கோவை புத்தகக்கண்காட்சியின் அறிவுக்கேணியும் கோவை வி எல் பி ஜானகியம்மாள் கல்லூரியும் இணைந்து புத்தக வாசிப்பை மாணவர்களிடம் ஊக்குவிக்கும் வகையில் நடத்திய 'வாசிப்பை நேசிப்போம்' என்னும் நிகழ்வில் கலந்து கொண்டு நூல் வாசிப்பு குறித்து சிறப்புச் சொற்பொழிவாற்ற நேற்று - 28.11.18- வி எல் பி ஜானகியம்மாள் கல்லூரிக்குச் சென்றிருந்தேன். கொடீசியா ஒருங்கிணைப்பாளரும் எழுத்தாளருமான திரு இளங்கோவன் அவர்கள் குறிப்பிட்ட கல்லூரியுடன் ஒருங்கிணைத்து நிகழ்வுக்கான ஏற்பாடுகளை செய்திருக்க, கல்லூரியின் தமிழ்த்துறைப்பேராசிரியரும் என் அன்பு வாசகருமான திரு துரைமுருகன்,ஆர்வமுள்ள மாணவர்களை ஒன்றுதிரட்டி நிகழ்ச்சியைச் சிறப்புற அமைத்து,மறக்க முடியாத ஒரு நிகழ்வாக இதனைச் செய்து விட்டார்.அவரோடு துணை நின்ற பேராசிரியர் திரு சுனில் ஜோகி மற்றும் இளங்கலை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை சித்ரா மற்றும் இந்த நிகழ்வுக்காகவே வருகை தந்திருந்த கவிஞர் அகிலா என அனைவரும் என் மீது மெய்யான ஆத்மார்த்தமான அன்பைப்பொழிந்தது என்னை நெகிழச்செய்தது. ஒரு படைப்பாளிக்குத் தரக்கூடிய உச்சபட்ச மதிப்பை உண்மையான ஆர்வத்தோடும் ஈடுபாட்டோடும் அளித்து இந்த நாளை என் வாழ்நாளில் மறக்க முடியாத நாட்களில் ஒன்றாக்கி விட்டார்கள் இலக்கிய நண்பர்கள்.
வாசிப்பு என்பது, நாம் அறியாத உலகங்களுக்குள் நம்மை இட்டுச்செல்கிறது; நாம் வாழும் நிகர் உலகம் பற்றிய சித்திரிப்புக்களிலும் கூட அதன் ஆழத்தைத் தேடி அடைய வைக்கிறது; இவை குறித்தும்,மற்றும்..இலக்கிய வழி பெறலாகும் புதிய தரிசனங்களையும் விழுமியங்களையும் பல்வேறு இலக்கியங்களிலிருந்து மேற்கோள் காட்டியும் பேசினேன். வாசிப்பின் தொடர்ச்சியே சிலரிடம் எழுதும் எழுச்சியாகப்பரிணமிக்கிறது என்பதையும் , இன்றைய கணினி யுகத்தில் தொடர் சிந்தனை என்பதும் தொடர் எழுத்து என்பதும் தொழில்நுட்பத்தால் சாத்தியப்படாமல் புத்தக வாசிப்பால் மட்டுமே கைகூடக்கூடியவை என்பதையும் என் உரையில் சுட்டிக்காட்டினேன்.
கண்கள் பாதிக்கப்பட்ட நிலையிலும் தொடர்ந்து வாசிப்பைக்கைவிடாமல் இருக்கும் கோவை ஞானி, புத்தகச்சேமிப்பை ஓர் அர்ப்பணிப்பாய்க்கொண்டு வாழ்ந்த கோட்டையூர் ரோஜா முத்தையா, இன்று அவ்வாறே வாழ்ந்து வரும் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி ஆகிய பெருமக்களின் பணியை மாணவர்களுக்கு அறிமுகம் செய்தேன். நூல் வாசிப்பு, நூலிலுள்ள இடங்களுக்குப்பயணம் செய்ய வைப்பதையும், நூலின் பாத்திரங்களைத் தங்கள் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும் அளவுக்குப் புத்தககங்களின் மீது பற்றுக்கொண்டிருப்போர் பற்றியும் எடுத்துரைத்தேன். சிறுவயதில் சிவகாமியின் சபதம் படித்து விட்டுப் பித்தேறிய நிலையில் - மாமல்ல புரத்தில் ஆயனச்சிற்பியையும் சிவகாமியையும் கற்பனைக்கண்ணால் தேடி அலைந்த என் இள வயது அனுபவத்தையும் கூடவே பகிர்ந்து கொண்டேன். கண்ணுக்கு அணிகலன் கண்ணோட்டம்,
கைக்கு அணிகலன் புத்தகம் என்ற முத்தாய்ப்போடு சற்று நீண்டுபோன உரையை நிறைவு செய்தபோது அதுவரை அமைதியாய்க் கேட்ட மாணவர்களின் எதிர்வினை, அவர்களில் ஒரு சிலராவது நூல் வாசிப்பைக்கைக்கொண்டு தொடரக்கூடும் என்ற நம்பிக்கை...கூடவே எழுந்தது.
கைக்கு அணிகலன் புத்தகம் என்ற முத்தாய்ப்போடு சற்று நீண்டுபோன உரையை நிறைவு செய்தபோது அதுவரை அமைதியாய்க் கேட்ட மாணவர்களின் எதிர்வினை, அவர்களில் ஒரு சிலராவது நூல் வாசிப்பைக்கைக்கொண்டு தொடரக்கூடும் என்ற நம்பிக்கை...கூடவே எழுந்தது.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக