’’கனத்த காகித அட்டை போடப்பட்டுக் கையால் அச்சுக் கோர்ப்புச் செய்யப்பட்ட அந்தப் பழுப்பேறிப் போன காகிதங்களில்தான் சில நேரங்களில் சில மனிதர்களையும்,நாடகம் பார்க்கும் நடிகையையும்,சினிமாவுக்குப் போகும் சித்தாளையும்,உயிர்த்தேனையும், லா ச ரா கதைகளையும் இன்னமும் ரசிக்க முடிகிறது...
தன் எழுத்தின் வழி மனித நேயத்தின் சிகரம் தொட்ட கதை ஆசான்
நெஞ்சுக்குப் பக்கமாகக் குறிப்பிட்ட ஒரு காலத்தின் சாட்சியாக இருந்து கொண்டிருப்பவை.... மட்கத் தொடங்கியிருக்கும் அந்தப் பக்கங்கள்தான்...’’
தன் எழுத்தின் வழி மனித நேயத்தின் சிகரம் தொட்ட கதை ஆசான்
பத்மபூஷண் திரு ஜெயகாந்தனை முன்னிலைப்படுத்தி-
பாரம்பரியப் பெருமை மிக்க மதுரை மீனாட்சி புத்தக நிலையம் தன் பொன்விழாவை டிச.12ஆம் தேதியன்று மதுரையில் கொண்டாடவிருக்கிறது..
விழா அழைப்பிதழும்,பொன்விழா மலருக்கு நான் எழுதி அனுப்பிய கட்டுரையும்..கீழே...இரு மீனாட்சிகள்......
எம்.ஏ.சுசீலா
மதுரையில் நான் தொழும் மீனாட்சிகள் இருவர்.
மதுரையம்பதியின் அணியாகத் திகழும் ஆலயத்தில் குடிகொண்ட அன்னை மீனாட்சியோடு...,புத்தக அடுக்குகளுக்குள் குடியிருந்து கோலோச்சும் மீனாட்சியையும் (மீனாட்சி புத்தக நிலையத்தில் )
சேர்த்து...மதுரையில் நான் தொழும் மீனாட்சிகள் இருவர்.
1970ஆம் ஆண்டு பாத்திமாக் கல்லூரித் தமிழ்த் துறையின் இளம் விரிவுரையாளராக மதுரையில் கால் பதித்தது முதல்...பல காவதங்கள் தாண்டி வடமாநிலத்தில்..இந்தியத் தலைநகரில் வசித்து வரும் இன்றைய சூழ்நிலையிலும் கூட இரண்டு மீனாட்சிகளுக்கும் ஒரே மாதிரியான இடத்தையே என் உள்ளத்தில் வழங்கி வருகிறேன்..
மீனாட்சி புத்தக நிலையத்தோடான என் பிணைப்பும்,நட்பும் மதுரையில் நான் வசிக்கத் தொடங்கிய காலம் தொட்டு நீண்டு,இன்று நாற்பது ஆண்டுகளைத் தொட்டிருக்கின்றன.
நான் பணி புரிந்த கல்லூரி நூலகத்துக்கும்,ஆண்டு விழாவுக்கும் பரிசுப் புத்தகங்கள் வாங்குவதற்கான பொறுப்புக்கள் வழங்கப்படும்போது - இளமைக் காலம் தொட்டே புத்தக விரும்பியாக இருந்த நான் , அந்தப் பணியை ஆர்வத்தோடு வலிந்து ஏற்றுக் கொண்டதனாலேயே மீனாட்சி புத்தக நிலையத்தாரோடான என் உறவுப் பாலம் , தலைமுறைகள் தாண்டியும் தளராமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
தானப்ப முதலி தெருவில் மயூரி வளாகத்தில் தற்போது இருக்கும் மீனாட்சி புத்தக நிலையம் , '70,மற்றும் '80களில் மேலக் கோபுர வாசலில்,செண்ட்ரல் திரையரங்கிற்குச் சற்றுத் தள்ளி மிகச் சிறிய இண்டு இடுக்கான பெட்டிக் கடை போன்ற ஓர் இடத்திலேதான் இருந்தது.
