குந்தியும்நிஷாதப்பெண்ணும்
மஹாஸ்வேதாதேவி (தமிழில்: எம்.ஏ.சுசீலா)
நன்றி : நம் நற்றிணை இதழ்
வாழ்வின் இறுதி அத்தியாயத்தில், கானகத்தைத் தங்கள் புகலிடமாக ஏற்றிருந்த திருதராஷ்டிரருக்கும், காந்தாரிக்கும் குந்தியே உறுதுணையாக இருந்து வந்தாள். முதியவரான தன் மைத்துனரையும், தன் கண்களால் பார்ப்பதில்லை என உறுதி பூண்டிருந்த அவரது மனைவியையும் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு தன்னுடையது என்று அவள் கருதினாள்.
அது காட்டுக்குள் இருந்த ஓர் ஆசிரமம்; அரச மாளிகை இல்லை. அங்கே நெருப்பின் துணை கொண்டு ஆற்ற வேண்டியிருந்த சில தினசரிச் சடங்குகளுக்கு விறகு சேகரித்துக்கொண்டு வரவேண்டியவள் அவளே.
மதியப் பொழுதுகள், மாய வேளைகளைப் போன்றவை. அந்த நேரத்திலேதான் அவள் ஆசிரமத்தைவிட்டு வெளியேறிக் காட்டுக்குள் செல்வாள். புல், பூண்டுகளால் ஒரு கயிறு திரித்துத் தான் சேகரித்திருக்கும் விறகுச் சுள்ளிகளை மூட்டையாகக் கட்டுவாள். சிறிது நேரம் ஓய்வெடுத்த பிறகு, அந்த மூட்டையை இழுத்துக்கொண்டு ஆசிரமம் திரும்புவாள். பீமன் மட்டும் அப்போது அருகில் இருந்திருந்தால், இப்படிப்பட்ட வேலையைச் செய்ய அவளை அனுமதித்திருக்கவே மாட்டான்.
நடுத்தர வயதான சில நிஷாதப் பெண்கள், தங்கள் குடும்பங்களோடும், குழந்தை குட்டிகளோடும் அந்தக் காட்டில் சஞ்சரித்துக்கொண்டிருப்பது ஒரு நாள் அவள் கண்ணில் பட்டது. உண்மையிலேயே அவர்கள் நடுவயதுக்காரர்கள்தானா என்ன? அவர்களிடம் ஆங்காங்கே தென்பட்ட வெள்ளி முடிகள் அப்படி எண்ண வைத்தன. அவர்களுக்குத்தான் எத்தனை வலுவான முழங்கைகள். சதைப்பிடிப்பு மிகுந்த உரமான தோள்கள். அவர்கள் விறகு பொறுக்கிக்கொண்டிருந்தார்கள். காட்டுக்கொடிகளில் அந்த விறகுகளைப் பிணைத்து ஒரு மூட்டையாக்கிவிட்டுப் பொழுது சாய்ந்த பிறகு அந்த மூட்டைகளைத் தலைச் சுமையாக ஏற்றிக்கொள்வார்கள். மரக்கட்டைகளைப் பற்றவைத்துக்கொண்டு அந்த வெளிச்சத்தில் காட்டுப்பாதை வழியே வீடு போய்ச் சேருவார்கள்; அப்படிப் போகும்போது, தங்களுக்கென்றே பிரத்யேகமாக உள்ள பாடல்களைப் பாடிக்கொண்டு செல்வார்கள். இதுவரை அவர்கள் பேசும் மொழி எது என்பதை அறிந்துகொள்ள குந்தி முயலவில்லை.
அந்தக் காட்டிற்குள் உயரமான, பிசின் நிரம்பிய மரங்கள் நிறைய இருந்தன. அந்தப் பிசினையும், தேன், கிழங்கு, வேர் எனப் பலவற்றையும் அவர்கள் சேகரிப்பார்கள். நிச்சலனமாகவும், சலிப்போடும் காணப்பட்ட கடும் உழைப்பாளிகளான அந்தக் கூட்டத்தினரின் முகங்கள், பிரகாசமான புன்னகையோடு எப்போதும் மலர்ந்தே இருந்தன.
மரங்களின் நடுப்பகுதியிலிருந்து பிசின் சொட்டுச் சொட்டாக வடிந்து கொண்டிருந்தது. அந்த மணத்தைக் கவர்ந்து வந்த மென்காற்று, உலர்ந்த சருகாய்ப் போய்விட்ட குந்தியின் உடலுக்கு இதமளித்தபடி, அவளது களைப்பையும் போக்கியது. நிஷாதர்களைக் கவனித்துக்கொண்டிருந்த அந்த வேளையில்தான், அழுகிப் போய் உதிரும் நிலையிலிருக்கும் இலைகளுக்காகத் தன் வாழ்வை வீணடித்துக்கொண்டிருக்கிறோமே என்பது, குந்திக்கு முதன் முதலாக உறைத்தது. முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டதும், எப்போதோ விதிக்கப்பட்டுவிட்டதுமான மரணத்தின் பாதையில் ஒரு குருட்டுத்தனமான பயணம்.
குந்தியால் இப்போது பின்னோக்கிப் பார்க்கமுடிந்தது. இதுவரை வெளிப்படுத்தியிராத எண்ணங்களும் உணர்வுகளும் தன்னுள் ஒரு சுமையாகக் கிடக்குமென்று இதுவரை அவள் நினைத்ததே இல்லை. அரண்மனை வாழ்க்கை என்பது மிகவும் வித்தியாசமானது. அங்கே அவள் பாண்டவர்களின் தாய். பாண்டுவின் மனைவி. மருமகளாக, அரசியாக, அன்னையாக அவள் ஆற்ற வேண்டியிருந்த நூற்றுக்கணக்கான கடமைகளுக்கு நடுவே அவள், அவளாக மட்டுமே இருப்பதற்கு எங்கே இடம் இருந்தது. மேலும், தனக்கே உரியது தன்னுடையது மட்டுமே என்று அவள் எதையுமே இதுவரை நினைத்திருக்கவில்லை என்பதும் கூட ஒரு வியப்புத்தான். ஒரு முறை, ஒரே ஒரு முறைஅவளது இளமைப் பருவம் மொட்டவிழ்ந்து இனிமையான தன் முதல் மணத்தைப் பரப்பிய அப்போது மட்டும்...! சிதையில் எரியும் ஈமநெருப்பைப் போல அந்த நினைவு அவளுள் கனன்றது. அவள் மடியும் நாள்வரை தணியாத வேகத்துடன் அவளுக்குள் தொடர்ந்து கனலப்போகும் நெருப்பு அது.
இனி, இதற்கு மேலும் எல்லாவற்றையும் தன்னுள் பூட்டி வைத்துக்கொள்ள அவளால் முடியாது. இதோ, இந்தக் கானகத்திடம் இந்த மலைகளிடம் இந்தப் பாறைகளிடம் இங்கே இருக்கும் பறவைகள், பூச்சிகள், உதிர்ந்து கிடக்கும் சருகுகள் என்று இவை எல்லாவற்றிடமும் அவள் தன் மனச்சுமையை இறக்கி வைக்க முடிந்தால்?
சில சமயம் அவளுக்கு அருகிலும், சில நேரங்களில் அவளிடமிருந்து சிறிது தூரத்திலுமாய் அந்த நிஷாதப் பெண்கள் நடமாடிக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் அவர்களுக்கிடையில் எந்த வார்த்தைப் பரிமாற்றமும் நிகழவில்லை .
பற்பல சமயச் சடங்குகளையும், நோன்புகளையும் தொடர்ந்து அனுசரித்து வந்திருந்ததால் குந்தியின் உடல் மெலிந்து காணப்பட்டது; அவளது தலை முழுவதும் நரைத்திருந்தது. மாசுமருவற்ற தூய வெண்பட்டாடை அவள் உடலைத் தழுவியிருந்தது. குந்தியிடம் இன்னமும் கூட உயிர்ப்போடு இருந்தவை அவளது கண்கள் மட்டும்தான். ஆனால், அந்தக் கண்களிலும் கூட அவளுக்கு நேர் எதிரே உலவிக்கொண்டிருந்த நிஷாதர்களைப் பற்றிய எதுவும் பதிவாகி இருக்கவில்லை . அவை, அவர்களை ஏறெடுத்துக் கூடப் பார்க்கவில்லை. அவற்றால் அவர்களை எப்படிப் பார்க்க முடியும்? அவள் வாழ்ந்த வாழ்க்கை, தெய்வ நிலையைப் போல உயர்வான ஓர் அரச வாழ்க்கை. எப்போதாவது, எந்தப் பணிப்பெண்ணுடனாவது அவள் பேசியதுண்டா? மனப்பூர்வமான ஒரு பந்தத்தை இடும்பியுடனாவது வளர்த்துக்கொண்டிருக்கிறாளா அவள்? அரச வாழ்க்கைக்கு வெளியிலிருக்கும் எதுவுமே இதுவரை அவளைத் தொட்டதுகூட இல்லை.
