துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

29.1.18

நம் நற்றிணை - நேர்காணல்


நம் நற்றிணை காலாண்டு இலக்கிய இதழில் [செப்-நவ 2017] வெளியாகியிருக்கும் என் நேர்காணல்
எம் ஏ சுசீலாவுடன் எம் ஏ சுசீலா

பாலிய நினைவுகளில் பதிந்திருப்பது…?
’50களில் அதிகம் வளர்ச்சியடையாத சின்னஞ்சிறு நகரமாக இருந்த காரைக்குடி நகராட்சி தொடக்கப்பள்ளியின் கூரைவேய்ந்த..மற்றும் ஓடுகள் விலகிய வகுப்பறைகள்தான் என் பாலிய நினைவுகளின் துவக்கம். மிகக்குறைவான ஊதியமே பெற்றாலும் ஒவ்வொரு மாணவரிடமும் தனிப்பட்ட அக்கறையும் கரிசனமும் காட்டும் அன்பான எளிமையான ஆசிரியர்கள். தலையில் குட்டிக்குட்டி அவர்கள் அன்றாடம் போட வைத்த மனக்கணக்குதான் எந்த கேல்குலேடரையும்  தேட வேண்டாதபடி இன்று வரை கை கொடுத்துக்கொண்டிருக்கிறது. சக்தி கிருஷ்ணஸ்வாமியின் வசனத்தைப் பேசிப் பள்ளி விழாவின் ஓரங்க நாடகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனாக நடித்த என் நடிப்பை அதே 1959 இல் வெளியாகி ஓடிக்கொண்டிருந்த திரைப்படக் கட்டபொம்மன்  சிவாஜிகணேசனை விடச் சிறப்பாகத் தூக்கி வைத்துப்பாராட்டிய ஆசிரியர்களே இன்றுவரை என் வளர்ச்சியின் தன்னம்பிக்கையின் அடித்தளமாக இருந்து கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து என் அம்மா தலைமை ஆசிரியையாகப் பணியாற்றிய பள்ளியில் எஸ் எஸ் எல் சி வரை உயர்நிலைக்கல்வி. அங்கே குழந்தை முதல் அறிமுகம் என்பதால் எல்லா ஆசிரியைகளுக்கும் நான் செல்லம். வகுப்பு நேரம் போக அம்மாவின் அலுவலக அறையை ஒட்டியிருந்த சிறிய நூலகத்தில் புதிதாக வரும் புத்தகங்கள்  நான் படித்த பின்பே பதிவேட்டில் குறிக்கப்பட்டு சுற்றுக்குப்போகும். புதுப்புத்தகத்தின் வாசனையை உள்ளிழுத்தபடி கல்கி அகிலனில் தொடங்கி ஒரே மூச்சில் வாசிக்க ஆரம்பித்த பழக்கம் அம்மாவோடு துணிக்கடை நகைக்கடை என்று போனாலும் கையில் புத்தகம் இல்லாமல் போக முடியாதபடி தொற்றிக்கொண்டது. பின்னாளில் ரேஷன் வரிசை ரெயில் வரிசை மருத்துவமனைக்காத்திருப்பு என்று எதுவானாலும் புத்தகமே கையின் கவசமாயிற்று.
இலக்கிய ஆர்வம் எப்போது தொற்றிக்கொண்டது…?
இயல்பாகவே தமிழ் ஆர்வம் செழித்திருக்கும் செட்டிநாட்டுப் பகுதியில் வளர நேரிட்டதாலோ என்னவோ அம்மா கணக்கு ஆசிரியையாக இருந்தபோதும் என் நாட்டமெல்லாம் இலக்கியத்தின் மீதே குவிந்திருந்தது. கம்பனடிப்பொடி திரு சா கணேசன் அவர்கள் ஆண்டுதோறும் நடத்தி வந்த கம்பன் விழா நான் படித்த பள்ளி வளாகத்திலேதான் அப்போது நிகழ்ந்து கொண்டிருந்தது. 60களில் நிகழ்ந்த காரைக்குடி கம்பன் விழாச் சொற்பொழிவுகள் நுட்பமான பல ஆய்வுகளுக்கு நிகராக மதிப்பிடக் கூடிய செறிவும், உள்ளடக்கமும் கொண்டவை. ம பொ சிவஞானம், கம்யூனிஸ்ட் தலைவர் திரு ப ஜீவானந்தம்,புலவர் கீரன், நீதியரசர் மு மு இஸுமாயில், தவத்திரு குன்றக்குடி அடிகளார், அறிஞர் .. ஞானசம்பந்தன், பாஸ்கரத் தொண்டைமான், இடதுசாரிச் சிந்தனை கொண்ட பேராசிரியர் எஸ்.ஆர்.கே [எஸ்.ராமகிருஷ்ணன் - கம்பனும், மில்டனும் நூலாசிரியர்], திருச்சிப் பேராசிரியர் ராதாகிருஷ்ணன், போன்ற மிகப்பெரும் ஆளுமைகளின் செறிவான தமிழ்ப் பேச்சுக்கள்,, நீர்த்துப்போகாத சொற்பொழிவுகள் இவையெல்லாம் தமிழ் இலக்கியத்தை முறைப்படி கற்க வேண்டும் என்னும் வேட்கையை என்னுள் விதைத்தன. நான் சேர்ந்த கல்லூரியில் வேறு துறை வாய்ப்புக்கள் அதிகம் இல்லாததால் இளம் வேதியலைப் பட்டப்படிப்பாகக்கொண்டாக வேண்டிய தவிர்க்க இயலாத சூழல் ஏற்பட்டாலும் அப்போதும் கூட இலக்கிய வகுப்புக்களிலேதான் என் கவனம் சென்று கொண்டிருந்தது. அதைத் தூண்டுவது போல எனக்கு அற்புதமான தமிழ் ஆங்கிலப்பேராசிரியர்கள் வாய்த்திருந்தார்கள். பல்வேறு பாடப்பிரிவுகளுக்குரிய பொது வகுப்பாக இருந்தாலும் இலக்கிய வரலாற்றை என் தமிழ்ப்பேராசிரியை ஈடுபாட்டோடும் ரசனையோடும் மிக விரிவாகக்கற்பித்த முறை அபாரமானது. தமிழிலக்கியத்தை முழுமையாகக் கற்றே தீர வேணடும் என்ற முடிவான தீர்மானம் உதித்தது அப்போதுதான்.