மூர்த்தி சிறிதானாலும்...அதன் கீர்த்தி பெரிது;
காரணம் அது வெறும் புத்தக விற்பனை நிலையமாக மட்டும் இல்லாமல் தமிழின் தலை சிறந்த பதிப்பகங்களில் ஒன்றாகவும் விளங்கியதுதான்.
காரணம் அது வெறும் புத்தக விற்பனை நிலையமாக மட்டும் இல்லாமல் தமிழின் தலை சிறந்த பதிப்பகங்களில் ஒன்றாகவும் விளங்கியதுதான்.
அப்போதைய எழுத்துலக ஜாம்பவான்களாகிய ஜெயகாந்தன்,தி.ஜானகிராமன்,லா.ச. ராமாமிருதம் போன்றோரின் நூல்கள் பலவும்(குறிப்பாக ஜெயகாந்தனின் நூல்கள் அனைத்துமே) மேலக் கோபுர வாசல் முகவரியைத் தாங்கியபடிதான் வெளிவந்து கொண்டிருந்தன.
அந்தப் பருவத்தில் அக்கினிப் பொறியாகத் தெறித்துக் கொண்டிருந்த திரு ஜெயகாந்தனின் எழுத்துக்களையே ஆதர்சமாகக் கொண்டு எழுதுகோல் பிடிக்க ஆரம்பித்திருந்த எனக்கு அவரது நூல்களைப் பதிப்பிக்கும் அந்தக்குறிப்பிட்ட இடமும் கூட மனக் கிளர்ச்சியும்,உத்வேகமும் ஊட்டும் ஒன்றாகத்தான் தோன்றிக் கொண்டிருந்தது; தொடர்ந்து...அதே பதிப்பகக் கடைக்குள் வைத்து நான் ஆராதித்து வந்த எழுத்தாளர்களை-ஜே.கே முதல் லா.ச.ரா வரை எதிர்ப்பட நேர்ந்ததும்,அவர்களில் ஒரு சிலரை மீனாட்சி புத்தக நிலையத்தின் நிறுவனரும்,உரிமையாளருமான திரு செல்லப்பன் அவர்களின் உதவியோடு கல்லூரியில் உரையாற்ற அழைத்துச் சென்றதும் என் வாழ்க்கைப் பேரேட்டில் மறக்க முடியாத சில பக்கங்கள்.
பதிப்பகத்தின் இன்றைய உரிமையாளர் திரு செ.முருகப்பனின் தந்தையும், நிறுவனருமான திரு செல்லப்பன் ,முக மதிப்புக்காக ,ஜோடனையாக எதுவுமே பேச அறியாதவர்;ஆனால் கருமமே கண்ணாக...உரிய நேரத்தில்,உரியதைச் செய்து-மிகத் துல்லியமான தரமான படைப்பாளிகளை மட்டுமே தெரிவு செய்து அவர்களது நூல்களை மட்டுமே பதிப்பித்து மிகச் சிறந்த தரக் கட்டுப்பாட்டைத் தன் பதிப்புப் பணியில் பேணி வந்தவர் அவர்;
சென்னையிலிருந்த பல பதிப்பகங்கள் கூடச் செய்யாத தலை சிறந்த பதிப்புக்களை அளித்து மதுரையின் முகவரியை உலகறியச் செய்து கொண்டிருந்த அவர் எண்ணியிருந்தால் அந்தத் துறையைக் கொண்டே பணம் பண்ணக்கூடிய எழுத்துக்களைப் பதிப்பித்துக் கல்லாவை நிரப்பிக் கொண்டிருக்கலாம்.அவ்வாறு செய்யத் துணியாத தேர்ந்த ரசனையோடு கூடிய கறாரான பதிப்புக் கொள்கை கொண்டிருந்தவர் திரு செல்லப்பன்.
சென்னையிலிருந்த பல பதிப்பகங்கள் கூடச் செய்யாத தலை சிறந்த பதிப்புக்களை அளித்து மதுரையின் முகவரியை உலகறியச் செய்து கொண்டிருந்த அவர் எண்ணியிருந்தால் அந்தத் துறையைக் கொண்டே பணம் பண்ணக்கூடிய எழுத்துக்களைப் பதிப்பித்துக் கல்லாவை நிரப்பிக் கொண்டிருக்கலாம்.அவ்வாறு செய்யத் துணியாத தேர்ந்த ரசனையோடு கூடிய கறாரான பதிப்புக் கொள்கை கொண்டிருந்தவர் திரு செல்லப்பன்.
