|
ஷிப்ரி ஆற்றங்கரையில் உஜ்ஜயினிப்பட்டணம்..... |
27/5 திங்களன்று சிவபுரியிலிருந்து உஜ்ஜயினி நோக்கிக் காலை
ஏழுமணிக்குத் தொடங்கிய எங்கள் பயணம் மாலை ஐந்து மணி வரை நீண்டு கொண்டு சென்றது. வழியில்
பெருநகரங்கள் ஒன்று கூட எதிர்ப்படாதது வியப்புத்தான்; வழியெங்கும் வறட்சியான கரிய
நிலங்கள். அவற்றில் சில உழுது போடப்பட்டவை.
மிகவும் பின்தங்கிப்போன- வெயிலின் கொடுமையால் வாடி வதங்கி
வளம் குன்றிக்கிடக்கும் அந்த மத்தியப்பிரதேச கிராமங்கள் வழியே செல்லும்போது இந்தியாவின்
ஆன்மாவை அறிய ஒரே வழி கிராமங்களை அறிவதுதான் என்ற மகாத்மாவின் வாசகமே மனதில் எழுந்தது.
வழியில் சீரான உணவு விடுதிகள் எங்குமில்லை; ’ப்ரெட்’ என்ற
பெயரைக் கூடக் கேள்விப்பட்டிராத மிகச் சிறிய கடைகளைக்கொண்டிருந்த அந்த கிராமங்களில் எந்தவகையான உணவும்
கிடைக்க வழியில்லாததால் ஒரு சிறு கிராமத்தின் குடிசைக்கு முன்பு அங்குள்ள கிணற்றில்
நீரெடுத்து நாங்கள் கொண்டு சென்றிருந்த அடுப்பை வைத்து வைத்து எளிமையான உணவு சமைத்து
உண்டோம்.தில்லி போன்ற பெருநகரத்தில் வளர்ந்து பழகிப்போன எங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு
அது வியப்பென்றால் எங்கள் வசமிருக்கும் தொலைநோக்கியும், புகைப்படக்கருவியும் எங்கள்
சமையல் சாதனங்களும் அந்த அப்பாவி மக்களுக்கு ஓர் ஆச்சரியம்… தங்கள் விளைச்சலில் உருவான காய்கறிகளை ஆசை ஆசையாய்க் கொண்டு வந்து தந்து தண்ணீர் எடுத்துக் கொடுத்து உதவிய அந்த மொழி
தெரியாத கிராமத்தாருக்கு எங்களுக்குத் தெரிந்த மொழியில் எங்கள் நன்றியைப்புலப்படுத்தியபடி அங்கிருந்து விடைபெற்றோம்.
|
மாடு கன்றுகளோடு மத்தியப்பிரதேச கிராமத்தார் |
மாலை ஐந்து மணியளவில் உஜ்ஜயினி வந்தடைந்தபோது மிகப் பழமையும்
பாரம்பரியமும் மிக்க ஒரு நகரத்தில் கால்பதித்த உணர்வில் மனதுக்குள் ஒரு சிலிர்ப்பு
ஓடியது. குவாலியர் வரை தொடர்ந்த வெயில் கொடுமை உஜ்ஜயினி வந்ததும் சற்றே குறையக் கொஞ்சம்
பசுமையும் கூட ஆங்காங்கே தலை காட்டத் தொடங்கியிருந்தது.
வெகுதூரப்பயணம் என்பதால் மாலை எங்கும் செல்லாமல் விடுதியிலேயே
ஓய்வெடுத்துக்கொண்டு மறுநாள் 28/5/ செவ்வாயன்று
உஜ்ஜயினிக்குள் வலம் வரக்கிளம்பினோம்.
