’யாதுமாகி’ நாவல் குறித்த பேராசிரியர் திரு விஜயகுமார் அவர்களின் மதிப்புரை.
[நன்றி,திரு விஜயகுமார்,& bookday.co.in]
https://bookday.co.in/prof-m-a-susila-in-yadhumagi-book-review/
’யாதுமாகி’ : பேரா.எம்.ஏ.சுசீலாவின் ஒரு நூற்றாண்டு கால பெண்களின் வாழ்வியல் மாற்றங்களைப் பேசிடும் நாவல் – பெ.விஜயகுமார்
இருபதாம் நூற்றாண்டில் பெண்கள் வாழ்வில் ஏற்பட்டுள்ள புரட்சிகரமான மாற்றங்களை சுசீலாவின் ‘யாதுமாகி’ நாவல் பதிவு செய்துள்ளது. இந்த மாற்றங்கள் ஏதோ தற்செயலாகவோ திடீரென்றோ நடந்தவையல்ல. பாரதியார், பாரதிதாசன் போன்ற கவிஞர்கள். மாதவையா, வ.ரா. போன்ற முற்போக்குச் சிந்தனையாளர்கள் தொடர்ந்து வலியுறுத்திய சீர்திருத்தக் கருத்துக்களே அவற்றிற்கான காரணம் என்பதைச் சமூகம் நன்கறியும்.
இந்த நாவலில் ஐந்து தலைமுறைப் பெண்களின் வாழ்வியல் அனுபவங்களைக் காண்கிறோம். நாவலின் நாயகி தேவி, அவரின் தந்தைவழிப் பாட்டி, தாய் அன்னம், மகள் சாரு, பேத்தி நீனா என ஐந்து தலைமுறைப் பெண்களைப் பார்க்கிறோம். நாவலின் கதாபாத்திரங்கள் வழியாக பெண்களின் சமூகவெளி படிப்படியாக, தலைமுறை தலைமுறையாகப் பரந்து விரிந்து வருவதை நாவலாசிரியர் உணர்த்துகிறார். சென்ற நூற்றாண்டுப் பெண்கள் கல்வி மறுப்பு, குழந்தைத் திருமணம், கொடூரமான விதவைக் கோலம் என்று நம்மால் நம்ப முடியாத அளவிற்கு சொல்லொண்ணாத் துயரத்திற்கு ஆளாகியிருந்த கொடுமைகளை கதாபாத்திரங்கள் வழியாக அவர் காட்சிப்படுத்துகிறார். நாவலாசிரியர் உணர்ச்சிமிகு மொழியில் சொல்லிச் செல்லும்போது கண்கள் பனிக்க கனத்த மனதுடனேயே பெண்கள் சந்தித்த அந்த அவலங்களை வாசகர்களால் கடந்திட முடியும்.
கவித்துவமான தலைப்புகளுடன் பதினைந்து அத்தியாயங்களில் நகர்ந்திடும் நாவல் நேர்கோட்டில் அல்லாமல் முன்னும் பின்னுமாக சொல்லப்பட்டுள்ளது. 1926இல் தொடங்கி 2013இல் முடிகின்ற நாவல் காரைக்குடி, மதுரை, குன்னூர், சென்னை, திருவையாறு ஆகிய இடங்களில் மையங்கொண்டு இறுதியில் ரிஷிகேசத்தில் முடிவடைகிறது.
