துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

27.11.12

ஒரு பாலைப்பயணம்-3


புல் பூண்டுகள் கூட அற்ற - வெறுமையும்,முழுமையுமான மணல்வெளிப்பரப்பைக் காண ஏற்றதாக ஜெய்சால்மர் நகருக்கு அண்மையில் அமைந்திருக்கும் இடமே சாம் மணல் மேடுகள்.  தார் பாலைவனத்தின் முகப்புக்களில் ஒன்றாகவும் இந்த இடத்தைக் கொள்ளலாம். நகரிலிருந்து அந்த மணல்மேடுகளை நோக்கிச் செல்லும் வழியெங்கும் பாலைக்குள்ளேயே தங்கியிருக்க வசதி செய்து தரும் பாலைவன ரிசார்ட்டுகள்...மற்றும் ஆங்காங்கே அவை அமைத்திருக்கும் கூடாரங்கள்.
கோட்டை வடிவில் ஒரு தங்கும் விடுதி

பாலைக்கூடாரங்கள்...
படிப்படியாக எங்கள் ஆர்வம் கூடிக்கொண்டே செல்ல....சாலையின் இரு பக்கங்களிலும் தாவரங்களின் பரவல் படிப்படியாகக்குறைந்து மணல் மேடுகள் கண்ணுக்குத் தென்படத் தொடங்கியிருந்தன.குறிப்பிட்ட ஒரு இடத்தோடு அங்கிருந்த காவலர்கள் வாகனத்தை நிறுத்தி விட.....அங்கே பார்த்தால் தேர்த் திருவிழா போன்ற மக்கள் கூட்டமும் வாகனக் குவியல்களும்....! சற்று தூரத்தில் பெரிய மணல் மேடுகளும் அங்கே ஒட்டகங்களிலும்,ஒட்டக வண்டிகளிலும் சவாரி செய்யும் மனிதர்களும்...!

பாலையின் ஏகாந்தத்தையும்....தனிமையான சூழலையும் கற்பனை செய்து கொண்டு வந்திருந்த எனக்கு வித்தியாசமான இந்தக் காட்சி சிறிது அதிர்ச்சி ஊட்டியபோதும் ‘பாலையைக்காணும் ஆர்வம் எல்லோருக்கும்தானே  இருக்கும்’என்று என்னை நானே தேற்றிக் கொண்டேன்.....ஆனாலும் அந்தக் கூட்டத்துக்குள் இருந்தபடி பாலைமணல்வெளியின் அழகைப்பருகுவதென்பது....அத்தனை எளிதானதாக இல்லை.ஒட்டகங்களிலும்,ஒட்டக வண்டிகளிலும் ஏறிச் சவாரி செய்யுமாறு நம்மைக் கையைப்பிடித்து இழுக்காத குறையாக வற்புறுத்தும் ஒட்டகக்காரர்கள் ஒரு புறம்....மனிதர்களைச் சுமந்தபடி நம் மீது மோதி விடுவது போல ஓடி வரும் ஒட்டகங்கள் இன்னொரு புறம்....பாலை மணலுக்குள் இருந்தபடி தன் பாட்டையும் நடனத்தையும் ரசிக்கச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்த பெண்கள் மறுபுறம்... [’பத்தே பத்து ரூபாதான்....ஒரே ஒரு பாட்டு..ஒரே ஒரு நடனம் மண்ணுக்குள்ள உக்காந்து பாருங்க தீதி...உங்க வம்சமே நல்லா இருக்கும்..’’’  -  இதைத்தான் இந்தியில் சொல்லியிருப்பார்கள் என்பது என் புரிதல்!?].
இந்தக் கூட்ட நெரிசலில் என் அழகியல் உணர்வு கொஞ்சம் கொஞ்சமாய்க் கழன்று கொள்ள...அங்கிருந்து தப்பித்து வெளியேறினால் போதும் என்னும் மனநிலைக்குக் கூடத் தள்ளப்பட்டிருந்தேன் நான். இருந்தாலும் அத்தனை தொலைவு பயணப்பட்டு வந்து விட்டு வெறுமே போக முடியுமா என்ன..? பாவப்பட்ட ஒட்டகம் ஒன்று எனக்காகவே காத்துக்கொண்டிருக்க அதன் முதுகை முறிக்கும் இறுதித் துரும்பாக...நானும் பேத்தியும் அதில் ஏறிக்கொண்டோம்; மகள்,மருமகன்,பேரன் இன்னொரு ஒட்டகத்தில். 

