வாழ்க்கை வரலாற்றை நாவல் புனைவுகளாக்கும் முயற்சி தமிழில் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.அவற்றின் அண்மைக்கால - பெண்படைப்பின்- உதாரணங்களாக எழுத்தாளர் பொன்னீலனின் தாய் அழகிய நாயகி அம்மாள் எழுதிய'கவலை',வத்சலாவின்'வட்டத்துள்', சிவகாமியின்'உண்மைக்கு முன்னும் பின்னும்',முத்துமீனாளின்'முள்',பாமாவின் 'கருக்கு'என்று பலவற்றைச் சொல்லலாம்.அந்த வரிசையில் என்னோடு நெருங்கிய ஆளுமை ஒருவரின் வாழ்வைப்புனைவாக்கி 2014 இல் நான் வெளியிட்ட நாவல் 'யாதுமாகி'.இப்படைப்பு குறித்து'சங்கவை' நாவலின் ஆசிரியரும்,எழுத்தாளருமான பேராசிரியை ஜெயசாந்தி அவர்கள் எழுதியிருக்கும் விரிவும் ஆழமுமான விமரிசனக் கட்டுரை, டிச,'அரும்பு' இதழில் வெளியாகி இருக்கிறது.
இது,என் நூல் குறித்த ஆய்வு என்பதற்காக மட்டுமே நான் இங்கே இதை முன்னிறுத்தவில்லை.பொதுவாகவே ஒரு நூலை முழுமையாக உட்செரிக்காமல் மேலோட்டமாக நுனிப்புல் மேய்ந்தபடி,அதை வானளவாப் புகழ்வதுஅல்லது ஒரேயடியாய்த் தூற்றுவது என்ற இருவகைப்போக்குகளே மலிந்து வரும் இன்றைய சூழலில்,ஒரு படைப்பின் எல்லாப் பரிமாணங்களையும் ஆழமாய் உள்வாங்கி எழுதப்பட்டிருப்பதாலேயே இக் கட்டுரை முக்கியத்துவம் பெறுகிறது.அத்தகைய ஆய்வுகள் மட்டுமே ஒரு படைப்பாளியை முழுநிறைவு பெறச்செய்பவை.
கட்டுரையாளர் ஜெயசாந்தி அவர்களுக்கும் கட்டுரையை வெளியிட்டிருக்கும் ' அரும்பு' இதழுக்கும் என் நன்றி.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக