துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி
மதிப்புரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மதிப்புரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

5.2.21

’தடங்கள்’ மதிப்புரை-கல்கி இதழில்..

07.02.21 கல்கி வார இதழில் வெளியாகியிருக்கும் தடங்கள் மதிப்புரை


 

20.1.21

’யாதுமாகி’ நாவல் மதிப்புரை- bookday.co.in

’யாதுமாகி’ நாவல் குறித்த பேராசிரியர் திரு விஜயகுமார் அவர்களின் மதிப்புரை.

[நன்றி,திரு விஜயகுமார்,& bookday.co.in


https://bookday.co.in/prof-m-a-susila-in-yadhumagi-book-review/

’யாதுமாகி’ : பேரா.எம்.ஏ.சுசீலாவின் ஒரு நூற்றாண்டு கால பெண்களின் வாழ்வியல் மாற்றங்களைப் பேசிடும் நாவல் – பெ.விஜயகுமார்

இருபதாம் நூற்றாண்டில் பெண்கள் வாழ்வில் ஏற்பட்டுள்ள புரட்சிகரமான மாற்றங்களை சுசீலாவின் ‘யாதுமாகி’ நாவல் பதிவு செய்துள்ளது. இந்த மாற்றங்கள் ஏதோ தற்செயலாகவோ திடீரென்றோ நடந்தவையல்ல. பாரதியார், பாரதிதாசன் போன்ற கவிஞர்கள். மாதவையா, வ.ரா. போன்ற முற்போக்குச் சிந்தனையாளர்கள் தொடர்ந்து வலியுறுத்திய சீர்திருத்தக் கருத்துக்களே அவற்றிற்கான காரணம் என்பதைச் சமூகம் நன்கறியும்.

இந்த நாவலில் ஐந்து தலைமுறைப் பெண்களின் வாழ்வியல் அனுபவங்களைக் காண்கிறோம். நாவலின் நாயகி தேவி, அவரின் தந்தைவழிப் பாட்டி, தாய் அன்னம், மகள் சாரு, பேத்தி நீனா என ஐந்து தலைமுறைப் பெண்களைப் பார்க்கிறோம். நாவலின் கதாபாத்திரங்கள் வழியாக பெண்களின் சமூகவெளி படிப்படியாக, தலைமுறை தலைமுறையாகப் பரந்து விரிந்து வருவதை நாவலாசிரியர் உணர்த்துகிறார். சென்ற நூற்றாண்டுப் பெண்கள் கல்வி மறுப்பு, குழந்தைத் திருமணம், கொடூரமான விதவைக் கோலம் என்று நம்மால் நம்ப முடியாத அளவிற்கு சொல்லொண்ணாத் துயரத்திற்கு ஆளாகியிருந்த கொடுமைகளை கதாபாத்திரங்கள் வழியாக அவர்  காட்சிப்படுத்துகிறார். நாவலாசிரியர் உணர்ச்சிமிகு மொழியில் சொல்லிச் செல்லும்போது கண்கள் பனிக்க கனத்த மனதுடனேயே பெண்கள் சந்தித்த அந்த அவலங்களை வாசகர்களால் கடந்திட முடியும்.

கவித்துவமான தலைப்புகளுடன் பதினைந்து அத்தியாயங்களில் நகர்ந்திடும் நாவல் நேர்கோட்டில் அல்லாமல் முன்னும் பின்னுமாக சொல்லப்பட்டுள்ளது. 1926இல் தொடங்கி 2013இல் முடிகின்ற நாவல் காரைக்குடி, மதுரை, குன்னூர், சென்னை, திருவையாறு ஆகிய இடங்களில் மையங்கொண்டு இறுதியில் ரிஷிகேசத்தில் முடிவடைகிறது.

தேவியின் இளமைக்கால வாழ்வை தேவியே தற்கூற்று முறையிலும், முதுமைக்கால வாழ்வை மகள் சாருவும் சொல்வதாக நாவலில் அமைந்துள்ளது. நாவல் முழுவதும் நிறையப் பெண்கள் தென்பட்டாலும் தேவி, அவரின் ஆருயிர் தோழி சில்வியா, பாசமிகு மகள் சாரு என மூவர் மட்டுமே பருமனான கதாபாத்திரங்களாக வலம் வருகிறார்கள். சதாசிவம் – அன்னம் தம்பதிகளின் மகளாக தேவி ஓர் ஆச்சாரமான பிராமணக் குடும்பத்தில் பிறக்கிறார். படிப்பில் ஆர்வத்துடனும், துடிப்புடனும் துள்ளித் திரியும் தேவியை ஒன்பது வயதில் திருமணம் முடித்துக் கொடுக்க அவளின் பாட்டி முடிவெடுப்பதில் தொடங்குகிறது தேவியின் துயரம். அவளுடைய தந்தை சதாசிவம் கல்லூரிப் பேராசிரியராக இருந்த போதிலும்  திருமணத்தைத் தடுத்து நிறுத்த முடியாமல் நெஞ்சம் பதறுகிறார். இடியென இறங்குகிறது அடுத்த துயரம். குளிக்கச் சென்ற இடத்தில் கடலில் மூழ்கி தேவியின் கணவன் இறந்து விட தனக்கு என்ன நடக்கிறது என்பதை ஏதும் அறிந்திடாத தேவி விதவையாகிறாள். குழந்தை என்றும் பாராமல் தேவியை ’விதவையாக்கும் சடங்கை’ பெண்கள் கொடூரமாக நடத்தி முடித்ததும் குழந்தை தேவியை தன்னுடைய கையில் எடுத்து ”உனக்கு என்ன வேண்டும்” என்று சதாசிவம் கேட்டதும், “நான் படிக்க வேண்டும்” என்கிறது குழந்தை. ஒன்பது வயதில் தேவி எடுத்த உறுதியான அந்த முடிவு பி.ஏ.எல்.டி. படிப்பு முடித்து குன்னூரில் கத்தோலிக்க சிஸ்டர்கள் நடத்தும் கான்வென்ட்டில் ஆசிரியையாகச் சேர்வதில் முடிகிறது.


கடந்த கால நிகழ்வுகளைச் சொல்லும் போது வரலாற்றுப் பிழை ஏதும் இல்லாமல் (Anachronism) நாவலாசிரியர் கவனத்துடன் எழுதி வெற்றி பெறுகிறார். தேவியிடம் அன்பு பாராட்டி அவள் வளர்ச்சியில் அக்கறை காட்டும் சிலரில் சென்னை ஐஸ்ஹவுசில் குழந்தை விதவைகளுக்கென்று சிறப்புப் பள்ளியை நடத்திவந்த சகோதரி சுப்புலெட்சுமியும், சென்னை ராணி மேரி அரசு கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியை மீனாட்சியும் அடங்குவர். அவர்கள் இருவரும் கற்பனைக் கதாபாத்திரங்கள் அல்ல. தமிழ் மண்ணில் சதையும், இரத்தமுமாய் வாழ்ந்த சாதனைப் பெண்மணிகளாகும். சகோதரி ஆர்.எஸ்.சுப்புலட்சுமி இளம் வயதில் விதவையான போதிலும் 1912இல் சென்னையில் விதவைப் பெண்களுக்கான மறுவாழ்வு மையத்தை உருவாக்கி வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்கிக் கொண்டவர். பத்மஸ்ரீ விருது பெற்ற இவரின் வாழ்க்கை வரலாறு ‘A Child Widow’s Story’ என்று ஆங்கிலத்தில் மோனிகா ஃபெல்டன் என்பவரால் எழுதப்பட்டு, தமிழில் ‘சேவைக்கு ஒரு சகோதரி’ என்று பிரபல எழுத்தாளர் அநுத்தமாவால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பேராசிரியை மீனாட்சி தமிழ்ப் புனைகதை இலக்கிய முன்னோடிகளில் ஒருவரான மாதவையாவின் அன்பு மகள் என்பது சுவையூட்டும் செய்தியாகும். கதையின் நாயகி தேவியைப் போலவே குழந்தை விதவையாகி தன் தந்தையின் அளப்பரிய ஆதரவினால் படித்துப் பேராசிரியை ஆனவர் மீனாட்சி. கற்பனையில் உதிக்கும் கதாபாத்திரங்களுக்கு நிஜ மனிதர்கள் உதவிடும் விநோத உத்தியைக் கையாண்டுள்ளார் சுசீலா.

