துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

9.10.23

என் குழந்தைகளின் புகைப்படங்கள்-மொழிபெயர்ப்புச் சிறுகதை

 அக்டோபர். 2023  தேதியிட்ட சொல்வனம் இணைய [304 ஆம் ] இதழில் வெளிவந்திருக்கும் என் மொழிபெயர்ப்புச் சிறுகதை.

என் குழந்தைகளின் புகைப்படங்கள்

மணிப்புரி மூலம் : சத்யவதி நிங்கோம்பாம்
ஆங்கிலத்தில்: சபம் ஸ்வீட்டீ
 ஆங்கில வழி : தமிழாக்கம்; எம் ஏ சுசீலா

“அம்மா! நான் பெரியவனா வளர்ந்தப்புறம் ஏரோப்பிளேன்லே பறந்து போவேன்தானே?’’


‘‘கட்டாயம் போவே குழந்தை’’


‘‘நான் பெரிய ஆளா ஆனப்புறம் நியூஸ் பேப்பரிலே என்னோட ஃபோட்டோ வரும் இல்லையாம்மா?’’


‘‘நிச்சயமா வரும் மகனே’’


‘‘அக்கா பெரியவளா வளர்ந்த பிறகு என்னவா ஆவா?’’


‘‘உன்னோட அக்கா ஒரு பொண்ணு.  அவளுக்குக் கல்யாணம் ஆகும்.  அவங்க, வேறே ஒரு வீட்டுக்கு அவளைக் கூட்டிக்கிட்டுப் போயிடுவாங்க.’’


‘‘சே! சே! அப்படியெல்லாம் ஒண்ணும் ஆகாது.  அவளை அவங்க அப்படிக் கூட்டிக்கிட்டுப்போக எல்லாம் நான் விட மாட்டேன். அக்காவை என்னோட கூடவே பிளேனிலே உட்கார வச்சுக்கிட்டு அமெரிக்காவுக்குப் பறந்து போயிடுவேன்.  அவ அங்கேயே இருக்கட்டும்.  அப்படின்னா அவ கல்யாணம் பண்ணிக்க வேண்டியிருக்காதுதானே? “


‘‘கிறுக்குப்பையா? அக்காவை உனக்கு அவ்வளவு பிடிக்குமா?’’


‘‘ஆமாம்!’’


‘‘எவ்வளவு பிடிக்கும்?’’


‘‘இதோ இ…வ்..வ..ள…வு’’ என்று தன் சின்னஞ்சிறு கைகளை முதுகு வரை விரித்து சைகை காட்டினான் அவன்.


‘‘அம்மா அப்பா, அக்கா- எங்க மூணுபேரிலே உனக்கு யாரை ரொம்பப் பிடிக்கும்?’’


‘‘உங்க மூணு பேரையுமே எனக்குப் பிடிக்கும்தான்’’


‘‘அட…. இந்தக் காலத்துக் குழந்தைகளைப் பாரு! இத்தனூண்டா இருந்துகிட்டு அவங்க வாயிலிருந்து வர்ற வார்த்தைகள்தான் எப்படி இருக்கு?’’


மோமோச்சா, முடிவே இல்லாத கேள்விகள் பலவற்றையும் கேட்டுக் கொண்டே இருப்பான்.  அவை அவனது பெற்றோருக்கு மிகவும் பிடிக்கும்; அவர்களைக் களிப்பூட்டும்.
‘திருமண பந்தத்தில் பிணைக்கப்பட்டிருக்கும்.  ஆணையும் பெண்ணையும் அதில் வலுவாகக் கட்டிப்போட்டிருப்பது தங்களது குழந்தை மீது அவர்கள் வைத்திருக்கும் அன்புதான்.  உலகம் முழுவதும் உள்ள பொதுவான நடைமுறை இது’ என்று அவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.

