துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

26.2.24

வேட்டை நாய்-மொழிபெயர்ப்புச் சிறுகதை

                                       வேட்டை நாய்

                                               ஆங்கில மூலம் – லிந்தோய் சானு

                                    தமிழாக்கம்: எம் ஏ சுசீலா – [WARI தொகுப்பிலிருந்து]

 சொல்வனம் இணைய [304 ஆம் ] இதழில் வெளிவந்திருக்கும் என் மொழிபெயர்ப்புச் சிறுகதை.

 

பிரெல் கல்லூரியிலிருந்து அப்போதுதான் திரும்பி வந்திருந்தான்.  அவன் வீடு ஏற்கனவே ரணகளமாகி இருந்தது.  அவனது குடிகாரத் தந்தை மீண்டும் வீட்டுக்கு வந்திருந்தார்.  அப்போது அவனது அம்மாவும், இளைய தங்கையும் மட்டுமே வீட்டில் இருந்தனர்.  ஒவ்வொரு முறை வீட்டைவிட்டுப் புறப்படும்போதும் தங்கள் வீட்டு சமையலறையின் மண்தரையில் எந்தச் சடலமும் விழுந்துவிடக் கூடாதே என்று அவன் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டியதாக இருந்தது.

பிரெல் தரையில் சிதறிக்கிடந்த கண்ணாடிச் சில்லுகளை விரைவாகப் பொறுக்கியெடுத்தபடி அழுகையை நிறுத்துமாறு தன் தங்கையிடம் சொல்லிவிட்டுத் தங்கைக்கு முன்னால் அழுவதை நிறுத்துமாறு தன் தாயையும் கடிந்து கொண்டான்.  அவனது தாய் எழுந்து நின்று தன் கண்ணீரைத் துடைத்தபடி உடைந்த குரலில் அவனிடம் புகார் செய்தாள்.

‘‘வீட்டுக்கு வந்த அந்த ’மஹாசந்தான்’ (போக்கிரி) உன்னோட பரீட்சை ஃபார்ம் நிரப்பிக்கொடுக்கறதுக்காக வச்சிருந்த பணத்தை எடுத்துக்கிட்டார் தம்பி! அவரோட மல்லுக்கட்டிப் போராடினபோது இது உடைஞ்சு போச்சு’’ என்றபடி உடைந்த கண்ணாடிப் பாத்திரங்களைச் சுட்டிக் காட்டினாள் அவன் தாய்.

‘‘நாம கண்ணாடிப் பாத்திரமே வச்சுக்க வேண்டாம்னு உங்க கிட்டே நான் ஏற்கனவே சொல்லியிருக்கேனேம்மா, முதல்லே நம்ம  வீட்டிலே பணம் இருக்குன்னு நீங்க அவர்கிட்டே சொல்லியிருக்கக் கூடாது! அது உங்க தப்புதான்…. நீங்களும் உங்க ஓட்டை வாயும்….’’

அவள் ஏதோ கத்திக் கொண்டே இருந்தாள்.  அவன் அவள் பக்கம் திரும்பிப் பார்க்காமல் தன் தங்கையின் கண்ணீரைத் துடைத்துவிட்டபடி அவளுக்கு ஏதாவது காயம் ஏற்பட்டிருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தான்.

‘‘ஐயோ கடவுளே! நான் அப்படியெல்லாம் சொல்லவே இல்லை.  அவர் வழக்கம் போல நல்லாக் குடிச்சிட்டு வந்தார்.  விக்கிறதுக்காக என்னோட ‘பேஃனக்’ கைக் ( துப்பட்டா போன்ற உடை ) கேட்டாரு! ஏற்கனவே என் உடம்பை மூடிக்கப் பாதித்துணிதான் இருக்கு….! இதிலே அவருக்குக் கொடுக்க என்கிட்டே என்ன இருக்கு? அப்புறம் அவராவே அலமாரிக்குள்ளே எல்லாம் குடைஞ்சு தேடிப் பார்த்து எடுத்துக்கிட்டார்.  அதிலே என் தப்பு எதுவுமில்லேப்பா…. எதுவுமே இல்லை’’

‘‘சரி….. ரொம்ப நல்லது! எப்படியோ நான் பரீட்சைக்கு ஃபார்ம் அனுப்ப  முடியப் போறதில்லை.  என்னாலே படிக்க முடியாது…. அதோட நிறுத்துங்க பேச்சை’’

என்று கூறியபடி தன் சின்னத் தங்கையைத் தூக்கிக் கொண்டுபோய்ப் படுக்கையில் படுக்க வைத்து, உடனே தூங்குமாறு அவளுக்குக் கட்டளையிட்டான் பிரெல்.  அந்தச் சிறுமி தன்போர்வைக்குள் விரைவாகச் சுருண்டு கொண்டாள்.

‘‘எமா!(அம்மா), நான் பக்கத்திலே இல்லாதப்ப அப்பாவோட சண்டை போடாதீங்க.  அவர் என்ன செய்வார்னு உங்களுக்குத் தெரியாது, கடவுள் சத்தியமா அவர் ஒரு பயங்கரக் குடிகாரர்’’ என்று பல்லைக் கடித்துக் கொண்டே பேசினான் பிரெல்.

‘‘நீ வீட்டிலே இல்லை, காலேஜுக்குப் போயிருக்கேன்னு அவருக்குத் தெரியுது…. அதனாலே அந்த நேரம் பார்த்து பணத்தை எடுத்துக்கலாம்னு ஆவேசமா வந்திடறாரு…. அந்த நேரத்திலே போய் டீயை உறிஞ்சிக்கிட்டு, நான் பாடுபட்டு சம்பாதிச்ச பணத்தை அவர் திருடிக்கிட்டுப் போறதைப் பார்த்துக்கிட்டிருக்கவா சொல்றே?’’

‘‘ஷ் ஷ் ஷ்…..’’ என்று தன் உதட்டின் மீது விரலை வைத்து அவளை அடக்கியபடி தன் தங்கை உறங்கும் அறையின் பக்கம் திரும்பிப் பார்த்தான் பிரெல்.

‘‘ஐயோ ’எமா’ (அம்மா)! எப்படி இருந்தாலும் அவர் எடுத்துக்கத்தான் போறார்.  விட்டுத் தள்ளுங்க… ’அபெமா’ (தங்கச்சி) எப்படி பயந்து போயிருக்கா பாருங்க!  ஒவ்வொரு நாளுமே அவ இப்படித்தான் நடுங்கிக்கிட்டிருக்கா. பைத்தியம் பிடிச்சிடும் போல இருக்கு அவளுக்கு’’

‘‘அவ நல்லாதான் இருக்கா.  இந்த மாதிரி சூழ்நிலைகளை எப்படி சமாளிக்கிறதுன்னு அவ கத்துக்கிட்டாகணும். நம்ம குடும்பத்திலேயோ இப்ப இது வாடிக்கையாப் போச்சு.  நீ அவளைப் பத்தி என்னதான் நினைச்சுக்கிட்டிருக்கே? ஒரு இளவரசி மாதிரி வளர்க்கணும்னா நினைக்கிறே? இவங்களையெல்லாம் எப்படி உதைச்சுத் தள்ளலாம்னு இந்த நேரத்துக்குள்ளே அவ கத்துக்கிட்டிருப்பா’’

‘‘எமா! என்னாலே நம்பவே முடியலை.  நீங்க எங்களுக்காக நிஜமாவே பாடுபட்டு உழைக்கிறீங்கதான்.  ஆனாலும் உங்க கிட்டே இருந்து இந்த மாதிரிப் பேச்சையெல்லாம் நான் எதிர்பார்க்கவே இல்லை.’’