தமிழ்க்கல்வியைப் பொறுத்தவரை அண்ணாமலைப்பல்கலைக்கு அடுத்த நிலையில் அப்போது இருந்து கொண்டிருந்த காரைக்குடி அழகப்பா கல்லூரியில் முதுகலை தமிழில் சேர்ந்த பிறகுதான் எனக்கு நிலைப்பட்டது போலிருந்தது.  முதுபெரும் தமிழ் அறிஞர் முனைவர் வ சு ப மாணிக்கம் அவர்களின் பிரியத்துக்குரிய மாணவியாக அங்கே அவரது வழிகாட்டலோடு இரண்டு ஆண்டுகள் கழிக்க நேர்ந்தது நான் பெற்ற பெரும்பேறு.
பேராசியப் பணிக் கால அனுபவங்கள்,பங்களிப்புக்கள்…?

முதுகலை தமிழ் முடித்த உடனேயே மதுரை பாத்திமாக்கல்லூரித் தமிழ்த் துறையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. 1970 முதல் 2006 வரை 36 ஆண்டுகள்- வகுப்பறை என் நேசத்துக்குரிய இடமாயிற்று.கற்பித்தலோடு சேர்ந்து நானும் கற்றேன் என்றே கூற வேண்டும்.பாடத் திட்டம் என்ற சிமிழுக்குள் மட்டுமே அடங்கி விடாமல் மாணவிகளின் இலக்கிய ரசனையை விரிவான தளத்துக்குக் கொண்டு செல்லவும்,இலக்கிய ஆய்வுகளை அறிவியல் கண்ணோட்டத்துடன் கூடியதாக ஆக்கவும் என்னால் இயன்றதைச் செய்திருக்கிறேன்..மொழி, இலக்கியக் கல்வியை ஊதியம் பெறுவதற்கு வழி காட்டும் கல்வியாக மட்டுமே ஆக்கி விடாமல் இலக்கியத்தின் மீதான மெய்யான ஆர்வத்தையும் தாகத்தையும் வளர்த்தெடுக்கும் பட்டறைகளாக என் வகுப்பறைகளைப் பயன்படுத்தியிருக்கிறேன் என்ற மனநிறைவு எனக்கு இருக்கிறது. மரபிலக்கியப் பயிற்சியோடு கூடவே சம கால நவீனத் தமிழிலக்கியங்களையும் விமரிசனங்களையும், திறனாய்வுகளையும் மாணவர்களுக்குக் கொண்டு போய்ச் சேர்த்ததோடு பல எழுத்தாளர்களோடும் பத்திரிகையாளர்களோடும் அவர்கள் கலந்துரையாட நிறைய வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தந்திருக்கிறேன்.பல்வேறு தன்னாட்சிக்கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் பாடத் திட்டக்குழுவில் இருந்தபோது சமகாலப்போக்குகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பாடத் திட்டங்களை வடிவமைக்க எனக்குக் கிடைத்த வாய்ப்புக்களை சரிவரப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன். படைப்பூக்கம் கொண்ட மாணவிகளை இனம் கண்டு ஊக்கம் தந்திருக்கிறேன்.;.அவர்களில் ஒரு சிலர் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களாகவும் முத்திரை பதித்திருக்கிறார்கள். ஆக்கபூர்வமான பெண்ணியப் பக்கங்களை அறிமுகம் செய்ததன் வழி ஏட்டுக்கல்வி தாண்டி சமூகச் சிந்தனைகளின் பால் இளைய தலைமுறையை நாட்டம் கொள்ள வைத்திருக்கிறேன். ஓய்வுபெற்றபோது நானும் என் பேராசிரியத் தோழி ஒருவருமாய் சமகால இலக்கியத்துக்காக அறக்கட்டளைச் சொற்பொழிவு ஒன்றையும் ஏற்படுத்தி இருக்கிறோம். ஆசிரியர்களாக.படைப்பாளிகளாக இயக்கவாதிகளாக, நல்ல குடும்பத் தலைவிகளாக ஆங்காங்கே சிதறிக்கிடந்து- என்றோ அரிதான ஒரு பொழுதில் ‘அம்மா’ என்று என்னைக்கைபேசியில் அழைக்கும் என் மாணவிகள் ஆசிரியப்பணி குறித்த பெருமிதத்தை என்னுள் கிளர்த்துகிறார்கள்.உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் அங்கே பழைய மாணவி என்று எவரேனும் ஒருவரை எதிர்ப்பட நேர்வது ஆசிரியத் தொழிலுக்கு மட்டுமே வாய்த்திருக்கும் அபூர்வம்.
எழுத்தார்வம் தொடங்கியது..?
