துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

5.11.10

சின்னக் கண்ணன் அழைக்கிறான்....

(தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு )
தமிழில் பிள்ளைத் தமிழ் என்ற இலக்கிய வகையின் முறைப்படுத்தப்பட்ட வருகை 12ஆம் நூற்றாண்டை ஒட்டியதாயினும்,ஆழ்வார் பாடல்களில்-குறிப்பாகப் பெரியாழ்வாரின் பாசுரங்களில் அதற்கான அடித்தளம் வலுவாக அமைந்திருக்கிறது.கண்ணன் பிள்ளைத் தமிழ் என்ற பெயராலும் குறிக்கப்படும் பெரியாழ்வாரின் (முதல் பத்துதிருமொழிகளில் பிற்காலப் பிள்ளைத் தமிழ் இலக்கியங்களுக்கு அடியெடுத்துக் கொடுக்கும் வகையில், தாலாட்டு, அம்புலி, சப்பாணி,செங்கீரை. சப்பாணி,தளர்நடை,கிண்கிணி முதலிய மழலைப் பருவப் படிநிலைகளைக் கலையழகோடும்,நேர்த்தியுடனும் சித்தரிக்கிறார் பெரியாழ்வார்.
அவற்றுள் மறக்க முடியாத சித்திரங்களாக மனதில் பதிபவை அம்புலிப் பருவத்துப் பாடல்கள்.


நிலாக் காட்டிச் சோறூட்டும் தாய், சாம,தான,பேத,தண்ட வழிகளைக் கையாண்டு....எப்படியாவது தன் மகவோடு விளையாட வருமாறு நிலவை அழைப்பதே அம்புலிப் பருவப்புனைவு.குழந்தைக் கண்ணன் மீது தான் கொண்டிருக்கும் அளப்பரிய பாசத்தை வெளிக்காட்ட அம்புலிப் பருவத்தை ஒரு வாயிலாக்கிக் கொள்கிறார் ஆழ்வார்.
தாயின் வேடத்தைத் தரித்துக் கொள்ளும் ஆழ்வார் அந்த மனநிலையிலிருந்தே தனது பாடல்களைத் தொடுத்துக் கொண்டு போகிறார்.
முகத்தில் சுட்டி தொங்கத் தொங்கக் காலில் அணிந்திருக்கும் கிண்கிணிகள் கலீர் கலீர் என ஓசை எழுப்ப, முட்டி நோகத் தவழ்ந்து வந்து என் மகன் அடிக்கும் கூத்தையெல்லாம் .....’கண் இருந்தால் பார்த்துவிட்டுப் போ’’ 
’’தன் முகத்துச் சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய்ப்
 பொன்முகக் கிண்கிணி      ஆர்ப்பப் புழுதி அளைகின்றான்
 என் மகன் கோவிந்தன் கூத்தினை இள மாமதீ
 நின்முகம் கண்ணுளவாகில் நீ இங்கே நோக்கிப் போ’’
என,முதற்பாடலிலேயே கடுமை காட்டுகிறார்.


தொடர்ந்து வரும் பாடல்களில் தாயின் ஆவேசமும்,ஆதங்கமும் மேலோங்கி வளர்ந்து கொண்டே செல்கின்றன.
‘எனது பிஞ்சுக் குழந்தை தனது தளிர் விரல்களால் உன்னைக் காட்டிக் காட்டி அழைக்கிறான்....கை நோகத் தட்டித் தட்டி உன்னை விளிக்கிறான்..
மழலை முற்றாத தன் இளம் சொற்களால் உன்னைக் கூவிக் கூவி அழைக்கிறான்....அவன் இவ்வளவு துன்பப்பட்டு உன்னை அழைத்தும், நீ அதைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் மேகத்தில் ஒளிந்து கொள்கிறாய்..அவனது தளிர்க் கைகளை... உன்னைத் தட்டித் தட்டி நோக வைக்கிறாய்...உன் காதுகளில் என்ன துளையில்லாமல் போய்விட்டதா...உன் மனம் என்ன இறுகிப் போய் விட்டதா என்றெல்லாம் சொல்லிக் கொண்டே வரும் பெரியாழ்வார் அதன் உச்சமாக,
‘’மக்கட் பெறாத மலடன் அல்லையேல் வா’’.
என்று மிக நுட்பமான ஓரிடத்தையும் தொட்டு விடுகிறார்.


