துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

27.11.10

பெண்ணியம் சில எளிய புரிதல்கள்;கடிதங்கள்

பெண்ணியம் சில எளிய புரிதல்கள் (9பகுதிகள்)என்னும்கட்டுரைத் தொடரின் இறுதியில் எனக்கு வந்த கடிதமும்,என் மறுமொழியும்.
ஷஹி
பெண்ணியம் பேசலாமா?
மனித சமுதாயம், தோன்றிய நாளிலிருந்து தாய்வழிச் சமூகமாகவே இருந்து வந்திருக்கிறது. ராகுல சாங்கிருத்தியாயனின் "வால்காவிலிருந்து கங்கை வரை" மற்றும் பெடரிக்எங்கெல்ஸ் எழுதிய "குடும்பம்-அரசு-தனிச்சொத்து இவற்றின் தோற்றம்" ஆகிய நூல்களில் இதற்கான ஆதாரம் உள்ளது. பெண் தன் மனதுக்குப் பிரியமான மற்றும் உடலுக்கு இசைவான துணையைத்தேர்ந்தெடுக்கவும், விரும்பாத போது பிரியவுமான உரிமையையும், குடும்பத்தின் தலைமைப் பதவியையும் தானே கொண்டிருந்தாள். சொத்துசேர்ப்பு, வாரிசுகளுக்கு சொத்துரிமை போன்ற பொருளாதாரக் காரணங்களுக்காக ஆண், பெண்ணை சொந்தம் கொண்டாட விழைந்தான். 

பெண்ணுக்கு சுதந்திரம் மறுக்கப்பட்டால் தானே தன்னுடைய வாரிசுகள் எவை என்று நிச்சயித்துக் கொள்ளவியலும்? இப்படித் துவங்கினது தானே ஆணாதிக்கப் போக்கும், பெண் அடிமைப் பட்ட கதையும்! 

பெண்ணியம் என்று வரும் போது என்னுடைய நிலைப்பாடு சமத்துவம் தான் ,என்றாலும் ,"தீவிரம்" என்ற நிலைக்குப் பெண்கள் செல்வதை,.. "எதனால்?" என்று ஆராய்ந்து பார்க்கச் சொல்லத்தான் செய்கிறது பெண் மனம். காலம் காலமாக அடிமைப்படுத்தப்பட்டு, நசுக்கப்பட்ட ஒரு சமூகம் வீறுகொண்டு விட்டது தானே இதற்கான அடிப்படை?
  
ஆணை எதிர்த்து,மனம் போனபடி திரிந்து ,கட்டுப்பாடுகளற்று வாழ்வது தான் பெண்ணியம் என்று பகுத்தறிவுள்ள எவரும் சொல்லவியலாது. அதே சமயம், அழகுணர்ச்சியும், எதிர்பாலினரை ஈர்க்கும் ஆவலும் மனித சமூகத்துக்கே உள்ள ஒரு இயல்பு தானே? இதில் ஆண் பெண் என்ற பேதம் ஏது? ஒரு அளவுக்கு உட்பட்டு இருக்கும் வரை இது ஆரோக்கியமான ஒரு விஷயம் தானே? ஆணைக் கவர்வதற்காக அலைகிறவர்கள் தாம் பெண்ணியம் பேசுபவர்கள் என்று... பெண்ணியம் என்ற "பெரும் பேச்சு" பேசுபவர்களைத் தரம் தாழ்த்துபவர்களை என்ன சொல்வது?
 மேலும் பெண்ணின் உடலையே பாடு பொருளாக எடுத்துக்கொள்வது அத்தனை ஒன்றும் ஏற்புடையதாக இல்லையென்றாலும் ஆபாசம் தொனிக்காத வரையிலும்,சொல்ல விழையும் கருத்துக்குத் தேவை என்றாகும் போதும் அதையும் கூட ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியுள்ளது. என்னுடைய ஒரு கவிதையிலும் கூட நான் சொல்ல விழைந்த ஓர் விடயத்தை..
           ’’மறுதலிக்கப்படும் அச்சத்தோடு
           ஒவ்வொரு முறையும்,
           என் இதழ் தாண்டாத
           சொற்களின்,
           சவக்கிடங்குகளாய்க் கனக்கும்,
           என் மார்புகள்..
           செய்தன ,
           என் கோரிக்கைகளும்,
           கண்ணீரும்
           செய்யாதவற்றை."
என்று சொல்லியிருக்கிறேன். உடல் என்பது தாண்டி, உண்மை, நிதர்சனம் என்று தான் இதைப் பார்க்கவேண்டியுள்ளது. 
பெண்ணை சமமானவளாக, சக உயிரினமாக, தோழியாக எண்ணி பால்களுக்குள் சமத்துவம் நிலவும் ஒரு சமூகமாக இச்சமுதாயத்தை உருவாக்க வேண்டிய ஒரு உன்னதப்பணி பெண்ணியம் பேசுபவர்களுடையது அல்லவா?