குன்னூர் கான்வென்ட் பள்ளியில் ஆசிரியைகளாக இணையும் தேவி, சில்வியா இருவரும் வாழ்நாள் முழுவதும் நட்பில் திளைக்கிறார்கள். மனித வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும் நட்பின் இலக்கணமாக இருவரையும் காண்கிறோம். இவ்விரு சிநேகிதிகளிடம் கான்வென்ட் பள்ளியின் தலைமை ஆசிரியை மதர் மரியா மிகுந்த வஞ்சனையுடன் நடந்து கொள்கிறார். ஒரு கட்டத்தில் தேவி விரக்தியின் உச்சத்தில் கன்னியாஸ்திரியாக மாற வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவிக்கும் போது அதனை அவர் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்.  தேவியை மடத்தில் சேர்த்துக் கொண்டு அவளின் சேவையை கான்வென்ட்டிற்கு நிரந்தரப்படுத்தியிருக்கலாம். ஆனால் தேவியின் மீது உண்மையான அக்கறை கொண்டிருந்த மதர் மரியா  அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று அவளைத் தடுத்து விடுகிறார். காரைக்குடியில் பெண் குழந்தைகளுக்கான இலவச பள்ளியை நடத்தி வரும் புரவலர் ஒருவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சிநேகிதிகள் இருவரையும் காரைக்குடிக்கு அனுப்பி வைக்கிறார்.  காரைக்குடி உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் தேவியின் கல்விப் பணி அளப்பரியது. எண்ணற்ற குழந்தைகளின் வாழ்வில் அவர் ஒளியேற்றுகிறார். தேவியின் படிப்புக்கு எதிராக இடையூறு செய்த அவளின் சொந்தங்கள் எல்லாம் அவள் வேலைக்குச் சேர்ந்து சம்பாதிக்கத் தொடங்கியதும் அவளிடம் பண உதவி பெறத் தயங்கவில்லை.

தேவியின் ஒன்றுவிட்ட சகோதரனும் சுதந்திரப் போராட்ட வீரனுமான கிருஷ்ணனின் காரைக்குடி வருகை தேவியின் வாழ்வில் சற்றும் எதிர்பாராத மாற்றத்தை ஏற்படுத்துகிறது. முற்போக்குச் சிந்தனைகள் கொண்ட கிருஷ்ணன் வேறொரு திசைவழியை தேவிக்கு காட்டுகிறான். குழந்தைமையை தொலைத்துவிட்ட தேவி இளமையையும் வீணாக்கிவிடக் கூடாது என்கிறான். ராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் அவனுடைய நண்பர் ஒருவர் மனைவியை இழந்து தனிமையில் இருப்பதாகவும் தேவிக்கு நல்ல வாழ்க்கைத் துணைவராக இருப்பார் என்றும் சொல்லி தேவியை சம்மதிக்க வைக்கிறார். அவருடைய எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. தம்பதிகளின் இல்லறம் இனிதே நடக்கிறது திருமணப் பரிசாக மகள் சாருவை பெற்று மகிழ்கின்றனர். ஒரு ராணுவ நடவடிக்கையின் போது காணாமல் போன அவரின் மரணச் செய்தியை ராணுவத்திலிருந்து வரும் கடிதம் தெரிவிக்கிறது. வாழ்வின் அனைத்து சோகங்களையும் தன் மனவலிமையால் சமாளித்தது போல் இந்த மரணச் செய்தியையும் பக்குவத்துடன் தேவி ஏற்றுக் கொள்கிறார்.

யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல் அனைத்து முடிவுகளையும் ஆழ்ந்து ஆலோசித்து முடிவெடுக்கும் தேவி தன் மகளுக்கான கணவனைத் தேர்ந்தெடுப்பதில் தவறிழைத்து விடுகிறார். இளைஞன் ஒருவனின் பசப்பு வார்த்தைகளைக் கேட்டு அவர் ஏமாந்து விடுகிறார். திருமணம் முடிந்து சாருவுக்கு பெண் குழந்தை நீனா பிறந்த பின்னரே அவனின் கபடம் அம்பலமாகிறது. தன் வாழ்வில் விதி விளையாடியதைப் போல் மகள் சாருவின் வாழ்விலும் விதி கொடூரமாக விளையாடியதை நினைத்து மனம் வருந்துகிறார்.  பாசமிகு அம்மா, அன்பு மகள் இவர்களுடன் வாழ்வைக் கழிக்கும் சாரு தன்னுடைய திருமணத்தை கெட்ட கனவாக நினைத்து மறந்து விடுகிறார். சாருவுக்கு மதுரையில் வேலை கிடைத்ததும் மூன்று தலைமுறைப் பெண்களும் அங்கே குடியேறுகிறார்கள்.


பணி ஓய்வுக்குப் பின் தேவியின் உடல்நிலை மிகவும் குன்றி விடுகிறது. சதாசிவம் – அன்னம் தம்பதிகளின் மகளாகவும், சில்வியாவுக்கு தோழியாகவும், சாருவுக்கு அன்புத் தாயாகவும், நீனாவுக்கு செல்லப் பாட்டியாகவும், முகம் அறிந்திராத பாலகனுக்கு குழந்தை மனைவியாகவும், அவனின் அகால மரணத்தால் விதவையாகவும், ராணுவ வீரரின் ஆசை மனைவியாகவும், நல்லாசிரியையாகவும், எண்ணற்ற ஏழைக் குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த தீபமாகவும் தேவி ’யாதுமாகி’ நின்றாள்.  சாருவுக்கு தன் தாய் தேவியின் வாழ்க்கை வரலாற்றை எழுத வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. தேவியின் மரணத்துக்குப் பின்னரே அந்த ஆசை நிறைவேறுகிறது. எண்பது வயதில் தன் ஆருயிர்த் தோழி தேவியின் நினைவுகளை மனதில் ஏற்றி வைத்து இறுதி நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கும் சில்வியா சித்தியைச் சந்தித்து தன் தாய் பற்றிய முழு விவரங்களையும் சேகரித்துக் கொண்டு சாரு அமைதி தவழும் ரிஷிகேசம் வருகிறாள். இமயமலை அடிவாரத்தில் பிரவாகம் எடுத்து ஓடும் கங்கை நதி தீரத்தில் அமர்ந்து தேவியின் வாழ்க்கைச் சரித்திரத்தை எழுதத் தொடங்குகிறார். திரும்பிப் பார்க்காமல் முன்னோக்கி மட்டுமே ஓடிக் கொண்டிருக்கிறாள் கங்கை. அதுபோன்று தேவியின் வாழ்க்கையும் முன்னோக்கி மட்டுமே ஓடிச்சென்றது தானே!

பெ.விஜயகுமார்.

