துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

27.11.12

ஒரு பாலைப்பயணம்-2



கோட்டை
பத்வா ஹவேலி

ஜெய்சால்மர் நகரின் பிரதானக் கவர்ச்சியாகச் சொல்லப்படுபவை கோட்டையை ஒட்டி ஆங்காங்கே காணப்படும் கலையழகு மிளிரும் பிரம்மாண்டமான மாளிகைகள். ஹவேலி என்ற சொல்லால் வழங்கப்படும் அவை 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை; ஜைன மதத்தைச் சேர்ந்த பத்வாக்கள் எனப்படும் மிகப்பெரிய தனவணிகர்களுக்குச் சொந்தமாக இருந்தவை.ராஜஸ்தானத்தில் இயல்பாகவே மிகுதியாகக்கிடைக்கும் மணல்கற்களையும் -sandstones-[மணல்மேடுகளும்,குன்றுகளுமே காலப்போக்கில் இறுகி மணல்கற்களாக,சலவைக்கற்களாக மாறுகின்றன] சலவைக்கற்களையும் கொண்டு இழைக்கப்பட்டிருக்கும் வசந்த மாளிகைகள் அவை .

18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜெய்சால்மர் நகரில் தங்கள் வர்த்தகத்தைத் தொடர முடியாத சிக்கல் ஏற்பட்டுத் தவிக்கும் நிலை பத்வாக்களுக்கு நேர்ந்தபோது அங்கிருந்த சமண ஆலயத்தில் பூசை செய்யும் குரு ஒருவரின் அறிவுரைப்படி அவர்கள் அந்நகரை விட்டு வெளியேறியதாகவும் ,பிறகு வெள்ளி,சரிகை,ஓபியம்[கஞ்சா போன்ற ஒருவகை போதைப்பொருள்] ஆகிய வணிகங்களின் வழியாகவும்,நிதிநிறுவனங்களை நடத்துவதன்  மூலமும் பெரும்செல்வந்தர்களாக உயர்நிலை அடைந்தபின் ஜெய்சால்மர் நகரின் பொருளாதாரத்தைச் சீர்படுத்துவதற்கென்றே அவர்கள் திரும்ப அழைக்கப்பட்டதாகவும் செய்திகள் வழங்கி வருகின்றன.

குறிப்பிட்ட காலகட்டம் வரை ஜெய்சால்மர் நகரம் முழுவதுமே கோட்டைக்குள் உள்ளடங்கியதாகத்தான் இருந்திருக்கிறது. பத்வாக்களில் மூத்தவரான குமன் சந்த் பத்வா[Ghuman Chand Patwa], தன் ஐந்து மகன்களுக்கும் மாளிகை -ஹவேலி- கட்ட முடிவு செய்தபோது கோட்டைக்குள் இடம் போதாது என்பதால், கோட்டைக்குக் கீழ்,கோட்டையை நோக்கியதாக அவற்றை அமைத்தார்.காலப்போக்கில் பல கைகள் மாறிப்போன அந்த மாளிகைகள் பழைய கலாசாரத்தைப் பறைசாற்றும்  எச்சங்களாக,சுற்றுலாப்பயணிகளைக் கவர்ந்திழுக்கும் அருங்காட்சியகங்களாக மட்டுமே தற்போது விளங்கி வருகின்றன.

நாங்கள் சென்றது...அவ்வாறான ஹவேலிகளில் ஒன்றான 
பட்வோன்-கி-ஹவேலி. ஜெய்சால்மர் மாளிகைகளில் மிகப் பெரியதென்றும், மிகச் சிறப்பு வாய்ந்த‌ விரிவுபடுத்தப்பட்ட மாளிகை என்றும் சொல்லப்படும் இதன் அழகுபடுத்தப்பட்ட ஐந்து-மாடி வளாகத்தை முடிக்க ஐம்பது வருடங்கள் தேவைப்பட்டதாகக்கருதப்படுகிறது.

குறுகலான சந்துப்பகுதியில் அமைந்திருந்த அந்த மாளிகைக்கு முன் கலைப்பொருள்களையும்,ராஜஸ்தானிப்பாணியிலான தலைப்பா குல்லாய்,பைகள்,உடைகள் ஆகியவற்றை விற்கும் அங்காடிகள்...சுற்றுலா இடங்களுக்கே உரிய உள்நாட்டு,வெளிநாட்டுப்பயணிகளின் நெரிசல்....
உள்ளே செல்லவும்,படம் எடுக்கவும்  நுழைவுச்சீட்டுகள். ஜெய்ப்பூர் அரண்மனை போலவே இவைகளும் கூட அரசின் அல்லது தொல்பொருள்துறையின் கட்டுப்பாட்டில் இன்னும் வந்திராததால் தனியார் நிர்வாகத்தில் அவர்கள் வைத்ததே சட்டம் என்பதோடு...மட்டுமல்லாமல்...பயணிகளை உள்ளே சீராக அனுப்புவதிலும்,வெளியேற்றுவதிலும் கூடக்குழப்பம்தான்....!


