பாலைப் பெருவெளியில் பேரனுடன்.... |
குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல் என்ற நானிலப் பாகுபாடுகள் பற்றிக் குறிப்பிடும் தொல்காப்பியர் பாலையை ‘நடுவணது’ என்ற சொல்லாலேயே குறிக்கிறார்.தமிழகத்தைப்பொறுத்தவரை பாலை என்பது ஒரு தனிநிலமாக இல்லை என்பதையும் காட்டுநிலமாகிய முல்லையும்,மலை சார்ந்த குறிஞ்சியும் தங்கள் வளம் குன்றிப்போகும்போது வெறுமையும் வறட்சியுமாய்ப் பாலையாய்த் திரிபடைகின்றன என்றும் அவர் அறிந்து வைத்திருந்ததே அதற்கான அடிப்படை.
பழந்தமிழ் இலக்கியங்கள் பாலை என்ற பெயரில் சுட்டுவதும் அவ்வாறான நிலப்பகுதிகளையே.
முல்லையென்ற காட்டு நிலமும் ,குறிஞ்சி என்னும் மலைநிலமுமே படிப்படியே பாலையாகத் திரிந்துபோகின்றன என்ற
தொல்காப்பியத்தின் கருத்தை
‘’முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்கு துயர் உறுத்துப்
பாலை என்பதோர் படிமம் கொள்ளும்’’
என்னும் வரிகளில் மேலும் விளக்கமாகவும்,நுணுக்கமாகவும் விவரிக்கிறது சிலப்பதிகாரம்.
பாலைப்பெருமணல் வெளியைத் திரைப்படக்காட்சிகளிலும் புகைப்படங்களிலும் மட்டுமே அதுவரை கண்டிருந்த நான் இம்மாத நடுவில் எங்கள் ஜெய்சால்மர் பயணம் உறுதியான பிறகு புதிதான ஒரு நிலவியல் காட்சியைக்காணப்போகும் பரவசத்தில் கனவு காணத் தொடங்கியதோடு, இணையத்தில் அது சார்ந்த செய்திகளையும் திரட்டத் தொடங்கினேன்.
முழுமையும் காரிலேயே செல்வதான எங்கள் பயணத் திட்டம்,அலுவலக,பள்ளி வேலை நாட்களால் நான்கு நாட்கள் என்று மட்டுமே எல்லை கட்டப்பட்டிருந்தது ; செல்ல வேண்டிய தொலைவோ மிகவும் கூடுதலாக - கிட்டத்தட்ட 900கி.மீ வரை நீள்வது [சென்று திரும்பும் தூரம் கிட்டத்தட்ட 1800 கி.மீ] என்பதால் வழியிலிருந்த ஜெய்பூர்,ஜோத்பூர் ஆகிய இடங்களில் இரவுநேரத் தங்கல் மட்டுமே சாத்தியமாயிற்று.மேலும் ஜெய்ப்பூர் முன்பே இரு முறை பார்த்த இடம்;ஜோத்பூர் பார்க்கலாம் என்று ஒரு சபலம் இருந்தபோதும் ஜெய்பூர்-ஜோத்பூர் சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல், பயணத்தைப் பல மணி நேரம் தாமதப்படுத்த இம்முறை ஜெய்சால்மரை மட்டுமே ஒற்றை இலக்காக வைத்துக் கொண்டு அதற்கு முதன்மை தர முடிவெடுத்தோம். பாலைப்பகுதிகளுக்குச் செல்வதற்குக் குளிர் இலேசாகத் தொடங்கி வெயில் மட்டுப்பட்டிருந்த இந்தப்பருவநிலையே உகந்தது என்பதால் இம்முறை நழுவவிட்டால் அங்கே திரும்பச்செல்வது கடினம் என்பதும் அதற்கு ஒரு காரணம்.
வெள்ளி மாலை கிளம்பி இரவு ஜெய்பூர்;சனிக் கிழமை முழுவதும் பயணித்து இரவில் ஜோத்பூர் ;மறுநாள் விடியற்காலை ஜோத்பூரிலிருந்து ஜெய்சால்மரை நோக்கி என்று எங்கள் பயணம் ஒன்றரை நாட்களுக்கும் மேலாக நீண்டு கொண்டே சென்றது.
பயணப்பாதையில் ஆர்வமூட்டும் சுவாரசியங்களைக் கொண்டிருந்தது ஜோத்பூரிலிருந்து ஜெய்சால்மர் செல்லும் சாலைதான்.சமகாலத்து அதிவிரைவு நெடுஞ்சாலைகள் போல இல்லாவிட்டாலும் கூட மிக விரைவாகப் பயணிக்க முடிந்ததும் அந்தச் சாலையிலேதான்.
