துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

29.8.10

பெண்ணியம் - சில எளிய புரிதல்கள் - 1


ஒரு முன் குறிப்பு:
பெண்ணியக் கோட்பாடுகள் பல்வேறு பரிமாணங்களை எட்டியபடி உச்சத்தில் இருக்கும் இன்றைய காலகட்டத்திலும் கூட அது பற்றிய அடிப்படைப் புரிதல் கூட இல்லாதவர்களாகப் பலர் இருப்பதை அன்றாடச் சமூக நடப்பில் காண முடிகிறது.
அப்படிப்பட்டவர்களிலும் பல்வேறு சாரார் உண்டு.ஒரு வகையினர் உண்மையிலேயே அது பற்றிய தெளிவு அற்றவர்களாய்ப் புரிந்து கொள்ள முயற்சியும்,ஆசையும் கொள்பவர்கள்; பிறிதொரு சாராரோ அது பற்றிப் புரிந்து கொள்ளும் தேட்டம் எதுவுமின்றிப் போகிற போக்கில் அதன் மீது கல்லெறிந்து விட்டுப் போகிறவர்கள்; இன்னும் சிலர் ‘பெண்ணியம்’என்ற சொல்லையே ஏதோ தீட்டுப்பட்ட சொல் போல எண்ணிக் காத தூரம் ஓடிவிட்டுத் தொலைவிலிருந்து கொண்டு அதை எள்ளி நகையாடுபவர்கள்.

இவர்களுள் முதல் பிரிவைச் சேர்ந்த சில இணைய வாசகர்கள்
பெண்ணியம் பற்றிய அடிப்படை விளக்கங்கள் சிலவற்றை நாடி அவற்றைத் தெளிவுபடுத்துமாறு மடல் எழுதியதால் ,
அவர்களுக்காகவும் ,மற்றும் இத் துறையில் ஈடுபாடு கொண்டு இவ் வலையை நாடி வரும் வாசகர்களுக்காகவும்  
எளிமையான சில பெண்ணியப் புரிதல்கள் , தொடர் பதிவுகளாக
 ( ‘பெண்-இலக்கியம்-வாசிப்பு’,’தமிழ் இலக்கிய வெளியில் பெண்மொழி’ஆகிய எனது நூல்களின் துணையோடு)
இந்த வலைப்பூவில் முன் வைக்கப்படவிருக்கின்றன.

இன்றைய பின் நவீனத்துவச் சூழலில் பெண்ணியச் சிந்தனைகள்  பலவகையாக முன்னிறுத்தப்பட்டாலும் அவற்றின் தொடக்கநிலைத் தோற்றுவாய்க்கான அடிப்படைஉண்மைகள் என்றும் மாறாதவை என்பதால் 
முதலில் ஒரு சில அடிப்படைகள் மட்டுமே தரப்படவிருக்கின்றன.
தொடர்ந்து வரும் வாசக எதிர்வினை,பங்கேற்பு ஆகியவற்றுக்கேற்ப அனைத்துப் பெண்ணியச் செய்திகளும் ஆராய்ச்சிக்கு உட்படுகையில்,வரிசை முறைப்படி,பின் நவீனத்துவப் பெண்ணியக் கருத்துக்களும் தவறாமல் இடம் பெறும்.

18.8.10

சிற்பியின் நிழல்சிங்கச் சிற்பத்தின் நிழலில் பன்றி
நன்றி; http://upload.wikimedia.org/wikipedia/commons/9/99/The_Lion_Monument_in_Luzern_23.12.2006.jpeg


கலைஞர்கள் தங்கள் கற்பனை வளத்தையும்,கலைநுட்பத் திறனையும் மட்டுமே தங்கள் படைப்புக்களில் பதிவு செய்வதில்லை.அடிநாக்கில் படிந்து கிடக்கும் கசப்புச் சுவையாக....,
பளிங்கு போல் தெளிந்த நீரின் அடியில் தங்கிப்போன வண்டலாக அவர்களின் ஆழ் மனங்களில் உறைந்து கிடக்கும் ஏக்கங்கள் ,துயரப் பெருமூச்சுகள்,ஏமாற்றங்கள்,நிராசைகள்,வன்மங்கள் ஆகியனவும் கூட விடாமல் தொடர்ந்து வரும் கரு நிழலாக -அறிந்தோ..அறியாமலோ- அவர்கள் உருவாக்கும் படைப்புக்களிலும் பதிவாகி விடுகின்றன.

சுவிட்சர்லாந்து நாட்டின் லூசர்ன் நகரில் அமைந்திருக்கும் நினைவுச் சின்னம் ஒன்றை ஐரோப்பியச் சுற்றுலாவில் கண்டபோது மேற்குறித்த கருத்து கொஞ்சம் கூடுதலான அழுத்தத்துடனேயே நெஞ்சில் உறைத்தது.

நம்மூர்க் குடைவரைச் சிற்பங்களைப் போல் மலைக்குள் குடைந்து வடிக்கப்பட்ட அற்புதமான ஒரு சிங்கச் சிற்பம் .
அந்த நினைவுச் சின்னமும் கூடச் சிங்கத்தின் பெயரால் Lion monument என்றே குறிப்பிடப்படுகிறது.


ஒரு காலத்தில் பிடரிமுடியைச் சிலிர்த்தபடி ஆக்ரோஷமாக வலம்வந்த சிங்கம் ஒன்று ,தனது உடலில் ஊடுருவிச் சென்றிருக்கும் குத்தீட்டி ஒன்றை ஏற்றபடி இறக்கும் தருவாயில் வீழ்ந்து கிடக்கிறது.சாகும் தருணத்திலும் அதன் ஒரு பாதம் சுவிஸ் நாட்டின் சின்னம் பொறிக்கப்பட்ட கவசத்தையும்,மற்றொரு பாதம் லில்லி மலர்கள் பொறிக்கப்பட்ட பிரெஞ்சு நாட்டின் கவசத்தையும் அவற்றைப் பாதுகாத்துக் கொண்டிருப்பதைப் போல அழுத்தமாகப் பற்றிக் கொண்டிருக்கிறது.

பிரெஞ்சுப் புரட்சியின்போது லூயி மன்னனையும்,அவனது அரசி மற்றும் பரிவாரங்களைக் காக்கும் முயற்சியில் உயிர்த் தியாகம் செய்த சுவிஸ்நாட்டுப் போர்வீரர்களின் நினைவாக உருவாகப்பட்டிருப்பது இச் சின்னம்.

