துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

30.7.12

ஆகாயத்தின் நிறம்

’’ஆகாயம் பல்வேறு வண்ணங்கள் காட்டுவதுண்டு..நிறமற்ற ஆகாசமும் உண்டு..நம் கற்பனைக்கேற்ற வண்ணம் காட்டும் ஆகாயமாக அது விரிவதும் உண்டு….எதுவும் நம் பார்வையைப் பொறுத்ததே’’

சீனாவின் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட
’ஆகாசத்திண்ட நிறம்’ என்ற மலையாளத் திரைப்படத்தை நேற்று தில்லி ஹேபிடட் திரைப்படவிழாவில் காண வாய்த்தது அற்புதமான ஓர் அனுபவம்.
படத்தைப் பற்றிய முன் அனுமானங்கள் தகவல்கள் ஆகிய எவையுமே இன்றி,அங்கு சென்றிருந்த எனக்குக் குறைந்த பொருட்செலவில் எளிமையான ஒரு கதைக்கருவை மையமிட்டு அழகானதொரு செய்தியை முன் வைத்திருந்தத அந்தப்படம்,ஆனந்தம்கலந்தஅதிர்ச்சியைஏற்படுத்துவதாக அமைந்திருந்தது.

27.7.12

கல்வித்துறையின் ஒரு இலக்கியமுயற்சி...

http://www.classicsintamil.com

நூல்களை வாங்கிப் படிப்பவர்களை விட இணையத்தில் அவற்றைப் படிப்பவர்களே இன்று மிகுதியாகியிருக்கிறார்கள்.மேலும் இன்றைய உலகமயச் சூழலில்- பல நாடுகளிலும் சிதறிக்கிடக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கு நல்ல தமிழ்ப்படைப்புக்களின் மீதான ஆர்வமும் தேடலும் அதிகரித்து வருவதால் அவற்றை உரியபடி  கொண்டு போய்ச் சேர்க்கும் பொறுப்பு இத் துறையில் நாட்டம் கொண்ட அனைவருக்கும் உரியதாகிறது. அது  ஏதோ ஒரு சில இலக்கியவாதிகளின் கடமை மட்டுமே என்று ஒதுங்கிக் கொள்ளாமல் கல்வி நிறுவனங்களுக்கும் அதில் பங்குண்டு என்பதை உணர்ந்த  மதுரை பாத்திமாக் கல்லூரியின் [நான் பணியாற்றி ஓய்வு பெற்ற கல்லூரி] ஆங்கிலம் மற்றும் தமிழ்த் துறைப் பேராசிரியர்கள் ஒருங்கிணைந்து பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் [U.G.C.]உதவியுடன் ஓர் ஆய்வுத் திட்டத்தைத் தொடங்கிச் செயல்படுத்தி வருகின்றனர்.

நல்ல தமிழ்ப்படைப்புக்களை[கவிதை,சிறுகதை,குறுநாவல்,நாவல்] வலை ஏற்றுவது, அவற்றை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்வது, இந்திய மொழியின் தரமான படைப்புக்களைத் தமிழில் மொழியாக்கம் செய்து அளிப்பது ,இன்னும் மொழியாக்கம் செய்ய்யப்படாமல் இருக்கும் தரமான படைப்புக்களைச் சுட்டிக் காட்டுவது ஆகியவற்றோடு அயல் மாநிலங்களிலும் அயல்நாடுகளிலும் வாழும் -தமிழ்  எழுத்தை வாசிக்க அறியாத அடுத்த தலைமுறையினரின் வசதிக்காகக் குறிப்பிட்ட படைப்புக்களை ஆங்கில எழுத்து வடிவில் தமிழ் ஒலிபெயர்ப்பாகத்-transliteration-தருவது என அனைத்தும் அடங்கிய து அந்த ஆய்வுத் திட்டம்.

சங்கப்பாடல்களில் தொடங்கி வண்ணதாசன்[கல்யாண்ஜி] போன்றோரின் கவிதைகள் வரை பலரின் ஆக்கங்களும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டும் ஒலிபெயர்ப்பாகவும் வாசிக்கக் கிடைக்கும் இத் தளத்தில் எழுத்தாளர் ஜெயமோகனின் யானைடாக்டர் சிறுகதையின் தமிழ்மூலம்- ஆங்கில மொழியாக்கம் -ஒலிபெயர்ப்பு ஆகியன இப்போது புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

DOWNLOAD செய்து படித்தால் விரியும் மூன்று பத்திகளில் மூலம்,மொழிபெயர்ப்பு,ஒலிபெயர்ப்பு என ஒரு படைப்பு சார்ந்த அனைத்தையும் ஒருசேரப்பார்க்க முடியும்.படித்து ஒப்புநோக்க முடியும்.

