துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

16.10.23

தோல்வி-மொழிபெயர்ப்புச் சிறுகதை

                                                           தோல்வி

                    மணிப்புரி மூலம்: நிங்கோம்பாம் சர்மா.

                          ஆங்கிலத்தில்: போபோ குறைஜாம்
                        ஆங்கில வழி தமிழாக்கம்: எம் ஏ சுசீலா
நன்றி; ஹெர் ஸ்டோரீஸ் https://herstories.xyz/translation-stories-1/ அக்-16,2023

நிகழ்ச்சி ஒரு மணிக்குத் தொடங்கிவிடும்.  ஏற்கெனவே உச்சிப்பொழுதாகி விட்டது.  பிபின் இன்னும் வீட்டுக்குத் திரும்பியிருக்கவில்லை.

காலையில் அவன் வேலைக்குக் கிளம்பும்போதே, ‘‘தயவு செய்து மத்தியானத்துக்குள்ளே கட்டாயம் வந்திடுங்க.  இன்னிக்கு முக்கியமான மனுஷங்க எல்லாம் வரப்போறாங்க’’ என்று சொல்லியிருந்தாள் நளினி.

ஆனால்… அவன் இன்னும் வராதது ஏன்? அப்படி அவன் வராமல் இருப்பதற்கான காரணங்கள் எல்லாவற்றையும் நளினி கஷ்டப்பட்டுத் தேடிப் பார்த்தாள்.  ஆனால், அவையெல்லாம் அவளுடைய பதட்டத்தை மேலும் அதிகரிக்கவே உதவிக் கொண்டிருந்தன.

பிபினைப் போன்ற ஓர் இலக்கியவாதியால் இன்றைய நிகழ்ச்சியை அவ்வளவு சுலபமாக எடுத்துக்கொள்ள முடியுமென்று யாரால்தான் நம்பமுடியும்? மதிப்பிற்குரிய ஒரு விருதை அண்மையில் பெற்றிருந்த அவன் மனைவி நளினி, இன்று கௌரவிக்கப்பட இருக்கிறாள். அவள் அவன் மனைவி! அவள் மேடையில் ஏறி ஒரு சில வார்த்தைகள் பேசும்போது, அந்த சாதனையின் முழுப்பெருமையும் தன் கணவனுக்குத்தான் சேரும் என்பதை எல்லாரும் கேட்கச் சொல்லப்போகிறாள். அதைக் கேட்கும் ஆர்வம் பிபினுக்கு நிச்சயம் இருக்கும்.  இதுவரை தன்னால் முடிந்த எல்லா உதவிகளையும் அவன் அவளுக்காகச் செய்திருக்கிறான்.

‘‘எழுத்துப் பிழை விடாமல் எழுதணுங்கிறதிலே ஏன் இப்படிக் கவனமில்லாமல் இருக்கே? உணர்ச்சிகளை வெளிப்படுத்தறதிலேயும் இன்னும் கொஞ்சம் அக்கறை வேணும். அழகான கதைக்கருவோ நல்ல சொற்களோ இருந்திட்டா மட்டும் போறாது. வார்த்தைகளை எந்த அளவுக்குச் சிக்கனமாகப் பயன்படுத்தறோங்கிறதும் முக்கியம்’’ என்று அவளிடம் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பான் அவன்.

பிபின் ஒருபோதும் எதுபற்றியும் கவனக்குறைவாக இருந்ததே இல்லை.  நளினி ஏதாவது ஒன்றை எழுதி முடித்துவிட்டால், குறைந்தபட்சம் ஒரு முறையாவது அவன் அதைச் சரிபார்த்து ஒரு சில மாற்றங்கள் செய்துவிடுவான்.  ஒரு கட்டாயக் கடமை போலவே மிக ஒழுங்காக அதைச் செய்து வந்தான் அவன்.

‘‘ஆண்களோட உதவியும் ஒத்துழைப்பும் இல்லாமல் போனால் பெண்கள் கிட்டே இருக்கிற ஆற்றல், திறமை எல்லாமே வீணாய்ப் போயிடும்.  சமூக அந்தஸ்திலே பெண்கள் இப்ப ரொம்பப் பின்தங்கி இருக்காங்க’’ என்பான் அவன்.




