துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி
யாதுமாகி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யாதுமாகி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

29.5.20

யாதுமாகி-ஒரு வாசகப்பார்வை

யாதுமாகி - எம்.ஏ.சுசீலா
டி என் ரஞ்சித் குமாரின் முகநூல் பதிவிலிருந்து..
"Marriage can wait, education cannot... A society has no chance of success if its women are uneducated..."
~A Thousand Splendid Suns~Khaled Hosseini.
ஒரு புத்தகத்தை வாசித்து முடித்து அதைப் பற்றி எழுத சிறிது அவகாசம் எடுத்துக் கொள்ளும் போது வாசிப்பின் போது உணர்ந்திராத அதன் நீள அகல ஆழங்களை கண்டு கொள்ள முடிகிறது. சில சமயங்களில் வாசிப்பனுபவத்தை சொந்த அனுபவங்களில் அறிந்தவற்றோடு பொருத்திக் கொள்ள மனதிற்கு அளிக்கும் கனவுநிலைத் துயில் தான் அந்த இடைவெளி. சில படைப்புகளை வாசித்த உடன் அதுபற்றிய அனுபவங்களைப் பகிர்வதை, குறிப்பிட்ட அந்தப் படைப்பின் மைய இழையோடு சம்பத்தப்பட்ட ஓர் தருணப்பொறி சிமிட்டல் புத்தகத்திற்கு வெளியிலிருந்து அகப்படும் வரை ஒத்திப்போடுவது என் வழக்கமாகிப் போனது. அந்தந் தருணப்பொறி சிமிட்டலிலிருந்து நூல் பிடித்து வாசிப்பனுபவ நினைவுக்குள் பின்னகர்கையில் நூலின் கதையடக்கத்தின் தோற்றமும் காட்சிக் கோணங்களும் வேறு பல கற்பிதங்களையும் கேள்விகளையும் மனதுக்குள் விதைப்பதை உணர முடிகிறது.
அதன்படி மூன்று நாட்களுக்கு முன்பாகவே நிறைவு செய்யப்பட்ட எம்.ஏ.சுசீலா அம்மாவின் யாதுமாகி புத்தகம் பற்றி இன்று பகிர்ந்து கொள்ளத் தூண்டியது சமீபத்தில், கண் முன்னால் வந்து விழுந்த A Thousand Splendid Suns நாவலில் இடம்பெறும் மேலே குறிப்பிடப்பட்ட வாசகமே.
தஸ்தயேவ்ஸ்கியின் பல பெரும்படைப்புகளை தமிழுக்கு கொண்டு வந்து சேர்ந்த பெருமைக்குரியவராக பரவலாக நன்கு அறியப்பட்ட சுசீலா அம்மா அவர்களின் சொந்தப் படைப்பே யாதுமாகி என்னும் இந்நூல்.
கதையின் மையக்கதாபாத்திரம் தேவி. 1930 களில் பள்ளி கல்லூரி நாட்களான தேவியின் இளம்பருவமும், 1960 இல் அவரது பள்ளியின் தலைமையாசிரியராக இருந்து வந்த போதான அவரது முதுமைப் பருவமும் அத்யாயத்திற்கு அத்யாயம் முன்னும் பின்னும் சென்று கதை சொல்லப்படுகிறது.