தேவியின் இளமைக்கால வாழ்வை தேவியே தற்கூற்று முறையிலும், முதுமைக்கால வாழ்வை மகள் சாருவும் சொல்வதாக நாவலில் அமைந்துள்ளது. நாவல் முழுவதும் நிறையப் பெண்கள் தென்பட்டாலும் தேவி, அவரின் ஆருயிர் தோழி சில்வியா, பாசமிகு மகள் சாரு என மூவர் மட்டுமே பருமனான கதாபாத்திரங்களாக வலம் வருகிறார்கள். சதாசிவம் – அன்னம் தம்பதிகளின் மகளாக தேவி ஓர் ஆச்சாரமான பிராமணக் குடும்பத்தில் பிறக்கிறார். படிப்பில் ஆர்வத்துடனும், துடிப்புடனும் துள்ளித் திரியும் தேவியை ஒன்பது வயதில் திருமணம் முடித்துக் கொடுக்க அவளின் பாட்டி முடிவெடுப்பதில் தொடங்குகிறது தேவியின் துயரம். அவளுடைய தந்தை சதாசிவம் கல்லூரிப் பேராசிரியராக இருந்த போதிலும் திருமணத்தைத் தடுத்து நிறுத்த முடியாமல் நெஞ்சம் பதறுகிறார். இடியென இறங்குகிறது அடுத்த துயரம். குளிக்கச் சென்ற இடத்தில் கடலில் மூழ்கி தேவியின் கணவன் இறந்து விட தனக்கு என்ன நடக்கிறது என்பதை ஏதும் அறிந்திடாத தேவி விதவையாகிறாள். குழந்தை என்றும் பாராமல் தேவியை ’விதவையாக்கும் சடங்கை’ பெண்கள் கொடூரமாக நடத்தி முடித்ததும் குழந்தை தேவியை தன்னுடைய கையில் எடுத்து ”உனக்கு என்ன வேண்டும்” என்று சதாசிவம் கேட்டதும், “நான் படிக்க வேண்டும்” என்கிறது குழந்தை. ஒன்பது வயதில் தேவி எடுத்த உறுதியான அந்த முடிவு பி.ஏ.எல்.டி. படிப்பு முடித்து குன்னூரில் கத்தோலிக்க சிஸ்டர்கள் நடத்தும் கான்வென்ட்டில் ஆசிரியையாகச் சேர்வதில் முடிகிறது.
கடந்த கால நிகழ்வுகளைச் சொல்லும் போது வரலாற்றுப் பிழை ஏதும் இல்லாமல் (Anachronism) நாவலாசிரியர் கவனத்துடன் எழுதி வெற்றி பெறுகிறார். தேவியிடம் அன்பு பாராட்டி அவள் வளர்ச்சியில் அக்கறை காட்டும் சிலரில் சென்னை ஐஸ்ஹவுசில் குழந்தை விதவைகளுக்கென்று சிறப்புப் பள்ளியை நடத்திவந்த சகோதரி சுப்புலெட்சுமியும், சென்னை ராணி மேரி அரசு கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியை மீனாட்சியும் அடங்குவர். அவர்கள் இருவரும் கற்பனைக் கதாபாத்திரங்கள் அல்ல. தமிழ் மண்ணில் சதையும், இரத்தமுமாய் வாழ்ந்த சாதனைப் பெண்மணிகளாகும். சகோதரி ஆர்.எஸ்.சுப்புலட்சுமி இளம் வயதில் விதவையான போதிலும் 1912இல் சென்னையில் விதவைப் பெண்களுக்கான மறுவாழ்வு மையத்தை உருவாக்கி வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்கிக் கொண்டவர். பத்மஸ்ரீ விருது பெற்ற இவரின் வாழ்க்கை வரலாறு ‘A Child Widow’s Story’ என்று ஆங்கிலத்தில் மோனிகா ஃபெல்டன் என்பவரால் எழுதப்பட்டு, தமிழில் ‘சேவைக்கு ஒரு சகோதரி’ என்று பிரபல எழுத்தாளர் அநுத்தமாவால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பேராசிரியை மீனாட்சி தமிழ்ப் புனைகதை இலக்கிய முன்னோடிகளில் ஒருவரான மாதவையாவின் அன்பு மகள் என்பது சுவையூட்டும் செய்தியாகும். கதையின் நாயகி தேவியைப் போலவே குழந்தை விதவையாகி தன் தந்தையின் அளப்பரிய ஆதரவினால் படித்துப் பேராசிரியை ஆனவர் மீனாட்சி. கற்பனையில் உதிக்கும் கதாபாத்திரங்களுக்கு நிஜ மனிதர்கள் உதவிடும் விநோத உத்தியைக் கையாண்டுள்ளார் சுசீலா.