[பேரா.எம்.ஏ.சுசீலா மதுரை பாத்திமா கல்லூரியில் 36 ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிவிட்டு ஓய்வுக்குப்பின் முழுநேர எழுத்தாளராகப் பயணித்து வருகிறார். அதிலும் குறிப்பாக தஸ்தயெவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’, ‘அசடன்’, ’நிலவறைக் குறிப்புகள்’ போன்ற செவ்வியல் நாவல்களை அழகு தமிழில் மொழிபெயர்த்து தமிழ் கூறும் நல்லுலகிற்குக் கொடையாக அளித்துள்ளார். தஸ்தயெவ்ஸ்கியின் தமிழ்க் குரலாகவே அவர் அறியப்படுகிறார். மொழிபெயர்ப்புத் துறையில் புரிந்துள்ள சாதனைகளுக்காக ‘கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருது’, ’நல்லி-திசை எட்டும் மொழியாக்க விருது’, ’எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக ஜி.யு.போப் விருது’ ஆகியன பெற்றுள்ளார். பெண்ணியலாளராகவும், சமூகச் செயற்பாட்டாளராகவும் விளங்கும் சுசீலாவின் சேவையைப் பாராட்டி ‘சிறந்த பெண்மணி’, ‘ஸ்த்ரீ ரத்னா’ ஆகிய விருதுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழ்ப் புனைகதை இலக்கியத்திலும் பரிணமித்து வரும் சுசீலா தில்லி தமிழ்ச் சங்கம் அளிக்கும் சுஜாதா விருதையும் பெற்றுள்ளார். ‘யாதுமாகி’, ‘தடங்கள்’ ஆகிய இரண்டு நாவல்களையும், எண்பதுகளுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ள சுசீலா தமிழ்ப் புனைவிலக்கிய உலகில் தனக்கென்று ஓரிடத்தைப் பிடித்துள்ளார். ‘கண் திறந்திட வேண்டும்’ எனும் இவரின் சிறுகதை பாலுமகேந்திராவின் ‘கதை நேரம்’ தொலைக்காட்சித் தொடரில் ‘நான் படிக்கணும்’ என்ற தலைப்பில் ஒளி வடிவம் பெற்றுள்ளது.]

12.1.21

’தடங்கள்’ - ஆங்கில மதிப்புரை-Nascent signs of Feminism,Lakshmi Kannan

 இரு மொழி எழுத்தாளரான திருமதி காவேரி லட்சுமி கண்ணன் ‘தடங்கள்’ நாவலுக்கு எழுதியுள்ள மதிப்புரை.

நன்றி;The Review 

Nascent Signs of Feminism

Review Details

BOOK NAME: THADANGAL

AUTHOR NAME: M. A. Susila

BOOK YEAR: 2020

BOOK PRICE: 220.00

REVIEWER NAME: Lakshmi Kannan

VOLUME NO: 45

PUBLISHER NAME: Meenakshi Putthaga Nilayam, Madurai

BOOK PAGES: 232

Thadangal is the second novel by MA Susila who has published several collections of short  stories and critical essays. In addition, she is an acclaimed translator. Her Tamil renderings of the legendary Fyodor Dostoevsky earned her many prestigious awards. She was a former Professor of Tamil and a committed activist for women’s issues in Madurai.

Feminism as a movement continues to be indigenous, despite its pervasive impact all over the world. In Thadangal, the narrator Sindu looks back at the three decades she spent as a Professor of Tamil and an activist in a leading women’s college in Madurai. From the seventies to nearly the end of the nineties, feminism as we come to recognize it, was taking its baby steps in many parts of India towards a definable movement. It was a time that did not enjoy much institutional or legal support, nor was it equipped with a well-developed feminist vocabulary that could help women identify their problems and articulate their feelings in a way that would find an instant recognition in the eyes of the media or the general public. Given its rigid caste structure and a  conservative family set-up, even the few women in Tamil Nadu who contributed to a breakthrough in higher education, and professions, had still  to contend with the rigidity of regressive forces and social mores masquerading as ‘tradition’ and ‘custom’.

Thandangal shows this formative period in all its reality. If we see women who feel somewhat defeated by the reactionary forces, there are others whose strength lies in their pioneering spirit to voice their protest against injustice. They are women who took the first bullets as it were, for subsequent feminists to carry on from where they laid a foundation. Although the novel is grounded in the reality of the time between the seventies and the late nineties, it is not afraid to ask the right questions––why do educated women with the financial security given by their career, continue to live within abusive marriages?  Why do they allow themselves to be exploited in various ways? We see a few of them walk out to actualize their goals, but that again raises another question: can women be achievers only outside their marriage?

Not surprisingly, similar questions are raised by Professor K Nachimuthu in his Introduction to the novel. A distinguished academic who was the former Chairperson of Tamil in the School of Languages at Jawaharlal Nehru University, Delhi, he offers the point of view of a male that is worth pondering over: 1) Isn’t there a life for women without marriage and men? 2) Has education for women really contributed to feminism? Nachimuthu gives generous credit to the author Susila for her awakened consciousness that chooses a rational approach over a sentimental one to interrogate women’s issues.





26.12.19

’கவிஞனின் மனைவி’- விகடன் படிப்பறையில்...



மஹாஸ்வேதாதேவி,ஆஷாபூர்ணாதேவி,அஸ்ஸாமிய எழுத்தாளர் பிபுல் கடானியர், லியோ டால்ஸ்டாய் ஆகியோரின் சிறுகதை மொழிபெயர்ப்புக்கள் அடங்கிய என் 'கவிஞனின் மனைவி' தொகுப்புக் குறித்து ஆனந்த விகடனில் வெளிவந்திருக்கும் மதிப்புரை



18.11.19

’செஹ்மத் அழைக்கிறாள்’ -தினமணி நூல் அரங்கத்தில்

நவ 18/2019 தினமணி நூல் அரங்கத்தில் ’செஹ்மத் அழைக்கிறாள்’ பற்றி வெளியாகியிருக்கும் குறிப்பு



//செஹ்மத் அழைக்கிறாள்- ஹரீந்தர் சிக்கா; தமிழில்: எம்.ஏ. சுசீலா; பக்.239; ரூ.300;
நற்றிணை பதிப்பகம் பிரைவேட் லிமிடெட், 6/84, மல்லன் பொன்னப்பன் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600005.
புதுதில்லியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இந்தியக் கடற்படை லெஃப்டினண்ட் காமண்டர் ஹரீந்தர் சிக்கா. "செஹ்மத் அழைக்கிறாள்'
என்பது இவரது முதல் நூல்.
தேஜஸ்வரி சிங்- ஹிதாயத்கான் தம்பதிக்குப் பிறந்த ஒரே குழந்தை செஹ்மத். செல்வாக்கு மிக்க வியாபாரி, நாட்டுப்பற்று மிக்க குடிமகன், காஷ்மீரிய உளவாளி என பன்முகங்கள் கொண்டவர் ஹிதாயத் கான். ஒரு கட்டத்தில் ஹிதாயத்கான் புற்றுநோய்ப் பாதிப்புக்கு ஆளாக, அவருக்கு மாற்றாக இருக்கட்டும் என்று உளவுப் பணிக்கான பயிற்சி அவரது மகள் செஹ்மத்துக்கு அளிக்கப்படுகிறது. பயிற்சி முடிந்ததும் தந்தையின்
உளவுப் பணியைத் தொடர, பாகிஸ்தானிய ராணுவ வீரருக்கு மணமுடித்து அனுப்புகின்றனர். விசுவாசம் மிக்க முன்னாள் உளவாளியின் மகளாக, வாழ்வின் பாதியாகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டிருக்கும் ராணுவ வீரரின் மனைவியாக அவளின் வாழ்வு என்ன ஆகிறது என்பதை வெகு சுவாரஸ்யமாக விவரிக்கிறது இந்த நூல்.
1971-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் மிகுந்த ஒரு கால கட்டத்தில் உயிரைப் பணயம் வைத்து நாட்டைப் புரட்டிப் போடும் தகவல்களை மிக துணிச்சலாக கடத்தி வருகிறாள் இந்திய உளவாளி செஹ்மத். இந்த நாவல், உளவு வேலையில் ஈடுபடும் ஒரு பெண் குறித்த துப்பறியும் நாவல் மட்டுமல்ல, இந்திய- பாகிஸ்தான் போரில் முகம் தெரியாமல் போன ஒரு கதாநாயகியின் வீர வரலாறு என்றும் கூறலாம். //