சுவிஸ் வீரர்கள் போர்த் திறன் படைத்தவர்கள்;அத்துடன் மாறாத நாட்டுப் பற்றும் ,பணியாற்றும் இடத்தின் மீது குன்றாத விசுவாசமும் கொண்டவர்கள் என்பதைப் போற்றும் வகையில் பாறையின் மீது சில வாசகங்களும் பொறிக்கப்பட்டிருக்கின்றன.(''To the Loyalty and Bravery of the SWISS'')
[வாடிகன் நகரில் போப்பின் காவலர்களாக இப்போதும் கூட இருப்பவர்கள் சுவிஸ் வீரர்களே]

சிற்பத்துக்குக் கீழே உள்ள பாறையில் போரில் உயிர் நீத்த
(760 ),மற்றும் உயிர் பிழைத்த (350)வீரர்களின் எண்ணிக்கை கிரேக்கத்தில் குறிக்கப்பட்டிருக்கிறது.
33 அடி நீளமும் , 20 அடி உயரமும் கொண்ட இச் சின்னம் குடையப்பட்ட கற்பாறை அமைந்துள்ள மலைப் பகுதி, லூசர்ன் நகரத்தின் கட்டிடங்களுக்குப் பயன்பட்ட கல் குவாரியின் மிச்சம்.

1800 ஆம் ஆண்டின் துவக்கத்தில் டேனிஷ் சிற்பி ஒருவரால் வடிவமைக்கப்பட்ட இச் சின்னத்தின் சரித்திர முக்கியத்துவம் ஒரு புறமிருக்க...இதன் வடிவமைப்பில் காணலாகும் விசித்திரமே நம்மைப் பெரிதும் வியப்பில் ஆழ்த்தி விடுகிறது.

சிங்கத்தின் மேலுள்ள பொந்து போன்ற குடைவுப் பகுதியைச் சற்று உற்று நோக்கினால் நமக்குக் காட்சியாவது ஒரு பன்றியின் நிழல்.
‘மரத்தில் மறைந்ததது மாமத யானை’’
என்று திருமூலர் சொல்லுவதைப் போலச் சிங்கத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால் நம் கண்களுக்கு அந்தப் பன்றியின் நிழல் சட்டென்று தட்டுப்படுவது கொஞ்சம் கடினம்தான்.

சிங்கத்தையும் நினைவுச் சின்னத்தையும் சற்றே நினைவிலிருந்து ஒதுக்கி வைத்துவிட்டுக் குடைவின் மீது மட்டும் கருத்துச் செலுத்தினால் பன்றி நமக்கு தரிசனமாகும்.
(புகைப்படக் கருவி மூலம் சூம்’ செய்து பார்த்தால் உடனே அது தென்பட்டு விடும் என்று எங்கள் வழிகாட்டிஎல்லோரிடமும் ஆலோசனை கொடுத்துக் கொண்டிருந்தார்).

சிற்பம் ஒரு வகையாகவும் அதற்கு மேலுள்ள குடைவரை நிழல் வேறு மாதிரியாகவும் இருப்பது ஒருசிற்ப அதிசயம்(marvel) என்பது ஒரு புறமிருக்க....அதைப் படைத்த சிற்பியின் உளவியல் என்னவாக இருந்திருக்கக் கூடும் என்ற எண்ணமே இக் கட்டுரையின் முதல் பத்திக்கு நம்மை இட்டுச் செல்கிறது                   

தொலைவுக் காட்சியில்
நிழல் துல்லியமாகப்
புலனாகிறது

இவை இரண்டும் ஐரோப்பியச் சுற்றுலாவில்
பதிவர் எடுத்த புகைப்படங்கள்
   நினைவுச் சின்னத்தை உருவாக்கிய சிற்பிக்குச் சன்மானமாகப் பேசப்பட்ட தொகை முழுமையாக அளிக்கப்படவில்லை என்றும் அந்த வன்மத்தையே அந்த நிழலில் அவன் பதிந்து விட்டுப் போயிருக்கிறான் என்றும் உள்ளூர் வழிகாட்டிகள் ‘கதை’ விட்டாலும் ஒரு கலைஞனின் உள்ளம் அத்தனை மலினமாக யோசித்திருக்கும் என்பதை ஏற்க முடியவில்லை.

மோசமான ஒரு அரசனுக்காக.....அதன் விளைவாகவே ஓட ஓட விரட்டப்பட்ட ஒரு ராஜகுடும்பத்துக்காகத் தன் தாய் நாட்டு வீரர்கள் அநியாயமாகச் செய்திருக்கும் உயிர்த் தியாகம் அந்த நினைவுச்சின்னத்தைச் செதுக்கும் வேளையில் அவனது நெஞ்சின் அடியாழத்தில் இருந்து அவனை இயக்கியிருக்கலாம்;
சிங்கத்தின் மேன்மை இழிவான ஒரு விஷயத்துக்காகச் சிறுமைப்படுத்தப்பட்டதைச் சுட்டும் குறியீடாகவே அந்தப் பன்றியின் நிழலை அவன் பதித்திருக்க வேண்டும் என்ற எண்ணம் என் நெஞ்சுக்குள் ஓடியது.இது உண்மையாக இருக்கலாம்;அல்லாமலும் போகலாம்.
ஆனாலும் சிற்பியின் மன நிழலில் படிந்த ஏதோ ஒரு கருமையே பன்றியின் கருநிழலாகப் பதிவாகிக் காலத்தின் சாட்சியாக அங்கே காட்சி தந்து கொண்டிருக்கிறது என்பது மட்டும் நிஜம்.

ஊரிலிருந்து விலகித் தனிமையான ஒரு மலை அடிவாரத்தில்...தனக்கு முன்னால் உள்ள தடாகத்தில் தன் பிரதிபிம்பத்தை அலையவிட்டபடி இருக்கும் இந்தச் சிங்கச் சின்னம் அதன் கலையழகோடு கூடவே இனம்புரியாத சோகத்தையும் கூடவே கிளர்த்திக் கொண்டிருக்கிறது.