தாய்ப் பாசம் என்பது குருட்டுத்தனமானது...,குழந்தையின் அப்போதைய அவஸ்தையைத் தவிர வேறு எதையும் பகுத்தறியக் கூடிய நிலையில் தாய் மனம் அப்போது இயங்குவதில்லை என்ற உளவியலை ஆழமாக உள்வாங்கிக் கொண்டு வெளிப்படுகின்றன இப் பாசுரங்கள்.
‘’என் சிறுக் குட்டன் எனக்கோர் இன்னமுது எம்பிரான்
 தன் சிறுக் கைகளால் காட்டிக் காட்டி அழைக்கிறான்
 அஞ்சன வண்ணனோடு ஆடல் ஆட உறுதியேல்
 மஞ்சில் மறையாதே மாமதீ மகிழ்ந்தோடி வா’’
‘’உன்னை விளிக்கின்ற கைத் தலம் நோவாமே அம்புலீ கடிதோடி   வா’’
’’அழகிய வாயில் அமுத ஊறல் தெளிவுறா 
 மழலை முற்றாத இளஞ்சொல்லால் உன்னை கூவுகின்றான்
 குழகன் சிரீதரன் கூவக்கூவ நீ போதியேல்
 புழையில ஆகாதே நின் செவி புகர் மாமதீ’’
(புழை-துளை;செவியில் என்ன துளை இல்லாமல் போய் விட்டதா-கேட்கும் சக்தி இல்லையா என்கிறாள் தாய்)
தன் சிறு மகவு,நிலவைக் காட்டிக் காட்டி அழைப்பதும்,பிஞ்சுக் கைகள் நோகத் தட்டி அழைப்பதும்,வாய் வலிக்கக் கூவிக் கூவி விளிப்பதும் கண்டு....அசாத்தியங்களை எல்லாம் சாத்தியமாக்கி விடலாகாதா என்ற தாய்மையின் தவிப்பை அற்புத ஓவியமாக இந்தப் பாடல்களில் வடித்தளித்திருக்கிறார் பெரியாழ்வார்.


தாய்மை என்ற பாவனையைப் பிரிவின் ஏக்கமாகப் புனைந்து கொண்ட மற்றுமொரு ஆழ்வார் குலசேகரர்.
கண்ணனைப் பெற்ற மறுகணமே அவனைப் பிரிய நேரிட்ட பெருஞ்சோகம் தேவகியுடையது.அவனது குழந்தைப் பருவத்துக் குறும்புகள்...,மழலைச் சொற்கள் என எதையும் காணும்...ரசிக்கும் வாய்ப்பு அவளுக்குக்கிட்டவில்லை.அதையே தன்கற்பனைக்குக் களனாக்கும் குலசேகர ஆழ்வார்....ஒரு தாயாகக் கூடு விட்டுக் கூடு பாய்ந்து...தேவகியின்  தாய்மைப் புலம்பலைப் பாசுரங்களாக முன் வைக்கிறார்(பெருமாள் திருமொழி 7).
உலகிலுள்ள தாயரில் எல்லாம் கடைப்பட்ட தாயாக நான் ஆகிப் போனேன் என்றபடி தன் உள்ளக் குமுறலைக் கொட்டத் தொடங்குகிறாள் தேவகி.
‘’தாயரில் கடையாயின தாயே’’
காரணம்...,பெற்ற குழந்தைக்குத் தாலாட்டுப் பாடவில்லை;சீராட்டித் தொட்டில் ஆட்டவில்லை என்பதோடு தன் சின்னஞ்சிறு கை,கால் விரல்களை முடக்கி மடக்கியபடி சின்னதொரு மேகப் பிஞ்சைப்போல(ஆழ்வார் சொல்லில் ‘நீர் முகில் குழவி’)அது தூளிக்குள் படுத்திருக்கும் காட்சியைப் பார்க்கவில்லை;புழுதியில் ஆடிவிட்டு வந்த கையோடு அது வாரி வாயில் உண்ணும் சோற்றின் மிச்சத்தை உண்ணவில்லை
(’வண்ணச் செஞ்சிறு விரலனைத்தும் வாரி வாய்க் கொண்ட அடிசிலின் மிச்சம் உண்ணப் பெற்றிலேன்’)....
.இவ்வாறெல்லாம் அடுக்கிக் கொண்டே போகும் அந்தத் தாயுள்ளம்,இறுதியில் தன் பிள்ளையின் பாலிய லீலைகளையெல்லாம் ஒன்று விடாமல் கண்குளிரக் கண்டிருக்கும் அதன் வளர்ப்புத் தாய் யசோதை மீதான பொறாமையாக மடைமாறிப் போகிறது.
பெண்ணுள்ளத்தின் இத்தகைய நுணுக்கமான ஆழ்மனஓட்டங்களை அருகிலிருந்து படித்தவர் போல அந்தக் காட்சியைச் சித்திரமாகத் தீட்டி நம் பார்வைக்கு வைக்கிறார் குலசேகரர்.
கையிலும்,வாயிலும் வெண்ணெயும்,தயிரும் அப்பிக் கிடக்கும் கண்ணனை 
அடிக்கப்போவதைப் போலப் பொய்க் கோபம் காட்டிக்கொண்டு மெல்லிய பூக் கயிறு(’கண்ணி நுண் சிறுத் தாம்பு’-தாம்புக் கயிறுதான்....ஆனால் மெத்தென்ற பஞ்சு நூல் திரட்சியால் செய்யப்பட்ட - குறிப்பாக அடித்தால் வலிக்காமல் இருக்கும் கயிறு) ஒன்றை எடுத்துக் கொண்டு அதை அடிக்கப் போகிறாள் யசோதை;அப்போது அந்தக் குழந்தையும் கூட அஞ்சவது போல நடிக்கிறது;உதடு பிதுக்கி வாய் கோணிக் கை கூப்பி அடிக்க வேண்டாம் என சைகை காட்டுகிறது.