உடைந்து விழுந்திருந்த கண்ணாடித் துண்டுகளைப் பொறுக்கிக் கொண்டிருந்த அம்மாவை சமையலறையிலேயே விட்டு விட்டுத் தான் வளர்த்து வரும் வாத்துகளுக்குத் தீனிபோடுவதற்காக வீட்டருகே உள்ள சிறிய குளத்தை நோக்கிச் சென்றான் பிரெல்.

பிரெல் தங்களை நோக்கித் தீனியோடு வருவதைப் பார்த்த வாத்துகளெல்லாம் மகிழ்ச்சியோடு ‘‘க்வாக் க்வாக்’’ என்று ஆரவாரம் செய்தன.

‘‘நல்லா சாப்பிட்டு நிறைய முட்டை போடுங்க’’ என்று வாத்துகளிடம் முணுமுணுத்தான் அவன்.  குளத்துக்குள் இறங்கிக் குளிப்பதற்காகத் தன் உடைகளைக் கழற்றிவிட்டுப்  பழைய துண்டு ஒன்றால் தன் உடம்பை கவனமாக சுற்றிக் கொண்டான்.  குளிக்கும்போதே வியர்வையில் நனைந்திருந்த தன் கல்லூரிச் சீருடையை, அங்கே இருந்த மூங்கிலால் செய்யப்பட்ட படித்துறை ஒன்றில் வைத்துத் துவைத்தான்.  ஈரத்துணிகளைக் கொடியில் காயவைத்த பிறகு, தான் சுற்றிக் கட்டிக்கொண்டிருந்த துண்டோடு உடை மாற்றிக் கொள்வதற்காகத் தன் அறைக்குள் நுழைந்தான்.

பிறகு வெளியே வந்து தன் சைக்கிளில் ஓடிப்போய் ஏறியபடி ‘இபோடோம்பி அண்ட் சன்ஸ்’ பணிமனையை நோக்கி முழு வேகத்தோடு அதைச் செலுத்தினான்.’பபங்’(பெரியவர்) இபோடோம்பி, துரு நிரம்பிக் கிடந்த அந்தப் பணிமனையின் வாசலிலேயே நின்று கொண்டிருந்தார்.  துருப்பிடித்துப் போய்ப் பழுதான ஏராளமான வாகனங்கள் காலம் காலமாக அங்கே குவிந்து கிடந்தன.

‘‘ஏ ’அங்காங்’ (பையா)! கொஞ்சம் சீக்கிரம் வான்னு எத்தனை தரம் சொல்றேன் ? கேக்கவே மாட்டேங்கிறே….. இப்ப குளிச்சு முடிச்சிட்டு ரொம்ப சுத்தமா டிரஸ் பண்ணிக்கிட்டு வந்திருக்கிறதைப் பாரு! முதல்லே உன்னோட வேலை என்னன்னு முதலிலே உனக்குத் தெரியுமா? நீ எண்ணெய்ப் பிசுக்கைத் துடைக்கிறவன்….. எண்ணெய்ப் பிசுக்கை….’’

பிரெல் சைக்கிளில் உள்ளே நுழையும்போதே இபோடோம்பி அவனைக் கடிந்து கொண்டு இப்படி சத்தம் போட்டார்.  பிரெல் மன்னிப்புக் கோரும் வகையில் ஒரு சிறு புன்னகை செய்து விட்டுத் தான் பழுது பார்த்து வந்த ஸ்கூட்டர் அருகே வேகமாகச் சென்றான்.  உதட்டிலே புகையும் சிகரெட்டோடு, 

‘அவன் வேணும்னேதான் இப்படிச் செய்யறான்.  நேரத்தை வீணாக்க வழி பார்க்கிறான், அதுதான் இப்படி லேட்டா வர்றான்.  ஏதோ காலேஜிலே படிக்கிற பையனாச்சேன்னு கொஞ்சம் சலுகை காட்டினா. அப்பப்ப இப்படி என் உயிரை எடுத்திடறானே’ என்று ‘பபங்’ இபோடோம்பி முணுமுணுத்துக் கொள்வது அவனுக்குக் கேட்டது.

ஸ்கூட்டரின் ‘டேங்க்’கை சுத்தம் செய்துவிட்டு என்ஜினை சீரமைப்பதில் ஈடுபட்டிருந்த சக பணியாளனுக்கு உதவி செய்து கொண்டிருந்தான் அவன்.  எல்லா உதிரி பாகங்களையும் கழற்றி எடுத்துவிட்டு  அவற்றைத் திரும்பப் பொருத்தும் வேலையை அவர்கள் இருவரும் திறமையாகச் செய்துகொண்டிருந்தனர்.  வழக்கம் போல மாலை வரை வேலை செய்து கொண்டிருந்துவிட்டுக் கிளம்பத் தயாரானான் அவன்.  பெரும்பாலான தொழிலாளர்கள் ஏற்கனவே வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றிருந்தனர்.  இபோடோம்பி மட்டும் சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி சிகரெட்டைப் புகைத்துக் கொண்டே செய்தித்தாளை வாசித்துக் கொண்டிருந்தார்.  மற்றவர்களை விட வயதில் சிறிய தொழிலாளியான பிரெல், எல்லோரும் போன பிறகு, அந்த இடத்தை சுத்தம் செய்துகொண்டும் பழுதுபார்க்கும் கருவிகளை அடுக்கி வைத்துக் கொண்டும் இருந்தான்.  தான் பார்க்கும் வேலைக்குச் செலுத்தும் மரியாதையாக அதைச் செய்து வந்த அவன், ஒரு போதும் அது குறித்து அலுத்துக் கொள்வதில்லை. சொல்லப்போனால்,சரியான நேரத்துக்கு வரமுடியவில்லையே என்ற சிறிய குற்ற உணர்வே அவனிடம் இருந்தது.  அலங்கோலமாகக் கிடந்த பணிமனையை அமைதியாக சுத்தம் செய்து கொண்டிருந்தான் பிரெல்.  கருவிகளை ஒழுங்காக அடுக்கி வைத்தான்; குப்பை கூளங்களை அகற்றித் தரையை சுத்தம் செய்தான்.  அப்போது பருத்த தொந்தி கொண்ட குட்டையான ஒரு ஆசாமி திடீரென்று பணிமனைக்குள் ஓடி வந்தார்.  உயர்தரமான சுத்தமான சூட் அணிந்திருந்த அவர்,

‘‘இபோடோம்பி….! நான் பெரிய சிக்கல்லே மாட்டிக்கப் பார்த்தேன்.  உன்னோட வேலைக்கார ராஸ்கல்கள் என்னோட என்ஜினை சரியாவே மாட்டலை’’

‘‘ஐயையோ…. என்ன ஆச்சு?’’ என்றபடி கையில் புகைந்து கொண்டிருந்த சிகரெட்டைக் காலடியில் போட்டு நசுக்கியபடி இடத்தை விட்டு வேகமாக எழுந்திருந்தார் இபோடோம்பி.

