துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

14.11.12

’தேவந்தி’-வானொலி மதிப்புரை

தேவந்தி சிறுகதைத் தொகுப்பு  குறித்து தில்லியிலிருந்து ஒலிபரப்பாகும்’திரைகடலாடி வரும் தமிழ்நாதம்’வானொலி நிகழ்ச்சியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் பேரா.நாச்சிமுத்து அவர்கள் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்.

தமிழிலே  சிறுகதை உரைநடை வடிவில் இன்றைய முறையில் தோன்றி வளர்ந்த  வரலாறு சுமார்  150 ஆண்டு காலப் பழமையுடையது.உரைநடை வடிவில் பதினெட்டாம் நூற்றாண்டில் இத்தாலியப் பாதிரியார் எழுதிய பரமார்த்த குரு கதை வந்தபோது உரைநடை வடிவில் கதை எழுதும் மரபு தொடங்குகிறது.

தற்காலச் சிறுகதை தமிழில் எழுவதற்கு முன்பே  வங்காளம் உருது ,இந்தி போன்ற  பிற இந்திய மொழிகளில் தோன்றி வளர்ந்து வந்துள்ளது.வங்காளியில் தாகூர் ,உருது இந்தி மொழிகளில் பிரேம்சந்த் போன்றோர் நல்ல கதைகளை எழுதிய காலத்தில் பாரதி,வ.வே.சு.அய்யர்,மாதவையா போன்றவர்கள் வங்காளிக் கதைகளை மொழிபெயர்த்தும் அவற்றின் மாதிரியில் புதிதாக எழுதியும் தமிழில் சிறுகதைக்கு வித்திட்டிருக்கிறார்கள். வங்காளம் ,இந்தி போன்ற மொழிகளில் சிறுகதை சிறப்பாக வளர்ந்த காலத்தில் சிறுகதை ஏன் வளர்ச்சி பெறாமல் இருந்தது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.அதுபோன்றே சமூக யதார்த்த வாதம் மேற்கத்திய நாடுகளிலும் சோவியத்திலும் வளர்ந்த காலத்தில் இந்தி போன்ற மொழிகளில் 1920களிலேயே பிரேம்சந்த் போன்றவர்கள் அம்முறையில் கிராமத்து மனிதர்களையும் உழைக்கும் சாதாரண மக்களையும் கதை மாந்தர்களாக வைத்துச் சிறந்த கதைகளை எழுதிவிட்டார்கள்.நாம் அதற்கு 1930 களின் இறுதிவரை காத்திருக்க வேண்டி வந்தது.கு.ப.ரா.,புதுமைப் பித்தன் போன்றவர்கள் மணிக்கொடிக் கால கட்ட இதழ்களிலும்  கல்கி போன்றவர்கள் ஆனந்த விகடன் போன்ற இதழ்கள் மூலமும் அண்ணா போன்றவர்கள் திராவிட இயக்க இதழ்களிலும் தமிழ்ச் சிறுகதைகளை எழுதி வெளியிட்டு சமுக யதார்த்த வாதம் போன்றவற்றை அறிமுகப்படுத்துகிறார்கள்.
 
அதற்குப் பின் தமிழ்ச் சிறுகதைகள் பன்முகத் தன்மையுடன் வளர்ச்சி பெற்றதை நாம் அறிவோம்.ஜெயகாந்தன் ,அகிலன் ,மௌனி,தி ஜானகி ராமன்,லா.ச.ராமாமிர்தம், நா.பார்த்தசாரதி,அழகிரிசாமி,ராஜநாராயணன்,சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் ,எஸ்.எஸ்,தென்னரசு,பா.செயப்பிரகாசம்,சா.கந்தசாமி, பாவண்ணன் போன்றவர்கள் தமிழ்ச் சிறுகதையில் சமுக யதார்த்தவாதம், கற்பனை வாதம் , மனவெளி உலகம், கிராமிய உலகம் என்று பலவகை அனுபவக் களங்களில் கதைகளை எழுதியுள்ளார்கள்.இன்று தலித்தியம் பெண்ணியம் போன்ற களங்களில் இமையம், பெருமாள் முருகன் ,பாமா  போன்றவர்கள் கதைகளைப் படைக்கின்றனர்.
 
தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் பெண்களுக்கும்  பங்கு உண்டு.அனுத்தமா, கிருத்திகா  போன்ற பழைய  பெண் எழுத்தாளர்களும் பின் சூடாமணி ,லட்சுமி ,ராஜம் கிருஷ்ணன் போன்றவர்களும் சட்டென்று  நினைவுக்கு வருகிறார்கள்.இவர்கள் எழுத்து பெரும்பாலும் நகரங்களைச் சார்ந்த படித்த நடுத்தரக் குடும்பப் பெண்களின் வாழ்வை மையமிட்டதாக  அமைந்திருந்தன. இன்றைய பெண் எழுத்தாளர்களில் சிவசங்கரி, உஷா சுப்பிரமணியன்,வாஸ்ந்தி ,காவேரி ,செண்பகம் ராமசாமி ,அம்பை ,சுதந்திர தேவி,திலகவதி,சிவகாமி ,எம்.ஏ.சுசீலா என்று பலரும் எழுதிவருகிறார்கள்.நான் இங்கு குறிப்பிடும் பட்டியல் முழுமையானதல்ல,விடுபட்ட பெயர்கள் பலவும் உண்டு.இந்த எழுத்தாளர்கள் பெண்ணியம் தலித்தியம் சார்ந்த கருத்துப் பின்புலத்தில் தங்கள் இலக்கிய முயற்சியைச் சிறுகதை வழி செய்து கொண்டிருக்கிறார்கள்.இவர்களில் குறிப்பிடத்தகுந்தவர் எம்.ஏ.சுசீலா அவர்கள்.
 
எம்.ஏ.சுசீலா அவர்கள் தாம் 1979 முதல் 2009 வரை எழுதிய 36 கதைகளைத் தொகுத்துத் தேவந்தி என்ற பெயருடன் வடக்கு வாசல் வெளியீடாக 2011 இல் வெளியிட்டுள்ளார்கள். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்று இப்போது புது தில்லியில் வசித்து வருகிற அவர்கள்  முன்பே நான்கு சிறுகதைத் தொகுப்புகள், நான்கு கட்டுரை நூல்கள் ஆகியவற்றை வெளியிட்டிருக்கிறார்கள்.அத்துடன் அவர் பியோதர் தஸ்தாவெஸ்கியின் குற்றமும்  தண்டனையும், அசடன் என்ற இரு பெரும் நாவல்களை நல்ல தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு மொழிபெயர்ப்புத் துறையிலும் அரும்பணியாற்றி வருகிறார்கள்.தொடர்ந்து அவர்கள் இலக்கியத் திறனாய்வு,மொழி பெயர்ப்பு, படைப்பிலக்கியம் போன்ற துறைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.தமிழில் பெண்ணியம் சார்ந்த படைப்புக்களைப் படைப்பதிலும் பெண்ணியத் திறனாய்வு பற்றி எழுதுவதிலும் வல்லவரான அவர் எழுதிய  விடுதலைக்கு முன் தமிழ் நாவல்களில் பெண்கள்(1996),பெண் இலக்கியம் வாசிப்பு(2001),தமிழ் இலக்கிய  வெளியில்  பெண்மொழியும் பெண்ணும்(2006) போன்ற நூல்கள் அவருடைய பெண்ணியத் திறனாய்வு முயற்சிகளை வெளிப்படுத்துவனவாகும்.
 
தேவந்தி கதைத் தொகுப்பில் உள்ள கதைகளில் பெரும்பாலும் பெண்களே கதை மாந்தர்களாக வருகிறார்கள்.தன் கதைப் படைப்புக்களைப் பற்றி ஆசிரியையே கூறும் கூற்று அவர் கதை உலகைப் புரிந்து கொள்ள நமக்குத் துணைசெய்யும்.
’என் வாழ்க்கை அனுபவங்கள் எல்லை கட்டியவை, ஒரு ஆசிரியராக மாணவியரோடு எதிர்ப்பட நேர்ந்த அனுபவங்கள், பெண்ணியத்தில் முனைப்புக் கொண்டதால் நேரிட்ட தாக்கங்கள்,நவீன இலக்கிய மாணவியாகத் தமிழ்ப் புராணங்களையும்,இலக்கியச் செய்திகளையும் மறு ஆக்கம் செய்வதில் கொண்டஆர்வம் ஆகியவற்றையே பெரும்பாலும் கதை வடிவங்களாகப் பதிவு செய்ய நான் முயன்றிருக்கிறேன்.’
 
வாழ்க்கை என்பது இன்பமும் துன்பமும் வெற்றியும் தோல்வியும் இனிப்பும் கசப்பும் கலந்தது.அதிலே ஆணாகட்டும் பெண்ணாகட்டும் எல்லோரும் ஒரே மாதிரித்தான்  இவற்றையெல்லாம் எதிர்கொண்டாக வேண்டும் என்றாலும் அவரவர் நிலைக்கு ஏற்ப  அனுபவங்கள் மாறுபடும்.இந்தத் தேவந்தி கதைத் தொகுப்பில் பெரும்பாலும் பெண் அனுபவக் கோலங்களை நமக்குக் கதை வடிவில் வடித்துக் காட்டியிருக்கிறார்.பெண் மனம் ,பெண்ணியக் கோபம் என்ற கண்ணாடி வழியே நிகழ்ச்சிகளை அலசிப் பார்க்கும் அவர் சிறுகதைகள் நமக்குப் பல சுவைகளையும் படைத்துத் தருகின்றன.
 
இந்தத் தொகுப்பின் முதல் கதையான ஓர் உயிர் விலைபோகிறது என்ற கதை இத்தொகுப்பின் பாவிகத்தை உட்பொருளை வெளிப்படுத்திவிடுகிறது.ஆன்மப் பறவையாய் இறந்து போய்ப் புகைப்படமாய்த் தொங்கும்  கஸ்தூரி என்ற பெண்ணின் பார்வையில் நினைவோட்டமாய் விரியும் கதை மனதை நெருடுகிறது.செல்ல மகளாய்ச் சீர் செனத்திகளுடன் புக்ககம் சென்ற கையோடு  புற்று நோய் தாக்கிப் பிறந்தகம் வந்து மறைந்து போகிறாள் அவள்.அவள் கணவன் நோயில் கிடந்தவளை எட்டியும் பார்க்காமல் ஈமச் சடங்குக்கும் வராமல் அவள் வேலை பார்த்த அலுவலகத்தில் அவள் சம்பளம் காப்புத் தொகை முதலியன பெற மரணச் சான்றிதழ் பெற மட்டும் வந்து நிற்கிற மனிதாபிமானமற்ற ஈனம் அவள் பெற்றோரைப் போல நம்மையும் நிலை குலைய வைக்கிறது.