’சிங்கங்களின் சாவு இது போன்ற ஓசைகளற்ற தனிமையான இடங்களில் நிகழ்வதே பொருத்தமாக இருக்கிறது;சதுக்கங்களில் நாற்புறமும் வேலியிட்ட கூண்டுகளுக்குள் கிரானைட் பீடங்களின் மீது அல்ல’’
என்று அந்தச் சிலை அமைந்துள்ள அமைதி தவழும் இடத்தின் பொருத்தத்தைச் சுட்டிக் காட்டி நடுத் தெருச் சிலைகளுக்குக் குட்டு வைக்கிறார் உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் மார்க் ட்வைன்.
அவரது கூற்று எக் காலத்திற்கும் எல்லா நாடுகளுக்கும் பொருத்தமானதுதான்!                                                                      

15.8.10

சுதந்திரம்


சுதந்திரத்தின் மகத்துவம் பேசப்படுகிறது

குண்டு துளைக்காத 

கூண்டுகளிலிருந்து.......
12.8.10

அருட்கடலின் நூற்றாண்டு

நாடு,மதம்,மொழி,இனம் ஆகிய குறுகிய எல்லைக் கோடுகள் அனைத்தையும் கடந்த மாபெரும் தவச் செல்வர் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
இருபத்தொன்றாம் நூற்றாண்டுக்கான ஆன்மீகப் பாதைக்குச் சென்ற நூற்றாண்டிலேயே அடித்தளம் அமைத்து விட்டுப் போன அறிவுச் செல்வர் அவர்.
தனி மனிதன் மட்டும் உய்வு பெறுவதற்கான ஆன்மீகமல்ல வேதாத்திரி மகரிஷிகளின் ஆன்மீகம்.
தனிமனிதனோடு இயற்கையையும்,சமூகத்தையும் ஒருங்கிணைத்து 
அவற்றின் ஒத்திசைவில் விளையும் ஒருமைப்பாட்டை யோகமாகக் காணும் வழியே வேதாத்திரியம் காட்டும் வழி. 
இயற்கைவளத்தைப் பேணிக் காக்க மகரிஷி விடுக்கும் கோரிக்கையும்,உலக நாடுகளின் ஒற்றுமை வேண்டி ஐ.நா அவையில் அவர் செய்த முழக்கமும் ,உலக சமுதாய சேவா சங்கம் என்ற உன்னதமான அமைப்பை மகரிஷி அவர்கள் தோற்றுவித்துவிட்டுப் போனதும் மேற்குறித்த அடித்தளத்தில் அமைந்தவைதான்..
அத்துவைதக் கோட்பாட்டுத் தளத்தில் வலுவாகக் காலூன்றி நின்றபடி அறிவுக்காக மட்டுமே குரல் கொடுக்கும் மெய்ஞ்ஞானம் வேதாத்திரியம்..
எல்லாம் வல்ல தெய்வத்தை..எங்கும் நீக்கமற நிறைந்த பரம்பொருளை
‘’சொல்லால் மட்டும் நம்பாதே
  சுயமாய் சிந்தித்தே தெளிவாய்’’
என்கிறார் மகரிஷி.
புவியியல்,வானியல்,உடற்கூற்றியல் ஆகிய
 விஞ்ஞானக் கோட்பாடுகளை அடியொற்றி ,
அவற்றோடு முரண்படாத வகையில் ,
புலன்களுக்கெட்டாத இறைஞானத்தையும் புகட்ட முயலும் வேதாத்திரியக்கோட்பாட்டை   
இறை விஞ்ஞானம் 
என்றே குறிப்பிடலாம். 
நாத்திகவாதிகளும் கூட மறுப்புக் கூற முடியாதபடி, 
எதிர்வாதம் புரிய இயலாதபடி 
தெளிவான தர்க்கங்களோடும், அழுத்தமான அறிவியல் பின்புலத்தோடும் முன்வைக்கப்படுபவை வேதாத்திரியச் சிந்தனைகள்.
எளிய உடற்பயிற்சிகள்,
தியான முறைகள்,
மனத் தூய்மைக்கான அகத்தாய்வுப் பயிற்சிகள்,
உயிருக்கு உரம் சேர்க்கும் காயகல்பப் பயிற்சி ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்த வேதாத்திரிய யோகம் 
எளியமுறைக் குண்டலினி யோகமாகவும்,
மனதுக்கு வளம் சேர்ப்பதால் மன வளக்கலையாகவும் 
உலக நாடுகள் பலவற்றிலும் பரவலான வரவேற்புப் பெற்று வருவதோடு தமிழகத்தின் கல்வி,தொழிற்கூடங்களிலும் மதச் சார்பு துறந்த பெருவாரியான தரப்பினரால் கைக்கொள்ளப்பட்டு வருகிறது.

மகரிஷி அவர்களின் உரைகளும்,நூல்களும் ,
அவரிடம் பயின்றோர் நல்கும் நேரடிப்பயிற்சிகளும்
தொன்மை வாய்ந்த இந்தியக் கலையாகிய யோகக் கலையைச் 
சிறப்பான ஒரு கல்வித் திட்டமாகவே ஆக்கித் தந்திருக்கின்றன.
கோவை பாரதியார் பல்கலைக் கழகம்,
மகரிஷி நிறுவியிருக்கும் ஆழியாறு அறிவுத் திருக் கோயிலுடன் இணைந்து
யோகக் கலையில் பட்டயம்,இளங்கலை,மற்றும் முதுகலை வகுப்புக்களைத் தொலைநிலைக் கல்வித் திட்டமாக்கி வழங்கிக் கொண்டிருக்கிறது என்றால் வேதாத்திரியத்தின் கல்வித் தகுதி எத்தகையது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
’ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’
என்னும் திருமூலர் வழியும்,
‘எல்லோரும் இன்புற்றிருக்க ’எண்ணும் தாயுமானார் வழியுமே வேதாத்திரி மகரிஷிகள் கைக் கொண்ட வழி.
‘வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ‘
என்னும் மந்திர வாசகத்தை....
எண்ணம் , சொல் ,செயலால் எவருக்கும் தீங்கு செய்யாத பெருவழியைக் காட்டி விட்டுப் போன அந்தப் பெருமகனாரின் நூற்றாண்டு ஆகஸ்டு14ஆம் நாள் தொடங்கவிருக்கிறது.
மைய அரசு , மகரிஷியின் நினைவாகச் சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டு இந்த மண்ணின் மைந்தருக்குப் பெருமை சேர்க்க முன் வந்திருக்கிறது.
இது வேதாத்திரி என்ற தனிமனிதருக்காகக் கிடைத்த மகத்துவம் இல்லை.
’கடையனுக்கும் கடைத்தேற்றம் ’ என்ற காந்திய வழியில் 
யோகத்தையும் ஞானத்தையும் பண்டிதன் முதல் பாமரன் வரை கொண்டு சேர்த்து
அச்சத்துக்கும் ,இருண்மைக்கும் உரியதாக இருந்த தத்துவங்களை
இலகுவாகவும் தெளிவாகவும் மாற்றி 
உலகப் பொது உடைமை ஆக்கியுள்ள அவரது அயராத உழைப்புக்கும் 
உலக நலனில் அவர் கொண்டிருந்த மாறாத அக்கறைக்கும் கிட்டியிருக்கும் பெருஞ்சிறப்பு.
வாழும் காலத்திலேயே கோட்பாடுகளையும்,கொள்கைப் பிடிப்புக்களையும் கை நழுவ விட்டு விட்டுக் கேலிக்கிடமாக நடமாடும் போலிகளுக்கிடையே
வையகம் வாழ்வாங்கு வாழ்வதை மட்டுமே தனது முழு மூச்சாகக் கொண்டிருந்த வேதாத்திரி மகரிஷிகள் 
வாராது வாய்த்ததொரு 
மாமணியாகவே திகழ்கிறார்.9.8.10