‘‘மலைமேலே வண்டி போயிக்கிட்டிருந்தப்ப பாதி வழியிலேயே நின்னு போச்சு ,அதுதான் சிக்கல். சரியா ‘செக்’ பண்ணிக் கொடுங்கன்னு உங்க கிட்டே நான் சொன்னேனா இல்லையா? ஐயோ… கடவுளே…. நான் பாதி வழியிலே அப்படியே மாட்டிக்கிட்டேன்’’

‘‘நான் கேட்டேனே அவங்க கிட்ட..,கொஞ்சம் இருங்க’’ என்றபடி தர்மசங்கடத்தோடு சுற்றும் முற்றும் பார்த்த இபோடோம்பியின் கண்ணில், கருவிகளை சுத்தம் செய்து கொண்டிருந்த பிரெல் மட்டுமே  தென்பட்டான்.

‘‘ஏய் பிரெல்…. வா இங்கே’’ என்று கூச்சல்போட்டார் அவர்.

துடைத்துக் கொண்டிருந்த துண்டைத் தரையில் போட்டு விட்டு பவ்வியமாக அவரருகே சென்றான் பிரெல்.

‘‘நீ என்னதான் செஞ்சு தொலைக்கிறே….? இந்த அங்கிளோட காரை முழுசா செக் பண்ணணும்னு உன்கிட்டே சொல்லியிருந்தேனா இல்லையா?’’ கிட்டத்தட்ட பிரெலை அடிப்பது போல அவன் மீது இபோடோம்பி பாய, பிரெல் சற்றுப் பின்வாங்கிக் கொண்டபடி நடுக்கத்தோடு பதிலளித்தான்.

‘‘நேத்து அவரோட கார் வேலையை நான் செய்யலை. . . . .  கோகெனும் அவனோட சேர்ந்த இன்னும் கொஞ்சம் பேரும்தான் அதை செஞ்சுக்கிட்டிருந்தாங்க. நான் ’டா’ மேலமோட (மேலம் அண்ணனோட) சேர்ந்து ஸ்கூட்டர் ரிப்பேர்தான் பார்த்துக்கிட்டிருந்தேன்’’

‘‘வாயை மூடு! அதை நல்லபடியா சரியாக்கிக்கித் தரணும்னு நான் சொன்னப்ப நீயும்தானே இருந்தே.  உன்கிட்டே மெனக்கிட்டுத் தனியாவே அதை சொன்னேன்’’

இபோடோம்பி மிகுந்த கோபாவேசத்துடன் பிரெலைக் கேவலப்படுத்திக் கொண்டிருந்தார்.  தன்னுடைய பணக்கார வாடிக்கையாளர்களில் ஒருவர் தன்னைத் தர்மசங்கடப்படுத்தி விட்டதால் ஏற்பட்ட கோபத்தை பிரெல் மீது காட்டி அவனைப் பழி தூற்றிக் கொண்டிருந்தார் அவர்.  பிறகு அந்தக் குட்டையான மனிதரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, அதை சரி செய்து தருவதாக வாக்களித்தார். அந்த மனிதர் பிரெலைக் கடுகடுப்போடு பார்த்துக் கொண்டே தயக்கத்துடன் வெளியேறிச் சென்றார்.

‘‘ஐயா…. நிஜமாவே அந்தக் காரை சரிபார்த்துக்கிட்டிருந்தது சோசென்தாங்க ஐயா’’ – என்று அந்தக் குட்டை மனிதர் கண்பார்வையிலிருந்து மறைந்த பின் அமைதியாக இபோடோம்பியிடம் சொன்னான் பிரெல்.

‘‘ஏய்…. பேசாம வாயை மூடு! நீ எப்பவுமே லேட்டாதான் வேலைக்கு வரே! ஒழுங்கா வர்றதில்லை, அலட்சியமா வேற  இருக்கே, உன்னாலே எனக்கு எப்பவுமே பிரச்சினைதாங்கிறதிலே சந்தேகமே இல்லை.  ஆனாலும் ஏதோ பாவமேன்னு இன்னும் கூட உன்னைப் பொறுத்துக்கிட்டிருக்கேன்…. சரி சரி போ போ வீட்டுக்கு’’ என்று கூச்சலிட்டபடி தன் சட்டைப் பையிலிருந்து இன்னொரு சிகரெட்டைத் துழாவி எடுத்துக்க்ண்டார்  இபோடோம்பி.

அவமானத்தை விழுங்கிக்கொண்டபடி தன் சைக்கிளை நோக்கி நடந்தான் பிரெல்.  அவன் சைக்கிளில் ஏறும்போது ‘‘இந்த மாச சம்பளத்திலே கொஞ்சம் ‘கட்’ பண்ணப் போறேன் பார்த்துக்கோ.  எப்படியும் நீ ஒரு பாடம் கத்துக்கிட்டாகணும் பையா’’ என்று பின்னாலிருந்து இரைந்து கொண்டிருந்தார் இபோடோம்பி.

பிரெல் சைக்கிளை ஓட்டிக் கொண்டு வீட்டுக்குச் சென்றான்.  இரவு படுக்கும் முன் மீண்டும் ஒரு தரம் குளிக்க வேண்டும் போலிருந்தது அவனுக்கு.

நடந்துபோன விஷயத்தைக் குறித்து அவனுக்குக் கோபம் வரவில்லை.  அதனால் எந்தப் பயனும் இல்லையென்பதை அவன் அறிந்திருந்தான்.  அம்மாவிடம் மட்டும்  சொல்லலாமா என்று தோன்றியது.  ஆனால் அதனால் ஆகப்போவதுதான் என்ன?

வீட்டுக்கு வந்ததும் தங்கை எப்படி இருக்கிறாள் என்று பார்ப்பதற்காக அவளது அறைக்குச் சென்றான் அவன்.  எண்ணெய் விளக்கின் மங்கலான வெளிச்சத்தில் அவள் சத்தமாகப் பாடம் படித்துக் கொண்டிருந்தாள்.  அவனது அம்மா படுக்கையில் உட்கார்ந்து தனது வாடிக்கையாளருக்காக ‘பேஃனக்’கைக் கையால் தைத்துக் கொண்டிருந்தாள். சிம்னி  விளக்கின் இலேசான வெளிச்சத்தில் தன் கண்களை இடுக்கிப் பார்த்தபடி அந்தக் கைவேலையில் ஈடுபட்டிருந்தாள் அவள்.

‘‘ ‘இபங்கோ’(பையா)… நீ வந்தாச்சா! சரி, போய் அடுப்பைப் பத்த வை.  இதோ ஒரு நிமிஷத்திலே இதை முடிச்சிட்டு வந்திடுவேன்’’ என்று தங்கையைப் பார்த்துக் கொண்டிருந்த அவனிடம் சொன்னாள் அம்மா.

‘‘முதல்லே நான் குளிக்கணும்’’ என்று தன் உடைகளைக் களைந்தபடியே பதிலளித்தான் பிரெல்.

‘‘நீங்க அதை அவசரமா முடிக்க வேண்டியிருந்தா நான் வேணும்னா சமைச்சிடறேன்’’ என்றான் அவன்.

‘‘பரவாயில்லை. …. வேண்டாம்.  என்னாலே இந்த வெளிச்சத்திலே சரியாப் பார்த்துத் தைக்க முடியலை.  நாளைக்கு முடிச்சுக்கறேன்’’

அதை உடன்பட்டதற்கு அடையாளமாக இலேசாகத் தோளைக் குலுக்கி ‘சரி’ என்று சொல்லிவிட்டு பிரெல் குளத்தை நோக்கி நடந்தான்.

