துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

18.8.10

சிற்பியின் நிழல்சிங்கச் சிற்பத்தின் நிழலில் பன்றி
நன்றி; http://upload.wikimedia.org/wikipedia/commons/9/99/The_Lion_Monument_in_Luzern_23.12.2006.jpeg


கலைஞர்கள் தங்கள் கற்பனை வளத்தையும்,கலைநுட்பத் திறனையும் மட்டுமே தங்கள் படைப்புக்களில் பதிவு செய்வதில்லை.அடிநாக்கில் படிந்து கிடக்கும் கசப்புச் சுவையாக....,
பளிங்கு போல் தெளிந்த நீரின் அடியில் தங்கிப்போன வண்டலாக அவர்களின் ஆழ் மனங்களில் உறைந்து கிடக்கும் ஏக்கங்கள் ,துயரப் பெருமூச்சுகள்,ஏமாற்றங்கள்,நிராசைகள்,வன்மங்கள் ஆகியனவும் கூட விடாமல் தொடர்ந்து வரும் கரு நிழலாக -அறிந்தோ..அறியாமலோ- அவர்கள் உருவாக்கும் படைப்புக்களிலும் பதிவாகி விடுகின்றன.

சுவிட்சர்லாந்து நாட்டின் லூசர்ன் நகரில் அமைந்திருக்கும் நினைவுச் சின்னம் ஒன்றை ஐரோப்பியச் சுற்றுலாவில் கண்டபோது மேற்குறித்த கருத்து கொஞ்சம் கூடுதலான அழுத்தத்துடனேயே நெஞ்சில் உறைத்தது.

நம்மூர்க் குடைவரைச் சிற்பங்களைப் போல் மலைக்குள் குடைந்து வடிக்கப்பட்ட அற்புதமான ஒரு சிங்கச் சிற்பம் .
அந்த நினைவுச் சின்னமும் கூடச் சிங்கத்தின் பெயரால் Lion monument என்றே குறிப்பிடப்படுகிறது.


ஒரு காலத்தில் பிடரிமுடியைச் சிலிர்த்தபடி ஆக்ரோஷமாக வலம்வந்த சிங்கம் ஒன்று ,தனது உடலில் ஊடுருவிச் சென்றிருக்கும் குத்தீட்டி ஒன்றை ஏற்றபடி இறக்கும் தருவாயில் வீழ்ந்து கிடக்கிறது.சாகும் தருணத்திலும் அதன் ஒரு பாதம் சுவிஸ் நாட்டின் சின்னம் பொறிக்கப்பட்ட கவசத்தையும்,மற்றொரு பாதம் லில்லி மலர்கள் பொறிக்கப்பட்ட பிரெஞ்சு நாட்டின் கவசத்தையும் அவற்றைப் பாதுகாத்துக் கொண்டிருப்பதைப் போல அழுத்தமாகப் பற்றிக் கொண்டிருக்கிறது.

பிரெஞ்சுப் புரட்சியின்போது லூயி மன்னனையும்,அவனது அரசி மற்றும் பரிவாரங்களைக் காக்கும் முயற்சியில் உயிர்த் தியாகம் செய்த சுவிஸ்நாட்டுப் போர்வீரர்களின் நினைவாக உருவாகப்பட்டிருப்பது இச் சின்னம்.

சுவிஸ் வீரர்கள் போர்த் திறன் படைத்தவர்கள்;அத்துடன் மாறாத நாட்டுப் பற்றும் ,பணியாற்றும் இடத்தின் மீது குன்றாத விசுவாசமும் கொண்டவர்கள் என்பதைப் போற்றும் வகையில் பாறையின் மீது சில வாசகங்களும் பொறிக்கப்பட்டிருக்கின்றன.(''To the Loyalty and Bravery of the SWISS'')
[வாடிகன் நகரில் போப்பின் காவலர்களாக இப்போதும் கூட இருப்பவர்கள் சுவிஸ் வீரர்களே]

சிற்பத்துக்குக் கீழே உள்ள பாறையில் போரில் உயிர் நீத்த
(760 ),மற்றும் உயிர் பிழைத்த (350)வீரர்களின் எண்ணிக்கை கிரேக்கத்தில் குறிக்கப்பட்டிருக்கிறது.
33 அடி நீளமும் , 20 அடி உயரமும் கொண்ட இச் சின்னம் குடையப்பட்ட கற்பாறை அமைந்துள்ள மலைப் பகுதி, லூசர்ன் நகரத்தின் கட்டிடங்களுக்குப் பயன்பட்ட கல் குவாரியின் மிச்சம்.

1800 ஆம் ஆண்டின் துவக்கத்தில் டேனிஷ் சிற்பி ஒருவரால் வடிவமைக்கப்பட்ட இச் சின்னத்தின் சரித்திர முக்கியத்துவம் ஒரு புறமிருக்க...இதன் வடிவமைப்பில் காணலாகும் விசித்திரமே நம்மைப் பெரிதும் வியப்பில் ஆழ்த்தி விடுகிறது.

சிங்கத்தின் மேலுள்ள பொந்து போன்ற குடைவுப் பகுதியைச் சற்று உற்று நோக்கினால் நமக்குக் காட்சியாவது ஒரு பன்றியின் நிழல்.
‘மரத்தில் மறைந்ததது மாமத யானை’’
என்று திருமூலர் சொல்லுவதைப் போலச் சிங்கத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால் நம் கண்களுக்கு அந்தப் பன்றியின் நிழல் சட்டென்று தட்டுப்படுவது கொஞ்சம் கடினம்தான்.

சிங்கத்தையும் நினைவுச் சின்னத்தையும் சற்றே நினைவிலிருந்து ஒதுக்கி வைத்துவிட்டுக் குடைவின் மீது மட்டும் கருத்துச் செலுத்தினால் பன்றி நமக்கு தரிசனமாகும்.
(புகைப்படக் கருவி மூலம் சூம்’ செய்து பார்த்தால் உடனே அது தென்பட்டு விடும் என்று எங்கள் வழிகாட்டிஎல்லோரிடமும் ஆலோசனை கொடுத்துக் கொண்டிருந்தார்).

சிற்பம் ஒரு வகையாகவும் அதற்கு மேலுள்ள குடைவரை நிழல் வேறு மாதிரியாகவும் இருப்பது ஒருசிற்ப அதிசயம்(marvel) என்பது ஒரு புறமிருக்க....அதைப் படைத்த சிற்பியின் உளவியல் என்னவாக இருந்திருக்கக் கூடும் என்ற எண்ணமே இக் கட்டுரையின் முதல் பத்திக்கு நம்மை இட்டுச் செல்கிறது                   

தொலைவுக் காட்சியில்
நிழல் துல்லியமாகப்
புலனாகிறது

இவை இரண்டும் ஐரோப்பியச் சுற்றுலாவில்
பதிவர் எடுத்த புகைப்படங்கள்
   நினைவுச் சின்னத்தை உருவாக்கிய சிற்பிக்குச் சன்மானமாகப் பேசப்பட்ட தொகை முழுமையாக அளிக்கப்படவில்லை என்றும் அந்த வன்மத்தையே அந்த நிழலில் அவன் பதிந்து விட்டுப் போயிருக்கிறான் என்றும் உள்ளூர் வழிகாட்டிகள் ‘கதை’ விட்டாலும் ஒரு கலைஞனின் உள்ளம் அத்தனை மலினமாக யோசித்திருக்கும் என்பதை ஏற்க முடியவில்லை.

மோசமான ஒரு அரசனுக்காக.....அதன் விளைவாகவே ஓட ஓட விரட்டப்பட்ட ஒரு ராஜகுடும்பத்துக்காகத் தன் தாய் நாட்டு வீரர்கள் அநியாயமாகச் செய்திருக்கும் உயிர்த் தியாகம் அந்த நினைவுச்சின்னத்தைச் செதுக்கும் வேளையில் அவனது நெஞ்சின் அடியாழத்தில் இருந்து அவனை இயக்கியிருக்கலாம்;
சிங்கத்தின் மேன்மை இழிவான ஒரு விஷயத்துக்காகச் சிறுமைப்படுத்தப்பட்டதைச் சுட்டும் குறியீடாகவே அந்தப் பன்றியின் நிழலை அவன் பதித்திருக்க வேண்டும் என்ற எண்ணம் என் நெஞ்சுக்குள் ஓடியது.இது உண்மையாக இருக்கலாம்;அல்லாமலும் போகலாம்.
ஆனாலும் சிற்பியின் மன நிழலில் படிந்த ஏதோ ஒரு கருமையே பன்றியின் கருநிழலாகப் பதிவாகிக் காலத்தின் சாட்சியாக அங்கே காட்சி தந்து கொண்டிருக்கிறது என்பது மட்டும் நிஜம்.

