துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

19.11.10

சென்ற தம்பியும், நின்ற தம்பியும்..

காப்பியக் கவிஞர்கள் தங்கள் பாத்திரங்களுக்கு வழங்கும் நீதி துல்லியமானது;எந்த சமரசமும் அற்றது;கறாரானது. தலைமைப் பாத்திரமென்றாலும், துணைப்பாத்திரமென்றாலும், எதிர்நிலைத் தலைவன் என்றாலும் அவரவர்க்கு உரிய இடமும்,மதிப்பும் இலக்கிய அரங்கில் கண்டிப்பாக வழங்கப்பட்டு விடும்.


கம்பனில் ஒரு காட்சி
.
இராவணவதம் முடிந்து அயோத்தி மீள்கிறான் இராமன்.
இராமனோடு உடன் சென்று அவன் அனுபவித்த அனைத்தையும் ஏழிரண்டாண்டுக் காலம் துய்த்த இலக்குவனும்,
அவ்வாறு உடன் செல்லாவிட்டாலும் அரண்மனையையே சிறைக்கூடமாகவும், மணிமுடியையே முள்முடியாகவும் மாற்றிக் கொண்டு விட்ட பரதனும் ஒருவரை ஒருவர் எதிர்ப்படுகிறார்கள்.

‘’அரசகுமாரனைப்போல அன்றி அடியவரைப் போல ஏவல் செய்’’
(’’மன்னவன் எனும்படியன்று..
அடியாரின் ஏவல் செய்தி’’)
என்று தன் தாய் சுமித்திரையாலேயே பணிக்கப்பட்டவன் இலக்குவன்.
இராமனுக்குப் பர்ணசாலை அமைத்துத் தந்து விட்டுத் தன் நெடிய இரவுகளை வில்லை ஊன்றிய கையோடு மட்டுமன்றி வெம்மையான பெருமூச்சுக்களோடும்,கண்ணீர் வெள்ளத்தோடும் கழித்தவன் அவன்.
மற்றொருவனாகிய பரதனோ, தாய் வரம் கேட்டுத் தந்தை வழங்கிய ஆட்சியை முறையற்ற வழியில் வந்த செல்வமென எண்ணித் தன் அண்ணனின் காலடியில் கிடத்திவிட்டு - அதன் பிறகு அவனது ஆணைக்காகக் கட்டுப்பட்டாலும் - அவன் பாதுகையைத் தலையில் ஏற்று அரச வாழ்வில் துறவு பூண்டு வாழ்ந்தவன்.


’’வில்லை ஊன்றிய கையோடும் வெய்துயிர்ப்போடும்..
 கங்குல் எல்லை காண்பளவும் (இரவுப்பொழுது புலரும் வரை )    இமைப்பிலன் நயனம் நின்றான்’’எனக் கண்களைக் கூட இமைக்காமல் இராமனக் காவல் காத்து நிற்கும் இலக்குவனைக்கண்டு கரைந்து புலம்பும் வேடுவக் குகன்,.
’’தாய் உரை கொண்டு தாதை உதவிய தரணிதன்னைத்
 தீவினை என்னநீத்துச் சிந்தனை முகத்தில் தேக்கி..’’ப் பரதன் வரும் கோலத்தைக் கண்டதும்
‘’ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ’’(ஆயிரம் இராமர்கள் கூட உனக்கு 
நிகர் ஆகமாட்டார்கள்) என்று இலக்குவனுக்குச் சமமாகப் பரதனையும் பாராட்டுகிறான்.

உலகின் கள்ளங்கபடங்கள் தோயாத பழங்குடிவாசியான 
குகன் மூலம் இரு தம்பியரையுமே வியப்புக்குரியவர்களாக்கிச் சமநீதி வழங்கிய கம்பர், அதே வகையான நீதியைக் காப்பியத்தின் கடைசிக்காட்சியிலும் அயோத்தி மக்கள் வழி வழங்குகிறார். 


