[
தவிர்க்க இயலாத சில தாமதங்களால் பாலைப்பயணத்தின் நிறைவுப்பகுதி-சற்று இடைவெளிக்குப்பின்]
கை விடப்பட்ட ஒரு கிராமம்-குல்தரா
சாம் மணல்மேடுகளுக்கான வாகன நிறுத்தத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களைத் தாண்டிக்கொண்டு எங்கள் காரை வெளியே எடுப்பது பெரும் சிக்கலாக இருந்ததால் முதன்மைச் சாலைக்கு எங்கள் வண்டி வந்து சேர்வதற்குள் இருளின் ஆதிக்கம் இலேசாகத் தொடங்கியிருந்தது.அது அதிகமாவதற்குள் எப்படியாவது அந்தக் கைவிடப்பட்ட கிராமத்தைக் கண்டே ஆக வேண்டுமென அதை நோக்கி விரைந்தோம்.
குறிப்பிட்ட ஓரிடத்தில் நிலையாகத் தங்கி வாழும் மக்களில் ஒருவர் கூட மீதமில்லாமல் முழுமையாக அந்த இடத்தைக்காலி செய்து கொண்டு செல்லும் அவலம் வரலாற்றின் சில சூழல்களில்-சில நேரங்களில் நேர்ந்து விடுகிறது.அதற்குப்பிறகும் அங்கு வேறு எவரும் குடியேற முன்வராதபோது அந்த இடம் வெறிச்சோடிப்போய்க் காலப்போக்கில் அநாதரவான-கைவிடப்பட்ட பிரதேசமாக மாறி விடுகிறது.பஞ்சம்,பிணி,பகைவர் படையெடுப்பு,கொள்ளையர் தாக்குதல் எனப்பலப்பல காரணங்களால் உலகின் பல இடங்களிலும் இவ்வாறான கைவிடப்பட்ட இடங்களைக்காண முடியும்.
[An abandoned village is a village that has, for some reason, been deserted. In many countries, and throughout history, thousands of villages were deserted for a variety of causes. Abandonment of villages is often related to plague, famine, war, climate change, environmental destruction, or deliberate clearances]
அவ்வாறான ஓரிடத்தை ஒரு சுற்றுலாத்தலமாக்கி நுழைவுச்சீட்டும் வாங்க வைத்து அதை ஒரு சந்தைப்பொருள் போல மலினப்படுத்துவது சகிக்கக்கூடியதாக இல்லை; அங்கே ஆண்டுக்கணக்காக உறைந்து போயிருந்த கண்ணீரும்,பெருமூச்சும் காசாக்கப்படுவது போன்ற பாரம் நெஞ்ச அழுத்தியது.
சாம் மணல் மேட்டிலிருந்து ஜெய்சால்மர் செல்லும் பாதையில் கிட்டத்தட்டப்பாதி தூரம் வந்த பிறகு தென்பட்ட ஒரு அடையாளக் கல் வலப்புறமாகத் திரும்புமாறு அறிவுறுத்த குல்தரா செல்லும் சாலையில் பயணத்தைத் தொடர்ந்தோம்.நேராக இரண்டு,மூன்று கிலோமீட்டர் சென்றபின் சிறியதொரு அரண்மனை முகப்பின் தோரண வாயில் போன்ற கட்டிட அமைப்பு ஒன்று தென்பட்டது.
அதன் அருகே கூண்டுவடிவ அறை ஒன்றில் கட்டணம் வசூலித்துக் கொண்டிருந்த ஒரு நபர்,’’அடைக்கும் நேரம் நெருங்கி விட்டதால் கால்நடையாகக் கிராமத்துக்குள் சென்று திரும்ப இனி நேரமில்லை;காரிலேயே ஊருக்குள் ஒரு சுற்று சுற்றி விட்டு வாருங்கள்’’என்றார்.
’’இந்த இடம் ஏன் இப்படி வெறிச்சோடிப்போனது?’’என்ற கேள்வியை நாங்கள் முன்வைக்க, ‘’அது மிகப்பெரிய ஒரு சோகக்கதை...அதைச்சொல்ல ஆரம்பித்தால் இருட்டி விடும்,பிறகு நீங்கள் அங்கே எதையும் பார்க்க முடியாது, முதலில் பார்த்து முடித்து விட்டு வாருங்கள்’’என்றார் அவர்.
ஒரு கேளிக்கை சார்ந்த சுற்றுலா இடமாக அதனை எண்ண முடியாவிட்டாலும் அங்கே நிலவிய வெறுமையும்,இனம் புரியாமல் கப்பியிருந்த அடர்த்தியான சோகமும் அதற்குள் சென்றுவரும் ஆவலைக் கிளர்த்த,உள்ளே காரிலேயே ஒரு வட்டமடித்து விட்டு வரலாமென்று சென்றோம்.