நான்கு கைத் தாழ்வாரம் வைத்த பழங்கால வீடுகள் போலச் சதுரம் சதுரமாக அடுக்கடுக்கான 5 தளங்களோடு ஒடுக்கமாகவும்,உயரமாகவும் அமைந்திருந்தது அந்த ஹவேலி. 

பத்வாக்கள் வாழ்ந்த ராஜபோக வாழ்க்கைக்கு அடையாளமாக அவர்கள் உடுத்த ஆடை அணிகலன்கள்,பயன்படுத்திய சமையல் சாதனங்கள், 


போர்க்கருவிகள்,தளவாடங்கள்,சேகரித்திருக்கும் ஓவியங்கள்,படங்கள்,
பாலை மணலூடே குழலூதும் இசைக்கலைஞர்

மிகப்பெரிய ஹுக்கா குழல்
சிற்பங்கள்,வீட்டுக்குள்ளேயே கோயில்கள் என ஒவ்வொரு தளமும் ஒரு அருங்காட்சியகத்தின் பாணியிலேயே அமைந்திருந்தது....



4,5 தளங்களுக்கு மேலேறிப்பார்த்தபோது கோட்டையின் காட்சி மிகத் தெளிவாகப்புலப்பட்டது.கோட்டையில் மியூசியமாக்கப்பட்டிருக்கும் ஒரு சில பகுதிகளைத் தவிரப் பிற பகுதிகளில் அரசுக்குடியிருப்புக்களும்,தனியார் குடியிருப்புக்களும் கட்டப்பட்டு மக்களின் பயன்பாட்டில் தற்போது உள்ளதாகக் கூடவந்த எங்கள் விருந்தினர் விடுதியின் காப்பாளர் கூறினார்.அது உண்மைதான் என்பதைக் கோட்டையை ஒட்டிய  கீழே உள்ள வீடுகளில் உலர்ந்து கொண்டிருந்த துணிகள் மெய்ப்பித்துக்கொண்டும் இருந்தன.தொல்பொருள்துறை இதில் ஏன் கருத்துச் செலுத்திக் காக்கத் தவறியது என்னும் கேள்விக்கு மட்டும் எங்குமே விடை கிடைக்கவில்லை.

பத்வா ஹவேலி மேல்தள உச்சியிலிருந்து....
தில்லி வந்தது முதல் கடந்த 6,7 ஆண்டுகளாக இது போன்ற அரண்மனைகள்,அருங்காட்சியகங்கள் போன்றவற்றையே மிகுதியாகப் பார்த்துப்பார்த்து அலுத்துப்போயிருந்த குழந்தைகள் இயற்கையான மணல் மேட்டுக்குப்போவது எப்போது என நச்சரிக்கத் தொடங்க....பாலைமணலிலிருந்து சூரிய அஸ்தமனம் காணும் அரிய காட்சியைத் தவற விட்டுவிடக்கூடாதே என்ற பதைப்பும் கூடவே சேர்ந்து கொள்ள.....ஜெய்சால்மரிலிருந்து கிட்டத்தட்ட 42 கி.மீ தொலைவில் இருப்பதும் தாவரங்கள் சிறிதும் அற்ற தார்ப்பாலை மணல்குன்றுகளுமான
சாம் மணல் திட்டுக்களை நோக்கி விரைந்தோம்.
சாம் மணல் திட்டு[நான் எடுத்த படம்]

[பயணம் தொடரும்..]

இணைப்பு;
ஒரு பாலைப்பயணம்-1




1 கருத்து :

சித்திரவீதிக்காரன் சொன்னது…

தொல்பொருள்துறை இதில் ஏன் கருத்துச் செலுத்திக் காக்கத் தவறியது என்னும் கேள்விக்கு மட்டும் எங்குமே விடை கிடைக்கவில்லை.\\ சத்தியமான வரிகள்.

படங்கள் பாலையை நோக்கி பயணிக்க தூண்டுகின்றன. பகிர்விற்கு நன்றி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....