இந்த நிஷாதர்கள் அவளுக்கு மிக நெருக்கமாக சஞ்சரித்துக் கொண்டிருப்பதுதான் ஏன்?
அவள் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.
தன் நெஞ்சில் பாரமாகக் கனத்துக் கொண்டிருக்கும் ஆழமான நினைவுகளின் பிடியிலிருந்து விடுபட வேண்டுமென்பதே குந்தியின் விருப்பமாக இருந்தது. தான் செய்த தவறுகளை அவள் ஒத்துக்கொண்டாக வேண்டும்.
காந்தாரி தன் கண்களைக் கட்டிக்கொண்டிருப்பது குந்திக்கு எப்போதுமே வியப்பூட்டும். அவள்தான் எப்படி ஒரு சமநிலையோடு இருக்கிறாள். நூறு பிள்ளைகளைப் பறிகொடுத்தும்கூட அது அவளது கட்டுப்பாட்டைக் குலைத்து விடவில்லையே? தான் நடந்துகொண்டிருப்பது சரியான பாதையில் என்பதும், தன் கடமையை சரிவர ஆற்றிவருவதும், மரணம் வரை அதே வழியில் போகிறோம் என்பதும் காந்தாரிக்குத் தெரிந்திருக்கிறது.
ஆனால், குந்திக்கோ பேசித் தீர்த்துவிடவேண்டிய தேவை இருக்கிறது. சொல்லியே ஆக வேண்டிய இன்னும் சில விசயங்கள் அவளிடம் எஞ்சியிருக்கின்றன. நாளுக்கு நாள் அவள் தளர்ந்து போய்க் கொண்டிருக்கிறாள். களைப்புற்றுச் சோர்ந்து போகிறாள். திருதராஷ்டிரரையும், காந்தாரியையும் கவனமாகப் பேணுவது, ஆசிரமக் குடிலில் அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவது ஆகிய பணிகளுக்குப் பிறகு அவளால் நகரக் கூட முடியாமல் போய்விடுகிறது. அப்படி இருக்கையில் தன் மனம் திறந்து பேசுவது அவளுக்கு எப்போது சாத்தியப்படும்.
வேண்டுமானால், இதோ, இங்கிருக்கும் இந்த மரங்கள், ஆறுகள், பறவைகள், சலசலக்கும் இலைகள், காற்று இவற்றோடு அவள் பேசலாம். ஏன் இந்த நிஷாதப் பெண்களிடம் கூட அவள் பேசலாம். அவள் பேசுவது காதில் விழுந்தாலும் அவர்களுக்கு அது புரியாது. அதனால் எந்தக் கேள்வியும் அவர்கள் கேட்கப்போவதும் இல்லை.
சூரிய அஸ்தமனத்தின்போது அங்கிருந்து அவர்கள் கிளம்பிவிடுவார்கள். அப்போது குந்தியும் ஆசிரமத்துக்குத் திரும்பிப்போவாள். திருதராஷ்டிரரும், காந்தாரியும் செய்தாக வேண்டிய மாலை நேரப் பூசனைச் சடங்குகளுக்கு ஆயத்தம் செய்து தருவாள். நன்கு பழுத்த இலைகளை உறிஞ்சி சாற்றை உண்ணுவாள்; பிறகு சிறிதளவு தண்ணீர் குடித்துவிட்டுப் புல் படுக்கையில் படுத்து உறங்குவாள்.
சந்தனக் கட்டிலில் பால் நுரைபோன்ற வெண்மையும் மென்மையும் கொண்ட படுக்கை விரிப்புகளின் மீது அவள் படுத்துறங்கிய காலம். நெய் கலந்த சோற்றையும், ஏழு வகையான உணவுகளையும் தங்கத் தட்டில் வைத்து விருந்து போல அவள் உண்ட அந்தக் காலம்? பூசைக்காக விரதங்கள் காத்தபடி, பற்பல யாகங்கள் நடத்த ஏற்பாடு செய்து தந்தவள் அவள்தானா?
கதிரவனைத் தன் அருகே வருவித்தாளே அந்தக் குந்தி யார்? சூரியக் கதிர்களைப் போலச் சுடரும் எழில்கொண்ட அவள், எந்தக் குந்தி? மேகம் போன்ற அடர்த்தியான அவளது கருங்கூந்தலை மணப்புகை கொண்டு பணிப்பெண்கள் புலரவைப்பார்களே அந்தக் குந்தி எவள்? ஆடை அணிகலன்களை அக்கறையோடு அணிந்தபடி தன் கணவனின் அருகே செல்லும் அந்தக் குந்தி எவள்...?
யுதிஷ்டிரன், பீமன், அர்ச்சுனன் இந்த மூவருமே அவளது வயிற்றில் பிறந்தாலும் பாண்டுவின் மூலம் உருவாகவில்லை. நகுல, சகாதேவர்களிடம் அவள் அளவுக்கதிகமாக அன்பு காட்டியதற்குக் காரணம், அவர்கள் தாயில்லாப் பிள்ளைகள் என்பதுதானா? இல்லாவிட்டால் தன்னிடம் எதிர்பார்க்கப்பட்ட கடமையை மட்டும் அவள் ஒப்புக்குச் செய்து கொண்டிருந்தாளா? துணிவும் தர்மமும் அவளிடம் எங்கே இருந்தது?
தான் செய்த குற்றங்களை முதலில் அவள் ஒத்துக் கொண்டாகவேண்டும். இல்லையென்றால் அவள் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்வதென்பது எப்படிச் சாத்தியம்?
“ஏ.. பூமித்தாயே! காடு, மலை, நதி, சகல ஜீவராசிகள் ஆகிய எல்லாவற்றையும் காத்து வருபவளே.. இந்தக் குந்தி என்ன சொல்ல வருகிறாள் என்பதைத்தான் கொஞ்சம் கேட்டுக்கொள்ளேன்.
காந்தாரியைப் போன்ற உண்மையான பயபக்தியோ கடமை உணர்வோ என்னிடம் இல்லை. அறத்தால் மட்டுமே வாய்க்கக்கூடிய துணிவு, என்னிடம் அறவே இல்லை. குருச்சேத்திரப் போருக்குப்பிறகு என் மகன்கள் உயிரோடு இருப்பதைக் கண்டு மட்டுமே பூரித்துப் போயிருந்தேன் நான். தங்கள் மகன்களின் மரணத்தில் உருக்குலைந்து போயிருந்த திரெளபதிக்கும், உத்தரைக்கும் நான் ஆறுதல் வார்த்தை கூறவில்லை. அதைச் செய்தவள் காந்தாரியே! நூறு பிள்ளைகளை இழந்த பிறகும்கூட அது அவளால் எப்படி முடிந்ததென்று நான் வியந்து போனேன். போரினால் ஏற்பட்டிருக்கும் இந்தப் பேரழிவு, முன்திட்டமிடப்பட்டதும், தவிர்க்கவே முடியாததுமான ஒன்று என்று அவள் அவர்களிடம் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தாள். நானும் கூடத்தான் என் மகன்களைப் பறிகொடுத்திருக்கிறேன். யார் யாருக்கு ஆறுதல் சொல்லமுடியும்? இப்போது மரணம் என்ற அத்தியாயம் கடந்துபோய்விட்டது. கண்ணீரைத் துடைத்துக்கொள்ளலாம் வாருங்கள்! துயரம் நம்மைச் செயலற்றவர்களாக்கிவிடுவதை நாம் அனுமதித்துவிடக்கூடாது. மரணம் ஒரு துயரகாவியம் என்பது உண்மைதான். ஆனாலும் மனைவிகளாக, தாய்மார்களாக, மகள்களாக, சகோதரிகளாக, நாமெல்லாம் தொடர்ந்து வாழ்ந்தாக வேண்டியிருக்கிறது. வலியைப் பொறுத்துக்கொண்டு அந்த வாழ்வை எதிர் கொள்வதற்கான துணிவும் உரமும் நமக்கு வேண்டும். காரணம், இந்தத் துயரம் வாழ்நாள் முழுவதும் உற்ற துணையாக நம்மோடு உடன் வரப்போகிறது” என்றாள் அவள்.
