துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

4.1.18

குற்றமும் தண்டனையும்- ஒரு வாசகரின் வாசிப்பும், பீட்டர்ஸ்பர்க் பயணமும்


ஒரு பேரிலக்கியம் மெய்யான வாசகர்களை எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கிறது?என் வளரிளமைக்காலத்தில் சிவகாமியின் சபதம் படித்து விட்டு மாமல்லபுரத்தின் குறிப்பிட்ட இடங்களில் அந்தக்கனவோடு திரிந்தது போல், பொன்னியின் செல்வன் படித்து விட்டு சோழ மண்ணில் அலைந்து அலைந்து அதன் சுவடு தேடியது போல் என் வாசகர் ஞானசேகர், குற்றமும் தண்டனையும் நாவலில் சொல்லப்பட்ட இடங்களைத் தேடிச்சென்று படத் தொகுப்பாக்கி இருக்கிறார். நானும் கூட அதற்காகவேதான் 2016இல் ரஷ்யா சென்றேன்… அங்கே பீட்ர்ஸ்ர்க்கும் போனேன்..பார்த்தேன்.ஆனால் ஒரு சுற்றுலாக்குழுவோடு மட்டுமே என் வரையறை அடங்கிப்போனது. அதையும் மீறி நான் சில இடங்களைப்பார்க்க முடிந்தது பெரும் பேறு.
ஆனால் ஞானசேகரோ, பீட்டர்ஸ்பர்கில் குற்றமும் தண்டனையும் நடந்ததாகச்சொல்லப்படும் நாவலில் சித்தரிக்கப்படும் இடங்களையெல்லாம் போய்ப்பார்த்து விட்டு வந்து அதைப்படத் தொகுப்பாக்கிப்போட்டிருக்கிறார். அதற்கு என் ரஷ்யப்பயணக்கட்டுரை உதவியதென்றும் சொல்லியிருக்கிறார்.
ம்ம்ம்!! நம்மைப்போலப் பல இலக்கியக் கிறுக்குகள்!!
ஞானசேகரின் கடிதத்திலிருந்து சில பகுதிகளும் இணைப்பும்.
//நான் ரஷ்யா செல்வதற்கு முன் உங்கள் வலைத்தளத்தில் இருந்த ரஷ்யப் பயணத்தைப் பற்றிய அத்தனை கட்டுரைகளையும் படித்துவிட்டுத் தான் சென்றேன். மிகவும் உதவியாக இருந்தது.செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் குற்றமும் தண்டனையும் நாவல் நடந்த இடங்களை சென்று பார்த்து வந்ததின் சிறிய படத்தொகுப்பு இது. அந்த நாவல் நடந்த ஜூலை மாதத்தில் தான் நானும் பயணம் சென்றிருந்தேன் என்பது இனிய தற்செயல். தஸ்தேவ்ஸ்கியின் நாவலில் குற்றமும் தண்டனையும், வெண்ணிற இரவுகள் மட்டுதான் படித்திருந்தேன். குற்றமும் தண்டனையும், ரஷ்யா போவதற்கு பத்து நாட்களுக்கு முன்பு தான் முடித்தேன். அதனால் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் பயணிக்கும் போது நாவலின் கனவிலேயே இருக்க முடிந்தது.குற்றமும் தண்டனையும் நாவல் நடந்த இடங்களின் சிறிய படத்தொகுப்பு என்னுடைய பயணத்தில் இருந்து


குற்றமும் தண்டனையும் நாவல் – சில எண்ணங்கள்

எது குற்றம்? ஒருவருக்கு குற்றமாகப்படுவது இன்னொருவருக்கு குற்றமாக இல்லாமல் போகலாம். இப்போது குற்றமாக இருப்பது எதிர்காலத்தில் குற்றமற்றதாகிப் போகலாம். ஏன் ஒருவருக்கு ஒரு மனநிலையில் குற்றமாக இருப்பது இன்னொரு மனநிலையில் இல்லாமல் போகலாம். குற்றத்திற்கு எது தண்டனை? ஒவ்வொரு குற்றத்திற்கும் தண்டனையை சமூகம் வகுத்துள்ளது. ஆனால் எல்லா குற்றத்திலும் நேரடடியாகவோ மறைமுகமாவோ சமூகத்திற்கு ஒரு முக்கியமான பங்கு உள்ளது. அப்படி இருக்கும் போது தண்டனை யார் தருவது?மன்னிக்கவோ தண்டிக்கவோ யாருக்கு தகுதி இருக்கிறது? இவ்வாறு குற்றத்தைப்  பற்றியும் தண்டனையைப்  பற்றியும் தத்துவ விசாரணைக்குச்  செல்லலாம். குற்றமும் தண்டனையும் நாவல் இதை பற்றி ஆராய முற்படுகிறது.
ரஸ்கொல்நிகோவ் என்ற இருபத்தி மூன்று வயது இளைஞன் செய்யும் ஒரு கொலை, அது பின் அவனது மனநிலை, அவனது மீட்சி இதனைப் பற்றி 1065 பக்கங்களுக்கு(தமிழில்) விரிவாகக்   கூறுகிறது. முதலில் இதை தமிழில் மொழிபெயர்த்த எம் ஏ சுசிலாவிற்கு எனது நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். வெகு நாட்களுக்கு முன் எஸ் ரா வின் மூலம் Crime and punishment நூல் எனக்கு அறிமுகமாயிருந்தது. அதன் கதை சுருக்கத்தினாலேயே மிகவும் ஈர்க்கப்பட்டு அப்போதே ஆங்கிலத்தில் படிக்க ஆரம்பித்தேன். அப்போது ஆங்கிலத்தில் அவ்வளவு பயிற்சியும், பொறுமையும் இல்லாததால் பத்து பக்கங்களுக்கு மேல் தாண்டவில்லை. (அப்போது எம் ஏ சுசிலா அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட முதல் பதிப்பு வந்திருந்ததை அறிந்திருக்கவில்லை.)
ஆறு மாதத்திற்கு முன் நற்றிணை வெளியிட்டிருந்த செம்பதிப்பை ஆர்டர் செய்து படித்து முடித்தேன். மொழிபெயர்ப்பு என்பதால் தயக்கத்துடன் தான் ஆர்டர் செய்திருந்தேன். ஏனெனில் ஏற்கனவே ‘துப்பாக்கிகள் எக்கு மற்றும் கிருமிகள்’, ‘அனைத்தையும் பற்றிய சிறிய வரலாறு’ போன்ற மொழிபெயர்ப்பு படித்து பெரிதும் ஏமாற்றம் அடைந்திருந்தேன். ஆனால் குற்றமும் தண்டனையும் மிக அருமையாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இலக்கியம் என்பதற்காக செறிவான, சிக்கலான மொழியாக இல்லாமல் மிகவும் சரளமான எளிமையான அதே சமயம் நாவலுக்கு நேர்மை சேர்க்க கூடிய வகையில் மொழியை கையாண்டிருக்கிறார். கதை மாந்தர்களுடனும், அவர்களது மனநிலையுடனும் முழுதாக பயணிக்க முடிகிறது.
Constance Garnettரின் ஆங்கில மொழிபெயர்ப்பை மூலமாகக் கொண்டு இதனை தமிழில்  மொழிபெயர்த்திருக்கிறார். என்றாலும் கூட நாவலுக்காக அதையும் தாண்டி ஆராய்ந்திருக்கிறார் என்று தோன்றுகிறது. நாவலின் முதல் பகுதியில் s_ny என்று Garnett குறிப்பிட்டிருந்ததை ஸ்டாக்யர்னி என்று குறிப்பதிலிருந்தே தெரிந்து விடுகிறது. (நான் செயின்ட்பீட்டர்ஸ்பர்க் செல்லவிருப்பதால் எனக்கு இது முக்கியமாக பட்டது. நாவலில் வரும் இடங்களை பார்க்க முடிவு செய்திருந்தேன். பார்த்தும் ஆயிற்று.) மேலும் ஆங்காகே நாவலில் வரும் நமக்கு தெரியாத ரஷ்ய கலாச்சாரத்தின் விளக்கங்களையும் கூறியுள்ளார். நாவல் முழுவதும் எல்லா நேரங்களையும் ரஸ்கொல்நிகோவ் ஒரே மனநிலையுடன் தான் காணப்படுகிறான். கோபமாகவும், எரிச்சலாகவும், பதட்டமாகவும், நோய்வாய்ப்பட்டும் எல்லாம் சேர்ந்த மனநிலை. ஒரு அத்யாயம் விட்டு ஒரு அத்யாயம் அதன் விவரணை, அவன் எண்ணங்கள் உள்ளது. இருந்தாலும் திரும்ப திரும்ப ஒரே விஷயத்தை படிப்பது போல் இல்லாமல் சுவாரசியமாக செல்கிறது.