ஏதோ பெண்கள் முன்னேற்றம் கண்டு விட்டார்கள், படிக்கிறார்கள், சாதிக்கிறார்கள் என்று பேசுபவர்கள், தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு ஒரு முறை வந்து சென்றால் நல்லது. இரண்டாம் பாலாக... ஏன் இன்னமும் மோசமாக.. பெண்.. இன்றும் நடத்தப்படுகிறாள். ஏதோ பயந்து, பெண் சமூகத்துக்கு அஞ்சி நடக்கவில்லை.அவள் தாய், சுமப்பவள், போஷிப்பவள், காப்பவள். தன் சந்ததியினரின் நலன் கருதி பொறுமை காப்பவள். அதே சமயம் நாளைய உலகை தன் சந்ததிக்கு நலமான ஓர் உலகாக ஆக்கி விட்டுச் செல்ல வேண்டிய ஒரு மாபெரும் பொறுப்பும் அவளுக்கு உண்டு. ஆணும் பெண்ணும் சமமானவர்கள் என்ற அந்த நிலையே 
பெண்ணுக்கும் ஆணுக்கும் உகந்த ஓர் அமைப்பு. அவ்வாறான ஓர் அமைப்பு ஏற்பட வேண்டுமெனில், பெண்ணியம் பேசித்தானாக வேண்டும்.

 குடும்பத்தில், உறவுகளில், பணியிடங்களில், சமூகத்தில் நிகழும் அவலங்களையும், ஏற்றத்தாழ்வுகளையும் சந்திக்கும் பெண், பேசினால் தானே அவற்றை வெளிப்படுத்தி, தீர்வும் காண முடியும்? வெற்றுப் புலம்பல், அதீத எழுச்சி என்றெல்லாம் பெண்ணியம் பற்றி விமர்சிப்பவர்கள் சக உயிரினங்களின் உணர்வுகளை அறியாதவர்கள் என்பது தவிர வேறென்ன சொல்வது?
               
          "சுற்றிலும் தளைகள்..         
           எவ்விடமும் பொறிகள்..
           ஓட நான் எத்தனிக்கையில்,
           எனை நடக்க விடாத கண்ணிகள்! 
           அப்பாவாய், 
           சோதரனாய்,
           துணைவனாய்,
           மாமனாய் ,
           பின் மகனாயும்!
           வழிந்தோடும் குருதி குடிக்க..
           கூர்பற்களோடு நீயும்" 
என்று சமூகத்தை நோக்கிய. என் நிலைப்பாட்டை நானன்றி வேறு யார் சொல்லவியலும்?
சிறுவயது மணம், கல்வி மறுப்பு, சிறுமியருக்கு நிகழும் பாலியல் வன்முறைகள் எல்லாம் இன்றும் நிகழும் அவலங்கள் தானே? இதையெல்லாம் பேசுவது பெண்ணியம் தானே? காலம் காலமாய் ஆணாதிக்க அடக்குமுறையினால், தன் சக்தி உணராமல் இருந்த பெண்மை விழித்துக் கொண்டு, தன் நிலை,பலம் உணர்ந்து, தன் சந்ததியினருக்கு...ஆண் குழந்தைகளுக்கும் சரி பெண்பிள்ளைகளுக்கும் சமத்துவம் பற்றின சரியான போதனைகளைச் செய்ய வேண்டும்..அவ்வாறு நல்ல ஒரு உலகம் உருவாகி, உய்யவேண்டுமென்றால்...பெண்ணியம் பேசித்தானாக  வேண்டும்.(கவிதைகள் என்னுடையவையே.)   
ஷஹி
‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
எம்.ஏ.சுசீலா.
அன்பின் ஷஹி,
மிக்க நன்றி.
இத்தகைய நீண்ட கருத்து வெளிப்பாட்டுக்குப் பின்னூட்டத்தை விடவும் ஏற்றது கடிதம் என்றுதான் நான் சில மாற்றங்களைச் செய்தேன்.அது சரியான முடிவுதான் என்பதை உங்கள் கடிதம் எனக்கு உறுதிப்படுத்தியிருக்கிறது.