நான் சற்றும் எதிர்பார்த்திராத நிலையில்...திரு செல்லப்பன் அவர்கள் எனக்கு வழங்கிய இரு பெரும் வாய்ப்புக்கள் , வாழ்வின் எந்தத் தருணத்தில் நினைவுகூர்கையிலும் என்னை நெகிழ வைப்பவை.
ஒன்று....,சிறந்த சிறுகதைகளின் வரிசையான தொகுப்புக்களாக அவர் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருந்த மணிக்கதைகள் ஐந்தாம் தொகுப்பில் என் சிறுகதை ஒன்றையும் இணைக்கப் போவதாக அவர் எழுதிய கடிதம்..
(மணிக்கதைகள் 5 இல் கலைமகள் மாத இதழில் வெளியான
’புதிய பிரவேசங்கள்’என்னும் என் சிறுகதையும் இடம் பெற்றிருக்கிறது.)மீனாட்சியின் அரிதான அந்தத் தொகுப்புக்கள் ஒன்றில் என் படைப்பும் இடம் பெற்றிருப்பதைப் பெருமைக்குரிய ஓர் அங்கீகாரமாக இன்றளவும் நன்றியின் நெகிழ்வோடு நான் போற்றிக் கொண்டிருக்கிறேன்.
(மணிக்கதைகள் 5 இல் கலைமகள் மாத இதழில் வெளியான
’புதிய பிரவேசங்கள்’என்னும் என் சிறுகதையும் இடம் பெற்றிருக்கிறது.)மீனாட்சியின் அரிதான அந்தத் தொகுப்புக்கள் ஒன்றில் என் படைப்பும் இடம் பெற்றிருப்பதைப் பெருமைக்குரிய ஓர் அங்கீகாரமாக இன்றளவும் நன்றியின் நெகிழ்வோடு நான் போற்றிக் கொண்டிருக்கிறேன்.
அடுத்தாற்போலத் திரு செல்லப்பன் அவர்கள் அளித்த இன்ப அதிர்ச்சி, நான் கற்பனையிலும் எண்ணிப் பாராதது.
மதுரை ஒய் எம் சி ஏ அரங்கை ஒட்டிய குஜராத்தி சமாஜத்தில் மீனாட்சி புத்தக நிலையத்தின் சார்பில் நடைபெற்ற ஜெயகாந்தனின் மணிவிழா நிகழ்வில் - சிறப்புப் பேச்சாளர்களில் ஒருவராக என்னையும் இணைத்துச் சொற்பொழிவாற்றுமாறு அவர் பணித்ததை எனக்கு வழங்கப்பட்ட உச்சபட்ச கௌரவமாக நான் எண்ணுகிறேன்.ஜே கே பற்றிய என் எண்ண ஓட்டங்களை உரையாய் ஆக்கி அவர் முன்னிலையிலேயே சமர்ப்பிக்கவும், அவருடன் உரையாடவும் வழி அமைத்துத் தந்த அந்த மணிவிழா மேடை... என்னுள்ளத்தில் என்றென்றும் கல்வெட்டாய்ப் பதிந்திருக்கிறது.
திரு செல்லப்பனைத் தொடர்ந்து , தானும் நயத்தக்க நாகரிகத்தோடு பழகி எனது நூல்களையும்
(தடை ஓட்டங்கள்,சிறுகதைத் தொகுப்பு-2001 ,
பெண் - இலக்கியம் - வாசிப்பு-2001,
இலக்கிய இலக்குகள்,-2004,
தமிழிலக்கிய வெளியில் பெண்மொழியும்,பெண்ணும்- 2006)
செம்மையான முறையில் அச்சிட்டு வெளியிட்ட பண்பாளர் ,அவரது மகன் திரு முருகப்பன் அவர்கள்.