ஜெயமோகனின் ‘நாவல் கோட்பாட்டை’ முன் வைத்து......

விரிவான புனைவுகளுக்கும், பன்முக தரிசனங்களுக்கும் - பிற உரைநடை இலக்கிய வடிவங்களில் சாத்தியமில்லாத அபாரமான வாய்ப்புகளை உருவாக்கித் தரும் நாவல் என்ற மிகச் சவாலான இலக்கிய வடிவம், அதன் விஸ்தாரமான பரிமாணங்களுடனும், லட்சணங்களுடனும் நவீன தமிழ் இலக்கியத்தில் உள்வாங்கிக் கொள்ளப்பட்டுள்ளதா என்ற முக்கியமானதொரு வினாவை முன்வைத்து அதற்கான விடையை விரிவான, தருக்கபூர்வமான வாதங்களுடனும், சுடும் நிஜங்களுடனும் தீவிர இலக்கியத் தளத்தின் முன்பாக எடுத்து வைக்கிறது எழுத்தாளர் ஜெயமோகனின் ‘நாவல் கோட்பாடு’ என்னும் அவரது முதல் திறனாய்வு நூல்.


ஜெயமோகனின் முதல்நாவல், முதல் சிறுகதை ஆகிய பிறவற்றைப் போலவே பிரமிப்புக் கலந்த வியப்பைத் தோற்றுவிக்கும் இந்நூல் , வித்தியாசமானதொரு விவாதச் சூழலில் முகிழ்த்திருக்கிறது ; இலக்கியப் பூசல்களால் நேரும் கருத்து மோதல்களும் கூடத் தேர்ந்ததொரு இலக்கியவாதிக்குச் சாதகமானதொரு படைப்பூக்க மனநிலையை ஏற்படுத்திவிடக்கூடும் என்பதற்கு இந்த நூலையும் ஒரு சிறந்த முன்னுதாரணமாகக் குறிப்பிட முடியும்.
978-81-8493-386-4_b1992 இல் முதற்பதிப்பாக வெளிவந்து அரிதாகவே கைக்குக் கிட்டுவதாகவும், அப்படிக் கிட்டியவர்களிடமும் பல சர்ச்சைகளை எழுப்பக் கூடியதாகவும் இருந்த இப்புத்தகம் அண்மையில் கிழக்குப் பதிப்பக வெளியீடாக மறு ஆக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
தமிழில் உரைநடை என்ற வடிவம் பரவலாக நடைமுறைக்கு வந்து, அதுவே கதைக்கான கருவியுமான பின்னர், படைப்பு, ஆய்வு ஆகிய தளங்களிலும், கல்விக்கூடங்களிலும் மேற்கத்திய அளவுகோல்களின் அடிப்படையிலேயே அதன் இலக்கணம் தொடக்க நிலையில் வரையறைப்படுத்தப்பட்டது.
’உங்கள் அளவுகோலை வைத்து என் படைப்பை அளக்க முயலாதீர்கள்… என் படைப்பை வைத்து உங்கள் அளவுகோல்களை மாற்றிக் கொள்ளுங்கள்’ என்று புதுமைப்பித்தன் போன்ற படைப்பாளிகளைக் கூற வைத்தது இவ்வாறான போக்குத்தான்.
தமிழின் இலக்கிய ஊடகமாக உரைநடை வளரத் தொடங்கிய காலகட்டத்தில் நமக்கு முன்மாதிரியாக இருந்தவை மேற்கத்திய இலக்கியங்கள் மட்டுமே என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை; எனினும் அந்தப் பேரிலக்கியங்களின் பாதையிலும் பயணிக்காமல், தமிழ்ப் பாரம்பரிய மரபு வேர்களையும் அத்துடன் ஒருங்கிணைக்காமல் புனைகதையின் பல வடிவங்களும் தமிழ்ச் சூழலில் பிறழ்ச்சியான புரிதலுடனேயே பின்பற்றப்பட்டு வந்திருக்கின்றன என்பதே இந்நூலில் ஜெயமோகன் வைக்கும் அழுத்தமான வாதம்.
சுருக்கமாகச் சொன்னால் சிறுகதை, பக்க அளவைக் கொஞ்சம் கடந்தால் குறுநாவல், பக்கங்கள் இன்னும் சற்று எல்லை மீறினால் நாவல் என்ற காலம் காலமான கற்பிதம் எந்த அளவுக்குச் சிறுபிள்ளைத்தனமானது என்பதைத் தன் நூலில் எடுத்துக் காட்டும் ஜெயமோகன், மேற்குறித்த மூன்று வடிவங்களுக்குமான தனிப்பட்ட கூறுகளை, படைப்புக்கான சாத்தியங்களைத் தான் அமைத்துக் கொண்ட கருதுகோளின் அடிப்படையில் தெளிவாக விளக்கிக் கொண்டு போகிறார்.
’வாசக இடைவெளி’ என்பதே இந்நூலில் அவர் முன்மொழியும் முதன்மையான கருதுகோள். அதன் அடிப்படையிலேயே புனைகதை வடிவங்கள் மூன்றையும் பின் வருமாறு பாகுபாடு செய்கிறார் அவர்.
வாழ்க்கை அனுபவத்தின் பல கூறுகளில் குறிப்பிட்ட ஒன்றின் முழுமையைக் குறிப்பால் உணர்த்தும் சிறுகதையின் வடிவம் கச்சிதமானது ; ஒருமைப்பாடு கொண்டது. வாசகன் நிரப்பிக் கொண்டாக வேண்டிய இடைவெளி அதன் முடிவில் மட்டுமே பொதிந்திருக்கிறது.
வடிவமற்ற வடிவத்தையே தன் வடிவமாகக் கொண்டிருக்கும் நாவல், வலை போல நாலாபுறமும் கிளை பரப்பிப் பின்னிப் பின்னி விரியும் நாவல், தனது நகர்வை ஒரேதிசை நோக்கியதாக அல்லாமல் , ஒருமைப்பாடு என்னும் மையப்புள்ளியை முற்றிலும் தவிர்த்ததாய் அமைத்துக் கொள்ளும் நாவல், நிறைய இடைவெளிகளுக்கு, வாசகக் குறுக்கீடுகளுக்கு இடம் தருவது.
அந்த மௌன இடைவெளிகளை வாசகன் தன் கற்பனையால் நிரப்பிக் கொள்ளும்போதுதான் அந்த வடிவத்தின் பிரம்மாண்டமான தரிசனம் அவனுக்குச் சித்தியாகிறது.