சிறுவயது முதலே என்னை வசீகரித்துக் கொண்டிருந்த ஊடகம் எழுத்து...… கதைகளை வாசிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் கதை சொல்லியாகவும் இருக்க வேண்டும் என்ற தாகத்தோடு அம்மாவிடமிருந்து பெற்றுக்கொண்ட புது டயரியுடன் ’கதை எழுதப்போறேன்’ என்று தனி ஒரு மூலை தேடி ஒதுங்கத் தொடங்கிய பத்து வயது முதல் இன்று இந்த நிமிடம் வரை எதையாவது எழுதும் ஆசையே உயிர்ச் சக்தியாகி என்னை இயக்கிக்கொண்டிருக்கிறது. பள்ளி நாட்களில் மிகவும் பிடித்த பொழுதுபோக்காக இருந்த இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பு நிகழ்ச்சிக்கு ’இசையும் கதையும்’ கூடத் தயாரித்து அனுப்பி இருக்கிறேன். கல்லூரிப் பணியில் சேர்ந்த பிறகு அவ்வப்போது சிறுகதைகள் எழுதி வார மாத இதழ்களுக்கு அனுப்பிக்கொண்டிருந்தேன். 1979 இல் கல்கி வார இதழ் நடத்திய அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப்போட்டியில் முதல் பரிசு பெற்ற படைப்பாக என் முதல் சிறுகதை [ஓர் உயிர் விலை போகிறது] பிரசுரமாகி எழுத்தாளர் என்னும் அங்கீகாரத்தை எனக்குப்பெற்றுத் தந்தது. தொடர்ந்து சில இடைவெளிகளோடு  80க்கு மேற்பட்ட என் சிறுகதைகள் இது வரை பல்வேறு இதழ்களிலும் வெளிவந்திருக்கின்றன. அவற்றுள் சில கன்னடம்,இந்தி,ஆங்கிலம்,மலையாளம்,வங்காளம்,ஃபிரென்ச் முதலிய மொழிகளிலும் மொழியாக்கம் பெற்றுள்ளன. இயக்குநர் பாலுமகேந்திராவின் கதை நேரம் தொலைக்காட்சித் தொடரிலும் என் சிறுகதை ஒன்று இடம் பெற்றதுண்டு. என்றாலும் கல்லூரிப் பொறுப்புக்கள், முனைவர் பட்ட ஆய்வுக்குத் தகுதிப்படுத்திக்கொள்ளுதல், தனிப்பட்ட வீட்டுக்கடமைகள் ஆகியவற்றுக்கும் நேரம் ஒதுக்க வேண்டியிருந்ததால் எழுத்துப்பணி ஒன்றில் மட்டுமே முழுமையாக என்னை ஈடுபடுத்திக்கொள்ள இயலவில்லை. அந்த என் விருப்பத்தை நிறைவு செய்யும் வகையில் 2006இல் பேராசிரியப்பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் எழுத்து வேலையில் கூடுதல் நேரம் ஒதுக்கி இயங்கி வருகிறேன். முதலில் வெளிவந்த மூன்று சிறுகதைத் தொகுப்புக்களுக்களுக்கும் ,4 கட்டுரைத் தொகுப்புக்களுக்கும் பிறகு 3 மொழியாக்கங்களும் ஒரு நாவலும் ஒரு சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்திருக்கின்றன. நான்காவது மொழியாக்கம் ’நிலவறைக்குறிப்புக்கள்’ விரைவில் நற்றிணை வெளியீடாக வர இருக்கிறது.
சிறு கதைகளுக்கான தூண்டுதல் எங்கிருந்து?
நம்மைக் கடந்து செல்லும்நாம் கடந்து செல்லும் ஒவ்வொருவரிடமுமே ஏதோ ஒரு மாயக் கதை மறைந்துதானிருக்கிறது. என் கதைகளை  எனக்கு இனம் காட்டிக்கொடுத்துக்கொண்டிருப்பது இந்த வாழ்க்கைதான். என் பாத்திரங்கள் இந்த மண்ணில் காலூன்றி இதன் அழகுகளோடும் அழுக்குகளோடும் மேன்மைகளோடும் சிறுமைகளோடும் வாழ்ந்து கொண்டிருப்பவர்களே, காண்பது கேட்பது பலவும் கதைப்பொருளானபோதும் வாழ்க்கை பற்றிய என் உள்வாங்கலுக்கும் புரிதலுக்கும் ஏற்றபடி சம்பவங்களையும் மனிதர்களையும் கலைத்துப்போட்டு கற்பனை வழி புதிய உருத் தர தொடர்ந்து முயன்று கொண்டிருக்கிறேன். ஒரு சிறுகதை வெற்று சம்பவமாகவோ சுவாரசியமான நிகழ்வாகவோ மட்டும் அமைந்து விடாமல் தனி மனித அல்லது சமூக மனசாட்சியைக் கொஞ்சமாவது அசைத்துப்பார்ப்பதாக அமைய வேண்டும் என்பதில் மட்டும் சற்று அக்கறை எடுத்துக்கொள்கிறேன். பெரியபுராணம் சிலப்பதிகாரம் கம்பராமாயணம் ஆகிய காப்பியங்களை வகுப்பறையில் கற்பிக்கும்போது இன்றைய சூழலுக்கேற்ப அவற்றை மறுவாசிப்பு செய்யும் தூண்டுதல் எழுந்தது.  நான் மீட்டுருவாக்கம் செய்திருக்கும் ’தேவந்தி’ போன்ற சிறுகதைகள்அவ்வாறு பிறந்தவையே; மரபு இலக்கியப்பயிற்சியால் அத்தகைய மீட்டுருவாக்கக்கதைகள் எனக்கு எளிதாகவும் இருக்கின்றன.
நாவல் முயற்சி பற்றி..?