ஜோத்பூரிலிருந்து சிறிது தூரம் சென்றதுமே வெள்ளிய மணல் பரப்பையும், ஒரு சில வறண்ட தாவரங்களையும் இருபுறமும் கொண்டிருப்பதும், நம்மை ஜெய்சால்மர் நோக்கி இட்டுச் செல்வதுமான அந்த மிக நீண்ட பாதை வந்து விடுகிறது...அப்புறம்...திருப்பங்களோ வளைவுகளோ அதிகம் இல்லாமல் நீ.....ண்....டு சென்று கொண்டே இருக்கிறது அந்த சாதாரணத் தார்ச் சாலை.
சாலையின் இருபுறமும் மணல் மேடுகள்..பாலைத் தாவரங்கள் |
மர நிழல்களில் இளைப்பாறிக்கொண்டிருக்கும்பாரம் சுமக்காத ஒட்டகங்கள் |
போக்ரான் அருகே.... |
முற்பகல் 11 மணியளவில் ஜெய்சால்மர் நகரை வந்தடைந்தோம்;ஜெய்ப்பூர் நகரம் இளம் சிவப்பு வண்ணத்தைத் தன் அடையாளமாகத் தரித்துக் கொண்டு’பிங்க் சிடி’என்று பெயர் பெற்றிருப்பதைப்போலச் சூரிய ஒளியில் பொலியும் பொன்மணல் நிறத்தில்- இளம் மஞ்சள் வண்ணக் கட்டிடங்களையும் வீடுகளையும் கொண்டதாக-பொன் நகரம் எனப்பெயர் பெற்றிருப்பது ஜெய்சால்மர்.
நகரத்தின் சாலைகளைப்பிரிக்கும் தடுப்புக்களும்,
வங்கிக் கட்டிடங்களும் கூட ராஜஸ்தானியக் கட்டிடக் கலைப்பாணியில் அமைந்திருப்பது புராதன மரபுகளைப் பேணிப் போற்றிக் கொண்டாடும் அந்த மக்களின் மனோபாவத்துக்கு ஒரு சான்று.
நெடுந்தூரப் பயணக்களைப்புத் தீர ஒரு குளியல் போட்டு விட்டு உடன் கிளம்ப ஆயத்தமானோம்.ஜெய்சால்மர் கோட்டையை ஒட்டியிருந்த ராஜஸ்தானிய உணவகத்தில் மதிய உணவை முடித்துக் கொண்டோம்; சௌகிதானி என்று அதைச் சொல்கிறார்கள்;அந்த மண்ணின் பாரம்பரிய ஆடல் பாடல் கைவினைப்பொருட்கள்,வீடுகளோடு - அந்த மண்ணின் மணத்தோடு சுற்றுலாப்பயணிகளைக் கவர அங்கே கடைப்பிடிக்கப்படும் உத்திகளில் இதுவும் ஒன்று.
அங்குள்ள கோட்டை கொத்தளங்களைப் பார்ப்பதை விடவும் மணல் வெளியைக் காண வேண்டுமென்பதிலும், பாலைப்பெருநிலத்துக்கு எப்போது செல்லப்போகிறோம் என்பதிலுமே எங்கள் அனைவரின் கவனமும் குவிந்திருந்தாலும் மாலை நான்கு மணிக்குப் பிறகு அங்கே செல்வதே இனிமையாக இருக்கும் என்று சொல்லப்பட்டதால் நானும் குழந்தைகளும் ஜெய்சால்மர் ஊருக்குள் இருந்த பத்வா ஹவேலிக்குள் விரைவாகச் சென்று கண்டு வந்தோம்....
[பயணம் தொடரும்..]
6 கருத்துகள் :
பயணத்தின் ஊடாக பாடமும் நடத்தி விட்டீர்கள். நன்றி. அடுத்த பகுதிக்குக் காத்திருக்கிறேன்.
asan bes- asanbes@gmail.com
அனுப்பிய மின்னஞ்சல்
உங்களின் எழுத்தின் நடை நன்று,உங்களோடு சகபயணியாய் உணருகின்றோம்.அடுத்த
கட்டத்துக்காக காத்திருக்கிறோம்
GREAT...BEST WISHES FROM NORWAY!
GREAT!
பாலை நிலவெளியை உங்கள் பதிவுகளினூடாக தரிசிக்க முடிந்தது. நன்றி.
ஆ...ன்ற சாலைகளின் விதம்,பொருத்தமான அடுத்த அடுத்த போட்டோக்கள்.
சாலைகளில் அடிபடும் உயிரினங்கள் ஐயோ! ச்சே...பாவம்.
ராஜஸ்தான் என்றாலே இந்த கட்டிடம் தானா? வேற ஒன்னும் இல்லையா?
ஆ..இது பேங்கா! பழைய கால கட்டிடம் மாதிரில இருக்கு.
வணிக இதழ்கள் இந்த பயணக் கட்டுரையை வெளியிடலாம். ஏனோ தோணுது. நல்லா எழுதி இருக்கீங்க மேடம்
கருத்துரையிடுக