20.6.19

'நிலவறைக்குறிப்புகள்' -மதிப்புரை

'நிலவறைக்குறிப்புகள்' நாவல்- மொழியாக்கம் குறித்துக் கவிஞரும் சிறுகதை எழுத்தாளருமான தேவராஜ் விட்டலனின் பதிவு
http://devarajvittalan.com/2019/06/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA/#.XQtkgIkzbMw

ஒரே வாக்கியத்தில் இந்த நவீனத்தை பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், ‘இது மனித இயல்புகளைப் பற்றிய அரிதான ஆவணம் ‘ என்றே கூற வேண்டும் – கோபிகிருஷ்ணன்
 நாவலை  படித்துவிட்டு அமைதியாய் என் அறை முன்பிருக்கும் பழமையான ஆலமரத்தின் விழுதுகளையே பார்த்துக்கொண்டிருந்தேன்; ஆலமர விழுதுகள் பூமியை அணைத்து ஒன்றாகி உட்சென்று மரத்தை கம்பீரமாக தாங்கி நிற்பது போல்.. மனித மனதை பல நிலைகளிலிருந்து உட்சென்று ஆராய்கிறார் தஸ்தயெவ்ஸ்கி ; என் மனமெங்கும் தஸ்தயெவ்ஸ்கியே நிறைந்திருந்தார்.
நான் ஒரு சிடுசிடுப்பானவன் எனக் கூறிக்கொண்டிருக்கும் போதே, ஒரு கட்டத்தில்  “ வாய்ப்பேச்சில் நான் குமுறி வெடிக்கலாம், ஆனால் யாராவது விளையாடுவதற்கு ஒரு பொம்மையை என்னிடம் தந்தாலோ, அல்லது சர்க்கரைப்போட்ட ஒரு கோப்பைத் தேநீரைப் பருகத் தந்தாலோ கூட நான் சமாதானமாகிவிடுவேன் எனக் கூறுகிறான்.
நாவலில் தனிமை நிறைந்துள்ளது. தனிமையை நேசிக்கும், அதே வேளை வெறுக்கும் ஒருவனின் உள்ளக்கிடக்கைகள் நாவலில் தெளிவாக கூறியுள்ளார் தஸ்தயெவ்ஸ்கி . நாற்பது வயதுக்கு மேல் வாழ்கிறவர்கள் முட்டாள்கள் எனக் கூறுபவன் .. சில வரிகளுக்கு அடுத்தே… நான் அறுபது வயது , எழுபது வயது வரை வாழ்வேன், வாழ்க்கை அற்புதமானது  என்கிறான்.
அவன் அழகும் உன்னதமும் நிறம்பிய அனைத்தையும் விரும்புபவனாக உள்ளான். காட்டுமிராண்டி காலத்தில் வாழ்ந்துகொண்டிருப்பதாகவும்,  பகுத்தறிவு, விஞ்ஞானம் சொல்லும் உண்மையான கருத்தோடு ஒத்துப்போக வேண்டும் என்கிறான். அபோதுதான் குற்றங்கள் செய்வதை மனிதர்கள் நிறுத்துவார்கள் என தனக்குத்தானே பேசிக்கொள்கிறான்.
நாவலின் முதல் பகுதியில் ஓர் அறையிலிருந்து கொண்டு தன் அக உணர்வின் விழிப்பினால் தானாகவே பேசிக்கொண்டிருக்கும் ஒருவன் பின் ஒரு பனிக்காலத்தில் தன் இளமைக்கால நினைவுகளை கூறத்துவங்குகிறான். தன் அலுவலக அனுபவங்கள், தன் பால்ய கால நண்பர்கள், அவர்களில் இழிவான எண்ணங்களை கொண்டிருக்கும் நண்பர்களைப் பற்றியும் பதிவு செய்கிறான்.
பல ஆண்டுகளுக்கு முந்தைய நினைவுகள் அப்போதும்  தனது வாழ்க்கையில் இருள்மண்டிதான் இருந்தது என்கிறான்.
நண்பர்களின் சகவாசம், நண்பனின் துரோகம் எல்லாம் வற்றையும் பதிவு செயகிறார் .  இழி எண்ணங்கள் கொண்ட நண்பனை எப்படியாவது கன்னத்தில் அறைந்துவிட வேண்டுமென்ற ஆக்ரோஷத்தோடு குதிரை வண்டிக்காரனிடம் சப்தமிடுகிறான்.
நிலவறையில் வாழும் அந்த மனிதன். உணவு விடுதிக்கு வந்து பார்க்கும் போது அங்கு யாரும் இல்லை, அங்கு லிசாவை பார்க்கிறான். விலை மகளாக இருக்கும் அந்த எளிய பெண்ணின் மீது கருணையும் அன்பும் கொள்கிறான். நீ ஏன் இங்கு இப்படி உள்ளை உன் வீட்டில் உன் தந்தையோடு இருக்கலாம் இல்லையா, இங்கு படும் துன்பத்தை விட அங்கு துன்பம் குறைவுதானே பெண்ணே என ஏங்குகிறான் .
துன்பத்தில் வாழும் ஒருவன், எல்லோரையும் எரிச்சல் மிகுந்த பார்வையில் பார்க்கும் ஒருவன், தனிமையை நேசிக்கும் ஒருவன் , தன்னை எல்லோரும் நேசிக்க வேண்டும் என்றும் , அதே தருணத்தில் யாரும் தன்னை நேசிக்க வேண்டாம் என்ற எண்ணங்கள் கொண்ட ஒருவன் 
எதேர்ச்சையாய் பார்த்த ஒரு பெண்ணின் அழகையும் அன்பையும் ஆராதிக்கிறான் .
அந்த பெண்ணே அவனைத் தேடி வந்து பேசும் போது அவளது அன்பை ஏற்க மறுக்கிறான். அவள் மனதை காயப்படுத்தி அனுப்பி வைக்கிறான் அவள் சென்றதும், லிசா , லிசா என அவள் பெயரைக் கூறி சப்தமிடுகிறான் .
முரண்பட்ட மனிதனின் வாழ்வின் வழியாய்..நேசிப்பையும், அன்பையும், கருணையையும் நம் மனதில் விதைகளாய் விதைத்துச் செல்கிறார் தஸ்தயேவ்ஸ்கி . நாவலை தமிழில் அற்புதமான மேம்பட்ட தமிழ் புலமையின் வழியாய், அற்புதமாக  மொழி பெயர்த்துள்ளார் எழுத்தாளர்  பேராசிரியை எம். ஏ. சுசீலா  அம்மா அவர்கள் . நேர்த்தியான வடிவமைப்பில் புத்தகத்தை பதிப்பித்திருக்கிறார்கள் நற்றிணைப் பதிப்பகத்தார்.


9.12.18

யாதுமாகி மதிப்புரை- அரும்பு இதழில்..

