ரஷியப் பின்புலத்தில்...ஒரு காட்சி!
உயர் அரசு அலுவலகம் ஒன்றில் பணிபுரியும் அலுவலர்(அந்தக் கால மொழியில் குமாஸ்தா)ஒருவர், நாடக அரங்கொன்றுக்குச் செல்கிறார்.நாடகம் தொடங்கி நடந்து கொண்டிருந்த வேளையில் அவருக்கு அடக்க முடியாத தும்மல் வந்து விடுகிறது.தும்மல் சத்தத்தைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தவரைக் கண்டு குமாஸ்தா பேரதிர்ச்சி அடைகிறார்.காரணம் அது,அவரது உயர் அதிகாரி
.
.
உடன் உடலை வளைத்து அவரிடம் முன் நோக்கிக் குனிந்து,தும்மல் தன்னறியாமல் வந்து விட்டதாக மன்னிப்புக் கேட்கிறார்.நாடகத்தில் ஆழ்ந்து போய் லயித்திருந்த அதிகாரி அதை ஒரு பொருட்டாகவே கருதாமல் சட்டென்று முகத்தைத் திருப்பிக்கொண்டு நாடகத்தைப் பார்க்க ஆரம்பித்துவிட,குமாஸ்தாவோ இருப்புக் கொள்ளாமல் தவிக்கிறார்;செய்யக் கூடாத குற்றமொன்றைச் செய்து விட்டதான பரிதவிப்போடு...திரும்பத் திரும்ப அவரை நோக்கிக் குனிந்தபடி...’’மன்னித்து விடுங்கள்...தும்மல் என்பது...இயல்பாக வரக்கூடிய ஒரு சமாச்சாரம்...அடக்க முடியாமல்போய்விட்டது’’என்று வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் சொல்லிக்கொண்டே இருக்கிறார்.சிறிது நேரம் அதை லட்சியம் செய்யாமலிருந்த அதிகாரி,அந்தக் கோரிக்கை விடாமல் தொடர்வது கண்டு நாடகத்தைப் பார்க்க முடியாத எரிச்சலோடு அவரைப் பார்த்துக் கடுமையாக முறைத்துவிட்டு முகம் திருப்பிக் கொள்கிறார்.
குமாஸ்தாவின்மனம் கூடுதலாகப் பதைக்கிறது.
அரங்கமே கைகொட்டிக் குதூகலிக்கும் நாடகத்தில் அதற்கு மேல் அவரால் ஒன்ற முடியவில்லை. பனியையும் பொருட்படுத்தாமல் நாடக அரங்கிலிருந்து வெளியேறித் தன் அதிகாரியின் கோச்சு வண்டிக்குப் பக்கத்தில் நின்று கொள்கிறார்.
‘நாளை அலுவலகத்தில் வைத்து அதிகாரியை எதிர்கொள்வதற்கு முன்பு இந்த விஷயத்தைச் சரிப்படுத்தியாக வேண்டும்...எப்படியாவது அவரிடம் மன்னிப்பைப் பெற்றால்தான் நிம்மதியாக வீடு போய்ச் சேர முடியும்’
-இவ்வாறு கணக்குப் போட்டபடி கோச்சு வண்டியின் அருகே தவமிருக்கிறார் அவர்.
நாடகம் முடிந்து எல்லோரும் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.உல்லாசமான மன நிலையுடன் கோச்சு வண்டியில் ஏறப்போன அதிகாரிக்குக் குறுக்கே சென்ற குமாஸ்தா’’மன்னியுங்கள் ஐயா...தும்மல் என்பது...இயல்பாக வரக்கூடிய....’’என்ற தன் வழக்கமான பல்லவியைத் தொடங்குகிறார்.கோபம் தலைக்கேறிய அதிகாரி அவரைப்பார்த்து ஏதோ கத்திவிட்டு வண்டியில் ஏறிப் போய்விடுகிறார்.
குமாஸ்தா தன்னுடைய வீட்டுக்குத் திரும்பிவந்த பிறகும் அவரது மனம் சமாதானம் அடைவதாக இல்லை.