இன்று, இம்பாலில் உள்ள ஏதோ ஒரு அமைப்பு ஏற்பாடு செய்திருக்கும் ஓவியப்போட்டியில் அவர்களது பெண் பங்கெடுத்துக் கொள்ள இருக்கிறாள்.  தன் பள்ளி சார்பாக அவள் இதில் கலந்துகொள்கிறாள் . மோமோச்சாவும் கூடப் போகிறான்.  

மதிய உணவை சீக்கிரமே முடித்து விட்டு அம்மா அவர்களுக்கு உடையணிவித்துவிடுகிறாள்.  தங்கள் வீட்டில் வைத்து வழிபடும் ‘சனமஹி’* (* ‘மைதேயி’ பழங்குடி மக்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் தங்கள் வீட்டில் வைத்து வழிபாடு செய்யும் கடவுள் ‘சனமஹி’) என்ற தெய்வ உருவத்தின் அருகில் அவர்களை அழைத்துச் செல்கிறாள்.  அதன் பிறகு முற்றத்திலுள்ள துளசிச் செடிக்குக் கீழே எல்லோரும் விழுந்து வணங்குகிறார்கள்.


‘‘ஓவியப் போட்டியிலே நல்லா வரைஞ்சுட்டு வா பொண்ணே’’


‘‘சரிம்மா’’

‘‘இன்னிக்கு க்வைராம்பாண்ட் மார்க்கெட்டுக்கு மோமோச்சோவைக் கூட்டிக் கிட்டுப் போகலாம் நாம’’


‘‘அவனுக்கு ஒரு நல்ல சட்டை வாங்கித் தாங்கப்பா’’


‘‘கட்டாயம் வாங்கித்தரேன், பின்னே என் பையனுக்கு நான் வாங்காமலா?’’


‘‘அக்காவுக்கும்தான்’’


‘‘நிச்சயம் வாங்கறேன்’’


‘‘அம்மாவுக்கும் கூட’’


‘‘சரி, சரி…’’


‘‘அம்மா… பைபை …’’

அவள் வீட்டுவாசலில் நின்றபடி குழந்தைகளின் சின்னக் கையசைப்பை எவ்வளவு நேரம் பார்க்க முடியுமோ, அவ்வளவு நேரம் பார்த்தபடி நிற்கிறாள்.  பிறகு தங்கள் அப்பாவை முந்திக் கொண்டு வேகமாக நடை போட்டுப் போய் விடுகிறார்கள் அவர்கள்.

                                            ***********************

மாலை மறைந்து இருள் படர ஆரம்பித்துவிட்டது.  கணவனும், குழந்தைகளும் திரும்பி வருகிறார்களா என்று பார்ப்பதற்காக வாசற் கதவுப் பக்கம் வந்து வந்துபோய்க் கொண்டிருக்கிறாள் மோமோ-மா.  வழியைப் பார்த்துப் பார்த்து அவள் கண்கள் பூத்துப் போய் விடுகின்றன.


‘‘எங்கேதான் இருப்பாங்க அவங்க? ஏன் இவ்வளவு நேரம் ஆகுது? வெளியே போயிட்டா போதும், எப்ப திரும்பி வரணுங்கிறதே அவருக்குத் தெரியாது’ என்று கணவரை மனதுக்குள் குறை சொல்லிக் கொண்டிருக்கிறாள் அவள்.  எண்ணெய் விளக்கை ஏற்றி வைத்தபடி கதவருகே உட்கார்ந்து அவர்கள் எப்போது வருவார்கள் என்று தன் விழிகளால் துருவிப் பார்த்துக்கொண்டிருக்கிறாள்.

தெருவில் வருகிறவர்கள் போகிறவர்கள், அவளுக்கு அறிமுகமானவர்கள் எல்லோரும்
‘‘மோமோ-மா இங்கே என்ன செய்யறே’’ என்று பரிவோடு கேட்கிறார்கள்.
‘‘யாருக்காகக் காத்திருக்கே இபெம்மா? “(தங்கச்சி) என்று விசாரிக்கிறார்கள்.