வாழ்க்கை வரலாற்றை நாவல் புனைவுகளாக்கும் முயற்சி தமிழில் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.அவற்றின் அண்மைக்கால - பெண்படைப்பின்- உதாரணங்களாக எழுத்தாளர் பொன்னீலனின் தாய் அழகிய நாயகி அம்மாள் எழுதிய'கவலை',வத்சலாவின்'வட்டத்துள்', சிவகாமியின்'உண்மைக்கு முன்னும் பின்னும்',முத்துமீனாளின்'முள்',பாமாவின் 'கருக்கு'என்று பலவற்றைச் சொல்லலாம்.அந்த வரிசையில் என்னோடு நெருங்கிய ஆளுமை ஒருவரின் வாழ்வைப்புனைவாக்கி 2014 இல் நான் வெளியிட்ட நாவல் 'யாதுமாகி'.இப்படைப்பு குறித்து'சங்கவை' நாவலின் ஆசிரியரும்,எழுத்தாளருமான பேராசிரியை ஜெயசாந்தி அவர்கள் எழுதியிருக்கும் விரிவும் ஆழமுமான விமரிசனக் கட்டுரை, டிச,'அரும்பு' இதழில் வெளியாகி இருக்கிறது.
இது,என் நூல் குறித்த ஆய்வு என்பதற்காக மட்டுமே நான் இங்கே இதை முன்னிறுத்தவில்லை.பொதுவாகவே ஒரு நூலை முழுமையாக உட்செரிக்காமல் மேலோட்டமாக நுனிப்புல் மேய்ந்தபடி,அதை வானளவாப் புகழ்வதுஅல்லது ஒரேயடியாய்த் தூற்றுவது என்ற இருவகைப்போக்குகளே மலிந்து வரும் இன்றைய சூழலில்,ஒரு படைப்பின் எல்லாப் பரிமாணங்களையும் ஆழமாய் உள்வாங்கி எழுதப்பட்டிருப்பதாலேயே இக் கட்டுரை முக்கியத்துவம் பெறுகிறது.அத்தகைய ஆய்வுகள் மட்டுமே ஒரு படைப்பாளியை முழுநிறைவு பெறச்செய்பவை.
கட்டுரையாளர் ஜெயசாந்தி அவர்களுக்கும் கட்டுரையை வெளியிட்டிருக்கும் ' அரும்பு' இதழுக்கும் என் நன்றி.






3.4.18

‘யாதுமாகி’-ஒரு மதிப்புரை

எம்.ஏ.சுசீலாவின் ‘யாதுமாகி’

[நன்றி- http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/28623-2015-06-04-03-13-05]