சிறுகதைக்குரிய ஒருமைப்பாடும், நாவலுக்குரிய விவாதத் தன்மையும் ஒருங்கிணைந்து இவ்விரண்டுக்கும் இடைப்பட்டதான குறுநாவல், நாவலளவுக்கு இல்லையென்றாலும் சிறுகதையைப் போலன்றி ஒன்றுக்கு மேற்பட்ட வாசக இடைவெளிகளுக்கு இடமளித்துக் கொண்டே மையத்தை நோக்கி நகர்ந்து செல்கிறது.
சிறுதை காட்டுவது காலத்தின் ஒரு துளி,
குறு நாவல் காட்டுவது காலத்தின் சிறிய நகர்வு,
நாவலில் படமாக விரிவது காலத்தின் பிரவாகம்.
குறிப்பிட்டதொரு காலப் பின்னணியில் அமைந்தாலும் எல்லையற்ற காலத்தின் சாயலைக் காட்டுவதன் மூலமே நாவல் மானுடப் பொதுத் தன்மையைச் சாத்தியப்படுத்துகிறது என்று கூறும் நூலாசிரியர் அதற்கு ஏற்ற உதாரணமாக தால்ஸ்தாயின் ‘போரும் அமைதியும்’ நாவலைக் காட்டுகிறார்.
தமிழின் பண்டைக் கதைக் கூற்று வடிவமாகிய காப்பியத்தின் நவீன உரைநடை மாற்றுவடிவமே நாவல் என்ற தவறான உள்வாங்கலைத் தனது ‘நாவல் இலக்கியம்’ நூல் மூலம் ஓரளவு தகர்த்தவர் இலங்கைத் தமிழ்ப் பேராசிரியர் கலாநிதி கைலாசபதிஅவர்கள்.
அந்தக் கருத்தை இன்னும் வளர்த்தெடுத்துக் கொண்டுபோய் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சேர்க்கிறது ஜெயமோகனின் ‘நாவல் கோட்பாடு’. காவிய மரபிலிருந்தே நாவல் கிளைத்தபோதும், காவியம், நாவல் ஆகிய இரண்டுமே தத்துவங்களின் கலை வடிவங்களானபோதும்… தான் முன் வைக்கும் தரிசனத்தை வலியுறுத்துவது காவியத்தின் தத்துவம் என்றும், மாறாகத் தன் காலச் சமூகத்தையும் மதிப்பீடுகளையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்திக் காவியம் நிறுவிவிட்டுப் போன மதிப்பீடுகளை அதே வீரியத்துடன் எதிர்கொள்வதே நாவல் என்றும், அதுவே நாவல் வடிவம் விரிவும், வீச்சும் பெறுவதற்கான முதற்படி என்றும் குறிப்பிடும் ஜெயமோகன், “காவியத்தை முழுமையாகக் கழித்துவிடும் எதிர்காவிய வடிவமே நாவல்’’ என்கிறார்.
தமிழ்மொழியின் படைப்புச் சூழலில் நிலவிய பிரசுர வசதிக் குறைபாடுகள், தொடர்கதை ஆதிக்கம் ஆகியவவை நாவலின் வடிவக் கற்பனைக்குத் தடையாக அமைந்து விட்டதை வேதனையோடு நினைவு கூரும் ஜெயமோகன், அந்தக் காரணத்தாலேயே நல்ல நாவல்களாக மலர்ச்சி பெற்றிருக்க வேண்டிய பல ஆக்கங்கள், வெறும் உணர்ச்சிக் கதைகளாகவும், நீள் கதைகளாகவும் மட்டுமே மாறிப் போய்விட்ட அவலத்தையும் எடுத்துக் காட்டி, ’’தமிழில் தொடர்கதை வடிவம் கொண்ட மிகப் பெரிய பலி தி.ஜானகிராமன்’’என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.
புனைவின் தருக்க ரீதியான பின்னலுக்கிடையில் குறுக்கீட்டையோ , இடைவெளிகளையோ அனுமதிக்காத படைப்புக்களை - சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் ஒருமைப்பாடு குன்றாமல் கதையைச் சொல்லிக் கொண்டு போகும் உணர்ச்சிக் கதைகளாகக் கொள்ளலாம்;
கதைத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திப் புனைவில் வித்தை காட்டி ஒவ்வொரு அத்தியாயத்திலும் உச்சம் வைக்கும் வணிக ரீதி கொண்ட பரபரப்பான நீள் கதைகளாகக் கொள்ளலாம்;
வெகுஜனப் பார்வை தவிர்த்துக் கருத்துப் பிரசாரத்தை முன்னிறுத்தும் நெடுங்கதைகள் சிலவற்றையும் நீள் கதைகளாகக் கொள்ளலாம். ஆனால் அவற்றை நாவல் என்ற பிரிவில் ஒருக்காலும் உள்ளடக்க முடியாது என்ற வாதத்தை முன் வைத்து இது நாள்வரை அவற்றை நாவல்களாகப் பூப்போட்டு வந்த பிரமைகளைக் கறாராக நொறுக்கி விடுகிறது ஜெயமோகனின் தருக்கம்.
அவரது கணிப்பில் கல்கியின் பொன்னியின் செல்வனும், சிவகாமியின் சபதமும், கொத்தமங்கலம் சுப்புவின் ‘தில்லானா மோகனாம்பாளும்’ சாண்டில்யனின் ‘யவன ராணி’யும், நா.பா வின் ‘குறிஞ்சி மலரும்’ சற்றுத் தரமான உணர்ச்சிக் கதைகளாகின்றன. தி.ஜா வின் ‘மோகமுள்’ளும், ஜெயகாந்தனின் ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாளும்’, பிரபஞ்சனின் ‘மானுடம் வெல்லு’மும், சின்னப்ப பாரதியின் ‘தாகமும்’ குறிப்பிடத்தக்க நீள்கதைகளாகின்றன. ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதர்களும்’, தி.ஜாவின் ‘அம்மா வந்தாளும்’, எம்.வி.வெங்கட்ராமின் ‘வேள்வித் தீ’யும்  சா.கந்தசாமியின் ‘சாயா வனமும்’ குறுநாவல்கள் என்று மட்டுமே ஜெயமோகனால் வகைப்படுத்தப்படுகின்றன.
எண்ணற்ற வாசகக் குறுக்கீடுகள், முடிவற்ற காலம் இவற்றின் பின்னணியின்றிப் பக்க நீட்சி ஒன்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அவற்றை நாவல் என்ற வகைப்பாட்டில் இணைப்பது பொருத்தமற்றது என்பதையே ‘ குறுநாவல்கள்’ என்ற தலைப்பிலான கட்டுரையில் விரிவாக முன் வைக்கிறார் ஜெயமோகன். தீவிர இலக்கியப் பார்வையற்ற மரபு வழி வாசகர்களுக்கு இவ்வாறான கருத்துக்கள் அதிர்ச்சி ஊட்டுவதாகவும், இத்தனை நாளாக அவர்கள் பேணி வந்த பிரமைகளைக் கலைத்துப் போடுவதாகவும் கூட இருக்கலாம்.
ஆனால் இந்த முடிவையும், வகைப்படுத்தலையும் எட்டுவதற்கு ஜெயமோகன் முன்வைக்கும் அடுக்கடுக்கான விவாதங்களையும் மேற்கத்திய, மற்றும் பிற மொழி இந்திய நாவல்களிலிருந்து காட்டும் மேற்கோள்களையும் அவரது நூல்வழி விரிவாகப் படிக்கும்போதுதான் அவரது கருதுகோள் எவ்வாறு நிறுவப்பட்டிருக்கிறது என்பதையும், அதற்கான நேர்மையான முயற்சியை எந்த அளவுக்கு அவர் மேற்கொண்டிருக்கிறார் என்பதையும் உணர்ந்து கொள்ள முடியும்.
தான் அமைத்துக் கொண்ட கருதுகோளை ஒட்டி மேற்குறித்த பகுப்புக்களைச் செய்தபோதும் முன்னர் குறிப்பிட்ட உணர்ச்சிக்கதை மற்றும் நீள் கதைகளை ஜெயமோகன் ஒரேயடியாக ஒதுக்கித் தள்ளி நிராகரித்து விடுவதுமில்லை. காவியத்தின் நிழலாக , வாசகர்களைக் கனவுலக சஞ்சாரத்தில் ஆழ்த்தி உணர்வுகளை மிகைப்படுத்திக் காட்டுவதாக விமரிசித்தாலும் பொன்னியின் செல்வனின் நிலக்காட்சிகளையும்,சிவகாமியின் சபதத்தில் வெளிப்படும் சிற்ப,சித்திரக் கலைத் தகவல்களையும் முற்றாகப் புறந்தள்ளிவிட முடியாது என்று கூறும் ஆசிரியர் , அவற்றை நாவல் என்ற பெயரால் அழைக்க முடியாதே தவிர இலக்கியமல்ல என்று ஒதுக்க முடியாது என்கிறார்.
அவற்றைப் பேரிலக்கியங்கள் எனக் கருதுவதும் பிழை, வெறும் வெகுஜன எழுத்துத்தான் என்று நிராகரிப்பதும் சரியல்ல என்பதே அவரது முடிவு. அது போலவே கருத்துப் பிரசாரத்தை முன்னிறுத்தும் நீள்கதைகளிலும் கூட அவற்றின் சமூகப் பங்களிப்பும், படைப்பாளியின் சித்திரிப்பு, மொழிநடை ஆகிய இலக்கிய ஆளுமைகளும் போற்றுதலுக்கு உரியன என்பதே அவரது நடுநிலைப் பார்வை. பின்னாளில் வெளிவந்த ‘நவீனத் தமிழ் இலக்கிய அறிமுகம்’, ‘இலக்கிய முன்னோடிகள் வரிசை’ ஆகிய விமரிசன நூல்களிலும் கூட இதே போக்கிலான சமநிலத் தன்மையை ஜெயமோகனிடம் காண முடிந்திருக்கிறது.
இறுக்கமான, செறிவான நாவல்கள் நாவலின் சவாலைத் தவற விட்டு விடுவதாகவும், முழுமையாக விரிந்து வாழ்வை அள்ள முயல்பவையே நாவல்கள் என்றும் கூறும் ஜெயமோகன் அத்தகைய நாவல் வடிவத்துக்கான தமிழ்ச்சூழல் முயற்சிகளாக - (இத் திறனாய்வு நூல் வெளி வந்த காலகட்டத்திற்குள்) நீல பத்மநாபனின் ‘தலைமுறைகள்’ , க.நா.சுவின் ‘பொய்த்தேவு’, சுந்தரராமசாமியின் ‘ஜே.ஜே.சில குறிப்புக்கள்’, அசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள்’ ஆகிய சில படைப்புக்களைச் சுட்டுகிறார். அவற்றையும் கூட இவரது கணிப்பில் முழுமை பெற்றவை என்று சொல்லி விட முடியாது; இவர் வகுத்துக் கொண்ட கருதுகோளை ஓரளவு நெருங்கி வருபவை என்று மட்டுமே அவற்றைக் கூற முடியும்.
இலக்கிய வடிவங்கள் கால மாற்றத்தாலும்,சமூக அரசியல் சித்தாந்த மாற்றங்களாலும் நாளும் மாறிக் கொண்டே வருபவை. ’’நவீனத்துவம் வழியே தமிழில் உருவாகி இருந்த குறுகிய நாவல் வடிவத்தை உடைத்துத் திறந்து ஒரு பெரிய பரப்பை உள்ளே கொண்டு வருவதற்கான முயற்சி’’யாகவே தன் திறனாய்வு நூலை இன்று தான் காண்பதாக இரண்டாம் பதிப்பின் முன்னுரையில் குறிப்பிடும் ஜெயமோகன், விஷ்ணுபுரம், உபபாண்டவம், காவல் கோட்டம், ஆழி சூழ் உலகு, நெடுங்குருதி, மணற்கடிகை எனப் பின்நவீன காலகட்டத்தில் வெளிவந்த நாவல்களுக்காக அன்றே தான் முன்வைத்த வாதங்களாகவே இந்நூலின் கருத்துக்கள் தமக்கு இப்போது படுவதாகவும் கூறுகிறார். ’நாவல் கோட்பாடு’ என்னும் இந்த நூலுக்குள் ஆழ்ந்து பயணிக்கும்போது நமக்கும் அது பொருத்தமானதென்றே தோன்றுகிறது.
வெற்றிச் சூத்திரத்துக்கான சூட்சுமம் சொல்லத் தெரிந்தவன் பெரும்பாலும் நல்ல வித்தைக்காரனாக இல்லாமல் போய்விடுவதே பொதுவான உலக நியதி. இதிலும் கூட விதி விலக்காக இருப்பதே ஜெயமோகனைத் தனித்துவமாகக் காட்டும் சிறப்பு.