இந்த நாவலை படித்து முடித்தவுடன் சுசிலா அவர்களின் வலைதளத்தின் பதிவுகளை பார்த்துக் கொண்டிருந்தேன். ரஷ்ய மூலத்திலிருந்து மொழிபெயர்ப்பது, ஆங்கிலத்தில் இருந்து மொழி பெயர்ப்பது என்ற கேள்வி ஒன்றுக்கு மனச்சோர்வு அடைந்ததாக கூறி இருந்தார்.  உண்மையில் ரஷ்ய மூலத்திற்கு இந்த மொழிபெயர்ப்பு எந்த அளவுக்கு உண்மை செய்துள்ளது என்று தெரியாது. ஆனால் ஒரு முழு நாவலாக, ஒரு அனுபவமாக இது மிக சிறந்த மொழி பெயர்ப்பு. இது மிகப் பெரும்பணி என்றே நான் நினைக்கிறேன். அவரது அசடன் நாவல் மறுபதிப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். (வலைத்தளத்தில் தேடிப் பார்த்து விட்டேன். முதல் பதிப்பு விற்பனையில் இல்லை).
அநியாய வட்டிக்கு அடகு பொருட்களை வாங்கி ஒரு பேனைப் போல் ஜீவனம் நடத்தும் வட்டிக்கார கிழவியை ஏழ்மையில் வாழும் ரஸ்கொல்நிகோவ் கொன்று விடுகிறான். அந்த குற்றத்தில் இருந்து தப்பியும் விடுகிறான். அதன்பின் அவனுள் ஏற்படும் மனப்போராட்டம், அவனது மீட்சி இவற்றை பற்றி பதினைந்துக்கும் உட்பட்ட வலுவான கதாபாத்திரங்களை கொண்டு விவரிக்கிறது இந்நாவல். இந்நாவலை இப்படி கதை சுருக்கம் எழுதுவது இதற்கு செய்யும் அநீதி என்பேன். என்னை போன்ற ஆரம்ப நிலையிலுள்ள இலக்கிய வாசகர்களுக்கு ஒரு செவ்விலக்கியம் படிக்க வேண்டும் என்றால் இந்நாவலை நான் பரிந்துரை செய்வேன். தஸ்தாவ்ஸ்கி இந்த நாவலை தொடராக எழுதினார். அதனால் நாவல் முழுவடதும் ஒரு அத்யாயம் முடியும் போது ஏதேனும் திருப்பதுடனே முடிகிறது. கொலை திரில்லர் என்பதைத் தாண்டி இந்நாவல் குற்றவாளியின்  உளவியலை ஆராய்கிறது.
வெப்பமான ஒரு  ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் நாவல் ஆரம்பிக்கிறது. வெயிலும், வெக்கையும், அழுக்கு பிடித்த சுவர்கள், எண்ணெய் பிசுபிசுப்பும், சாராய கடைகள், சாராய வாசனை, குடிகாரர்கள் என்று ரஸ்கொல்நிகோவின் குழப்பமான மனநிலையை தேர்வு செய்கிறார். நாவலின் இறுதியில் ரஸ்கொல்நிகோவும் ஸ்விட்ர்க்கைலோவும் மனம்  திருந்தும் வேளையில் மழைக்காலம் தொடங்குகிறது.
செயின்ட் பீட்டர்ஸ்பேர்க். உலகின் ஆறில் ஒரு பகுதி மக்களை ஆளும் ஜார் மன்னரின் இருப்பிடம். ஆயிரத்து இருநூறு அறைகள் கொண்ட  மன்னனின் அரண்மனை ரஸ்கொல்நிகோவ் அறையிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் தான் இருந்தது. (தஸ்தாவ்ஸ்கி இந்த நாவல் எழுதும் பொழுது அதே ஸ்டோக்க்யர்னி தெருவில் ரஸ்கொல்நிகோவ் அறையாக சொல்லப்படும் வீட்டிலிருந்து ஐந்து வீடு தள்ளித்தான் வசித்து வந்தார்.) ஆனால் அரண்மனையின் ப்ரஹ்மாண்டத்தை பற்றியோ மாளிகைகள் பற்றியோ நாவலில் எந்த வரியும் வரவில்லை. முழுக்க குடிகாரர்களும், வேசிகளும், பெண்களை தொடரும் அயோக்கியர்களும் உள்ள நகராகத்தான் காண்பிக்கிறார். இந்நாவலில் ஒரே ஒரு இடத்தில மட்டுமே  ரஸ்கொல்நிகோவ் பச்சை பசேல் என பூங்காவை பார்க்கிறான். மற்றபடி எங்கும் புழுக்கம், சாராய நாற்றம்  தான்.