நாவலின் சுருக்கம் :
ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்த தேவி என்னும் பெண்மணியைப் பற்றிய கதை. ஒன்பது வயதில் அவரின் பால்ய விவாகம், ஒரு வருடத்திற்குள்ளே அந்த கணவரின் மரணம். அதன் பின் அவளின் தகப்பனார், பெண்ணுக்கு, தன் தாயின் பேச்சைக் கேட்டு தான் செய்துவைத்த பால்யவிவாகத்தால் மனம் வருந்தி, அவளைப் படிக்க வைக்கிறார்.
பள்ளிப்படிப்பு முடியும் தருவாயில் தகப்பனாரும் இறந்து போய்விட, வீட்டில் முடக்கப்படுகிறாள். மீண்டும் தன் தமையனின் துணையுடன் கல்லூரி படிப்பை முடித்து, ஆசிரியராய் பணியாற்றத் தொடங்குகிறார். மறுமணமும் செய்துக் கொள்கிறார் ஒரு ராணுவ அதிகாரியை. அவருக்கும் இது இரண்டாவது திருமணமே.
அவர்களுக்கு ஒரு மகள் பிறக்கிறாள். அதன் பிறகு கணவரின் மரணம், அம்மாவின் மரணம் என்று அடுத்தடுத்து. மகள் படித்து உயர்ந்து கல்லூரியில் பேராசிரியை ஆகிறார். அவளின் திருமணம் இவரைத் தாயாய் மதிக்கும் ஒருவருடன் அமைகிறது. ஆனால் அது வெளிவேஷம் எனப் புரிந்துப் போகிறது. அவன் இன்னொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தாதால், மகளின் வாழ்க்கை கேள்விக்குறி ஆகிறது.
இப்போது மகள், பேத்தி என இருவரையும் சேர்த்தே சுமக்கும் ஒரு பொறுப்பினை தாங்கி, முன்னோக்கி நகர்கிறார். இதுதான் இந்த நாவலின் அம்சம்.
சுயசரிதை நூல்கள் :
மகள் தன் தாயின் வாழ்க்கையை எழுதியிருக்கும் ஒரு சரிதை, கதை வடிவில் புனையப்பட்டுள்ளது. வாழ்ந்த காலகட்டங்களை நினைவு கூறுதல் மாதிரிபட்ட சுயசரிதை சார்ந்த புனைவுகள் அதிகம் வந்திருக்கிறது ஆங்கிலத்தில். அம்மாவுடைய oral story telling யை வாய்மொழி வழியாய் வருவதை கதைப்படுத்துதல். அப்போது, அதில் இருந்த மனிதர்கள், தேதிகள், அந்த வாழ்வியல் நிகழ்வுகள், காலகட்டங்கள், சேர்த்து தொகுத்தல்.
இப்படி ஒரு biographical கதை எழுதும் போது, எழுதுபவர்கள் ஒரு worksheet மாதிரி தயார் செய்வது வழக்கம். எந்த வருடம் என்ன நடந்தது என்ன நிகழ்வு அது அதை கதையின் களத்திற்குள் கொண்டு வருவது யாரை எதை முதன்மைப்படுத்தி கதையை கொண்டு செல்வது என்பது குறித்த ஒரு அலசல் இருக்கும். அதை இங்கும் கடைபிடித்திருக்கிறார் ஆசிரியர். 
அவர் வைத்திருக்கும் தலைப்புகள் அதைச் சொல்லி செல்கின்றன. சென்னை 1926, திருவையாறு 1935, காரைக்குடி 1948 என்பதாய் இருக்கிறது.
வகைப்படுத்துதல் :
வகைப்படுத்துதலை இரண்டு வகையாக்கியிருக்கிறார்.
ஒன்று, அத்தியாயங்களை ஆண்டுகளின் வரிசையில் வைக்காமல், அத்தியாயங்களின் தன்மையுடன் ஒருங்கிணைத்திருக்கிறார்.
இரண்டாவது, சில அத்தியாயங்கள் படர்க்கை வழக்கிலும், அதாவது அந்த தாயின் பார்வையிலும் சிலவை இந்த நாவலை எழுதியதை அமையும் மகளின் பார்வையிலுமாய் .வகைப்படுத்தியிருக்கிறார்கள்.
கட்டுப்பாடுகள் :
அடுத்ததாய், இந்த மாதிரி சுயசரிதை நாவல்களில், சில கட்டுப்பாடுகள் இருக்கும்.
அந்த காலத்தில் மகளுக்கு தன் தாயின் மீதான அனுபவம் மிக குறைவாகவே இருக்கும். நல்ல புரிதலுடன் பேசுவது மிக குறைவே. தாய் சொல்லிக் கேட்டது, தானாய் அறிந்தது மற்றும் அவர் தோழியிடம் கேட்டு தெரிந்தது என்று தொகுத்து, அதைத்தான் புனைவுப்படுத்த முடியும்.
மகளின் பார்வையில், அவள் பள்ளி இறுதி படிக்கும் போது, தன் தாய் எப்படியிருந்தார், கல்லூரி சமயம், மேற்படிப்பு சமயம், கல்லூரியில் வேலை சேர்ந்த சமயம், அவளின் பெண்ணே பெரிய பிள்ளையாகி மேற்படிப்பு செல்லும் போது என்று ஒவ்வொரு காலகட்டங்களிலும் தாயின் செயல்களை, தன்னோட பார்வையில், தன் வாழ்க்கையை தாயுடன் இணைத்து கதை உணர்வுகளுடன் மிக நேர்த்தியாக சுயசரிதை என்பதே இல்லாமல், புனைவு செய்யப்பட்டு இருக்கிறது.
கதாப்பாத்திரங்கள் :
தேவியின் அம்மா, தன் மகளின் பால்ய விவாகத்தின் போது வெறும் ஒரு மௌன சாட்சியாக இருக்கிறார். அவர்களின் திருவையாறு வீட்டின் சூழல், அந்த முப்பதுகளில் இருந்த பெண் மதிப்பீடுகள் உறவுகளை மீறாமை எல்லாமே அவளின் தாயிடம் காண முடிகிறது. 
மௌனமான பெண்மணியாக அவரை அடுத்தடுத்த காலகட்டங்களில் கொண்டு செல்கிறார். ஆனால் சிறிது முன்னேற்றத்துடன். தேவி கல்லூரி படிக்க தன் மகன் எடுக்கும் முனைப்பை ஆதரிக்கிறார் மௌனமாகவே
இதை உணரும் தேவியின் மனநிலை அவரின் இறப்பின் போது தேவியின் அழுகை மற்றும் தன் மகளிடம் ‘அவரால் முடிந்ததை அவர் செய்தார்’ என தன் தாயைப் பற்றி சொல்வதிலும் தெரிகிறது.
ஆண் கதாபாத்திரங்கள் மிக குறைவாக இருக்கிறது. அவற்றை subtle characterization என்னும் அமிழ்ந்து போன பாத்திரப் படைப்பே கொடுத்திருக்கிறார்.
முதலில் அவரின் தகப்பனார், அடுத்ததாய் இரண்டாவது கணவர், அடுத்தது அவரின் மருமகன்
தகப்பனார், தன் தாயின் பேச்சைக் கேட்டு தன் மகளுக்கு பால்ய விவாகம் செய்து வைத்துவிடுகிறார். அந்த காலகட்டத்தின் விளைவு அவர் அப்படி நடந்துக் கொள்வது. இத்தனைக்கும் அவர் கல்லூரியில் வேலை பார்க்கிறார். ராஜாராம் மோகன்ராய் போன்றோரின் கூட்டங்களுக்கு சென்றும் வருகிறார். ஆனாலும் அவரால் தன் தாயின் பேச்சை மீற முடியவில்லை. ஆசிரியர் அவர் மேல் குறையோ குற்றச்சாட்டோ வைக்கவில்லை. மருமகன் இறந்துபோன பிறகு, தன் தவறை நினைத்து வருத்தப்பட்டு அவளை படிக்க வைக்கிறார். அதனால் அந்த ஆண்மகனின் மீது நமக்கு ஒரு மரியாதையை உண்டு பண்ணுகிறார் ஆசிரியர்.
அடுத்தது அவரின் இரண்டாவது கணவர். ராணுவத்தில் வேலைப் பார்க்கிறார். ஏற்கனவே திருமணம் ஆகி மனைவியை இழந்தவர். அதிகமாக பேசியதாக காட்டவில்லை. புத்தகங்களுடனே இருக்கிறார். தன் சொந்த மகளிடமே அதிகமாய் பாசம் காட்டுவதில்லை. வந்து சாப்பிட்டுவிட்டு மாடிக்கு சென்றுவிடுகிறார். அவரின் மகளை தாய் தான் பேசு என்று அழைத்து செல்கிறார்.
அந்த பாத்திரப் படைப்பு ரொம்ப அழகா பண்ணியிருக்காங்க. அவர் குழந்தையே அவரிடம் வரும் போது எப்படா அப்பா நம்மை கீழே போய் விளையாட சொல்லுவார் என்று எதிர்ப்பார்த்து நிற்கும். கல்யாணி பாட்டி அந்த காலகட்டத்து துறை சார்ந்த பணியில் இருப்பவர்களின் கம்பீரம் அது. அதை அருமையாய் கோடிட்டுவிட்டார் இதில். அவரின் ஒரு குணம் - பெண்ணுக்கு சுதந்திரம் கொடுத்து, தேவியை வேலைக்கு போக அனுமதித்தது,  அவங்களுக்கு எந்த விதமான தொந்தரவும் செய்யாமல் ஒரு வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு சென்றது. மௌனமாய் ஒரு மனிதர் சாதனைவாதியாக தோன்றுகிறார்.,
மூன்றாவது ஒரு கதாபாத்திரம், அவரின் மருமகன். அவனை மிகவும் நம்புகிறார் முதலில், தன் பெண்ணை கட்டுவதற்கு தான் இவ்வளவும் செய்கிறான் என்பது தெரியாமல், தன்னை தாயாய் பாவிக்கிறானே என்னும் எண்ணத்தில் அவனை உதவிகள் செய்ய அனுமதிக்கிறார். மேலும் அவன் தன் மகளை திருமணம் செய்ய கேட்கும் போது தன் பெண்ணை சரி சொல்ல கேட்கிறார். மகள் மறுக்கவே, விட்டுவிடுகிறார். அதன் பிறகு திருமணமும் ஆகி, அவரையே அவன் கேவலப்படுத்தி பேசும்போது மகள் உடைந்து அவனை தன் வாழ்க்கையை விட்டு விலக்குகிறார்.
மூன்றாவதாய் காண்பித்த இந்த ஆணின் கதாபாத்திரம் ஏற்கனவே காட்டிய இருவரை விட வித்தியாசப்பட்டு, ஒரு காலத்தில் அவரை சுற்றியிருந்த fringes உறவுகளில் இருந்த ஆண்களின் கதாபாத்திரத்தை ஒத்திருக்கிறது. அப்போ வாழ்ந்த ஆண்களின் மனநிலையை தன் மரும்கனிடமும் காண்கிறார்.
சிறப்புகள்  :
எதையும் பெரிதாய் மனதிற்குள் கொண்டு செல்லாமல், தன் மகள், பேத்தி ஆகியோரை உயர்த்த முன்நோக்கியே பார்த்து வாழ்கையை கொண்டு செல்கிறார்.
அடுத்து என்னவென்று பார்க்க வைக்கிறார். இந்த கதையின் கருவே அதுதான் அடுத்ததை நோக்கி வாழ்க்கையை செலுத்துதல். பழைய நினைவுகளிலேயே தங்கிவிடாமல், அடுத்ததை நோக்கி பயணிப்பது.
அப்போதுதான் நாமும் நிமிர்ந்து நம்மை சுற்றி, நம்ம நம்பி இருப்பவர்களையும் தூக்க முடியும். நூலின் முடிவில் கூட திரும்பியே பார்க்காமல் முன்னோக்கி மட்டுமே ஓடிக் கொண்டிருக்கிறாள் கங்கை என்ற வார்த்தைகள் புது உலகத்தை காட்டும். அந்த வார்த்தைகளுக்கு இருக்கும் அழுத்தம் இந்த கதையில் நான் உணர்ந்தேன்.
யாதுமாகி, என்னும் சொல்லில் அந்த பெண்மணி இந்த கதை முழுவதும் யாதுமாகி நிற்கிறாள்.
இன்னும் ஒரு அருமையான விஷயம் புகைப்படங்கள். மிகவும் செம்மையான கோணத்தில் கதையைக் கொண்டு செல்ல உதவுகின்றன.
ஆசிரியரின் பலமே அவரின் மென்மையான எழுத்துகள்தான். எங்கும் அவர் சமூகத்தைக் குறை சொல்லவோ குற்றம் சாட்டவோ இல்லை. காலபோக்கில் நடக்கும் மேம்பாடுகளை மட்டுமே சொல்லிச் செல்கிறார் இந்த சுய சரிதையில். பெண்ணின் மனதிடம் உறுதியாக இருக்கவேண்டும் என்பதையும், எங்கும் பின்தங்காமல், தேங்கி நின்றுவிடாமல் கடமையைச் செய்து முன்னேறிக் கொண்டே செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கிறார் சுசீலம்மா.
இந்த சுயசரிதை அவரின் தாயைப் பற்றியது. இதை சுயசரிதையாக மட்டும் அளிக்காமல் புனைவுகள் அதிகம் செய்து, சமூகத்திற்கு தேவையான ஒரு உந்துசக்தியாய் படைத்துள்ளார்.
படிப்பதற்கும் பொக்கிஷபடுத்துவதற்கும் சிறந்த நூல்.