 தான் நெய்த துணிகளை மார்க்கெட்டில் இருக்கும் சிறு வியாபாரிகளிடம் விற்பனை செய்வதற்காகச் சென்றிருந்த ஒரு நெசவாளிப் பெண், நூல்கண்டுகள் அடங்கிய தன் பெட்டியை இறுகப்பிடித்துக் கொண்டு , அந்த இருளில் தெருவுக்குள் ஓட்டமும் நடையுமாக விரைந்து செல்கிறாள்.  அவள் மிரண்டு போயிருக்கிறாள் என்பது, எடுத்த எடுப்பிலேயே தெரிகிறது.

‘‘இபெம்மா! க்வைராம்பாண்டிலே இன்னிக்குத் துப்பாக்கிச் சூடு நடக்குது.  காயப்படாம, செத்துப்போகாம தப்பிச்சது என்னோட நல்லநேரம்.  பஸ் எதுவுமே வரலை.  ஏதோ அதிர்ஷ்டம் இருந்திருக்கு, எப்படியோ சாமி புண்ணியத்திலே தப்பிச்சு வந்திட்டேன். இது ரொம்ப மோசமான நேரம்… போர் நடக்கற நேரம்* (இனக்குழுக்களுக்குள் அடிக்கடி நிகழும் கலவரங்களே போர்ச்சூழலாக இங்கு சித்தரிக்கப்படுகின்றன). கூட்ட நெரிசலான ஒரு மார்க்கெட்டுக்குள்ளே குண்டு வெடிச்சா ஜனங்க கட்டாயம் செத்துத்தான் போவாங்க.  வீட்டிலே இருக்கிற எல்லாருக்கும் கவலைதான்’’ என்று போகிற போக்கில் வேகமாகச் சொல்லிக் கொண்டே கடந்துபோகிறாள் அவள்.

மோமோ-மா அதிர்ச்சியால் திக்பிரமை பிடித்தவளாய் வாயடைத்துப்போய் நிற்கிறாள்.அக்கம்பக்கத்திலுள்ளவர்களும், உறவுக்காரர்களும் அவளைத் தேற்றவும் அவள் பயத்தைக் கொஞ்சம் குறைக்கவும் முயற்சி செய்கிறார்கள்.

‘‘வண்டி எதுவும் ஓடாததாலே அப்பாவும், குழந்தைகளும் எங்கேயாவது மாட்டிக்கிட்டிருப்பாங்க.’’

‘‘இதோ பாரும்மா, ராத்திரிக்கு முன்னாடி அவங்க இங்கே வந்து சேர்ந்துடுவாங்க. நீ வேணும்னா பாரு! இம்பால் ஒண்ணும் அவ்வளவு தூரம் இல்லையே?’’

மோமோ-மாவை அண்டை வீட்டுக்காரர்கள் அவள் வீட்டுக்குள் கொண்டு போய் விடுகிறார்கள்.

                                       *****************************

காலை விடிந்துவிட்டது.  செய்தித்தாள்கள் மட்டும் எப்படி இவ்வளவு சரியாக வந்து சேர்ந்துவிடுகின்றன?

‘‘இறந்தவர்கள்….இறந்தவர்கள்…உறுதிப்படுத்தப்பட்டவர்கள்…உறுதிப்படுத்தப்பட்டவர்கள்,’’ என்று அந்தச் செய்திகளையே செய்தித்தாள்கள் கூச்சலிட்டுக்கொண்டிருந்தன.

எல்லோரும் மோமா-மா எங்கே என்று விசாரிக்க ஆரம்பித்திருந்தார்கள்.  குறிப்பிட்ட அந்தப் பகுதி முழுவதையும் அவர்கள் அலசித் தேடினார்கள்.  சிலர் குளங்களுக்குள் குதித்துப் பார்த்தார்கள் . நெற்குதிர்கள் மீது ஏறியும் பார்த்தார்கள்.  காலியாய்க் கிடந்த வயல் வெளிகளில், அடர்ந்த காட்டுப் புதர்களிலெல்லாம் அவளைத் தேடிப் பார்த்தார்கள்.  

கடைசியில் மூன்று நான்கு ஆண்கள் ஒன்று சேர்ந்து மோமோ-மாவைக் கைத் தாங்கலாய்ப் பற்றி இழுத்துக் கொண்டு வந்து சேர்த்தார்கள்.  தலை வாராமல், முடிச்சு தளர்ந்திருக்க அவளது அடர்ந்த கூந்தல் , முதுகுப்புறம் அவிழ்ந்து கிடந்தது.  மேலாடை தளர்ந்திருந்தது.  இறுகப் பிணைத்து வைத்திருந்த அவளது கரங்களை அவர்களால் பிரிக்க முடியவில்லை.

‘‘மார்க்கெட்டிலிருந்து வந்தவங்ககிட்டே இருந்து செய்தித்தாள்களைப் பிடுங்கிக்கிட்டா அவ’’ என்று யாரோ சொன்னார்கள்.
‘‘ஒருவேளை பைத்தியம் பிடிச்சுத் தெருவிலே அலையப்போறாளோ அவ?”

‘‘ஹி ஹி ஹி!!’’ என்று வெறிபிடித்தாற் போலச் சிரித்தாள் அவள்.  கசங்கிப்போன அந்த செய்தித்தாளை ஒருமுறை பார்த்துவிட்டுத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.  பிறகு அதைத் தன் உதட்டருகே கொண்டுவந்து முத்தமிட்டபடி
‘‘ஆஹா.. இன்னிக்கு என் குழந்தைங்களோட படம் பேப்பர்களிலே வந்தாச்சு’’ என்று சந்தோஷமாகக் கூச்சலிட்டாள்.

                                                &**********************&

1992இல் மணிப்புரி மொழியில் எழுதிப் பிரசுரிக்கப்பட்ட (Ichagi Photo) இந்தச் சிறுகதையின் ஆசிரியர் சத்யவதி நிங்கோம்பாம்.

(Source CRAFTING THE WORD WRITINGS FROM MANIPUR
EDITOR , THINGNAM ANJULIKA SAMOM ZUBAAN)

6.10.23

“அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்” ...-நாவல் வெளியீடு

 இன்று ,

‘’அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்”

என்னும் என் மூன்றாவது நாவல் வெளிவரவிருக்கிறது.


சென்னை ஹெர் ஸ்டோரீஸ் பதிப்பகத்தார் தங்கள் வேறு வெளியீடுகளுடன் சேர்த்துக் கோட்டூர்புரம் அண்ணா நினைவு நூற்றாண்டு நூலகத்தில் என் நாவலையும் வெளியிடுகிறார்கள்.( என் அன்புக்குரிய மாணவி தேனம்மை லக்‌ஷ்மணனின் நூல் ஒன்றும் இந்தப்பட்டிலில் இடம் பெற்றிருப்பதில் ஓர் ஆசிரியராகவும் பெருமிதம் கொள்கிறேன்)



நாவலிலிருந்து…( தலைப்புக்கும் இது விளக்கமாகலாம்)
//“அற்புதம் டாக்டர்! ‘மானுடப்பிறப்பில் மாதா உதரத்தில் ஈனமில் கிருமிச் செருவினில் பிழைத்தும்னு ஆரம்பிச்சு… ‘ஈரிரு திங்களில் பேரிருள் பிழைத்தும்… அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்… ஏழுதிங்களில் தாழ் புவி பிழைத்தும்’னு ஒவ்வொரு மாசமும் கருவோட வளர்ச்சியையும் அது படற அவஸ்தையையும் போராட்டத்தையும் காட்டற மாதிரியே பொருத்தமான வரிகள், அப்படியே அசந்து போயிட்டேன்’’
“அது திருவாசகத்திலே போற்றித் திரு அகவல்ங்கிற பகுதியிலே இருக்கிற வரிகள் சுமதி. ‘புல்லாகிப் புழுவாகி எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்’னு சொல்ற மாணிக்கவாசகர் மனுஷப் பிறப்பு எடுக்கிறதுக்கு எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்குங்கிறதை அந்தப் பத்து பன்னிரண்டு வரிகளிலே சொல்றார். ஒவ்வொரு மாசமும் என்ன பாடு..? எல்லாமே சர்வைவலுக்கான யுத்தம்தான்கிறதை கைனகாலஜிஸ்டோட நிலையிலே இருந்து ஒரு ஆன்மீகவாதி எப்படிசொல்லியிருக்கார் பாரு. ஆனா பரமபத ஏணி மாதிரி இத்தனை படிகளிலே தப்பித் தப்பிப் பிழைச்சு வந்து அருமையாக் கிடைக்கிற மனிதப் பிறவியை நாம ஒழுங்காப் பயன்படுத்திக்கிறோமா, பல வழிகளிலே விரயமாக்கித் தொலைச்சுக்கறோமாங்கிறதுதான் அவர் எழுப்பற அடுத்த கேள்வி” //
என்னுரையிலிருந்து…
“அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்” என்ற இந்த நாவலும் கூட ஒரு யுக சந்தியின் கதைதான். சென்ற தலைமுறை மரபுச்சட்டகங்கள் பெண்கல்வியின் பாதையை மறித்ததென்றால், அதன் அடுத்த பரிமாணமாய்த் தனக்கென்ற சுயதேடல் ஒன்றை சுமந்தபடி,தன் தனிப்பட்ட ஆர்வத்தையும் கனவுகளையும் - குடும்பம் என்ற எல்லை தாண்டி நிறைவேற்றும் பெண், தனது அடுத்த தலைமுறையாலேயே குற்றக்கூண்டில் நிறுத்தப்பட்டு விடுவதை இந்த நாவல் வழி எடுத்துக்காட்ட முயன்றிருக்கிறேன். தொழில் நுட்ப வளர்ச்சியில், நடை, உடை ,நாகரிக பாணிகளில் அடுத்த நூற்றாண்டுக்கே கூடத் தாவிச் செல்லத் தயாராக இருக்கும் இன்றைய இளைய தலைமுறை,மரபு வழி மனப்போக்குகளில் சற்றுப் பின்னோக்கி நகர்ந்தபடி - தாய் என்னும்பங்கு நிலை ( role) ஒன்றை மட்டுமே பெண்ணிடமிருந்து எதிர்பார்க்கிறதோ என்ற ஐயம் ஏற்படுவதைத் தவிர்க்க இயலவில்லை.
இந்த நாவலின்காயத்ரியைப்போலத் தங்களைக் கொண்டு செலுத்திக் கொண்டிருப்பதும், இரவும் பகலுமாக ஆட்டிப்படைப்பதுமான அகத்தேடலை இறக்கி வைக்க வழியின்றித் தங்கள் கனவுகளை மனதுக்குள்ளேயே போட்டுப் புதைத்துக் கொள்ளும் பெண்கள், குறிப்பிட்ட சில துறைகளை மட்டும் சார்ந்தவர்கள் அல்ல, வெளி உலகத்தில்…, புறப்பணிகளில் ஈடுபடாமல் வீட்டளவில்,குடும்பத் தளத்தில் மட்டுமே இயங்கும் பெண்களும் அவர்களில் உண்டு.
வீட்டு வாழ்க்கை,வெளி வாழ்க்கை என்ற பங்கு நிலைப் போராட்டத்தில் வெற்றியும் தோல்வியுமாய் ஊடாடிக்கொண்டிருக்கும் அனைத்து அன்னையருக்கும் இது சமர்ப்பணம்.
இதை வெளியிடுவதில் ஆர்வம் காட்டியதோடு மிக விரைவாகவும் வெளியிட்டிருக்கும் ஹெர் ஸ்டோரீஸ் பதிப்பகத்தார்க்கு என் நன்றி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....