 ரஸ்கொல்நிகோவ் வறுமையின் உச்சியில் கொலை செய்ய துணிகிறான். சோனியா அதே வறுமையின் உச்சியில் தன்னையே விற்கிறாள். எந்த ஒரு முட்டாள்தனம் செய்யவும் எவருக்கும்  ஒரு தியரி தேவைப்படுகிறது. இல்லையெனில் நமது பகுத்தறிவு அதனை செய்ய விடாது. ரஸ்கொல்நிகோவுக்கும் அப்படி ஒரு தியரி இருக்கிறது. அவனை பொறுத்த வரை இரண்டு வகையான மனிதர்கள் இருக்கிறார்கள். ஒன்று சாதாரண மனிதர்கள். கிடைத்த வாழ்வை விதிப்படி வாழ்ந்து சாபவர்கள். மற்றவர்கள் அசாதாரணமானவர்கள். சாதிக்கப் பிறந்தவர்கள். இவர்களுக்கென்று கொள்கை உடையவர்கள். அந்த கொள்கைக்காக எதை வேண்டுமானாலும் செய்ய அனுமதிக்கப் பெற்றவர்கள். கொலையும் கூட. மாவீரன் நெப்போலியன் போல. ரஸ்கொல்நிகோவ் தன்னை நெப்போலியனைப் போல நினைக்கிறான். ஆனால் கொலைக்கு பிறகு தடுமாறி போகிறான். தான் சாதாரணமாவனோ என அச்சமடைகிறான். கொலைக்கு மன்னிப்பு கேட்க சோனியாவின் காலில் விழுகிறான். அதே சமயம் பெத்ரோவிச்சிடம் கொலையை நியாயப்படுத்தி பேசுகிறான். கோபப்படுகிறான். எரிச்சல்படுகிறான்.
நாவல் முழுவதும் அவனது இந்த புத்திக்கும் மனதிற்கும் இடையேயான போராட்டம், தடுமாற்றம் தான் வருகிறது. தன் கொலைக்காக தனக்கே நியாயம் கற்பிக்கும் போது கிழவியின் கொலையை பற்றி மட்டுமே எண்ணுகிறான். லிசாவேதாவை மறைத்து விடுகிறான். ஆனால் ஏதோ ஒரு வகையில் சோனியா, கிழவியின் தங்கை லிசாவேதாவை நினைப்படுத்துவதாக இருக்கலாம். இருவருமே பாவப்பட்ட ஜென்மங்கள். தோழிகள். ஒவ்வொரு முறையும் சோனியா லிசாவேதாவைப் பற்றி சொல்லும் போதும் நடுக்கமடைகிறான். கடைசியில் குற்றத்தை ஒப்புக்கொள்ளாமல் காவல் நிலையத்தில் இருந்து திரும்புபவன் சோனியாவை பார்த்தவுடன் மீண்டும் சென்று ஒப்புக்கொண்டு சரணடைகிறான்.
 மாறுவேடமணிந்த ராணுவ வீரனைப் போலிருக்கும் லிசாவேதா தனது நல்ல குணத்தாலேயே அழகாகத் தெரிபவள். வட்டிக்கார கிழவியின் சகோதரி. இன்னொரு தாய்க்கு பிறந்தவள். கிழவி அவளை வேலைக்காரியைப் போல் மோசமாகவே நடத்துகிறாள். ஏதோ தப்பு செய்தற்காக அவளது விரலை கடித்து துப்புகிறாள். ஆனால் லிசாவேதா தான் வேறு இடங்களில் வேலை செய்து சம்பாதிப்பதையும் அவளிடமே கொடுத்துவிட்டு அவளுக்கு உதவியாக இருக்கிறாள். கிழவிக்கு பிறகாவது தனது வாழ்வு நன்றாக இருக்கும் என நினைக்கிறாள். ஆனால்  கிழவி உயிலில், தான் இறந்த பிறகு சொத்து அனைத்தையும் தேவாலயத்திற்கு போகுமாறும்  தனது பொருட்களை மட்டும் பயன்படுத்தும் உரிமையை மட்டும் லிசாவேதாவுக்கு எழுதி இருக்கிறாள். நேரடியாக சொர்க்கம் போக. கிழவியை ரஸ்கொல்நிகோவ் கொலை செய்யும் நேரம் துரதிஷ்ட வசமாக அறைக்கு வந்து அவளும் கொலை செய்யப்படுகிறாள்.