வழி நெடுகிலும் கற்குவியல்களாய் இடிந்து,சிதைந்து நொறுங்கிக்கிடக்கும் வீடுகள்,தூர்ந்து போன கிணறுகள்,பாழடைந்த கோயில்கள்,தரிசான வெளிகள்,ஒரு காலத்தில் புழக்கத்திலிருந்ததற்கு அடையாளமாய் உடைந்து போன அம்மிகள்,அரவைக்கற்கள்,வெறுமையான வெட்ட வெளிகள் எனக் காணுகின்ற காட்சியெல்லாம் மனதுக்குள் கலவரத்தோடு கூடிய சோகத்தைக்கிளர்த்தின;
ஒவ்வொன்றையும் நிதானமாகப்பார்த்துக்கொண்டு செல்ல முடியாதபடி இருள் அடர்ந்து வர கனத்த மனதோடும்,கதை கேட்கும் ஆவலோடும் முகப்புக்குத் திரும்பினால் எங்களுக்கு அது பற்றிய தகவல் சொல்வதாகக்கூறியிருந்த மனிதர் நேரம் மிகுதியாக ஆனதால் வீட்டுக்குச் சென்று விட்டிருந்தார்.சற்று ஏமாற்றமாக இருந்தாலும் காட்டிக் கொள்ளாமல்-ஜெரய்சால்மர் விடுதியை அடையும் வரை- நானாக ஒரு கதை புனைந்து குழந்தைகளுக்குச் சொல்லிக்கொண்டு வந்தேன்.[வாழ்க்கையில் எத்தனை தமிழ்ப்படம் பார்த்திருப்போம்...?]ஒரு பணக்காரப்பண்ணையார்,ஏழைப்பெண் காதல்,அதன் மீதான எதிர்ப்பு,தொடர் விளைவு என்று கதையை ‘ஓட்டிக்கொண்டு போனேன்’.அதில் திருப்தி அடையாத என் பேத்தி விடுதிக்குள் நுழைந்ததுமே கூகிளைச்சரணடைந்து ‘குல்தரா’பற்றித் தேடத் தொடங்கி விட்டாள்.
திடீரென அவளிடமிருந்து ஒரு சின்னக்கூவல்..’’அம்மா..கிட்டத்தட்ட நீ சொன்ன மாதிரிதான்...’’என்று அந்தப்பக்கத்தை இணையத்தில் காட்ட கதைகள் விரிந்து கொண்டு சென்றன. பலிவால் என்னும் குறிப்பிட்ட அந்தண இனத்தைச் சேர்ந்த மக்கள் வேறு இடத்திலிருந்து புலம்பெயர்ந்து தார் பாலைவனத்துக்கு வந்து குல்தரா மற்றும் சுற்றியுள்ள 80க்கு மேற்பட்ட கிராமங்களைத் தங்கள் வசப்படுத்திக்கொண்டு கடும் உழைப்பால் முன்னேறி வந்திருக்கிறார்கள்.ஜெசால்மரைச் சேர்ந்த பிரபுத்துவ இளைஞன் ஒருவனின் பார்வை அந்தக்கிராமத்து இளம்பெண் ஒருத்தியின் மீது பட,அவர்கள் மறுக்க,அவன் கெடு வைக்க, தங்கள் குல ஆசாரங்களில் மிகத் தீவிரமான பிடிப்புக்கொண்டவர்களான அவர்கள் அவனது கோரிக்கைக்கு அஞ்சி இரவோடு இரவாகக் கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்துக்கொண்டு தங்கள் ஊரையே காலி செய்து கொண்டு எங்கோ சென்று விட்டார்கள்; குல்தராவைச் சுற்றியிருந்த கிராமங்களில் வாழ்ந்த அவர்களது இனத்தவரும் அதே போல வேற்றிடத்துக்குப்பெயர்ந்து விட,அந்தச்சூழல் வெறிச்சிட்டு விட்டது.
மற்றுமொரு கதையும் அந்தக்கிராமத்தைப் பற்றிச்சொல்லப்படுவதுண்டு.பலிவால் என்னும் அந்தக்குறிப்பிட்ட இனத்தவரின் செல்வச்செழுமை மொகலாய அரசர்களின் கண்களை உறுத்த அவர்கள் பலமுறை இந்தக்கிராம மக்களைத் தாக்கிப்போரிட்டிருக்கிறார்கள்;ஒவ்வொரு முறையும் தங்கள் வீரத்தால் வென்றுவந்த அந்த இனத்தைத் தந்திரத்தால் வீழ்த்தத் திட்டமிட்ட மொகலாயர்கள்,இறந்த அல்லது கொல்லப்பட்ட விலங்குகளின் கழிவுகளை அந்தகிராமத்தின் எல்லாக் குடிநீர்க்கிணறுகளிலும் வீசி வைக்க சுத்த சைவ உணவுக்காரர்களான அந்தக்குறிப்பிட்ட இனத்தவர்கள் தங்கள் செல்வங்களையெல்லாம் கூட விட்டு விட்டு இரவோடு இரவாக அங்கிருந்து காலி செய்து கொண்டு புலம் பெயர்ந்து சென்று விட்டார்கள் [அந்தச் செல்வத்தின் ஒரு பகுதி சமீபத்தில் கூட சில வெளிநாட்டவரால் கைப்பற்றப்படவிருந்ததான செய்தி நாளிதழ்களில் வெளிவந்தது].அவ்வாறு புலம் பெயர்ந்து சென்றபோது அந்த இடத்தின் மீது அவர்கள் ஏதோ சாபமிட்டுச் சென்றதாகவும் இன்று வரை பிறர் யாரும் குடியேறத் தயங்குவதற்கான காரணம் அதுவே என்றும் பலவாறான கதைகள் குல்தரா குறித்து அங்கே வழங்கி வருகின்றன.