அவந்தி, விஷாலி எனப்பல பெயர்களால் அறியப்படும் உஜ்ஜயினி இந்தியாவின்
மிகப்பழமையான நகரங்களில் ஒன்று என்னும் சிறப்புக்குரியது. கி மு நான்காம் நூற்றாண்டுக்கு முன்பு, கௌதம புத்தரின்
காலத்திலிருந்தே அவந்தி அரசின் தலைநகரமாக அவந்திகா என்னும்பெயருடன் வழங்கி வந்த உஜ்ஜயினி
மௌரியர்கள், சாதவாகனர்கள் ஆகியோரால் ஆளப்பட்டு குப்த வம்சத்து அரசன் விக்கிரமாதித்தன்
[இரண்டாம் சந்திர குப்தன்] காலத்தில் அவனது தலைநகராகப் பெரும்புகழ் பெற்றது. உஜ்ஜயினி
என்றதுமே நம் நினைவில் எழுவது விக்கிரமாதித்தனும் அவன் குறித்த கதைகளும்தான்.
|
உஜ்ஜயினி தெருக்களில் காட்சி தரும் விக்கிரமாதித்தன்... |
இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் உஜ்ஜயினி வட, தென்
மாநிலங்களுக்கு இடையே,விந்திய மலைக்கு ஊடானஒரு வணிக இணைப்புப் பாதையாகவும் விளங்கியிருக்கிறது.
கி பி 10,11ஆம் நூற்றாண்டுகளில் உஜ்ஜயினி கணிதம் மற்றும்
வானியல் ஆராய்ச்சியின் மையமாக விளங்கியது. பூஜ்யத்தின் சிறப்பை உலகறியச்செய்த கணித மேதைகள், மற்றும் வராகமிகிரர், பாஸ்கரர் [இவரது
பெயராலேயே பாஸ்கரா என்னும் விண்கோள்] போன்ற புகழ்பெற்ற வானியல் நிபுணர்கள் ஆகியோர் வாழ்ந்த
இந்த மண்ணில் இன்றும் கூட ஒரு சிறிய வானியல் ஆராய்ச்சி மையம் இருக்கிறது.
ஜெய்ப்பூர் மற்றும் தில்லியில் உள்ள ஜந்தர் மந்தர்
போல, சூரியனின் நிழலை வைத்துக் காலத்தைக் கணக்கிட்ட முறைகளைக்காட்டும் பல பழங்காலக்
கருவிகள் அங்கே நிறுவப்பட்டிருக்கின்றன.
தொன்மைக்காலங்களில் உலகம் முழுமைக்குமான வானியல் கணக்கீடுகள் - காலக் கணக்கீடுகள் - உஜ்ஜயினியை
உலகத்தின் நடுவாக வைத்தபடி- உஜ்ஜயினியை மையமிட்டே- நிகழ்ந்திருக்கின்றன. அதன் ஒரு
வெளிப்பாட்டையே இறைவழிபாட்டு முறையிலும் காண முடிகிறது.12 ஜோதிர்லிங்கங்களில் மூன்றாவதாகக் கருதப்படும் லிங்கம், இங்கிருக்கும் புகழ்பெற்ற மகாகாலேஸ்வர் கோயிலில் சுயம்புவாகக்காட்சி தருகிறது. இலேசான ஊதாவும் சிவப்பும் கலந்த வண்ணத்தில் பளிங்காலான அந்த லிங்கம் தரும் காட்சி தெய்வீகமும் அற்புதமும் இணைந்தது.வானியல் கணக்கீட்டு முறையில் ‘ஷங்கு யந்திரா’வுக்கு [shankuyantra,] எனப்படும் கருவிக்கு முதலிடம் உண்டு. ‘ஷங்கு யந்திரா’வின் இருப்பிடத்திலேதான் அந்த ஜோதிர்லிங்கம் நிறுவப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. அந்தக்கோயிலின் முதன்மை மூர்த்தியானசிவபெருமானுக்குவழங்கும் ’மகாகால்’ என்னும் பெயர் பிறப்பு இறப்பு ஆகிய காலங்களை நிர்ணயிக்கும் காலத்தின் தலைவனாக சிவபெருமானைக் குறிப்பிடும் வகையிலேயே அமைந்திருக்கிறது.
|
மகாகாலேஸ்வரர் கோயில் |
உஜ்ஜயினி ஒரு கோயில் நகரம். முக்தி தரும் தலங்கள் ஏழு என்று கருட புராணம் குறிப்பிடும் இந்துக்களின் புனித நகரங்களில், உஜ்ஜயினியும்ஒன்றாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது. [பிற ஆறு தலங்கள் - அயோத்தி, மதுரா [ஆக்ரா அருகிலுள்ள வட மதுரை], மாயா எனப்படும் ஹரித்துவார், காஞ்சி, துவாரகை ஆகியவை] .ஷிப்ரா நதிதீரத்தில் அமைந்திருக்கும்இங்கு நிகழும் கும்பமேளாவும்ஹரித்துவார்,அலாகாபாத் நகரங்களைப்போலவே சிறப்பு வாய்ந்தது.