குன்னூர் கான்வென்ட் பள்ளியில் ஆசிரியைகளாக இணையும் தேவி, சில்வியா இருவரும் வாழ்நாள் முழுவதும் நட்பில் திளைக்கிறார்கள். மனித வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும் நட்பின் இலக்கணமாக இருவரையும் காண்கிறோம். இவ்விரு சிநேகிதிகளிடம் கான்வென்ட் பள்ளியின் தலைமை ஆசிரியை மதர் மரியா மிகுந்த வஞ்சனையுடன் நடந்து கொள்கிறார். ஒரு கட்டத்தில் தேவி விரக்தியின் உச்சத்தில் கன்னியாஸ்திரியாக மாற வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவிக்கும் போது அதனை அவர் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார். தேவியை மடத்தில் சேர்த்துக் கொண்டு அவளின் சேவையை கான்வென்ட்டிற்கு நிரந்தரப்படுத்தியிருக்கலாம். ஆனால் தேவியின் மீது உண்மையான அக்கறை கொண்டிருந்த மதர் மரியா அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று அவளைத் தடுத்து விடுகிறார். காரைக்குடியில் பெண் குழந்தைகளுக்கான இலவச பள்ளியை நடத்தி வரும் புரவலர் ஒருவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சிநேகிதிகள் இருவரையும் காரைக்குடிக்கு அனுப்பி வைக்கிறார். காரைக்குடி உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் தேவியின் கல்விப் பணி அளப்பரியது. எண்ணற்ற குழந்தைகளின் வாழ்வில் அவர் ஒளியேற்றுகிறார். தேவியின் படிப்புக்கு எதிராக இடையூறு செய்த அவளின் சொந்தங்கள் எல்லாம் அவள் வேலைக்குச் சேர்ந்து சம்பாதிக்கத் தொடங்கியதும் அவளிடம் பண உதவி பெறத் தயங்கவில்லை.
தேவியின் ஒன்றுவிட்ட சகோதரனும் சுதந்திரப் போராட்ட வீரனுமான கிருஷ்ணனின் காரைக்குடி வருகை தேவியின் வாழ்வில் சற்றும் எதிர்பாராத மாற்றத்தை ஏற்படுத்துகிறது. முற்போக்குச் சிந்தனைகள் கொண்ட கிருஷ்ணன் வேறொரு திசைவழியை தேவிக்கு காட்டுகிறான். குழந்தைமையை தொலைத்துவிட்ட தேவி இளமையையும் வீணாக்கிவிடக் கூடாது என்கிறான். ராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் அவனுடைய நண்பர் ஒருவர் மனைவியை இழந்து தனிமையில் இருப்பதாகவும் தேவிக்கு நல்ல வாழ்க்கைத் துணைவராக இருப்பார் என்றும் சொல்லி தேவியை சம்மதிக்க வைக்கிறார். அவருடைய எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. தம்பதிகளின் இல்லறம் இனிதே நடக்கிறது திருமணப் பரிசாக மகள் சாருவை பெற்று மகிழ்கின்றனர். ஒரு ராணுவ நடவடிக்கையின் போது காணாமல் போன அவரின் மரணச் செய்தியை ராணுவத்திலிருந்து வரும் கடிதம் தெரிவிக்கிறது. வாழ்வின் அனைத்து சோகங்களையும் தன் மனவலிமையால் சமாளித்தது போல் இந்த மரணச் செய்தியையும் பக்குவத்துடன் தேவி ஏற்றுக் கொள்கிறார்.
யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல் அனைத்து முடிவுகளையும் ஆழ்ந்து ஆலோசித்து முடிவெடுக்கும் தேவி தன் மகளுக்கான கணவனைத் தேர்ந்தெடுப்பதில் தவறிழைத்து விடுகிறார். இளைஞன் ஒருவனின் பசப்பு வார்த்தைகளைக் கேட்டு அவர் ஏமாந்து விடுகிறார். திருமணம் முடிந்து சாருவுக்கு பெண் குழந்தை நீனா பிறந்த பின்னரே அவனின் கபடம் அம்பலமாகிறது. தன் வாழ்வில் விதி விளையாடியதைப் போல் மகள் சாருவின் வாழ்விலும் விதி கொடூரமாக விளையாடியதை நினைத்து மனம் வருந்துகிறார். பாசமிகு அம்மா, அன்பு மகள் இவர்களுடன் வாழ்வைக் கழிக்கும் சாரு தன்னுடைய திருமணத்தை கெட்ட கனவாக நினைத்து மறந்து விடுகிறார். சாருவுக்கு மதுரையில் வேலை கிடைத்ததும் மூன்று தலைமுறைப் பெண்களும் அங்கே குடியேறுகிறார்கள்.