‘இன்னும் தனக்கு உரிய மன்னிப்பு வழங்கப்பட்டாகவில்லையே....நாளை அந்த அதிகாரியின் முகத்தில் விழிப்பதுதான் எப்படி’
-தன் வருத்தத்தை மனைவியுடன் பகிர்ந்து கொள்கிறார் குமாஸ்தா.
அன்றைய இரவோடு அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என இருவரும் முடிவு செய்கின்றனர்.
நள்ளிரவு நேரத்தில் , கொட்டும் பனியில் அதிகாரி வீட்டை நோக்கிச் செல்கிறார் குமாஸ்தா.
அதிகாரி வீட்டு அழைப்பு மணியை அந்த அகால நேரத்தில் அடிக்க வேண்டுமானால் அது மிகப் பெரிய இடத்திலிருந்து வந்த அழைப்பாக மட்டுமே இருக்க முடியும்.குமாஸ்தா மணியை அடித்ததும் அவ்வாறு கருதிக் கொண்டுவிட்ட அதிகாரி, இரவு உடையைக் களைந்து பிரபுத்துவ உடைகளைத் தரித்தபடி வந்து கதவைத் திறக்கிறார்.
வெளியே நின்று கொண்டிருக்கிறார் குமாஸ்தா.
‘’மன்னியுங்கள் ஐயா...தும்மல் என்பது என்னை அறியாமல் ஏதோ இயல்பாக வந்து விட்டது..’’என்ற பாட்டையே அவர் பாடத் தொடங்க....சினத்தோடு உள்ளே சென்ற அதிகாரி துப்பாக்கியோடுவெளியே வருகிறார்.
இனிமேல் ஒருதரம் - அலுவலகத்தில் மட்டுமல்ல...அந்த ஊரில் எங்கே பார்த்தாலும் அவரைச் சுட்டுப் பொசுக்கி விடப் போவதாக ஆவேசத்தோடு கத்துகிறார்.
பயம் கப்பிப்போன சோர்வான இதயத்தோடு வீடு திரும்பும் குமாஸ்தா....அந்த அச்சம் நீங்காமல்....உறக்கத்திலேயே இறந்து போகிறார்.
மேலோட்டமான வாசிப்பில்...ஒரு நகைச்சுவைக் கதை போல இது தென்பட்டாலும்,அதிகார வர்க்கம்...அதற்கு அடிவணங்கி நிற்கும் அடுத்த தட்டிலுள்ள வர்க்கம் இவை இரண்டிற்கும் இடையிலுள்ள இட்டு நிரப்ப முடியாத இடைவெளியையும்,எளியோர் வலியோரிடம் கொண்ட அச்சத்தையும்,அடிப்படையான உரிமைகள் கூட இன்றி நாயினும் கீழான நிலையில் மனிதர்கள் வாழ்ந்த காலச் சூழலையும் மனக்கண்ணில் விரிக்கிறது.
ரஷியப்புரட்சி |
கத்தி முனையை விடவும் கூர்மையானது பேனா முனை என்று சொல்லப்படுவதுண்டு.ஆண்டன் செக்காவ் எழுதிய அற்புதமான இந்தச் சிறுகதை,உலகப் புகழ் பெற்ற ரஷியப் புரட்சிக்கு அடித்தளமிட்ட பன்னிரண்டு சிறுகதைகளில் ஒன்றாகப் போற்றப்பட்டு வருகிறது.
குறிப்பிட்ட காலத்தின் குரலை வேடிக்கையுடன் கூடிய அங்கதமாக எழுத்தில் வடித்த இந்தச் சிறுகதையைப் போல ...கிட்டத்தட்ட இதே சூழலை அவலப் பின்னணியில் காட்டும்கதைகளும் உண்டு.