அடுத்து நாங்கள் சென்றது,விக்கிரமாதித்தன் வழிபட்டதும் அவனது குலதெய்வக் கோயிலாக எண்ணப்படுவதுமான ஹர்சித்தி மந்திர் என்னும் கோயிலுக்கு. .
|
ஹர்சித்தி கோயில் |
பீடத்துக்கு அடியில் காளி, நடுவே மகாலட்சுமி, மேலே கலைமகள் என ஒரே சன்னதியில், அடுத்தடுத்த அடுக்காக முப்பெரும் தேவியரும் ஒரே நீட்சியுடன் காட்சி தருவது இக்கோயிலின் சிறப்பு. 52 சக்திபீடங்களில் ஒன்று இந்த ஆலயம்.
|
சன்னதிக்கு முன்புள்ள வளாகத்தில் இருக்கும் இரு பெரும் கல் விளக்குத் தூண்களும் வித்தியாசமான வடிவமைப்புக் கொண்டவை. இவை போன்ற தூண் அமைப்புக்களை மத்தியப்பிரதேச,மகாராஷ்டிரத்திலுள்ள வேறு சில கோயில்களிலும் காண முடிந்தது. |
உஜ்ஜயினிலிருந்து சற்றுத் தொலைவில் காட்டுப்பகுதிக்குள் ’கட் காளி’ என்னும் பத்ரகாளி கோயில் நம் ஊர்ப்பகுதிகளின் எல்லைப்புறத்தில் அமைந்திருக்கும் மாரியம்மன் கோயில்களை நினைவூட்டுவது.
அங்கிருந்து சற்றுத் தள்ளியிருந்த காலபைரவர் கோயிலில் நாட்டுச்சாராயத்தைக் கடவுளுக்குப் படையலாக்கும் வழக்கத்தை -அதுவும் கூட சுருட்டு,சாராயம் வைத்துப்படைக்கும் நம் கிராமப்பகுதிகளைப்போலத்தான் - காண முடிந்தது.
பழமையான உஜ்ஜயினி , கோயில்களும் கும்பமேளா விழாக்களும்
நிறைந்தது என்றால் மற்றொரு புறம், பல வகை அங்காடிகள் நிறைந்த இன்றைய நவீனமான உஜ்ஜயினியையும் காண முடிந்தது..பத்தீக் சாயம் தோய்க்கப்பட்ட வண்ண வண்ண ஆடைகள் கடைகள் எங்கும் நிரம்பிக்கிடந்தன.
குவாலியரில் தங்கள் ஆதிக்கத்தை நிறுவிக்கொண்டது போலவே பலப்பல ஆட்சிக்காலங்களுக்குப் பின் இங்கும் சிந்தியா அரச குடும்பத்தின் செல்வாக்கே மேலோங்கி இருந்திருக்கிறது. வயல் வெளிகள் வழியே இன்றைய உஜ்ஜயினிக்குத் திரும்பி வரும்போது அந்நிலங்களில் பலவும் நிலமற்றோர்க்கு சிந்தியா குடும்பத்தினரால் வழங்கப்பட்டவை என்றும் இன்று அவற்றின் விலை மதிப்பு மிக அதிகம் என்றும் எங்களுக்குத் துணையாக வந்திருந்த அலுவலர் ஒருவர் சொல்லிக்கொண்டே வந்தார்.
அன்று மாலை உஜ்ஜயினில் சற்று ஓய்வெடுத்தபின் விந்திய மலைக்கு ஊடாக நர்மதா நதியைப் பார்த்தபடி ஔரங்காபாத் செல்லும் எங்கள் அடுத்த பயணம் மறுநாள் 29/5/13 காலை 6 மணியளவில் தொடங்கியது.
[பயணம் தொடரும்..]