களைப்புத் தீரக் குளித்தபிறகு படுக்கையில் நீட்டி நிமிர்ந்து படுத்தபடி சாப்பாட்டுக்காகக் காத்துக் கொண்டிருந்தான் அவன்.  அவனது தங்கை தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சத்தம் போட்டுத் தன் பாடங்களைப் படித்துக் கொண்டிருந்தாள்.  வீட்டுக் கொல்லைப் புறத்தில் கிடைத்த காய்கறிகளை வேகவைத்து சமையல் செய்து கொண்டிருந்தாள் அம்மா.

அவன் தன் தந்தையைப் பற்றி நினைத்துப் பார்த்தபடி வெறுப்போடு கண்களை மூடிக்கொண்டான்.   மோசமான குணமும், அருவருக்கச் செய்யும் நாற்றமும் கொண்ட ஓர் அந்நியர் அவர்.  அவர் சம்பாதிக்காமல் போனாலும், வீட்டில் இருக்கும் பணத்தை எடுத்து வீணடிக்காமல் இருந்தால் போதுமே என்று நினைத்துக் கொண்டான் அவன்.

‘‘நான் என்னோட குடும்பத்தை நல்லாப் பார்த்துப்பேன்’’ என்று தனக்குத்தானே சொல்லியபடி தன்னை ஆறுதல்படுத்திக் கொண்டான்.  கண்களைத் திறந்து பார்த்து மனதை மாற்றிக் கொள்ளச் சற்றே முயற்சித்தபோது வீட்டுக் கூரையில் இருந்த பொத்தல்களைப் பார்த்ததும் மீண்டும் அவனுள் கோபம் எழுந்தது.

சுவர்ப் பக்கமாய்ப் புரண்டு படுத்தபடி வேறு விஷயங்களைப் பற்றி நினைத்துப் பார்க்க முயற்சி செய்தான்.  கொஞ்ச நேரம் ஓய்வெடுப்பதற்குள் வீட்டுக்கு வெளியில் லேசாக ஏதோ சத்தம் கேட்க உடனே எழுந்து உட்கார்ந்தபடி அந்தச் சத்தம் நிஜமாகவே வருகிறதா என்று கவனித்தான்.

‘‘பிரெல் எங்கே? பிரெல் வீட்டிலே இருக்கானா?’’ என்று இடிமுழக்கம் போன்ற சத்தம் அவன் வீட்டு வாசலில் கேட்டது.  முன் கதவின் தாழ்ப்பாளை அம்மா திறந்து விடுவது அவனுக்குக் கேட்டது.  உடனே ஒரு சட்டையை உருவி அணிந்து கொண்டு, அந்த ஆள் யாரென்று பார்க்க விரைந்தான்.

அம்மா கதவைத் திறந்ததும் சில முரட்டு மனிதர்கள் டார்ச் ஏந்தியபடி வெளியே நின்றுகொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது.

‘‘ஏய் பிரெல்! உங்கப்பாவோட பணம் உங்கிட்டே இருக்காமே, நிஜந்தானா?’’ –அப்பாவின் சூதாட்டக் கூட்டாளி ஒருவன் அவனிடம் இவ்வாறு கடுமையாகக் கேட்டான்.

‘‘என்ன பணம்? எல்லாத்தையும்தான் குடிக்கிறதிலேயும், சூதாடறதிலேயும் அவர் தொலைச்சிட்டாரே? அதுக்கப்புறம் இவன்கிட்டே என்ன இருக்கும்?’’

– அவனது அம்மா, தன் மகனைக் காப்பாற்றும் வகையில் முன்னால் பாய்ந்து வந்து பேசினார்.

‘‘’டாடா’ (மாமன்) தான் அவரோட பணத்தை மகன்கிட்டே கொடுத்து வச்சிருக்கிறதா சொன்னாரு,.. அதை வாங்கிக்கதான் நாங்க வந்திருக்கோம்’’

– அந்த முரட்டு மனிதன் பொறுமையிழந்தவனாய்ப் பேசினான்.

‘‘என்கிட்டே அப்படி எதுவும் இல்லை’’ என்று நறுக்குத் தெறித்தாற் போல பதில் சொன்னான் பிரெல்.

‘‘அப்படீன்னா சரி! உங்க வீட்டுக் கொல்லைப் பக்கத்திலே இருக்கிற எல்லா வாத்தையும் நாங்க எடுத்துக்கறோம்’’ என்றபடி வீட்டின் பின்புறத்தைப் பேராசையோடு பார்த்தான் அந்த மனிதன்.

‘‘முடியாது, அதுக்கு நான் விட மாட்டேன்’’ என்று கடுமையாகச் சொன்னான் பிரெல்.

‘‘இதிலே ‘முடியாது’ங்கிற வார்த்தைக்கே இடமில்லையே’’ என்று சிரித்த அந்த மனிதன், தொடர்ந்து கோபத்தோடு பேசினான்.

‘‘உங்கப்பா எங்களுக்கு ரெண்டு துண்டு நிலம் கடன்பட்டிருந்தார்.  ஆனா…. அவர் ஒரு உதவாக்கரை, எதுக்கும் பிரயோஜனமில்லாதவர்னு தெரிஞ்சதாலே அவராலே எதைக் கொடுக்க முடியுமோ அதை மட்டும் வாங்கிக்கிட்டு அவரை விட்டுடலாம்னு நாங்க முடிவு செஞ்சிருக்கோம். தம்பி! அந்த வாத்தையெல்லாம் கொண்டுவா’’

‘‘முடியாதுன்னு நான் ஏற்கனவே சொல்லிட்டேன்’’ என்று கண்டிப்பாகச் சொன்னான் பிரெல்.

‘‘இப்ப நான் என்ன சொன்னேங்கிறது உன்காதிலே விழலியா என்ன?’’ என்றபடி பிரெலுக்கு நெருக்கமாக வந்து நின்று கொண்டான் அந்த மனிதன்.  பிரெல், அவனை நிமிர்ந்து பார்த்துத் தன் குரலை மேலும் கடுமையாக்கியபடி,

‘‘அதெல்லாம் என்னோட வாத்து, எங்கப்பாவோடது இல்லே’’ என்றான்.

‘‘அதைப்பத்தி எங்களுக்கென்ன வந்தது? ஏண்டா…. சரிதானே, நான் சொல்றது’’ என்று தன் கூட்டாளிகளைத் திரும்பிப் பார்த்து அவர்களையும் துணைக்கு சேர்த்துக் கொண்டான் அந்த முரடன்.  அவர்களும் தலையாட்டி ஒப்புதல் தெரிவித்தனர்.

‘‘சரிதான், விடு! நானே பார்த்துக்கறேன்.  கொஞ்சம் வழிவிட்டு நகர்ந்துக்கோ’’  என்றபடி பிரெலைப் பிடித்துத் தள்ளிவிட்டு விட்டு வீட்டின் பின் புறத்துக்குச் சென்றான் அவன்.

பிரெல், கலவரமடைந்தவனாய்ச் சுற்றுமுற்றும் பார்த்தான்.  அவனுடைய தாயும், தங்கையும் அழுது கொண்டிருந்தார்கள்.