நூல் விவரம்;
நாவல் கோட்பாடு, ஜெயமோகன்.
கிழக்கு பதிப்பக வெளியீடு. 144 பக்கங்கள். விலை ரூ.100     
நன்றி ;
கட்டுரையைவெளியிட்ட சொல்வனம் இணைய இதழுக்கு....
http://solvanam.com/?p=9758                                                                                                                                                                                 

3.8.10

வ.ராவின் 'உயர்' கனவு

நடப்புலகில் காண இயலாத கனவுச் சமூகம் , குறைகளே இல்லாத இலட்சியச் சமூகம் ஆகியன
 ‘உயர் கனவுச் சமுதாயம்’( Utopian Society) என்னும் தொடரால் குறிப்பிடப்படுகின்றன.

இச் சமுதாயம் பற்றிய சிந்தனை சித்தாந்த அளவில் ப்ளேட்டோவினால் உருவாக்கப்பட்டிருந்தபோதும் அக்கோட்பாட்டுக்குக் கலை வடிவம் தந்து முதன் முதலில் உருவாக்கியவர் சர் தாமஸ் மூர் என்பவர்.
‘யூடோபியா’ என்னும் பெயரைக் கொண்ட அவரது நாவல், அரசியல்,சமூக அமைப்புக்கள் அப்பழுக்கின்றிச் செயல்படும் ஓர் அதீத அற்புதத் தீவைக் கற்பனையாகப் படம் பிடித்துக் காட்டியது.
தாமஸ் மூரை முன்னோடியாகக் கொண்டு ஆங்கில மொழியில் பல உயர்கனவு நாவல்கள் வெளி வந்தன.

தமிழ்நாவல் வரலாற்றில் இவ்வரிசையில் வந்த முதல் நாவல் , பாரதியின் சீடராகிய வ.ரா.எழுதிய ‘கோதைத் தீவு’ என்னும் ஆக்கம்.


வ.ரா.,மணிக்கொடி குழுவைச் சார்ந்த எழுத்தாளர்.
விடுதலை இயக்கத்தையும்,சீர்திருத்த இயக்கத்தையும் ஒருங்கிணைப்பதில் ஆர்வம் கொண்டிருந்த அவர் , அதன் ஒரு பகுதியாகப் பெண்மைச் சமத்துவத்தை வலியுறுத்துவதைத் தம் நாவல்களின் கருப்பொருளாகத் தேர்ந்து கொண்டார் அவர்.

'சுந்தரி’,’சின்னச் சாம்பு’,’விஜயம்’என்ற தனது நாவல்களில் இளமை மணம், விதவைநிலைக் கொடுமை ஆகியவற்றை நடப்பியல் போக்கில் சித்தரித்த அவர் , பெண்மைக்கு முதன்மை அளிக்கும் ஒரு சமுதாய அமைப்பு ஏற்படுமானால் அதன் விளைவுகள் எவ்வாறு அமையும் என்பதைக் கனவுப் போக்கில் காட்ட விழைந்ததன் விளைவே ,கோதைத் தீவு’ நாவல்.

நடப்பியற் சமூகத்தில் நிலவும் குறைகளுக்கு மாற்றுக் காணும் முயற்சியாகவே கனவுச் சமூகங்கள் படைக்கப்படுவதால் அவை,நடப்பியற் கட்டமைப்பை மாற்றிச் சமூக மீட்டுருவாக்கம் செய்வதை இலக்காய்க் கொண்டிருக்கின்றன.

‘கோதைத்தீவு’நாவலில் வ.ரா காட்டும் நடப்பியற் சமூகமும்,கனவுச் சமூகமும் இரு துருவங்கள் போலத் தமக்குள் மாறுபட்டவை.

மரபுவழிப்பட்ட இந்திய சமூகத்தில் நிலவும் குறைகளுக்கு மாற்றாகவே கோதைத்தீவு என்ற கற்பனைச் சமூகம் ஒன்று நாவலில் உருவாக்கப்படுகிறது.
ஆண்களின் ஆதிக்கப் போக்கினைக் கண்டு மனம் நொந்து அவர்களைப் புறக்கணிக்கும் நோக்குடனேயே கடவுளைத் தனது கணவனாகத் தேர்ந்து கொண்டவள் ஆண்டாள் எனக் கற்பனை செய்தவர் வ.ரா. ;
 (அது தனி ஒரு பதிவிற்கு உரியது)
அதனாலேயே தான் உருவாக்கும் பெண் முதன்மைச் சமூகத்துக்கும் 'கோதைத் தீவு' என ஆண்டாள் பெயரையே சூட்டி மகிழ்கிறார்.