16.3.18

இருத்தலியலின் இலக்கிய முன்னோடி- நிலவறைக்குறிப்புகள்மதிப்புரை







உங்கள் நூலகம் மார்ச் 2018 இதழில் நிலவறைக்குறிப்புகள் குறித்து வெளியாகி இருக்கும் மதிப்புரை
நிலவறைக்குறிப்புகள் [Doestoevsky, F. Notes from the Underground, 1863]
[தமிழில் ;எம் ஏ.சுசீலா.
வெளியீடு; நற்றிணை பதிப்பகம்]
மதிப்புரை[உங்கள் நூலகம்-மார்ச் 2018]
இருத்தலியலின் இலக்கிய முன்னோடி
பேரா. முனைவர்.வை.காதம்பரி
தத்துவமும் இலக்கியமும் ஆதி காலம் தொட்டே பிரித்துப்பார்க்கமுடியாத சிக்கலான சவால்களாகவே இருந்து வந்துள்ளன.  தஸ்தோவ்ஸ்கியின் படைப்புக்கள் எல்லாமே இவ்வாறான சிக்கலான அமைப்பு கொண்டவையாக இருந்தாலும் 1863 இல் எழுதப்பட்டநிலவறைக்குறிப்புகள்’ [1863, Notes From The Underground] என்னும் இச்சிறு புதினம் தன் வடிவத்திலும் இச்சவாலை எதிர்கொண்டிருக்கிறது. இரு பாகங்களாகப் பகுக்கப்பட்டிருக்கும் இப்புதினம்இருத்தலியலில் [Existentialism] ஒரு இலக்கிய முன்னோடியாக  அறியப்பட்டுள்ளது. முதல் பாகம் தத்துவ விசாரமாகவும், இரண்டாம் பாகம் கதை சொல்லியின் தன்கதைச்சுருக்கமாகவும் அமைந்துள்ளது இதன் சிறப்பு..
பாகம் ஒன்று, எலிவளை போன்றதொரு நிலவறைக்குள் தன் எண்ணங்களுடன் தன்னைப் புதைத்துக்கொண்டநோயும் சிடுசிடுப்புமான - வேலையை விட்டு விட்ட, ஓரளவு சொத்துள்ள நாற்பது வயது மனிதனின் எண்ணச்சிதறல்கள்,- இருத்தலியலின் அவதி (Existentialist Angst) யை விவரிக்கும் தன்முகத்தர்க்கம் (Monologue). அறிவியலின் தாக்கத்தால் உருவானநியதிவாதத்திற்கும் [Determinism born out of scientific reasoning] “புனைவிய லுக்கும் [Romanticism] இடையேயான வாதப்பிரதிவாதங்களைத் தனிமையில் வெளிப்படுத்தும் புதினத்தின் எதிர்மறைநாயகனுக்கு [Antihero] பெயர் இல்லை. பெயர் அவசியமும் இல்லை. அவன், தான் சார்ந்த சமூகம் மற்றும் நாவலாசிரியரின் பிரதிபலிப்பு; இரண்டும் இரண்டும் நான்கு - நான்குதான்அதற்கு மேல் ஒன்றுமே இல்லை எனும் அறிவியலின்நியதி வாதத்தில் சிக்குண்டு சீரழிந்து போயிருக்கும் கற்பனாவாத சமூகத்தின் பிரதிநிதி, ‘’என் இருத்தல் என் சிந்தனைகளின் பொருட்டே [Cogito,Ergosum] என்னும்இருத்தலியல்தத்துவம், புதினத்தின் எதிர்மறைநாயகனை சீற்றம் கொண்டவனாகவும் அறிவியலால் கட்டமைக்கப்பட்ட சமூகத்தை நொறுக்கித் தள்ள வேண்டும் எனும் ஆத்திரம் கொண்டவனாகவும் காட்டுகிறது.
நிலவறை மனிதன் உண்மையில் ஆங்கிலக்கவி பைரனின் மான்ஃப்ரெட்டைப் [Manfred] போலக் கற்பனாவாதி; அறிவியலுக்கு உட்பட்ட சமூகசிந்தனையிலும்  அகப்பட்டுக்கொண்டவன். ஆகவே சமதளமற்ற – 1. உண்மையான [Real] புறந்தள்ள இயலாத நியதிகள் கொண்ட உலகம், 2. ஏற்றதான [Ideal] -அதாவது அழகும் உன்னதமுமான கற்பனைக்கெட்டா உலகம் என்ற இரண்டு உலகங்கள் உரசும் இடத்தில் மனிதனின் சிந்தனைகள் எவ்வாறு இருக்கலாம் என்பதை சித்தரிக்கும் புதினமாக இதை ஏற்றுக்கொள்ளலாம்.
நமக்குப் பைத்தியக்காரத்தனமாகத் தோன்றும் ஒவ்வொரு வாக்கியமும் உலகம் முழுமையுள்ள சிந்தனாவாதிகளால் சிலாகித்துப் பேசப்படுவது என்பது நினைவுகூரத்தக்கது. மொத்தத்தில் தஸ்தோவ்ஸ்கியின் எதிர்மறைநாயகன் வசிக்கும் இருட்டு நிலவறை , தன் மாறுபட்ட சிந்தனைகளில் சிக்கித் தவிக்கும் மனிதர்களையும், சமூகத்தையும் அடையாளம் காட்டும் ஓர் உருவகம். தஸ்தோவ்ஸ்கியின் எழுத்துக்கள்நவீன இயலுக்கு [Modernism] முன்னோடியாகும். எழுத்து என்பது நேரியல்’ [Linear] முறையில் இருக்க வேண்டும் என்னும் விதியைப் புறந்தள்ளும் இப்புதினத்தைசுய ஓட்டத்தின் [Stream Of Consciousness] முன்னோடியாகக் கொள்ளலாம்.
ஈரப்பனிப்பொழிவின் பொருட்டுஎன்னும் இரண்டாம் பாகம், இருபது வருடங்கள் பின்னோக்கிச்சென்று நாயகனை புத்தகங்கள் வாசிப்பவனாக, கற்பனாவாதியாக, அரசு அலுவலகம் ஒன்றில் சாதாரணவேலை பார்க்கும், எவராலும் ஏறெடுத்துப் பார்க்கப்படாத, சீண்டப்படாத இளைஞனாக சித்தரிக்கிறது. இவ்விளைஞனுக்குத் தான் கவனிக்கப்படவேண்டும், கேட்கப்பட வேண்டும் என்ற அவாவும் வேட்கையும் மிகுதியாகவே இருக்கிறது. இராணுவ உயர் அதிகாரியால் அலட்சியப்படுத்துவதை ஏற்காத அவன் உள்ளம், ஏதோ ஒரு விதத்தில்இலக்கியம், தத்துவம் மற்றும் ஒற்றையர் சண்டை [Duel] யின் மூலம் தான் அங்கீகரிக்கப்பட வேண்டும் என விழைகிறது. தன் நண்பர்களாலும் ஏற்கப்படவேண்டும் எனும் அவா நிறைவேறாத நிலையில் தான் சந்திக்க நேரும் லிசா என்னும் விலைமாதுவின்பால் பரிவு கொண்டு தன்னுடன் அழைக்கிறான். ஆனாலும் அவள் அவனிடம் வந்து சேரும்போது விரட்டி விடுகிறான்.