சொல்லில் புரியாத சோகங்கள் கதையில் வரும் உமா ஆசிரியை வேலையைப் புனித சேவையாக நினைத்துச் செய்து வருபவள். கை நிறையச் சம்பாதித்துக் கொண்டிருந்த கணவன், குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள உமாவை -வேலையை விடச் சொன்னபோது சம்மதித்தவள் அதே கணவன் சம்பாத்தியம் குறைந்த நிலையில் அதே வேலையை விடாமல் சேர்ந்து கொள்ளச் சொன்னபோது மறுத்து விடுவதும் பின் வேறு வேலையில் சேர்ந்து கொள்ளலாம் எனச் சமாதானம் சொல்வதும் அவளுள் எழுந்த விடுதலைப் பெண்ணின் கோபத்தால் என்பது நமக்குப் புரிகிறது என்றாலும் இந்த வீம்பு வேண்டுமா என்றும் தோன்றிவிடுகிறது. ஆனால் கன்னிமை என்ற கதையில் வரும் கல்யாணியின் தர்மாவேசத்தோடு அறச் சீற்றத்தோடு நாம் முற்றாகச் சேர்ந்து கொள்கிறோம்.பெற்றோரின் செல்லப் பெண் புதுக்  கணவனுடன் இன்பமாய் வாழ்வைத் தொடங்கியதுமே பேறாகி விட்டதைப் பெரும் பேறாகக் கருதாமல் சந்தேகக் கணைகளை வீசிக் கருக்கலைப்புச் செய்யச் சொல்லும் வக்கிர மாமியார் ,நாத்தனார் பேச்சைக் கேட்டு ஆடும் கணவனுக்கு அவள் கொடுக்கும் டோஸ்  பிரமாதம்.‘குழந்தை நம்முடையதுதான்ங்கிற நம்பிக்கை மட்டும் உங்களுக்கு இருந்தா…..நான் நரகத்திலே கூட உங்களோட வாழ்க்கை நடத்தத் தயாரா இருக்கேன்.‘ என்று அந்த வாழ்க்கையை உதறித்தள்ளும்  கல்யாணியை  ‘நீதான் விடுதலை பெற்ற வீரப் பெண்மணி‘ என்று  வாயார வாழ்த்தத் தோன்றுகிறது.இதைப் போன்ற இன்னொரு துணிச்சலான கதை உயிர்த்தெழல் பலாத்காரத்திலிருந்து பல பெண்களைக் காப்பாற்றிய அனு பெண் வீராங்கனையாகப் போற்றப்படவேண்டிய இளம் மாணவி. .அவள் அந்தச் செய்தியாலேயே திருமணத்திற்குத் தகுதியற்றவளாகப் போய்விடுவாள் என்ற  ஆண்வழிப்பட்ட சமூகக் கோட்பாடுகளின் பிடியிலிருந்து விடுபடுவதே அவளது உயிர்த்தெழல். அதுபோன்றே இருவேறுலகம் இதுவென்றால் ரத்னா தன் காதல் கணவன் இறந்து படுக்கையில் இருந்தபோதும் தன் சக துணை நடிகைகளின் வீட்டில் அடுப்பெரிய வேண்டும் என்பதற்காக நடிக்கச் செல்லும் தியாகம் துணைநடிகையான நம் மனதை வாட்டுகிறது. ரத்னா புதுமைப் பித்தனின் பொன்னகரப் புதுக் கற்புக்கரசியை நினைவூட்டுகிறாள்.இந்த நல்ல கதைகளை இத்தொகுப்பிற்கு அருமையான முன்னுரை அளித்துள்ள பாவண்ணனும்குறிப்பிடுகிறார், [கரும்புள்ளியின்மீது விழும் வெளிச்சம்]

இன்னொரு தளத்தில் பொம்பளை வண்டி என்ற கதை, அளவில் சிறியதாக இருந்தாலும் பெண்ணியத் தளத்தில் நினைத்துக் கொள்ள வேண்டிய கதை.குடிகாரக் கணவனின் ‘ பொறுத்துப் போவதுதான் பொம்பிளை ‘என்ற ஆணாதிக்கக் கோட்பாட்டுக் கோணலை எதிர்க்க இயலாத ஈசுவரி என்ற சாதாரணப் பெண் ,பெண்கள் பேருந்தில் ஏறிவரும்போது பிற பெண்களுடன் சேர்ந்து தானும் அதில் ஏற வரும் ஆண்களை ஏற விடாது தடுக்கும் போது வந்து நின்றது அவளுடைய புருஷனுடைய முகம் என்று கதையை ஆசிரியை முடிக்கும் போது பூனைக்கும் காலம் வரும் ரோஷம் வரும்  பெண்ணும் பொங்குவாள் என்பதைச் சொல்லாமல் சொல்லும் நுட்பமான கதையாக இது உயர்ந்துவிடுகிறது.