இது கல்வித் துறை சார்ந்து எடுக்கப்படும் சிறு முயற்சி...எங்கோ எவருக்கோ ஏதாவது எட்டி விடலாகாதா என்னும் நோக்கத்துடனும் ஆர்வத்துடனும்  மேற்கொள்ளப்படுவது.

தேவைப்படுவோர்க்கு இத் தளத்தை வலையுலக நண்பர்கள்  அறிமுகம் செய்யலாம்; 
இதனை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளும் ஆர்வத்தோடு அவர்களால் வரவேற்கப்படுகின்றன.
நான் இதில் ஒரு பார்வையாளர் மட்டுமே..அவ்வப்போது சில படைப்புக்களைச் சேர்க்கலாம் என இங்கே தில்லியில் இருந்தபடி பரிந்துரைப்பதும் சில கருத்துக்களை முன் வைப்பதும் மட்டுமே என் பணி.
[தொடர்புக்கு]

பி.கு; புதிய பிரவேசங்கள் என்னும் என் சிறுகதையையும் அத் தளத்தில் காணலாம்.



24.7.12

கேரளப்பயணம்-ஆனகட்டி,மஞ்சூர்-2

மேகக்கூட்டங்கள் மலைமுகடுகளில் நீந்திச்செல்லும் எழில்...
ஜூன் மாத மத்தியில் கேரளப் பயணத்தின்போது தமிழக-கேரள எல்லையிலுள்ள ஆனகட்டி மற்றும் மஞ்சூர் அருகில் நான் கண்ட இயற்கை எழிலின் சில துளிகளைக் காமராவில் சிறைப்பிடித்திருக்கிறேன்.

இந்தப்பயணத்தில் என்னைக் கட்டிப்போட்டு வைத்திருந்தது...ஓய்வு ஒழிவின்றி வானில் ஊர்ந்து கொண்டும் மலை அடுக்குகளில் தவழ்ந்து கொண்டும் இருந்த மேகங்கள்..... மேகங்கள்....மேகங்கள் மட்டும்தான்.

’’மஞ்சு துஞ்சும் மலை’’ எனப் படித்ததெல்லாம் கண்ணில் காட்சியான தருணத்தில் திகட்டாத அந்தப் பேரனுபவத்தை எத்தனை நேரம் பார்த்துக் கொண்டு நின்றாலும் கண்ணுக்கும் மனதுக்கும் அலுக்கவில்லை....
[மரபான பழந்தமிழில் மஞ்சு என்பது மேகம்..மஞ்சூர் என்பதற்கும் பெயர்க்காரணம் அதுவாகவே இருக்கக்கூடும்.]

விண்ணில் நிகழும் மேக ஊர்வலம்  எதுவரை எங்கே எதை நோக்கி நீண்டு செல்கிறது என அதைத் தொடர்ந்து கொண்டே இருப்பது ஒரு சுகமான பிள்ளை விளையாட்டுத்தான்..ஆனாலும்  சொல்லில் விளங்காத..சொல்லுக்கடங்காத புத்துணர்வளிக்கும் பேரானந்தப் பரவசம் அது..

முதிராத - முற்றாத இளம் மேகத்தை ’முகில் குழவி’[மேகக்குழந்தை]என்ற அற்புதமான வார்த்தையால் வடித்து வைத்திருக்கிறான் சங்கக் கவிஞன்.கவிதையில் கிடைத்த அதன் தரிசனம்...நேரில் கிடைத்த கிளர்ச்சியில் நெகிழ்ந்து கரைந்து நின்றேன்.....






கேரளப்பலவுடன்....
கிளைகளுக்கு நடுவே தன்னைப் பொதித்துக் கொண்டிருக்கும் சிறு பறவை....
சலசலக்கும் சிற்றோடை...


19.7.12

’’ஊசியின் விரைந்தன்று .....’’

'நன்றி;
பயணம் இதழ்-கட்டுரைத்தொடர்,சங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம்-5


இலக்கியப் படைப்புக்கள் ,உருவம், உள்ளடக்கம் ,உத்தி என மூன்று கூறுகளாலேயே கட்டமைக்கப்படுவன.இவற்றுள் உருவ அழகு துலங்குவதும் , உள்ளடக்கம் தெளிவாக விளக்கம் பெறுவதும் உத்தியைப் பொறுத்தே அமைகின்றன.
உத்திகளில் உவமைக்கென்று தனியான ஓர் இடம் உண்டு.பக்கம் பக்கமாக மணிக்கணக்கில் விளக்கிக் கொண்டிருந்தாலும் புரியாத செய்திகள் , உவமையின் வாயிலாக எடுத்துக் காட்டப்படும்போது ஒரே நொடியில் விளங்கி விடுகின்றன.
தலைவன் மீது தலைவி கொண்டிருக்கும் அன்பை நேரடியாகக் கூறுவதை விட 
''நிலத்தினும் பெரிதே
வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரளவின்றே''
என்று உவமைகளைப் படிபடியாக அடுக்கிக் கூறுகையில் அவளது அன்பின் ஆழம் , படிப்பவர்களின் உள்ளத்தில் அழுத்தமாகப் பதிந்து விடுகிறது.

சங்க இலக்கியத்தை உவமை இலக்கியம் என்றே கூறிவிடும் அளவுக்கு அதில் உவமத்தின் பலவகை நுட்பங்களைக் காண முடிகிறது. உலக நடப்பில் இல்லாத ஒன்றை மிகைபட மொழியாமல் நடப்பியல் வாழ்வைக் கூர்த்த பார்வையோடு ஊன்றி நோக்கி உவமையாக்கியவன் சங்கப் புலவன்.சான்றுக்கு ஒரு புறநானூற்றுப் பாடல் !

சோழன் போர்வைக் கோப்பெரு நற்கிள்ளிக்கும் , மற்போரில் தனக்கு நிகர் எவருமில்லை என்று தோள் தட்டி வரும் ஆமூர் மல்லனுக்கும் இடையே கடுமையான மல்யுத்தப் போட்டி நடக்கிறது. சோழ மண்ணின் மானம் காக்க முயலும் நற்கிள்ளி , மல்யுத்தத்தின் நுணுக்கங்கள் பல காட்டி ஆமூர் மல்லனை வளைக்கிறான் ; ஒடிக்கிறான்.
அந்தக் காட்சி , இயற்கையோடு இயைந்து போய் அதிலேயே ஊறித் திளைத்திருக்கும் சங்கப் புலவருக்கு ,ஒரு பசி கொண்ட மத யானை ,மூங்கில் மரத்தை வளைப்பதையும் , ஒடிப்பதையும் நினைவுபடுத்துகிறது.

''பசித்துப் பணை (மூங்கில்) முயலும் யானை போல''
என்று அன்றாடம் தான் கண்டிருக்கும் காட்சியை இதே சூழலுக்கு உவமையாக்கி அழகு செய்கிறார் அவர்.


போரின் நேர்முக வருணனை ஒருபுறமிருக்க , அந்தப் போரின் இறுதி வெற்றி யாருக்கு , அந்தப் போர் நிகழ்ந்த நேரம் எவ்வளவு என்ற கேள்விகளும் கூடவே எழுகின்றன. குறைவான கால அவகாசத்திற்குள் நிறைவான சாதனைகளைச் செய்து முடிக்கும் திறமைசாலியாக....அற்புதமான ஒரு போராளியாக நற்கிள்ளியை வினோதமான ஒரு உவமை வழியாகத் தனது புறப்பாடலில் காட்டி விடுகிறார் சாத்தந்தையார்.

ஒரு சிற்றூர் . அங்கே கையில் ஊசி ஒன்றைப் பிடித்தபடி கட்டில்பின்னும் ஒரு தொழிலாளி.
ஊரில் திருவிழா நடந்து கொண்டிருக்க எங்கும் ஒரே கொண்டாட்டமாக இருக்கிறது.
அவனது மனைவி நிறை மாத கருப்பிணி . 
எந்த நேரமும் அவளுக்குக் குழந்தை பிறந்து விடலாமென்ற நெருக்கடியான சூழல் .
நேரம் ஒரு மழைக் காலத்தின் மாலைப் பொழுது.
இப்படிப்பட்ட நெருக்கடிகளுக்கு இடையே அந்தத் தொழிலாளியின் கையிலுள்ள ஊசி எத்துணை விரைவாக இயங்கியாகவேண்டும்? செயற்கை விளக்குகள் புழக்கத்திற்கு வந்திராத அந்தக் காலகட்டத்தில் ,இருட்டுப் படருவதற்குள் நுணுக்கமான தன் கை வேலையை அவன் முடித்தாக வேண்டும். திருவிழா சமயத்தில் கூடும் கூட்டத்தைத் தனக்குச் சாதகமாக்கிக்கொண்டு விழாச் சந்தையில் அதை விற்றுக்காசாக்கினால்தான் மனைவியின் குழந்தைப் பேற்றுக்குப் பொருள் திரட்டுவது அவனால் முடியும் . இவ்வளவு நெருக்குதல்களும் , அழுத்தங்களும் இருப்பதாலேயே அவன் கை ஊசி மிக வேகமாகச் செயல்படுகிறது. பொருள் தேடியே ஆக வேண்டும் என்ற ஊக்கம் , அவனது முயற்சிக்கு உந்துதல் அளிக்க அந்த நெருக்கடியான சூழலிலும் தான் எடுத்த செயலை விரைவாக முடிக்கிறான் அவன்.