ஊரிலிருந்து விலகித் தனிமையான ஒரு மலை அடிவாரத்தில்...தனக்கு முன்னால் உள்ள தடாகத்தில் தன் பிரதிபிம்பத்தை அலையவிட்டபடி இருக்கும் இந்தச் சிங்கச் சின்னம் அதன் கலையழகோடு கூடவே இனம்புரியாத சோகத்தையும் கூடவே கிளர்த்திக் கொண்டிருக்கிறது.

’சிங்கங்களின் சாவு இது போன்ற ஓசைகளற்ற தனிமையான இடங்களில் நிகழ்வதே பொருத்தமாக இருக்கிறது;சதுக்கங்களில் நாற்புறமும் வேலியிட்ட கூண்டுகளுக்குள் கிரானைட் பீடங்களின் மீது அல்ல’’
என்று அந்தச் சிலை அமைந்துள்ள அமைதி தவழும் இடத்தின் பொருத்தத்தைச் சுட்டிக் காட்டி நடுத் தெருச் சிலைகளுக்குக் குட்டு வைக்கிறார் உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் மார்க் ட்வைன்.
அவரது கூற்று எக் காலத்திற்கும் எல்லா நாடுகளுக்கும் பொருத்தமானதுதான்!                                                                      

9 கருத்துகள் :

Ramesh சொன்னது…

எந்த படைப்பாளியுமே நிச்சயம் அவ்வளவு மலிவாக யோசிக்க மாட்டான்...பன்றி என்பதை இப்போது நாம்தான் கேவலமாக நினைக்கிறோம்..அவன் அந்த சிற்பத்தை உருவாக்கிய கால கட்டத்தில் அதற்கு உயர்வான அர்த்தம் ஏதேனும் இருந்திருக்கலாம்..அருமையான் பதிவுங்க...

ஆனா நீங்க அட்டாச் பண்ணி இருக்க போட்டோ ரெண்டுமே ஓப்பன் ஆகலைங்க...

எம்.ஏ.சுசீலா சொன்னது…

அன்பின் ரமேஷ்,
உடன் கருத்துப் பதிவிட்டமைக்கு நன்றி.
நான் எடுத்த புகைப்படங்கள் பிகாசா வழி போடப்பட்டதால் தெளிவாகப் புலனாகவில்லை.இப்போது வேறு படம் எடுத்துப் போட்டிருக்கிறேன்.காண்க.
பன்றியை இழிவானது என்று நானும் கருதவில்லை.
அந்தக் கலைஞன் அப்படிக் கருதியிருப்பான் என்றும் நான் எண்ணவில்லை.
பொதுவாகப் பன்றி இழிவான இடங்களைத் தங்கள் வாழிடமாக்க் கொண்டிருப்பதால்(உணவுக்கு வளர்க்கப்படும் பன்றி விதிவிலக்கு)
இழிவின் குறியீடாக அந்தக் கலைஞன் அந்த விலங்கைக் கருதியிருக்கக் கூடும் என்பதை மட்டுமே மிகக் கவனமாக என் அனுமானமாக மட்டுமே வெளியிட்டேன்.

Ramesh சொன்னது…

உங்கள் எண்ணங்களை உங்கள் பதிவிலேயே புரிந்து கொண்டேன்...வித்தியாசமான பதிவாக இருக்கிறது உங்கள் பதிவு...படங்களும் அருமை...

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

அருமையான அலசல் சுசீலாம்மா.. நன்றி பகிர்வுக்கு..