அங்கே ஒட்டகச்சவாரி செய்கிறவர்களெல்லாம் ஆனந்தக் கிளர்ச்சியிலோ...அச்சத்தை மறைப்பதற்கோ ...கண்டபடி கூச்சலிட்டுக்கொண்டு வந்தபோதும்....எனக்கென்னவோ அந்த ஒட்டகச்சவாரி எந்த வகை அச்சத்தையும்,.கிளர்ச்சியையும் ஊட்டவில்லை என்பதே உண்மை.... !

சுற்றுப்புறத்தில் காண்பவைகளை முடிந்தவரை மனதுக்குள்ளும்,புகைப்படக்கருவி மூலமும்[ ’ஒட்டகத்தின் மேலிருந்து விழுந்து அதன் காலுக்கு இரையாகித் தொலையப் போகிறீர்கள்’ என்று கத்திக் கொண்டே வந்த மகளின் எச்சரிக்கையையும் மீறி] தொடர்ந்து பதிந்து கொண்டே வருவதில் மட்டுமே என் கவனம் லயித்துக் கிடந்தது.மங்கிவரும் கதிரவனின் பொன்னொளியில் ’’தங்கம் உருக்கித் தழல் குறைத்துத் தேனாக்கி’’யதைப்போல [நன்றி;பாரதிதாசன்] மின்னும் மணல் பரப்பு...பல்வேறு உயரங்களில் தாழ்ந்தும் உயர்ந்தும் நிற்கும் மணல் மேடுகள்....இடையே சமவெளியாகவும்,உட்குழிந்தும் இருக்கும் மணல் வெளிகள் என்று காட்சியெல்லாம் மணலாகவே நிறைந்து துளும்ப .....என் பேரன் விளையாடித் தூற்றிய மணல் துகளும் என்னில் வந்து அப்பிக் கொண்டது.... ஒட்டகச் சவாரி ஐந்தே நிமிடங்களில் முடிந்து விட....மாலைச் சூரியன் மறையும் காட்சியைக்காண மணல் திட்டுக்களில் மக்கள் குவியத் தொடங்கியிருந்தனர்... மலை...கடல்...பாலை என எல்லா நிலப்பரப்புக்களிலுமே அஸ்தமனக்காட்சி அழகானதுதான்.
இரவுக்கூடாரங்களுக்கு மேல்
முழுகும் சூரியன்...


‘’செங்கதிர் மாணிக்கத்துச் செழும்பழம் முழுகும் மாலை’’
என்று அழகின் சிரிப்பில் பாரதிதாசன் சொல்லும் வருணனையை முழுவதும் உணர முடியும் சந்தர்ப்பங்கள் இவ்வாறானவையே......

மாலை மறையத் தொடங்கியதுமே மக்கள் கூட்டமும் கலையத் தொடங்க  வாகனநிறுத்தத்திற்கருகே தேநீர் குளிர்பானம் தண்ணீர் விற்பனைக்கடைகள் சூடு பிடிக்கத் தொடங்கியிருந்தன...

சாம் மணல் திட்டுக்களிலிருந்து ஜெய்சால்மர் செல்லும் பாதையில் குல்தரா என்னும் கைவிடப்பட்ட கிராமம்[abandoned village] ஒன்றும் பார்க்கத் தகுந்த சுற்றுலா இடமாக இருப்பதை எங்கள் விடுதிக்காப்பாளர் கூறியிருந்தது நினைவுக்கு வந்ததால்...இரவு படர்வதற்குள் அதையும் காணும் ஆவலில் அப்போதைக்கு அந்தப்பாலை மண்ணிலிருந்து விடை பெற்றோம்...

[பயணம் தொடரும்]

இணைப்புக்கள்;
ஒரு பாலைப்பயணம்-1
ஒரு பாலைப்பயணம்-2

1 கருத்து :

சித்திரவீதிக்காரன் சொன்னது…

ஒவ்வொரு படமும் அருமை. இவ்வளவு பெரிய மணல் வெளியைப் பார்த்ததும் விளையாட வேண்டும் போல ஆசையாக இருக்கிறது. நல்ல பகிர்வு. நன்றி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....