‘‘என்னோட வாத்தையெல்லாம் எப்படித் தொடறீங்கன்னு பார்த்திடறேன், முட்டாப்பசங்களா? அதெல்லாம் என்னோடதுடா’’

என்று கூச்சலிட்டபடியே அவர்களுக்குப் பின்னாலேயே ஓடினான் பிரெல்.  அவர்கள் அவனை ஒரு பொருட்டாகக் கூட எண்ணாமல் வாத்துக்களைப் பிடிப்பதில் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தனர்.  கொழு கொழுப்பாக இருந்த அந்த வாத்துகள் அந்த மனிதர்களின் கையில் சிக்காமல் போராடிக் கொண்டிருந்தன.  தங்களை வளர்ப்பவர்கள் அவர்கள் இல்லை என்பது அவற்றுக்குப்புரிந்திருக்க வேண்டும்.  ‘க்வாக் க்வாக்’ என்று அவை பயங்கரமாக ஓலமிட்டன.  பிரெல் அவற்றை விடவும் உச்சஸ்தாயியில் கத்திக் கொண்டிருந்தான்.  கோபத்தில் ஒரு மனிதன் மீது அவன் குத்துவிட, வந்திருந்த கூட்டத்தின் ஆவேசம் அவன் மீது திரும்பியது.  மூச்சுக்கூட விட முடியாத அளவுக்கு அவர்கள் அவனை அடித்துத் துவைத்துப் போட்டனர். வாத்துகள் மீது பாய்ந்து அவற்றின் இறகுகளை முறுக்கிக் கால்களை ஒடித்தனர்.  பிறகு அவற்றை ஒரு அரிசிப்பையில் அள்ளிப் போட்டுக்கொண்டு அங்கிருந்து தடதடவென்று அகன்றனர்.  வலியால் துடித்துக் கொண்டிருந்த நிலையிலும் எழுந்து நின்று அந்த இருட்டில் அவர்களைத் துரத்திக்கொண்டு சென்றான் பிரெல்.

அவன் தாய், அவனைத் திரும்பி வரச்சொல்லிக் கத்திக் கொண்டிருந்தது காதில் விழுந்தாலும் பிரெல் அந்த மனிதர்களைத் துரத்திக் கொண்டு ஓடினான்.  அவர்கள் தாங்கள் வந்திருந்த வாகனங்களுக்குள் குதித்தேறி அவற்றை ஓட்டிச் சென்றுவிட்டனர்.  அந்த வாகனங்கள் கண் பார்வையிலிருந்து மறையும் வரை, இருட்டாக இருந்த அந்த வீதியில் மிகுந்த சிரமத்தோடு ஓடினான் பிரெல்.  ஒரு குழந்தையைப் போல அழுதுகொண்டிருந்தாலும் ஓடுவதை மட்டும் அவன் நிறுத்தவில்லை.

நடந்த எல்லாம் அவன் நினைவுக்கு வந்தன.  வலியோடு கூடிய ஒரு யதார்த்தம்.  எதனாலும் நியாயப்படுத்தி விட முடியாத ஒன்று.  நடந்துபோன அநியாயங்களைக் கசப்போடு எண்ணிப்பார்த்தான் அவன்.  மற்றவர்களின் எதிர்பார்ப்பிற்கேற்ப அவன் நல்லவனாகத்தான் நடந்து கொண்டு வருகிறான்.  ஆனால் அதனால் அவனுக்குக் கிடைத்ததுதான் என்ன ? அவனும் கூடத் தன் கல்லூரி மைதானத்துக்குப் பின்னால் குடித்துக் கும்மாளம் போடும் கூட்டத்தோடு சேர்ந்திருக்கலாம்.  ஆனால் அவன் அவ்வாறு செய்யவில்லை.  தன் அம்மாவிடமும், தங்கையிடமும் எந்த அளவு அன்பாக இருக்கவேண்டுமோ அப்படி இருந்தான்.  ஆனால் அதற்காக அவனை யார் தட்டிக் கொடுத்துப் பாராட்டி விட்டார்கள்?  அல்லது அவனுக்காக இந்த உலகம் ஆயத்தமாவதற்கு முன்பே அவன் இங்கே வந்து சேர்ந்து விட்டதால் இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறதா ? அவன் தனக்குத்தானே ஏராளமான கேள்விகளைக் கேட்டுக் கொண்டான்.  தான் மட்டும் ஏன் இப்படிக் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது என்பதை வியப்போடு எண்ணிப் பார்த்தான்.

தெருவில் அவன் மெதுவாக ஓடிக்கொண்டிருந்தபோது ஊருக்குப் பொதுவான அந்த மிகப் பெரிய ஏரி அவன் கண்ணில் பட்டது.  அதனருகே சூரியத்தகடு பொருத்தப்பட்டிருந்த உயரமான விளக்குக் கம்பம் ஒன்று வெளிச்சம் தந்து கொண்டிருந்தது.  ஏதோ நினைப்பில் புல் படர்ந்திருந்த ஏரியின் கரையோரமாகச் சென்றான் அவன்.  அமைதியாக இருந்த அந்த ஏரிப்பரப்பு அதனுள்ளே வருமாறு அவனுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தது.  ‘நான் எதிர்பார்க்கும் வெகுமதி இதுதான்’ என்று நினைத்துக் கொண்டான் அவன். நீர்ப்பரப்பின் அருகே மெதுவாக நடந்து சென்ற அவன், அதன் அமைதியான அடிப்பகுதிக்குள் ஆழமாக மூழ்கப் போவதாகக் கற்பனை செய்து கொண்டான்.  நிம்மதியாக அவன் ஓய்வு கொள்வதற்கு ஏற்றபடி குழைவான களிமண் நிலம் அங்கே காத்துக் கொண்டிருந்தது.

‘‘வௌவ்…வௌவ்..’’

திடீரென்று எங்கிருந்தோ கேட்ட நாய் குரைக்கும் சத்தம் பிரெலை ஒரு தவளையைப் போலத் துள்ளிக் குதிக்க வைத்தது.  சுற்று முற்றும் பார்த்தபோது மிகப்பெரிய கறுப்பு நாய் ஒன்று தன்னையே உறுத்துப் பார்த்தபடி பஞ்சுபோன்ற மிருதுவான தன் வாலை சந்தோஷமாக ஆட்டிக்கொண்டிருந்ததை அவன் கண்டான்.

‘வௌவ்..’’

அது மீண்டும் குரைத்தது.  சிரிக்கும் பாவனையில் அகலத் திறந்த வாயிலிருந்து அதன் நீண்ட நாக்கு வெளியே நீட்டிக் கொண்டிருந்தது.

பிரெலுக்கு ஒரு நிமிடம் குழப்பமாக இருந்தது.  இதுவரை அந்த  நாயைப் பார்த்ததில்லை என்பதால் அவனது கவனம் கலைந்து சிதறியது.  அது தெரு நாய் போலத்தான் தெரிந்தது.  ஆனாலும் மகிழ்ச்சியுடன் இருந்தது.  முகம் தெரியாத ஒரு அந்நியனை வரவேற்கும் தெரு நாய்களைக் கிராமத்துத்  தெருக்களில் வழக்கமாக அப்படிப் பார்த்து விட முடியாது.  அந்தப்பாவப்பட்ட ஜீவன் மீது அவன் இரக்கம் கொண்டாலும் தேவையில்லாமல் தன் கவனத்தைத் திசை திருப்பிக் கொள்வதில் அவனுக்கு விருப்பமில்லை.  தெரு நாய்களோடு முட்டாள்தனமாக விளையாடிக் கொண்டிருக்காமல் வாழ்க்கையின் முக்கியமான திருப்பம் ஒன்றை நோக்கிச் செல்லவே அவன் விரும்பினான். 