“காந்தாரியிடம் இருந்த மெய்யான பக்தியும் நியாய உணர்வும் என்னிடம் இல்லை. இல்லவே இல்லை. கண்ணனின் முன்னிலையில் இறந்தவர்களைக் குறித்து அவள் வருந்தியபோது, இறந்துபோன தன் பிள்ளைகள், பேரன்கள், கணக்கிடலங்காத அவர்களின் விதவை மனைவிகள்... இவர்களை நினைத்து மட்டுமா அவள் ஓலமிட்டாள். மடிந்து கிடந்த அபிமன்யுவின் உடலைத் தன் மடியில் கிடத்திக்கொண்டு, குரலுயர்த்தி அவள் அழுத போது அதை நான் புரிந்துகொண்டேன். போரையும், அதன் விளைவாகப் பெருக்கெடுக்கும் இரத்த வெள்ளத்தையும் இந்த உலகிலிருக்கும் அத்தனைப் பெண்களின் சார்பாகவுமல்லவா சபித்துக் கொண்டிருந்தாள் அவள்? காந்தாரியைத் தகுதிப்படுத்துவது அதுதான்.
“இந்தப் போர், அதிகாரத்துக்கான ஒரு யுத்தம்! அடுத்தவனை ஒன்றுமில்லாமல் ஒழித்துக் கட்டி விட்டுத் தன்னை மட்டுமே சர்வாதிகாரியாக நிலை நிறுத்திக் கொள்வதே இந்தப் போரின் நோக்கம். இங்கே அதர்மம் அழிக்கப்பட்டு அறம் நிலை நாட்டப்பட்டதா என்ன? குருதி வெள்ளத்தில் உருக்குலைந்து கிடந்த கொடூரமான பிணங்களைப் பார்த்தபடி பெண்கள் எழுப்பிய நெஞ்சு பிளக்கும் அலறல், போர் என்ற சொல்லின் மீதே வீசப்பட்ட சாபமில்லையா?
“பூமித்தாயே! நான் சொல்வதை இன்னும் சற்றுக் கேள்!”
“நெருப்பின் தழலை விட ஒளிபொருந்தியவனாக அவன் இருந்தான். எவரோடும் ஒப்பிட முடியாதவன் அவன். வில் வீரர்களிலெல்லாம் சிறந்த வில் வீரன். இறந்து கிடந்த வேளையில் அந்தக் கர்ணனின் முகம் அத்தனை சாந்தமாய் இருந்தது. அவனது உடலைப் பார்த்துவிட்டு இதயத்தை துளைப்பது போலக் காந்தாரியிடமிருந்து பிறந்த கதறல் என் மீது சாட்டையைச் சொடுக்கியது போல விழுந்தது. துண்டிக்கப்பட்ட கர்ணனின் உடலை என் மடியில் போட்டுக்கொண்டு ‘தனஞ்செயா! இதோ பார். இவன்தான் என் முதல் மகன். நீ கொன்றிருப்பது உன் அண்ணனை’ என்று சொல்லும் துணிச்சல் எனக்கு ஏன் இல்லாமல் போயிற்று?
“சமூகக் கூச்சத்தாலும், அச்சத்தாலும் நான் அனாதையாக்கிய என் மகன்! அவனை மட்டும் நான் ஒதுக்கி வைக்காமல் இருந்திருந்தால் காலத்துக்கும் என் பெயர் களங்கப்பட்டுப் போயிருக்கும். என் மகன்களிலேயே கர்ணனின் தந்தையை மட்டும்தான் நான் என் சொந்த விருப்பத்தால் தேர்ந்து கொண்டேன். என்ன ஒரு முரண்? எப்படிப்பட்ட முரண் இது? பஞ்சபாண்டவர்களில் ஒருவர் கூடப் பாண்டுவின் வழித்தோன்றல் இல்லை. ஆனாலும் அவர்கள் பாண்டவர்கள்., கர்ணனோ தேரோட்டியின் மகன்!”
‘ஏ... ஆதித் தாயே! அந்த நாளன்று இந்தக் குந்தி அமைதியாக நின்று கொண்டிருந்தாள். அதைவிடப் பெரிய பாவம் வேறென்ன இருக்கிறது? காந்தாரிக்குத் தான் தூய்மையானவள், சூது வாதற்றவள் என்பது தெரியும். பலர் முன்னிலையிலும், எது உண்மையோ அதை வெளிப்படையாகப் பேசும் துணிவை அதுவே அவளுக்கு அளித்திருக்கிறது. இல்லாவிட்டால் கண்ணனை அவளால் தூற்றியிருக்க முடியுமா? அவன் நினைத்திருந்தால் போரை நிறுத்தியிருக்கலாம். ஆனால், அவனே அதற்குக் காரணமாகிவிட்டான் என்று
சொல்லத்தான் முடிந்திருக்குமா?
“அவள் அச்சமில்லாதவள், நேர்மையானவள், அசைக்கமுடியாத உறுதியும், தன்னம்பிக்கையும் கொண்டிருப்பவள். அதனாலேயே அவளால் கண்ணனை சபிக்க முடிந்தது. ஆனால், நானோ எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தேன். உன்னிடம் மன்னிப்புப் பெறும் தகுதி எனக்கு இல்லை. அரச மாளிகையின் செல்வமும் அதிகாரமும் மணிமுடி தரித்து அரசாளப் போகும் மகனுக்குக் கிடைக்கவிருக்கும் வலிமையும்… இவை எல்லாமாய்ச் சேர்ந்து என்னை அலைக்கழித்து ஆட்டிப்படைத்துவிட்டன. அதேபோல் இங்கே... இப்போது... இந்தத் தனிமையான காடும், இயற்கையோடான இதன் நெருக்கமும், தினமும் பார்த்துக் கொண்டிருக்கும் அஸ்தமனங்களும் மனிதர்கள் எத்தனை அற்பமானவர்கள், இழிவானவர்கள் என்பதை எனக்கு இனம் காட்டிக் கொண்டிருக்கின்றன.
“இயற்கையின் அரசாட்சி நடக்கும் இந்த இடத்தில் அதிகாரத்துக்காக நடக்கும் பிரமாண்டமான அர்த்தமற்ற போருக்கு இடம் எங்கே? மூளையில்லாமல் இரத்தக் குளியல் நிகழ்த்திய அந்தப் பேரழிவின் தாக்கத்தை இங்கே காண முடியுமா என்ன…?
“இதற்கு முன் என் கண்கள் எதையும் சரிவரப் பார்த்ததில்லை. என் மனம் எதையும் விளங்கிக் கொண்டதில்லை. ஆனால், என் மனச்சாட்சியை மீண்டும் மீண்டும் துருவிப் பார்த்து எல்லாவற்றையும் நான் புரிந்துகொண்டேன். இனிமேலும் நான் வெளிப்படையாகப் பேசாமல் இருந்தால் அது மிகப் பெரும் பாவமாகிவிடும்.
திடீரென்று தன் தலையை உயர்த்திப் பார்த்தாள் குந்தி. கல்லாய் உறைந்த முகபாவனையுடன், அந்த இடத்தைவிட்டு நகராமல் அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் சில நிஷாதப் பெண்கள்.
குந்தி வாயடைத்துப் போனாள்.
அவர்களில் மூத்தவளாகத் தெரிந்த நிஷாதப் பெண்மணி, தன்னோடு கூட வந்த மற்றவர்களிடம் ஏதோ சொல்ல, அவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். அவர்கள் சொன்னதென்ன என்பது யாருக்குத் தெரியும்?
குந்தி பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்தாள். அவர்கள் நெருங்கி வந்துவிடுவார்களோ? புனிதம் வாய்ந்த பல சடங்குகளைச் செய்வதற்காக அவள் சேகரித்து வைத்திருக்கும் விறகுகளின் மீது அவர்களின் நிழல் விழுந்துவிட்டால் அவை மாசுபட்டவையாகி விடுமே?
மாலை நெருங்கிக்கொண்டிருந்தது. குந்தி அங்கிருந்து எழுந்துகொண்டாள். தன் மென்மையான விரல்களால் இலை, தழைகளைத் திரித்துச் செய்த கயிற்றைக் கொண்டு விறகுகளைக் கட்டிய பிறகு, அந்த மூட்டையை இழுத்துக்கொண்டு நகர்ந்தாள். நாளை அவள் வேறோர் இடத்தைக் கண்டுபிடித்தாக வேண்டும்.
இன்றைய ஒப்புதல் வாக்குமூலத்திற்குப் பிறகு அவள் தன்னைத்தானே மீண்டும் உணர்ந்து தெளிந்து கொண்டதைப் போலிருந்தது; சுத்தமாகி விட்டதைப் போலிருந்தது. தான் இலகுவாகி விட்டதை உணர்ந்து அவள் வியப்படைந்தாள். கவலை நம் ஆன்மாவை எரிப்பதோடு ஒரு சுமையாகிக் கனக்கவும் வைக்கிறது.