பணி ஓய்வுக்குப் பின் தேவியின் உடல்நிலை மிகவும் குன்றி விடுகிறது. சதாசிவம் – அன்னம் தம்பதிகளின் மகளாகவும், சில்வியாவுக்கு தோழியாகவும், சாருவுக்கு அன்புத் தாயாகவும், நீனாவுக்கு செல்லப் பாட்டியாகவும், முகம் அறிந்திராத பாலகனுக்கு குழந்தை மனைவியாகவும், அவனின் அகால மரணத்தால் விதவையாகவும், ராணுவ வீரரின் ஆசை மனைவியாகவும், நல்லாசிரியையாகவும், எண்ணற்ற ஏழைக் குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த தீபமாகவும் தேவி ’யாதுமாகி’ நின்றாள். சாருவுக்கு தன் தாய் தேவியின் வாழ்க்கை வரலாற்றை எழுத வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. தேவியின் மரணத்துக்குப் பின்னரே அந்த ஆசை நிறைவேறுகிறது. எண்பது வயதில் தன் ஆருயிர்த் தோழி தேவியின் நினைவுகளை மனதில் ஏற்றி வைத்து இறுதி நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கும் சில்வியா சித்தியைச் சந்தித்து தன் தாய் பற்றிய முழு விவரங்களையும் சேகரித்துக் கொண்டு சாரு அமைதி தவழும் ரிஷிகேசம் வருகிறாள். இமயமலை அடிவாரத்தில் பிரவாகம் எடுத்து ஓடும் கங்கை நதி தீரத்தில் அமர்ந்து தேவியின் வாழ்க்கைச் சரித்திரத்தை எழுதத் தொடங்குகிறார். திரும்பிப் பார்க்காமல் முன்னோக்கி மட்டுமே ஓடிக் கொண்டிருக்கிறாள் கங்கை. அதுபோன்று தேவியின் வாழ்க்கையும் முன்னோக்கி மட்டுமே ஓடிச்சென்றது தானே!
பெ.விஜயகுமார்.
[பேரா.எம்.ஏ.சுசீலா மதுரை பாத்திமா கல்லூரியில் 36 ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிவிட்டு ஓய்வுக்குப்பின் முழுநேர எழுத்தாளராகப் பயணித்து வருகிறார். அதிலும் குறிப்பாக தஸ்தயெவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’, ‘அசடன்’, ’நிலவறைக் குறிப்புகள்’ போன்ற செவ்வியல் நாவல்களை அழகு தமிழில் மொழிபெயர்த்து தமிழ் கூறும் நல்லுலகிற்குக் கொடையாக அளித்துள்ளார். தஸ்தயெவ்ஸ்கியின் தமிழ்க் குரலாகவே அவர் அறியப்படுகிறார். மொழிபெயர்ப்புத் துறையில் புரிந்துள்ள சாதனைகளுக்காக ‘கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருது’, ’நல்லி-திசை எட்டும் மொழியாக்க விருது’, ’எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக ஜி.யு.போப் விருது’ ஆகியன பெற்றுள்ளார். பெண்ணியலாளராகவும், சமூகச் செயற்பாட்டாளராகவும் விளங்கும் சுசீலாவின் சேவையைப் பாராட்டி ‘சிறந்த பெண்மணி’, ‘ஸ்த்ரீ ரத்னா’ ஆகிய விருதுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழ்ப் புனைகதை இலக்கியத்திலும் பரிணமித்து வரும் சுசீலா தில்லி தமிழ்ச் சங்கம் அளிக்கும் சுஜாதா விருதையும் பெற்றுள்ளார். ‘யாதுமாகி’, ‘தடங்கள்’ ஆகிய இரண்டு நாவல்களையும், எண்பதுகளுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ள சுசீலா தமிழ்ப் புனைவிலக்கிய உலகில் தனக்கென்று ஓரிடத்தைப் பிடித்துள்ளார். ‘கண் திறந்திட வேண்டும்’ எனும் இவரின் சிறுகதை பாலுமகேந்திராவின் ‘கதை நேரம்’ தொலைக்காட்சித் தொடரில் ‘நான் படிக்கணும்’ என்ற தலைப்பில் ஒளி வடிவம் பெற்றுள்ளது.]