ஒரு பிரபுவிடம் வேலை பார்க்கும் குதிரைக்காரன் ,ஒரு நாள் வேலைக்கு வராமல் இருந்து விடுகிறான்.மறுநாள் அவர் அவனிடம் கண்டபடி கூச்சலிட்டுத் தன் வேலையெல்லாம் அவனால் பாழாகி விட்டதாக வரிசையாக அடுக்கிக் கொண்டே போகிறார்.எல்லாம் சொல்லிமுடித்த பிறகு அவன் வராத காரணத்தை அவர் கேட்க,அவனும் அதைச் சொல்ல வாயெடுக்கிறான்;அதற்குள் அவருக்கு ஏதோஒரு அவசர வேலை வந்து விடுகிறது.அன்றைய நாள்முழுக்க அப்படியே கழிய....அவன் வராத காரணத்தைச் சொல்ல அவனுக்கு வாய்ப்பே இல்லாமல் போகிறது.
இறுதியில்..அந்த நாளின் முடிவில்....தான் ஓட்டும் குதிரையைக் கொண்டு வந்து லாயத்தில் கட்டி விட்டு அதைத் தடவிக்கொண்டே அவன் சொல்கிறான்.
‘’நான் ஏன் வரவில்லையென்பதை நீயாவது கேள்.என்னுடைய குழந்தை நேற்று இறந்து போய்விட்டது தெரியுமா?’’
-கண்ணீர் மல்க இவ்வாறு அவன் கூறுவதோடு முற்றுப் பெறுகிறது இச்சிறுகதை.
இதுவும் கூட வர்க்க அரசியலின் கீழ்மையை முன் வைக்கும் கதைதான்...
அது ஒரு புறமிருக்க...இன்றும் கூடச் சக மனிதர்களின் சோகங்களை...,நம்மிடம் பணி புரியும் ஊழியர்களின் கண்ணீர்க் கதைகளைக் கேட்பதற்கும்,ஆறுதலாக ஒரு வார்த்தையாவது சொல்வதற்கும் நம்மில் எத்தனை பேருக்குப் பொழுதிருக்கிறது...?
4 கருத்துகள் :
இரண்டு கதைகளின் களமும் எக்காலத்திற்கும் பொருந்தும் வண்ணம் உள்ளது , எளிய நடையில் பெரிய கருத்தை முன் வைக்கிறது .இந்த கதயினோடு ரஷ்ய மக்கள் தங்களை தொடர்பு படுத்தி ,அதில் ஒத்துமை கண்டதால் தான் புரட்சிக்கு வித்திட்டுள்ளது .பகிர்விற்கு நன்றி அம்மா
சிந்தை இரங்காரடி.....தும்மல் கதை அருமை.
யாருக்கும் வெட்கமில்லை....உண்மைதான் டிவியிலும் செய்தித் தாளிலும் பார்க்கையில் எனக்கும் தோன்றுவதுண்டு.
இரண்டு பதிவிலும் தலைப்பு அழகாக தேர்ந்தெடுத்தீர்கள். திருச்சி லோகநாதனும், சிதம்பரம் ஜெயராமனும் காதில் ஒலிக்கிறார்கள்.
சகாதேவன்
பதிவின் தலைப்பு மிகவும் அருமை! இரண்டு கதைகளும் மனதை உலுக்கிவிட்டது. அதிலும் இரண்டாவது கதை கண்ணீரை வரவழைத்து விட்டது. பண்பும், பணிவும் வாழ்வில் இன்றியமையாதது. சொல்ல நினைப்பதை சொல்ல முடியாமல் போகும்போதும், செய்ய நினைப்பதை செய்ய முடியாமல் போகும்போதும் உண்டாகும் மன உளைச்சல் எவ்வளவு கொடுமையானது என்பதை அற்புதமாக உணர்த்தும் கதைகள் இவை.
பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.
இரண்டு கருத்துள்ளக் கதைகளை- மொழி பெயர்ப்பாக இல்லாமல் மையக்கருத்தை தமிழில் வழங்கினாலும் -மிகவும் சுவைப்படச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி
நட்சத்திர, மற்றும் தீபாவளி வாழ்த்துகள்.
கருத்துரையிடுக