ஆமூர் மல்லனோடு நலங்கிள்ளி செய்த போரும் கூட ஒரு வகையில் அப்படிப்பட்டதுதான்.
கட்டில் பின்னும் தொழிலாளிக்குப் பணப் பிரச்சினை என்றால் , நலங்கிள்ளிக்கு மானப் பிரச்சினை.
இந்த இரண்டு சிக்கல்களையும் உவமை என்ற புள்ளியின் வழியாக ஒருங்கிணைத்து , மல்லனோடு நற்கிள்ளி நிகழ்த்திய போர் , கட்டில் பின்னும் தொழிலாளியின் கையிலுள்ள ஊசியின் வேகத்தோடு -அத்தனை விரைவாக முடிந்தது என்பதையும் தன் மற்போரின் திறமையை வைத்து அந்த ஊரையே தனக்கு அடிமையாக்கி விடலாம் என்ற எண்ணத்துடன் வந்த ஆமூர் மல்லனோடு சோழன் போர்வைக் கோப்பெரு நற்கிள்ளி நிகழ்த்திய போர் , எவ்வாறு துரித கதியில் நிகழ்ந்து முடிந்தது என்பதையும் 
’’போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று ’’என்ற உவமையில் மிகச் சுருக்கமாகக் கூறி... மற்போரின் துரிதமான கதியை , இயக்கத்தை வெகு எளிதாக விளக்கி விடுகிறார் கவிஞர்...
''சாறு தலைக் கொண்டெனப் பெண் ஈற்று உற்றெனப்
பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக்
கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ
ஊர் கொள வந்த பொருநனொடு
ஆர் புனை தெரியல் நெடுந்தகை போரே..’’
-சாத்தந்தையார்,புறநானூறு,82.
[சாறு-விழா; பெண் ஈற்று உறல்-கருவுறல்; பட்ட மாரி-மழைக்காலம்; ஞான்ற ஞாயிறு-சூரியன் மறைந்த மாலைப்பொழுது;போழ்தூண்டு ஊசி- கட்டில் நாரைத் துளைபோட்டுத் தைக்கும் ஊசி]

மேலோட்டமான பார்வைக்குச் சம்பந்தமே இல்லாததுபோலத் தோன்றும் வேறுபட்ட இரு செய்திகள் உவமை என்ற கண்ணியால் இணைவதே இப் பாடலின் அற்புதம்.

18.7.12

தமிழ் ஸ்டுடியோவின் திரைக்கதைப் பயிற்சி


தமிழ்ஸ்டுடியோ .காமிலிருந்து வந்திருக்கும் அறிவிப்பு... editor@thamizhstudio.com

தமிழ் ஸ்டுடியோவின் திரைக்கதை பயிற்சி - இரண்டு நாள் (சென்னை)

நாள்: 21-07-2012 & 22-07-2012

இடம்: தியேட்டர் லேப், முனுசாமி சாலை, புதுச்சேரி விருந்தினர் மாளிகை அருகில், மேற்கு கே.கே. நகர் (தொடர்புக்கு: 9840698236)

நேரம்: காலை எட்டு மணி முதல் 

கட்டணம்: ரூபாய் 1000/- (மதிய உணவு உட்பட)

நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த இரண்டு நாள் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு நாள் திரைக்கதை பயிற்சி ஒரு தொடக்கம் மட்டுமே. எந்த ஒரு பயிற்சியும் அதன் குறிப்பிட்ட காலக் கெடுவில் முடிந்து விடுவதில்லை. அதையும் தாண்டி கற்றுக் கொள்பவர்களின் தேடலை அது முன்னிறுத்தி செல்கிறது. 

தமிழ் ஸ்டுடியோவின் இந்த இரண்டு நாள் திரைக்கதை பயிற்சி, ஒரு அடிப்படைப் பயிற்சி மட்டுமே. ஷிட் பீல்ட் (Syd Field) அவர்களின் திரைக்கதை நுணுக்கங்களைப் பயன்படுத்தி இந்தப் பயிற்சி நடைபெறவிருக்கிறது. கற்றுக் கொள்வதற்கான முதல் தகுதியே ஆர்வம்தான். எனவே இந்த இரண்டு நாள் பயிற்சியும் காலை எட்டு மணிக்கே தொடங்கிவிடும். ஆர்வமுள்ள அனைத்து நண்பர்களும் இதில் கலந்து கொள்ளலாம். 

முன்பதிவு செய்ய: 9840698236

17.7.12

மொழி உறவுகள்-தில்லிகை

ஜூலை 14ஆம் நாளன்று நிகழ்ந்த தில்லிகை இலக்கிய வட்டக் கூட்டம் குறைவான பார்வையாளர்களோடு தொடங்கினாலும் நிறைவான மகிழ்வை அளிப்பதாக அமைந்திருந்தது.

