இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் நீளும் தொல் பாரம்பரியமும், வேறுபட்ட இலக்கிய வகைமாதிரிகள் பலவற்றை உள்ளடக்கிய விரிவும் ஆழமும் கொண்டிருக்கும் தமிழ் இலக்கியப்பரப்பு - தன் நெடிய வரலாற்றில் இலியட் , ஒடிஸி போன்ற மகாகாவியங்களோடும் மகத்தான பிற உலக இலக்கியங்களோடும் நிகர் வைக்கும் தகுதி கொண்ட , காலம் கலைக்காத ஆக்கங்கள் பலவற்றை அளித்து வந்திருக்கிறது. சங்கப்பாடல்களின் நுண்சித்தரிப்புக்கள்…, குறுகத் தரித்த குறளறங்கள், சிலம்பின் கதைக்கட்டுமானம், கம்பகாவியத்தின் சொல்லாட்சி வளம்,பாரதியின் பாட்டுத் திறம் போன்றவை அதற்கான சில சாட்சியங்கள். கனவாய் நிலைத்துப்போன அந்தப் பழம்பெருமைகளில் மட்டுமே பெருமிதம் கொண்டு இளைப்பாறி வந்த தமிழர்கள் ,சமகால நவீனத் தமிழுக்கும் ஓர் விசுவரூபம் உண்டு என்று கண்டுகொள்ளும் காலம் இப்போது வாய்த்திருக்கிறது.
அந்த தரிசனத்தை சாத்தியப்படுத்தியிருப்பது…., சொல்லழகும் , அடர்த்தியான பொருள் செறிவும் கொழிக்கும் மொழியாய் சமகாலத் தமிழுக்குப் புத்தெழுச்சி ஊட்டி 2014- புத்தாண்டின் முதல்நாள் தொடங்கி மகாபாரதத்தின் மறுஆக்கமாக எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிவரும் வெண்முரசு .
பத்து வருடங்கள்……., ஒவ்வொன்றும் ஐந்நூறு பக்கங்களுக்கு மேல் நீளும் முப்பது நாவல்கள்……கிட்டத்தட்ட 25,000 பக்கங்கள் என்ற பிரம்மாண்டமான முன் திட்டத்துடன் ஒரு படைப்பாளி தன் படைப்பைத் தொடங்கியிருப்பதும்……..ஒன்பதுமாத காலத்துக்குள் அந்த வரிசையின் முதல் மூன்று பகுதிகளை [ முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல் என] நிறைவு செய்து காட்டியதோடு பாரதத்தின் சூத்திரதாரி போலச்செயல்படும் கண்ணனை வைத்தே பித்தேற்றும் கவிதைக் காவியமாய் ‘நீலம்’ என்றொரு துணை நாவல் படைத்திருப்பதும் தமிழுக்கு மட்டுமல்ல… உலகமொழி இலக்கியங்களுக்கே புதிதானதும் முன்னோடியானதுமான ஒரு மகத்தான சாதனை. இந்நூல் வரிசை எழுதி முடிக்கப்படும்போது இதுவே உலகின் பேரிலக்கியங்களில் முதலிடம் பெறும் என்பதை எண்ணுகையில் இதன் தொடர் வாசகர்களுக்கு ஏற்படும் பரவசச்சிலிர்ப்பு சொல்லுக்கடங்காதது.
வெண்முரசு தொடரின் ஒவ்வொரு நாவல் பகுதியும் ஜெயமோகனின் இணைய தளத்தில் தினந்தோறும் வெளிவரும்போது குறைந்தபட்சம் ஐம்பதாயிரம் வாசகர்கள் அதை வாசிக்கிறார்கள் என்பதோடு அந்த வாசிப்பின் மீதான மேலதிக செய்திகளைப் பெறும் ஆர்வத்தோடு அவரிடம் தங்கள் ஐயங்களையும் முன் வைத்து உரையாடுகிறார்கள்; விவாதிக்கிறார்கள்,விளக்கம் பெறுகிறார்கள். என்பதும் அந்த விவாதங்களுக்காகவே ’ ’வெண்முரசு விவாதங்கள்’ என்ற தனித் தளம் தொடங்கப்பட்டிருப்பதும் - இவையெல்லாம் கூடத் தமிழுக்குப் புது வரவுதான்.