நிஷாதர்களின் முன்னிலையில் பேசுவது, அங்கிருந்த குன்றுகளிடமும் பாறைகளிடமும் பேசுவதைப் போலத்தான். அவள் மொழி அவர்களுக்குத் தெரியாது. அவர்களுக்கும் அவளுடைய மொழி தெரியாது.
“பஞ்ச பாண்டவர்களின் அன்னையே! உன் கைகள் என்னைத் தீண்டும்போது எப்போதும் சில்லென்றுதான் இருக்கும். ஆனால், இன்றென்னவோ அவை கதகதப்பாக இருக்கின்றன. இப்போதுதான் நாடி நரம்புகளில் இரத்த ஓட்டம் பாய்வதைப் போல. இன்று உன் தொடுகை கூட உயிர்ப்போடு இருக்கிறது?” தான் படுத்துக்கொள்ள உதவி செய்த குந்தியிடம் இவ்வாறு சொன்னாள் காந்தாரி.
“அன்னையின் தழுவலைப் போலக் காடும் இதமாக இருக்கிறது அக்கா!”
“அப்படியென்றால் உன்னால் அங்கே அமைதி காண முடிகிறதென்று சொல்.”
“இருக்கலாம்.”
“மண்ணுலகக் கவலைகளிலிருந்து மனதை விடுவித்துக் கொள்.”
“உங்களைப் போன்ற மனவலிமை எனக்கில்லை. ஆனாலும் முயற்சிக்கிறேன்.”
“கழிந்து போகும் ஒவ்வொரு விநாடி நேரத்திலும் நாம் முடிவை நோக்கி நகர்ந்துகொண்டே இருக்கிறோம். நான் இப்போது மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்.”
“உண்மைதான் அக்கா.”
அவர்களது காலடியில் இருந்த தனது புல் படுக்கையின் மீது படுத்துக் கொண்டாள் குந்தி. அவர்களோடு சேர்ந்து அவளும் வெளியேறியதை எவருமே விரும்பவில்லைதான். திருதராஷ்டிரரும், காந்தாரியும் கானகத்திலுள்ள ஆசிரமத்துக்குச் செல்வது பொருத்தமாக இருக்கலாம். ஆனால் ஏழுகடல்களால் சூழப்பட்டிருக்கும் ஜம்புத்வீபச் சக்கரவர்த்தியின் அன்னை, அவர்களோடு ஏன் போக வேண்டும்?
‘அரச வாழ்க்கை என்னை நார் நாராகக் கிழித்துப் போட்டுக் கொண்டிருந்தது’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள் குந்தி.
இன்று வனத்திலிருந்த நீரோடை ஒன்றில் குறிப்பான எந்தக் காரணமும் இல்லாமல் வெறுமனே நீராடினாள் குந்தி.
நரைத்துப் போயிருந்த தன் கூந்தலைத் தளர்த்திப் புலர வைத்துக்கொண்டு, சூரியனுக்கு முதுகு காட்டியபடி உட்கார்ந்திருந்தாள் அவள். அந்தச் சூரியன் அவளை மேலே இருந்து பார்த்தால்தான் என்ன...? அதனால் என்ன ஆகிவிடப்போகிறது? அவள் யாரென்று அவனால் இனம் காணவாவது முடியுமா என்ன..? மனிதர்களுக்குக் கோடிக்கணக்கான ஆண்டுகள் என்றால், தேவர்களுக்கு அது ஒரே ஒரு கணம் மட்டுமல்லவா? செய்த தவறுகளையெல்லாம் வெளிப்படையாக ஒத்துக் கொண்டு சொல்லித் தீர்த்துவிட வேண்டுமென்ற எழுச்சி அவளுக்குள் உண்டானது ஏன்?
காட்டின் இந்தப் பகுதியில் நிஷாதர்கள் வரக்கூடுமென்று அவளுக்குத் தோன்றவில்லை. மரம், புதர் எல்லாம் ஒரே மாதிரி இருப்பதால், வழி குழம்பிப்போவது சாத்தியம்தான். ஆனால்,
“காட்டு வழியில் செல்லும்போது, மரங்களுக்கடியில் கற்களை வைத்து அவற்றைச் சுற்றி மரக் கொம்பால் அடையாளம் வரைந்துகொண்டே சென்றால் வழி தவறாமல் சென்றுவிடலாம்” என்று விதுரர் அவளுக்கு நன்றாகக் கற்பித்திருந்தார். ‘ஆரண்யகா’ என்று சொல்லப்படும் வனதேவதையும்கூட மனிதர்களோடு பழகக் கூச்சப்பட்டு விலகி இருப்பவள்தான்; ஆனால் காட்டுவாசிகளான பழங்குடி மக்களை அவளுக்கு நன்றாகத் தெரியும். அதனால் அவர்கள் ஒருபோதும் வழி மாறிப் போவதில்லை . ஆனால், ‘ஆரண்யகா’வின் மர்மம் வெளியாட்களைத் தடுமாற வைக்கக் கூடியது. “ஆசிரமத்துக்குச் செல்லும் பலாச மரத்தை மட்டும் மனதில் குறித்துக்கொள். அதிலிருந்து அதிக தூரம் சென்றுவிட வேண்டாம்” என்றும் விதுரர் அவளுக்குச் சொல்லித் தந்திருந்தார்.
பயப்படுவதற்கு என்ன இருக்கிறது? அச்சம் என்பது ஒரு மனநிலை மட்டும்தான். கானகம் நல்லதுதான். அகலமான தெருக்களோ, வரிசையான கடை வீதிகளோ, குறுக்கு நெடுக்காக அணிவகுத்துச் செல்லும் படைகளோ, அரசத் தேர்ச்சக்கரங்களின் ஆர்ப்பாட்டமான உரசல் ஒலிகளோ ஏதும் இங்கில்லை. இங்கே தன்னுள்ளே மூழ்கித் தனித்திருக்கலாம். வாய்விட்டுப் பேசலாம். செய்த குற்றங்களை ஒப்புக்கொள்ளலாம்.
“ஏ.. வசுந்தராதேவியே... ஏ... பூமித்தாயே...!”
குருச்சேத்திர யுத்தத்துக்குப் பிறகு கணக்கிலடங்காத ஈம நெருப்புகள் கனன்று கொண்டிருந்தன. காலாட் படைக்காகத் தொலைதூரத்திலிருந்து கொண்டுவரப்பட்டுப் போர்க்களத்தில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் உடல்கள். யுதிஷ்டிரரின் ஆணைப்படி விதுரர் செய்த ஏற்பாடுகளால் மொத்தம் மொத்தமாக சிதைகளில் எரிக்கப்பட்டன. கருகிப்போன தசைக் கோளங்களிலிருந்து எழுந்த புகையும் நெடியும் காற்று மண்டலத்தில் அடர்த்தியாகப் பரவியிருந்தன. ஈம நெருப்புகளில் நெய்யையும் கற்பூரத்தையும் அள்ளிக்கொட்டி அந்த துர்வாடையைப் போக்கிக் கொண்டிருந்தார்கள். ஆனாலும்கூட மரணத்தின் அடர்புகையை மூடி மறைப்பதென்பது அத்தனை எளிதாக இல்லை.
“நான் எதைச் செய்யவும் சிறிது கூடத் தயக்கம் கொள்ளவில்லையே...? செய்த ஒரு பாவத்தோடு நான் நிற்கவில்லை. கர்ணனின் பிறப்பைப் பற்றி என் மகன்களிடம் நான் சொல்லவில்லை. பிறகு, போருக்கு முதல் நாளன்று கர்ணனிடம் சென்று ‘துரியோதனின் தரப்பிலிருந்து யுதிஷ்டிரன் தரப்புக்கு வந்து விடு!’ என்றேன். ஆனாலும் என்னை இழிவுபடுத்தும் வகையில் அவன் எதையும் செய்யவில்லை.
‘மகனே...! என் வயிற்றில் பிறந்தவன் நீ. அதனால் நான் சொல்வதை நீ கேட்க வேண்டும்’ என்றேன்.
எல்லை மீறிய துடுக்குத்தனமான அந்த என் செயல், எவராலும் பொறுத்துக்கொள்ள முடியாத ஒன்றல்லவா?
குழந்தையை வயிற்றில் சுமந்தால் மட்டும் போதுமா? பெற்றெடுத்த பிறகு அவனை அனாதையாக விட்டீர்கள். தாய்மைக்கே உரித்தான எந்த ஒரு கடமையையும் ஆற்றியிராத நீங்கள், இப்போது ஒரு மகனாக நான் உங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று எப்படி என்னை வற்புறுத்த முடியும்? என்றெல்லாம் அவன் பதில் சொல்லியிருக்கலாம். ஆனால், அவன் அப்படியெல்லாம் எதுவும் சொல்லவில்லை.