கல்வி மறுக்கப்படும் பெண்ணினத்தில் பிறந்து குழந்தைமை அகலாத வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்ட தேவியின் அந்த முகமறியாத கணவன் ஒரு விபத்தில் இறந்து போய்விட திருமணம் பற்றியோ கணவன் பந்தம் பற்றியோ பருவ ரீதியாக ஏதும் புரிந்திராத அவள் துளியும் கலங்காமல் இருக்கிறாள். பின் வரும் காலம் முழுவதும் கணவனை இழந்தவளாக உறவுகளால் பாவிக்கப்பட இருக்கும் சூழ்நிலை பற்றிய கவலையின்றி அதேசமயம் தன்னால் இனி சுதந்திரமாக கல்வி கற்க இயலும் என்ற சந்தர்ப்பம் வாய்க்கப்பெற்றதை எண்ணி மகிழ்ச்சியடைகிறாள்.
கணவனின் பேச்சுக்கு மறுபேச்சு பேசும் தைரியம் இல்லாத அன்னம் தேவியின் தாய், கல்வியறிவு அற்றவள். சிறுவயதிலேயே மகளின் புத்திக்கூர்மையை மெச்சும் தேவியின் தந்தை சாம்பசிவம் சொந்தங்களின் முதுகுக்குப் பின்புறம் பேசும் அவதூறுகளைப் பொருட்படுத்தாத முற்போக்குச் சிந்தனை உடையவர். தேவியின் கல்வி கற்கும் விருப்பத்திற்கு ஆதார ஊன்றுகோலாக இருக்கிறார் சாம்பசிவம். தேவு கல்லூரிப் படிப்பிலிருக்கும் சமயம் சாம்பசிவம் இறந்து விட அன்னம் மற்றும் தேவியின் வாழ்க்கை முதல் மீளமுடியாத இக்கட்டுக்குள் அகப்படுகிறது. எதிர்கொண்டே ஆகவேண்டிய தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களுக்குத் தகுந்தவாறு நெகிழ்ந்து கொடுத்தும் அதேசமயம் எண்ணத்தில் உள்ளூர உறுதியாகவும் இருக்கும் தாய் அன்னம் தேவியை அவள் தன் சொந்தக் காலில் வேரூன்றி நிற்கும் வரை உறுதுணையாக இருக்கிறாள்.
உடன்பிறப்புகள் கூட பிரதிபலன் எதிர்பார்த்து தேவியின் கல்வியறிவைப் பயன்படுத்திக் கொள்ள இருக்கும் நிலையில், காந்திய வழியில் செல்லும் சகோதாரனால் சொந்தங்களின் கசப்பான முணுமுணுப்புகளையும் மீறி மறு திருமணம் செய்து வைக்கப்படுகிறாள் தேவி. இராணுவத்தில் பணியாற்றி வரும் கணவனுடனான வாழ்க்கையும் நெடுநாள் நீடிப்பதில்லை. கணவன் திரும்பி வராத நிலையிலும் மகளுக்காக தன் உணர்ச்சியையும் கையறு நிலையையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் நம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர் கொள்கிறாள்.
தனிமை விரும்பியான தேவிக்கு இந்த உலகில் இருக்கும் ஆறுதல்கள் இளவயதில் கற்றலின் மீதிருக்கும் தீராத ஆவலும், விதவிதமான பூக்களை ரசிப்பதும், முதுமையில், குழந்தைகளோடு நேரத்தை செலவிடுதலும், கல்வி கற்றலுக்கான வாய்ப்புகள் தடைபட்டு போனவர்களுக்கு உதவுவதும் மட்டுமே. பள்ளியில் தலைமையாசிரியையாக இருந்து வரும் தேவி பள்ளியில் எவ்வளவு கண்டிப்பானவரோ வீட்டில் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடும் நேரங்களில் அதற்கு நேர்மாறாக இளகிய மனமும் தாய்மையின் வாஞ்சைக் குணமும் கொண்டவர்.
