துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

8.11.12

’’குழவி கொள்பவரின் ஓம்புமதி..’’

பயணம் இதழ்-கட்டுரைத்தொடர்,சங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம்-9 [நவ/2012]

தாயின் அரவணைப்பில் கவலையின்றி ஒண்டிக் கிடக்கும் சேய் போல மன்னனின் பாதுகாவலில் பதைப்பும்,பதட்டமுமின்றி வாழும் மக்கள் குறித்த சங்கப்புலவனின் விழைவும் கனவுமே இப்பாடல் முன் வைக்கும் தரிசனங்கள்.

மன்னன் காட்டும் அன்பையும் அருளையும் மட்டுமே அடித்தளமாகக் கொண்டு வாழ்ந்த முடியாட்சிக் காலம் சங்ககாலம். 
‘’நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’’
என்னும் புறப்பாடல் வரிகள் இது பற்றியதே. மன்னன் மட்டும் கொடுங்கோலனாக அமைந்து விட்டால்  அத்துடன் மக்கள் வாழ்வும் முடிந்தது போலத்தான். பிறகு நாட்டில் யானை கட்டிப்போரடித்து நெல்லைக் குவித்தாலும்,ஆற்று வளமும் அருவி வளமும் பெருகிப்பாய்ந்தாலும் அரசனின் கருணை வற்றிப்போனால் எதைக்கொண்டும் மக்கள் மகிழ்வுற வாய்ப்பில்லை.இதனை மையமாகக் கொண்டு அமைகிறது  நரிவெரூஉத்தலையாரின் கீழ்வரும் புறநானூற்றுப்பாடல்.
’’எருமை யன்ன கருங்கல் இடைதோறு 
ஆனிற் பரக்கும் யானைய முன்பின்
கானக நாடனை நீயோ பெரும
நீயோ ராகலின் நின்னொன்று மொழிவல்

அருளும் அன்பும் நீக்கி நீங்கா
நிரயங் கொள்பவரோடு ஒன்றாது காவல்
குழவி கொள்பவரின் ஓம்புமதி
அளிதோ தானே அது பெறலருங் குரைத்தே’’

- நரிவெரூஉத்தலையார் [புறநானூறு-5]

நரிவெரூஉத்தலையார் என்னும் வித்தியாசமான பெயரை வைத்து  [நரி கூடக் காண அஞ்சும் தலை] சற்று விகாரமான தோற்றத்துடன் இருந்தவர்  அப்புலவர் என்றும் சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரலிரும்பொறை என்ற சேர மன்னனைப் பார்த்ததுமே அவனது கருணை வாய்ந்த தோற்றப்பொலிவால் அவரது அருவருக்கத்தக்க தோற்றம் மாறியது என்றும் உரையாசிரியர்கள்  விளக்கமளிக்கின்றனர். அக் குறிப்பின் நம்பகத் தன்மை எதுவாயினும் அதைக்காட்டிலும் நம் கருத்தை ஈர்ப்பது பாடலின் மகத்தான உள்ளடக்கமும்,அதை முன் வைக்க அவர் கையாண்டிருக்கும் அற்புதமான உவமையுமே.

பாடலின் பின்புலம் சேர நாடு. அதற்கேற்ப மலை வளத்தையும் அந்த மலைகளின் நடுவே கற்பாறைகளைப்போல ஊர்ந்து செல்லும் யானைக்கூட்டங்களையும் முதலில் சுட்டுகிறார் புலவர்.
கருங்கல் குன்றுகள் எருமை போல் நிறைந்து கிடக்க...அவற்றினூடே ஊர்ந்து பரவிச் செல்லும் யானைக்கூட்டங்கள் எருமைகளுக்கிடையே செல்லும் பசுக்கூட்டங்களைப் போலப் புலவருக்குத் தோன்றுகின்றன.
‘’எருமை யன்ன கருங்கல் இடைதோறு 
ஆனிற் பரக்கும் யானைய ’’
[இங்கே கரிய நிறம் கொண்ட குன்றுகளுக்கும், யானைகளுக்கும் உள்ள வடிவ ஒற்றுமையை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டுமே தவிர நிற ஒற்றுமையை வைத்துக் கவிதையைப்பார்த்தால் அது பிழையாய் முடியும்]. சேர நாட்டில் பாறைகளும் மிகுதி, யானைகளும் மிகுதி....கரிய பாறைகள் அசைவற்று நிற்க அவற்றிடையே யானைகள் அசைந்து செல்லும் காட்சி, மேய்ச்சலுக்குச் செல்லும் கால்நடைக்கூட்டங்களில் எருமைகள்  அசைவே இல்லாமல் அப்படியே நிற்பதையும்,பசுக்கள் மெல்ல நடை போடுவதையும் புலவருக்கு நினைவுபடுத்தியிருக்கக்கூடும்.