இந்திய இதிகாசங்களில் இராமாயணத்தைக்காட்டிலும் விரிவான கதைப்பரப்பைக் கொண்டிருக்கும் மகாபாரதம் , இராமாயணம் போல அடுத்தடுத்துத் தொடுக்கப்பட்டிருக்கும் ஆற்றொழுக்கான நிகழ்வுகளால் கட்டமைக்கப்பட்டதில்லை; திருகலான திருப்பங்கள், சிக்கலான உள்மடிப்புக்கள் , எண்ணிக்கையில் அடங்காத கிளைக்கதைகள் ஆகியவற்றை அதுமிகுதியாகக் கொண்டிருக்கிறது, செவ்வியல் இலக்கியங்களாகவும் , நாட்டார்கதைப்பாடல்களாகவும் , நிகழ்த்துகலை வடிவங்களாகவும் , சமயத் தளங்களில் காலட்சேபங்களாகவும், திரைப்படங்கள்,தொலைக்காட்சித் தொடர்களாகவும் – குடும்பங்களில் மூத்தோர் சொல்லும் வாய்வழிக்கதைகளாகவும் கணக்கற்ற உருவங்கள் எடுத்து வந்திருப்பதிலும் முதலிடம் பெறுவது மகாபாரதமே. மக்கள் வழக்கில் மிகுதியாகப் பழக்கத்திலுள்ளதும் இந்தியர்களின் வாழ்வியலோடு பிரிக்க இயலாதபடி பின்னிப்பிணைந்து போனதுமான ஒரு பழங்கதையை- கதைகளின் கருவூலமான ஒரு இதிகாசத்தை இன்றைய நவீன வாசக மனநிலைக்கு ஏற்றதாகப் புத்தாக்கம் செய்து கடத்தும் இமாலய முயற்சியே ஜெயமோகனின் வெண்முரசு.
மதம் சார்ந்த வாசிப்பு, அல்லது மதத்தின் பெயராலேயே கண்டனம்-நிராகரிப்பு ஆகியவை மட்டுமே மகாபாரதத்தின் மீது பெரும்பாலும் முன் வைக்கப்பட்டு வந்த வாசிப்புக்கள் என்பதால் நவீன இலக்கிய வாசிப்புக்கு ஏற்றதாக அதில் எதுவுமில்லை என்ற தவறான புரிதலே சமகாலத் தலைமுறையினர் மகாபாரதத்தை அணுகுவதற்கு நிலவிய பெரும் தடை. முன் அனுமானத்துடனும் முன் முடிவுடனும் கூடிய அந்தக்கண்ணோட்டங்கள் எந்த அளவு பிழையானவை என்பதை உணரும் வகையில் வியாசபாரதத்தை ஒரு பண்பாட்டு ஆவணமாக மட்டுமே கொண்டு நவீன நாவலுக்கேற்ற சமகால உத்திகளைக் கையாண்டபடி வெண்முரசை எழுதி வருகிறார் ஜெயமோகன்.பாரதக்கதையை மட்டுமே வெண்முரசு நாவலுக்குரிய மூலப்பொருளாகக் கொள்ளாமல் இந்திய மரபிலுள்ள அனைத்துத் தொன்மங்களையும் தொன்மக்கதைகளையும் – பாகவதம்,தேவி பாகவதம் உட்பட- கதைப்போக்கின் சரட்டில் இணைத்துத் தருவதால் பாரதநாட்டில் வழக்கிலிருப்பவையும் வழக்கிறந்து போனவையுமான ஒட்டுமொத்தக் கதைகளின் சாரமனைத்தையும் ஒருசேர அறிந்து கொள்ளும் வாய்ப்பை வாசகனுக்குத் தருகிறது வெண்முரசு.. மகாபாரதத்தில் ஞானம் தேடி அலைக்கழிவு படுவோரின் துடிப்பும் உண்டு; சாமானியர்களின் உணர்ச்சிக்கொந்தளிப்புக்களும் மோதல்களுக்கும் கூட அதில் சம இடம் உண்டு. அரசியல் சூழ்ச்சிகளும் வஞ்சகசூதுகளும் அறத்தின் மாட்சியும் அகத்தின் நிலையழிவுகளும் குமுறி வரும் அத்தகைய நாடகத் தருணங்கள் வெண்முரசு வாசிப்பின்போது வாசக மனக்காட்சியாக விரிவடைந்து கொண்டே செல்கின்றன.
பாரதம் ஆட்சியில் இருப்பவர்களின் கதை மட்டுமல்ல. அம்பை,விதுரர்,துரோணர்,கர்ணன்,ஏகலைவன் என ஒடுக்கப்பட்டு வஞ்சிக்கப்பட்டவர்களின் கதையும் கூடத்தான். வியாசனின் மூலக்கதையை மாற்றாமல் அத்தகையோரின் நிலைப்பாட்டை- அவர்களுக்கு அத்தகைய அநீதி இழைக்கப்பட்டதற்கான பின்புலத்தை இலக்கிய அழகியலோடு இப்படைப்பு விளக்க முனைகிறது.
மரபை மறுஆக்கம் செய்கையில் மூலத்தின் ஒத்திசைவுக்கு ஏற்ப அதிலுள்ள இடைவெளிகளைக் கற்பனைப் புனைவுகளால் நிரப்புவது படைப்பாளிக்கு வாய்த்திருக்கும் சுதந்திரம்; வியாச மகாபாரத்திலோ பிற பாரதக்கதைகளிலோ அதிகம் வளர்த்தெடுக்கப்படாத சந்தனுவின் மகன் விசித்திர வீரியனின் பாத்திரத்தை நேசத்துக்குரியதாக்குவதில் தொடங்கி - வழக்கிலுள்ள மகாபாரதக்கதைகளில் பெயரளவில் கூட அறியப்பட்டிராத மிகச்சிறிய பாத்திரங்கள் வரை வெண்முரசு மிக நுட்பமாக சித்தரித்துக்கொண்டு செல்கிறது.