தொடர்ந்த எங்கள் பயணத்தில் அந்தக்கிராமம் அப்படி வெறிச்சோடி இருப்பதற்கான காரணத்தை நாங்கள் ஒவ்வொருவரும் -குழந்தைகள் உட்பட- ஒவ்வொரு கதையாக்கிப் புனைந்து கொண்டே சென்றோம்...என்றாலும் அங்கே நிலவிய வெறுமையின்-துயரப்பெருமூச்சின் காரணத்தை அங்கே எஞ்சியிருக்கும் ஜடப்பொருள்களே மெய்யாக அறிந்திருக்கக்கூடும்.
பாலைப்பயணம் ஒரு புதுமையான அனுபவம்தான் என்றாலும் ஒருசில நெருடல்கள் எங்களை அதிகமாகவே பாதித்தன.
-சுற்றுச்சூழல் காப்பு என்பதற்குப் பாலையும் உட்பட்டதுதான். அதிலும் அது மிக அரிதான நிலப்பரப்பென்பதால் கூடுதல் பாதுகாப்பும் கூடத் தேவையாகிறது. என்னதான் அதை ஒரு சுற்றுலாத் தலமாகக் கொண்டாலும்,அதை வைத்துப்பிழைப்பு நடத்தினாலும் அந்த நிலப்பரப்பை மாசுபடுத்தாமல் இருக்க வேண்டும் என்ற தார்மீக உணர்வும்,பொறுப்பும் அரசுக்கும் வேண்டும்;அங்கேயே வாழ்பவர்கள் மற்றும் அங்கே சுற்றுலா வருபவர்கள் ஆகியோருக்கும் வேண்டும். அவை எதுவுமே சுத்தமாக அங்கில்லை என்பதை அந்தப் பாலைப்பரப்பில் சிதறிக்கிடந்த பிளாஸ்டிக் தண்ணீர் குப்பிகளும்,தின்பண்ட உறைகளும் நிதரிசனமாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.பாலைப்பெரு வெளியில் இன்னும் சற்று நேரம் கழிக்க முடியாத அளவுக்கு எங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியவை அந்தக் குப்பை குவியல்களே. மெரினா மணல் வெளியைப் பாழாக்கிக் கொண்டிருப்பதைப் போலவே ஜெய்சால்மரின் பாலை நிலத்தையும் நாம் பாழ் செய்து கொண்டிருக்கிறோம் என்பதே கசப்பான நிஜம்.
|
மணல் வெளிக்குள் குப்பிகள்,காகிதங்கள்,பிளாஸ்டிக் உறைகள்... [படத்தை சற்றுப்பெரிதாக்கிப் பார்த்தால் மனம் அதிகமாகவே கொதிக்கும்] |
அடுத்து...சுற்றுலா என்ற பெயரில் உல்லாசக் கூத்தடிப்போரின் எண்ணிக்கையே அங்கே மிகுந்திருந்ததேயன்றிப் பரந்து கிடக்கும் அந்த மணல்வெளியில் மோனத் தரிசனத்தை உணரவும்,துய்க்கவும் எவருக்குமே ஆசையில்லை என்பதை அங்கிருந்த பெரும்பாலான கும்பல்கள் வெளிப்படுத்திக்கொண்டிருந்ததால் அந்தக்கூட்டத்துக்கு நடுவே அப்படி ஒரு தரிசனம் எங்களுக்கு வாய்க்கவும் வழியில்லை; சீசன் இல்லாத ஒரு காலச்சூழலில் தனியே வந்து அமைதியான சில கணங்களை அந்த மணற்பரப்பில் கழிக்கும் பேறு அடுத்த முறையாவது எங்களுக்கு வாய்க்க வேண்டும் என்னும் விருப்பத்தைச் சுமந்தபடி தில்லி நோக்கி விரைந்தோம்.
ஒரு பாலைப்பயணம்-1
ஒரு பாலைப்பயணம்-2
ஒரு பாலைப்பயணம்-3