கதை முழுவதும் தேவியின் ஒரே மகளான சாரு வின் மூலமாக சொல்லப்படுகிறது. தேவியின் அம்மா அன்னம், தேவி, சாரு, சாரு வின் மகள் நீனா என்று நான்கு அடுத்தடுத்த தலைமுறைப் பெண்களின் வாழ்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை மையச்சரடாகக் இணைத்துச் செல்கிறது தேவியின் வாழ்க்கைப் பதிவுகள். சாரு வின் நிகழ்கால நினைவுகளின் வழியாக தேவியின் கடந்த காலமும், கடந்த காலத்தின் பாதிப்புகளாக நிகழ் கால முரண் மாற்றங்களும் ஒன்றை ஒன்று தொட்டு இணைந்து முழு வடிவான வாழ்க்கைச் சித்திரம் உருவாகிறது.
கதையில் வரும் இன்னொரு முக்கியமான கதாபாத்திரம் தேவியுடன் விடுதியில் தங்கிப் படிக்கும் சில்வியா. சில்வியா மற்றும் தேவிக்கு இடையே உருவாகும் நட்பு கதையின் வலுவுக்கு ஆதாரமாக இருக்கிறது, குறிப்பாக தன் சொந்த வாழ்க்கை பற்றி தேவி பெரிதாக யாரிடமும் அவ்வளவாக பகிர்ந்து கொள்ளாத போது கதையச் சொல்லும் அவளது மகளான சாரு வுக்கு தன் அம்மாவின் சிநேகிதியான சில்வியாவிடமிருந்தே அவர்களின் இளவயது நாட்களின் அனுபவங்களைக் கேட்டறிய முடிகிறது. முதுமையில் தேவியின் உடல் நிலை எதிர்கொள்ளும் பகுதியில் அடிக்கடி முதுகு வலி வருவதாக சொல்லும் என் அம்மாவின் வலி எப்படிப்பட்ட வேதனையைத் தரக்கூடியதாக இருந்திருக்கும் என்று புரிய வைத்து என்னைத் துவண்டுப் போகச் செய்தது.
தன் தாயை மையக்கதாபாத்திரமாக்கி, அவர் தன் அர்த்தம் செறிந்த வாழ்க்கையின் அடுத்தடுத்த நிலைகளில் எதிர்கொண்ட இடர்களையும், துணிச்சலாக அதேசமயம் எள்ளளவும் எவருக்கும் இடையூறின்றி அவற்றைக் கடந்து வந்த நிகழ்வுகளை பதிவு செய்யும் நோக்கிலும், தனக்கு மட்டுமல்லாமல் தன் அண்டை மனிதர்களிடேயும் பாரபட்சமின்றி ஒரு அன்னையைப் போல உள்ளார்ந்த பரிவுடனும் கண்டிப்பான அக்கறையுடனும் வாழ்க்கையைக் கடந்து வந்து பலரின் வாழ்க்கையில் நம்பிக்கை ஒளி ஏற்றச் செய்ததற்கு நன்றிக்கடனாகவும் இந்நாவலைப் படைத்துள்ளார் சுசீலா அம்மா. பெண் கதாபாத்திரங்களில் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் விருப்பமானவர்கள் சிங்கிஸ் ஐத்மாத்தவின் கதைகளில் வரும் பெண்கள் தான். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் எதிர்கொள்ளும் சோதனைகளை ஆரவாரமற்ற நிதானத்துடனும் எதிர்காலம் மீதான நம்பிக்கையுடனும் பக்குவமாக ஒவ்வொரு செயலையும் தீர்க்கமாக முடிவெடுத்து செயல்படுபவர்கள் அவர்கள். கதைகளில் மட்டுமே அதுபோன்ற அம்சங்கள் பொருந்தியதாக இருக்கக்கூடும் என்று நினைத்திருந்த வெற்றிடம் (அல்லது யதார்த்தத்தில் இன்னும் கண்டு கொள்ளாத) யாதுமாகி தேவியின் மூலம் பூர்த்தி செய்யப்பட்டதை உணர முடிகிறது.