மேற்சொன்ன வளங்களைப் பெற்றிருக்கும் வலிமையான கானக நாடனே [முன்பின் கானக நாடனை ; முன்பின் என்பது- வலிமை] என்று அரசனை அழைக்கும் புலவர் அவனது ஆட்சி சிறப்பாக இருக்க செவிஅறிவுறூஉ என்னும் துறையில் ஓர் அறிவுரை சொல்கிறார்.மன்னன் எத்தனை செல்வாக்கு உடையவனாயினும்  கல்வித் திறன் கொண்ட புலவர்கள்,சான்றோர்களின் பொருளாழம் மிக்க சொற்களைக் கேட்டு அவ்வப்போது அவன் தன்னைப் புதுப்பித்துக் கொள் வதுண்டு என்பதன் அடையாளமே செவிஅறிவுறூஉ என்னும் துறை.

‘’மிகுந்த வளமும் வலிமையும் பெற்றுள்ள நாட்டுக்கு உரியவனாகவும், போற்றக்கூடிய நல்ல குணங்களைப்பெற்றிருப்பவனாகவும் நீ இருப்பதால் உன்னிடம் ஒன்று சொல்ல விழைகிறேன்....
வாழ்வில் அன்பையும் அருளையும் புறக்கணித்து விட்டு,அவற்றைத் துறந்தவர்களாய் நடந்து கொள்பவர்கள் நரகத்தின் பாதையை நோக்கிப் பயணம் போகிறவர்கள் [நிரயம்-நரகம்].
அதிலும் ஒரு நாட்டின் பாதுகாவலனுக்கு ஒருபோதும் இருக்கக்கூடாத இயல்பு அது....எனவே நீ அத்தகைய மனிதர்கள் போல இராதே..
[’’அருளும் அன்பும் நீக்கி நீங்காநிரயங் கொள்பவரோடு ஒன்றாது ’’]
உன் குடிமக்களிடம் பாசத்தைப்பொழி...இரக்கத்தையும்,கருணையையும் மழை போல அவர்களின் மீது வர்ஷித்துக் கொண்டே இரு....எப்படிப்பட்ட கட்டத்திலும், எவ்வாறான சூழ்நிலையிலும் அன்பையும்,அருளையும் மட்டுமே கைவிடாமல் கடைப்பிடித்து வா...’’என்று கூறும் புலவர் அதற்கு மிகப்பொருத்தமான ஒர் உவமையையும் உடன் வைக்கிறார். சங்கப்புலவனால் மட்டுமே சொல்ல முடிகிற அபாரமான உவமையாக அது அமைந்திருக்கிறது.

மனித வாழ்வில் கருணை..இரக்கம் இவற்றைக் கைக்கொள்வதில் தாயன்புக்கு இணை ஏதுமில்லை....அதிலும் அப்போதுதான் பிறந்து....உலக வாசனையையே அந்த நொடியிலேதான் நுகரத் தொடங்கியிருக்கும் ஏதுமறியாத பிஞ்சுக்குழந்தையிடம் தாய் காட்டும் கரிசனம் அலகிலாதது...அளவிடற்கரிய அந்தப் பிரியத்தை கரிசனையை...பத்திர உணர்வை உன் குடிமக்கள் நலனிலும் நீ காட்டு என்பதையே ’’காவல் குழவி கொள்பவரின் ஓம்புமதி’’என்ற வார்த்தைகளில் முன் வைக்கிறார் கவிஞர். கண்ணாடிப்பாத்திரப்பொதிகளின் முகப்பில்,இதில் கண்ணாடி உள்ளது -கவனமுடன் கையாள்க (glass-handle with care )என்ற வாசகங்கள் இருப்பதைப்பார்த்திருக்கலாம்...அதை விடவும் கூடுதலான கவனம் பச்சிளம் குழந்தையைத் தொட்டுத் தூக்குவதற்கும், ஒருவர் கையிலிருந்து மற்றொருவர் கைமாற்றிக்கொள்ளும்போதும் தேவையாக இருக்கிறது...அத்தகைய அருமையான கவனமும் கண்காணிப்பும்..எச்சரிக்கை உணர்வும் நாடு காவல் பொறுப்பிலும் மன்னனால் மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிறது இந்தப்பாடல். கவனப்பிசகால் குழந்தை கை நழுவிப்போனால் ஏற்படும் இழப்புப் போன்றதே காவல் பிழைப்பதால் நாட்டுக்கு நேரும் துன்பமும். அத்தகைய விழிப்போடு இருக்கும் மன்ன்னின் ஆட்சியில் குடிமக்கள் ஒருபோதும் துன்புற மாட்டார்கள் என மிக நுட்பமான உவமையைக்கொண்டு காட்சிப்படுத்தியிருக்கும் இந்தப்பாடல் கூறும் செய்தி காலம் கடந்து நிற்கும் வல்லமை பெற்றிருப்பதன் காரணம்...அந்த அறிவுரைக்கான தேவை...அன்றைய முடியாட்சியில் மட்டுமில்லை,இன்றைய மக்களாட்சிக்கும் அது மிகவும் தேவையாக இருக்கிறது என்பதால்தான்!

தாயின் அரவணைப்பில் கவலையின்றி ஒண்டிக் கிடக்கும் சேய் போல மன்னனின் பாதுகாவலில் பதைப்பும்,பதட்டமுமின்றி வாழும் மக்கள் குறித்த சங்கப்புலவனின் விழைவும் கனவுமே இப்பாடல் முன் வைக்கும் தரிசனங்கள்.

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....