சோனியா ஒரு தேவதை என்றே சொல்லிவிடலாம். இந்நாவலில் யாருக்கேனும் யாரையேனும் கொலை செய்யும் உரிமை இருந்தது என்றால் அது சோன்யாவுக்குதான். ஆனால் அவளோ கொலை செய்துவிட்டு வந்த ரஸ்கொல்நிகோவை ஊர் முச்சந்தியில் மொத்த மனித இனத்திடமும் மன்னிப்பு கேட்கச் சொல்கிறாள். கையாலாகாத, குடிகார தந்தையால் அநாதரவாக விடப்பட்டு தனது சித்திக்காகவும் அவளது குழந்தைகளுக்காகவும் விபச்சாரியாகி விடுகிறாள். அதனால் தான் என்னவோ அவளது தந்தை மர்மலாதேவ் சாகும் போது நமக்கு எந்த அனுதாபமும் ஏற்படவில்லை.
நாவலில் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் என்பது சோனியாவின் சித்தி கேத்ரினா இவ்லோவானா. பணக்கார குடும்பத்தில் ஜெனெரலின் மகளாக பிறந்து தந்தையின் விருப்பத்திற்கு மாறாக வேறொருவனை மணந்து அவன் சூதாடி அனைத்து சொத்தையும் அழித்து விட்டு இறந்து விட, மூன்று சிறு குழந்தைகளுடன் அநாதரவான நிலையில் இருக்கும் அவள் சோனியாவின் தந்தை மர்மலாதேவை திருமணம் செய்து கொள்கிறாள். குடிகாரனாகிப் போன மர்மலாதேவ் வேலையிலிருந்து விரட்டி அடிக்க பட்டு முழு நேர குடிகாரனாகிப் போகிறான். உணவுக்கு வழியின்றி இருக்கும் குடும்பத்தை காப்பாற்ற வேறு வழியில்லாமல் சோனியாவை விபச்சாரம் செய்ய அனுப்புகிறாள். ஆனால் அதன் பிறகு ஒவ்வொரு நிமிடமும் குற்ற உணர்ச்சியில் துடிக்கிறாள். யாரேனும் சோன்யாவைப் பற்றி சிறிதாக தவறாக சொல்லிவிட்டால் கூட கடும் கோபமடைந்து அவர்களை அடிக்க பாய்கிறாள். தினம் பிரார்த்தனையின் போது சோனியாவை மன்னிக்குமாறு கடவுளிடம் வேண்டிக்கொள்கிறாள். தற்போது போட்டுக்கொள்ள துணி இல்லாத போதும் அடுத்த வேலை உணவுக்கு வழி இல்லாத போதும் தான் ஜெனரல் மகள் என்பதில் பெருமிதம் கொள்கிறாள். எப்போதும் சண்டை போட்டு கொள்ளும் வீட்டு எஜமானியிடம் எப்பொழுதோ விருந்தில் மன்னர் கொடுத்த சான்றிதழைக் காட்டிப் பெருமை கொள்கிறாள். மறுநிமிடம், அவள் சோனியாவை பற்றி தவறாக கூற சண்டைக்கு போகிறாள். தான் இப்போது போனாலும் ஜார் மன்னர் தன்னை வரவேற்று தன்னுடைய குறைகளையெல்லாம் கேட்பார் என்று கூறுகிறாள். அதை அவளுமே  நம்புகிறாள். அப்படிப் போய் தளபதியின் காவலர்களால் துரத்தியடிக்கப்படுகிறாள்.
 இந்த நாவலில்  எனக்கு உச்ச காட்சியாக பட்டது பாலத்தின் அருகே கேத்தரின் தனது குழந்தைகளை பாடச்சொல்லி அடித்து பிச்சை எடுக்க வைக்கும்  இடம். காசநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவள் அங்கேயே இறந்தும் விடுகிறாள். மனைவியைக்   கொன்று, ரஸ்கொல்நிகோவின் தங்கை துனியாவின் மீது ஆசைப்பட்டு அவளிடம் தவறாக நடக்க முயன்ற ஸ்வாய்ட்ரிகைலோவினால் காத்ரினாவின் குழந்தைகள் காப்பாற்றப் படுகிறார்கள். இறுதியில் ஸ்வாய்ட்ரிகைலோவ் தன் முடிவை தானே தேடிக்கொள்கிறான்.
நிஜ வாழ்க்கையில் ரஸ்கொல்நிகோவ் போல், எல்லோரும் செய்த குற்றத்திற்காக வருந்துவதில்லை. இதை  வூடி ஆலனின் இந்த நாவலின் தாக்கத்தில் எடுத்த Crime and misdemeanors மற்றும் Match point போன்ற படங்களில் பார்க்கலாம். கொலை செய்தவர்கள் எந்த விதமான குற்றவுணர்ச்சியும் இல்லாமல் தனது வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருப்பது. இதுவும் இன்னொரு முகம்.இது தான் பெரும்பான்மை முகம் என்றே நினைக்கிறேன்.

குற்றமும் தண்டனையும்- படத்தொகுப்பு

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....