நாவல் படைப்பிலும் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் தொடக்கம் முதல் இருந்தாலும் தொடர்சிந்தனைக்கான மனநிலையும் தொடர்ந்த செயல்பாட்டுக்கான நேரமும் கூடி வர வேண்டும் என்று அதைப் பல ஆண்டுகள் ஒத்திப்போட்டுக்கொண்டே வந்தேன்.குறிப்பாக என் தாயின் வாழ்வை  நாவலாகப் பதிவு செய்ய வேண்டியது என் மகத்தான கடமை என்று அவ்வப்போது ஒரு குரல் என்னுள் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்தது. சென்ற நூற்றாண்டுப் பெண்கள் அனுபவிக்க நேர்ந்த எல்லாக் கொடுமைகளையும் எதிர்ப்பட்டு -அவற்றால் ஒரு கட்டத்திலும் கூட மலைத்தோ,களைத்தோ போய்விடாமல் அனைத்தையும் அனாயாசமாய்க் கடந்து வந்த அவரது வாழ்வை வரலாறாகக்கூறாமல் புனைவுத் தன்மை பொருந்திய நாவலாக்கிச் சொல்ல வேண்டும் என்று ஆண்டுக்கணக்காக என்னுள் மூண்டு திரண்டிருந்த  பெருங்கனவுக்குச் செயல் வடிவு தந்து ’யாதுமாகி…’ என்னும் தலைப்பில் நாவலாக்கி 2014இல் வெளியிட்டேன். என் முதல் நாவல் முயற்சி அதுவே.
தற்போது அடுத்த நாவலில் என்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறேன். 35 ஆண்டுகளுக்கும் மேலாகப்பெண்கள் கல்லூரி ஒன்றில்தொடர்ந்து பணியாற்றி வந்ததால் பெண்கள் சார்ந்து சொல்லப்படாத ஏராளமான கதைகள் என்னுள் உறைந்து கிடக்கின்றன.அவற்றையெல்லாம் ஒரே சரட்டில் ஒருங்கிணைத்து ஒரு நாவலாக்குவதே இப்போது என் முன் உள்ள சவால்.
மொழியாக்கத்துக்குள் வந்தது எப்படி?
மொழிபெயர்ப்புக்குள் நான்வந்து சேர்ந்தது ஒரு தற்செயல் நிகழ்வு. பேராசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்று தில்லிக்கு இடம் பெயர்ந்து வாழ வேண்டிய ஒரு சூழலில் தஸ்தயெவ்ஸ்கியின் "குற்றமும் தண்டனையும்' நாவலை மொழிபெயர்ப்புச் செய்து தருமாறு என்னை அணுகினார் ஒரு மதுரைப்பதிப்பாளர்..சில முக்கியமான தனிப்பட்ட பொறுப்புக்கள் காரணமாக சொந்தப் படைப்பாக்கத்துக்குப் போதிய நேரம் ஒதுக்க முடியாத ஒரு நிலையில், எழுத்தார்வத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும், எழுத்துடனும், இலக்கியத்துடனும் ஊடாடி மொழியைக் கூர் தீட்டிக்கொள்ளவும் அந்த மொழியாக்கப் பணி எனக்கு வாயில்களைத் திறந்து வைத்தது.அதற்குள் ஆழ்ந்து ஈடுபடத் தொடங்கிய பின், அது, தானாகவே என்னை இழுத்துக் கொள்ளவும் தொடங்கியது; மொழிபெயர்ப்பு வெளியானபோது, இலக்கிய வட்டத்தில் அது பெற்ற வரவேற்பும் அங்கீகாரமும் எனக்கு மேலும் ஊக்கமளிப்பதாக அமைந்து விடவே  தொடர்ந்து தஸ்தயேவ்ஸ்கியின் ‘இடியட் நாவலை மொழியாக்கும் பணியையும் ஏற்றுக் கொண்டேன். தஸ்தயெவ்ஸ்கி என்னும் மாமேதையின் உலகப் பேரிலக்கியங்கள் இரண்டை மொழியாக்கி முடித்தபோது அவரது படைப்புலகம் எனக்கு மிகவும் அணுக்கமானதாகத் தோன்றத் தொடங்கியது. அயல் மொழி நாவலொன்றை வெறுமே படித்துவிட்டுப் போவது போலல்லாமல் வார்த்தை வார்த்தையாக மொழிபெயர்ப்புச் செய்து கொண்டு போகும்போது மூலநூலாசிரியனுக்கு மிக நெருக்கமாகச் சென்றுவிடும் அனுபூதி நிலை - ஒரு மகத்தான தரிசனம் - காட்சியாவதை நான் உணர நேரிட்டது. வாழ்க்கை குறித்தும் மனிதர்கள் குறித்தும் அவர் கொண்டிருந்த பார்வையும்,அவரது படைப்புக்கள் வழி நான் பெற முடிந்த அனுபவங்களும் என் எல்லைகளை மேன்மேலும் விரிவுபடுத்திக்கொண்டே சென்றன. அந்த அனுபவத்தைத் தக்க வைத்துக்கொள்வதற்காகவே தமிழில் இதுவரை வராத அவரது படைப்புக்களை இயன்ற வரை பெயர்ப்பது என்று முடிவு செய்திருக்கிறேன். தஸ்தயெவ்ஸ்கியின் குறுங்கதைகள் மூன்றின் மொழிபெயர்ப்பை ‘தஸ்தயெவ்ஸ்கி கதைகள்’ என்ற தலைப்பில் நற்றிணை பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. விரைவில் நிலவறைக்குறிப்புக்கள் இரட்டையர் ஆகிய மொழிபெயர்ப்புக்கள் நற்றிணைப் பதிப்புக்களாகவே வெளிவர இருக்கின்றன. வாசகர்களுக்கு அதிகம் கிடைக்காமல் போய்விட்ட குற்றமும் தண்டனையும் அசடன் ஆகிய என் முதல் இரு மொழியாக்கங்களை  செம்பதிப்பாகக் கொண்டு வரும் மிகப்பெரும் பணியினையும்  நற்றிணைப் பதிப்பகம் இப்போது  மேற்கொண்டிருப்பதற்கு நான் பெரிதும் நன்றி செலுத்த வேண்டும் . குற்றமும் தண்டனையும் செம்பதிப்பு வெளியாகி விட்டது; அசடன் விரைவில் வெளிவரவிருக்கிறது..