இந்தக் காட்சி பலவகையான படங்களிலும்,ஓவியங்களிலும்,சிற்பங்களிலும் நாம் பார்த்துப் பழகிய காட்சிதான்;எனினும் இதே நிகழ்வைக் குலசேகரர் சொல்லால் வடிக்கும் சுகம் அலாதியானது..
’முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டுண்ணும்
முகிழ் இளம் சிறுத் தாமரைக் கையும்
எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கும்
நிலையும் வெண்தயிர் தோய்ந்த செவ்வாயும்
அழுகையும் அஞ்சி நோக்கும் அந்நோக்கும்
அணிகொள் செஞ்சிறு வாய் நெளிப்பதுவும்
தொழுகையும்........’’
என்று வரிசையாக அடுக்கிக் கொண்டே போகும் கவிஞர் சட்டென்று ஒரே தொடரில் அந்தத் தாய் மனதில் கனன்று கொண்டிருக்கும் மெல்லிய பொறாமை உணர்வையும்..
‘’...இவை கண்ட அசோதை
தொல்லை இனபத்து இறுதி கண்டாளே..’’
என்று தொட்டுக் காட்டி விடுகிறார்.
பிள்ளை வளர்ப்பு என்பது...தொல்லை தரும் ஒரு இன்பம்...
மேலும் தொன்றுதொட்டு (தொல்லை என்பதற்குத் தொன்மை என்ற பொருளும் உண்டு)எல்லாத் தாயரும் எளிதாகப் பெற்று வரும் இன்பம் அது.
அதைக் கூட அனுபவிக்காமல் கடைப்பட்டதாயாகிப் போனேனே என்ற மன ஏக்கத்தைத் தேவகியின் உள்ளம் எவ்வாறு கருத் தரித்திருக்குமோ அதைத் தன் கவிக் கண்கொண்டு ஊடுருவிப் பார்த்துத் தன் படைப்பில் ஓவியமாக்குகிறார் குலசேகர ஆழ்வார்.


சமய இலக்கியங்களில் நாயக நாயகி பாவங்களுக்கு மட்டுமன்றித் தாய் - சேய் பாவங்களுக்கும் சிறப்பான இடம் இருந்ததை எடுத்துக் காட்டுவதோடு..
சக மனித உயிரின் எந்தப் பாவனையை வேண்டுமானாலும் தரித்துக் கொண்டு அதைத் துல்லியமாக வெளிப்படுத்தும் திறன் தேர்ந்த படைப்பாளிகளுக்கு உண்டு என்பதற்கும் சான்று பகர்ந்தபடி,இவ்விரு ஆழ்வார்களின் கவிதைகளும் காலத்தின் ஆவணங்களாய் - அழியா ஓவியங்களாய் நிலைபெற்றுத் திகழ்ந்து கொண்டிருக்கின்றன.


  

1 கருத்து :

cheena (சீனா) சொன்னது…

அருமை அருமை - தாய் சேய் உணர்ச்சிகளை அள்ளித் தந்திருக்கும் ஆழ்வார் பாடல்கள் - யசோதை - கண்ணன் - பிள்ளை வளர்ப்பு என்னும் தொல்லை தரும் இனப்த்தினை எளிதாகப் பெறும் தாய்மார்கள். அட்டா அடடா என்ன கற்பனை வளம் - தமிழ்ச் சொற்கள் - ம்ம்ம்ம் ; தன் சிறு மகவு நிலவினை அழைப்பதும் - நிலவு புன்முறுவலுடன் போக்கு காட்டுவதும் - பெற்றவன் கோபப்படுவதும் - கெஞ்சுவதும் - அனுபவிக்க வேண்டும் ஆழவார் பாடல்களை .நல்வாழ்த்துகள்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....