இந்தி-தமிழ் உறவு பற்றிப் பேசிய திரு ஷாஜகான் அவர்களின் உரை வங்கம்,மராத்தி,மலையாளம் ஆகிய மொழிகளோடு தமிழுக்கு நேர்ந்திருக்கும் விரிவான தொடர்புகளையும் முன் வைத்தது.
திரு ஷாஜகான்(புதியவன்)

வங்கத்திலிருந்து தமிழுக்கு அரிய பல நூல்களைக் கொணர்ந்த தொடக்க காலகட்டத்தைச் சேர்ந்த த.நா.சேனாபதி,த.நா.குமாரசுவாமி தொடங்கி இன்று அப்பணியை முழு மூச்சாகச் செய்து வரும் கல்கத்தா கிருஷ்ணமூர்த்தி வரை பல மொழிபெயர்ப்பாளர்களையும் சுட்டிக் காட்டிய ஷாஜகான், காண்டேகர் மராத்தியில் பெற்ற புகழை விடவும் அவரது மொழிபெயர்ப்பாளராக வாய்த்த கா.ஸ்ரீ.ஸ்ரீயால் தமிழில் பெரிதும் அறியப்பட்டதையும் எடுத்துக் காட்டினார்.இந்தியில் சரஸ்வதி ராம்நாத்தில் தொடங்கி இன்று தொல்காப்பியத்தை இந்தியில் கொணர அரிய முயற்சி மேற்கொண்டுவரும் சாகித்திய அகாதமி விருது பெற்ற எச்.பாலசுப்பிரமணியம் வரை பலரின் செயல்பாடுகளும் அவரது உரையில் விரிவாகக் காட்டப்பட்டன.இன்றைய தலைமுறை இலக்கிய ஆர்வலர்களுக்கு அவரது உரை பெரிதும் முன்மாதிரியாக,பயனுள்ளதாக அமைந்திருந்தது.
[முழுஉரையினையும் திரு ஷாஜகானின் தளத்தில் காணலாம்]

கொங்கணி-தமிழ் உறவு குறித்துப் பேசியவர் ஜே என் யூ பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழ்ச்செல்வன்.
தமிழ்ச்செல்வன்..
கொங்கணி சார்ந்தே தன் முனைவர் பட்டத்தையும் தொடர்ந்து வரும் அந்த மாணவர் முன் வைத்த செய்திகள் அதிகம் அறியப்படாதவை;பரவலான தளத்தில் இன்னும் அறிமுகமாகாதவை.பெரு முயற்சி மேற்கொண்டு கொங்கணி மொழியைக் கற்று அம்மொழியிலிருந்து நேரடியாகவே தமிழுக்கு இரு சிறுகதைகளை மொழிபெயர்த்தும் அளித்திருப்பவர் தமிழ்ச்செல்வன்.அக்கதைகள் அவரது எம் ஃபில்பட்ட ஆய்வேட்டில் இடம் பெறிருப்பதோடு அண்மையில் அவற்றில் ஒரு படைப்பான ’சிடுமூஞ்சி’ என்னும் சிறுகதை ‘திசை எட்டும்’ இதழிலும் வெளிவந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒரு செய்தி.
பார்வையாளர்களில் நான்,பேராசிரியர் நாச்சிமுத்து
ஷாஜகான்,பதிவர் வெங்கட்
’’வெளிச்சத்தைப் பற்றி ஏன் விரிவுரை ஆற்றுகிறாய்..விளக்கை ஏற்று’’என்கிறது அப்துல் ரஹ்மானின் கவிதை ஒன்று...
அத்தகைய சிற்றகல்களை ஏற்றி இளம் நெஞ்சங்களில் இலக்கிய ஆர்வத்துக்கான பொறிகளைப் பதிய வைக்கும் உள்ளார்ந்த ஈடுபாட்டுடனான இத்தகைய நிகழ்ச்சிகளும்  இன்றில்லை எனினும் என்றோ...எப்பொழுதோ...எவருக்கோ பலனளிக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றனஎன்று நானும் ஜே என் யூ பேராசிரியர் திரு நாச்சிமுத்துவும் சொல்லிக் கொண்டோம்...

இக்கூட்டத்துக்கான முன் முயற்சிகளில் முழு வீச்சுடன் இயங்கி வரும் திரு ஸ்ரீதரன் ஐ எஃப் எஸ் அவர்களும் விஜய்ராஜ்மோகன் மற்றும் துணை நிற்கும் நண்பர்கள் அனைவரும் நம் பாரட்டுக்குரியவர்கள்...