விருதுகள்..
தஸ்தயெவ்ஸ்கியின் இடியட் நாவலின்  ’அசடன்’ மொழிபெயர்ப்புக்கு 2013ஆம் ஆண்டின் கனடா இலக்கியத் தோட்ட மொழியாக்க விருது,  நல்லி-திசை எட்டும் விருது, எஸ் ஆர் எம் பல்கலைக்கழக ஜி யூ போப் விருது ஆகிய மூன்றும் கிடைத்தன.
சிறந்த சிறுகதை எழுத்தாளருக்கான அமரர் சுஜாதா விருதை 2013இல் தில்லி தமிழ்ச்சங்கம் வழங்கியிருக்கிறது.
ஸ்த்ரீ ரத்னா, சிறந்த பெண்மணி ஆகிய விருதுகளை 2002,2003இல் மதுரையிலுள்ள தன்னார்வஅமைப்புக்கள் அளித்திருக்கின்றன.
மொழியாக்கம்…சொந்தப்படைப்பு இரண்டில் மன நிறைவை உணர்வது எதில்?
மொழியோடும் இலக்கியத்தோடும் தொடர்பு கொண்ட இந்த இரண்டு பணிகளுமே  என் மனதுக்கு நிறைவளிப்பவைதான். ஒன்று வேறெவரோ போட்டு வைத்த பாதையில் அவர் சுவட்டைத் தவற விடாமல் நாம் தொடர்ந்து கொண்டு செல்வது; இன்னொன்று நமக்கென்ற வழியை நாமே தேடிக்கண்டடைவது.  தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புக்களை ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் வழி படிக்க இயலாத பல நல்ல வாசகர்கள் தமிழில் படிக்க வாய்ப்பளித்ததற்காகவே எனக்குத் தனிப்பட்ட முறையில் நன்றி கூறி நெகிழும் வேளைகள் எனக்கு மனச்சிலிர்ப்பு ஊட்டுபவை. அசடன் மொழியாக்கத்தை 600 ரூபாய் கொடுத்து வாங்கிப்படித்து விட்டு மதுரை அனுப்பானடி பகுதியிலிருந்து என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கண்ணீர் மல்கிய - தமிழ் மட்டுமே தெரிந்து வைத்திருக்கும் தையல் கலைஞர் தொடர்ந்து மொழியாக்கம் செய்யலாமா என்று என்னை யோசிக்க வைக்கிறார், அதே வேளையில் யாதுமாகி நாவல் வாசித்து என் நெருங்கிய வாசகியாய் தோழியாய் மாறியவர்கள் என் அடுத்த நாவலுக்கு அடியெடுத்துக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்..இரண்டு வேலைகளையும் ஒரு சேரச்செய்யாமல் ஒரு மொழியாக்கம் அது முடிந்த பின் சொந்தப் படைப்பு என்று பிரித்து வைத்துக்கொண்டிருக்கிறேன்..இரண்டையுமே முடிந்த வரை தொடர வேண்டுமென்பதே என் விருப்பம்.…
 வாசிப்பு, எழுத்து நீங்கலாகப் பிற ஆர்வங்கள்?
பள்ளி மாணவியாக சுற்றுலா சென்றபோது மனதுக்குள் ஒட்டிக்கொண்ட பயண ஆர்வம் இன்னும் கூட உயிர்ப்போடு இருந்தபடி அவ்வப்போது என்னைப்புதுப்பித்துக்கொள்ள உதவி வருகிறது. இந்தியாவில் பல இடங்களுக்கும் சென்றிருந்தாலும் வேலையிலிருந்து ஓய்வு பெற்றபின்பே சிங்கப்பூர்,மலேசியா,இலங்கை,ஃபிரான்ஸ்,இத்தாலி, வாடிகன்,ஜெர்மனி,ஆஸ்திரியா,சுவிட்சர்லாந்து,இங்கிலாந்து,நெதர்லாந்த்,பெல்ஜியம்,அமெரிக்கா,கனடா,.ரஷ்யா என உலக நாடுகள் பலவற்றுக்கும் பயணம் செய்ய நேரம் வாய்த்தது., நாவலாசிரியர் தஸ்தயெவ்ஸ்கியின் மீது கொண்ட ஈடுபாட்டால் அவர் வாழ்ந்த மண்ணைக்காண வேண்டும் என்பதற்காகவே சென்ற ஆண்டு மாஸ்கோவுக்கும் பீட்டர்ஸ்பர்குக்கும் சென்றிருந்தேன். ‘தஸ்தயெவ்ஸ்கியின் மண்ணில்’ என்ற தலைப்பில் நான் எழுதிய ரஷ்யப்பயணக்கட்டுரை தினமணி.காமில் தொடராக வெளிவந்தது. பயணத்தோடு புகைப்படம் எடுப்பதிலும் ஆர்வம் என்பதால் பயணத்தின்போதும் பிற தருணங்களிலும் நான் எடுத்த புகைப்படங்களை அரிய சேமிப்பாகப் பாதுகாத்து வருகிறேன்.