இராமன்,தன் பரிவாரங்களுடன் ஊர் திரும்பியதும் இலக்குவன் பரதனின் கால்களில் வீழ்ந்து பணிகிறான்.
பரி,கரி,தேர்,ஊர்தி என்று இவை பிறவும் தோலின்
வினை உறு செருப்புக்கு ஈந்தான்
என்று பரதனைப் பற்றி அந்தக்கட்டத்தில் குறிப்பிடுகிறார் கம்பர்.
குதிரைப்படை,யானைப்படை,காலாட்படை,தேர்ப்படை என நால்வகைப்படைகள் புடைசூழ அரச போகங்களோடு 
செல்வாக்காக வாழ்ந்திருக்க வேண்டிய பெரு வாழ்வைத் தோலினால் செய்யப்பட்ட செருப்புக்குக் கொடுத்து விட்ட பரதனுக்கு இவ்வாறு இலக்குவன் முதல் மரியாதை செய்ய, அவனைக் கட்டித் தழுவிக் கொள்கிறான் பரதன்.
இந்தக் காட்சியைக்காணும் அயோத்தி மக்கள் ,
காடு சென்று தன்னைக் கடுமையாக வருத்திக் கொண்ட இலக்குவனின் மேனி மெலிவு மிகுதியா,
குற்ற உணர்ச்சியின் கையற்றநிலையில் உருகிக் கரைந்து நாட்டிலிருந்தபடியே தன்னை மன உளைச்சலுக்காளாக்கிக் கொண்ட பரதனின் மேனி மெலிவு மிகுதியா
என அவர்கள் இருவரையும் எடைபோட்டுப் பார்க்கிறார்கள்.
‘’....................தனிமை நீங்கி
 காடு உறைந்து உலைந்த மெய்யோ, கையறு கவலை கூர
 நாடு உறைந்து உலைந்த மெய்யோ நைந்தது?’என்று உலகம் நைய்ய.’’.
என்று தீர்மானமான ஒரு முடிவை எட்ட இயலாமல் அவர்கள் தவிக்கும்போதே கம்பனின் கவிதைத் துலாக்கோல் இருவரையும் ஒரே தட்டில்தான் மதிப்பிட்டிருக்கிறது என்ற விடையும் நமக்குக் கிடைத்து விடுகிறது.


குகனின் பாராட்டு வனவாசம் தொடங்கும் கட்டம்; அதே வகையான போற்றுதலுக்குத் தகுதி படைத்தவர்களாய்ப் பதினான்கு ஆண்டுகளுக்குப்பிறகும் அவர்கள் தொடர்வதற்கான நற்சான்று 
அயோத்தி மக்களின் கூற்று!.


கம்பனின் காப்பிய நீதி வெளிப்படும் அற்புதமான கட்டங்களில் இதுவும் ஒன்று. 
பாத்திரங்களுக்குத் தான் வழங்க எண்ணும் இடத்தை..மதிப்பைக் கவிக் கூற்றாகவே சொல்லி முடித்து விடாமல் - தான் சற்று விலகியிருந்தபடி தனது மதிப்பீட்டையே பிற பாத்திரங்களின் வழியாக-அதுவும் அறிவு..ஆராய்ச்சி இவற்றால் எந்த முன் அனுமானங்களின் பிடியிலும் ஆட்பட்டிராத சாமானியர்களின் வாயிலிருந்து வரவழைக்கும் புனைவுத் தொழில் நுட்பமே கம்பநாடன் காப்பியத்தை வெறும் ஒரு புராணக் கதையாக மட்டுமே புறந்தள்ளி விட முடியாமல் செய்து விடுகிறது.
காலம் பல கடந்தும் அக் காப்பியம் உயிர்ப்போடு அனைவரையும் கட்டிப் போடும் சூட்சுமம்,இவாறான புனைவுக்கூறுகளிலேதான் பொதிந்து கிடக்கிறது.
பிகு;இப் பதிவின் அடிப்படைச் சாரம் அறிஞர் வ.சுப.மாணிக்கம் எழுதிய ‘கம்பர்’நூலை அடியொற்றியது.
1 கருத்து :

kavithaigal சொன்னது…

போற்றுதற்குறிய கவிசக்கரவத்தி
கம்பன் அவர்களின் பாடல்களில் பொதிந்துள்ள அர்த்தத்தை அழகாக எடுத்து இயம்பிய தங்களுக்கு நன்றி.
(‘’ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ’’(ஆயிரம் இராமர்கள் கூட உனக்கு
நிகர் ஆகமாட்டார்கள்) என்று இலக்குவனுக்குச் சமமாகப் பரதனையும் பாராட்டுகிறான்.)

காட்டுக்குள் தன்னோடு வந்து கஷ்ட்டப்படும் இலக்குவனுக்கும் , உணர்வுகளாலேயே மனம் நொந்து உருகும் பரதனுக்கும் சமமான இடத்தை அளித்த கம்பனின் பாடல்களில் இருந்து அவரில் அறிவு பேராற்றல் புலப்படுகிறது .

நற்றியுடனும்
நேசமுடனும்
தேவராஜ் விட்டலன்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....