கார்த்திகா வாசுதேவன் சொன்னது…

புதிய செய்தி...கூடவே அருமையான புகைப்பட விளக்கங்கள் என்று பதிவு படிக்க சுவாரஸ்யமாய் இருந்தது .
பகிர்வுக்கு நன்றி சுசிலாம்மா. சிற்பத்துக்கான விளக்கம் நீங்கள் கூறியபடி தான் இருந்திருக்கக் கூடும்.உலகெங்கும் தகுதியற்ற ராஜ குடும்பங்களுக்காய்ப் போரில் வீணாய்த் தங்கள் இன்னுயிரை இழந்த லட்சோப லட்சம் வீரர்களின் குறியீடாக அந்தச் சிங்கமும் ராஜகுடும்பத்தின் குறியீடாய் பன்றியும் இருந்திருக்கலாம்.பொதுவில் பன்றி இழிவான பிறவியில்லை ,ஆனால் மக்கள் மனதில் பன்றி என்றால் இழிவு என்றே பதிந்து போனபின் மாற்றுவது எளிதில்லை.

சிப்பாய்க் கலகம் வெடிக்க ஆங்கிலேயர்கள் இந்திய ராணுவ வீரர்களின் துப்பாக்கிகளில் பன்றிக் கொழுப்பை தடவி வைத்ததும் ஒரு காரணம் என்று சொன்னால் விளங்கக் கூடும்

எம்.ஏ.சுசீலா சொன்னது…

நன்றி கார்த்திகா.
சிப்பாய்க் கலகத்தைச் சுட்டிக் காட்டி இக் கருத்துக்கு மேலும் வலுச் சேர்த்தமைக்கு மிக்க நன்றி.

ஜீவி சொன்னது…

//’’சிங்கங்களின் சாவு இது போன்ற ஓசைகளற்ற தனிமையான இடங்களில் நிகழ்வதே பொருத்தமாக இருக்கிறது;சதுக்கங்களில் நாற்புறமும் வேலியிட்ட கூண்டுகளுக்குள் கிரானைட் பீடங்களின் மீது அல்ல’’//
- மார்க் ட்வைன்
ஓ! எவ்வளவு அழகான கூற்று!
பிடரி சிலிர்த்த சிம்ஹங்கள் என்றைக்குமே வீரத்திற்கு எடுத்துக் காட்டு தான்; அதற்கொப்பவான மரியாதையைத் தான் 'சிங்க ராஜா'க்களுக்கு மார்க் டவைன் செலுத்தியிருக்கிறார் போலிருக்கு!..

அந்த டேனிஷ் சிற்பி அற்புதமான கலைஞன் தான்!
'தூங்கும் அழகி' போல தூங்கும் சிம்ஹம்! அதற்கு நீங்கள் கொடுத்த 'சிற்பியின் நிழல்' கவித்துவமான தலைப்பு! வனாந்தரத்தில் வீழ்ந்து கிடக்கும் சிம்ஹத்திற்கு சிற்பி கொடுத்த நிழலாக அதைக் கொண்டேன்.

எனது சந்தேகம் வேறு விஷயம் பற்றியது. 'பன்றி' பற்றியதானது. அந்த சிற்பத்தில் அல்லது அவ்விடத்தில் பன்றி பற்றியதான ஏதேனும் குறிப்புகள் உண்டோ?.. ஓடும் மேகத்தைப் பார்த்து, அல்லது
நிலைவைப் பார்த்து நாம் கொள்ளும் விதவிதமான கற்பனைகள் போன்று, டூரிஸ்டுகளுக்காக கைடுகள் திரிக்கும் கதையோ இது?..
அப்படியான வெறும் கதையாக இது இருப்பின், மலைப்பாறையில் வீழ்ந்து கிடக்கும் சிம்ஹத்திற்கு
குடைந்து கொடுத்த நிழற் குடையே.. சிற்பி தந்த நிழலும் அதுவே!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

நடுத் தெருச் சிலைகளுக்குக் குட்டு வைக்கிறார் உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் மார்க் ட்வைன்.

ஆழமான குட்டு !!

arul சொன்னது…

this is different

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....