நாயை விரட்டிவிட்டு ஏரிப் பக்கமாய்த் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டான் அவன்.  நாய் சற்று பின் வாங்கினாலும் மறுபடியும் குரைத்தது.

‘‘உனக்கு என்னதான் வேணும்’’ என்று எரிச்சலோடு முணுமுணுத்தான் பிரெல்.  ஆனால் நாயோ தன் வாலை வேகவேகமாக ஆட்டியபடி உற்சாகத்துடன் மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது.

அவன் ஏரிப்பக்கம் திரும்பியபடி உற்றுப்பார்த்தான்.  ஏரி உறைந்து போனது போல் இருந்தது.  அதன் மேற்பரப்பில் பனிப் படலம் நடனமாடிக் கொண்டிருந்தது.  ஏரியிலிருந்த நீர் அச்சுறுத்தும் வகையில் மிக மிக அமைதியாக – நிசப்தமாக இருந்தது.  முதலில் இதுதான் தனக்கு மிகவும் பொருத்தமான ஒரு தருணம் என்று அவனுக்குத் தோன்றியிருந்தாலும் இப்போது பார்க்கும்போது ஏரியின் திடமான பரப்பில் போய் விழுந்தால், தான் சுக்கல் சுக்கலாக உடைந்துவிடக்கூடுமோ என்று இப்போது அவனுக்குத் தோன்றியது.

நாய், அவனை நெருங்கிவந்து அவன் கால்களை முகர்ந்து பார்க்க ஆரம்பித்திருந்தது.  அதற்கு எதிர்வினை ஆற்ற முடியாத அளவுக்கு அவன் எரிச்சலடைந்திருந்தான்.  அந்த நாய் தன் பாதங்களை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும் என்று எண்ணியவனைப் போல அப்படியே அமைதியாக நின்று கொண்டிருந்தான்.  அது அவனை நக்கியது, முகர்ந்து பார்த்தது.  சந்தோஷமான முகபாவனையுடன் அவனை ஏறெடுத்துப் பார்த்தது.  நம்பவே முடியாத அளவுக்கு மிகமிகக் கறுப்பான நிறத்தோடு இருந்த அந்த நாய், பட்டுப்போன்ற மென்மையான கறுப்பு நிற ரோமங்களையும், பருத்த கால்களையும் கொண்டிருந்தது.  மீண்டும் ஒரு முறை அது பாசத்தோடு குரைத்தது .

‘‘இப்ப இங்கேயிருந்து போகப்போறியா இல்லியா?’’ என்று கத்தினான் பிரெல்.

‘‘வௌவ்… வௌவ்…’’

‘‘உனக்கு என்னதான் கேடு வந்தது? ’’

என்றபடி தன் வலதுகாலால் நாயை உதைத்துத் தள்ளினான் பிரெல்.  அது சற்றுப் பின்வாங்கிவிட்டு மீண்டும் அவன் பக்கத்திலேயே வந்தது.

முதுகிலும், கைகளிலும் பட்டிருந்த காயங்களின் வலிக்கடுமை பிரெலைப் பாதித்துக் கொண்டிருந்தது.  அவர்கள் அவனை வலுவாகத் தாக்கி அடித்துப் போட்டுவிட்டுப் போயிருந்தார்கள்.  அவனோ ஒரு முட்டாளைப்போல் இங்கே நின்று கொண்டு தன் பிரச்சினைகளுக்கு மிக எளிதான ஒரு பதிலை யோசித்துக் கொண்டிருக்கிறான்.  தனது அம்மாவும் தங்கையும் வாத்துகளை விட  முக்கியமில்லாதவர்களாக மாறிவிட்டிருக்கிறார்களா என்ன? தன்னைத் தானே அறைந்து கொள்ள வேண்டும் போலிருந்தது அவனுக்கு.  அந்தக் கணத்தில் அது கொஞ்சம் வேடிக்கையாகக் கூடத் தோன்றியது.  நாய் மறுபடியும் குரைத்தது.  அவன் லேசாகப் புன்னகை செய்தான்.

ஏரிக்கரைப் பக்கத்திலிருந்து வெளியேறி மெல்ல நடக்க ஆரம்பித்தான் பிரெல்.  வீட்டை நோக்கி சோம்பேறித்தனமாக ஊர்ந்து சென்று கொண்டிருந்தான் அவன்.  அந்த நாயும் அவனுக்குப் பின்னாலேயே ஓடிவந்தது.   அவனை எதிர்ப்பட்ட சந்தர்ப்பத்தில் எப்படி இருந்ததோ அதே போல் உற்சாகமாகவே இருந்தது அது.

தெரு, இருட்டாக வெறிச்சோடிக் கிடந்தது.  நாயை ஒரு முறை பார்த்த பிரெல், ஒத்து வந்தால் அதைத் தனக்கு வளர்ப்பு நாயாக்கிக் கொள்ளலாம் என்று கூட எண்ணினான்.  நாயும் தன்னோடு சேர்ந்து வருவது அவனுக்கு ஆறுதலாக இருந்தது.

சிதிலமடைந்து கிடந்த அவனது வீட்டு வாசலை அவர்கள் இருவரும் நெருங்கினார்கள்.  வீட்டின்முன் பகுதியில் அம்மா உட்கார்ந்திருப்பதை அவன் பார்த்தான்.  தனக்காகத்தான் அவள் காத்திருந்திருக்க வேண்டும்.

‘‘இது தான் என்னோட வீடு.  ரொம்பப் பெரிசெல்லாம் இல்லை, ஆனா நீ இஷ்டப்பட்டா இங்கே இருக்கலாம்’’ என்று சொல்லியபடியே திரும்பிப் பார்த்த பிரெல், தனக்குத்தானே பேசிக்கொண்டிருப்பதை உணர்ந்தான்.  ஒரு நொடிக்கு முன்பு வரையிலும் கூட அவனுக்குப் பின்னாலேயே வந்து கொண்டிருந்த அந்தக் கறுப்பு நாய் திடீரென்று காற்றோடு கரைந்துபோனது போல மாயமாய்ப் போயிருந்தது.  அவன் அந்தத் தெருவின் கடைசி வரை நன்றாகத் திரும்பிப் பார்த்தான். எதுவுமே இல்லை! குழப்பத்தோடு நின்றபடி சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டே இருந்தான் அவன்.  அதற்குள் அவனைப் பார்த்துவிட்ட அம்மா அவனருகே ஓடி வந்தாள்.

‘‘தம்பி! ஏம்பா அப்படி ஒடினே? உன் தங்கை உள்ளே உனக்காகக் காத்திருக்கா! நானும் நீ எப்ப வருவேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்’’

-அவனது தாய் கவலையோடு அழுது கொண்டிருந்தாள்.

‘‘அது இங்கேதானே இருந்தது?’’ என்று முணுமுணுத்தபடியே தான் இருந்த இடத்துக்குப் பக்கத்தில் கவனமாகப் பார்வையை ஓட்டினான் பிரெல்.

‘‘யார்  அது? என்னப்பா சொல்றே நீ?’’ என்ற சற்று ஆச்சரியத்தோடு கேட்டாள் அம்மா.

‘‘ஒண்ணும் இல்லை, அந்த நாய்தான் ! ஒரு வேளை அது இங்கே இருக்க ஆசைப்படுமோன்னு நினைச்சேன்’’ என்று தெருவை வருத்தத்தோடு பார்த்தபடி பேசினான் பிரெல்.