9.12.18

யாதுமாகி மதிப்புரை- அரும்பு இதழில்..

வாழ்க்கை வரலாற்றை நாவல் புனைவுகளாக்கும் முயற்சி தமிழில் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.அவற்றின் அண்மைக்கால - பெண்படைப்பின்- உதாரணங்களாக எழுத்தாளர் பொன்னீலனின் தாய் அழகிய நாயகி அம்மாள் எழுதிய'கவலை',வத்சலாவின்'வட்டத்துள்', சிவகாமியின்'உண்மைக்கு முன்னும் பின்னும்',முத்துமீனாளின்'முள்',பாமாவின் 'கருக்கு'என்று பலவற்றைச் சொல்லலாம்.அந்த வரிசையில் என்னோடு நெருங்கிய ஆளுமை ஒருவரின் வாழ்வைப்புனைவாக்கி 2014 இல் நான் வெளியிட்ட நாவல் 'யாதுமாகி'.இப்படைப்பு குறித்து'சங்கவை' நாவலின் ஆசிரியரும்,எழுத்தாளருமான பேராசிரியை ஜெயசாந்தி அவர்கள் எழுதியிருக்கும் விரிவும் ஆழமுமான விமரிசனக் கட்டுரை, டிச,'அரும்பு' இதழில் வெளியாகி இருக்கிறது.
இது,என் நூல் குறித்த ஆய்வு என்பதற்காக மட்டுமே நான் இங்கே இதை முன்னிறுத்தவில்லை.பொதுவாகவே ஒரு நூலை முழுமையாக உட்செரிக்காமல் மேலோட்டமாக நுனிப்புல் மேய்ந்தபடி,அதை வானளவாப் புகழ்வதுஅல்லது ஒரேயடியாய்த் தூற்றுவது என்ற இருவகைப்போக்குகளே மலிந்து வரும் இன்றைய சூழலில்,ஒரு படைப்பின் எல்லாப் பரிமாணங்களையும் ஆழமாய் உள்வாங்கி எழுதப்பட்டிருப்பதாலேயே இக் கட்டுரை முக்கியத்துவம் பெறுகிறது.அத்தகைய ஆய்வுகள் மட்டுமே ஒரு படைப்பாளியை முழுநிறைவு பெறச்செய்பவை.
கட்டுரையாளர் ஜெயசாந்தி அவர்களுக்கும் கட்டுரையை வெளியிட்டிருக்கும் ' அரும்பு' இதழுக்கும் என் நன்றி.






25.1.17

'வாழ்க்கையை எழுதுதல்'-உரை




மானுட வாழ்க்கை,  வாழ்க்கைச் சரித்திரங்களாகவும் தன் வரலாறுகளாகவும் நாட்குறிப்புக்கள் மற்றும் நினைவுக்குறிப்புக்களாகவும் தன் வரலாற்று நாவலாகவும்  பல வடிவங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அவற்றைத் தொகுத்து நோக்கும் முயற்சியாக சென்னையிலுள்ள எம் ஜி ஆர் - ஜானகி கலை அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத் துறை சார்பில் ’வாழ்க்கையை எழுதுதல்’[ LIFE WRITING] என்னும் பொருளில் தேசியக் கருத்தரங்கு ஒன்று ஜன 6ஆம் நாளன்று  நிகழ்ந்தது.

என் ‘யாதுமாகி’ நாவல், வாழ்க்கை வரலாறு ஒன்றைப்  புனைவுப்பாணியில்  தருவது என்பதால்,அந்தக் கருத்தரங்கில் அது சார்ந்த என் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள  நானும் ஒரு சிறப்புச் சொற்பொழிவாளராக அழைக்கப்பட்டிருந்தேன்.



தமிழில் எழுதப்பட்டிருக்கும்  வாழ்க்கை வரலாறுகள் தன் வரலாறுகள் தன் வரலாற்று நாவல்கள் ஆகியவை பற்றிக் குறிப்பிட்ட பிறகு ஒரு ஆளுமையின் தனிப்பட்ட வாழ்வை ஒரு  புனைவிலக்கியமாக மாற்றுவதில் அதை ஒரு  நாவல் வடிவத்துக்குக் கொண்டு வருவதில் நான் எதிர் கொண்ட சிக்கல்கள்,மனத் தடைகள், புனைவுக்காகத் தேர்ந்து கொண்ட உத்திகள் ஆகியவை குறித்து நான் உரையாற்றினேன்.








கருத்தரங்கின் பார்வையாளர்களாகக் கலந்து கொண்ட  மாணவியர், பேராசிரியர்கள், பிற அழைப்பாளர்கள்  ஆகியோர் ஆங்கிலக்கருத்தரங்கு ஒன்றில் நான் ஆற்றிய தமிழ்ச்சொற்பொழிவுக்குத் தந்த வரவேற்பும் அன்பான ஆர்வம் கலந்த எதிர்வினைகளும் எனக்கு மகிழ்ச்சியூட்டியதோடு,. உரை முடிந்த பிறகு தனிப்பட்ட முறையில்  பல மாணவியர்என்னிடம்  வினாக்களை எழுப்பியதும், ஆலோசனைகள் பெற்றதும்...என்னிடம் கையெழுத்தும் வாழ்த்தும் வேண்டியதும் வளரும் தலைமுறை மீதான நம்பிக்கையையும் என்னுள் தழைக்கச்செய்தன. எளிமையும் இனிமையும் நிறைந்தவர்களாய் அன்று என்னுடன் பழகிய கல்லூரிச் செயலர், முதல்வர் , துறைத் தலைவர், சக பேராசிரியர்கள் ஆகியோர் காட்டிய  அன்பு என்றென்றும் மறக்க முடியாத சித்திரமாய் என்னுள் பதிந்திருக்கும்.