ஒரு சொற்பொழிவாளராகக் கருத்துக்கு முதன்மை அளிக்கும் இலக்கிய, சமூக - தனிச் சொற்பொழிவு மேடைகளையும் - கல்வி நிலையங்கள் ஏற்பாடு செய்யும் கூட்டங்களையும் வானொலி நிகழ்ச்சிகளையும் மட்டுமே நான் தேர்வு செய்து கொள்கிறேன்.  இலக்கியத்தை நீர்த்துப்போகச்செய்து கேளிக்கைக் கூத்துக்கள் போல நடத்தப்படும் பட்டி மன்றங்கள் எனக்கு சற்றும் உடன்பாடில்லாதவை. அது பற்றி வெளிப்படையாக விமரிசனங்கள் கூறி அவற்றில் பங்கேற்கும் சக பேராசிரியர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டதும் உண்டு.  நல்ல கருத்துக்களைத் தேவையற்ற துணுக்குத் தோரணங்கள் இன்றிச் சுவையாக - செறிவாகத் தரும்போது அவற்றையும் பார்வையாளர்கள் ஆழமாகவே உள்வாங்கிக் கொள்கிறார்கள் என்பதையே என் மேடை அனுபவங்கள் எனக்குப் புரிய வைத்திருக்கின்றன.
திருச்சூர் நாடகப்பள்ளியில் நவீன நாடகப்பயிற்சி பெற்று மதுரை நிஜநாடக இயக்கத் தயாரிப்பில் பங்கேற்று நடித்திருக்கிறேன். குறும்படம் எடுப்பதென்பது என் ஆர்வமாக இருந்தபோதும் இதுவரை நிறைவுறா விருப்பங்களில் ஒன்று   
பெண்ணியம், சமூகநீதி இவை எழுத்தோடு மட்டுமா…., களப்பணி அனுபவமும் உண்டா.?
அடிப்படைப் பணிப்பாதுகாப்பு கூட இல்லாமல் தனியார் கல்லூரி ஆசிரியர்கள் வேலை இழந்து கொண்டிருந்த 70, 80 காலகட்டங்களில் - தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்களைப்போல ஆசிரிய இயக்கங்கள் கருதப்பட்ட ஒரு சூழலில் ’மூட்டா’ இயக்கத்தின் தீவிர உறுப்பினராகிப் போராட்டங்களில் பங்கு கொண்டிருக்கிறேன்.
மதுரையில் இயங்கி வந்த சில தன்னார்வப் பெண் அமைப்புக்களில் ஆலோசகராகவும், இயக்கவாதியாகவும் பங்காற்றியிருக்கிறேன்.

குறிப்பிட்ட ஒரு சூழலில் - மிக நெருங்கிய வட்டத்தில் பாதிப்புக்காளாகி இறந்து போன ஒரு பெண்ணுக்காக நியாயம் கோரிப் புற நெருக்குதல்கள், அபாயங்கள் ஆகியவற்றையும் பொருட்படுத்தாமல் நானும் என் நண்பர்கள் சிலரும் மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர் வரை கூடச் செல்ல நேர்ந்திருக்கிறது; மதுரைத் தெருக்களில் துண்டுப் பிரசுரங்களை வினியோகித்தபடி, அப்பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை முன் வைத்த அந்தக் கணங்கள் வாழ் நாளில் மறக்க முடியாதவை; அத்தனை கடுமையான முயற்சிகளுக்குப் பின்னர் அந்தப் பெண்ணின் பெற்றோரே பயந்து போய் வழக்கை வாபஸ் வாங்கிக் கொண்டு விட்டது எதிர்பாராத ஒரு திருப்பம் தான் என்றாலும் தொடர்ந்து சோர்வு இல்லாமல் முடிந்தவரை பெண் மீதான வன்முறைகளுக்கு எதிராக என்னால் முடிந்ததை எழுத்தால் மட்டுமன்றிச் செயலாலும் செய்திருக்கிறேன் என்ற ஆன்ம நிறைவு இருக்கிறது.
சமூக விழிப்புணர்வுக்கான போராட்டங்கள் பேரணிகள் ஆகியவற்றிலும் கலந்து கொண்டு உரையாற்றியிருக்கிறேன்.
ஒரு பெண்ணியவாதியாக…பெண்ணின் இன்றைய நிலை பற்றி?
பெண்ணின் வாழ்க்கைத் தரம் பலதுறைகளிலும் இன்று மேம்பட்டிருக்கலாம். கல்வி, பொருளாதாரத் தற்சார்பு என பெண் குறித்த சமூக நிலைகளிலும் சில வரவேற்கத் தக்க மாற்றங்கள் நேர்ந்திருக்கலாம். ஆனாலும் கூடப்  பெண்ணை இரண்டாம் நிலையில் மட்டுமே வைத்திருக்கும் மனப்போக்கு இன்றளவும் கூட நமது சமூக அமைப்பில் நிலவி வருகிறது என்பதைப் பாசாங்குகள் இன்றி - திறந்த மனதுடன் நேர்மையாக யோசிக்கும் எவராலும் புரிந்து கொண்டுவிட முடியும். பெண்ணாக இருப்பதனாலேயே உணரும் மனத்தடைகள், இறுக்கங்கள், மரபுவழிக் கடமைகள் ஆகியவை இன்னமும் கூட அவளைத் தளைப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன.
ஆயிரம் சட்டங்கள் வகுக்கப்பட்டாலும் அவற்றால் பயன் கொள்ள முடியாத பெண்கள், அடிப்படை உரிமைகளுக்குக் கூட அல்லலுறும் பெண்கள் சாதி, இனம், மொழி, வர்க்கம் ஆகிய எல்லைக் கோடுகளையெல்லாம் கடந்து எல்லா மட்டங்களிலும் இன்றும் கூட இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
எனினும் வெற்றுப் புலம்பல்களின் காலத்தைக் கடந்து வந்து விட்டோம் என்பதைப் புரிந்து கொண்டு தங்கள் மீட்சிக்காகப் பிறரை சார்ந்திராமல்  அதற்கான வழிமுறைகளைத் தாங்களே கண்டடையும் எழுச்சி இன்றைய பெண்ணுக்கு ஏற்பட்டாக வேண்டும்..