அவனை நான் தேடிச் செல்லாமல் இருந்ததற்குக் காரணம், பாசம் என்னைப் பைத்தியக்காரியாக்கி விட்டிருந்ததுதான். அவனைப் பற்றி நான் கவலைப்படவே இல்லை. ஒரு முறை கூட அவனை நான் நினைத்துப் பார்த்ததில்லை. என் கவனமெல்லாம் பாண்டவர்களின் மீது மட்டுமே இருந்தது. ஆனால், கர்ணனுக்காக உரத்த குரலில் ஒப்பாரி வைத்தாள் காந்தாரி. இந்திரனைப் போல் வெல்லப்பட முடியாதவன், அக்கினி போன்ற துணிச்சல் உடையவன், இமயம் போலப் புனிதமானவன், பதின்மூன்று வருடங்களாக யுதிஷ்டிரனைத் தூங்க விடாமல் செய்தவன் என்றெல்லாம் கர்ணனைப் பற்றிச் சொல்லிச் சொல்லி ஓலமிட்டு அழுதாள் அவள். ஆனால், சபிக்கப்பட்ட வேண்டிய நானோ... அப்போது அமைதியாக நின்று கொண்டிருந்தேன்.
அரச வாழ்க்கை என்பது ஒருவரைத் தந்திர புத்தி உடையவராக கபட குணமுள்ளவராக ஆக்கி விடுகிறது. கர்ணனை நெஞ்சாரத் தழுவிக் கொள்ளும் ஆசையோடு ஒருபோதும் நான் அவனைத் தேடிச் சென்றதில்லை. என்னுடைய மகனுக்காகத் துரியோதனனை விட்டுவிட்டு அவன் யுதிஷ்டிரனிடத்தில் வரவேண்டுமென்றேன்.
பாண்டவர்களின் வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக மாயக்காரக் கண்ணன் செய்த சூழ்ச்சியே அது என்பது கர்ணனுக்குப் புரிந்திருக்கும் என்றே இப்போது எனக்குத் தோன்றுகிறது.
வெற்றிக்குரியவர்கள், தர்ம யுத்தம் செய்தவர்களே. தோல்வியடைந்தவர்கள் செய்தது ஒருபோதும் அவ்வாறு சொல்லப்படுவதில்லை.
இதைத் தெரிந்து வைத்திருந்தும், தன்னால் துரியோதனனை விட்டுவிட்டு வர முடியாதென்றான் கர்ணன். ஆனாலும், அர்ச்சுனனைத் தவிரப் பிற பாண்டவர்களுக்கு அவன் எந்தக் கெடுதலும் செய்யமாட்டான்.
‘எப்படியும் உனக்கு ஐந்து மகன்கள் உயிரோடு இருப்பார்கள்’ என்றான் அவன். தன்னையும் என் மகன்களில் ஒருவனாகத்தான் அவன் எண்ணியிருக்கிறான் என்பதுதான் அதன் பொருள்.
ஆனால், நான்...!
‘பிறந்த மறுகணமே உன்னை நான் அனாதையாக்கி விட்டேன். அந்த நினைப்பு தினமும் என்னை வதைக்கிறது, நாளும் என்னுள் தகிக்கிறது’ என்று ஒருநாளும் சொன்னதில்லையே நான்?
நான் ஏன் அப்படிச் செய்யவில்லை? காரணம், அவனை இழந்ததில் எனக்கு வருத்தமே ஏற்பட்டதில்லை. அவனைப் பிரிந்ததில் எந்த ஏக்கத்தையும் நான் உணர்ந்ததில்லை. என் கவனம் பாண்டவர்கள் மீது மட்டுமே இருந்தது.
“உன் சகோதரர்களுக்குக் கேடு செய்யக்கூடாது என்று நீ நினைப்பது உண்மையானால், நீ அவர்கள் பக்கம் வந்துவிட வேண்டும்” என்று அவனிடம் நான் சொன்னது அதனாலேதான்.
நான் சபிக்கப்பட வேண்டியவள். பஞ்ச பாண்டவர்களின் தாயான நான் சபிக்கப்பட வேண்டியவள். எல்லா ஈமச் சடங்குகளும் முடிந்து கர்ணனும் சாம்பலாகிப் போனபிறகு யுதிஷ்டிரனிடம் சென்ற நான், ‘மற்றவர்களுக்குத் தர்ப்பணம் செய்யும்போது கர்ணனுக்கும் கூட ஒன்றைச் சேர்த்துச் செய்துவிடு. அவன் சூரிய புத்திரன், என் கருவில் உதித்த என் மகன்’ என்று மட்டும் சொன்னேன்.
அதை அவனிடம் முன்பே நான் சொல்லாதது ஏன் என்று என்னிடம் திரும்பத்திரும்பக் கேட்டான் அவன். இந்த விஷயத்தைச் சொன்னால் என் மகன்களிடமிருந்து எனக்கு எதிரான ஒரு கேள்வி வரக்கூடும் என்பது எனக்குத் தெரிந்திருந்தது. கங்கைக் கரையில் தர்ப்பணச் சடங்குகள் முடிந்தபிறகு, என்னிடம் அப்படி ஒரு கேள்வியைத்தான் யுதிஷ்டிரன் கேட்டான்.
கடவுள் மூலம் உருவாக்கப்பட்ட குழந்தை என்றால், அது உங்கள் வயிற்றில் வந்து பிறந்தது எப்படி? என்றான் அவன்.
என்னிடம் போய் இப்படி ஒரு கேள்வி கேட்கிறாயே யுதிஷ்டிரா? நீங்கள் ஐந்து பேரும் சகோதரர்கள்தான். ஆனால், உங்களில் ஒருவர் கூடப் பாண்டுவின் வழி வந்தவர் இல்லை என்று உன் கேள்விக்கு நான் பதில் தந்திருக்கலாம்.
“நீ, பீமன், அர்ச்சுனன் என்ற மூன்று பேரும் எமதர்மன், வாயு, இந்திரன் ஆகிய தேவர்கள் வழியாக எப்படி என் வயிற்றில் பிறந்தீர்களோ அப்படித்தான். மாத்ரியின் வயிற்றில் அஸ்வின் குமாரர்கள் மூலம் நகுல சகாதேவர்கள் எப்படிப் பிறந்தார்களோ அப்படித்தான். இதுவும் அதே மாதிரிதான். சூரியனின் வழித்தோன்றலாகக் கர்ணன் என் வயிற்றில் வந்து பிறந்ததும் அப்படித்தான்” என்று அவனிடம் நான் சொல்லியிருக்கலாம்.
“யுதிஷ்டிரா... அது ஏன் அப்படி என்று நீ என்னிடம் கேட்கிறாய். இல்லை...! நான் ஒருபோதும் சுயமாக யோசித்து எதையும் செய்தவள் இல்லை. மற்றொரு மனிதரின் துணையோடு ஒரு பெண், குழந்தைப்பேறு கொள்ளலாம் என்று பாண்டு என்னிடம் சொன்னார். என் கணவரான அவரது அனுமதியோடு அதை நான் கைக்கொண்டேன்.
“வாழ்வில் ஒரே ஒரு முறை, என் சொந்த விருப்பத்தால் ஒரு மனிதரைத் தேர்ந்தெடுத்தேன். கர்ணன் பிறந்தது அப்போதுதான். அந்த சமயம், நான் திருமணமாகாத கன்னியாக இருந்தேன். அதனால் கணவரிடம் சம்மதம் பெற வேண்டி இருக்கவில்லை. ஆனால், யுதிஷ்டிரா... இப்போது நிலவும் சமூக வழக்கத்தின்படி ஒரு பெண்ணின் கணவர் விரும்பினால் அவள் இன்னொரு மனிதரின் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம். ஆனால், எந்த ஒரு கன்னிப்பெண்ணும் தன் சுயவிருப்பத்தால் தாய்மை நிலையை ஏற்றுவிட முடியாது. ஒரு ரிஷியின் மகளாக இருந்த மாதவி, தன் தந்தையின் கட்டளைப்படி நான்கு வெவ்வேறு மனிதர் மூலம் நான்கு குமாரர்களைப் பெற்றாள். அவளும் மணமாகாதவள்தான்; ஆனால் தன் தந்தையின் ஆணையையே அவள் செயல்படுத்தினாள் என்பதால் சமூகம் அவளை ஏற்றது.
நான் பாண்டுவின் மனைவி. என் கணவர் பாண்டு, என் மகன்களுக்குத் தந்தை இல்லை. ஆனாலும் கூட நீங்களெல்லாம் பாண்டவர்கள், ஆனால் கர்ணன் மட்டும் ஒரு தேரோட்டியின் மகன். வருங்காலத்தில் என்றாவது ஒரு நாள், தனக்குக் கிடைக்க வேண்டிய உரிய மரியாதையையும், கௌரவத்தையும் கர்ணனால் பெற்றுவிட முடியும். ஆனால், எனக்கு அது கிடைக்காது!