‘‘நாயா? யாரோட நாய்?’’

‘‘ஒண்ணும் இல்லைம்மா விடுங்க’’ என்றபடி அதோடு அதை விட்டு விட்டு அம்மாவுடன் வீட்டுக்குள் சென்றான் பிரெல்.



பிரெலின் காயங்கள் முழுவதுமாய் ஆறி குணம் பெற அவன் பல நாட்கள் ஓய்வெடுக்க வேண்டியிருந்தது.  மறுபடியும் கல்லூரிக்குச் செல்லலாமென்று ஒரு வழியாக முடிவெடுத்தான் அவன்.  தெருவில் சைக்கிளை ஓட்டிக்கொண்டு வழக்கம்போல ஊர் ஏரியைத் தாண்டிக் கொண்டு சென்றான்.  எதையும் அதிகம் கவனிக்காமல் எப்போதும் போல சென்று கொண்டிருந்த அவனை இப்போது ஏதோ ஒன்று சட்டென்று ஈர்த்தது.

ஏரிக்கரையில் விழாக்கால ஆடை அணிகலன்களுடனும், ‘ஹராவோஃபி’(பண்டிகைக்காலத்தில் பெண்கள் அணியும் கஞ்சி போட்ட மெல்லிய பருத்தி ஆடை   ) அணிந்தபடியும் மக்கள் வரிசை வரிசையாய் நின்று கொண்டிருந்தார்கள்.  அடுத்து வரவிருக்கும் ‘லாய் ஹராசிபா’ பண்டிகைக்காக ‘அமெய்பா’(ஆண்பூசாரி)யும்,‘அமெய்பி’ (பெண்பூசாரி)யும் பூசைச்சடங்குகளைச் செய்து கொண்டிருந்தார்கள்.  வாழ்க்கையை முடித்துக் கொள்வதற்காக அவன் அந்த மோசமான நாளின் இரவு வேளையில் எந்த இடத்தில் நின்று கொண்டிருந்தானோ அதே இடத்தில் பூசை செய்யும் ‘அமெய்பி’களில் ஒருவர் நின்று கொண்டிருந்தது அவனுக்கு சிறிது வேடிக்கையாகக் கூட இருந்தது.

ஏரிக்கரையின் எதிர்ப்பக்கம் தன் சைக்கிளை அமைதியாக செலுத்திக் கொண்டு சென்ற அவன் அங்கே நின்று கொண்டிருந்த வேறு சில ஊர்மக்களுடன் தானும் கலந்து கொண்டு அந்த ஊர்வலத்தை கவனிக்கத் தொடங்கினான்.

‘ஏகௌவ்கத்பா’ என்ற சமயச் சடங்கை நடத்திக் கொண்டிருந்தார் அமெய்பி.  உள்ளூரின் குலதெய்வத்தை ஏரி நீரிலிருந்து வெளியே எழுப்பி அவரை வணங்கும் வகையில் ஏழு நாட்கள் நிகழும் கொண்டாட்டங்களைக் காண்பதற்காக வரவேற்கும் பூசனையை நடத்திக் கொண்டிருந்தார் அமெய்பி.  ஏரியின் ஆழத்திலிருந்து தெய்வத்தை மேலே வருவிப்பதற்காக உரத்தகுரலில் அவர் சொல்லிக் கொண்டிருந்த மந்திர உச்சாடனம் நகரம் முழுவதும் எதிரொலித்தபடி இருந்தது.

‘ஏகௌவ்கத்பா’ சடங்குக்குப் பிறகு வரிசையாக நின்று கொண்டிருந்த மக்கள் அனைவரும் ‘அமெய்பி’, ‘அமெய்பா’ மற்றும் ‘பேனா’ வாத்தியக் கலைஞர்களைத் தொடர்ந்து (*‘பேனா’* என்பது ஒற்றைக் கம்பியால் ஆன மணிப்பூரின் பாரம்பரியமான ஒரு இசைக் கருவி.  ‘லாய் ஹரோபா’ பண்டிகையின் போது அது முக்கியமாக இசைக்கப்படும்.) கோயிலை நோக்கிச் சென்றனர்.

தன்னருகே நின்று கொண்டிருந்த எல்லோரையும் போலவே தானும் அனிச்சையாகப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தான் பிரெல்.  அவனுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த முதியவர்களில் ஒருவர்,

“ நம்மோட ‘ஏபுதௌவ்(குலதெய்வம்) புதிபா’ உண்மையிலேயே ஒரு சக்திவாய்ந்த சாமிதான் இல்லியா” என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தார்.

“நிஜமாவா” என்று அதில் அதிக கவனம் செலுத்தாமல் பதிலளித்தான் பிரெல்.  ‘அமெய்பி’  மீதும் அவர் செய்யும் சடங்கு முறைகள் மீதும் அவன் மனம் அப்போது லயித்திருந்தது.

“ஆமாம்! பின்னே? அவருதான் நமக்கெல்லாம் பெரிய துணை, காவல் தெய்வம் நமக்கு.  நம்ம ஊர் பாதுகாப்பா இருக்கான்னு எப்பவுமே கவனிச்சுக்கிட்டே இருப்பார்.  அதை உறுதிப்படுத்திக்குவார். வழிதவறிப்போன எத்தனையோ பேருக்கு அவர் வழிகாட்டியிருக்கார்.  அவரைப் பத்தி அப்படிப்பட்ட கதைகள் எக்கச்சக்கமா இருக்கு”  என்று தலையை ஆட்டிக் கொண்டே சொன்னார் பெரியவர்.

“அவர் என்ன ஒரு நாயா?”  என்று சட்டென்று யோசித்துப் பார்க்காமல் கேட்டுவிட்டான் பிரெல், தன் வாயிலிருந்து அப்படிப்பட்ட ஒரு வார்த்தை வந்து தெறித்தது,  அவனுக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது.  ஆனால் அதற்குள் நேரம் கடந்திருந்தது.  அந்த முதியவரை அவன் புண்படுத்தி விட்டிருந்தான்.

“இந்தக் காலத்துப் பசங்களும் இருக்காங்களே….” என்று பெருமூச்சோடு முணுமுணுத்தபடி அவன் சொன்னதை ஏற்க முடியாமல் மெல்ல நகர்ந்து வேறு பக்கமாய் நடந்து சென்றார் அந்தக் கிழவர்.

மன்னிப்புக் கேட்கும் பாவனையில் பிரெல் இலேசாகப் புன்னகை செய்தான்.  ஆனால் அவர் அவனைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.  தான் முட்டாள்தனமாக நடந்து கொண்டுவிட்டோமே என்று தன்னைத்தானே நொந்து கொண்டான் அவன்.  சுற்று முற்றும் ஒரு முறை பார்த்து விட்டுக் கல்லூரிக்குப் போகும் நேரத்தை வீணடித்து விட்டதை உணர்ந்து சைக்கிளை வேகமாக ஓட்டிச் சென்றான்.

‘ஏகௌவ்கத்பா’ சடங்குக்குப் பிறகு வரிசையாக நின்று கொண்டிருந்த மக்கள் அனைவரும் ‘அமெய்பி’, ‘அமெய்பா’  மற்றும் ‘பேனா’ இசைக் கலைஞர்களைத் தொடர்ந்து கோயிலை நோக்கிச் சென்றனர்.  அங்கே, முதன்மைப் பூசாரியான ‘அமெய்பி’,  வெள்ளைத் துணியால் போர்த்தப்பட்டிருந்த கடவுளுக்கு முன்னால் ஒரு வாழை இலையை விரிந்து அதன் மீது அமர்ந்திருந்தார்.  ஒரு கையில் பிடித்திருந்த மணியை வேக வேகமாக ஆட்டியபடி உரத்த குரலில் அருள் வாக்கைச் சொல்லத் தொடங்கினார் அவர்.