மீண்டும் ஒரு கல்லூரிச் சூழலும் இளம் மாணவியரின் அண்மையும் என் பேராசிரியப்பணிநாட்களை மீட்டெடுக்க அதில் சுகமாய் உலவி விட்டு வந்தது போன்ற பிரமை..!!

19.6.16

ஒற்றையடித் தடத்தின் பாதங்கள் -யாதுமாகி

ஒற்றையடித் தடத்தின் பாதங்கள் 
யாதுமாகி புத்தகப்பார்வை
ராஜகோபாலன் ஜா,


ஒரு படைப்பினை உருவாக்கும் காரணிகள் எவை என்ற கேள்விக்கான விடை முடிவற்ற சாத்தியங்களைக் கொண்ட விவாதத்தை உருவாக்கும். ஆனால், எது ஒரு உருவாக்கத்தை படைப்பாக மாற்றுகிறது என்பதைக் கூர்ந்து  அவதானித்து விடலாம் என்றுதான் நினைக்கிறேன். "யாதுமாகி" தேவி - உள்ளபடியே மனதில் நிறைந்துவிட்டிருக்கிறார் . வாசிக்குந்தோறும் தனது பாட்டியை, தாயை, சகோதரிகளை எண்ணாமல் எவராலும் புத்தகத்தை மூடிவிட இயலாது. நேரடியாகப் பார்த்து உடன் வளர்ந்த விதத்தால் இந்தக் கதைசொல்லிக்குக் கிடைத்திருக்கும் ஒரு கதைப்போக்கு படைப்புக்கு வலுவூட்டுகிறது. தான் கடந்து வந்த வாழ்க்கையின் மொத்தத்தையும் முழுப்பார்வையாக பார்க்க முடிந்தவனின் லௌகீக விவேகம் அவனது வார்த்தைகளுக்கு மந்திரம் போன்ற கனத்தைக் கூட்ட முடியும். அப்படி ஒரு வாழ்க்கையை விளக்கிய விதத்தில் "யாதுமாகி" தன்னை ஒரு படைப்பாக நிறுவிக் கொள்கிறது


இன்று வரை அறிவில் உயர்ந்த சமூகம் என்ற கருதுகோளை விடாப்பிடியாக கையில் வைத்திருக்கும் ஒரு சாதியில்தான் பெண்களுக்கு அவ்வளவு கொடுமைகள் நடந்தன. உடல் ரீதியிலான வன்முறை என்பதை விடக் கொடிய ஒன்று பிராமண சாதியின் விதவை பெண்களுக்கு சுமத்தப்பட்டிருந்தது. எந்த பிராமணப் பெண்ணும் தனது சுயம் அறிந்து ஒழுகுவது என்பது அனுமதிக்கப்பட்டதேயில்லை. சுயம் அறிவது என்பதே பாபமான ஒரு கருத்தாக அச்சமூகப் பெண்களின் மீது சுமத்தப்பட்டிருந்தது. அதிலும் வைதவ்ய கோலம் பூண்டவர்களுக்கோ வாழும் நாள் ஒவ்வொன்றும் நரகம் என்றே எண்ணத்தக்க அளவு மனதின் சிறகுகள் முறிக்கப்பட்டிருந்தன . இவை எதுவும் வெகு காலத்திற்கு முன்பு நடந்த வரலாறுகள் அல்ல. கடந்த 75, 100 வருட காலங்களில் நடைமுறையில் இருந்த , இன்றும் அதன் சாட்சிகள் மிச்சமிருக்கின்ற ஒரு சமகால நிகழ்வுதான்