பூமித்தாயிடம் தன் மனதிலுள்ளதையெல்லாம் கொட்டி முடித்த பிறகு தலையை உயர்த்திப் பார்த்தாள் குந்தி. பாறை ஒன்றின் மீது முகவாயைப் பதித்துக்கொண்டு, அவளையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள் அந்த முதிய நிஷாதப் பெண். அவளது கண்கள் குந்தியோடு பேசுவது போலிருந்தன; அது இன்னும் கூட வியப்பூட்டுவதாக இருந்தது. சட்டென்று குந்தியின் மூளைக்குள் ஒரு மின் வெட்டு பாய்ந்தது. அவளைப் பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பார்வையில் இரக்கம் நிரம்பியிருந்தது.
குந்தியின் மீது இரக்கம் கொள்வதா? அதுவும் அவளிடம் இரக்கம் காட்டுவது அந்த நிஷாதப் பெண்மணியா? கீழே குனிந்து தான் சேகரித்த விறகுப் பொதியைக் கயிற்றால் இறுக்கிக் கட்டிக்கொண்டு அங்கிருந்து நடக்க ஆரம்பித்தாள் அவள்.
சில சமயங்களில் மிகவும் அருகிலிருப்பதைப் போலத் தோன்றும் அந்த ஆசிரமம் இன்று தொலைவில், மிகமிகத் தொலைவில் தள்ளிப் போய்விட்டதைப் போலத் தோன்றியது. பாலைவனங்களில் கானல் நீரைப் பார்க்க முடியும். ஒரு சொட்டு நீர்... அருகிலும், தொலைவிலுமாய் மாறிமாறித் தோன்றும். ஆனால் இது காடு, பாலைவனமில்லை.
பூத்துக் குலுங்கும் பலாசமரமும், அதனருகிலுள்ள ஆசிரமும் திடீரென்று அவள் கண்ணுக்குப் புலப்பட்டது.
முதுமையால் தளர்ந்து போய் மெலிந்து போன தன் தந்த நிற விரல்களால் குந்தியின் கரங்களைப் பற்றிக்கொண்ட காந்தாரி, “கொஞ்சம் அமைதிப் படுத்திக் கொள். ஆசுவாசப்படுத்திக்கொள்” என்று மெல்லிய குரலில் முணுமுணுத்தாள்.
“பாண்டவர்களின் தாயே...! உன்னை நிதானப்படுத்திக் கொள்! உருண்டோடும் தேர்ச்சக்கரங்களைப் போலக் காலம் என்பதும் சுழன்று கொண்டிருக்கிறது. நம் வாழ்க்கை வட்டமும் சுருங்கிக்கொண்டு வருகிறது. வெகு சீக்கிரத்தில் அந்தப் புள்ளியும் கூட ஒன்றுமில்லாமலாகி வெற்றிடத்தோடு கலந்துவிடும்.”
“உண்மைதான் அக்கா”
“உன்னை நீயே இவ்வளவு கடுமையாகப் பழி தூற்றிக்கொள்ளாதே. நீ என்னதான் முயற்சி செய்தாலும் இறந்த காலம் என்ற ஒன்றை உன்னால் மறுபடியும் கொண்டுவந்துவிட முடியாது. நேற்று கழிந்த பொழுதை நாளையாக மாற்றி விடவும் இயலாது. இதோ பார்...! இன்றைய நாளின் சூரிய உதயமும் அஸ்தமனமும்தான் நிஜம், நாம் உறங்கிப் போய்விடுவோம். ஆனால், காலம் என்பது எப்போதும் முன்னோக்கி நகர்ந்து கொண்டேதான் இருக்கும். நாளைய தினம் மற்றுமொரு சூரியோதயத்தைக் கொண்டுவரும்.”
காந்தாரியின் பாதம் தொட்டு வணங்கிய பிறகு தனது புல்படுக்கையில் படுத்துக்கொண்டாள் குந்தி.
“உறக்கமே விரைந்து வா.. என் மனதை அமைதியில் ஆழ்த்து” என்று தன்னுள் மெளனமாக வேண்டிக் கொண்டாள்.
காட்டில், மரத்துக்கடியிலிருந்த பாறையின் மீது இன்று மதியம் அமரப்போனபோது, வழக்கமாக அமைதியாக இருக்கும் அந்த இடத்தில் ஏதோ ஒரு பொருந்தாமை இருப்பதைக் குந்தியால் உணர முடிந்தது. அங்கே வீசிய காற்றும் கூட ஏதோ ஓர் எச்சரிக்கையைப் பரப்பிக் கொண்டிருந்ததைப் போலிருந்தது.
அவள் விழிப்போடு கவனிக்கத் தொடங்கினாள்.
கானகம் இன்று அமைதியாக இல்லை. பறவைகள் கூடுகளை விட்டுக் கூட்டம் கூட்டமாகப் பறந்து கொண்டிருந்தன. குரங்குகளெல்லாம் மரம் விட்டு மரம் தாவியபடி காட்டின் உள்ளாழத்திற்குள் சென்று மறைந்து கொள்ள முயன்று கொண்டிருந்தன.
மானினங்களும் கூட மந்தைகளாக எங்கோ விரைந்தோடிக் கொண்டிருந்தது பார்க்க ஆச்சரியப்படுத்துவதாக இருந்தது.
என்னதான் ஆயிற்று?
நிஷாதர்களான ஆண், பெண், குழந்தைகள் அனைவரும், தாங்கள் வளர்த்து வரும் வேட்டை நாய்களோடு தலைச் சுமைகளாகத் தங்கள் உடைமைகளைச் சுமந்தபடி போய்க் கொண்டிருந்தார்கள்.
நல்லது... அவர்கள் இங்கிருந்து போகட்டும். கானகத்தைக் காலி செய்துகொண்டு அவர்கள் செல்லட்டும்.
தான் தவறிழைத்தது எந்த இடத்தில் செய்த குற்றம் என்ன என்பதைப் பூமித்தாயிடம் குந்தி இன்று கேட்பாள். அவளாலேயே அவளை மன்னித்துக் கொள்ள முடியப்போவது எப்போது என்றும் கேட்பாள்.
அருகில் நிழலாடுவதைக் கண்டு அவள் துணுக்குற்றாள். அந்த மூத்த நிஷாதப் பெண்மணிதான் அங்கே நின்று கொண்டிருந்தாள். குந்தி, வியப்போடு விழிகளை விரித்தாள். கருங்கல்லால் செதுக்கப்பட்டிருப்பதைப் போல இருக்கும் அந்தக் கறுப்புத்தோல் போர்த்திய பெண்மணி அவளை ஒட்டி மிக மிக நெருக்கமாக நின்றுகொண்டிருப்பது ஏன்? இப்படி அவள் தன்னைக் குனிந்து பார்த்துக்கொண்டிருப்பதற்கு என்ன காரணம்? தன் கண்களில் எதைத் தேடித் துருவிக்கொண்டிருக்கிறாள் அவள்?
“இன்று ஒப்புதல் வாக்குமூலம் ஏதுமில்லையா?”
“நீ... நீ...”
“நீ பேசுவதை நான் தினமும் கேட்டுக்கொண்டிருக்கிறேன். நீ செய்திருக்கும் மிகப் பெரிய பாவச் செயலை எப்போது ஒத்துக்கொள்ளப்போகிறாய் என்பதை அறியக் காத்திருக்கிறேன்.”
“நீ பேசும் மொழி என்னுடையதைப் போலவே இருக்கிறதே..?”
“ஆமாம். என்னால் அதைப் புரிந்துகொள்ள முடிவதோடு பேசவும் முடியும். எங்களையெல்லாம் மனித உயிர்கள் என்றுகூட நீங்கள் ஒருபோதும் நினைத்திருக்க மாட்டீர்கள். அப்படித்தானே? ஏதோ இங்கிருக்கும் பாறைகளைப் போல, மரங்கள், மிருகங்களைப் போல...”
“ஆனால் நீ இதுவரை ஒரு வார்த்தைகூடப் பேசியதில்லையே?”
“நான் இன்றைய தினத்துக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தேன். நாங்கள் உன்னை எத்தனையோ வருடங்களாகத் தேடிக்கொண்டிருக்கிறோம். இறுதியில், ஒருவழியாக நீயே எங்களிடம் வந்து சேர்ந்தாய். அப்படித்தான் நடந்தாக வேண்டும் என்பதே விதி. குந்தி... உனக்காக நாங்கள் பல ஆண்டுகளாகக் காத்திருக்கிறோம்.”