“என்னை பக்தி செய்து கொண்டாடும் என்னுடைய இனத்தைச் சேர்ந்த மக்களுக்கெல்லாம் நல்ல உடல் நலமும், செல்வ வளமும் வாய்க்கட்டும்! உங்கள் காவல் தெய்வமான நான், தளர் நடையிட்டு வரும் தன் குழந்தையின் முதல் அடியைக் கவனமாகக் கண்காணிக்கும் ஒரு தகப்பனைப் போல உங்கள் எல்லோரையும் பாதுகாப்பேன்.  ஒரு சந்தோஷமான வேட்டை நாய் வடிவில் நான் வருவேன்……”

                                 ***************************

குறிப்பு; * ‘லாம் கொன்பா லாய்’ அல்லது காவல் தெய்வம் என்பது  குறித்த பழங்கால மெய்தி இன மக்களின் நம்பிக்கை, அது அவர்களது வாழ்க்கையின் ஒரு பிரிக்கமுடியாத அங்கம்.

மெய்தி இனத்தின் ஒவ்வொரு குழுவினரும், வீட்டாரும் தங்களுக்கென்று சொந்தமான ஒரு காவல் தெய்வத்தைக் கொண்டிருப்பார்கள்.  அதற்கென்று வித்தியாசமான ஒரு பதாகையும், பாம்பு வடிவிலான மந்திர அடையாளங்களும் இருக்கும். அவரவர் தங்களுக்குரிய ‘லாய் ஹராஓபா’வைக் (தெய்வங்களை சாந்தப்படுத்தும் வகையில்) கொண்டாடுவர்கள்.  தங்களை அது பாதுகாத்து வருவதற்காக நன்றிக் கடனைச் செலுத்தி ஆசிபெறுவார்கள்.

காலப்போக்கில் சமய நம்பிக்கைகளில் எவ்வளவோ மாற்றங்கள் ஏற்பட்டு வந்தபோதும், குலதெய்வமே தங்களைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையோடு கூடிய இந்த வழிபாட்டில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை

15.2.24

'சிறுமைகளும் அவமதிப்புகளும்'-வாசகக் கடிதம்

 

அன்புள்ள அம்மைக்கு,

இப்போதுதான் 'சிறுமைகளும் அவமதிப்புகளும்' படித்து முடித்தேன். தஸ்தயெவ்ஸ்கி என்ற ஒரு மாபெரும் கலைஞனின் பிறப்பு உண்மையிலேயே இந்த நாவலில்தான் நிகழ்ந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

பாவப்பட்டவர்கள், வெண்ணிற இரவுகள் போன்ற ஆக்கங்களால் அவர் முன்னரே புகழ்வெளிச்சம் அடைந்திருந்தாலும், பிற்காலத்தில் அவர் இயற்றிய பெரும்படைப்புகள் அனைத்திற்கும் மூலமாக விளங்குகிறது இந்த 'சிறுமைகளும் அவமதிப்புகளும்'.

இந்நாவலில் வரும் வால்காவ்ஸ்கிதான் கரமசோவ் சகோதரர்களில் வரும் தந்தை கரமசோவாக மறுபிறப்பெடுக்கிறான். இந்நாவலில் வரும் அல்யோஷாதான் அசடனில் வரும் மிஷ்கினாக உருமாறுகிறான். இந்நாவலில் வரும் நடாஷாதான் குற்றமும் தண்டனையும் புதினத்தில் வரும் சோனியாவாக மிளிர்கிறாள்.

ஒரு பெருங்காடே மிகச்சிறிய ஒற்றைவிதையால் உருவாவது போல, அவருடைய பெரும்படைப்புகள் அனைத்தும் இந்நாவலில் நுண்வடிவங்களாக திகழ்கின்றன.

சினத்தில் 70 கோபெக்குகளை நெல்லியை நோக்கி வீசியெறிந்துவிட்டு கதவைச் சாத்தும் ஸ்மித், இருட்டில் அதை பொறுக்க அவள் சிரமப்படுவாளே என்று வேதனைப்பட்டு,
பின்னர் கதவை திறந்துகொண்டு கையில் விளக்குடன் வெளிவரும் இடம், மிகவும் அழகு. விளக்கோடு வந்தது மட்டுமல்லாமல் சிறிது நேரம்கழித்து கூடவே தானும் அவளுடன் சேர்ந்து நாணயங்களை பொறுக்குவதெல்லாம், கவிதை.

இதற்காகத்தான் நான் எப்போதும் தஸ்தயெவ்ஸ்கியை விரும்பிப் படிக்கிறேன். அத்தனை கசப்புகளுக்கு இடையிலும்  எட்டிப்பார்க்கும் அந்த மனிதம்... அதுதான் தஸ்தயெவ்ஸ்கி.

நெல்லியும் எளிய சிறுமியல்ல. தூக்கியெறியப்பட்ட 70 கோபெக்குகளை தன் அன்னையின் மருத்துவச் செலவுக்காக அப்போது பொறுக்கியெடுத்துக் கொண்டு போனாலும், அடுத்த நாளே பிச்சை எடுத்து சம்பாதித்து, அதே போல் 70 கோபெக்குகளை ஸ்மித்தின் வீட்டுவாசலில் எறிந்துவிட்டு ஓடுகிறாள்.

உணவு விடுதியில் வால்காவ்ஸ்கி, தான் உண்மையில் எப்படிப்பட்ட மனிதன் என்பதை வான்யாவுக்கு உணர்த்தும் இடம், சாத்தானே நேரில் வந்து வாக்குமூலம் அளிப்பதை போல் இருந்தது.

வீட்டைவிட்டு ஓடிப்போன தன் மகளுக்கு அன்போடு கடிதம் எழுதத் தொடங்கிய நிகோலாய் செர்கிச், தான் அதுவரை எழுதிய அன்பார்ந்த வரிகளைப் படித்துவிட்டு, தன்னுடைய மெல்லுணர்வுகளால் தானே கசப்படைத்து, மகளை சபித்து எழுதி கடிதத்தை முடிக்கும் போது நான் மிகவும் வியப்படைந்தேன். ஒரு மனினுக்குள்தான் எத்தனை எத்தனை மனிதர்கள்.

உங்களுடைய மொழியாக்கம் எப்போதும் போல் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது.

//நன்கு சாப்பிட வசதி படைத்தவர்களால் பசித்தவர்களைப் பற்றி அறிந்துகொள்ள முடியாது என்று பொதுவாகச் சொல்வதுண்டு. பசித்தவர்களாலும் கூட பசித்தவர்களைப் புரிந்துகொள்ள முடியாது என்று சேர்த்துக் கொள்கிறேன் நான்.//

இந்த வரிகளில்தான் எவ்வளவு உண்மை.

இறுதிவரை நெல்லி வால்காவ்ஸ்கியை மன்னிக்கவே இல்லை என்று நாவல் முடிகிறது. எப்படி மன்னிக்க முடியும்?...அகத்துள் நுழையும் விழிநீரின் ஈரம்தான் எப்போதும் காய்வதே இல்லையே.

- மணிமாறன்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....