ஆனால் , கடந்த 75 ஆண்டுகளில் இந்த நிலை மாற்றம் அடைந்த விதத்தை தாண்டுதல் என்று சொல்வதைக் காட்டிலும் பெரும் பாய்ச்சல் என்றுதான் சொல்லவேண்டும். பூச்சியத்திலிருந்து 360 பாகைக்குத் திரும்பும் வேகத்தில் இன்றைய மாற்றம் சாத்தியமாகி இருக்கிறது. கடந்த தலைமுறையில் பிறந்தவர்களுக்கு விதவைக் கோல கொடுமைகள் அசோகரின் ஆட்சியைப் போன்ற ஒரு வரலாற்று சம்பவம் மட்டுமே.  மாற்றத்திற்கான கருவியாக ஒரு பாதிக்கப்பட்ட சமூகம் எவற்றைக் கைக்கொள்கிறது என்பது மிக முக்கியமான ஒன்று. மாற்றத்தின் விளைவுகளைப் பொறுத்தவரையில் அக்காரணிகள் இன்னும் அதிக முக்கியத்துவம் கொள்கின்றன. இந்த விதத்தில் பிராமண பெண் சமூகம் தனது மாற்றத்துக்கான கருவியாகக் கைக்கொண்டது கல்வியை. கூண்டு திறக்கப்பட்ட சிறுத்தையின் வேகத்தில் அந்தச் சமூகப் பெண்கள் படிப்பு என்பதைப் பற்றிக்கொண்டார்கள்.  அவர்கள் மேல் சுமத்தப்பட்டிருந்த அனைத்துத் தளைகளையும் அவர்கள் கல்வியால், அது தரும் வாய்ப்புகளால் அகற்றும் விதத்தை இன்றுவரை காணமுடியும்

இந்தப்  பாய்ச்சலின் நீளம் அளவுக்கே ஆழமானது இதை சாத்தியமாகத் துணிந்த முதல் தலைமுறை பெண்களின் போராட்டங்களும் , அவற்றுக்குத் துணை நின்றவர்களின் மன உறுதியும்.  இந்திய அளவில் 1800களின் இறுதியில் இந்த மாற்றத்தை ஒலித்த அறியப்பட்ட குரலாக விவேகானந்தர்ராஜா  ராம் மோகன்ராய் , ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் ஆகியோரைக் காண்கிறோம். தமிழக அளவில் இந்தக் குரலை எதிரொலித்தவர்கள் பாரதியும், .மாதவையாவும். ஆனால் இதை சாத்தியப்படுத்தத்  துணிந்த பெண்களின் நிலை பெருமளவில் பேசப்படவில்லை என்றுதான் சொல்லவேண்டும். சகோதரி சுப்புலட்சுமி குறித்து நாம் குறைவாகவே அறிந்திருக்கிறோம். மாதவையாவின் மகள் மீனாட்சி குறித்து இன்னும் குறைவாகவே தெரியும்

அறியப்படாத அந்த முன்னோடிகளை நமக்கு இந்தப் படைப்பு அறிமுகம் செய்வதோடு மட்டுமன்றி அவர்களை நமக்கு மிக நெருக்கமானவர்களாக , மதிப்பிற்குரியவர்களாக நெருங்கச் செய்கிறது . இப்படி வட்டத்திற்கு வெளியே வந்து நின்று போராடிய பெண்மணிகள் இவர்கள் என்றால் வட்டத்திற்கு உள்ளேயே நின்று போராடிய பெண்களை எவரும் அறியவே இயலாது. படைப்பில் வரும் அன்னம்மா அவ்வாறான அனைத்துப் பெண்களின் ஒரே வடிவம். கணவன் இறந்து, சொத்துகளை பிறர் வசம் தந்துவிட்டு , அவரிடமே பணம் வாங்கா கூலியாக உழைத்து, தனது குழந்தைகளின் அடிப்படை தேவைகளைக் கூட கேட்கக் கூசி நிற்கும் அன்னம்மாதான் தனது பால்ய விவாக பெண்ணின் படிப்புக்கு தன்னால் இயன்ற, தனக்குத் தெரிந்த ஒவ்வொரு வழியிலும் முயன்றுகொண்டே இருக்கிறாள். "கம்மனாட்டி படிச்சு கலெக்டராகப் போறாளா ?" எனும் கேள்விக்கு பூமியின் பொறுமையுடன் ஆனால் பாறையின் உறுதியுடன் பணிந்து பதில் பேசுகிறாள். அவளது போராட்டம் , அதன் முறைகள் வேறானவைசகோதரி.சுப்புலட்சுமி, மீனாட்சி போன்றோர் வரலாற்றில் எவ்வளவு உண்மையோ அந்த அளவு உண்மை பேரறியா அன்னம்மாக்களும்.  சகோதரி.சுப்புலட்சுமி, மீனாட்சி ஆகியோரைப் பேசிய அதே விதத்தில் அன்னம்மாவையும் பேசி இப்போராட்டத்தில் அன்னம்மாக்களின் பங்கினையும் படைப்பு நமக்குக் காட்டுகிறது