“உனக்கு என் பெயர் தெரியுமா?”
அந்த நிஷாதப் பெண் சிரித்தாள்.
“உனக்கு அது வருத்தமாக இருக்கிறது, உன்னை அது புண்படுத்துகிறது இல்லையா...? ஒரு நிஷாதப் பெண் உன்னை இப்படிப் பெயர் சொல்லிக் கூப்பிடுகிறாளே என்று நீ நினைக்கிறாய். ஆம்...! நான் உன்னைப் பெயர் சொல்லித்தான் அழைத்தேன். இந்தக் காட்டில் நீ நிராயுதபாணியாக இருக்கிறாய் குந்தி! உன் மகன்களும் உன்னோடு இல்லை. எங்களை தண்டிப்பதற்கு இங்கே அவர்களால் வீரர்களை அனுப்ப முடியாது!”
“ஆனால், இந்தக் காட்டில் முனிவர்கள் வசித்து வருகிறார்கள். அது உனக்குத் தெரியுமல்லவா?”
“ஓ... தெரியுமே...?” இங்கே சுற்று முற்றும் நிறைய முனிவர்களைப் பார்த்திருக்கிறோம். இது நாங்கள் பிறந்த மண், எங்கள் சொந்த பூமி. அதைத் தெரிந்துகொள்! ஆரண்யகா தேவி எங்களின் அன்னை!”
சட்டென்று உயிர் உலர்ந்து போனது போல சோர்வாக உணர்ந்தாள் குந்தி. நோன்புகளையும் தவங்களையும் இயற்றவும், மெலிந்துபோன உடலைச் சாகும்வரை பட்டினி போட்டு வருத்திக்கொள்ளவும் கங்கைக் கரையிலிருந்து இந்தக் காட்டிலுள்ள ஆசிரமத்துக்கு வந்திருக்கிறோம். போயும் போயும்... இந்த நிஷாதப் பெண், தன்னைத் துடுக்குத்தனமாகப் பெயர் சொல்லிக் கூப்பிட்டுவிட்டாளே என்று அவள் ஏன் காயப்பட வேண்டும்?
“நிஷாத மகளே... என்ன விஷயமென்று சொல்! உனக்கு என்ன வேண்டும்.”
“உன் மிகப் பெரிய பாவம் ஒன்றை நீ ஒத்துக் கொள்ளவில்லை.”
“ஒத்துக்கொண்டுவிட்டேனே. உனக்குத்தான் என் மொழி புரிகிறதே. நீயும் அதைக் கேட்டிருப்பாயே?”
“இல்லை குந்தி...! அரண்மனையில் இருந்து அரச வாழ்க்கை நடத்திய காலகட்டத்தில்... உன் மகனும் அரசனாவதற்கு முன் நீ செய்த ஒரு பாவம் அது.”
“கர்ணனைப் பற்றிக் கூட நான் சொல்லிவிட்டேனே?”
“அரச நெறிகளும் சாமானியர்களின் நெறிகளும் வேறுபட்டவை குந்தி. சரியானது எது தவறானது எது என்பதிலும்கூட அவர்களின் கருத்துகள் மாறுபட்டவைதான். கன்னியாக இருக்கும் ஒரு நிஷாதப்பெண், தான் விரும்பிய வாலிபனைக் காதலித்து அவன் மூலம் கருவுற்றால் அதை நாங்கள் திருமணமாக்கிக் கொண்டாடுவோம்.”
“அது எந்த மாதிரியான விதிமுறையைச் சேர்ந்தது?”
“அது இயற்கை வகுத்திருக்கும் விதி. எதையும் வீணாக்குவதை இயற்கை வெறுக்கிறது. நாங்கள் வாழ்க்கையை மதிக்கிறோம். ஓர் ஆணும் பெண்ணும் ஒன்றிணையும்போது புதிய உயிரொன்றை அவர்கள் சிருஷ்டிக்கிறார்கள். ஆனால், உன்னால் இதைப் புரிந்துகொள்ள முடியாது.”
“நீ இப்போது என்ன சொல்ல வருகிறாய்? என் குற்ற ஒப்புதலுக்கு எந்த மதிப்பும் இல்லையா...?”
“உன்னைப் பொறுத்தவரையில் இருக்கலாம். எங்களுக்கு அப்படி இல்லை! ஆனால், சாமானிய மக்களான எங்கள் அறத்தின்படி, தன்னுடைய சுய லாபத்துக்காகக் குற்றமற்ற அப்பாவிகளைப் பலியாக்குவது மன்னிக்கமுடியாத மிகப்பெரிய பாவம். அந்தப் பாவத்தைச் செய்திருக்கும் குற்றவாளி நீ!”
“நானா... சாமானியர்களுக்கு எதிராகவா...?”
“குந்தி...! வாரணாவதம் என்ற ஊர் உனக்கு நினைவிருக்கிறதா?”
“ஆமாம்! எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் அங்கே சென்றிருக்கிறோம்.”
“உன் நினைவைக் கொஞ்சம் தட்டி எழுப்பி விடுகிறேன் கேள்..! ஜாதுகிருகம் என்ற இடத்தில் அரக்கினால் கட்டப்பட்ட மாளிகையில் நீ தங்கியிருந்தாயல்லவா?”
“ஆமாம்..! அது துரியோதனன் ஏற்பாடு செய்த ஒரு சதி!”
“நீயும் உன் ஐந்து மகன்களும் அங்கே ஏற்பட்ட தீயில் கருகிப் போய் இறந்துவிட்டீர்கள் என்ற வதந்தி எப்படிப் பரப்பப்பட்டது என்பது நினைவிருக்கிறதா?”
“அது...”
“அது... திட்டமிட்ட ஒரு சூழ்ச்சி! சரிதானே? கொடூரமான ஒரு திட்டம். அரச தர்மத்தைக் கைக்கொண்டிருப்பவர்கள் மட்டுமே அப்படிப்பட்ட செயலைச் செய்ய முடியும். நீ ஓராண்டுக் காலம் அங்கே வசித்தாய். அந்த மாளிகை எரிந்து சாம்பலாகிவிடப்போகிறது என்பதையும் உன் பிள்ளைகளைக் காப்பாற்றிக் கொண்டு தப்பித்து விடவேண்டும் என்பதையும் நீ நன்றாக அறிந்து வைத்திருந்தாய். நீங்கள் ஆறுபேரும் எரிந்து சாம்பலானதற்கு அசைக்க முடியாத சாட்சியத்தை அமைக்க வேண்டியிருந்தது. நிஷாத குலத்தைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் அங்கே வழக்கமாக வந்து போய்க் கொண்டிருந்தார்கள். சரிதானா...?”
“ஆனால்...”
“எதுவும் பேசாதே! நான் சொல்வதை மட்டும் கேட்டுக்கொள். அவர்கள் காட்டுப் பகுதியிலிருந்து அங்கே வந்துபோய்க்கொண்டிருந்தார்கள்! மரக்கட்டை, விலங்குத் தோல், சந்தனம், மூலிகை, மரப்பிசின், தேன், மான் இறைச்சி என்று பலவற்றையும் அவர்கள் கொண்டுவந்து கொடுப்பார்கள். ஆண், பெண் என்று எல்லோருமே இதைச் செய்வார்கள். அந்தப் பொருள்களைத் தந்துவிட்டுப் பண்டமாற்றாக அரிசி, உப்பு, துணிமணி ஆகியவற்றைப் பெற்றுக்கொள்வார்கள். மது அருந்துவார்கள், தோளோடு தோள்பிணைத்து நடனமாடிவிட்டுப் பிறகு வீடு திரும்புவார்கள். அந்த ஜாதுகிருகம், ஊரெல்லையில் இருந்தது...! இவர்கள் தங்கள் வீடு திரும்பிச் செல்லும் வழியில்....”
“ஆமாம்...”
“சரி… இப்போது சொல்…! வயதான நிஷாதப் பெண்மணி ஒருத்திக்கு ஐந்து மகன்கள் இருப்பதை அறிந்து வைத்துக்கொண்டு, அந்தணர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தில் அவர்களும் கலந்து கொள்ளுமாறு அழைத்தது யார்? அவர்களுக்கு அளவுக்கதிகமான மது ஊற்றித் தரப்பட்டதா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டது யார்? நிறைய அந்தணர்களுக்கு நீ பலமுறை விருந்தளித்திருக்கிறாய். ஆனால், காட்டுவாசிப் பழங்குடிகளான நிஷாதர்களையோ, கிராதர்களையோ, சபர்களையோ, நாகர்களையோ எத்தனை முறை அப்படி அழைத்திருக்கிறாய்...? ஒவ்வொரு முறையும் மதுவை இப்படியா பரிமாறியிருக்கிறாய்?”