15.7.12

கேரளப்பயணத்தில்-பூதத்தான் கெட்டு-1

பூதத்தான்கெட்டு...
அண்மையில் கேரளப்பயணத்தின்போது பெரும்பாவூர் அருகிலுள்ள தட்டைக்காடு என்னும் இடத்துக்கும் சென்றிருந்தேன்.அங்கிருந்த சலீம் அலி பறவைகள் சரணாலயத்தைப் பார்க்க அப்பொழுது நேரம் வாய்க்கவில்லை என்றாலும் அருகில் இருந்த பூதத்தான் கட்டு என்னும் அணைக்கும் அது சார்ந்த அடர் காட்டுக்குள்ளும் சற்றுச் செல்ல முடிந்தது.
பழைய அணை செல்லும் வழி...
பாறைகளின் நெருக்கத்தால் இயற்கையாகவே பெரியாறு நதியின் மீது [சர்ச்சைக்குரியஅதே முல்லைப்பெரியாறுதான்..]அணை போல உருவான சிறியதொரு நீர்த்தேக்கம் பூதத்தான் கட்டு
[மலையாள உச்சரிப்பில் பூதத்தான் கெட்டு].
மானுடக் கண்ணுக்குப் புலப்படாத சில பூதங்கள் கொண்டு வந்து போட்ட கற்பாறைகளாலேயே அப்பகுதி உருவாகியிருக்கிறது என்பது அங்குள்ள மக்களிடையே வழங்கும் தொன்மச் செய்தி.பெயர்க்காரணமும் அது பற்றியதே.
பாறைகளும் நீர்த்தேக்கமும்

பூதத்தான்கெட்டுப் பாறையில்...
பயன்பாட்டுக்கு இன்று அதிகம் உதவாத அந்த நீர்த்தேக்கத்துக்கு மாற்றாகக் காலப்போக்கில் செயற்கையான அணையும் அங்கே உருவாக்கப்பட்டு விட்டது...
புதிய அணை..
 பழைய நீர்த்தேக்கம் பூதங்களால் உருவாகக்கப்பட்டது என்பது போன்ற செவிவழிச் செய்திகளின் நம்பகத்தன்மை ஒரு புறமிருக்க...அதற்குச் செல்லும் அந்த வழி...., மரங்களும் காட்டுக் கொடிகளும் அடர்ந்து நீண்டும் வளைந்தும் செல்லும் தனிமையான அந்தப் பாதை...அங்கே நடந்து சென்றது சுகமான சுவாரசியமான அனுபவங்களை அளித்ததென்னவோ உண்மை...

அடர்காட்டில் மகளுடன்....

நம்பிக்கையோடு வலை பின்னியபடி கிளையில் தொங்கும் மெகா சிலந்தி...
தரையில் கிடக்கும் தேனடை...
காட்டு வழியில் சரிந்து கிடக்கும் மரக்கிளைகள்...

மரப்பொந்துகள்..


காட்டுக்குள்ளே ஆராய்ச்சி...
       பாறைக்குள் புதையல் தேடி...[பேரக்குழந்தைகள்..]

11.7.12

‘தில்லிகை’ -ஜூலை நிகழ்வு

புதுதில்லி இலக்கிய ஆர்வலர்களின் முயற்சியால் தொடங்கப்பட்டிருக்கும் தில்லிகை’ இலக்கிய வட்டத்தின் ஜூலை மாதக் கூட்டம் 14 ஜூலை 2012, இரண்டாம் சனிக்கிழமை, மாலை சரியாக 3 மணிக்கு நிகழவிருக்கிறது.

இடம்;தில்லித் தமிழ்ச் சங்கம், ராமகிருஷ்ணாபுரம், புது தில்லி. [பாரதிஅரங்கம்]





6.7.12

முத்துக்கிருஷ்ணனின் வலைத்தளம்

என் மதுரை நண்பரும் இலக்கிய ,மனித உரிமை, சுற்றுச்சூழல் ஆர்வலருமான திரு முத்துக்கிருஷ்ணன் அவர்கள் ஒரு வலைத்தளம் தொடங்கியிருக்கிறார்.

நண்பரின் வலைத்தளம் சிறக்க வாழ்த்துக்கள்....

அது பற்றி அவர் சொற்களில்..
அன்பு நண்பர்களே

ஒரு புதிய பயணத்திற்காக ஆயத்தமாகிறேன், பள்ளி பருவத்தில் சுற்றுலா செல்ல கிளம்பியது போன்ற உணர்வுடன் கடந்த ஒரு மாதமாக புத்துணர்வு ததும்பும் மனநிலையுடன் அலைந்து திரிகிறேன். எழுதத் தொடங்கிய காலம் முதல் பல வாசகர்கள், எழுத்தாளர்கள் தொடர்ந்து என்னிடம் வைத்த வந்த கோரிக்கையை காலம் கடந்து நிறைவேற்றியுளளது.
இதை பற்றிய ஒரு பதிவை உங்கள் இணையதளத்தில், முகநூலின், வலைபக்கத்தில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஜூலை 1 ஆம் தேதி இணையதளம் பதிவேறும்.
முத்துகிருஷ்ணன்

2.7.12

’’இரு பேராண்மை செய்த பூசல்..’’