மாற்றத்தை மனதளவில் ஏற்றுக்கொண்டாலும் இரு வேறு புள்ளிகளில் நிற்க வேண்டிய நிர்பந்தத்தில் எந்தப் புள்ளியை சார்ந்து முடிவெடுப்பது என்ற சிக்கல் இந்த காலக்கட்டத்தில் சில ஆண்களுக்குரியவை. கூட்டத்தில் தனித்து விடப்பட்ட அவர்கள் , தம் குடும்பத்தின் பொருட்டு அக்கூட்டத்தை சார்ந்தும் இருக்க  வேண்டியவர்கள். மாற்றத்தை மறைமுகமாக ஊக்குவிக்கும் அவர்களது இடமும் தேவியின் தந்தை உருவில் நமக்குக் காட்டப்படுகிறது. கல்வியே மாற்றத்திற்கான கருவி என்பதை சதாசிவம் தனது மகளுக்கு தினமும் சைக்கிளில் வந்து கற்றுத் தரும் இடத்தில் நம்மால் உணரமுடிகிறது


காலமாற்றம் கதையின் போக்கில் முன், பின்னாக நகர்ந்து வருவதை சரியாகக் காட்சிப்படுத்தியிருந்தாலும்  அவற்றுக்கு இடையே இருக்கும் ஒரு தொடர் இழை வெகு பூடகமாக இருக்கிறது. வெறும் தற்புகழ்ச்சி  சுயசரிதையாக முடிந்து போய்விடும் சாத்தியங்கள் கொண்ட கதை இது. ஆனால், சராசரி மானுட உணர்வுகள் கொண்ட பெண்ணாகவே தேவி சித்தரிக்கப்பட்டிருப்பதும், உணர்வு ரீதியிலான அவரது  குழப்பங்கள் சொல்லப்பட்டிருப்பதும் படைப்பினை நம்பகத்தன்மை மிக்க ஒன்றாக மாற்றுகிறது

நாவலின் மையமாகிய தேவி சமுதாயக் கட்டுப்பாடு எனும் விலங்கிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு வானத்தில் உயரப் பறந்தவரில்லை. ஆனால் இன்று மிக இயல்பான ஒன்றாக இருக்கும் ஒன்றைச் சாத்தியப்படுத்த அவர் சந்திக்க நேர்ந்த சவால்கள் , தடைகள் ஆகியவை நாம் அவதானிக்க வேண்டியவை. படைப்பு இந்த இடங்களை இன்னும் அழுத்தமாகக் காட்டவில்லை என்று உணர்கிறேன். லேசாகக் கோடிட்டுக் காட்டுவதோடு அவ்வாறான  இடங்களைப் படைப்பு கடந்து சென்று விடுகிறது.  தேவியின் மனஓட்டம் , அகக் குமுறல்கள், அவற்றை தேவி சிந்திக்கும் விதம் போன்ற எவையும் படைப்பில் வெளிப்படுத்தப்படவில்லை. படைப்பில் பேசப்பட்ட  தேவியின் செயல்களின் வழியே மட்டுமே நாம் அவரது கருத்துகளை யோசிக்க முடிகிறது. காட்சிப்படுத்தப்பட வேண்டிய இடங்களை படைப்பு தாவிக் கடந்து சென்று விடுகிறது அல்லது ஒரு உரையாடல் வழியே குறிப்புணர்த்தி நகர்கிறது. துணைப் பாத்திரங்களின் இடம் சற்று குறுக்கப்பட்டு விட்டதோ என்ற எண்ணத்தைத் தவிர்க்க முடியவில்லை.   தேவியின் சாதனை அளவுக்கே உணர்த்தப்பட்டிருக்க வேண்டிய அவரது ராணுவத் துறை கணவர், அவர் தேவியை ஏற்றுக் கொண்ட விதம்,  படைப்பில் ஒரு புகை படிந்த சித்திரமாய், மாயக் கனவுக் காட்சியாய் மின்னி மறைந்து விடுகிறது. ஒருவேளை, படைப்பின் மையமான தேவியிலிருந்து விலகி விடுவோமோ என்று எழுத்தாளர் ஐயம் கொண்டிருக்கலாம் போலும். தேவி தன்னை உருவாக்கிக்கொண்ட விதத்தை விட , அவர் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட விதத்தையே "யாதுமாகி" பேசுவதாக நினைக்கிறேன்