“இல்லை...”
அந்த நிஷாதப் பெண்ணின் கண்களில் குந்திக்கான மரண தண்டனை எழுதப்பட்டிருந்ததால்... அவளால் பொய் கூற முடியவில்லை.
“அந்த ஒரு தடவை மட்டும்தானே அப்படிச் செய்தாய்?”
“ஆம்.. அந்த ஒருமுறை மட்டுமே...”
“இழிகுலத்தவர் என்று விலக்கி வைக்கப்பட்டிருந்த அவர்களை அந்த ஒரே ஒரு முறை மட்டும்தான் வரவேற்று உபசரித்தாய்.. சரிதானே?”
“உண்மைதான்.”
“அத்தனை மதுவையும் முட்ட முட்டக் குடித்திருந்த அந்த நிஷாதத் தாயும், அவளது ஐந்து மகன்களும் உணர்ச்சியற்ற மரக்கட்டைகளைப் போல விழுந்து கிடந்தார்கள். அதைத் தெரிந்துகொண்டு இரகசிய சுரங்கப் பாதை வழியாகத் தப்பித்தீர்கள். அப்படித்தானே?”
“ஆமாம்! சரிதான்! அப்படித்தான் செய்தேன்.”
“அந்த நிஷாத குலப்பெண் யார் தெரியுமா?”
“ஆனால்... அது நீ இல்லை...”
“ஆமாம்... அது, நான் இல்லை. அவள் என் மாமியார். நான் அவளது மூத்த மருமகள், என்னோடு கூட இருக்கும் இந்தப் பெண்கள் அவளது மற்ற பிள்ளைகளின் மனைவிமார்.”
“உங்களைப் பார்த்தால் விதவைகளைப் போலத் தோன்றவில்லையே?”
அந்தக் கேள்விக்குப் பெருமிதத்தோடு பதிலளித்தாள் அந்த நிஷாதப் பெண்.
“வாழ்க்கையின் தேவைகளை நாங்கள் ஒருபோதும் மறுப்பதில்லை. விதவைகளானால் மறுமணம் செய்து கொள்ள எங்களுக்கு உரிமை உண்டு. எவருக்கு விருப்பமோ அவர், அவ்வாறு மீண்டும் மணந்து கொள்ளலாம். நாங்களும் அப்படியே செய்தோம். எங்களுக்குக் கணவர், குழந்தைகள் என உண்டு.”
“இப்போது என்ன செய்ய எண்ணியிருக்கிறாய் நீ?”
“அதெல்லாம் ஒன்றும் இல்லை. கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பதெல்லாம் அரச தர்மத்தைக் கடைப்பிடிப்பவர்கள் மேற்கொள்ளும் வழி. குருச்சேத்திரப் போரே அதன் பொருட்டாக நடந்ததுதான். சாதாரண மக்கள் வித்தியாசமானவர்கள்.”
“சொல்... நான் என்ன செய்ய வேண்டும்?”
“இப்படி ஒரு பாவச் செயலைச் செய்திருப்பது கூட உனக்கு நினைவில்லை. உன் தன்னலத்துக்காக ஆறு அப்பாவிகளை உயிரோடு பொசுக்கி இருக்கிறாய். உன் நியாயப் புத்தகத்தில் அது ஒரு குற்றமாகவே பதிவாகவில்லை. இயற்கை அன்னை வகுத்து வைத்திருக்கும் விதிகளின்படி, நீ உன் பிள்ளைகள், உன்னோடு கூட்டுச் சேர்ந்தவர்கள் என்று எல்லோருமே எங்கள் கண்களுக்கு முன்பு குற்றமிழைத்தவர்கள்.”
அந்த நிஷாதப் பெண் இன்னும்கூட நெருங்கி வந்தாள்.
“காட்டைப் பார்த்தாயா.. எங்கே பார்த்தாலும் பிசின் நிரம்பிய மரங்கள். மரப்பிசின் எளிதில் தீப்பிடிக்கக் கூடியது என்பது உனக்குத் தெரியுமா?”
“ஆம்”
“அடிமரங்களிலும், மரக்கிளைகளிலும், மரப்பட்டைகளிலும் பிசின் வடிந்து கொண்டிருக்கும். நன்கு உலர்ந்து போயிருக்கும். ஊசியிலை மரத்தின் காய்கள், மரங்களிலிருந்து விழுந்து மலைச்சரிவுகளில் உருண்டோடி வந்து பிசினை உராயும்போது பொறி பற்றிக்கொள்ளும். தீ மூளும். அதுதான் காட்டுத்தீ!”
“என்ன, காட்டுத்தீயா?”
“ஆமாம். காட்டில் வாழும் பிற உயிரினங்களைப் போலவே நாங்களும் காற்றில் எழும் வாசனையைக் கொண்டே காட்டுத்தீ வரப்போவதை ஊகித்துவிடுவோம். அவை இப்போது விரைந்தோடிக்கொண்டிருப்பது அதனால்தான், அவற்றைப் போலத்தான் நாங்களும் இப்போது வேகமாகச் சென்று கொண்டிருக்கிறோம்.”
“எங்கே போய்க்கொண்டிருக்கிறீர்கள்...?”
“எங்கோ. எட்டாத ஒரு தூரத்துக்கு. இந்தக் காட்டுத் தீயால் தீண்ட முடியாத ஒரு இடத்துக்கு. மலைகளும் ஏரிகளும் வளைந்தோடும் நதிகளும் எங்கே உள்ளதோ அப்படி ஒரு இடத்துக்கு.”
“இது காட்டுத் தீயேதானா?”
“ஆமாம்! ஆனால் குருடாகவும் பலவீனமாகவும் முதுமையின் தடுமாற்றத்துடனும் இருக்கும் மூன்று பேருக்கு அங்கே செல்வது சாத்தியப்படாது. ஒருவரோ பிறவிக் குருடர். இன்னொருவர் குருட்டுத்தனத்தைத் தானே தேர்ந்துகொண்டவர். நீயோ மூன்று பேரிலும் மிகவும் மோசமான ஒரு குருடி. அப்பாவி மக்களைக் கொலை செய்துவிட்டு அதைப் பற்றி அடியோடு மறந்தும் போனவள் நீ! உன்னால் மட்டுமே அது முடியும்!”
“நிஷாதப் பெண்ணே உன்னால் என்னை மன்னிக்க முடியாதா?”
“மன்னிப்புக் கோருவது அரச குலத்தவர்களுக்கே உரித்தான ஒரு வழக்கம். எங்களுக்கு அதெல்லாம் தெரியாது. நாங்கள் ஐந்துபேரும் இங்கே வந்தபோது மற்றவர்களும் எங்களோடு உடன் வந்தார்கள், இந்தக் காடுதான் எங்களைக் கவனித்துக்கொண்டது.”
“ஆனால், காட்டுத் தீ வந்துவிட்டதே?”
“தீ... அதன் வேலையை அதன் போக்கில் செய்யும். பிறகு மழை பெய்து நெருப்பை அணைக்கும். வெந்து போய் வெடித்துப்போன பூமியில் பச்சை மரங்கள் மறுபடியும் துளிர்க்கும்.”
இவ்வாறு கூறியபடியே அங்கிருந்து விரைந்து சென்றாள் அந்த நிஷாதப் பெண்.
குந்தி சற்றும் அசையாமல் அமர்ந்திருந்தாள். அவள் மனம் ஆசை, விருப்பம், எண்ணம், உணர்வு என எதுவுமே இல்லாது வெறுமையாய்க் கிடந்தது.
அவள் எழுந்துகொண்டாள். இப்போது அவள் ஆசிரமத்துக்குத் திரும்பிச் செல்வாள். அங்கே காட்டுத் தீயை எதிர்நோக்கிக் காத்திருப்பாள். திருதராஷ்டிரரும் காந்தாரியும் நூறு பிள்ளைகளைப் பறிகொடுத்துவிட்டுத் தங்கள் மரணத்துக்காகப் பொறுமையாகக் காத்திருக்கிறார்கள். கடைசி ஈமநெருப்பில் தாங்கள் இரையாகப் போகும் நாளுக்காகக் காத்திருக்கிறார்கள்.
இப்போது குந்தியும் மரணத்தை வரவேற்றுக் கொண்டிருக்கிறாள். காட்டுத்தீயில் பொசுங்கியபடி... இறந்துபோன ஒரு நிஷாதப் பெண்ணிடம் மன்னிப்புக் கோரி அவள் முறையிடுவாள். அரச நெறிமுறைகளின் படி அப்பாவிகளைக் கொன்றதற்காக மன்னிப்புக் கேட்பது பொருத்தமானதுதானா?
குந்திக்கு அதுபற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை.
தொடர்புடைய இணைப்புக்கள்