ஆமாம் ஷஹி..!மனிதத்தின் செம்பாதியான பெண்ணினத்துக்கு முழுமையான நீதியும் சமத்துவமும் கிட்டாத வரை பெண்ணியக் குரல்கள் ஏதோ ஒரு வடிவில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கும்;அவற்றை வெற்றுப்புலம்பல் என்றோ கண்ணீர்ப் பெருமூச்சென்றோ அத்தனை எளிதாக எவரும் புறந்தள்ளிவிட இயலாது.
ஒன்பது பதிவுகளில் நான் எழுதிய செய்திகளின் சாரத்தை உட்பொதிந்து உங்கள் எழுத்து அமைந்திருந்தது ,ஒத்த அலைவரிசையிலான ஒரு நபரைக்கண்டுகொண்ட நிறைவை எனக்குத் தந்தது.
சமத்துவச் சிந்தனையை ஏற்க ஆண் தயங்கும்போதுதான் தீவிரப் பாதையில் பெண் கால் வைக்க வேண்டியதாகி விடுகிறது.அதற்கும் கூட அவனேதான் ஒரு வகையில் காரணமாகி விடுகிறான்.
தேவையை இலக்காய்க் கொண்ட பெண்மொழிக்கு நான் எதிரியில்லை.
அது சமூகப்பயன்பாட்டுக்கு உதவாத மலினமான சொல்லாடலாக - அதிர்ச்சி மதிப்புக்குரியதாக மட்டுமே மாறி விடும்போதுதான் எனக்கு அறச் சீற்றம் ஏற்பட்டு விடுகிறது.அப்படிப்பட்ட சொல்லாடல்களும்கூட ஆணின் ரசனைக்கு விருந்தாகவே போய்விடுகின்றன.

தமிழகத் தென்மாவட்ட கிராமங்கள் வரை போவானேன்.
இங்கே தலைநகர் தில்லியில் ஒரு நிமிடத்தில் நடக்கும் பாலியல் வன்முறைகள் எத்தனை எத்தனை தெரியுமா?
உடல் வலு என்ற ஒன்றால் ஆண் தன் ஆதிக்கக் கயிறுகளை இறுக்கிப் பெண்ணை வெற்றி கொள்ளத் துடித்துக் கொண்டே இருக்கிறான் என்பதன் அடையாளம்தான் அது.
உடல் சார் வேறுபாடுகளால் இரு பாலினரும் மாறுபடுவது இயற்கை;அதையே ஆயுதமாக்கிப் பெண் மீது சுரண்டலை நிகழ்த்துவது அராஜகம்.
இந்த உண்மை மனித மனங்களில் வெளிச்சமாகும் வரை பெண்ணியத்துக்கான தேவை இருந்து கொண்டுதான் இருக்கும்,தொடர்ந்தும் உரையாடுவோம்
’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’.
அன்பின் அம்மா ,
உங்கள் பதிவை படித்தேன் மிக நன்று.
நன்றி அம்மா...
நிறைய கற்கிறோம். உங்கள் பதிவில்...வாழ்த்துகள்..
சாந்தி
http://punnagaithesam.blogspot.com/



பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை மின் அஞ்சலிட..susila27@gmail.com

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....