இதே பெண்ணியத் தளத்தில் சில பழைய புராண இலக்கியக் கதை மாந்தர்களை எடுத்து அவர்கள் பற்றிய  கதைகளை பெண்ணிய நோக்கிலும் சமுக நீதி நோக்கிலும் கட்டவிழ்த்து வரலாற்றுச் சிறுகதை போல அவர் எழுதியுள்ள கதைகள் ஐந்து .(1,மானிடவர்க்கென்று பேச்சுப்படில் ,2.புதிய பிரவேசங்கள், 3.சங்கிலி ,4.தேவந்தி.) இவற்றில் மானிடவர்க்கென்று பேச்சுப்படில் என்ற கதை ஆண்டாளை மையமாகக் கொண்டது.ஆண்டாள் ’’மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்’’என்று பாடியதிலே வேறு ஒரு நுட்பமும் இருந்திருக்கலாம் என்கிறார் கதை ஆசிரியை.அது  அழகும் ஆற்றலும் எல்லாம் இருந்தும் அவள் பிறப்பை வைத்து எழுந்த சாதி குல ஆசாரம் பற்றிவினா எழுப்பும்   உலகியல் மானுடர் அவளைச் சாதாரணப் பெண்ணாக ஏற்றுக் கொள்ளாமையும் அவள் அவ்வாறு பாடியதற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்கிற பார்வை பெண்ணியமும் சமுக நீதியும் கலந்த பார்வை.

சங்கிலி  என்கிற கதை மாந்தர் பெரியபுராணத்தில் சுந்தர மூர்த்தி நாயனார் மணந்து கொண்ட பெண்கள் மூவரில் ஒருவரான சங்கிலியார் தான்.இக்கதையில் சுந்தரமூர்த்தியாரின் தடுத்தாட்கொண்ட புராணத்திற்கு மரபு தரும்  விளக்கத்தின் புனிதத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறார் ஆசிரியை.மூன்று முறை திருமணம் நிகழ்ச்சியை நடத்திய சுந்தரமூர்த்தியாரின் நின்று போன முதல் திருமணத்தின்  மணப்பெண் சடங்கவி சிவாச்சாரியார் மகள் -திருமணம் நின்று போனதால் வாழாவெட்டியானவள் .அவள் மூன்றாம் மணப் பெண்ணான சங்கிலியைச் சந்தித்துப் பேசி இருவரும் இரண்டாம் மனைவியாகிய பரவை நாச்சியாரைச் சந்தித்து அவரைத் தடுத்தாட்கொள்ளப் போவதுதான் கதை,மூன்று பெண்கள் வாழ்வில் விளையாடிய சுந்தரமூர்த்தியார் தடுத்தாட் கொண்ட கதையைப் புரட்டிப்போடுகிற இக்கதை பெண்ணியப் புரட்சிக் கதைதான்.