இருப்பினும்,  இத்தகைய விடுபடல்களை படைப்பின் வடிவமைப்பும், செய்நேர்த்தியும் ஈடுசெய்கின்றன. படைப்பின் இடையே தரப்பட்டிருக்கும் உண்மையான ஒளிப்படங்கள் , தேவி மற்றும் துணைப் பாத்திரங்களின் உண்மை உருவங்கள், அவை காட்டும் சூழல் ஆகியன படைப்பு சொல்லாமல் விலகிச் சென்ற இடங்களை நமக்கு உணர்த்தி விடுகின்றன. இந்த வடிவமைப்பை படைப்பிற்கு கொண்டுவந்த வம்சி பதிப்பகத்தார் பாராட்டுக்குரியவர்கள்

ஒரு தலைமுறை மாற்றம் என்பது பட்டுப் புழு கூடு உரிப்பது போல எத்தனை வலிந்த பிரயாசைகளைக்  கொண்டிருக்கிறது. ஒற்றையடிப்பாதையை உருவாக்கியவன்தான் தார்சாலை இட்டவனை விடவும் பாராட்டப்பட வேண்டியவன் இல்லையா? ஆனால், ஒற்றையடிப் பாதையை முதலில் கண்டறிந்து உருவாக்கியவன் எவனும் கல்வெட்டு வைத்துக்கொள்ளவில்லை. ஏதுமற்ற பரந்த பூமியில் அவன் உருவாக்கியதை காலம் விரிவாக்குகிறது. இன்றைய சாலைகள் அனைத்துமே பேரறியா  ஒருவன் என்றோ உருவாக்கிய ஒற்றையடித் தடம்தானே .  தேவி தனது காலத்திற்குப் பின்பு வாழும் வஞ்சிக்கப்பட்ட பெண்களுக்கான ஒற்றையடிப்பாதையை  உருவாக்கியவர்.  ஒற்றையடிப்பாதைகளை  உருவாக்கிய  எல்லோரையும் போல தேவியும் தான் காலத்தால் முன்னகர்ந்து போவதை, ஏதுமற்ற வெளியில் பாதை கட்டுவதை தன்னியல்பாகத்தான் செய்கிறார். அதில் பெருமிதங்கள் ஏதுமற்ற தன்னியல்பான கடமை உணர்வில்தான் அவர் இருக்கிறார். படைப்பு அதை சரியாகக் காட்டியிருப்பதாகவே எண்ணுகிறேன்


சாலைகளுக்குத்தான் போக்குவரத்து விதிமுறைகளும், காவலர்களும். ஒற்றையடிப் பாதைக்கு முள்ளும், விஷ ஜந்துக்களும், பேய்கள், கள்வர்கள்  குறித்த அச்சங்களும் தான்.  ஆனால் ஒற்றையடிப்பாதை மீதுதானே இன்றைய சாலைகள் அனைத்தும்.  அவ்விதத்தில் ஒற்றையடிப்பாதையை உருவாக்கி நடக்கத் துணிந்த "யாதுமாகி" தேவி வாசித்து நினைவுகூரப்படவேண்டியவரே..

யாதுமாகி, எம்.ஏ. சுசீலா,
வம்சி பதிப்பகம்,
இணையத்தில் வாங்க - நூல் உலகம்உடுமலை

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....