கோதைத் தீவு காட்டும் கற்பனைச் சமூகத்தின் வாழ்க்கைத் தத்துவம் ,பெண் சுதந்திரத்தை மையமிட்டதாக அமைந்திருக்கிறது.
மரபுவழிச் சமூகத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு மாற்றாக இப் புதிய சமூகம் பெண்களாலேயே உருவாக்கப்பட்டதை நாவல் இவ்வாறு குறிப்பிடுகிறது;
''இந்தத் தீவுக்குத் துவக்கத்தில் நூறு பெண்கள் வந்தார்கள்; ......ஆண்மக்கள் பெண் மக்களைப் படுத்தும் பாட்டைப் பார்த்துப் பொறாதவர்களாய் இந்த நாட்டுக்குக் குடியேறி வந்தார்கள்.....பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் பெண்விடுதலையில் நாட்டமுள்ள ஆண்பிள்ளைகள் இங்கு வந்தனர்.அவர்கள் நூறு கன்னிமார் வகுத்த சட்ட திட்டங்களை ஒப்புக்கொண்டு வாழ்ந்து வந்து இவர்களுடன் மணம் செய்து கொண்டார்கள்''

கட்டாயத் திருமணம்,சீதனம்,.தேவதாசி முறை ஆகியவற்றை ஒழிப்பதோடு அக்காலகட்டச் சூழலில் நம்பவே முடியாத ஒரு புதுமையைச் செய்கிறது இந்நாவல்.
கோதைத் தீவின் சட்ட திட்டங்கள் , பயிர்த்தொழில், இராணுவம் ஆகிய துறைப் பயிற்சிகளை இரு பாலாருக்கும் கட்டாயமாக்கியது போலச்
சமையல் பயிற்சியையும் இருசாராருக்கும் பொதுவானதாக்குகின்றன கோதைத் தீவின் சட்ட திட்டங்கள் .

''இந்நாட்டிலே முதலாவதாக ஆண்களுக்கும்,பெண்களுக்கும் கட்டாயமாகச் சமையல்பழக்கம் தெரிந்திருக்க வேண்டும்.ஜெர்மனியில் மூன்று ஆண்டுகளுக்கு ஆண்களுக்குக் கட்டாய இராணுவப் பயிற்சி இருந்தது போல இந்த நாட்டில் முக்கியமாக ஆண் பிள்ளைகளுக்கு ஓராண்டு கட்டாயச் சமையல்பயிற்சி போதிக்கப்படுகின்றது...........எந்த வீட்டிலும் ஆணுக்குத் தோதில்லாத சமயத்தில் பெண்ணும், பெண்ணுக்குத் தோதில்லாத
சமயத்தில் ஆணும் சமைக்க வேண்டும்''

வீட்டுக் கடமைகளில் ஆண் பங்கேற்பது போலப் பெண்ணுக்குச் சமுதாயக் கடமைகளாகிய அரசியல் , சமயம், போர்த்தொழில் ஆகியவற்றில் சம பங்கு அளிக்கப்படுகிறது.

விதவைத் திருமணத்திலும் ஒரு புதுமையைப் புகுத்துகிறார் வ.ரா.
காலம் காலமாக விதவை என்ற சொல்வழக்கு பெண்ணுக்கு மட்டுமே வழங்கி வந்ததைக் கோதைத் தீவு மாற்றுகிறது .

கணவனை இழந்த பெண் 'மூளி ' என அழைக்கப்பட்டால் மனைவியை இழந்த ஆணுக்கு 'மோழை'என மாற்றுப் பெயரளிக்கிறார் வ.ரா.
மறுமணமும் கூட மோழைக்கும் மூளிக்கும் இடையில் மட்டுமே நடைபெறுகின்றன.

மரபுவழிப் புராணக் கதைகளுக்கும் பெண்ணுரிமை நோக்கில் புது விளக்கங்கள் தருகிறது நாவல்.
அகலிகையின் கதை புதுமைப் பித்தனால் 'சாப விமோசனமா’க மறு ஆக்கம் பெற்றது போல் கோதைத் தீவில் நிகழும் நாடகம் ஒன்றில் அகலிகை வழக்கு மறு ஆய்வு செய்யப்பட்டு அவளைக் கல்லாகுமாறு சபித்த கௌதமனே குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்படுகிறது.
பெண்ணை இழிவுபடுத்தும் புராணங்கள்,  பட்டினத்தார் பாடல்கள் முதலியவை தீவில் தடை செய்யப்படுகின்றன.

பெண் தவிர்ந்த சமூகத்தின் பிற துறை மீட்டுருவாக்க முயற்சிகளும் தீவில் மேற்கொள்ளப்படுகின்றன.
மக்கள் அனைவருக்கும் ஒரே வகை வீடு,நில ஒதுக்கீடு,
கள் சாராய ஒழிப்பு,நிர்வாக சீர்திருத்தம் எனப் பல சீர்திருத்தங்கள் நாவலில் விவரிக்கப்படுகின்றன.

சமூகத் தேவைக்கேற்பவே இலக்கிய ஆக்கங்கள் உற்பத்தியாகின்றன
2010இன் இலக்கிய அளவுகோல்களைக் கொண்டும்,
இன்றைய பெண்ணியப் போக்குகளை மனதில் கொண்டும் 'கோதைத்தீவை' மதிப்பிட முயல்வது அபத்தமானது.
நாட்டடிமை பெண்ணடிமை ஆகியவை உச்ச கட்டத்தில் நிலவிய 1945இன் காலத் திரையின் பின் புலத்தில் பொருத்தி வைத்துப் பார்க்கும்போதுதான் தன் சம கால நாவலாசிரியர்களின் பிற்போக்குத் தனங்களையெல்லாம் விஞ்சி மேலெழுந்து விசுவ ரூபம் எடுத்து நிற்கும் வ.ராவின் தீர்க்கதரிசனப் பார்வை விளங்கும்.
பின் குறிப்பு;
'80 களில் இந்த நாவலத் தேடித்தேடிக் கோட்டையூர் ரோஜா முத்தையா அவர்களின் (அன்றைய)நூலகத்தில் கண்டடைந்து நாவல் முழுக்கக் குறிப்பெடுத்து வந்த நாளின் நினைவு , நெஞ்சில் பசுமையுடன் பதிந்திருக்கிறது.
இன்று அத்தகைய சிரமமான தேடலுக்குத் தேவையின்றி சென்னை செண்பகா பதிப்பகம் அதை மறு பதிப்புச்செய்திருக்கிறது.

 தன் எழுத்தாலும் சமூகக்கரிசனத்தாலும் சிரஞ்சீவித்துவம் பெற்றிருக்கும் வ.ராவின் அதிகம் படிக்கப்படாத இந்த நாவலை இதன் வடிவ அமைப்பாலும்,உள்ளடக்கப் புதுமையாலும் தமிழ் நாவல் வரலாற்றில் ஒரு மைல்கல்லாகவே கொள்ள முடியும்.
அக்கிரகாரத்தின் அதிசய மனிதர் என்று போற்றப்பட்ட வ.ராவின் அதிசயத்தை....பெரியாருக்குச் சற்றும் சளைக்காத அவரது பெண்ணியச் சிந்தனைகளை அவரது அக்கிரகாரப் பின்னணியே இருட்டடிப்புச் செய்துவிட்டது சற்று வருத்தத்திற்குரியதுதான்..

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....