வாழாவெட்டியாகிப் போன சிலப்பதிகார தேவந்தி கண்ணகியின் தோழி.இவளின் கதையையும் இவ்வாறே மீளாய்வும் மீள் படைப்பும் செய்து ஆண்கள் தன்னலத்தால் வாழ்வு சூறையாடப்பட்ட பெண்கள் மனக்குமுறலாக எதிரொலிக்கிறார் ஆசிரியை.இப்படிப் புராணம் என்ற பெயரில் புனிதப்போர்வையைப் போர்த்திக் கொண்ட புளுகுக் குட்டுகளை அம்பலப்படுத்தும் இக்கதைகள் இத்தொகுப்பின் சிறப்பு என்று நான் சொல்வேன்.இது போன்றே சம்புகன் என்ற சூத்திரன் தவமிருந்து துறக்கம் புகுவது சாத்திர விரோதம் என்று கணையெடுத்து அவனைக் கொன்ற இராமனின் செயலை சாத்திரம் அன்று சதி என்று நம் கதாசிரியை புரட்சிக் குரலில் விளாசும்போது நாமும் அவரைப் பெண்மை வாழ்க என்று கூத்திடுகிறோம்.புதிய பிரவேசங்கள் கதையில் இலங்கையில் நடக்க இருந்த அக்னிப் பிரவேசத்திற்குப் புரட்சிச் சீதை உடன்பட மறுப்பதாகப் புனைந்த ஆசிரியை இராமன் அதற்கு உடன்பட்டதாகக் கூறுவது பிற்காலத்தில் அவரே விதித்த அக்னிப்பிரவேச நிபந்தனைக்கு முரணாக அமைகிறது.கதை கொஞ்சம் மரபுப் பிடியால் சறுக்குகிறதோ என்று தோன்றுகிறது.

இந்தத் தொகுப்பில் ஆசிரியையின் எழுத்தனுபவத்தையே அதாவது பெண் எழுதுவதற்குப் படும் பாட்டையே தடை ஓட்டங்கள் என்று கதை ஆக்கியிருக்கிறார்.பெண் கல்வியை முன்னிலைப்படுத்தும் கண்திறந்திட வேண்டும் கதையும் குறிப்பிடத்தக்கது.இது தொலைக் காட்சி வடிவம் பெற்ற சிறப்புடையது.இன்னும் தாய்மை இளம்பருவத்து நட்பு கணவன் மனைவி உறவின் விரிசல்கள், பெண்களின் எந்திரத்தனமான வாழ்க்கை அதிலிருந்து விடுபடக் கோயில் குளங்களை நாடுதல் போன்றவை பற்றிய கதைகளும் சுவையானவை.ஆசிரியரின் கவனக் குறைவால் குறைந்த மதிப்பெண் பெற்று வாழ்வின் உயர்வை இழக்கிற மாணவன், அரசியல் வாதிகளின் இரட்டைவேடம் எல்லாவற்றையும் நுணுக்கமான கதை ஆக்கியிருக்கிறார் சுசீலா.ஆத்தா என்ற கதை தீவிர வாதத்தைச் சினிமாத்தனமாகப் படம் பிடித்திருப்பது சிறப்பாக இல்லை.சங்கமம் போன்ற மத நல்லிலக்கணக் கதையும் இதில் இடம் பெறுகிறது.ஆசிரியையின் மொழி நடை செறிவானதாகவும் செப்பமாகவும் கதை மாந்தர்களுக்குப் பொருத்தமாகவும் அமைந்திருக்கிறது.சில இடங்களில் ஆசிரியர் எடுத்துரைப்பில் பேச்சு நடையின் எளிமையை விட எழுத்து நடையின் இறுக்கம் இடறுகிறது.
பொதுவாகப் புதிய பெண் எழுத்தை அறிந்து கொள்ள ஒரு அருமையான கலைப்படைப்பு தேவந்தி.
ஆசிரியைக்கு வாழ்த்துக்கள்.

பி.கு;
நல்லதொரு விமரிசனத்தை அளித்த பேராசிரியர் முனைவர் நாச்சிமுத்து அவர்களுக்கு நன்றி. இதனை ஒலிபரப்பிய தில்லி வானொலிக்கும் நன்றி.அவரது கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் சிறுகதைகளில் நான் வலையேற்றியிருப்பவைகளுக்கு உரிய இடத்தில் இணைப்புத் தந்திருக்கிறேன்.


1 கருத்து :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பதிவாகிப் பகிர்ந்து கொண்டமைக்கும், அங்கங்கே இணைப்பு தந்தமைக்கும் மிக்க நன்றி... நேரம் கிடைக்கும் போது, முக்கியமாக மின்சாரம் இருக்கும் போது வாசிக்கிறேன்...

மிக்க நன்றி அம்மா...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....