எத்தனை முறை ’படி’ திருத்த வேண்டுமென்று சொன்னாலும் - நூல் வடிவம்,அட்டை ஆகியன எப்படி அமைய வேண்டுமென்று நான் விரும்பினாலும்,முகம் சற்றும்கோணாமல் அதற்கெல்லாம் ஒத்துழைப்பு நல்கி.,நானும் சக பேராசிரியை ஒருவரும் இணைந்து நடத்திய-அவரது பதிப்பக வாயிலாக வெளியிடப்பட்ட -புத்தக வெளியீட்டு விழாவிற்கு இயன்ற உதவிகளையெல்லாம் செய்து தந்து அவர் துணை நின்றதை எந்நாளும் மறக்க இயலாது.
நூல் ஆசிரியர்களுக்கு உரிய மதிப்பளித்து,அவர்களுக்குச் சேர வேண்டிய ராயல்டி - சன்மானம் போன்றவற்றை அவர்களே மறந்து விட்டாலும் - மறவாமல் குறித்து வைத்துத் தவறாமல் கொடுத்துவிடும் மிகச் சிறந்த நெறியைத் தந்தையின் வழியில் தனயனும் பின் தொடர்ந்து வருகிறார்.இன்றைய பதிப்புலகில் மிகவும் அருகிப் போய்விட்ட பண்பு இது.
என் முனைவர் பட்ட ஆய்வின்போதும்,தொடர்ந்து மாணவர்களுக்குத் தேவையான நூல்களை நாடி வரும்போதும்,இன்று தில்லியில் இருக்கும் நிலையிலும் எந்த நூல் எப்போது வேண்டுமென்று கூறினாலும் முகம் கோணாமல் உதவிக் கரம் நீட்டும் திரு முருகப்பன்,இன்று எங்கள் குடும்பத்தில் ஓர் உறுப்பினராகவே ஆகிப் போயிருக்கிறார்.
இன்று அச்சுத் தொழிலில் பல வியத்தகு தொழில்நுட்பங்கள் கை கூடியிருக்கலாம்..பல்வேறு பதிப்பகங்கள் பல்கிப் பெருகியிருக்கலாம்.விதம் விதமான செய்நேர்த்தியுடன் கூடிய நூல்கள் வெளிவரலாம்.ஆனாலும் கூட எனக்கென்னவோ மீனாட்சி புத்தக நிலையத்தின் பழைய பதிப்புக்களில்...(ஜெயகாந்தனின் குறு நாவல்கள் மற்றும் நாவல்கள் அனைத்தையும் தொகுத்து அவர்களே இன்றைய நவீன பதிப்புக்களாக வெளியிட்டிருந்தாலும்) - கனத்த காகித அட்டை போடப்பட்டுக் கையால் அச்சுக் கோர்ப்புச் செய்யப்பட்ட அந்தப் பழுப்பேறிப் போன காகிதங்களில்தான் சில நேரங்களில் சில மனிதர்களையும்,நாடகம் பார்க்கும் நடிகையையும்,சினிமாவுக்குப் போகும் சித்தாளையும்,உயிர்த்தேனையும், லா ச ரா கதைகளையும் இன்னமும் ரசிக்க முடிகிறது...
நெஞ்சுக்குப் பக்கமாகக் குறிப்பிட்ட ஒரு காலத்தின் சாட்சியாக இருந்து கொண்டிருப்பவை.... மட்கத் தொடங்கியிருக்கும் அந்தப் பக்கங்கள்தான்...
பொன்விழாக் காணும் மீனாட்சி புத்தக நிலையம் ,தன் பாரம்பரிய உயர் நெறிகளைத் தக்கவைத்துக் கொண்டபடி பதிப்புத் துறையில் உன்னதமான பல சாதனைகளைப் படைக்க வேண்டும்...எல்லாம் வல்ல மதுரை மீனாட்சியின் ஆசி அதற்குத் துணை நிற்க வேண்டும் என இந்த இனிய தருணத்தில் மனம் கனிந்து வாழ்த்துகிறேன்.
பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை மின் அஞ்சலிட..susila27@gmail.com
பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை மின் அஞ்சலிட..susila27@gmail.com