாய் , மாதரி முதலியோரின் பழம் பிறப்புக்கள் உணர்த்தப்படுகின்றன. கண்ணகி கோயில் பூசனைக்கும் தேவந்தியையே பொறுப்பாக்குகிறான் சேரன் செங்குட்டுவன்.
தேவந்தி கதையின் இந்த அடிப்படை , கீழ்க் காணும் என் சிறுகதைப் படைப்பில் பெண்ணிய நோக்கில் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.


இனி......சிறுகதை...
(நன்றி: இக் கதையைப்பிரசுரம் செய்த 'வடக்கு வாசல்' இதழுக்கு -நவ.'07)

அந்தப்புர மேன் மாடத்தை அழகுபடுத்திக் கொண்டிருந்த சிலைகளோடு
தானும் ஒருசிலையாய்ச்சமைந்து போய் அசைவற்று நின்று கொண்டிருந்தாள் கண்ணகி.
இரு நிதிக் கிழவனான அவள் தந்தை மாநாய்கன் , தன் செல்வப் புதல்விக்குச் சீதனமாய்த் தந்திருந்த எழுநிலை மாடங்கள் கொண்ட பிரம்மாண்டமான அந்த மாளிகையின் தனிமை ...அவள் முகத்தில் அறைந்தது.அதிலும் கோவனோடு பல நாட்கள் ஒன்றாகக் கூடியிருந்து நிலவின் பயனை இருவருமாய்த் துய்த்திருந்த அந்த முத்து மாடம் ....அவளது அந்தரங்கக் கதைகளை ஒவ்வொன்றாகக் காதுக்குள் ஓதியபடி , அந்த வெறுமையின் அவலத்தை மேலும் விசிறி விட்டுக் கொண்டிருந்தது. நினைவு நதி கிளர்த்திவிட்ட எண்ண அலைகளின் ஓங்காரச் சுழலுக்குள் சிக்கிச் சுழன்றபடி அவள் போராடிக் கொண்டிருந்த அந்தத் தருணத்தில் ....அருகே நிழல் தட்டியது.

''கண்ணகி ! நீ இப்போது துணுக்குற்றுத் திரும்பிப் பார்த்த கோலம் எப்படி இருந்தது தெரியுமா ? கோவலரை நீ எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்ததுபோலத்தான் எனக்குத் தோன்றியது.''

''என் நிலைமை ...நீ கூடப் பழிக்கும்படி ஆகிவிட்டதல்லவா தேவந்தி ? ஆனால் ஒரு வகையில் பார்த்தால் நீ சொல்வதிலும் உண்மை இல்லாமல் இல்லை. ஒரு வேளை ...இன்று காலை நான் கண்ட கனவு மெய்ப்பட்டால் ...அவர் விரைவில் என்னை நாடி வருவது உறுதி ! அவர் வருவதில் மகிழ்ச்சிதானென்றாலும் , அந்தக் கனவின் கோரமான மற்றொருபக்கம்தான் என்னை மிரட்டிக் கொண்டிருக்கிறது...''

முகம் தெரியாதஒரு பட்டினத்தில்...இனம் தெரியாத ஏதோ ஒருவகை ஆபத்து தங்களை எதிர்கொள்ளக் காத்திருப்பதாக அன்று அதிகாலையில் தான் கண்ட கனவைத் தேவந்தியிடம் கொட்டித் தீர்த்தாள் கண்ணகி.

''இப்படி அந்தப்புரச் சிறையிலேயே அடைந்து கிடந்தால் ...உனக்கு வேறு எந்த மாதிரியான கனவுகள்தான் வரக் கூடும் கண்ணகி ...? உன்சீறடியை அலங்கரித்த சிலம்பைக் கழற்றி விட்டாய் ! நெற்றியில் திலகம் அணிவதையும் நிறுத்தி விட்டாய் ! மங்கலத் தாலி ஒன்றைத் தவிரப் பிற எல்லா அணிகலன்களையும் துறந்து விட்டாய் ! இன்னும் எத்தனை நாள்தான் இப்படி அவரது வருகையை எதிர்நோக்கி இங்கேயே தவமிருக்கப் போகிறாய் ? ..நானும் உன்னைப் போலக் கணவரைப் பிரிந்திருப்பவள்தான் ! ஆனாலும் கோயில்...வழிபாடு ....நோன்பு என்று ஏதேதோ செய்து என் மனதை ஆற்றிக் கொள்ளவில்லையா ?..நீயும் வெளியே வா கண்ணகி ! வெளிக் காற்றைச் சற்றே சுவாசி !''

''தேவந்தி ! போதும் நிறுத்திக் கொள் ! உன்னை இன்னும் கொஞ்சம் பேச விட்டால் ..சோமகுண்டம் , சூரிய குண்டம் என்று புகார் நரத்திலுள்ள புனிதக் குளங்களையெல்லாம் பட்டியலிடத் தொடங்கி விடுவாய் ! காமவேள் கோட்டத்தைத் தொழுவதற்குக் கூட என்னை அழைக்க ஆரம்பித்து விடுவாய் !''

''அதில் தவறென்ன கண்ணகி ?''

''அது எனக்குப் பெருமையில்லை தேவந்தி ! அது...பீடில்லாத செயல் என்று நினைப்பவள் நான் . என் கணவர் என்னிடம் திரும்பி வருகிறார் என்றால் ...அது என் அன்பின் வலிமையால்தான் சாத்தியப்பட வேண்டும் ! அது எப்போது முடியவில்லையோ ...அப்போது பிற புறக் காரணிகளுக்கு அங்கே வேலையில்லை.''

தேவந்தி அதைக் கேட்டு ஏளனமாகச் சிரித்தாள்.

''உன் அன்புக்கோ ...அல்லது நான் செய்து கொண்டிருக்கிற நோன்புக்கோ அந்த வலிமை நிச்சயம் இல்லையடி பயித்தியக்காரி !''

அந்த வார்த்தைகள் கண்ணகியைச் சற்றே வியப்பில் ஆழ்த்தின.

''பிறகு நீ ஏன் இப்படிக்....''

''கோயில் கோயிலாக வலம் வருகிறேன் என்றுதானே கேட்கப் போகிறாய் ? ..தெரிந்துதான் செய்கிறேன் கண்ணகி ! இதனாலெல்லாம் என் கணவர் நிச்சயம் வரப்போவதில்லை என்பதை நன்றாகத் தெரிந்து கொண்டுதான் இப்படியெல்லாம் நான் செய்து கொண்டிருக்கிறேன்''

''அப்ப்டியெல்லாம் பேசாதே தேவந்தி ! மாதவியின் கலை மயக்கத்தில் கட்டுண்டு கிடக்கும் கோவலர் கூடக் கட்டாயம் திரும்பி வந்து விடுவார் என்று நான் நம்பிக்கையோடு இருக்கும்போது உனக்கு ஏன் இந்த விரக்தி ?''

''இது விரக்தியில்லை கண்ணகி ! நிஜம் ! சுட்டெரிக்கும் நிஜம் !''

''உன் கணவர் தீர்ர்த்தத் துறைகளில் படிந்து வரத்தானே போயிருக்கிறார் ?''

''அது ...இந்த உலகின் கண் முன்னே அரங்கேறும் நாடகம் ! ஆனால் உண்மை வேறெங்கோ பாதாளத்தில் பதுங்கிக் கொண்டு கண்ணா மூச்சி ஆடிக் கொண்டிருக்கிறது.''

''என்னிடம் அதைப் பகிர்ந்து கொள்வதால் உனக்கு ஆறுதல் கிடைக்குமென்று நீ நினைத்தால்...''

கண்ணகி வார்த்தையை முடிப்பதற்கு முன் தேவந்தி வெடித்தாள்.

''என்றாவது ஒரு நாள் உன்னிடம் மட்டுமே அதைச் சொல்லியாக வேண்டும் என்ற
தாகத்துடன் ...என் நெஞ்சக் கூட்டுக்குள் அடைகாத்து வருகிறேன் கண்ணகி !என் கதையின் மூல வேரை ..அதன் சரியான அர்த்தத்தில் உள் வாங்கிக் கொள்ள உன் ஒருத்தியால்தான் முடியும் !''

கண நேரம் அமைதி காத்த தேவந்தி ...தன் கதையைத் தொடங்கினாள்.

''என் கணவரின் தந்தைக்கு இரண்டு மனைவியர். மூத்தவளான மாலதிக்குக் குழந்தை இல்லாமல் போய் விட்டதால் இரண்டாவதாக ஒரு பெண்ணை அவர் மணந்து கொண்டார் . அவளுக்குப் பிறந்த அந்த ஆண் குழந்தையைப் பொறுப்போடும் , கரிசனத்தோடும் சீராட்டி வளர்த்ததெல்லாம் மூத்த மனைவி மாலதிதான்''

(சிறுகதையின் தொடர்ச்சி அடுத்த பதிவில்)

1 கருத்து :

முனைவர் கல்பனாசேக்கிழார் சொன்னது…

சிறுகதையின் தொடர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....