இப்புதினம்நான்கு தளங்களில் இயங்குகிறது. முதலாவதாக - நிலவறை நாயகன், உயர்ந்த, சமநிலையான [சமமான], தாழ்ந்த என்ற மூன்றுவிதமான உலகங்களில் வாழ்கிறான். அறிவியலின் நியதிவாதத்தால் இரண்டும் இரண்டும் நான்கு என்று கட்டமைக்கப்பட்ட உலகம் வெளிப்பார்வைக்கு ஒன்றுபோல் இருந்தாலும் எஜமான் வேலையாள் எனும் பாகுபாடு இதனூடே ஒவ்வொரு விஷயத்திலும் இருப்பது திண்ணம். ஒருவர் அவமானப்படுத்துவதும் மற்றவர் காழ்ப்புணர்ச்சி கொள்வதும் சமமற்ற நிலையிலேயே. இராணுவக் கனவானுக்கு  நிலவறை மனிதன் பொருட்டல்ல; நிலவறை மனிதன் ஸ்வெர்கோவ் மற்றும் நண்பர்களால் புறக்கணிக்கப்படுகிறான்; தன் வேலையாள் அப்போலானாலும் புறக்கணிக்கப்படுகிறான்;  நிலவறை மனிதன் அப்போலோனுக்கு சம்பளத்தைக் கொடுக்காமல் இழுத்தடித்து அவமானப்படுத்துகிறான்; லிசாவை உதாசீனப்படுத்துகிறான். ஆக, சமமின்மை போகும் வரை சமநிலை சாத்தியம் அல்ல [Equality cannot be established without getting rid of inequality] எனும் கோட்பாடு நிலைநிறுத்தப்படுகிறது
இரண்டாவதாக புதினத்தின் பின்புலமாக இருக்கும் புற அறிவுக்குட்பட்ட அப்போலோனியன் மற்றும் அக அறிவுக் குறியீடான டயானிசியன் [Appollonian and Dyonisian] எனும் கிரேக்க வாழ்வியல் கோட்பாடுகள்.
மூன்றாவதாக தஸ்தோவ்ஸ்கி, தன்னுடைய ஒரு பேட்டியில் கூறியுள்ளது போல, ‘’தணிக்கை செய்யப்பட்ட பக்கங்களுடன் சேர்த்து வாசித்தோமானால்இருத்தலியலியலின் மறுபக்கமான இறைநம்பிக்கையின் இன்றியமையாத் தன்மையை அறிய முடியும். “நிலவறை நரகத்துக்கு ஒழியட்டும் [பாகம் 1, அத் 11]
சே! இப்போது கூட நான் பொய்தான் சொல்லிக்கொண்டிருக்கிறேன் பாருங்கள். நிலவறைக்குள் மற்றும் பதுங்கி வாழும் வாழ்வு அவ்வளவு நல்லதில்லை என்பதும் அதிலிருந்து மாறுபட்டமிகவும் வித்தியாசமான வேறு ஏதோ ஒன்றைத் தேடி அதைக்கண்டடைய முடியாமல்தான் நான் தவித்துக்கொண்டிருக்கிறேன் என்பதும் எனக்கு நன்றாகத் தெரியும். [பாகம்-2]
நிலவறை மனிதனின் மேற்கூறியசொற்களில் ‘’நிலவறை நரகத்துக்கு ஒழியட்டும் [To Hell With The Mouse Hole] எனும் சொற்றொடர் ‘’நான் ஒரு நோயாளி என்பதுடன் பொருத்திப்பார்க்கப்பட்டுத் திரும்பத் திரும்ப மறு வாசிப்புக்கு உட்படுத்தப்பட்ட ஒன்றாகும்.
தஸ்தோவ்ஸ்கியை - குறிப்பாக அவரது Grand Inquisitor எனப்படும்பெரும்புலன் விசாரணை அதிகாரியை வாசித்தவருக்கு ’‘எலிவளை நரகத்திற்கு ஒழியட்டும் என்னும் சொற்றொடர், அறிவியல் மோகத்தின் வெளிப்பாடான பொருளாதார சிந்தனைகளால் இருளில் மூழ்கியிருக்கும் மனிதனது ஆன்மா ,நம்பிக்கை எனும் வெளிச்சத்தால் இலகுவாக்கப்பட வேண்டும் என்பது புரியும். மேற்கூறிய இதுவே.
 நான்காவதாக இப்புதினம் ஒரு ஒப்புதல் பாணியில் [Confessional mode] எழுதப்பட்டுள்ளது என்பதையும் விளக்கும். புனிதர் அகஸ்டின் [St Augustine’s Confessions] தொடங்கி, ஒப்புதல்கள் மனித மனதின் இருட்டு மூலைகளை- எலிவளைகளை ஆராய்வதாகவே இருந்து வந்துள்ளன. இம் மரபின் நீட்சியே இப்புதினம்.
இருபதாம் நூற்றாண்டின் சிந்தனையைக் கூர்படுத்தி செம்மைப்படுத்தியதில் தஸ்தோவ்ஸ்கியின் பங்கு பெரிது என்றால் மொழிபெயர்ப்பாளர் எம்..சுசீலா இலக்கிய உலகிற்கு அளித்திருக்கும் இக்கொடை மிகப்பெரிது. தஸ்தோவ்ஸ்கி எனும் மலைப்புத் தரும் இலக்கிய மேதைமையைத் தெளிவானநடையில் தொய்வு இல்லாமல், சரியானபுரிதலுடன், தேர்ந்தெடுத்த பொருத்தமான சொற்களில் மொழியாக்கம் செய்வதென்பது ஒரு சாதனை. ருஷ்ய மொழியிலிருந்து ஆங்கில மொழியாக்கம் செய்வதற்குக் குறைந்தது 100 வருடங்கள் பிடித்திருந்த இந்நூல் [முதல் ஆங்கில மொழியாக்கம் -1968], வெகு சீக்கிரத்திலேயே தமிழ் வாசகர்களை வந்தடைந்திருக்கிறது. அதுவும் ஒரு வருடகாலத்தில். நூலாசிரியரின் கனமான சிந்தனைகளை வெளிப்படுத்துவதற்காக கூடியவரை நேரடிமொழிபெயர்ப்பு என்ற வகையைக் கையாண்டு எளிய நடையில் மொழிமாற்றம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. எளிய அடிக்குறிப்புகள் மொழிபெயர்ப்புக்கு வலுச்சேர்க்கின்றன. மொத்தத்தில் மலைப்பைத் தரும் இம்மொழியாக்கம், ’அசடன்மொழியாக்கத்துக்காக மூன்று விருதுகள் பெற்றிருக்கும் சுசீலாவுக்கு மேலும் விருதுகளைப் பெற்றுத் தரலாம்.
என்னுடைய இருபதுகளில் இருத்தலியல் குறித்த என் தேடுதலில் எனக்குப் பொக்கிஷம் போலக்கிடைத்தநிலவறைக்குறிப்புக ளை- ஆங்கில மொழியாக்கத்தில் நான் படித்த தரம் மற்றும் சுவை குறையாமல் என் தமிழில் நான் வாசிக்க உதவி புரிந்த சுசீலாவிற்கு என் நெஞ்சார்ந்த நன்றி. குறைந்தது மூன்று ஆங்கில மொழியாக்கங்களை ஒப்புநோக்கி செய்யப்பட்டிருக்கும் இம்மொழியாக்கம் பன்முகத்தன்மை கொண்ட எம்..சுசீலாவின் எழுத்தாற்றலுக்கு ஒரு சிறந்த சான்றாகும்.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....