'நன்றி;பயணம் இதழ்-கட்டுரைத் தொடர்,சங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம்-4

''....எதிர்பாராத கணத்தில் நல்ல பாம்பு தீண்டியதைப் போல- தலைவியைத் துணுக்குற வைக்கிறது''







இணைமனம் கொண்ட காதலரிடையே நேரும் தற்காலிகப் பிரிவும் கூடப் பெருந்துன்பத்தின் நிலைக்களனாகி அவர்களை ஆறாத் துயரில் ஆழ்த்தி விடுகிறது. ’’பூ இடைப்படினும்’’ ஆண்டு பல கழிந்தது போல- பல்லாண்டு பிரிந்திருந்தது போல உள்ளத்தை உலுக்கி உன்மத்தம் பிடித்தாற்போல ஆட்டுவிக்கும் உத்வேகம் கொண்ட வினோதமான உணர்ச்சி அது. அதைச் சொல்லால் விளக்குவது கடினம்தான் என்றபோதும் காதல் வாழ்வில் நேரும் பிரிவுத் துயரின் தகிப்பைக் காட்ட ஒவ்வொரு காலகட்டத்துப் படைப்பாளிகளுமே முயன்றபடிதான் இருக்கிறார்கள். ‘’தூண்டிற்புழுவைப் போல் வெளியே சுடர் விளக்கினைப் போல்’’ பிரிவுத் துன்பத்தில் துடிக்கிறாள் பாரதியின் தலைவி.


’என்னை விட்டுப் பிரியவே மாட்டேன் என்று கூறுவதானால் தொடர்ந்து என்னிடம் பேசுங்கள்…, அவ்வாறு இல்லாமல் போய் விட்டு உடனே திரும்பி விடுவேன் என்றெல்லாம் சொல்வதாக இருந்தால்..நீங்கள்  திரும்பி வருகையில் உயிர் வாழும் திடம் யாருக்கு இருக்கிறதோ அவளிடம் அதைச் சொல்லுங்கள்’’ என்றபடி அவன் பிரியும்போதே தன் உயிரும் பிரிந்து விடும் என்பதை,
‘’செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின்
வல்வரவு வாழ்வார்க்கு உரை’’
என்று குறிப்பாக உணர்த்துகிறாள் வள்ளுவத்தின் காமத்துப்பால் தலைவி.
ஔவையாரின் குறுந்தொகைப்பாடல் ஒன்று தலைவன் தலைவியரின் பிரிவின்போது நேரும் மனப் போராட்டத்தைச் சுருக்கமான செறிவான சொற்களில் சித்திரமாக்கி அளிக்கிறது.
‘’செல்வார் அல்லர் என்று யான் இகழ்ந்தனனே
ஒல்வாள் அல்லள் என்று அவர் இகழ்ந்தனரே
ஆயிடை இரு பேராண்மை செய்த பூசல்
நல்லராக் கதுவியாங்கு என்
அல்லல் நெஞ்சம் அலமலக்குறுமே’’-
குறுந்தொகை-43,ஔவை
இரு வேறான ஆளுமைகளின் தனிப்பட்ட எண்ண ஓட்டங்களில் நேரும் சிறியதொரு முரண்பாட்டால் நேரும் பூசலைச் சித்திரிக்கும் அற்புதமான கவிதை இது.

தலைவன் பொருள் தேடவோ தொழில் நிமித்தமாகவோ தலைவியைப் பிரிந்து செல்ல நினைக்கிறான். ஆனால் அதைச் சொன்னால் அவள் எந்த அளவு ஏற்பாள் என்பதும் அந்தப் பிரிவைப் பொறுக்கும் மனத் திட்பம் அவளிடம் உள்ளதா என்பதும் தெரியாத காரணத்தால் ஓர் ஊசலாட்டத்தில் இருந்தபடி அதை அவளிடம் சொல்லாமல் ஒத்திப் போட்டுக் கொண்டே இருக்கிறான் அவன்...