மனித சமத்துவம் மலினப்படாத - பால் பேதமற்ற சமூகத்தை உருவாக்க முயல்வதும், பெண் என்பவள் ஒரு தனிப்பட்ட மனித உயிர் என்ற கருத்தை இரு பாலாரின் நெஞ்சிலும் ஆழமாகப் பதியச் செய்வதும் இச் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கான நகர்வுகளுமே ஆக்க பூர்வமான பெண்ணிய நிலைப்பாடாக இருக்க முடியும்.
ஒரு கல்வியாளராக இன்று சொல்ல நினைப்பது…
இணைய இணைப்பு இருந்தால் கைபேசியே தகவல்களைக் கொட்டிக்குவித்து விடும் இந்த யுகத்தில் மாணவர்களுக்கு தேவைப்படுபவை செய்திகள் அல்ல; அவற்றை மனதுக்குள் தொகுத்தும் வகுத்தும் வைத்துக்கொண்டபடி  அடுத்த கட்ட நகர்வுக்குச் செல்வது எப்படி,வேறுவகையான சிந்தனைகளுக்கான பாதை என்ன என்ற வழியைக் கோடி காட்டுவதே இன்றைய ஆசிரியர்களின் பணியாக இருக்க முடியும். கூடுதல் சிரத்தையும் அர்ப்பணிப்பு உணர்வுமே அதற்குத் தேவையானவை.
பேராசிரியராக ஆகாமல் இருந்திருந்தால்….
ஒரு பத்திரிகையாளராக வேண்டும் என்று எண்ணியிருப்பேன்…ஆகியும் இருந்திருப்பேன். இப்போதும் அந்த ஆவலைத் தீர்த்துக்கொள்வதற்காகவே வலைத்தளம் ஒன்றைத் தொடங்கி சமூகம்,இலக்கியம்,பயணம்,திரைப்படம் எனப்பலதரப்பட்ட தலைப்புக்களில் என் கருத்துக்களைப்பதிவு செய்து வருகிறேன்.
இணையத்தில் அனுபவம்…
2008 ஆம் ஆண்டிலேதான் இணையத்துக்குள் நுழைவதற்கே நான் கற்றுக்கொண்டேன். சமகால எழுத்தாளர்களாகிய எஸ் ரா., ஜெயமோகன் ஆகிய பலரும் அச்சு ஊடகத்தோடு கூடவே வலைத்தளப்பதிவுகள் வழியாகவும் தீவிர இலக்கியப்பரிமாற்றம் செய்து கொண்டிருந்த நிலையில் இன்றைய இலக்கியப்போக்குகளைத் தவற விட்டுவிடக்கூடாது என்பதற்காகவே அந்த முயற்சியைக் கைக்கொண்டேன்.. தொடர்ந்து சில நண்பர்களது உதவியாலும் சொந்தத் தேடலாலும் ஒரு வலைப்பூ [இப்போது வலைத்தளம்] தொடங்கி எழுத ஆரம்பித்த பின்பு இணையம் முழுமையாக வசப்பட்டது. சமூக நடப்புக்கள், கல்வித்துறை, இலக்கியம் சார்ந்த என் எதிர்வினைகளை அவ்வப்போது பதிவு செய்வதற்கும் என் கட்டுரைகள், சிறுகதைகள், பயணம் சார்ந்த புகைப்படங்கள் ஆகியவற்றை  வெளியிடவும் தரமான பிற நல்ல தளங்களுக்கு இணைப்பு தருவதற்கும் என் புதிய நூல்களின் வருகை குறித்து அறிவிப்பதற்கும் அது ஏற்றதொரு களமாக உதவியது. என் வலைத்தளப் பதிவுகளுக்குக் கிடைத்த எதிர்வினைகள் பல நல்ல நட்புக்களையும் தொடர்புகளையும் பெற்றுத் தந்திருக்கின்றன. சொல்வனம்,ஊடறு போன்ற வேறு இணைய இதழ்களிலும் என் நூல்திறனாய்வுகளும் மொழியாக்கக் கதைகளும் வெளி வந்திருக்கின்றன. என் ’’யாதுமாகி..’’ நாவலைக் கணினியில் முழுமையாக நானே தட்டச்சு செய்திருக்கிறேன். அளவில் பெரிய மொழியாக்கப்படைப்புக்களைப் பிறரைத்  தட்டச்சு செய்ய வைத்துக் கணினியில் செம்மைப்படுத்துகிறேன்; அது  எனக்கு எளிதாக இருக்கிறது. வலைத் தளப்பதிவுகளைப் பகிர்வதற்காக மட்டுமே முகநூலுக்குச் செல்வேனே அன்றி மேலோட்டமான விருப்பங்களை மட்டுமே பதியும் முகநூல், வலைத்தளம் போல எனக்கு உகப்பானதாக இல்லை.  