பெண்ணியம் குறித்து அலசி ஆராய்ந்து அவன் எழுதியிருந்த புத்தகம் ஒன்று, மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது.  மேலும் பெண்களின் பிரச்சினைகள் குறித்து அவன் வெளியிட்டிருந்த ஒரு கவிதைத் தொகுப்பு நூலுக்கும் மிகச்சிறப்பான அங்கீகாரம் கிடைத்திருந்தது. பெண்கள் தங்களிடம் மறைந்து கிடக்கும் வலிமையை மீட்டெடுத்துக் கொண்டு தங்களை மேலும் உயர்த்திக் கொள்ள அந்த நூல் உதவுமென்று மதிப்பிடப்பட்டது.  மணிப்பூரில் உள்ள சில இலக்கிய அமைப்புகள் அவனது அந்தப் படைப்புக்கு விருதுகள் தந்து கௌரவித்தபடி, ஒரு முன்னணிப் பெண்ணியவாதியாக அவனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியிருந்தன.

பிபின், வீட்டுவேலைகளிலும்கூட நளினிக்கு உதவுவதுண்டு.  இன்னும் பல வகைகளில் அவன் அவளுக்குத் துணையாகவே இருந்தான். அளவுக்கு மீறிய அற்பமான வீட்டு வேலைகளுக்குள் மட்டுமே அவளைத் தளைப்படுத்தி வைப்பது அவளுக்குக் குடும்பத்தின் மீதே ஒரு வெறுப்பை ஏற்படுத்தி விடுமென்றும் தங்களுக்கிடையே ஓர் இடைவெளியைக்கூட அது உண்டாக்கிவிடக் கூடுமென்றும் அவன் நினைத்தான்.

‘பெண்ணியத்தின் மீது உள்ளார்ந்த நம்பிக்கை கொண்டிருக்கும் உண்மையான ஒரு பெண்ணியவாதியைத் தவிர்த்தபடி நடைபெறும் பெண்ணியம் குறித்த எந்த விவாதமும் சரியாக அமைய முடியாது.  பெண்களின் உயர்வில் உண்மையாகவே எவருக்கு நம்பிக்கை இருக்கிறதோ, பெண்களை அன்போடு எவரால் அணுக முடிகிறதோ அவர்களால்தாம் இலக்கியத்தில் உள்ள பெண்ணியம் பற்றியும் விவாதிக்க முடியும்’ என்று அடிக்கடி அவன் சொல்வதுண்டு.

இப்படி அவன் பேசுவதைக் கேட்கும்போது சில பெண்களுக்குப் பொறாமை ஏற்படாமல் இருக்காது.

“இவளுக்கு வாய்ச்ச மாதிரி எங்க வீட்டு ஆண்களும் எங்களுக்குத் துணையா இருந்திருந்தா இதுக்குள்ளே நாங்களும்கூடஎங்கேயோ போயிருப்போம்’’ என்று அவர்கள் சொல்வார்கள். அவர்களது அந்த அபிப்பிராயத்தை நளினியும் ஒப்புக்கொள்வாள். அவள் ஏன் அதைத் குறித்துப் பெருமைப்படக் கூடாது ?

‘சட்டியும் அகப்பையும் பிடித்துக் கொண்டிருப்பதை விட்டு விட்டு நம் பெண்களைப் பேனா பிடிக்க வைக்க வேண்டும்.  அவர்கள் வெளியே வர வழிசெய்துதர வேண்டும்’ என்று சொல்லக்கூடிய கணவர்கள் அவளைப்போல எத்தனை பேருக்கு வாய்த்திருக்க முடியும்?

பிபின் விருது பெற்றபோது, ‘‘இவரைப்போல நம் சமூகத்துக்கு இன்னும் நிறைய ஆண்கள் தேவைப்படுகிறார்கள்.  பெண்கள் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் அவரது மிகச் சிறந்த புத்தகத்தை நாம் கொண்டாட வேண்டிய தருணம் இது’’ என்று நளினியின் சக பெண் எழுத்தாளர்கள் சொன்னதைக் கேட்டு அவள் எந்த அளவு பெருமையால் பூரித்தாள்! மகிழ்ச்சியடைந்தாள்! கணவனின் சாதனைகளில் ஒரு மனைவிக்கு எப்போதுமே பெருமிதம் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான்.