தலைவனுக்குப் பிற கடமைகளும் உண்டு என்பதும் அவற்றின் பொருட்டு அவன் தன்னைப் பிரிந்தே ஆக வேண்டியிருக்கும் என்பதும் தலைவிக்கும் தெரிந்ததுதான். ஆனாலும் ஏதோ ஒரு மாயப் பிரமையில் அவன் அப்படித் தன்னை விட்டுச் சென்றுவிட மாட்டான் என்று எண்ணியவளாகத் தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டிருக்கிறாள் தலைவி.
வீட்டுக்குள் ஒரு மௌன நாடகம் தொடர்ந்து நடந்தேறிக் கொண்டே இருக்கிறது.
அவன் எங்கோ கிளம்ப ஆயத்தமாகிறான் என்பது உணர்வுக்குத் தட்டுப்பட்டும் ’அப்படியெல்லாம் ஒன்றும் இருக்காது’ என்று தன்னுள் தலையெடுத்த உணர்வைச் சட்டென்று புறமொதுக்கிவிடுகிறாள் தலைவி. அவளிடம் எப்படிச் சொல்வதென்ற தயக்கத்தில் தலைவனும் அந்தச் செய்தியைச் சொல்லாமல் ஒதுக்கிவிடுகிறான். இவ்வாறு தங்கள் ஆழ்மனம் ஏற்கத் தயங்கும் பிரிவு பற்றிய அச்சம் இருவர் வாய்ச்சொற்களையும் கட்டிப்போட்டு விடுகிறது.
இதையே
’செல்வார் அல்லர் என்று யான் இகழ்ந்தனனே
ஒல்வாள் அல்லள் என்று அவர் இகழ்ந்தனரே’’என்னும் கவித்துவமான வார்த்தைகளில் சிறைப்பிடிக்கிறார் ஔவையார்.

’இகழ்தல்’ என்னும் சொல் மரபார்ந்த-வழக்கமான பொருளில் இங்கே பயன்படுத்தப்படவில்லை என்பதும் சொல்வதற்குத் தயக்கமான அல்லது சொல்லப்பிடிக்காதவற்றைச் சொல்லாமல் ஒத்திப் போடுதல் என்னும் பொருளிலேயே அது இங்கே ஆளப்பட்டிருக்கிறது என்பதும் கவிதையின் மொத்தப் பொருளுக்குள் நுழையும்போது தன்னால் புலப்பட்டு விடுகிறது.
சிக்கலான இந்த உணர்வுப் போராட்டத்துக்கு இடையே சூழலின் கைதியாகி வெளியே சென்றே ஆக வேண்டிய நிலையில் இருக்கும் தலைவன் அவளிடம் சொல்லாமலேயே சட்டென்று ஒரு கணத்தில் கிளம்பிச் சென்று விடுகிறான். அந்தச் செயல் எதிர்பாராத கணத்தில் நல்ல பாம்பு தீண்டியதைப் போல- தலைவியைத் துணுக்குற வைக்கிறது. அவன் செல்ல மாட்டான் என்ற தன் நினைப்பு, தன்னிடம் பிரிவைச் சொல்லத் தயங்கிய அவன் மனஓட்டம் இவை இரண்டுக்கும் இடையிலான போராட்டம்……தன்னிடம் விடை பெற்றுக் கொள்வதிலிருந்து அவனைத் தடுத்து விட்டதே என்று அலைக்கழிவு பட்டு ஆறாத் துன்பம் கொண்டவளாய் அலமலக்குறுகிறாள் அவள். ஒருக்கால் அவ்வாறான ஒரு சூழல் வாய்த்து அவன் தன்னிடம் விடை பெற்றிருந்தால் தன் அன்பும் முயற்சியும் சேர்ந்து அவன் பிரிவைக் கூடத் தடுத்திருக்குமோ என எண்ணுகையில் அவள் துயர் பல்கிப் பெருகுகிறது..மனம் விரும்பாததை மனம் விட்டுப் பேசத் தவறியதால் மனம் விரும்பாத நிகழ்வு ஒன்று நடைபெறத்  தானே காரணமாகி விட்டோமே என்ற சோகம் அவளைப் பாம்புக் கடியாய் வதைக்கிறது.

தலைவன் தலைவி இருவரின் வேறுபட்ட ஆளுமைக் குணங்களையே ‘இரு பேராண்மை செய்த பூசல்’ என்னும் தொடரால் குறிப்பிடுகிறார் கவிஞர். (இது தனி மனித ஆளுமைப் பண்பேயன்றி ஆடவருக்குரிய ஆண்மையைக் குறிப்பதல்ல). தலைவியின் ஆளுமை ,தன்னை மீறி அவன் சென்றுவிட மாட்டான் என்னும் துணிவு.., தலைவனின் ஆளுமையோ அவளிடம் சொல்லத் துணிவின்றிச் செயலை மட்டும் முடித்துக் கொண்டு விடும் ஆளுமை…இவ்விரு ஆளுமைக் குணங்களின் மோதல் ஔவையிடமிருந்து எளிமையும் இனிமையும் கொண்ட அழகான சங்கப் பாடல் ஒன்றை உருவெடுக்க வைத்திருக்கிறது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....