ஆதரிச எழுத்தாளர்
அன்றும் இன்றும் என்றும் என் ஆதரிசம் என்று சொல்லப்போனால் பாரதியும் கம்பனும் மட்டுமே. சங்க இலக்கியப்பாடல்களிலும் சிலப்பதிகாரத்திலும் ஆழ்ந்த ஈடுபாடு உண்டு. சமகால இலக்கியத்தைப்பொறுத்தவரை கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் ஜெயகாந்தனின் படைப்புக்கள் மிகுந்த உத்வேகத்தையும் மன எழுச்சியையும் அளித்திருக்கின்றன. பேராசிரியப்பணியில் இணைந்தபின் இக்கால இலக்கியத்தின் மீது கொண்ட தனிப்பட்ட ஆர்வத்தாலும் கல்லூரி மாணவியருக்கு நவீன, பின் நவீன இலக்கியங்களை அறிமுகம் செய்வதற்காகவும் பலதரப்பட்ட எழுத்தாளைர்களையும் அவர்களது போக்குகளையும் விருப்பு வெறுப்பற்ற விமரிசன சமநிலையோடு தொடர்ந்து  வந்தேன். இன்று வரை அந்தப்பழக்கத்தை நீடித்தபடி இளம் எழுத்தாளர்கள் முதல் பிரபலங்கள் வரை அவர்களது வேறுபட்ட இலக்கிய அணுகுமுறைகளைப் புறநிலையிலிருந்து அவதானித்து வருகிறேன்.  
ஓர் இலக்கியவாதியாக என் பார்வை…
இலக்கியம் நீர்த்து விடவும் கூடாது , மாயவித்தையும் காட்டலாகாதுஎன்பதே நான் வரித்துக் கொண்டிருக்கும் இலக்கியக் கோட்பாடு. இதழுக்கு ஏற்றபடி சமரசம் செய்து கொண்டு எழுத்துக்களை மானாவாரியாக உற்பத்தி செய்து தள்ளும் வணிக இலக்கியம் ஒரு புறம் என்றால், வாசகருக்கு சற்றும் புரிபடாத இருண்மையுடன் படைக்கப்படுவதே இலக்கியம் என்ற நினைப்பில் தங்களுக்கே புரியாத எதையோ எழுதுபவர்களும் அவையே மெய்யான எழுத்துக்கள் என்று கொண்டாடுபவர்களும் நேர்மாறான இன்னொரு திசையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்த இருவகைப்போக்குகளுமே ஆரோக்கியமான மெய்யான இலக்கியப் போக்குக்கு உகந்தவை அல்ல.
குடும்பம் பற்றி…?
என் அம்மாவுக்கு நான் ஒரே மகள். எனக்கும் ஒரே பெண். மைய அரசில் உயர் அதிகாரியாகப் பணி புரியும் அவர் குடும்பத்தோடு பணி நிறைவு பெற்றது முதல் வசித்து வருகிறேன். என் இளமையைத் தக்க வைத்துக்கொள்ள உதவும் இரண்டு அருமையான பேரக்குழந்தைகள், மருமகன், மகள் உள்ளிட்ட  சிறிய குடும்பம். இளமை முதல் நான் கொண்டிருக்கும் என் ஆர்வங்களைப்புரிந்து கொண்டபடி குடும்பப்பொறுப்பிலிருந்து என்னை விடுவித்து விரும்பியபோதெல்லாம் பயணம் செய்வதற்கும் எழுதுவதற்குமான சூழலை அமைத்துத்தந்து ஊக்குவிக்கும் மகள், அதே வகையான புரிதல் கொண்ட மகன் போன்ற மருமகன் என்று நான் மேற்கொள்ளும் எல்லாச் செயல்களிலும் என் குடும்பம் பக்கபலமாக,உறுதுணையாக இருந்து கொண்டிருக்கிறது.…
எழுத்துச் செயல்பாட்டுக்குத் தூண்டுதல் துணை…?
என் முதல் சிறுகதை அச்சில் வந்தபோது அஞ்சலில் வந்த 100க்கு மேற்பட்ட கடிதங்களை வரிசை எண் போட்டு அடுக்கி ஒரு கோப்பிலிட்டு என் கையில் கொடுத்த என் அம்மா முதல் வாசகியாய் என்னை ஊக்கப்படுத்தியவர். இப்போது பணிச்சுமை காரணமாக அதிகம் வாசிக்க முடியாமல் போனபோதும் என் மகள் தொடர்ந்து பல ஆண்டுகள் அந்த இடத்தில் தன்னை நிறுத்திக்கொண்டாள்.  என் எழுத்துக்களையும் அதற்கான அங்கீகாரங்களையும் தங்களுடையதாகவே எண்ணி மகிழும் இனிய தோழமை வட்டம் என்னுடையது. நாற்பதாண்டு காலம் பழகியோரும்; ஒரு சில ஆண்டுகளில்  நெருங்கிய வாசக நட்புக்களும், முகம் தெரியாத பல வாசகர்களும், என்னை இன்னும் தொடர்ந்து கொண்டு வரும் என் மாணவிகளும் அதில் உண்டு. என் ஆர்வத்தைப் புரிந்து கொண்டு தொடர்ந்து இயங்குவதற்கான ஆக்க சக்தியைத் தருபவர்கள் அவர்களே.  
வாழ்க்கை குறித்த உங்கள் பார்வை?
’’தீதும் நன்றும் பிறர் தர வாரா’’
"நீர்வழிப் படூஉம் புணை போல ஆருயிர் முறைவழிப் படூஉம்''
ஆகிய புறநானூற்று வரிகள் வாழ்வின் சித்தாந்தத்தை எனக்கு அழுத்தமாக உணர்த்தியிருக்கின்றன.
"வாழ்ந்தே தான் தீரணும் வாழ்க்கை' என்ற ஞானக் கூத்தனின் வரிகள் மெய்தான் என்ற போதும், வாழும் காலம் வரை அதைப் பயனும், பொருளும் மிகுந்ததாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பதும் இயலும் காலம் வரை வாழ்வின் எந்தக் கட்டத்திலும் தேடலை நிறுத்தி விடாமல், தேக்கத்தை அனுமதித்து விடாமல் தொடர்ந்து உற்சாகமாக... சுறுசுறுப்பாக ஏதோ ஒரு வகையில் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டுமென்பதுமே  என் விருப்பம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....