இந்திய ஞான மரபிற்கே உரிய தத்துவங்கள் கொட்டிக் கிடக்கும் களங்கள் வேறெந்த இந்திய இலக்கியத்தையும் விட மகாபாரதத்தில் மட்டுமே மிகுதியாக உண்டு; வியாசபாரதத்தில் ஊடும் பாவுமாய்ச் செறிந்திருக்கும் மெய்யியல், தத்துவம், அழகியல் ஆகியவற்றை பக்தி-மதம் ஆகியவை சாராத புறvayaநிலையிலிருந்து வாசகர்களுக்குக் கதைப்போக்கில் உருவகமாக….குறியீடுகளாக…படிமக்காட்சிகளாக - மிகையான எளிமைப்படுத்தலோ -எளிதில் விளங்காத இருண்மையோ இன்றி இன்றைய தமிழில் இலகுவாக முன் வைக்கிறது வெண்முரசு.
பாரதத்தின் கதைப்பரப்பைப்போலவே அதன் நிகழ்வுகள் நடந்தேறிய நிலப்பரப்புகளும் கூட இந்தியாவையும் தாண்டிப் பரந்தும் விரிந்தும் செல்பவை; அந்த நிலக்காட்சிகள் வெண்முரசு வாசிப்பில் காந்தாரப்பாலையாக….முல்லைநில யாதவ பூமியாக….கங்கையும் யமுனையும் வளம் பெருக்கும் மருதமாக இமயக்குறிஞ்சியாக நீண்டுகொண்டே செல்கின்றன. இந்திய வரலாறு, மெய்யியல், இசை,ஓவியம்,சிற்பம் ,போர் எனப்பல கலை நுட்பங்கள் , மானுட உணர்வுகளின் ஆழங்காண முடியாத விசித்திரங்கள் ஆகிய பலவற்றையும் பாரதக்கதைக்கடலில் மூழ்கித் தேடி வந்து சமகால நாவல் வடிவில் அளிப்பதன் வழி மகாபாரதப்பிரதியின் மீதான ஒரு தேடலையும் நிகழ்த்தி வருகிறார் ஜெயமோகன், இதன் பகுதிகளை ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் .’’ நவில்தொறும் நூல்நய’’மாக ஒரு புதிய நுட்பத்தை… ஒரு புதிய செய்தியை ஒரு புதிய குறியீட்டை தேடலுள்ள உண்மையான ஒரு வாசகன் அடையாளம் கண்டு கொண்டுவிட இயலும். தான் நிகழ்த்தும் தேடலில் வாசகனையும் பங்கு பெறச்செய்யும் எழுத்தாளனின் சாதுரியம் அது.
காவிய அழகுகள் குலையாத கதை ஓட்டம் , விரிவான கதைப்பரப்பானபோதும் எளிமைப்படுத்தல் இல்லாத செறிவு…….., சூழலுக்கேற்ற கவித்துவத்தோடு முகிழ்த்துச் செல்லும் அரிதான பழந்தமிழ்ச்சொற்கள் கை கூடிய மொழிநடை , மூன்று தொகுதிகள் அடுத்தடுத்து வந்தபோதும் கொஞ்சமும் நீர்த்துப்போகாமல் நாளுக்கு நாள் உருவ அழகும்,உள்ளடக்கச்செறிவும், மொழியின் கூர்மையும் அடர்த்தியாகிக் கொண்டே போகும் விந்தை.
நம்மிடையே இரத்தமும் சதையுமாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் எழுத்தாளர் ஒருவரின் அசுர சாதனையான இந்தப்படைப்பு -நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்தக்கணத்தில் தமிழ் இலக்கியக்களத்தில் நம் கண் முன்பு அரங்கேறிக்கொண்டிருக்கிறது என்று எண்ணி வியப்பதைத் தவிர வெண்முரசை மதிப்பிட வேறு சொற்கள் ஏதுமில்லை.
அபாரமான வாசிப்பனுபவத்தை வழங்கும் வெண்முரசை - அந்த .வாசிப்பின் மனக்காட்சியோடு இணைந்து பயணிக்கும் ஓவியர் ஷண்முகவேலின் ஓவியங்களை இணையத்தோடு நிற்காமல் உடனுக்குடன் அச்சுவடிவில் நூலாக்கி வெளியிட்டுவருகிறது நற்றிணைப்பதிப்பகம்.
காலம் நமக்குக் கனிவோடு அளித்திருக்கும் இந்த மகாபாரத அருட்கொடையைத் தவற விட்டால் அந்த இழப்பு நம்முடையதே