தேசிய அளவில் மிகவும் மதிக்கப்படும் இலக்கிய விருது ஒன்றை அண்மையில் தனது மூன்றாவது நூலுக்காகப் பெற்றிருந்த நளினி, அதற்காக இன்று பாராட்டப்பட இருந்தாள்.  இந்தச் சாதனை திடீரென்று இலக்கிய உலகில் மிக முக்கியமான மதிக்கத்தகுந்த ஓர் ஆளுமையாக அவளை ஆக்கிவிட்டிருந்தது. அவளுக்கென்று ஒரு தனித்த இடம் உருவாகியிருந்தது. அந்த விருது பெற்ற பிறகு, தொடர்ந்து வந்த பல நாட்கள் பாராட்டு விழாக்களால் மட்டுமே நிரம்பி வழிந்துகொண்டிருந்தன.

பிபினும் தன் சொந்த வேலையில் அதிகமாக மூழ்கிப் போயிருந்தான். காலையில் வீட்டைவிட்டுக் கிளம்பினால் மாலை மறைந்த பிறகுதான் அவன் வீடு திரும்புவான்.  அதனால் இருவருமாகச் சேர்ந்து பல நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க முடியவில்லை.  அதைப் பற்றி அவள் எப்போது கேட்டாலும், ‘‘ஆபிஸ்லே நிதியாண்டோட கடைசி நேர வேலை நெருக்கடி’’ என்பது மட்டுமே அவன் சொல்லும் ஒரே பதிலாக இருக்கும்.

‘‘நாளைக்குத் தயவு செஞ்சு நீங்கள் வேலைக்குப் போக வேண்டாம்.  எல்லாரும் உங்களைப் பத்தி விசாரிப்பாங்க’’ என்று அவனிடம் நேற்று மன்றாடிக் கேட்டுக் கொண்டாள் அவள்.

‘‘எங்க பாஸுக்குப் பதவி உயர்வு கிடைச்சிருக்கு. அதைக் கொண்டாடறதுக்காக நாளைக்கு ஒரு முக்கியமான விருந்து ஏற்பாடாகி இருக்கே.’’

‘‘இல்லை… நாம ரெண்டு பேருமா சேர்ந்துதான் நாளைக்கு என்னோட நிகழ்ச்சிக்குப் போகணும்.’’

‘‘இதோ பாரு, நான் சொல்றதைக் கேட்டுக்கோ. பைரன் ஏமாந்து போயிடுவான். இன்னிக்குக்கூட நாங்கள் ரெண்டு பேருமாதான் நாளைக்குள்ள விருந்து ஏற்பாடுகளைக் கவனிச்சோம். அது மட்டுமில்லை. நான் போகலைன்னா ‘பாஸ்’ ஏன்னு கேப்பார்.’’

‘‘அவர்கிட்டே உண்மையான காரணத்தைச் சொல்ல வேண்டியதுதானே’’ என்று பதிலடி தந்தாள் நளினி.

பிபின் ஒரு புன்னகையை மட்டுமே அவளுக்கு மறுமொழியாகத் தந்துவிட்டு வெளியேறிவிட்டான்.  நளினி தன்னிடம் வேண்டிக் கேட்பதை மறுக்கும் துணிச்சல் அவனிடம் இல்லை. அவனது மெல்லிய புன்னகை, நளினியிடம் ஒரு சிறிய நம்பிக்கைக் கீற்றைத் தோற்றுவித்திருந்ததால் இன்று காலையில் மீண்டும் அவனை வருமாறு வற்புறுத்தினாள் அவள்.

‘‘மத்தியானத்துக்கு முன்னாலே கட்டாயம் திரும்பி வந்திடுங்க, முக்கியமான ஆட்கள் நிறையப்பேர் இன்னிக்கு வராங்க.’’

பிபின் ‘வரமாட்டேன்’ என்று சொல்லவில்லை.  அவன் சரியான நேரத்தில் வந்துவிடுவான் என்கிற நம்பிக்கை நளினிக்கு இருந்தது. அவன் ஏன் வராமல் இருக்கப்போகிறான்?  இந்தக் கட்டம் வரை அவள் வந்து சேர்வதற்கு மிக அதிகமாகவே உதவியிருக்கிறான் அவன்.  இதற்கு முன்னால் அவளுடைய பாராட்டு விழாக்கள் சிலவற்றுக்கு அவன் வராமல் இருந்திருக்கலாம். ஆனால், இன்றைய நிகழ்ச்சிக்கு வரவேண்டுமென்ற விருப்பம் நிச்சயம் அவனுக்கு இருக்கும்.

ஒரு வேளை அவனுக்கு அது மறந்து போயிருக்குமோ? அதற்கு வாய்ப்பே இல்லை. புதிதாக வேறு ஏதோ காரணம்தான் முளைத்திருக்க வேண்டும். அது என்னவாக இருக்கும் என்று எண்ணி ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தாள் அவள்.  இந்த மன உளைச்சலிலேயே நேரம் போய்விட, நிகழ்ச்சிக்குத் தாமதமாகிவிடும் என்பதால் நளினி உடையணிந்து கொண்டாள்.  சிறிது நேரம் கழித்து உறுதியான தீர்மானத்துக்கு வந்தவளாகக் கிளம்பிச் சென்றாள்.

நளினிக்கு பிபின் மீது நம்பிக்கை இருந்தது. அவர்களது வாழ்க்கையின் வெவ்வேறு நேரத்தில் அவன் அவளுக்குப் பக்கத் துணையாகத்தான் இருந்திருக்கிறான்.  அதனால் அவன் மீது அவநம்பிக்கை கொள்ள அவள் விரும்பவில்லை.


‘‘ஏதோ ஒரு அற்ப விஷயத்துக்காக வாழ்நாள் முழுவதும் கொண்டிருந்த நம்பிக்கையைக் கை நழுவவிடுவது முட்டாள்தனம். ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் ஏதாவது ஒரு காரணம் இருக்கும்” பிபின் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் இவை.

பாராட்டு விழாவில் ஏதோ கனவில் நடப்பதுபோல எல்லாம் நடந்து முடிந்தன. பிபின் இறுதிவரை வரவே இல்லை.  தன்னிரக்கத்தோடு கூடிய கவலை அவளது மூளையைக் கவ்விக்கொண்டது. நிகழ்ச்சியில் ஆற்ற இருந்த உரையை அவளால் சரிவரப் பேச முடியவில்லை.

கண்ணீர்விட்டுக் குமுறிவிடத் துடிக்கும் மனநிலையுடன் வீடு வந்து சேர்ந்தாள் அவள். பிபின் இன்னும்கூட வீடு திரும்பியிருக்கவில்லை.

அவன் வீட்டுக்கு வரும்போது இரவு ஒன்பது மணியாகி இருந்தது.  இன்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் கண்ணீர் விட்டுக் கதறி விடப்போகிறோம் என்பதை நளினி உணர்ந்திருந்தாள்.

‘‘நீ சாப்பிட்டாச்சா?’’

எந்தப் பதிலும் இல்லை.

‘‘எனக்காகக் காத்திருக்க வேண்டாம்னு உன்கிட்டே சொல்லியிருக்கேன் இல்லையா? நீ சாப்பிட்டிருக்கலாமே?’’

நளினியின் மனதுக்குள் அதற்கான விளக்கம் அமைதியாக எழுந்தது.

‘நான் உங்களுக்காகக் காத்திருப்பது, உங்களோடு சேர்ந்து சாப்பிட ஆசைப்படுவது இவற்றையெல்லாம் ஒரு பெண்ணியவாதி என்று சொல்லிக்கொள்வதால் நீங்கள் மாற்றிவிட முடியாது.  இதெல்லாம் உள்ளூர ஒவ்வொருவரும் எப்படி உணர்கிறோம் என்பதைப் பொறுத்தது.’

கண்ணீரைக் கட்டுப்படுத்தியபடி, ‘‘காலையிலே தொடங்கின உங்க விருந்து இப்பதான் முடிஞ்சதாக்கும்?’’ என்று தன் குரலை உயர்த்திக் கொண்டு கோபத்தோடு கேட்டாள் அவள்.

ஒரு பூசலைத் தொடங்க வேண்டுமென்ற நோக்கத்தோடு இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்பதில் பெண்கள் மிகவும் தேர்ந்தவர்கள். அதற்கான பதிலும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், இன்று நளினிக்கு வித்தியாசமான ஒரு பதிலே கிடைத்தது.

‘‘நான் ரொம்பக் களைச்சுப் போயிருக்கேன்… இதோபாரு, இதையெல்லாம் என்னாலே பொறுத்துக்க முடியாது.’’

நளினி வியப்போடு பிபினை ஏறெடுத்துப் பார்த்தாள்.  அவனால் அப்படிப் பொறுத்துக்கொள்ள முடியாதது எது? அப்படி என்ன நடந்துவிட்டது?

‘‘நான் மனிதர்களை நேசிப்பவன், எவரையும் காயப்படுத்தவோ வருத்தப்படுத்தவோ எனக்குப் பிடிக்காது’’ என்று ஒருமுறை பிபின் அவளிடம் கூறியதுண்டு.  

இப்படிப்பட்ட வார்த்தைகளால்தாம் அவனிடம் பெருமதிப்புக் கொண்டிருந்தாள் அவள்.  எல்லார் மீதும் அன்பு செலுத்தும் ஓர் இதயத்தைவிட விலை உயர்ந்ததாக வேறெதுதான் இருக்கமுடியும்?

‘‘என்ன ஆச்சு?’’

‘‘ஒண்ணும் இல்லை. ஏன் கேட்கிறே?’’

பிபினின் முகத்தில் கவலையின் நிழல் நன்றாகவே படர்ந்திருந்ததைக் காணமுடிந்தது.  ஒரு வகையான பதட்டமும் கூட.

எதுவுமே நடக்கவில்லை என்பதை நளினியால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. அவர்கள் நேற்றோ இன்றோ அறிமுகமானவர்கள் இல்லை. பல ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருபவர்கள். ஆனாலும் தன் இயற்கையான சுபாவத்தின்படி அவனை அதற்கு மேலும் அவள் தூண்டித் துருவிக்கொண்டிருக்கவில்லை. அவளது மௌனம் பிபினைக் கூடுதல் பதட்டத்துக்கு உள்ளாக்கியது.

‘‘எதுவும் பேசாம மௌனமா இருக்கிறதுகூட ஒரு வகையான அகங்காரம்தான். நான், சுய கௌரவத்தோட வாழ ஆசைப்படறேன். நான் ஒரு ஆம்பிளை” என்றான் அவன்.

இம்முறை தன் இதயத்தில் ஓங்கிக்குத்துவிட்டது போன்ற வலியை அனுபவித்தாள் நளினி.

‘உன் விருப்பப்படி எங்கே வேண்டுமானாலும் நீ என்னைக் கூட்டிக் கொண்டு போவதையும், நீ விரும்பும் எந்த இடத்திலும் என்னை நிறுத்தி வைப்பதையும் – இதையெல்லாம் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.  நான் ஒரு ஆண். உனக்குப் பின்னால் நின்றபடி, உன்னைப் பாராட்ட வருபவர்களிடமெல்லாம் என்னை நீ அறிமுகப்படுத்திக் கொண்டிருப்பதில் எனக்கு விருப்பமில்லை’ என்று பிபின் சொல்லாமல் சொல்வதைப் போல் இருந்தது அவளுக்கு.

மனித மனங்களின் வேறுபட்ட பல விகாரங்களைத் தன் எழுத்துகளில் விரிவாகச் சித்திரித்திருந்தாள் நளினி. ஆனால், தனக்கு மிகவும் நெருக்கமான ஓர் இதயத்தைப் புரிந்துகொள்ள மட்டும் அவள் தவறியிருந்தாள். தனக்குக் கிடைத்திருக்கும் இந்த விருது, தன் சாதனைகளால் கிடைக்கவில்லை, தன் தோல்வியால்தான் அது கிடைத்திருக்கிறது என்பது நளினிக்குப் புரியத் தொடங்கியது.

( ‘மைதிபா’ என்கிற தலைப்பில் மணிப்புரி மொழியில் முதலில் (2007) வெளியான இந்தக் கதையை எழுதியவர் நிங்கோம்பாம் சர்மா. (Ningombam Sarma)

(Source : CRAFTING THE WORD WRITINGS FROM MANIPUR EDITOR THINGNAM ANJULIKA SAMOM ZUBAAN)

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....